சோகங்களில் எல்லாம் பெரிய சோகம் சொந்த ஊரை விட்டுப் பிரியும் சோகம் என்று போறாளே பொன்னுத்தாயி பாடலிற்கு முன்னராக பாரதிராஜாவின் குரலில் ஒரு சிறு அறிமுகம் ஒன்று செய்துவைக்கப்படும். நினைவுதெரிந்து எந்த இடப்பெயர்வையும் அனுபவித்திராத அந்தவயதில் இதெல்லாம் ஒரு வலியா என்றுதான் நினைத்திருந்தேன். பின்னாட்களில் அந்த வலியை 1995ம் ஆண்டு ஒக்ரோபர் 30ல் நானும் உணர்ந்தேன். உறவினர் ஒருவரின் மரணச்சடங்கிற்காக என்னையும் ஒரு தம்பியையும் தவிர குடும்பத்தில் மற்ற எல்லாரும் கொழும்பு சென்றிருந்தனர். நாம் அப்பம்மா மற்றும் அப்பாவின் சகோதரர்களுடன் தங்கியிருந்தோம். முன்னேறிப்பாய்ச்சலின் வெற்றிக்குப் பின்னர் மீளவும் போர்மூண்டிருந்த காலம். அதற்கேற்றாற்போல பிரசாரக்கூட்டங்களும் மூலைக்குமூலை நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆயினும், இத்தனை சடுதியாக யாழ்ப்பாண வெளியேற்றம் நிகழக்கூடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. நினைக்காதவை எல்லாம் நடந்தவைதானே எமது வாழ்க்கையே ! யாழ்ப்பாணத்தைவிட்டு மக்களோடு மக்களாக வெளியேறி தென்மராட்சியை வந்தடைந்திருந்தோம். மிக மோசமான நெருக்கடிகளில் மனிதர்கள் எப்படி தெய்வங்கள் ஆகின்றார்கள் என்பதையும், மனிதன் மகத்தான சல்லியப்பயல் என்பதையும் ஒருங்கே அறியும்படியான நினைவுகளை மனதில் பதியவைத்த ஒரு பயணம், பாடம், அலைவு அது.
கடைசியாக மீசாலையில் இருந்த எனது பெரியம்மாவின் வீட்டில் தஞ்சமடைந்திருந்தோம். 185ம் கட்டை, மீசாலை வடக்கு, கொடிகாமம். இந்த முகவரியை இப்போது நினைத்தாலும் மிக இனிமையான அந்த நினைவுகள் மீள ஞாபகம் வரும். கிட்டத்தட்ட 7 மாதங்களும் மறக்கவே முடியாத இனிய பொழுதுகள். வெறுங்கையுடன் தான் நாம் இடம்பெயர்ந்து சென்றிருந்தோம். பெரியம்மாவின் வீட்டு வளவு மிகப் பெரியதென்றாலும் சிறியவீடு. அதனால் வீட்டில் சிலரும், வீட்டிற்கு பின்னால் தனியாக கொட்டில் போட்டு சிலருமாகவே இருந்தோம். எமக்கு முன் அறிமுகம் இல்லாத வேறுசிலரும் கூட அதேவளவில் தங்கியிருந்தனர். பாடசாலைகள் இல்லை. மாற்று உடுப்புகளும் அதிகம் இல்லை. பாடப்புத்தகங்கள் சிலவற்றை எடுத்து வந்திருந்தாலும், இருந்து படிக்க மேசையோ, கதிரையோ எதுவும் இல்லை. பொருளாதாரத்தடை வேறு. அதன் காரணமாக பொருட்களின் விலையேற்றங்களும் குடும்பங்களை அழுத்தத்தொடங்கியிருந்தன. ஆயினும் எமது வயது காரணமாக பொறுப்புகள் அதிகம் இருக்கவில்லை. அதேநேரம் இன்னுமொரு இடப்பெயர்வு எப்போது வேணுமானாலும் வரக்கூடும் என்கிற பதற்றம் உருவாகியிருந்தது. பெரும்போர் ஒன்று ஆரம்பமாகவிருப்பதை ஊகிக்கமுடிந்தது. மீளவும் பிரச்சாரக்கூட்டங்கள் முழுவேகத்தில் நடைபெறத்தொடங்கியிருந்தன. வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையும் மெல்லிய விரக்தியும் குடிகொள்ளத் தொடங்கியிருந்தன. ஆனால் மனிதன் எப்போதும் பல ஆச்சர்யங்கள் நிரம்பியவன். அடுத்தகணம் பற்றிய நம்பிக்கையும் உத்தரவாதமும் இல்லாமல் போகின்றபோது அந்தக் கணத்திலேயே வாழ்வது நிகழத் தொடங்கிவிடுகின்றது. பேரானந்த நிலை அது. அதுவே அங்கே நடந்தது.
தென்மராட்சியில் மறக்க முடியாத பல பொழுதுகளை உருவாக்கிய பெருமை உங்களில் பலரும் அறிந்திருக்ககூடிய சண்முகம் அண்ணையையே சேரும். வண்ணைச் சிவன் கோவிலின் முன்புறமாக இருக்கின்ற சைவ உணவு நிலையத்தின் உரிமையாளர்தான் சண்முகம் அண்ணை. அவர் அப்போது சாவகச்சேரியில் கடை வைத்திருந்தார். அவர் தங்கியிருந்த வீடும் சாவகச்சேரியிலேயே இருந்தது. அந்த வீட்டில் முன்பாக 96ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டிகளை அவர் ரீவி, ஜெனரேற்றர் கொண்டு ஒலிபரப்பியதுடன் அதை கிரிக்கெட்ரசிகர்கள் எவரும் வந்து பார்க்கலாம் என்றும் அனுமதியளித்தார். அப்போது நாம் சிறுவர்களாக இருந்தபோதும், யாழ்நகரில் இருந்தகாலங்களில் அங்கு பரவலாக நடைபெற்றுக்கொண்டிருந்த கிரிக்கெட் போட்டிகளை அனேகம் சென்று பார்த்திருக்கின்றோம் என்பதால் அங்கிருந்த அனேக கிரிக்கெட்ரசிகர்களை நாம் அறிந்துவைத்திருந்தோம். தவிர, அப்போதைய ஈழநாதம் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் பற்றி பல்வேறு கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. பெரும்பாலான கட்டுரைகளை தவபாலன், சுஜீவன் என்போர் எழுதுவர். இவற்றில் சுஜீவன் மூலம் எமக்கும் சண்முகம் அண்ணையின் அறிமுகம் உருவாக்கப்பட்டு விசாகன், தயாபரன் ஆகிய இரண்டு நண்பர்களுடன் நானும் அங்கே போனேன். நினைவுதெரிந்து நேரலையில் பார்க்கும் முதல் கிரிக்கெட் போட்டிகள். அதுவரை ஸ்போர்ட்ஸ் ஸ்ரார் இதழில் புகைப்படங்களைப் பார்த்தும் வர்ணனைகளைக் கேட்டும் கற்பனையாலேயே பார்த்த கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் பார்ப்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த அணி வெல்லவேண்டும் என்ற பதற்றத்துடன் இருந்ததைக் காணமுடிந்தது. சண்முகம் அண்ணை தென்னாபிரிக்க அணியின் ஆதரவாளர். தென்னாபிரிக்கா எதிர்பாராதவிதமாக மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது. ரொஜர் ஹார்பரின் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகள் விழுந்தபோது சண்முகம் அண்ணை இருந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிவிட்டதாக நினைவு. சுஜீவன் இலங்கை அணி ஆதரவாளர். அதுபோல இன்னொருவர் வருவார். அவரின் பெயர் கூடத் தெரியாது. ஆனால் “இந்தியர் சப்போற்றர்” என்று சொன்னால் அவரை அனைவருக்கும் தெரியும். இந்திய அணி விளையடும்போது அவ்வளவு பதற்றத்துடன் காணப்படுவார். உலகக்கிண்ணப் போட்டிகள் முடிவதற்கு முன்னர் சுஜீவனும் அவரும் கைகலப்பில் ஈடுபடலாம் என்று எதிர்பார்த்தோம். அப்படியேதும் நடக்கவில்லை.
சாப்பாட்டுக் கடைகளுக்கு பரவலாகச் சென்று சாப்பிடத் தொடங்கியதும் இக்காலப்பகுதியில் தான். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் நாட்களில் மதியம் நாம் விழுந்தடித்துச் சென்று சண்முகம் அண்ணையின் கடையிலோ அல்லது வேறு கடைகளிற்கோ சென்று வடையும் தேநீரும் உண்போம். சிலசமயம் ரொலெக்சிலும் “ரோல்ஸ்” அல்லது சாப்பாடு உண்போம். யாழ்ப்பாணத்தில் இருக்கின்றபோதும் ரொலெக்ஸ் பாண் (அப்போது வெதுப்பி என்ற பெயர் பாவிக்கப்பட்டது) மிகப் பிரபலமானதாக இருந்தது. பாணுக்கு தட்டுப்பாடு நிலவாத காலங்களில் கூட ரொலெக்சில் வரிசையில் நின்று பாண் வாங்குவதை அவதானித்திருக்கின்றேன். அன்றைய யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் தினேஷ் வெதுப்பகமும் ரொலெக்சும் (ரொலெக்சும் அப்போது தமிழ் பெயர் ஒன்றிற்கு மாற்றப்பட்டிருந்தது) பாணிற்கு பிரபலமானவை. போர்ச் சூழலில் கூட அங்கே பேஸ்ற்றீகள் சுடச்சுட செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்தன.
பாடசாலை இல்லாததாலும் பகல் முழுவதும் சும்மா இருப்பதால் நாளெல்லாம் பாடல் கேட்கும் பழக்கமும் இருந்தது. அப்போது எமக்கு மிக விருப்பமான பாடல்களில் ஒன்றாக திரு.மூர்த்தி திரைப்படத்தில் வரும் செங்குருவி, செங்குருவி என்ற பாடலும் இருந்தது. ஒரு முறை நானும் விசாகனும் எனது பெரியம்மாவை வேலைக்கனுப்ப கொடிகாமச் சந்திக்கு சென்றிருந்தோம். பெரியம்மாவை பஸ்சில் ஏற்றி விட்டு திரும்பும் போது மூலையில் இருந்த கடையின் வானொலி “விளம்பரங்களை அடுத்து திரு மூர்த்தி திரைப்படத்தில் எஸ்பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி இணைந்து பாடிய பாடல் ஒலிபரப்பாகும். பாடலுக்கு இசை தேவா” என்று ஒலிப்பானது. அந்த பாடலைக் கேட்டே ஆகவேண்டும் என்று இருவரும் ஒரே நேரத்தில் யோசித்தோம். கடைக்கு வெளியில், தெருவோரமாக இருந்து பாடல் கேட்டால் ஒழுங்காக இராது. வாகன இரைச்சல் வேறு. சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே நுழைந்தோம். அது ஒரு அப்பக் கடை. ஆளுக்கு இரண்டு அப்பமும் தேனீரும் பாடலைக் கேட்டபடியே, பாடலைக் கேட்பதற்காகவே சாப்பிட்டோம்.
யாழ்ப்பாணத்தில் இருந்த அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் புத்தகங்கள் வாசிக்கவில்லை. ஆனால் இந்திய சஞ்சிகைகள் அப்போது எமக்கு பெரியப்பாவால் அனுப்பப்பட்டு வந்துகொண்டிருந்தன. மானிப்பாய் தொகுதியினருக்கான தபால்நிலையம் நுணாவிலுக்கு அண்மையில் இருந்த வீடொன்றில் தற்காலிகமாக இயங்கியது. ஒருமுறை அப்பாவும் நானும் அங்கே சென்றபோது எம்முடைய முகவரிக்கு வந்திருந்த புத்தங்கள் ஒரு சாக்கொன்றினுள் கட்டப்பட்டு பெரும் மூட்டையாக இருந்தது. யோசித்துப்பாருங்கள் ஒரு மூட்டை முழுக்க இதழ்கள், மாத நாவல்கள், எப்படி இருக்கும்?
முன்னர் கொக்குவில் நாச்சிமார் கோவிலடியில் இயங்கி வந்த ஞானம் புத்தகநிலையம் இக்காலப்பகுதியில் புத்தூர்ச்சந்திக்கு அருகாமையில் இயங்கியது. நானும் விசாகன் என்ற நண்பனும் அங்கே அடிக்கடி சென்று பேசிக்கொண்டிருப்போம். சில சமயங்களில் அவர் எம்மைக் கடையைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு தன் வேலைகளைப் பார்க்கக் கிளம்பிடுவார். நாம் அங்கிருந்து பாட்டுப் புத்தகங்களையும், சினிமாச் செய்திகளையும் பார்த்துக்கொண்டிருப்போம். அன்றாட களநிலவரங்களை உதயன் பத்திரிகை மூலம் அறிந்துகொண்டோம். வீரகேசரி ஞாயிறு இதழ்கள் வரும். அனேகமாக ஒவ்வொரு இதழிலும் நடிகர் பிரசாந் பற்றி வீரகேசரியில் ஏதாவது செய்தி வரும். ஒருமுறை கிட்டத்தட்ட பத்து திரைப்படங்களின் பெயர்களும் சில புகைப்படங்களும் போட்டு, இவையெல்லாம் பிரசாந் நடித்துவெளிவர உள்ள திரைப்படங்கள் என்று கிட்டத்தட்ட அரைப்பக்கத்துக்கு ஒரு செய்திவந்தது. அதில் ஒரு படம் கூட வெளியானதாக நினைவில்லை (புலித்தேவன், உளிச்சத்தம், துளசி, வைரம், படகோட்டி பாபு, ஜித்தன் என்கிற பெயர்கள் இப்போதும் நினைவில் உள்ளன).
இது தவிர சில சமயம் விடத்தல் பளையில் இருந்துவெளிக்கிட்டு மட்டுவில், கைதடி என்று போகும் வழியில் இருக்கின்ற நண்பர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு போவோம், காணாமற்போன, தொடர்பில்லாது போன நண்பர்களை எங்காவது காணலாம் என்ற நப்பாசையுடன். யாழ்ப்பாண இடப்பெயர்வின்பின்னர் ஒருமுறை கூட காணாத, பேசிக்கொள்ளாத, தொடர்பேயில்லாது போன எத்தனையோ நட்புகள் உண்டு. கொக்குவிலில் எமக்கு கணக்கியல் கற்பித்த அரவிந்தன் என்ற ஆசிரியர் சிலதடவைகள் என் வீடு தேடிவந்து என்னுடனும் எப்போதும் என்னுடன் இருக்கும் நண்பர்கள் விசாகன், தயாபரனுடனும் பேசிக்கொண்டிருப்பார். நான் கல்விகற்ற ஆகச்சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் அவர். அப்போது இளைஞராக, பல்கலைக்கழக மாணவராக, எம்மைவிட சிலவயதுகளே கூடியவராக இருந்த அவரை எம் ஆசிரியர் என்று நம்புவதே என் பெற்றோருக்கு சிரமமாக இருந்தது. சில தடவைகள் நண்பர்கள் போல ஒன்றாக ஊர் சுற்றியும் இருக்கின்றோம். பூம்பொய்கை என்று சாவகச்சேரி சந்தியில் இருந்த குளிர்பானநிலையத்திற்கு கூட்டிச் சென்று ஐஸ்கிறீம் வாங்கித்தந்தும் இருக்கின்றார்.
இந்தக் காலகட்டம் பற்றி எழுதுவதற்கு இன்னும் ஏராளமான நினைவுகள் உள்ளன. எவ்வளவோ நெருக்கடிகளுக்குள் வாழ்ந்த அந்தக் காலப்பகுதியில் நாம் அந்த வயதில் வாழ்வை எதிர்கொண்டவிதம் இவ்வாறாக இருந்தது. அன்று இருந்த பொருளாதார நெருக்கடி, காசோலையை மாற்றுவதற்கு கூட மக்கள் எதிர்கொண்ட சிரமம், காசோலையை காசாக்க 10% வரை கொமிசனை மக்கள் கொடுக்கவேண்டி நேர்ந்த கொடுமை என்று பேச எத்தனையோ இருக்கின்றன. அன்று நேசித்த தென்னிந்திய திரைப்படங்கள், கிரிக்கெட் பற்றிய இன்றைய அவதானமும் முழுக்கவும் மாறி இருக்கின்றது. ஆனால் அன்று இவ்விதமே வாழ்ந்தோம் என்பதுதான் நிஜம். அப்போது நான் புரட்சிகரமானவனாக இருந்தேன் என்று பொய்சொல்லி என் அரசியலை சரியானதாக்குவதைவிட, அன்றைய வாழ்வை நான் எதிர்கொண்டவிதத்தை ஆவணப்படுத்துவதே நேர் என்று நினைக்கின்றேன்.
பின்குறிப்பு :
இக்கட்டுரை யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழான சூரியகாந்திக்காக எழுதப்பட்டு 02-11-2014 அன்று வெளியானது.
இக்கட்டுரைகள் போர் சூழ்ந்த 90 முதல் 97 வரை, தன் பதின்மங்களிலும் பதின்மங்களை ஒட்டிய பருவங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வை, வாழ்வை அவன் எதிர்கொண்டவிதங்கள் பற்றிய நினைவுமீட்டல்களாக எழுதிவருகின்றேன்.
அருமை.
அதே நினைவுகள் எனக்கும் உண்டு!
LikeLike