நவாஸ் சௌபி எழுதிய “முஸ்லிம் தேசிய இலக்கியம்” என்கிற நூல் ஈழத் தமிழ் இலக்கியம் என்ற பகுப்பில் இருந்தும், ஏற்கனவே அழைக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற பகுப்பில் இருந்தும் வேறுபட்டு, மேற்குறித்த பகுப்புகளின் போதாமையை எடுத்துரைத்து “முஸ்லிம் தேசிய இலக்கியம்” என்ற அடையாளத்தின் அவசியத்தினை தர்க்கபூர்வமாக முன்வைக்கின்றது.

இலங்கை முஸ்லிம்கள் தமிழ்மொழியைப் பேசுவதால் தமிழ்பேசும் மக்கள் என்ற அரசியல் அடையாளத்தாலேயே நீண்டகாலம் அழைக்கப்பட்டனர், அவர்கள் படைக்கும் இலக்கியமும் ஈழத் தமிழ் இலக்கியம் என்ற அடையாளத்தினுள்ளேயே உள்ளடக்கப்பட்டது. ஆயினும் பின்னாட்களில் தனித்துவமான பண்பாட்டு அம்சங்களை வைத்து “இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்” என்ற கருதுகோல் உருவானது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பது எவ்விதம் வரையறை செய்யப்படுகின்றது என்று பார்ப்போம்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்

முதலாவது இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஏ.எம்.ஏ அஸீஸ் அவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்பதை “முஸ்லிம்கள் தமக்கென உள்ள கலாசாரத் தனித்துவத்தை பிரதிபலித்துக்காட்டும் தமிழ் இலக்கியமே இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாகும்” என்று வரையறுத்ததுடன், “இஸ்லாமிய இலக்கியம் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை அடியொற்றியதாக அமையவேண்டும், அதை அவமதிப்பதாகவோ கண்டிப்பதாகவோ அமையலாகாது என்றும், இந்த வகையில் இஸ்லாத்தை மார்க்கமாகக் கொள்ளாதோரும் திருக்குர் ஆனின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், மனித நாகரிகத்திற்கு நபிகள் நாயகம் அவர்கள் ஆற்றிய தொண்டை அங்கீகரித்தும், அனுதாபத்துடனும் எழுதுவார்களேயானால் அவையும் இஸ்லாமிய (தமிழ்) இலக்கியமாகக் கருத்தப்படும்” என்றும் என்றும் வரையறை செய்தார்.

மிக முக்கியமாக இஸ்லாமிய இலக்கியத்தின் தோற்றுவாயாக இருந்த கலாநிதி மர்ஹம் எம்.எம்.உவைஸ் அவர்கள் தான் எழுதிய “மருதை முதல் வகுதைவரை” என்ற நூலில் இஸ்லாமிய இலக்கியம்பற்றி பின்வருமாறு வரையறை செய்திருக்கிறார்.
“இஸ்லாத்தைப் பற்றி தமிழில் எழுதும் பொழுது பெறப்படுவது இஸ்லாமியத் தமிழ் இலக்கியம். அது செய்யுள் நடையாக இருக்கலாம் அல்லது உரைநடையாக இருக்கலாம். இஸ்லாம், தமிழ், இலக்கியம் என்னும் மூன்று சொற்களைக் கொண்டதாக அமைந்துள்ளது இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் (பக்கம் – 15)”

இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் என்கிற நூலில் எஸ். ஏ. ஆர். எம். செய்யித் ஹஸன் மௌலனா, “பெருங்காப்பிய இலக்கணங்களுக்கமைவாய் இலக்கிய காப்பிய மரபில் இலக்கியம் படைத்தவர்கள் முஸ்லிம் புலவர்கள் நாற்பொருள் படைக்கும் நடை நெறித்தாகிய நற்றமிழ் இலக்கியம், அறம், பொருள், இன்பம், வீடு அனைத்துமடங்கிய திறம்பெறுபனுவல் தீந்தமிழும், தீன்தமிழும் இணைந்த சங்கமம் இஸ்லாமிய தமிழ் இலக்கியம்” என்று வரையறை செய்கின்றார்.

இஸ்லாம் இலக்கியங்கள் தமிழ் மொழியில் 16ம் நூற்றாண்டிலிருந்தே படைக்கப்பட்டதாக தற்போது குறிப்பிடப்பட்டாலும், 1970கள் வரை இஸ்லாமியரின் தமிழுக்கான இலக்கியப் பங்களிப்பு பற்றி வெளியில் தெரியப்படாதநிலையே இருந்தது. அக்காலப்பகுதியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த முனைவர். சுப. மாணிக்கம் அவர்களை முனைவர் அஜ்மல்கானும், பேராசிரியர் உவெய்சும் சந்தித்தபோது துணைவேந்தர் அவர்கள், இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வில் என்ன செய்யப்போகின்றீர்கள் என்று கேள்வியெழுப்பியதுடன் இஸ்லாமிய தமிழ் இலக்கியமாக சீறாப்புராணம் தவிர வேறு என்ன இருக்கின்றது என்றும் கேட்டதாக “இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு படைத்த மாநாடுகள்” என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுபோலவே அசன்பே சரித்திரத்திற்கு எழுதிய முன்னுரையில் கலாநிதி. செ. யோகராசாவும் “ஈழத்தில் தமிழில் வெளிவந்த முதல் நாவல் (1885) அசன்பே சரித்திரம் என்பது இன்றுள்ள ஈழத்து இலக்கிய ஆர்வலர் பலருமறிந்த விடயமாகும். ஆயினும், முதல் ஈழத்து இலக்கிய வரலாற்று நூலான “ஈழத்து இலக்கிய வளர்ச்சி (கனக. செந்திநாதன் – 1964)” யோ, ஈழத்து முதல் நாவல் வரலாறு பற்றிய நூலான “ஈழத்து நாவல் வளர்ச்சி (சில்லையூர் செல்வராசன் – 1967)” யோ இந்நாவல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. காரணம், இந்நாவல் 1890ல் இரண்டாம் பதிப்பைக் கண்டிருப்பினும், 1974ல் மூன்றாம் பதிப்பைக் கண்டபின்னர்தான் பரவலாக அறியப்படுகின்ற வாய்ப்பினை பெற்றுக்கொண்டது” என்று குறிப்பிடுகின்றார். இப்படியான ஒரு சூழ்நிலையில் இருந்து இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்பதை மீட்டெடுத்து பரவலான கவனத்துக்கொண்டுவந்த அரும்பணி பேராசிரியர் உவெய்ஸினுடையது.. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு என்கிற பெயரில் ஆறு தொகுதிகளைக் கொண்டுவர திட்டமிட்டு அவர் பணியாற்றியபோதும் 5 தொகுப்புகளை மாத்திரமே அவரால் கொண்டுவரமுடிந்தது. முஸ்லிம்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணிகளையும், அவர்களது இலக்கியப்பங்களிப்பையும் மீட்டெடுத்தவையாக பேராசிரியர் உவெய்ஸின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இத்தொகுப்புகளே இருக்கின்றன.

ஆயினும், “இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்” என்பது பற்றி இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டப்பட்ட வரையறைகளின்படி, இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற அடையாளம் மதம் சார்ந்த, அல்லது மதக் கருத்துகளை முன்வைக்கின்ற இலக்கியங்களையே அடையாளப்படுத்தும் என்பதை நாம் உணரமுடிகின்றது. இந்த அடிப்படையில் முஸ்லிம் ஒருவரால் எழுதப்படும் அரசியல் குறித்த எழுத்துக்களோ, நாட்டாரியல் குறித்தனவோ, மொழிபெயர்ப்புகளோ “இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்” என்று உள்ளடக்கப்படமுடியாதது ஆகிவிடுகின்றது. இந்தப் போதாமையே “முஸ்லிம் தேசிய இலக்கியம்” என்கிற இலக்கிய அடையாளம் குறித்து நவாஸ் சௌபி அவர்கள் முன்வைக்கின்ற கருதுகோலை நோக்கி நகர்த்துகின்றது.

முஸ்லிம் தேசிய இலக்கியம்

நவாஸ் சௌபி அவர்கள் 2002ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் செயற்பாட்டுக் குழுவில் ஒருவராகக் கலந்துகொண்டு மாநாட்டின் முழுநிகழ்வுகளின் உள்ளடக்கங்களையும் அவதானித்தபோது, “தமிழ்” என்பது இன்னொரு அடையாளமாகவும், அதிகாரமாகவும் இருப்பதை உணர்ந்ததாகவும் “இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்” என்பதை “இஸ்லாம் இலக்கியம்” என்றே அழைக்கலாமே என்ற எண்ணம் தோன்றியதாகவும் அதன் தொடர்ச்சியாகவே “முஸ்லிம் தேசிய இலக்கியம்” என்ற இலக்கிய அடையாளத்தை முன்வைப்பதாகவும் முன்னுரையில் கூறுகின்றார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பது முஸ்லிம்களின் முழுமையான இலக்கிய வடிவங்களையும் உட்கொண்டதா? என்றும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் மதத்தினை அல்லது பக்தி இலக்கியத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுவது என்று வரையறை செய்யப்பட்டிருப்பதைவைத்து, இஸ்லாமியர்கள் எழுதுவதெல்லாம் இஸ்லாம் இலக்கியமா? அல்லது இஸ்லாம் குறித்து எழுதப்படுபவை எல்லாம் இஸ்லாமிய இலக்கியமா? என்றும் வினாக்களை முன்வைத்து ஆய்ந்து அவற்றின் அடிப்படையில்,
“முஸ்லிம்களின் தனித்துவமான இருப்பினையும், சுயத்தினையும் கொண்ட பண்பாடு, கலாசாரம், சம்பிராதாயங்கள், சடங்குகள், பாரம்பரியங்கள், அழகியல் சார்ந்த அகமன படைப்புகள், மண்வளம் கொண்ட மொழிப்பயன்பாடுகள் என்று முஸ்லிம்களின் எல்லா வகையான படைப்புகளையும் “முஸ்லிம் தேசிய இலக்கியம்” உள்ளடக்கும். இவற்றுள் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், நாட்டாரியல், ஓவியம், ஆய்வுகள் என்று இன்னும் பல இலக்கியப் படைப்புகளும் முக்கியம் பெறுகின்றன.
மதம், பக்தி இலக்கியம் என்ற வரையறைக்குள் சுருங்கிய இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தினை முஸ்லிம்களின் முழு எழுத்து வடிவங்களையும் உள்ளடக்கக் கூடிய வகையில் விரிந்த ஓர் இலக்கிய அடையாளமாக பேச முனைவதே “முஸ்லிம் தேசிய இலக்கியம்” ஆகும்.”

என்று வரையறை செய்கின்றார். அதாவது “தமிழ்” என்று அடையாளத்தால் அடக்கப்படும் “ஈழத் தமிழ் இலக்கியம்” என்ற அடையாளத்தில் இருந்து தனித்துவமான இலக்கிய அடையாளம் ஒன்றை முன்னெடுப்பதும், ஏற்கனவே வழக்கத்தில் இருந்த “இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்” என்ற இலக்கிய அடையாளம் ஏற்படுத்தக்கூடிய மதம், பக்தி இலக்கியம் என்ற வரையறையை விட்டு, முழுமையான இலக்கிய அடையாளம் ஒன்றை தாங்கி நிற்பதும் நவாஸ் சௌபி அவர்களின் நோக்கங்களாகும். தமிழர்களைப் பொறுத்தவரை “தமிழ்” என்பது அடையாளம் சார்ந்த விடயம் என்றும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை “தமிழ்” என்பது மொழியேயன்றி அடையாளமல்ல என்கிற தர்க்கத்தையும் முன்வைக்கின்றார்.

முஸ்லிம் தேசிய இலக்கியம் என்பதை முஸ்லிம் இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம், பிறமொழி இலக்கியம், பிற சமூகங்களுக்கான இலக்கியம் எனும் நான்கு பெரும்பிரிவுகள் கொண்டதாக பிரிக்கின்றார். இவற்றுள் முதலாவது பிரிவான முஸ்லிம் இலக்கியம் நான்கு பிரிவுகளைக் கொண்டது; அவையாவன : இஸ்லாம் இலக்கியம், முஸ்லிம் தேச இலக்கியம், சமூக இலக்கியம், ஏனைய இலக்கியம். இலங்கையில் முஸ்லிம்கள் ஒரு தனித் தேசியம் என்பதை பெரும்பாலோனோர் ஏற்று வருகின்ற காலப்பகுதியில், முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளங்கள், பண்பாட்டு அசைவுகள், நாட்டாரியல் என்பன பற்றிய வாசிப்புகளும், கற்கைகளும் அதிகரித்து வரும் காலப்பகுதியில் நவாஸ் சௌபி அவர்களின் இக் குறுநாலும், அதனூடாக அவர் முன்னெடுக்கும் உரையாடலும் மிக காத்திரமான முன்னெடுப்புகளாகும்.

உசாத்துணை நூல்கள்
1. முஸ்லிம் தேசிய இலக்கியம் – நவாஸ் சௌபி
2. இஸ்லாமும் தமிழும் இலக்கிய சங்கமம் – எஸ். ஏ. ஆர். எம். செய்யித் ஹஸன் மௌலானா
3. அசன்பேயின் சரித்திரம் – எம். சி. சித்தி லெவ்வை மரைக்கார் (செ. யோகராசாவின் முன்னுரை)
4. இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் விபரத்திரட்டு முதலாம் பாகம்

நன்றி
Noolaham.net
திரு. நவாஸ் சௌபி

 

குறிப்பு : இக்கட்டுரை தொடர்பாக இன்னும் இரண்டு பாகங்கள் எழுத திட்டமிட்டுள்ளேன்.  அவற்றையும் எழுதிமுடிக்கும்போது இக்கட்டுரை என்னளவில் ஓரளவு முழுமை பெறும்.

 

(தாய்வீடு ஒக்ரோபர்-2014 இதழுக்காக எழுதப்பட்டது)