யாழ்ப்பாணத்துக் கலாசாரம் என்ன கலாசாரம் என்று யாரேனும்கேட்டால், யாழ்ப்பாணத்துக் கலாசாரம் ட்யூஷன்கள் நிறைந்த கலாசாரம் என்று சொல்லும் அளவுக்கு 90களில் முதலாம், இரண்டாம் வகுப்புப்படிக்கும் பிள்ளைகள் முதல் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வானவர்களுக்கான ஆங்கிலவகுப்புகள் என பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற ட்யூஷன்கள் நிறைந்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே பாடத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த பெருமையும் இந்த ட்யூஷன்களுக்கே உண்டு.
வேலாயுதம் அவர்களால் நடத்தப்பட்ட மணி கல்வி நிறுவனம், பாஸ்கரன் அவர்களின் எடிசன் அக்கடமி, கோண்டாவிலில் இயங்கிய நிரு ட்யூஷன், மானிப்பாயில் நாயும் பூனையும் மதில் என்று எல்லாருக்கும் தெரிந்த மதிலுடன் கூடிய பிட்ஸ்மன், சித்தன்கேணியில் இயங்கிய நாவலர் கல்விநிலையம், 5ம்ஆண்டு புலமைப்பரிசில் எழுதும் மாணவர்களுக்கு மாதிரிப்பரீட்சைகள் நடத்துவதில் புகழ்பெற்ற “புதிய கல்வி நிலையம்”, ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, தற்போதைய மாகாணசபை உறுப்பினர் பொ. ஐங்கரநேசன் அவர்களால் நடத்தப்பட்ட யுனிவேர்சல், எந்தப் பெயரும் இல்லாமல் நவாலியில், ஒழுக்கத்துக்கும் கண்டிப்பிற்கும் பெயர்போன மரியதாஸ் என்பவரால் நடத்தப்பட்ட ஒரு கல்விநிலையம், பகல்நேர வகுப்புகளுக்குப் பெயர் பெற்ற விக்னா என்பன இவற்றுள் முக்கியமானவை. தவிர, சில ஆசிரியர்கள் தனிப்பட நிர்வகித்துவந்த சிறிய அளவிலான ட்யூஷன் வகுப்புகளும் இருந்தன.
நான் 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியபோது எனக்கு ஆசிரியராக இருந்த அருட்பிரகாசபிள்ளை அவர்கள் சுதுமலை என்கிற சிறிய ஊரில், சிந்மயபாரதி என்கிற ஒப்பீட்டளவில் சிறிய பாடசாலையில் தொடர்ச்சியாகக் கணிசமான மானவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்குக் காரணகர்த்தா என்று சொல்லத்தக்கவர். போக்குவரத்துவசதிகள் அதிகம் இல்லாத காலங்களில், வண்ணார்பண்ணையில் இயங்கிவந்த புதிய கல்வி நிலையத்தில் இருந்து வினாத்தாள்களைப் பெற்றுவந்து தனதுவீட்டில் வைத்தே பல மாணவர்கள் புலமைப்பரிசில் மாதிரிப்பரீட்சைகளை எழுதவைத்து ஊக்குவித்தவர்.
அதுபோலவே நவாலியில் மரியதாஸ் என்ற ஆசிரியர் நடத்திவந்த கல்வி நிலையமும். அவர் ஆற்றிய பணி என்னவென்று அறியவேண்டுமானால், நவாலியில், குறிப்பாக சென் பீற்றர்ஸ் தேவாலயம் அமைந்துள்ள சூழலில் அவர் ட்யூஷன் வகுப்புகளை ஆரம்பிக்கும் முன்னரும், பின்புமாக எத்தனை பட்டதாரிகள் உருவானார்கள் என்று பார்த்தாலே தெரியும். கண்டிப்பிற்கும் ராணுவ ஒழுங்கிற்கும் பெயர் போனவர். எனக்குத் தெரிந்து ட்யூஷன் வகுப்பிற்கு மாணவர் எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து வெளிக்கிட்டார், எத்தனை மணிக்கு வகுப்புமுடிய வீடு திரும்பினார் என்பதையெல்லாம் பெற்றோரிடம் விசாரித்து, அவற்றை கொப்பிகளின் பின்பக்கமாக பெற்றோரின் கையெழுத்துளுடன் பதிவுசெய்த ஒரே ஆசிரியர். அத்துடன், எவ்வளவு தூரத்தில் இருந்து வருபவர் சைக்கிளில் வரலாம், இவ்வளவு சுற்றுவட்டத்துக்குள் இருந்துவருபவர்கள் நடந்துதான் வரலாம் என்கிற ஒழுங்குமுறைகளும் இருந்தன. வகுப்புக்கு ஏதேனும் காரணங்களால் வரமுடியாவிட்டால் பெற்றோர் / பாதுகாவலரிடம் இருந்து கடிதத்துடனோ அல்லது கையுடன் அழைத்து வந்தாலே, அதுவும் சரியான காரணங்களுடன் வந்தாலே வகுப்பில் அனுமதி கிடைக்கும். ஒருமுறை அங்கே ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் ஒருவர் திடீரென இரண்டு வகுப்புகளுக்கு வராமல் இருந்துவிட்டு மீண்டும் கற்பிக்க வந்தபோது தனது தகப்பனையும் அழைத்துவந்ததை இப்போதும் நண்பர்களுடன் பேசிச்சிரிப்போம். ட்யூஷன் என்பதை ஒருபோதும் வியாபாரமாகப் பார்க்காதவர் அவர். ஐந்து பாடங்களிற்கு ஏழு ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். ஆனால் கட்டணம் மாதம் ஐம்பது ரூபாய் மாத்திரமே. குடும்பத்தின் பொருளாதாரநிலைமை காரணமாக நிறையமாணவர்கள் அவரிடம் இலவசமாகவே படித்ததை நான் அறிவேன். மின்சாரம் இல்லாத மண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவிய அன்றையகாலங்களில் இரவுகளில் நிறையமாணவர்கள் அவரது வீட்டிற்குச் சென்று – வகுப்பறைகளில் ஏற்றிவைத்திருக்கும் அரிக்கன்லாம்பிலும் பெற்றோமக்ஸிலும் – படித்தார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மொனிற்றர் (வகுப்புத் தலைவர்) இருப்பாரென்றாலும், அவர் மொனிற்றர் என்றழைப்பது என்னைத்தான். “மொனிற்றரை வந்து என்னைச் சந்திக்கச் சொல்லும் ஐசே” என்று நண்பன் தெய்வீகனிடம் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் சொல்லிவிட்டார். இரண்டாம்நாள் போய்ச்சந்தித்தேன். நெடுநேரம், படிப்புப்பற்றி இல்லாமல் நெருக்கமாகப் பேசிக்க்கொண்டிருந்தார். அவர் அவ்விதம் பேசுவது அரிது. இருட்டி விட்டது சென்றிக்குள்ளால போறது கவனம் ஐசே என்று சொல்லி என்னை வழியனுப்பிவைத்தார். அடுத்தநாள் காலை அப்போது படித்துக்கொண்டிருந்த உயர்தரவகுப்புகளுக்கான ட்யூஷனுக்குப் போனபோது தெய்வீகனைக் காணவில்லை. எங்கே என்றுகேட்டபோது, “மரியர் செத்துவிட்டார் மச்சான்” என்றான் இன்னொருநண்பன். உடனே அவர் வீடுநோக்கி ஓடினேன். நான் கதைத்துவிட்டுச் சென்ற சிலமணித்தியாலங்களில் இறந்திருக்கின்றார். “உங்களிட்டச் சொல்லிட்டுப் போகோனும் என்றோ உங்களை வரச்சொன்னவர் மொனிற்றர்” என்று என்னைக்கண்டு அழுதார் அவரின் மனைவி புஷ்பம் அக்கா.
மரணப் படுக்கையிலும் மறக்காத நினைவுகள் என்றால் எடிசன் அக்கடமியில் கல்விகற்ற காலந்தான் இப்போதும் நினவுவருகின்றது. எடிசன் அக்கடமி அப்போது யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகிலும், கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு அருகிலுமாக இரண்டு இடங்களில் இயங்கிவந்தது. பாஸ்கரன், அரவிந்தன், கோபி, கொலின்ஸ், சந்திரமோகன் என்று பெரும்பாலும் இளைஞர்களே வகுப்பெடுத்தார்கள். அங்கு சமூகக்கல்வியும் வரலாறும் கற்பித்த கோபி யாழ்ப்பாணத்தில் ஒரு குட்டி கதாநாயகன். சற்று தடித்தகுரலில் சாதுவான “கொன்னை”யுடன் கைகளை வேகமாக அசைத்துக்கொண்டும், shirt sleeve களை அடிக்கடி இழுத்துவிட்டபடியும் அவர் பேசும் அழகுக்கு ரசிகர்கூட்டமே இருந்தது. அத்துடன் சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் படிப்பிப்பதால் அரங்கம் நிறைந்த வகுப்புகளாகவே அவரது வகுப்புகள் நடைபெறும். ஒருமுறை பலமாக கொட்டாவிவிட்ட ஒரு மாணவனை பார்த்து “தம்பி வாய மூடும், நேற்று சாப்பிட்ட இடியப்பம் சாம்பாரில மிதக்கிது” என்றபோது கடலலை போல சிரிப்பலை எழுந்தது. பின்னொருநாள் “சத்யா கட்” உடன் வந்த நண்பன் தயாவைப் பார்த்து “நீர் என்ன மிச்ச காசுக்கும் தலமயிர் வெட்டினீரா” என்று கேட்டது இப்போதும் எமக்குள் பிரபலமான நகைச்சுவை.
எடிசன் அக்கடமியில் அப்போது விஞ்ஞானம் கற்பித்த ஆசிரியர் ஒருவர் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இடையில்விலகிவிட அவருக்குப் பதிலாக வடமராட்சியில் பிரபலஆசிரியராக இருந்த ந. மகேந்திரன் என்பவர் முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் கற்பிப்பதற்காக எடிசன் அக்கடமிக்கு பாஸ்கரன் அவர்களால் அழைத்துவரப்படுகிறார். இப்போதும் நன்றாக நினைவில் இருக்கின்றது. கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு அருகில் அப்போது இயங்கிவந்த எடிசன் அக்கடமிக்கு அருகில் தெருவுக்குக்குறுக்காக முழுத்தெருவின் அகலத்தில் பெரியதோர் பனர், “ —ம் திகதி முதல் வடமராட்சி பிரபலஆசிரியர் ந. மகேந்திரன் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில்” என்று. அப்போது பதினோராம் ஆண்டு விஞ்ஞான பாடத்தில் “இலத்திரனியல்” என்றொரு அத்தியாயம் இருந்தது. அதற்கும் விளம்பரம், “ஆரம்பம், வடமராட்சிப் பிரபல ஆசிரியர் ந. மகேந்திரனின் “இலத்திரனியல்” —-ம் திகதி முதல். உடனே பதிவு செய்யுங்கள்” என்று. அப்போது அங்கு வெளியான பத்திரிகைகளிலும் இந்த விளம்பரங்கள் வெளியாகும். பின்னாட்களில் ரட்சகன் திரைப்படம் வெளியானபோது, நடிகர் ரஜினியுடன் அதிருப்தி கொண்டிருந்த தயாரிப்பாளர் குஞ்சுமோன், நடிகர் நாகார்ஜூனாவை “தென்னினிந்திய சுப்பர் ஸ்ரார்” என்கிற அடைமொழியுடன் தமிழகத்தில் விளம்பரம்செய்தபோது எனக்கு ஏனோ மேற்படி சம்பவமே ஞாபகம் வந்தது. எடிசனில் அப்போது 7 பாடங்கள் கற்கவான கட்டணம் மாதம் 135 ரூபாய்களே.
தனியார் கல்வி நிலைய ஒன்றியம் என்ற அமைப்பின் கீழ் அப்போதைய தனியார் கல்விநிலையங்கள் / ட்யூஷன்கள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டன. அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டபோது, பதினோராம் ஆண்டுவரை ஒரு பாடத்திற்கு – எத்தனை ஆசிரியர்கள் கற்பித்தாலும் கூட – 20 ரூபாய்க்கு மேல் கட்டணம் அறவிடப்படமுடியாது. வாரத்தில் எத்தனை நாட்கள் வகுப்புகள் நடத்தப்படலாம், என்ன நேரம்வரை நடத்தப்படலாம், விடுமுறைகள் எவை என்பனவெல்லாம் ஓர் ஒழுங்குமுறையின் கீழ் தீர்மானிக்கப்பட்டன. பாடக்குறிப்புகளையோ அல்லது மாதிரி வினாத்தாள்களையோ வழங்கினால் அதற்கு எவ்வளவு கட்டணம் அதிகபட்சமாக அறவிடப்படலாம் என்பதுவரை எல்லாமும் இந்த ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டன. தனியார் வகுப்புகளை நடத்தியபலர் வியாபார நோக்குடையவர்களாக இருந்தபோதும், அவை முழுமையாக வியாபார நிலையங்களாகிவிடாது இந்த ஒழுங்குமுறைகள் பாதுகாத்தன
எப்போதும் கொண்டாட்டத்துடன் மட்டுமே நினவுக்குவரும் எடிசனில் வகுப்புகள் முடிந்துசென்ற ஒருநாளில்தான் அன்றுகாலை ஷெல் தாக்குதல்கள் ஆரம்பமாகி, அகதிகளாக வந்த மக்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டிருந்த என் சிறுவயது நண்பன் பிரதீஸை, எமது அப்போதைய கொண்டாட்டங்கள் பலவற்றில் இணைந்துமிருந்த பிரதீஸை, நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்தின் அருகாமையில் சந்தித்துப் பேசிவிட்டுச்சென்றேன். நான் விடைபெற்றுச்சென்ற சில மணித்தியாலங்களில் அங்கு நிகழ்த்தப்ட்ட குண்டுத் தாக்குதல்களில் அவனும் கிராமசேவகராக இருந்த அவனது ஒன்று விட்ட சகோதரியும் பலியானது பெருங்கொடுமை.
பீடா, நிஜாம் பாக்கு, அருகில் இருந்த வள்ளிநாயகி கடையில் குடிக்கும் டீ, பின்பு நண்பன் விசாகன் வீட்டில் விளையாடும் கிரிக்கெட் என்று போன வாழ்வை குலைத்தது 95 ஒக்ரோபரில் நடந்த பாரிய இடப்பெயர்வு. இடம்பெயர்ந்து கால்நடையாக செல்கையில் எடிசனை கடக்கும்போது வடிந்த கண்ணீர் இப்போதும் கரிக்கிறது. பின்னர் 96 ஏப்ரலில் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய சிலநாட்களின்பின்னர் மீண்டும் எடிசனுக்குப் போனேன். ஓலைக் கூரைகள் சிதைந்துபோய் இருந்தன. உள்ளே நுழைந்து வழமையாக நாம் அமரும் வாங்கில் சிலநொடிகள் அமர்ந்து பார்த்தேன். மேசையில் இருந்த தூசியை தட்டியபோது எனது பெயருடன் எனது 4 நண்பர்களின் பெயரை எழுதி இருந்ததை கண்டதும் கண்ணில் நீர் கட்டியது. அதற்கு கீழாக சற்று மெல்லிய எழுத்துகளில் எழுதப்பட்டு ஆனால் பிரகாசமாக தெரிந்தது அந்த தேவதையின் பெயர். காதல் பழசாவதும் இல்லை, தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை.
குறிப்பு
இக்கட்டுரை யாழ் உதயனின் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிதழான சூரியகாந்தியில் நவம்பர் 23, 2014, அன்று இடம்பெற்றது.
இக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97வரை, தன் பதின்மங்களிலும், பதின்மங்களை ஒட்டிய காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
-அருண்மொழிவர்மன்
A very interesting and touching, Nice recall Of the period.
LikeLike