“ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு” என்ற ஓர் அழகானபாடலினை என்னவளே திரைப்படத்திற்காக எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வைரமுத்து எழுத உன்னிகிருஷ்ணன் பாடியிருந்தார். சற்று நினைத்துப்பார்த்தால் எல்லா நினைவுகளுக்கும், மறக்கமுடியாத நிகழ்வுகளுக்கும் அவற்றுடன் தொடர்புடையதாக ஏதோ ஒரு பாடல் எப்போதும் இசைத்துக்கொண்டே இருக்கின்றது. நாம் கேட்கும் பாடல்களும், வாசிக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும் எம் வாழ்விற்காக பிண்ணனி இசையை தாமே அமைத்துச் செல்கின்றன. கடந்துபோன நினைவுகளை எப்போதாவது மீட்டிப் பார்க்கும்போது நினவுகளும், பாடல்களும் ஒரு கோர்வையாக, சரம்சரமாக ஒன்றுடன்ஒன்று தொடுத்து வருவதை காணமுடியும்.
உங்களுக்கு ஆகப்பிடித்த பாடல்கள் எவை என்று ஒருமுறை நினைவுகூர்ந்து பாருங்கள், பெரும்பாலும் அவையெல்லாம் உங்கள் பால்ய வயதிலோ அல்லது இளமைப்பிராயத்திலோ வெளியான பாடல்களாகவோ அல்லது அக்காலங்களில் நீங்கள் விரும்பிக்கேட்ட பாடல்களாகவோ அல்லது அக்காலங்களை நினைவுகூறும் பாடல்களாகவோ அமைந்திருப்பதை உங்களால் உணரமுடியும். நினைவு அடுக்குகளில் புதைந்துகிடக்கின்ற பால்யத்தையும் அதையொட்டிய நனவிடைதோய்தலைகளையும், அவ்வப்போது இரைமீட்டு வாழ்வை ஒருபடி அழகாக்குகின்றன பாடல்கள். அப்படி அழகாக்கும்பாடல்களே நமக்குப் பிடித்தனவாகவும் அமைகின்றன. கொத்தித் தின்கின்ற ஞாபகக் காக்கைகள் என் நேற்றை என்கிற கவித்துவமான வரிகளைப் படித்திருக்கின்றேன். அப்படி ஆறிவரும் ரணங்களைச் சற்றே சொறிந்து சுகங்காணும் பாடல்களும் உண்டு. நினைவுகள் எப்போதும் இனிமையானவை மட்டும் அல்லவே!
பாடல்கள் கேட்பதும் திரைப்படங்கள் பார்ப்பதும் எனக்கு எப்போதும் பிடித்தமானவை என்றாலுங்கூட எனது பால்யம் கழிந்த போர்சூழ்ந்த யாழ்ப்பாணத்தில் இவை அத்தனை இலகுவானவையல்ல. மின்சாரவசதி இல்லாத, தொலைத்தொடர்பு வசதிகளும் மிகமிக குறைவான அன்றையகாலம் பற்றி, தற்போதைய தலைமுறையினருக்கும், “வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும்” புரியவைப்பதே பெரும் பிரயத்தனமானது. சைக்கிள் ரைனமோவை இயக்கி அதன் மூலம் பெறப்படும் மின்சக்தியினை அதற்கான தொழிநுட்பத்துடன் வானொலிப்பெட்டிகளுக்கு வழங்கியோ, மோட்டர் பைக், கார் போன்ற வாகனங்களின் மின்கலங்களில் இருந்து வானொலிப்பெட்டிக்கு மின்சக்தியை வழங்கியோ அதன்மூலம் பாடல்களைக் கேட்டுக்கொள்ளுவோம். அந்நாட்களில் சில கடைகளில் “இங்கே பற்றறி சார்ஜ் செய்து கொடுக்கப்படும்” என்று அறிவித்தல் பலகைகளைக் கண்டது இப்போதும் நினைவிருக்கின்றது. அது தவிர, சிலர் சைக்கிள் ரிம், ரைனமோ, இவற்றை இணைக்கும் சிறிய தோல் பட்டி, சுற்றுவதற்கான கைபிடி அல்லது சைக்கிள் பெடல் என்பவற்றினை மரச்சட்டகம் ஒன்றில் இணைத்து விற்பனை செய்தும் வந்தார்கள். இது தவிர, துவிச்சக்கரவண்டிகளை அப்படியே தலைகீழாக கவிழ்த்துப்போட்டுச் சுற்றுவதும், டபிள் ஸ்டாண்ட் (துவிச்சக்கரவண்டியில் பொதுவாக ஒருபக்கமே ஸ்டாண்ட் இருக்கும். டபிள் ஸ்டாண்ட் என்றால் துவிச்சக்கரவண்டியின் இரண்டுபக்கமும் இருக்கும்படியாக இரும்பினால் செய்யப்பட்டு இருப்பது) போட்டு ஏறி இருந்து சுற்றுவதும்கூட வழமையாக இருந்தது. வானொலி, ரோச் என்பவற்றுக்குப்பயன்படுத்து பழுதாகிய மின்கலங்ககளை மெல்லமாக கடித்து / கற்களால் தட்டிவிட்டு சுவர்க்காரங்களில் பொருத்தினால் சுவர்க்கடிகாரம் சிலகாலம் இயங்கும். இப்படி எத்தனையோ குட்டிக் குட்டித் தொழினுட்பங்கள்.
மின்சாரம் இல்லாதபோதும் கூட, பாடல் ஒலிப்பதிவு நிலையங்கள் (ஓடியோ ரெக்கோர்டிங் பார் என்று இவை முன்னர் அழைக்கப்பட்டன) லாபகரமாக இயங்கிவந்தன என்றே சொல்லவேண்டும். யாழ்நகரில் இயங்கிவந்த சண் ரெகோர்டிங், சுப்பசோ / ரவி ஒளிகானம், நியூ விக்ரர்ஸ், மானிப்பாய் வீடியோ ஆனந்த் ஸ்டூடியோ, சங்கானை மிது வீடியோ மற்றும் ஆனைக்கோட்டையில் மூத்த விநாயகர் கோவிலடியில் இயங்கிவந்த ஓர் ஒலிப்பதிவுகூடம் போன்ற கடைகளே பொதுவாக என் தேர்வுகள். குறிப்பாக ரவி ஒளி கானத்தில் சத்தி அண்ணை என்றொருவர் இருப்பார். அருமையான மனிதர். மணித்தியாலக் கணக்காக அவரது கடையில் தவம் இருந்து பாடல்களை பட்டியலிடும் எம்மிடம் ஒருபோதும் சலிப்பைக்காட்ட மாட்டார். தவிர நாம் தேர்ந்தெடுத்திருக்கின்ற பாடல்களின் அதேபாணியிலான பாடல்களையும் எமக்குத் தேர்ந்தெடுத்து உதவுவார். 60 நிமிடங்கள் வருகின்ற “கசற்” ஒன்றினை முழுமையாகப் பதிவுசெய்ய 60 ரூபாய் எடுப்பார்கள். கிட்டத்தட்ட 12 பாடல்கள் வரும். அப்போதைய பாடல்கள் சராசரியாக 5 நிமிடம் என்ற காலஅளவையைக் கருத்திற்கொண்டே இசையமைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். மக்ஸ்வல், டிடிகே என்கிற கசற்றுகள் பிரபலமாகயிருந்தன. இவற்றில் பாடல்களைப் பதிவுசெய்துகொள்வோம். அவ்வாறு பதிவுசெய்துகொள்ளும் கசற்றுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வோம். மின்சாரம் இல்லாத காலம் என்பதால் மின்சக்தியைச் சேமிக்க கசற்றுகளை fast forward / rewind செய்யவேண்டும் என்கிற சந்தர்ப்பங்கள் எழும்போதெல்லாம், கசற்றினுள் பேனையை நுழைத்து அதனைச் சுழற்றுவதன்மூலம் தேவையான fast forward / rewind இனைச் செய்துகொள்ளுவோம்.
அப்போது இந்த ஒலிப்பதிவுகூடங்களில் தம்மிடம் உள்ள திரைப்படப் பாடல்களை திரைப்படவாரியாகப் பட்டியலிட்டு, பாடியவர்கள் பெயர், இசையமைப்பாளர் என்பவற்றுடன் சோகப்பாடல்களாயின் அடைப்புக்குறிக்குள் சோகம் என்று குறிப்பிட்டும் வைத்திருப்பார்கள். எந்தப்பாடல் எந்தப்படம் என்று பார்க்க கும்பலாகச் சென்று அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்போம். 94ம் ஆண்டு முதல் இசைத்தட்டுகள் (கொம்பாக்ட் டிஸ்க்) பரவலாக யாழ்ப்பாணத்து ஒலிப்பதிவுகூடங்களிற்கு வர ஆரம்பித்திருந்தன. சண் ரெகோர்டிங்கிலும், ரவி ஒளிகானத்திலும் இந்த இசைத்தட்டுகளில் வருகின்ற பாடல்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அட்டைகளை கண்ணாடி அலுமாரியின் உட்புறமாக ஒட்டி வைத்திருப்பார்கள். தவிர, பாடல்களை ஒலிப்பதிவு செய்துதரும்போது இசைத்தட்டுகளில் இருந்து ஒலிப்பதிவுசெய்து தருவார்களேயானால் அதற்கு மேலதிகக் கட்டணம் அறவிடப்படும் என்ற – தற்போது யோசித்துப்பார்க்கும்போது – தர்க்கரீதியில் முரணான வழமையும் சில ஒலிப்பதிவுக்கூடங்களில் பின்பற்றப்பட்டது. அதுபோலவே சில கடைகளில் ஒலிப்பதிவுசெய்யும்போதே “மாஸ்ரர் கொப்பி” அடித்துதருகிறோம் என்றும் சொல்வார்கள். அப்போது சிறுவர்களான நாங்கள் அப்படித்தான் மாஸ்ரர் கொப்பி அடியுங்கோ அண்ணை என்றே கேட்போம். மாஸ்ரர் கொப்பி என்றவுடன் எனக்கு மறக்கமுடியாத நினைவொன்று உண்டு.
தொழில் நிமித்தமாக கொழும்பு சென்றுவரும் என் தந்தையார், கொழும்பில் இருந்து நான் கேட்டபாடல்களை ஒலிப்பதிவு செய்துகொண்டுவந்து தருவார். அவ்விதமே காதலன் திரைப்படப் பாடல்களையும் அவர் ஒலிப்பதிவு செய்துகொண்டுவந்திருந்தார். அந்த கசற்றில் காதலன் திரைப்படப் பாடல்களுடன் துறைமுகம் என்ற திரைப்படப்பாடல்களும் பதிவுசெய்யப்பட்டிருந்தன. ஏதோ கோளாறால், இரண்டு படப்பாடல்களும் இடம்மாறி, காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஊர்வசி, ஊர்வசி பாடலும் என்னவளே அடி என்னவளே பாடலும் துறைமுகம் திரைப்படப் பாடல்களாகவும், துறைமுகம் திரைப்படத்தில் இடம்பெற்ற ராஜராஜாவின் ராஜ்ஜியத்தில் பாடலும், ஏண்டா பொறந்த பாடலும் காதலன் திரைப்படப்பாடலாகவும் அந்த கசற்றில் இருந்தது. என்னிடம் இருந்து இந்த கசற்றைப்பெற்ற நண்பன் ஒருவன் மானிப்பாயிலிருந்த ஓர் ஒரு ஒலிப்பதிவுக்கூடத்துக்கு அதனை ~மாஸ்ரர் கொப்பி” என்று சொல்லிக் கொடுக்க அவர்களும் நீண்டநாட்கள் அவ்விதமே கலைச்சேவை புரிந்தனர்.
ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோயிலுக்கு அருகாமையில் இருந்ததாக நான் இப்பதிவின் தொடக்கத்தில் சொன்னகடையில் நிறைய ஆங்கில, பொப் பாடல்களின் கசற்றுகள் இருந்தன. பொனியம் மற்றும் மைக்கேல் ஜாக்சனின் தொகுப்புகள் இருந்தது நன்கு ஞாபகம் இருக்கின்றது. எமது வகுப்பில்கூட ஆங்கிலப்பாடல்களை, குறிப்பாக பொனியத்தை விரும்பிக்கேட்ட பலர் இருந்தார்கள். ஆனால் Rap, Raggae பாடல்கள் எவையும் கேட்கப்பட்டதாய் நினைவில்லை. தவிர, பெரும்பாலும் பாடல் கேட்பது two in one என்றழைக்கப்படும் கசற்போடவும், வானொலி கேட்கவும் வசதியுள்ள “கருவி”ஊடாக என்பதனால் நுட்பமான இசைக்கோர்வைகளைக் கேட்பது நடைமுறையில் கடினமானதாகவும் இருந்தது. தவிர, பெரும்பாலும் இந்தக் கருவிகள் ரைனமோவை சுழற்றுவதன்மூலமாகவே இயக்கப்பட்டதனால் இயல்பாகவே ஏற்படக்கூடிய இரைச்சலும் கவனக்குறைவும் கூட கூர்மையான அவதானத்துடன் பாடல்களைக்கேட்பதற்கு தடையாக இருந்திருக்கக்கூடும்.
இதே காலப்பகுதியில் போராட்டத்திற்கான பிரச்சாரப் பாடல்களும் பெருமளவில் வெளியாகிக்கொண்டிருந்ததுடன் மக்களால் பெரிதும் விரும்பிக்கேட்கவும்பட்டன. பெரும்பாலான தெருச்சந்திகளில் ஒலிபெருக்கிகள் நிரந்தரமான பொருத்தப்பட்ட இவ்வாறான எழுச்சிப்பாடல்கள் தொடர்ச்சியாக இசைக்கப்பட்டன. எளிமையான இசைக்கோர்புடன், உணர்வூட்டக்கூடிய வசனங்களுடன் இவை அமைந்திருந்தன. இவற்றின் காரணமாக இவை இயல்பாகவே மனனம் ஆகியும் இருந்தன. அதேநேரம் எழுச்சிப்பாடல்களையும் திரைப்படப் பாடல்களையும் கலந்து ஒலிப்பதிவுசெய்வது தடைசெய்யப்பட்டிருந்ததாகவும் நினைவுள்ளது.
இப்போது நினைத்துப்பார்க்கின்றபோது நான் வாழ்ந்த எல்லா இடங்களிலும் எனக்கு அதிகம் நெருக்கமானவர்களாக அவ்விடங்களில் புத்தகக்கடை, சாப்பாட்டுக்கடை, ஓடியோ/வீடியோ கடை வைத்திருந்தவர்கள் அமைந்திருந்துள்ளார்கள் என்பதை உணரமுடிகின்றது, என் வாழ்வை அழகாக்கியதிலும் பங்குதாரர்கள் இவர்கள். எனக்குப் பிடித்த பாடல் அது உனக்குப்பிடிக்குமே என்று பாடியதும், அந்த பாடல்கள் நினைவுக்குக்கொண்டுவந்ததும், மறக்கத்தான் நினைத்ததும், மறக்கத் தான் நினைத்ததுவுமாய் ஆயிரம் நினைவுகள் அந்தப் பாடல்களுடன் சங்கமம். இவை தவிர எத்தனையோ எழுச்சிப்பாடல்கள், அவற்றை சிறுவயதில் கொப்பி ஒற்றைகளில் எழுதித்தந்த நண்பர்கள் இவற்றையெல்லாம் இன்றும் உயிரில் சுமந்துகொண்டிருக்கும் நான் எல்லாருமே எனக்குப் பிரியமானவர்கள். எனக்குப் பிடித்த பாடல்களைப்போலவே.
குறிப்பு
இக்கட்டுரை யாழ் உதயனின் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிதழான சூரியகாந்தியில் நவம்பர் 30, 2014, அன்று இடம்பெற்றது.
இக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97வரை, தன் பதின்மங்களிலும், பதின்மங்களை ஒட்டிய காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
-அருண்மொழிவர்மன்
நினைவோட்டம் மீண்டும் நாட்டை நோக்கி டிடியில் 60,90 என்று வகையும் கொம்ஸ்மோ பெயர்களும் மறக்க முடியாது.
LikeLike