வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

 

மரணம் மனிதர்களை மறக்கச்செய்துவிடுகின்றது, மகா மனிதர்களை மனதில் நிலைக்கச்செய்துவிடுகின்றது. பழகியவர்களைக் கூட மரணத்தின்பின்னர் மறந்துசெல்கின்ற இன்றைய காலத்தில், இலேசான அறிமுகம் மாத்திரம் உள்ள ஒருவரை மரணத்தின் பின்னர் அறிந்து, அவர் பற்றி மதிப்புற்று, இன்னும் இன்னும் தேடி அறிந்து அதிசயிப்பது என்பது அரிதாகவே நிகழ்கின்றது. அப்படி ஒருவர் பவன் என்று பலராலும் அறியப்பட்ட சத்தியபவன் சத்தியசீலன் அவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் சிலர் இணைந்து இலக்கிய நிகழ்வொன்றை ஒழுங்குசெய்திருந்தோம். எம் அனைவருக்கும் அது முதன்முயற்சி. அப்போது தமிழ்வண் தொலைக்காட்சியில் பணிபுரிந்துகொண்டிருந்த நண்பன் ஒருவன் எமது நிகழ்வை ஒளிப்பதிவுசெய்து தொலைக்காட்சியில் சிறு ஒளித்துண்டுகளாக ஒளிபரப்பலாம் என்று கூறி, ஊக்குவித்ததுடன் தமது தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து ஒருவர் வருவார் என்றும் கூறி இருந்தான். வந்தவர், புன்னகை பூத்த முகம் என்று சொல்வார்களே அவ்விதமே இருந்து அமைதியாக தனது வேலைக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். புரொஜெக்ரர் ஒன்றை இணைக்க முயன்று கொண்டிருந்தோம். அது பற்றிய அறிமுகம் எமக்கு இருக்கவில்லை. நாம் பதற்றமடைவதைக் கண்டு அவர் உணர்ந்திருக்கவேண்டும்; தானாகவே வந்து தள்ளுங்கோ என்று விட்டு இணைப்புகளை ஒழுங்காக்கினார். நன்றி சொன்னோமா என்று நினைவில் இல்லை. ஆனால் அதை அவர் எதிர்ப்பார்க்கவில்லை என்பது நினைவில் இருந்தது. அன்று புதியவர்கள் எம்மை ஆதரிக்கவேண்டும் என்ற நோக்குடன் வழமையான இலக்கிய நிகழ்வுகளிற்கு வருபவர்களைவிட அதிகமானோர் வந்திருந்தனர். வந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருக்குமே அவரைத் தெரிந்திருந்தது. அப்போது தான் இலக்கிய/சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஆரம்பித்திருந்த எனக்கும் அவரை கண்ட அளவிலான பரிச்சயம் இருந்தது. வந்தவர்கள் பெரும்பாலும் அவரைக் கண்டவுடன் சிரித்தனர். சிலர் பேசினர். அவரும் சிரித்தார். மென்மையாக தலையசைத்தார். பேசினாரா அல்லது உதடசைத்தாரா அல்லது அவர் பேசுவதே உதடசைவது போலா என்று தெரியவில்லை. ஏனோ நெருக்கமானவராக தோன்றினார். அவர்தான் பவான்.

அதன் பின்னர் அவரை தொடர்ச்சியாக எல்லா நிகழ்வுகளிலும் கண்டிருக்கின்றேன். கிட்டத்தட்ட அவர் இல்லாத நிகழ்வுகளே இல்லை எனும் அளவிற்கு அவரது பிரசன்னம் நிறைந்திருக்கும். “கனடாவில் நமது இனம் சார்ந்த, மொழி, சார்ந்த, கலை சார்ந்த, அரசியல் சார்ந்த, அனைத்து நிகழ்வுகளையும் ஏனைய சமூகங்கள் சார்ந்த பல முக்கிய நிகழ்வுகளையும் அவர் தோளில் சுமந்த கமரா அழகாக ஒளிப்பதிவு செய்து உலகெங்கும் பரப்பியது” என்று அவர் பற்றிய குறிப்பொன்றை அவரது மரணத்தின்பின்னர் காணக்கிடைத்தது. முழுக்க முழுக்க உண்மையான வரிகள் இவை.
2009ல் ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தை அடைந்திருந்தபோது ரொரன்றோவில் தொடர்ச்சியாக போராட்ட நிகழ்வுகளும், கவனயீர்ப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றுவந்தன. அவற்றில் எல்லாம் பெரிதும் அவரைக், கர்ணனின் கவச குண்டலம் போல கமராவுடன் கண்டிருக்கின்றேன். அக்காலப்பகுதியுல் தமிழ்வண் தொலைக்காட்சியில் செய்தித் தயாரிப்பாளராக பணியாற்றிய நண்பர் கிருஷ்ணா பவான் பற்றி கூறும்போது, “நான் வேலைக்கு காலையில் புறப்படும்போதே பவான் அண்ணாவிடம் இருந்து போன் வரும். கிருஷ்ணா இன்றைக்கு இந்த இந்த இடத்தில் ப்ரொரெஸ்ற் நடக்கிது. நீங்கள் நியூசை ரெடி பண்ணுங்கோ, நான் கிளிப்ஸோட வாறன்” என்று பவான் அண்ணா கூறுவார் என்று நினைவுகூர்ந்தான். அவருக்கு எல்லாத் துறையினருடனும் நல்ல தொடர்பும் உறவும் இருந்தது. உடுக்கை இழந்தவன் கைபோல உதவும் அவர் இயல்பு எல்லாருடனும் நல்லுறவைப்பேணா அவருக்கு உதவியிருக்கும். அவருடன் பணியாற்றிய சிலருடன் அவர் பற்றி அறிந்தபோது இதனை முழுதாக உணரமுடிந்தது.

அவரது ஆரம்பகால நண்பர்களில் ஒருவரான கருணா அவர்களிடம் பேசியபோது பவான் எனக்கு இன்னமும் நெருக்கமானவராகத் தோன்றினார். அனேகம்பேருக்கு வீடியோ படப்பிடிப்பாளராகவே தெரிந்திருந்த பவான், ஆரம்பகாலங்களில் DJ கலைஞராகவே பணியாற்றியிருக்கின்றார். அது மட்டுமல்ல நல்லதோர் புகைப்படக்கலைஞராகவும் இருந்திருக்கின்றார். விமானம் ஒன்றை பின்னணியில் வைத்து சிறுவர்களை பவான் எடுத்திருந்த ஒரு புகைப்படம் பற்றி விதந்து பேசிக்கொண்டிருந்தார் கருணா. வீடியோப் படப்பிடிப்பு என்பது அவருக்கு “உயிருக்கு நேராகவே” (Passion என்பார்களே அப்படி) இருந்திருக்கின்றது.

வீடியோ படப்பிடிப்பு என்பதே அவர் உயிராக இருந்தபோதும், அதில் அசாத்தியமான திறமைகொண்டவராக இருந்தபோதும், செய்யும் தொழிலே தெய்வம் என்பவராக இருந்தபோதும், நிறைய தொடர்புகளை (Contacts) உடையவராக இருந்தபோதும் அதனை தனக்கு பணம் கொழிக்கவைக்கும் தொழிலாக்க தெரியாதவராகவே இருந்தார் பவான். தனது நாளாந்த வாழ்வைக் கொண்டுநடாத்தத் தேவையான குறைந்தபட்ச நிதியைப் பெறுவதே அவருக்கு தேவையானதாக இருந்தது. மற்றும்படி, தன்னையும் தன் திறன் அனைத்தையும் வீடியோ படப்பிடிப்பிற்கும், தான் பணியாற்றிய இடத்துக்கும் நேர்ந்துவிட்டவராக இருந்தார் பவான். அந்த வகையில் அவர் மரணம் மிகக் கடுமையான செய்தி ஒன்றினை விட்டுச்சென்றிருக்கின்றது. கலை சார்ந்த துறைகளில் காதல் கொண்டிருக்கும் ஒருவர் அதனை வணிகமாக்காது ஆத்மார்த்தமாக அதில் ஈடுபடுவதற்கும், அப்படியான ஒருவர் சுரண்டல்களும், வணிக தந்திரங்களும் நிறைந்த புறச்சூழலிலும், வேலைத்தளங்களிலும் எதிர்கொள்ளும் சவால்களும், அது நிஜ வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய நெருக்கடிகளுக்கும் இடையில் போராடி தோற்றுப்போனாலும் ஒரு மகாமனிதராக தன்னைத் தக்கவைத்தவராகவே பவான் அவர்களின் மரணம் எனக்குத் தோன்றுகின்றது. பொருளீட்டலையே இலக்காகக்கொண்டு நகரத்தொடங்கியிருக்கும் புலம்பெயர் தமிழர் வாழ்விலும், அவர்களில் பலர் அதே புலம்பெயர் தமிழர்களின் ஒரு சாரராலேயே சுரண்டப்படுவதற்குமான சமகால உதாரணம் அவர். கனடாவில் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தவர் பவான். அரசியல் கூட்டங்கள், போராட்ட நிகழ்வுகள், பரப்புரைகள், வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள் என்று கமராவுடன் கூடிய பவானைக் காணாத நிகழ்வுகள் அபூர்வம். இனியும் இவை நடைபெறும். பவான் இருக்கமாட்டார். ஆனால் அவர் விட்டுச்சென்ற செய்திகளும் படிப்பினைகளும் இருக்கும்.

ஜனவரி 2015 தாய்வீடு இதழில் பிரசுரமானது.
தகவல்களுக்கு நன்றி : புகைப்படக் கலைஞர் கருணா மற்றும் நண்பன் கிருஷ்ணா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: