யாழ்ப்பாணத்து நினைவுகள் என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக நான் எழுதிவந்த சில கட்டுரைகளை, போர் சூழ்ந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் குறிப்பாக 90க்கும் 96க்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்த பதின்மவயதுகளைச் சேர்ந்த ஒருவனின் நினைவுகளின் பதிவுகளாகவே பதிவுசெய்தேன். வெறும் நனவிடைதோய்தலாக மாத்திரமல்லாமல், அன்றைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய வாழ்வியலின் ஒரு பகுதியை இப்பதிவுகள் பதிவுசெய்திருக்கும் என்பது என் நம்பிக்கை. இதேபோல, இன்னும் பலரும் தம் அனுபவங்களை ஆவணப்படுத்தும்போது அவை மிகப்பெரிய வரலாற்று ஆவணமாக மாறும். உதாரணமாக இக்கட்டுரைகளை எழுதியவர் வாழ்ந்த இடம், படித்த பாடசாலை, அவரது பால், சாதிப் பிரிவு, வயது, அவரது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை என்பன அவரது கட்டுரைகளில் நிச்சயம் தாக்கம் செலுத்தியே இருக்கும். எனவே பரவலான அனுபவப் பதிவுகள் எமது சமூகத்தின், அக்குறித்த காலப்பகுதியின் வாழ்வியல் பற்றி முழுமையான வரலாறு நோக்கிய பயணிக்க உதவும். நினைவுப்பதிவுகளாகவும், அனுபவப் பகிர்வுகளாகவும், நனவிடை தோய்தல்களாகவும் எழுதப்படும் எழுத்துக்கள் இலக்கியமாகுமா என்கின்ற விமர்சனங்களும், விவாதங்களும் நடப்பதை பலவிடங்களிலும் அவதானித்திருக்கின்றேன். ஆனால் நினைவுப்பதிவுகள் சமூக வரலாற்று ஆசிரியர்களுக்கான முக்கிய ஆவணங்களாகப் பயன்தரத்தக்கவை என்ற வகையில் மிகவும் முக்கியம் வாய்ந்தன என்றே கருதுகின்றேன்.
இத்தகைய எழுத்துக்களுக்கு நல்லதோர் உதாரணமாக ஈழத்துச் சூழலில் இருந்து வெளிவந்த இரண்டு நூல்களை சுட்டிக்காட்டுவது இன்னும் பொருத்தமாகவிருக்கும் என்று கருதுகின்றேன். எஸ் பொ எழுதிய நனவிடை தோய்தல் என்கிற நூலை அனைவரும் அறிந்திருப்பீர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்னைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறையை மிக மிக அழுத்தமாகவும் உணர்வுபூர்வமாகவும், அதே நேரம் வீண் அலங்காரங்களைத் தவிர்த்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு ஆவணப்பதிவாக இந்தப் புத்தகம் இருக்கின்றது. உதாரணத்துக்கு நண்பர்கள் பலரிடம் தனிப்பட்ட உரையாடல்களில் பகிர்ந்துகொண்ட, இந்நூலில் இருக்கின்ற ஒரு சிறிய பகிர்வை எஸ்பொவின் எழுத்துக்களிலேயே தருகின்றேன்
“பின்னர், ஐந்து சத நோட்டுக்களும் பாவனைக்கு வந்தன. இது புதினமான நோட்டு. ஒரே தாளில் இடப்பக்கம் இரண்டு சத முத்திரை போலவும் வலப்பக்கம் மூன்று சத முத்திரை போலவும் அச்சிடப்பட்டிருந்தன. தேவை கருதி அந்தத் தாளை இரண்டு முத்திரைகளாகக் கிழித்து, இரண்டு சதமாகவும் மூன்று சதமாகவும் பாவித்துக் கொள்ளலாம். மூன்று சய இரண்டு சமன் ஒன்று என்கிற வாய்ப்பாட்டில் ஒரு சதக் கணக்கும் சரி செய்யப்பட்டது ”
இந்தப் புத்தகத்தைப் படிக்கும்வரை இப்படியான ஐந்து சத நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன என்பதையே நான் அறிந்திருக்கவில்லை. பலரிடம் இதுபற்றிப் பகிர்ந்திருந்தபோதும் எவருமே இதுபற்றிய விபரங்கள் வேறேதாவது ஆவணங்களில் இருக்கின்றனவா என்று பகிர்ந்துகொள்ளவும் இல்லை. எனவே, வரலாற்று சமூகவியல், பண்பாட்டு வரலாற்றியல் என்பன பற்றிய அக்கறை உள்ளவனுக்கு இந்நூல் ஒரு முக்கிய ஆவணமாகின்றது.
அது போலவே வரதர் எழுதிய “மலரும் நினைவுகள்: 1930-40 களில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல்” என்கிற நூல் பற்றியும் குறிப்பிடவேண்டியிருக்கின்றது. இந்நூல் வரதரின் சிறுவயதில் நடந்த விடயங்களையும், தனது ஊர் பற்றியும், மக்களின் வாழ்வியல் பற்றியும் மல்லிகையில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகளில் பொன்னாலை ஊர் பற்றியும், அவ்வூர் 1930 களில் புன்னாலை என்றே வழங்குப்பட்டுவந்ததாகவும், பொன்னாலை வரதராஜர் கோவிலுக்கு ஏதோவொரு காலத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்களும், ஏழு வீதிகளும் இருந்ததாகவும், ஒல்லாந்தர் காலத்தில் இக்கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அக்கற்கள் சங்கானை வரை மக்களை சங்கிலித் தொடராக நிறுத்திவைத்து காவ வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார். அதுபோலவே,
“எனக்குத் தெரிய தேயிலையும் சீனியும் இலவசமாகக் கொடுத்து ஒரு பொது இடத்தில் தேநீர் தயாரித்து வீட்டுக்கு வீடு இலவசமாகத் தேநீர் கொடுத்துப் பழக்கினார்கள். தேயிலைப் பிரசாரச் சபையின் வேலையாய் இருந்திருக்கும். அதன் பயன் ? இன்றைக்குக் காலையில் எழுந்தவுடன் தேநீர் கொடுக்காவிட்டால் ஏதோ வாழ்க்கையே நாசமாகிவிட்டது போன்ற மனப்பான்மை வந்துவிடுகின்றது.”
வரதரின் மலரும் நினைவுகள் நூலில் இவ்வாறான பதிவுகள் முக்கியமானவையாக அமைந்துவிடுகின்றன.
ப. ஶ்ரீஸ்கந்தன் எழுதி சென்ற ஆண்டு வெளியான “மனசுலாவிய வானம்” என்கிற நூலும், “அரியாலை ஊர் நாடகக் கலைஞர்கள்” என்று நூலும் இவ்விதமான பதிவுகளுக்கு நல்ல உதாரணங்களாகும். குறிப்பாக அரியாலை ஊர் நாடகக் கலைஞர்கள் நூலில் அரியாலை ஊரைச் சேர்ந்த நாடகக் கலைஞர்கள் பற்றியும், நாடகங்கள் பற்றியும் ஆவணப்படுத்தியிருப்பதுடன், நாடகங்களில் மேடைக்குப் பின்னாலான பங்களிப்பைச் செய்தவர்கள் பற்றியும் ஆவணப்படுத்தியிருப்பார் ஶ்ரீஸ்கந்தன்.
பதிவுசெய்தல், ஆவணப்படுத்தல், பகிர்தல் என்கிற பிரக்ஞையோடு 70கள் முதல் இன்றுவரை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இன்னொருவர் மதிப்புக்குரிய அ. யேசுராசா. அவர் எழுதிய பதிவுகள், தூவனம், குறிப்பேட்டிலிருந்து போன்ற நூல்களைப் படிக்கும் ஒருவர் இலகுவாக 70 கள் முதல் இலங்கையில், குறிப்பாக யாழ் மாவட்டத்தில் கலை, இலக்கியத்துறைகளில் இடம்பெற்ற பண்பாட்டு அசைவியக்கங்களை அறிந்துகொள்ளமுடியும். 70கள் முதலாக அச்சு ஊடகங்களூடாக இந்தப் பதிவுகளைச் செய்துவந்த அதே யேசுராசாதான் இன்றும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளை பகிர்ந்துவருகின்றார் என்பது அவர் மீதான வியப்பை இன்னும் அதிகரிக்கின்றது.
எனது அவதானிப்பில் 90 – 95ல் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு உள்ளிட்ட விடயங்களில் இவ்வாறு பதியப்படாத எத்தனையோ விடயங்கள் எஞ்சி இருக்கின்றன. தெருவோரமெல்லாம் பதுங்குகுழி வெட்டப்பட்டிருந்த யாழ்ப்பாணத்து வீதிகள் இப்போதும் என் நினைவில் இருக்கவேசெய்கின்றன. பாடசாலைகளில் விழுந்த குண்டுகளும், அகதி முகாம்களில் விழுந்த குண்டுகளும், மருத்துவமனைகளில் விழுந்த குண்டுகளும் கூட காட்சிகளாகவும், செய்திகளாகவும் இப்போதும் நினைவில் இருக்கின்றன. நவாலி தேவாலயம் மீது குண்டுவீசப்படுதுவதற்கு சில மணித்தியாலங்களின் முன்னர் நான் அதே நவாலி தேவாலயத்தில் தான் இருந்தேன். எனது நினைவு தெரிந்து என் எட்டாவது வயதில் சுதுமலையில் நடந்த குண்டு வீச்சொன்றில் பாலமுருகன் என்ற என் வகுப்பு மாணவன் ஒருவன் கொல்லப்பட்டான். அதன் பின் எத்தனையோ மரணங்கள். போர் செய்த கொலைகள்! இவை எல்லாமும் கூட பதிவுசெய்யவேண்டியவைதான்.
கூப்பன் கடை என்றும் சங்கக் கடைகள் என்றும் சொல்லப்படுகின்ற பல நோக்குக் கூட்டுறவு சங்கங்களில் பொருளாதார தடைகளின்போதும், உணவுத் தட்டுப்பாட்டின்போதும் விடிய முதல் போய் வரிசையில் பொருட்கள் வாங்கியதை மறக்கமுடியாது. குறிப்பாக அவ்வாறு வாங்கப்பட்ட “அம்மா பச்சை” என்கிற வகை அரிசியை. அப்போதெல்லாம் மண்ணெய்க்குத் தட்டுப்பாடு. இந்தத் தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ளவே குப்பி விளக்கு என்கிற விளக்குவகைகள் செய்யப்பட்டன. சில கடைகளில் இவை விற்பனைக்கும் இருந்தன. அதுபோல பெற்றோல் இல்லாத காலங்களில் மண்ணெய் மூலம் ஓடக்கூடியவாறு வாகனங்களின் இயந்திரங்களில் சிறுமாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி சில துளிகள் பெற்றோல்களால் “என்ஜின்” உயிர்ப்பிக்கப்பட்டு அதன்பின்னர் வாகனம் தொடர்ந்து மண்ணெய்யில் இயங்கும். அப்போது நாச்சிமார் கோயிலடியில் இருந்த “கார்பரேற்றர் ஆனந்தன்” என்பவர் இந்த வித்தையில் அப்போது புகழ்ப்பெற்றவராக இருந்தார். இந்த தொழினுட்பம் பற்றி யாராவது விளக்கமான ஒரு கட்டுரையை எழுதவேண்டும் என்பது என் அவா.
1994ம் ஆண்டில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆயினும், பரவலாக “கள்ளமாக” திரைப்படங்களைப் பார்ப்பது வழமையாகவிருந்தது. மின்சாரம் இல்லாது போல 90கள் முதலே திரைப்படம் பார்ப்பதென்றால் அது முழுநாள் நிகழ்வு. காலை 5 திரைப்படங்கள் வரை தொடர்ச்சியாக திரையிட்டுப் பார்ப்பார்கள். இடையில் தென்னிந்தியத் திரைப்படங்கள் தணிக்கை வேறு செய்யப்பட்டன. இந்து, ஐ லவ் இந்தியா போன்ற திரைப்படங்கள் தணிக்கையில் கிட்டத்தட்ட அரைவாசியாகக் குறைந்திருந்தன. பாட்ஷா திரைப்படம் தென்னிந்தியத் திரைப்படங்கள் தடைசெய்யப்பட்ட பின்னரே “கள்ளத்தனமான” யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தது. இவ்வாறு வந்த பிரதியில் ஏதோ குளறுபடி நிகழ்ந்த பட ரீல்கள் வேறு ஒழுங்கில் பதிவுசெய்யப்பட்டிருந்தன. படத்தைப் பார்த்த எமக்கு தலையும் விளங்கேல்ல, காலும் விளங்கேல்ல. இது ஏதோ பூர்வ ஜென்மக் கதைபோல என்று நினைத்திருந்தோம். இவை எல்லாம் பதிவுசெய்யப்படவேண்டி நினைவுகள். எமது நினைவுகளில் தேங்கியிருக்கும் இதுபோன்ற நினைவுகளை நாம் பதிவாக்கும்போது அது நமக்கான ஒரு வரலாற்று ஆவணமாகும். நமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம்.
குறிப்பு
இக்கட்டுரை யாழ் உதயனின் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிதழான சூரியகாந்தியில் டிசம்பர் 14, 2014, அன்று இடம்பெற்றது. இக்கட்டுரைத்தொடரின் நிறைவுக் கட்டுரையாகவும் இதுவே அமைந்தது.
இக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97வரை, தன் பதின்மங்களிலும், பதின்மங்களை ஒட்டிய காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுதத் திட்டமிட்டுள்ளேன். இதேமுயற்சியில் தொடர்ச்சியாக எழுதப்படும் தனியன்களின் பதிவுகள் தொகுக்கப்படும்போது ஒரு சமூகத்தின் வரலாற்று ஆவணமாக அமையும். அவ்விதம் அமையவேண்டும் என்பதே என் அவா.
நமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம் என்பது முன்னர் நான் நவாலி தேவாலயப் படுகொலைகள் பற்றி எழுதிய ஒரு பதிவிற்கு (https://arunmozhivarman.com/2011/11/19/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/)
நண்பன் தீபன் சிவபாலன் இட்ட ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்ட தகவலின் தாக்கத்தால் வந்த தலையங்கமாக உணர்கின்றேன். நன்றி தீபனுக்கு.
தீபன் பகிர்ந்த பின்னூட்டமாவது, //நமக்கான கதையை நாமே எழுதுவோம்……!நவாலிப் படுகொலைகளின் முதலாண்டு “எத்தனை எத்தனை வித்துகள் விழுந்தன” என்ற தலைப்பில் நினைவு கூரப்பட்டபோது எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் குறிப்பிட்டதை நீங்கள் பதிவு செய்திருப்பதாகவே படுகிறது.//
இத்தொடரை எழுத ஊக்கமளித்ததுடன் நான் கடைசி நேரங்களில் அனுப்பும் ஆக்கங்களை பொறுமையுடன் பிரசுரித்த நண்பன் ஜெரா தம்பிக்கும், பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும்போதே தொடர்ச்சியாக ஆலோசனைகளையும், தகவல்களையும் தந்துதவிய நண்பன் விசாகனுக்கும் நன்றி.
-அருண்மொழிவர்மன்
Arumai.
LikeLike