மனுநீதிச் சோழன் யார்? அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா?

Good Governance: Who Is Responsible? என்கிற Upali Cooray எழுதிய கட்டுரை ஒன்று கொழும்பு ரெலிலிகிராப் இணைய இதழில் மார்ச் 11, 2015 அன்று வெளியாகியிருந்தது.  அதில் கிமு 205 முதல் கிமு 161 வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட எலார (எல்லாளன் என்று தமிழில் நாம் அழைக்கும் மன்னன் மகாவம்சத்தில் எலார என்றே குறிப்பிடப்படுகின்றான்) என்ற சோழ மன்னன் தன் அரண்மனையில் அவனிடம் நீதி வேண்டிவருவோர் ஒலிக்கவிடவேண்டிய மணி ஒன்றினை பேணியதாகவும், மன்னனின் மகன் சென்ற தேரால் ஏற்றப்பட்டு கன்று ஒன்று கொல்லப்பட்டதாயும், நீதிவேண்டி தாய்ப்பசு மணியை ஒலிக்க, நிகழ்ந்ததை அறிந்த மன்னன் தன் மகனையும் அவ்விதமே தேரால் ஏற்றிக் கொல்லுமாறு தீர்ப்பளித்ததாயும் குறிப்பிடப்படுகின்றது.

இக்கதையை நாம் மனுநீதிகண்ட சோழனிற்கு நிகழ்ந்ததாக திருத்தொண்டர் புராணம் / பெரிய புராணதில் படித்திருக்கின்றோம்.  அதில் திருநகரச் சிறப்பு என்கிற பகுதியில் வருகின்ற 103 – 135 வரையான பாடல்களின் இச்சம்பவம் குறிப்பிடப்படுகின்றது.  கொழும்பு ரெலிகிராப் செய்தியை படித்தவுடன் அது மகாவம்சத்தில் இச்சம்பவம் குறிப்பிடப்படுகின்றதா என்கிற சந்தேகம் உருவாகி மகாவம்சத்தைப் புரட்டினேன்.  மகாவம்சத்தில் இருபத்தியோராம் அத்தியாயத்தில் (ஐந்து அரசர்கள்) இச்சம்பவம் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது,

“சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இங்கு வந்த, உயர் குடியில் பிறந்த, தமிழன் ஏலாரா, அசேலனைத் தோற்கடித்து நாட்டைப் பிடித்து நாற்பத்துநாகு வருடம் ஆண்டான்.

(அவன்) எதிரிகள், நண்பர்கள் என்றா பேதாபேதம் இன்றி, நீதியின்முன் எல்லோரையும் சமமாக நடத்தி வந்தான்,

அவன் சயன அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்௶அ கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது,  அவனிடம் நீதி கோரிவருபவர்கள் அந்த மணியை அடிக்கலாம்.

அரசனுக்கு ஒரு மகனும், இரு மகளும் மட்டுமே இருந்தனர்.  ஒரு சமயம் ராஜகுமாரன் ரதத்தில் தீசவாபிக்குச் சென்று கொண்டிருந்தான்.

அப்போது தாய்ப்பசுவுடன் வீதியில் படுத்திருந்த கன்றின் கழுத்தில் தேர்ச்சக்கரத்தை ஏற்றி அறியாமல் அதனைக் கொன்றுவிட்டான்.

துக்கம் தாளாது பசு அரண்மனைக்கு வந்து மணியை அடித்தது.  தன் மகனுடைய கழுத்தின் மீது தேரை ஓட்டி, அரசன் தலையை துண்டிக்கச்செய்தான். (பிரிவு 13 – 18)”

தொடர்ந்து மேலதிக வாசிப்புக்காகவென்று படித்த அ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாண சரித்திரத்திலும் இச்சம்பவம் எல்லாளனுடன் (அ. முத்துத்தம்பி எல்லாளனை ஏலேலன் என்றே குறிப்பிடுகின்றார்) தொடர்புபடுத்திக் குறிப்புடப்படுகின்றது.  அ. முத்துத்தம்பிப்பிள்ளை இச்சம்பவத்தினை “ஏலேலனைச் சிங்கள சரித்திரக்காரர் நீதியிலே மநுச்சக்கரவர்த்தி எனப் பாராட்டுவர்” என்கிற அறிமுகத்துடன் இச்சம்பவத்தைக் குறிப்பிடுவதால் அவருக்கான மூலமாக மகாவம்சம் அமைந்திருக்கவும் வாய்ப்புண்டு.

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எழுதப்பட்டது என்பதால் அது எழுதப்பட்ட காலம் அவனது ஆட்சிக்காலமான கிபி 1133 – கிபி 1150 க்கு உட்பட்டதாகவே இருக்கவேண்டும்.  ஆனால் மகாவம்சம் எழுதப்பட்ட காலம் கிபி 6ம் நூற்றாண்டு.  தவிர, மனுநீதிச் சோழன் கதை நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.  சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி வேண்டிப் பாடுகின்ற

“தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்புயர்ப் புகார்என் படியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்ன நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி”

என்ற பாடலில் இச்சம்பவம் குறிப்பிடப்படுகின்றதாயினும், அதில் மனுநீதிச் சோழன் என்கிற பெயரோ அல்லது இச்சம்பவத்தினுடன் தொடர்புடையதான சோழ மன்னனின் பெயரோ இடம்பெறுவதில்லை.  எனவே பக்தி இலக்கிய காலத்தில் எழுதப்பட்ட பெரியபுராணத்தில் பார்ப்பனச் செல்வாக்கின்காரணமாக மனு தர்மத்தை மக்களிடம் பரப்பும் நோக்குடன் இந்த “மனுநீதிச் சோழன் கதை” உருவாக்கப்பட்டிருக்கலாம்.

தவிர பல்லவர் காலத்தில் உருவான அரசனை இறைவனுக்கு இணையானவனாகக் கருதுகின்ற மரபு, சோழர் காலத்திலே இன்னமும் தீவிரமானது.  எனவே அரசன் என்பவன் வழுவிலா ஆட்சி உடையவனாக இருக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக, அவ்விதம் ஒருவன் வாழ்ந்தான் என்று கூறுவதான மனுநீதிச் சோழன் கதை திருத்தொண்டர் புராணத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவும் கூடும்.  தவிர, இக்கதையுடன் தொடர்புள்ளதான திருவாரூர் கோயிலில் உள்ள கல்வெட்டும் விக்கிரமசோழன் காலத்திலேயே அமைக்கப்பட்டது என்பதால் அக்கல்வெட்டும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருக்கவேண்டும்.

ஆயினும் 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் இந்தக் கதை எவ்விதம் இடம்பெற்றது என்பது நிச்சயம் ஆராய்ச்சிக்குரியதே.  மகாவம்சத்தில் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற இடைச்செருகல்கள் பற்றிச் சொல்லப்படுவது உண்டு.  ஆனால் அவ்வாறான இடைச்செருகல்கள் பௌத்தத்தின் செல்வாக்கை உறுதி செய்யும் நோக்குடையனவாகவோ அல்லது சிங்கள மன்னர்களின் செல்வாக்கை உறுதிசெய்யும் விதமானதாகவோ அமைந்திருக்கவே அதிகம் வாய்ப்புண்டு.  அவ்வாறு இல்லாது தமிழ் மன்னன் ஒருவனின் புகழ் பாடுவதான இடைச்செருகலுக்கான சந்தர்ப்பம் தர்க்கரீதியாக வலுவற்றது.  எனவே, தற்போதைய தரவுகளின்படி, பசுவொன்றின் முறைப்பாட்டைக் கேட்டு, அதற்கு நியாயம் வழங்க தன் மகனை தேர்ச்சில்லில் இட்டுக் கொன்ற மன்னன் பற்றிய ஆகப்பழைய பதிவு மகாவம்சத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது.  அந்த மன்னன் எல்லாளன் என்றே குறிப்பிடப்படுகின்றது.  ஆயினும், இச்சம்பவம் பற்றிய வேறு வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.  ஆயினும், மனுநீதிச் சோழன் என்று சொல்லப்படுபவன் எல்லாளன் ஆகக் கூட இருக்கலாமே என்ற எண்ணமும் தோன்றுகின்றது!


குறிப்பு 1:

இக்கட்டுரை மனுநீதிச் சோழன் கதை என்று குறிப்பிடப்படுகின்ற கதை எந்த மன்னனுடன் தொடர்புடையது என்றும், அது பற்றிய ஏனைய தரவுகளை அறியவேண்டும் என்ற ஆவலின் நிமித்தமே எழுதப்பட்டது.  உபயோகமான தரவுகளைப் பகிரவேண்டுகின்றேன்.

குறிப்பு 2:

இக்கட்டுரை ஏப்ரல் மாத தாய்வீடு பத்திரிகையில் வெளியானது.  கட்டுரையைப் படித்த நண்பர் எஸ் கே. விக்னேஸ்வரன் பேசும்போது இதே கதை Flying Fish என்கிற சஞ்சீவ புஷ்பகுமார இயக்கிய திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாயும் குறிப்பிட்டார்.  அத்திரைப்படத்தினைப் பார்த்தேன்.  அதில், பாடசாலை ஒன்றில் பிரசாரம் செய்ய வருகின்ற தமிழ்ப் போராளிகளில் (விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்) ஒருவர், எல்லாளன் எவ்வாறு நீதி வழுவாது ஆட்சி புரிந்தான் என்று கூறுவதுடன் இக்கதையையும் கூறுவதாக அமைகின்றது.  அண்மைக்காலத்தில் நான் பார்த்த நல்ல திரைப்படங்களில் ஒன்றாக இத்திரைப்படத்தினைச் சொல்லமுடியும்.  போர், அது மக்கள் மீது ஏற்படுத்துகின்ற வன்முறை, உறவுச் சிக்கல்கள், அடக்குமுறை என்பவற்றை காட்சிப்படுத்துகின்றது இத்திரைப்படம்.

குறிப்பு 3:

தாய்வீடு பத்திரிகைக்காக எழுதப்பட்ட இக்கட்டுரை சற்று விரிவுபடுத்தப்பட்டு இங்கே பிரசுரமாகின்றது.

குறிப்பு 4:

தரவுகளுக்காக இணையத்தில் தேடியபோது விக்கிபீயாவின் ஆங்கில பக்கத்தில் எல்லாளனின் மறுபெயர்களுல் ஒன்றாக மனுநீதிச் சோழன் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது (https://en.wikipedia.org/wiki/Ellalan_(monarch))


உசாத்துணை

  1. http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041223.htm
  2. Noolaham.net மகாவம்சம்
  3. http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0209.html#dt103
  4. https://www.colombotelegraph.com/index.php/good-governance-who-is-responsible/
  5. யாழ்ப்பாணச் சரித்திரம் – அ. முத்துத்தம்பிப்பிள்ளை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: