பூர்ணம்பூர்ணம் விஸ்வநாதன் என்றவுடன் எமக்கு அவர் திரையில் ஏற்று நடித்த சில பாத்திரங்களே நினைவு வரும்.  குறிப்பாக மகாநதி, வருஷம் 16, ஆசை திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்.  தனது நாடகங்கள் பலவற்றுக்கு உயிர் கொடுத்தவர் பூர்ணம் விஸ்வநாதன் என்று சுஜாதா எழுதியிருக்கின்றார்.  தொடக்கத்தில் தான் எழுதி அவர் நடித்த நாடகங்கள் நிறைவானதாக தனக்குத் தோன்றியதால் பிற்பாடு சில நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதனை மனதில் வைத்துக்கொண்டே தான் எழுதியதாகவும் சுஜாதா கற்றதும் பெற்றதுவும் இல் குறிப்பிட்டிருந்தார்.  அவரது குரலும் வசன உச்சரிப்பும் தனித்துவமானது.  ஆனால் அனேகமான அவர் திரைப்படங்களில் அந்த வசன உச்சரிப்பு ஒரே மாதிரியானதாகவே தோன்றும்.  அவர் திரையில் ஏற்று நடித்த கதாபாத்திரங்களும் அவ்வாறானவையே.

தவிர, அவர் திரைத்துறைக்கு வரும் முன்னர் செய்தி வாசிப்பாளராக All India Radioவில் பணியாற்றியவர்.  செய்திகள் வாசிப்பவர் என்று கூறி செய்தி வாசிப்பவர் பெயரை அறிவிக்கும் பாணியை தமிழில் தொடக்கியவர் அவரே என்று முன்னர் எங்கோ படித்த ஞாபகம்.  தவிர, இந்தியா சுதந்திரமடைந்த செய்தியை All India Radio ஊடாக முதன் முதல் அறிவித்தவர் என்ற சிறப்பும் இவருக்கே வாய்த்தது.  இவையெல்லாம் இவர் பற்றி அனேகம் பேர் அறிந்தவை.

ஆனால் பூர்ணம் விஸ்வநாதன் சில சிறுகதைகளும் எழுதியுள்ளார் என தெரிகின்றது.  கணையாழி களஞ்சியத்தை மறுபடி புரட்டிக்கொண்டிருந்தபோது சிறுகதைகள் பிரிவில் முதலாவதாக பூர்ணம் விஸ்வநாதன் எழுதிய “கதை கதையாம்” என்ற கதையைக் கண்டேன்.  முன் எப்போதோ வாசித்த தொகுப்பு.  ஆனால் இந்தக் கதையை தவறவிட்டிருக்கின்றேன்.  திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் மனதில் தோன்ற, அட! பெரிசு என்று கடந்துபோயிருக்கலாம்.  கடந்துபோயிருக்கக் கூடிய வயதில்தான் புத்தகத்தை வாசித்தேன்.  இந்தக் கதை எப்போது எழுதப்பட்டது என்று தெரியவில்லை.  ஆனால் கதை எழுதப்பட்ட காலத்தைவிட இன்று நடைபெறுவதையே அதிகம் பிரதிபலிக்கின்றது.

இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான விளம்பரங்கள், பரபரப்புகள், ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றறைத் தொடர்ந்து பேனா மன்னன் முந்திரிக்கொட்டை என்பவரின் “கதை வசனம் பாடல்கள்” உடன் உருவான திரைப்படம் ஒன்று வெளியாக இன்னமும் இரண்டு நாட்களே இருக்கின்றன.  பட முதலாளியின் முன்னைய திரைப்படங்கள் அடைந்த தோல்விக்கும் சேர்த்து இத்திரைப்படம் பிரமாண்ட வெற்றியடையவேண்டும் என்று முதலாளி திட்டமிட்டு தொடர் விளம்பரங்கள் செய்கின்றார்.  “முற்றிலும் புதுமாதிரிக்கதை”, “இத்தகைய கதை இதுவரை எழுதப்பட்டதேயில்லை”, “பேனா மன்னன் முந்திரிக்கொட்டையின் அதியற்புதக் கற்பனை” என்று விளம்பரங்களின் அமளி துமளி.  “நான் எழுதிய மிகச் சிறந்த கதை, மிகச் சிறந்த வசனங்கள், மிகச் சிறந்த பாடல்கள் எல்லாம் இத்திரைப்படத்தில் தான் இருக்கின்றன; இந்தக் கதைக்கான ஐடியா எப்படிப் பல ஆண்டுகளின் முன்னரே தனக்குத் தோன்றியது, இத்தனை ஆண்டுகளும் எப்படியெல்லாம் சிந்தித்து கதைக்கு முழுவடிவம் கொடுத்தேன்” என்றெல்லாம் பேட்டிகள் வழங்குகின்றார் முந்திரிக்கொட்டை.

இந்த நேரத்தில் பேனாச் சக்கரவர்த்தி தீத்தலாண்டி என்பவர், மேற்படி கதை தன்னுடையது என்றும் அதனை முந்திரிக்கொட்டை திருடிவிட்டார் என்றும், தான் நீதிமன்றிற்குச் சென்று இதுபற்றி முறையீடு செய்ய உள்ளதாகவும் திரைப்படத்தின் மனேஜர் சுந்தரத்திடம் தெரிவிக்கின்றார்.  மதுரையில் இருக்கும் தீத்தலாண்டியும், சென்னையில் இருக்கும் முந்திரிக்கொட்டையும் மனேஜர்கள் முன்னிலையில் தொலைபேசியூடாக பேசுகின்றனர்,  இறுதியில் தீத்தலாண்டி வைத்திருக்கும் கதையை தான் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிக்கொள்வதாக பட முதலாளி கூற, தீத்தலாண்டியும் பத்தாயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு தான் இனிக் கதைக்கு உரிமை கோரமாட்டேன் என்று பத்திரத்தில் கையொப்பமிடுகின்றார்.  கதையின் பிரதியைப் பெற்ற மனேஜர் சுந்தரம் அதை உடனே எதிரில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டு தீ மூட்டிவிடுகின்றார்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட தீத்தலாண்டி தன் உதவியாளன் கட்டியத்திடம் சிரித்துக்கொண்டே கூறுகின்றார்,

“சினிமாவில எந்தைக் கதையும் “ஒரிஜினல்” இல்லைங்கிறது ஒரு விஷயம்.  எந்த சினிமாக் கதாசிரியனையும் சரியானபடி வளைச்சுப் பிடிச்சு விசாரிச்சா, “பே பே” ன்னு உண்மையக் கக்கிருவான்.  அவன் “ஒரிஜினலாகவே” எழுதியிருந்தாக் கூட, “வேற எவனாவது  நமக்கு முன்னமேயே இது மாதிரிக் கதையை எளுதித் தொலைச்சிருப்பானோ”ன்னு புளுங்கிக்கிட்டே இருப்பான்.  இன்னொண்ணு., இந்தக் காலத்துப் பரபரப்பில எவனுக்கும் எதையும் படிக்க டைம் கிடையாது.  இந்தப் படக் கம்பனிக்காரர்களுக்கு என் கதையைப் படிக்க டைம் இருந்து, என் கதையைப் படிச்சுப் பாத்திருந்தாங்கன்னா என் ப்ளான் என்ன பாடு பட்டிருக்குமோ!  ஆனா நானும், அவங்களுக்கு டைம் இருக்கக் கூடாதுன்னுதானே, இப்படி ரெண்டு நாளுக்கு முந்தி…”

மீஞ்சூர் கோபி போன்ற திறமைசாலிகள் சில “பெரும் இயக்குனர்களால்” குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் ஏமாற்றப்படுவதை நாம் அண்மைக்காலத்தில் அவதானித்துள்ளோம்.  அதேநேரம், நாம் அதிகம் காண்பது தீத்தாலாண்டிகளைத்தானே!


 

குறிப்பு 1 :  ஒரு நடிகராக பூர்ணம் விஸ்வநாதன் இங்கே குறிப்பிட்ட திரைப்படங்களை விட வேறு நல்ல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்திருக்கின்றார்.  ஆயினும் இந்தப் பதிவில் பூர்ணம் விஸ்வநாதன் என்ற சிறுகதையாசிரியர் பற்றியே முதன்மையாகக் குறிப்பிடுகின்றேன்

குறிப்பு  2: இக்கட்டுரை ஏப்ரல் தாய்வீடு  இதழுக்காக எழுதப்பட்டது.