ஒப்பீட்டளவில் குறைவாகவே படைப்பிலக்கியங்கள் வெளியாகும் கல்முனையில் இருந்து எஸ். அரசரெத்தினம் எழுதிய சாம்பல் பறவைகள் என்ற குறுநாவலை வாசிக்கமுடிந்தது. இக்குறுநாவல் 2009ல் ஈழப்போரில் தொடர்ச்சியாக அகப்பட்டு, கடுமையான இழப்புகளைச் சந்தித்த ஒரு குடும்பத்தைப் பற்றியும், அதன் கதாபாத்திரங்கள் ஊடாக எம்முடனான உரையாடல்களையும், விமர்சனங்களையும் மேற்கொள்ளுவதால் முக்கியமான ஒன்றாக அமைகின்றது.
வன்னியைச் சேர்ந்த பவானிக்கும் வவுனியாவைச் சேர்ந்த ஆனந்தனுக்கும் அவர்கள் வவுனியாவில் ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றபோது காதல் உருவாகின்றது. பெரும் செல்வந்தரான ஆனந்தனின் தந்தை தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு, அவ்விதம் இத்திருமணம் நடந்தால் தன் சொத்தில் பங்கு கிடைக்காது என்றும் ஆனந்தனை மிரட்டுகின்றார். பாடசாலையில் கண்டிப்பான ஆசிரியன் என்று பெயர் பெற்ற ஆனந்தன் தந்தையின் பேச்சை மீற முடியாதவன் “வயசான காலத்தில தந்தை தாய் பேச்சை மதிக்கவேண்டும், அவர்கள் மனசு மாறும் அதுவரை பொறுத்திருப்பம்” என்று பவானியிடம் கூறுகின்றான். இந்தப் பிரிவினால், மாற்றம் வேண்டி பவானி தன் சொந்த ஊரான உருத்திரபுரத்துக்கே சென்று விடுகின்றாள். அங்கே குடும்பத்துடனும், புதிய பள்ளிக்கூடத்துடனும் அவள் மெல்ல மெல்ல நெருங்கிப் பழகும் வேளை ஈழப்போரின் இறுதிகட்டமானது ஆரம்பிக்கின்றது. தொடர்ச்சியான இழப்புகளோடு பவானி தன் குடும்பத்தினருடன் உருத்திரபுரம்à புளியம் பொக்கனை à இருட்டுமடு à புது மாத்தளன் à பழைய மாத்தளன் à வலைஞர் மடம் என்று சாளை வரை துரத்தப்படுகின்றார். இந்தப் பயணத்தினூடாக போரின் நிகழ்வுகளையும் மக்கள் அனுபவித்த துயரங்களையும் பதிவு செய்கின்றார் அரசரத்தினம்.
ஈழப்போரின் இறுதிக்கட்டங்களில் ஊடகங்கள் செய்த அறம் பிறழ்ந்த செயல்களையும், குளறுபடிளையும் எவரும் அத்தனை சுலபமாக மறந்திருக்கமாட்டார்கள். அரசு தரப்பு ஊடகங்களும் அரசியல் கட்சிகள் சார்ந்த ஊடகங்களும் தாம் சார்ந்திருப்பவர்களின் பிரசாரங்களை மேற்கொண்டனவென்றால், ஈழத்தமிழர்கள் அனேகம் பின் தொடர்ந்த ஊடகங்களும் கூட எப்படியான செய்திகள் தமக்கு விருப்பமானவையோ அதனையே கள நிலைமைகளாக தொடர்ந்து. இந்த குறுநாவலில் வெவ்வேறு இடங்களில் இலங்கை வானொலி,
“பாதுகாப்புப் படையினர் கிளிநொச்சிப் பகுதியில் தொடர்ந்து முன்னேற்றம். பொதுமக்கள் குடியிருப்புகள் மீது எல்.ரீ.ரீ பயங்கரவாதிகள் எறிகணை வீச்சு. நூற்றுக் கணக்கானோர் பலி. பெருந்தொகையானோர் காயம்” (பக்கம் 36) என்றும்
BBC தமிழோசை,
“இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச படைகளுக்கும் புலிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் சண்டையில் அப்பாவிப் பொதுமக்கள் பலர் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்படும் இக்குண்டு வீச்சுகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென அரசிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு இக்குண்டுவீச்சுகளை மறுத்துள்ளது” (பக்கம் 47) என்றும்
அரச துண்டுப்பிரசுரம் ஒன்று
“தமிழ் மக்களுக்கு அரசாங்கம் விடுக்கும் அன்பான வேண்டுகோள். பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு உடனடியாகப் பாதுகாப்புப் படையினரிடம் சரணடையுங்கள். உங்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்படும். அதற்கான யுத்த சூனியப் பிரதேசமும் அரசாங்கத்தால் பிரகனடனப்படுத்தப்பட்டுள்ளது. அவையாவன…”(பக்கம் 50) என்றும்
சன் செய்திகள்,
“இலங்கையில் சண்டையை நிறுத்தக்கோரி உடனடியாக தமிழ்நாட்டு அனைத்துக்கட்சி சட்டசபை உறுப்பினர்களும் முதலமைச்சரிடம் தங்கள் பதவி விலகல் கடிதங்களைக் கையளிக்க முடிவு. மத்திய அரசை சந்தித்துப் பேச மாநில அரசின் அமைச்சர் உடனடியாக டில்லி பயணம்” பக்கம் 56) என்றும்,
ஆகாசவாணி செய்திகள்,
“தமிழக முதலமைச்சரின் விசேட செய்தியுடன் தமிழ்நாட்டு அமைச்சர் இன்று பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார். இதன் பயனாக தமிழ் நாட்டிலிருந்து மூன்றுபேர் மத்திய அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளனர். முதலமைச்சரின் செய்தியில் பிரதமருக்கும் புதிய அமைச்சரவைக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது” (பக்கம் 61) என்றும்
சன் செய்திகள்,
இந்திய அரசின் பிரதிநிதிகள் இலங்கை சென்றுள்ளனர். இதில் மத்திய அமைச்சர்களுடன் தமிழக அமைச்சர்களும் அடங்குகின்றனர். இவர்கள் அந்நாட்டு அரச அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக யுத்த நிறுத்தத்திற்கும் அகதிகள் புனர்வாழ்விற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். அகதிகளை 180 நாட்களுக்குள் சொந்த இடங்களில் குடியமர்த்தவும், முகாமில் உள்ளவர்கள் வெளியில் சென்று உறவினர்களைச் சந்திக்கவும் வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் வழங்கியுள்ளார் (பக்கம் 76) என்றும்
கூறியதாகப் பதிவாக்கப்பட்டுள்ளது. இதே செய்திகள் அச்சொட்டாக ஒலிபரப்பாகப்படாது இருக்கலாம். ஆயினும் இதை ஒத்த அல்லது இதை விட மோசமாகத்தான் அன்று ஊடகங்கள் நடந்துகொண்டன. குறிப்பாக சன் செய்திகள், ஆகாசவாணி செய்திகள் அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக வினர் ஈழப்போரின் இறுதிக்கட்டங்களில் நடந்தவிதம் பற்றிப் பிரதிபலிக்கின்றன.
பவானியின் தந்தை முருகேசர் உருத்திரபுரத்தில் தன் வீட்டில் இருந்து வெளியேறும்போது கருணாநிதியின் “பாயும்புலி பண்டாரவன்னியன்” புத்தகத்தில் இருந்து பிரதிபண்ணப்பட்ட கவிதையொன்றை தனது சட்டைப்பையில் எடுத்துச் செல்லுகின்றார். பல்வேறு இடங்களில் இப்பிரதியை முருகேசரும், அவர் மகன் குமாரும் வாசிக்கின்றனர். கவிதைகளின் சிலவரிகளை அப்போது இடம்பெற்ற கட்டாய ஆட்சேர்ப்பு, மற்றும் புலிகள் பற்றிய விமர்சனங்களாகவும் கருதப்படவும் இடமுண்டு. அதேநேரம் ஈழத்தமிழர்கள் அனேகம் பேர் கருணாநிதி மீது கொண்டிருந்த நம்பிக்கையையும் இது சுட்டிக் காட்டுகின்றது. தம்மை எப்படியேனும் இந்தியா (இந்தியா என்று குறிப்பிட்டாலும் பெரிதும் தமிழகக் அரசியல் மீதான நம்பிக்கையையே) காப்பாற்றும் என்றே அவர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். முருகேசர் இறந்த பின்னரும் குமார் அந்த நம்பிக்கையைச் சுமந்துகொண்டிருக்கின்றான். பிறந்த சிறு குழந்தையை இழந்தபின்னரும் கூட அக்காகிதத்தை தன் சட்டைப்பைக்குள் தேடுகின்றான் குமார். அது தொலைந்துபோய் இருந்தது. ஆயினும் அந்தக் கவிதை வரிகளை முணுமுணுக்கின்றான் குமார்.
போர் நடந்த இடத்திற்கு வெளியே வவுனியாவில் மணியத்தாரும் அவரது நண்பர் அருளம்பலத்தாருக்கும் இடையிலான உரையாடல்கள் ஊடாக போருக்கு வெளியே வாழ்ந்தவர்கள் (குறிப்பாக மேல் நடுத்தரவர்க்க மனநிலை) போரினை எவ்விதம் பார்த்தார்கள் என்பது காட்டப்படுகின்றது. நிஜத்தை எதிர்கொள்ளாது தொடர்ச்சியாக பழைய அரசியல் நிகழ்வுகளைப் பற்றியும், இந்தியா விடாது என்ற நம்பிக்கையையும் மட்டுமே கொண்டு பேச்சு பேச்சு ஓயாத பேச்சு என்று வாழ்ந்திருந்த ஒரு கூட்டம் மக்கள் இவர்கள் ஊடாகக் காட்டப்படுகின்றனர். இனப்படுகொலை ஒன்று நிறைவேற்றப்பட்டு மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று தொலைக்கப்பட்ட பின்னரும் “இந்திய அரசின் பிரதிநிதிகள் இலங்கை சென்றுள்ளனர். இதில் மத்திய அமைச்சர்களுடன் தமிழக அமைச்சர்களும் அடங்குகின்றனர். இவர்கள் அந்நாட்டு அரச அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக யுத்த நிறுத்தத்திற்கும் அகதிகள் புனர்வாழ்விற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். அகதிகளை 180 நாட்களுக்குள் சொந்த இடங்களில் குடியமர்த்தவும், முகாமில் உள்ளவர்கள் வெளியில் சென்று உறவினர்களைச் சந்திக்கவும் வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் வழங்கியுள்ளார் (பக்கம் 76) என்கிற செய்தியக் கேட்டுவிட்டு “நான் முன்னமே சொன்னதுதானே அருளம்பலம், இவங்கட விருப்பத்துக்கு ஒண்டும் செய்ய ஏலாதெண்டு… அதற்கு இந்தியா விடாது…” என்கிறார் மணியத்தார். மணியத்தார் உயர் சாதிய, மேல்தட்டு மனோபாவத்துடன் இயங்குபவராகவே தொடர்ந்துகாட்டப்படுகின்றார். கிரிக்கெட் ஸ்கோர் கேட்பது போல போரைப் பார்க்கின்ற மனநிலை ஒன்றே அன்று நிலவியது; அது எத்தனை பேர் செத்தனர், ஆமில எத்தனை பேர், புலிகளில எத்தனை பேர், சனத்தில எத்தனை பேர் என்று கேட்டு திருப்தியுறவும் உச்சுக் கொட்டவும் தூண்டியது அந்த மனநிலையே! அகதிமுகாமில் இருக்கின்ற பவானியைச் சந்திக்கின்ற ஆனந்தனிடம் அவள் கேட்கின்றாள்,
“அப்படிச் சொல்லாதீங்க ஆனந்தன் சேர்… நாங்க நிகழ்காலத்த மட்டுமல்ல எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு நிக்கிறவங்க. எங்களோட உங்களையும் ஒப்பிடாதங்க. எங்கட பிரதேசத்தில குறைந்த பட்சம் ஆறுமாதமா இலட்சக்கணக்கான நாங்க அடிபாடுகளுக்குள்ள சிக்கி அகதிகளாக அல்லற்பட்டுக் கொண்டிருந்த போது வடக்குக் கிழக்கு உட்பட நாட்டில் எல்லா இடமும் நீங்க விழாக்களையும் கொண்டாட்டங்களையும் நடத்திக்கொண்டிருந்தீங்க. ஏன வவுனியாவில கூட என்ன நடந்தது? எங்களுக்காகச் சிலபேர் கண்ணீர் விட்டிருக்கலாம். ஆனா பெரிசா யாரும் எதுவும் செய்யேல்ல. தனியொருத்தியான எனக்காக உங்க எதிர்கால வாழ்வையே அழிச்சிக் கொள்ளப் போவதாகச் சொல்லும் நீங்க ஆயிரக்கணக்கான மக்கள் அழிஞ்சு போனபோது எங்க போனீங்க? பிரதேசம், இனம், மொழி, காதல் எல்லாம் எங்களுக்கு முன்னால் வெறும் பொய்யான வார்த்தைகளாகப் போச்சு”
இந்தக் கேள்வியை போர் கொன்ற ஒவ்வொருவரினதும் ஆதங்கமாகவே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாகப் புலம்பெயர் மக்களும் கூட. நாம் ஒருங்கமைத்த பேரணிகளும், போராட்டங்களும், உண்ணாவிரத நிகழ்வுகளும் மாத்திரம் அவர்களுக்கான எம் பதில்களாகிவிடமுடியாது.
இராணுவம் முன்னேறப்போகின்றது என்று தனது பாடசாலை அதிபர் ஊடாக அறிந்த செய்தியை தன் குடும்பத்தினரிடம் சொல்லுகின்றாள் பவானி. அப்போது அவள் அண்ணன் குமார்,
“உமக்கென்ன விசரா பிள்ளை? கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குள்ள இராணுவம் வர ஏலுமே?
இயக்கம் விடுமா..? இல்லை .. உலக நாடுகள்தான் விடும..?
இவையின்ர கூத்துக்களைப் பார்த்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்கள் சும்மா இருப்பினமா..?”
என்கிறான். எல்லார் மனமும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தது. அவர்களின் எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப்போயின.
பல இடங்களில் கட்டாய ஆட்சேர்ப்புப் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. வெளிநாட்டுக் கப்பல் மூலமாக திருகோணமலை வைத்தியசாலைக்கு பவானியையும், தன் குழந்தைகளையும் அனுப்ப குமார் முயலும்போது புலிகள் செய்த விசாரணையை “அடையாள அட்டை இல்லாதவனை போலீஸ்காரார் செய்யும் விசாரணை” போல உணர்கின்றனர். மக்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் இராணுவத்திடம் சரணடைய அனுமதிக்கமாட்டோம் என்று இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன் புதுமாத்தளனுக்கு அருகில் வைத்து மக்களிடம் கூறும்போது மக்களுக்கும் இயக்கத்தினருக்கும் இடையில் மோதல் ஒன்று நடக்கின்றது. பல்வேறு செய்திகள் பரவுகின்றன. “மக்கள் உண்மை பொய் தெரியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கின்றனர்”. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், பவானியைக் கண்டு சரணடையும்படி கூறும்போது அவனுடன் வந்த இயக்கத்தைச் சேர்ந்த இன்னொருவன், இல்லை, யாரையும் சரணடையவிட மாட்டோம் என்று சொல்லுகின்றான். இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இறுதியில் அவன் சுரேஷை சுட்டுக் கொல்லுகின்றான். பின்னர், இராணுவத்திடம் சோதனைக்காக அழைத்துச் செல்லப்படும்போது சுரேஷைச் சுட்டுக் கொன்றவனும் ராணுவத்தினருடன் ராணுவத்தினனாக அவர்களுடன் சிரித்துப் பேசியபடி நிற்பதைக் காண்கின்றனர். யுத்தத்தில் இறுதிநாட்களில் புலிகள் இயக்கத்துக்குள் நிகழ்ந்த இராணுவ ஊடுருவல்களும், சிலரின் துரோகங்களுமே பல்வேறு குழப்பங்களை உருவாக்கின என்கிற வாதத்தை வலுப்படுத்துகின்றது இந்நிகழ்வு.
போரின் உச்சக்கட்டங்களில் பொருட்களின் விலை சுட்டிக்காட்டப்படுகின்றது. மாதாந்த உதிரப்போக்கிற்கான துணித்தேவைகள் கூட இல்லாமல் பெண்கள் பட்ட சிரமங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றது. இறுதிக்கட்டங்களில் இறந்தவர்களை அந்த அந்த இடங்களிலேயே விட்டு விட்டுச் செல்லும் நிலைமை வரை அவலம் தொடர்கின்றது. மக்கள் சரணடைந்த பின்னர் வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்படும்போது கிளிநொச்சி வைத்தியசாலையை பெரியளவு சேதங்கள் எதுவும் இல்லாமல் குமார் காண்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. இதை ஒரு சிறிய நிகழ்வாகவே கடந்து சென்றாலும், உண்மையில் மக்களின் மனநிலை அவ்விதமே இருந்தது. கிளிநொச்சியைவிட்டு பெரிய எதிர்ப்பு ஏதும் இல்லாமல் புலிகள் பின்வாங்குவர் என்பதை மக்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை. அதுபோல கிளிநொச்சியில் கிணற்றுத் தண்ணீரில் விஷம் கலந்திருக்கும் என்பது கூட அந்நாட்களில் பரவலாக இருந்த ஒரு வித வதந்தியே.
அகதிமுகாம்களில் மக்கள் எதிர்கொண்ட சிரமங்கள், சுகாதாரச் சீர்கேடுகள் என்பன சுட்டிக்காட்டப்படுகின்றன. அதே நேரம், பெற்றோரை இழந்த குழந்தைகளை தம் குழந்தைகளாகவே சேர்த்துக்கொண்டவர்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. முரண்நகையாக, அந்த முகாம்களுக்கு ஆனந்த குமாரசாமி முகாம், இராமநாதன் முகாம், அருணாசலம் முகாம் என்று பெயரிடப்பட்டிருந்ததும் குறிப்பிடப்படுகின்றது. “ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழலாம் என்ற தங்கள் தீர்க்க தரிசனம் பொய்த்துப் போய்விட்டதை எண்ணி வெட்கித் தலை குனியமாட்டார்களா.. என்ன?” என்று நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால், ஒருவிதத்தில் அவர்களின் மேட்டிமைத்தனத்தின் எச்சங்களாக இருக்கின்ற மணியத்தார் போன்றவர்ககளையும் சேர்த்துப் பார்க்கின்றபோது இந்த முகாம்களும் கூட அவர்களின் எச்சங்கள் என்றும் நினைக்கத் தோன்றுகின்றது! அவர்களின் சிந்தனையை எம் முந்தைய தலைமுறையினர் என்று கருதினாலும் கூட, அவர்களை ஓரளவு சமரசம் செய்வதாகவே எமது தலைமுறையும் இருக்கின்றதாகவே தோன்றுகின்றது; நாவலில் இறுதியில் முகாமில் பவானியைச் சந்திக்கும்போது கூட தன் தந்தை மணியத்தாரைக் காபந்து பண்ணும் விதத்திலும் தன் நலனை முன்னிலைப்படுத்துவதாயுமே ஆனந்தனின் வாதமும் அமைகின்றது.
நான் வாசிக்கின்ற அரசரெத்தினத்தின் முதலாவது நூலும் இதுவே. இதற்கு முன்னராக அரசரெத்தினம் வளமான வாழ்வைத்தேடி, விழிகளால் கதை பேசி, இலங்கை அரசியலும் பன்னிரண்டாவது பொதுத்தேர்தலும், இலங்கை பாராளுமன்ற வரலாறும் பதின்மூன்றாவது பொதுத்தேர்தலும் ஆகிய நான்கு நூல்களை வெளியிட்டிருப்பதாகவும், இருபதற்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருப்பதாகவும் இந்நூலில் இருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது. இந்நூலில் அவர் எழுதிய உரையில் எஸ். அரசரெத்தினம், “சாம்பல் பறவைகள் என்னும் இந்த குறுநாவல் வன்னிச் சமரின்போது சாதாரண மக்கள் அனுபவித்த அவலங்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் என்னால் எழுதப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். வன்னிச்சமர் பற்றி எழுதப்பட்ட முதன்முயற்சியாக எழுதப்பட்ட குறுநாவல் என்று முன்னுரையில் வி.எஸ்.இதயராஜா குறிப்பிடப்படுகின்றார். அந்த வகையில் இக்குறுநாவல் போரினைப் பற்றிய நல்லதோர் பதிவாகவும் அமைகின்றது. தவிர, எஸ் அரசரெத்தினத்தை அரசியல் பிரக்ஞை கொண்டவராகவே அறியமுடிகின்றது. அந்தத் தெளிவுடனும், ஏன் இதனை எழுதுகின்றேன் என்கிற அறிதலுடனுமே அவர் சாம்பல் பறவைகளை எழுதியுள்ளார். அந்தவகையில் இந்த வாசிப்பானது நல்லதோர் உரையாடலை எமக்குள்ளேயே திறக்கின்றது!
நூல் விபரம்
சாம்பல் பறவைகள்
ஆசிரியர்: எஸ். அரசரத்தினம்
சத்யா பப்ளிக்கேஷன்ஸ்
கல்முனை
Leave a Reply