ரொரன்றோ தமிழ் சங்கம்
ரொரன்றோ தமிழ்ச் சங்கம் சார்பில் ஒழுங்கு செய்யப்படும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்களில் இயன்றவரை கலந்துகொள்ளுகின்றேன். ஒவ்வொரு மாதமும் இறுதிச் சனிக்கிழமை மாலை என்று ஒரு குறித்த தினத்தில் நிகழ்வுகள் தொடர்ச்சியாக திட்டமிட்டு நடத்தப்படுவது முக்கியமானது. அதுபோல ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு மையப் பொருள் தேர்வு செய்யப்பட்டு, அது பற்றிய ஒரு விரிவான கட்டுரை வாசிப்பு ஒன்றும், பின்னர் அதை ஒட்டிய துணைத் தலைப்புகளிலான கட்டுரை வாசிப்புகளுமாக நிகழ்வு நடைபெற்று வருகின்றது. இறுதியாக ஐயந்தெளிதல் அரங்கு என்ற பெயரில் உரையாடலுக்கான நேரமும் ஒதுக்கப்படுகின்றது. மேலும், இந்நிகழ்வுகளில் தேர்வுசெய்யப்படும் தலைப்புகளும் கனதியைக் கொடுப்பனவாகவே இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் உரையாற்றுபவர்கள் தலைப்புகளை விலத்தியோ, அதற்கான ஆழத்திலோ பேசாதபோதும், தொடர்ச்சியாக இந்தக் கனதியைப் பேணுவது நாளடைவில் உரையாற்றுபவர்களையும் அந்தத் தளத்தைச் சென்றடைய உதவும் என்பது நம்பிக்கை.
கடந்த ஒராண்டு காலப்பகுதியில் வாசிக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் சேகரித்து, ஒரு தொகுப்பாக்கும் முயற்சியிலும் ரொரன்றொ தமிழ்ச் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று அறிய முடிந்தது. இது போன்ற அறிவுச் செயற்பாடுகள் தொகுக்கப்படவேண்டும். அவ்விதம் தொகுத்து ஆவணமாக்கலே எதிர்காலத்திற் தேவையானவர்களுக்கான உசாத்துணையாக அமையவும், தகவற்திரட்டாக அமையவும் உதவும். இம்முயற்சி வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் அமைய வாழ்த்துகள்.
00
ரொரன்றோ பொது நூலகம்
ரொரன்றோ பொது நூலகக் கிளைகளிற்கு கனடா வந்த புதிதில் சென்றிருக்கின்றேன். இப்போதிருப்பதுபோல அருமையான புத்தக தேர்வுகள் அப்போது இருக்கவில்லை. இதனால் ரொரன்றோ நூலகங்களிற்கு செல்வதும் இல்லாதுபோயிருந்தது. இந்த நிலை இன்று பெருமளவு மாறி இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக அனேகமான புது நூல்களை ரொரன்றோ பொதுநூலகத்தில் இருந்து பெற்று வாசித்துவருகின்றேன். ஆனால் அண்மையில் ரொரன்றோ நூலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது கிடைத்த தகவல்கள் நம்பிக்கையீனம் தருவனவாக இருந்தன.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்னர் ரொரன்றோ பொது நூலகங்களில் தமிழ்மொழியிலான புத்தகங்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இந்த ஆண்டுவரை ஒதுக்கப்படும் நிதியானது அரைவாசியாகக் குறைந்திருக்கின்றது. ஆயினும் ஒப்பீட்டளவில் அண்மைக்காலங்களில்தான் தரமான, நல்ல நூல்களை நூலகத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. அண்மைக்காலமாக தமிழ்மக்கள் ரொரன்றோ மாநகரை விட்டு வெளியேறுவது அதிகரித்துவருவதும் இதற்கான காரணிகளில் ஒன்றாக இருக்கலாம். அதேநேரம் தமிழில் வாசிப்பவர்கள் குறைந்து வருவதையும் இது சுட்டிக்காட்டுகின்றது. அதே நேரம், திரைப்படங்கள், டீவிடீ, மற்றும் இசைத்தட்டுகள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கல்களில் எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. ரொரன்றோ நூலகத்தில் திரைப்படங்களையும், இசைத்தட்டுகளையும் பெறுபவர்கள் அவதானித்திருக்கக் கூடும். அங்கே இருப்பவை அனைத்துமே அல்லது மிக மிகப் பெரும்பாலானவை திருட்டு டீவிடீ களே. அதுபோலவே இசைத் தட்டுகளும். நிச்சயமாக இதை நூலக நிர்வாகத்தினர் அறிந்திருக்க மாட்டார்கள். திருட்டு டீவிடீகளதும், இசைத்தட்டுகளதும் விலையினையும், உண்மையான டீவிடீகள், இசைத்தட்டுகளதும் விலையை ஒப்பிட்டுப் பார்த்தால், இவ்வாறு மிகப்பெரும் மோசடி ஒன்று அரங்கேறிக்கொண்டிருப்பதை அறியமுடியும். மக்களின் பொதுச் சொத்தில் நிகழும் இந்த மோசடி பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கவேண்டியது அவசியம்.
00
வைரமுத்து – குமுதம் : கார்ப்பரேட் மார்க்கெட்டிங்
அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் கடைசி எழுத்து என்று கூறி, வைரமுத்துவின் கதைகளைப் பாராட்டி ஜெயகாந்தன் எழுதியதாக குமுதத்தில் பிரசுரமான கடிதம் பற்றி ஜெயகாந்தனின் மகளும், எழுத்தாளருமான தீபலக்ஷ்மி தன் முகநூலில் பகிர்ந்திருக்கின்றார். இந்த விடயத்தில் வைரமுத்துவுடன் சேர்த்து, குமுதத்தின் இதழியல் தர்மம் குறித்தும் பேசவேண்டியிருக்கின்றது.
“A DROP IN SEARCH OF THE OCEAN” என்ற பெயரில் பத்தாண்டுகளிற்கு முன்னர் தன் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியான காலம் முதல் வைரமுத்து தனது நோபல் பரிசு கனவு பற்றியும், இலக்கியவாதி அடையாளம் பற்றியும் கூறியே வருகின்றார். வைரமுத்து எனக்குப் பிடித்த பாடலாசிரியர் தான். ஒரு எழுத்தாளராக, அதன் உச்சங்களைத் தொடவேண்டும் என்ற அவரது ஆர்வம் அவசியமானதும் கூட. ஆனால் அவரது சுய முன்னிறுத்தல்களும், மாட்கெட்டிங் தந்திரங்களும் அயர்ச்சியையே வரவழைக்கின்றன. நோபல் பரிசு பெற்றே தீருவேன் என்று புறப்பட்டிருக்கும் வைரமுத்துவிற்காக இலக்கிய அந்தஸ்தை தருவித்தே தீர்வது என்றே குமுதம் தெளிவாக இயங்குகின்றது. “வைரமுத்து சிறுகதைகள் – 21ம் நூற்றாண்டின் அடுத்த கட்ட வளர்ச்சி” என்று குமுதம் இதழில் (பர்வீன் சுல்தானா, சீனு ராமசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், அருணன், காவ்யா சண்முகசுந்தரம் ஆகியோருக்கு இடையில்) இடம்பெறும் உரையாடல் இந்த இலக்கு நோக்கியே நகர்கின்றது. 21ம் நூற்றாண்டின் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றிப் என்று அதே இதழில் தொடர்ச்சியாக வைரமுத்து எழுதி வருகின்ற சிறுகதைகளை முன்வைத்துப் நடைபெறும் உரையாடல்களின் நோக்கம் என்ன என்பதும், அந்த உரையாடலை முன்னெடுப்பவர்களின் அறமும் முக்கியமாகக் கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டியன. குறிக்கப்பட்டவரின் அல்லது குறிக்கப்பட்ட படைப்பிலக்கியத்தை அடுத்த கட்ட வளர்ச்ச்சி என்று குறிப்பிடுவதாவது ஒரு விதத்தில் கருத்துருவாக்கம் சார்ந்தது என்பதால் இந்தக்கேள்வி எழுந்தே தீர்கின்றது. ஏப்ரல் 13 குமுதம் இதழில் இத்தொடருக்கான அறிமுகம் பின்வருமாறு அமைகின்றது,
“புதுமைப்பித்தன் தொட்ட இடத்திலோ, ஜெயகாந்தன் விட்ட இடத்திலோ வைரமுத்து தன் பயணத்தைத் தொடரவில்லை. தனக்கென தனிவெளி, தனிமொழி என்ற பாணியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவருடைய எல்லாக் கதைகளின் முடிவிலும் மனித மேன்மையும் பேரன்பும், பெருமிதமும் பொங்கி நிற்கின்றன. எதிர்மறை வாழ்விலிருந்து உடன்பாட்டுச் சிந்தனைகளையே அவர் எழுத்து எழுந்து நின்று பேசுகின்றது என்பதை கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஐவரும் ஒருமித்த குரலில் உரக்கவே சொன்னார்கள். உரையாடல் தொடர்கின்றது”
இந்தப் பந்தியை எழுதியவர் வைரமுத்துவின் மிகப்பெரும் பக்தராக இருக்கவேண்டும். வைரமுத்துவின் வசன நடை அவரை அந்தளவுக்கு பாதித்துள்ளது. முழுக்க முழுக்க ஓசை நயத்துக்காக கோர்க்கப்பட்ட சொற்களுடன் அமைந்துள்ளது இந்தப் பந்தி மூலமாக வைரமுத்துவிற்காக அமைக்கப்படும் இலக்கிய சிம்மாசனத்துடன் சேர்த்து, அதனை எழுதியவரையும் கேள்விக்குள்ளாக்க வேண்டி உள்ளது. இந்த ஒற்றைப் பந்தியில் இருந்தே பார்ப்போம், வைரமுத்து பயணப்படும் தனிவெளி யாது? தனி மொழியாது? இதே இதழில் வைரமுத்து எழுதியுள்ள சிறுகதையில் அவர் பயன்படுத்தியுள்ள மொழிநடை, “வில்லோடு வா நிலவே”, “காவி நிறத்தில் ஒரு காதல்” எழுதிய காலம் முதல் அவர் பயன்படுத்தி வரும் அதே மொழிநடை தானே. அப்படியிருக்க அது என்ன தனிவெளி, தனிமொழி? தமிழில் அர்த்தம் தெரியாமலே சிதைக்கப்பட்ட சொற்களில் ஒன்று வெளி. அது இங்கு மீண்டும் உறுதியாகி உள்ளது.
அவருடைய எல்லாக் கதைகளின் முடிவிலும் மனித மேன்மையும் பேரன்பும், பெருமிதமும் பொங்கி நிற்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனித மேன்மையையும், பேரன்பையும் விட்டுத்தள்ளுவோம். பெருமிதம் பொங்கி நிற்கின்றதென்றால், எந்தப் பெருமிதம், எது குறித்த பெருமிடம், எவரின் பெருமிதம்?
“எதிர்மறை வாழ்விலிருந்து உடன்பாட்டுச் சிந்தனைகளையே அவர் எழுத்து எழுந்து நின்று பேசுகின்றது என்பதை கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஐவரும் ஒருமித்த குரலில் உரக்கவே சொன்னார்கள்” என்று வேறு சொல்லுகின்றது குமுதம். Optimistic perspective என்ற அர்த்தத்தில் சொல்கின்றனர் என்று நினைக்கின்றேன். ஆனால் இந்த வசனத்தைப் பார்க்கின்றபோது, அண்ணாவும் கலைஞரும் பேசி, அப்போது புதுமையாக இருந்து பின்னர் விரும்பியபடி எல்லாரும் பாவித்து தேய்வழக்கும் ஆகிப்போன அந்த மொழிநடையே நினைவு வருகின்றது. மேலும், “எதிர்மறை வாழ்விலிருந்து உடன்பாட்டுச் சிந்தனைகளையே அவர் எழுத்து எழுந்து நின்று பேசுகின்றது என்பதை கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஐவரும் ஒருமித்த குரலில் உரக்கவே சொன்னார்கள்” என்று அளவுக்கு அதிகமாகவே பெருமிதப்படும் அதே குமுதம் இதழில் இடம்பெற்றுள்ள “பொய்யெல்லாம் பொய்யல்ல” என்கிற சிறுகதையைப் படிக்கின்றபோது வைரமுத்துவிற்குள் இருக்கின்ற பாலசந்தர் சினிமாக்களின் தொடர்ச்சியே நினைவுக்கு வருகின்றது. அடுத்து எழுத்து ஏன் எழுந்து நின்று பேசவேண்டும் என்றும் கேட்கத் தோன்றுகின்றது. எழுத்து என்பது “எ”னாவில் தொடங்கியதால் எழுந்து நின்று என்று எழுதவேண்டிய கட்டாயம் எழுதியவருக்கு. பேசாமல் “அவர் கதை கரணம் அடித்துப் பேசுகின்றது” என்று எழுதி இருக்கலாம். பொருட் பிழைதன்னும் நிகழாது இருந்திருக்கும்!
சில ஆண்டுகளிற்கு முன்னர் ஈழம் சென்று வந்த இயக்குனர் மகேந்திரனின் நேர்காணல் குமுதம் இதழில் வெளியானது. ஈழத்தில் இருப்பவர்கள் விஜயகாந்தினை சின்ன பிரபாகரன் என்றே அழைப்பதாக அந்த நேர்காணலில் குறிப்பிடப்பட்டிருந்தது, அதற்கு அடுத்து வந்த இதழிலேயே அதனை மறுத்து தான் அவ்விதம் குறிப்பிடவில்லை என்று கூறிய மகேந்திரனின் கடிதமும் வெளியாகி இருந்தது. இப்போது வைரமுத்துவின் இலக்கிய அந்தஸ்து பெற்றே தீர்வது என்ற மோகம் எதுவரை சென்றுள்ளது என்று ஜெயகாந்தனின் மகள் தீபலக்ஷ்மி தெளிவாக்கியுள்ளார். குமுதம் எவ்விதம் இதனைக் கையாளப் போகின்றது? பொறுத்திருப்போம்.
இக்கட்டுரை தாய்வீடு இதழில் தொடர்ச்சியாக எழுத இருக்கும் “சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற தொடருக்காக எழுதப்பட்டது. மே, 2015 இதழில் பிரசுரமானது
Leave a Reply