ரொரன்றோவில் வெகுஜனக் கலாசாரத்தின் மத்தியில் சீரிய நாடகங்களை நோக்கி பார்வையாளர்களை இழுக்கும் நோக்குடன் நாடகம் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் பலர் இணைந்து 1996 இல் உருவாக்கிய அமைப்பே மனவெளி கலையாற்றுக் குழு ஆகும். பொதுவாக மனவெளி கலையாற்றுக் குழுவினர் வருடாந்தம் “அரங்காடல்” என்ற பெயரில் நாடகவிழாக்களை ரொரன்றோவில் நடத்துவது உண்டு. அந்த வகையில் அதன் 17வது அரங்காடல் ஏப்ரல் 26ம் திகதி “ஃப்ளேடோ மார்க்கம் தியேட்டர்” இல் நடத்துவதாக திட்டமிட்டிருந்தனர்.
மனவெளி கலையாற்றுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செல்வன் அரங்காடலின் ஒத்திகைகளை வந்து பார்வையிடுமாறு இருமுறை கேட்டிருந்தார். ஆயினும் பல்வேறு காரணங்களால் இரண்டுமுறையும் அவரது வேண்டுதலை நிறைவேற்றமுடியவில்லை. ஆனால் நிகழ்வினைப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்துகொண்டே வந்தது. இறுதியில் மதிய நேர அளிக்கைகளில் பார்க்கமுடிந்தது.
இம்முறை யாழினி யோதிலிங்கத்தின் “நீ.ல.ம்”, ஔவையின் “காற்றெல்லாம் தென்றல் அல்ல”, ஐஸ்வர்யா சந்துருவின் “சிருஷ்டி”, ஷோபா சக்தியின் “செரஸ் தேவதை” (நெறியாள்கை சபேசன்), மெலிஞ்சி முத்தனின் மோகப் பறவை ஆகியன மேடையேற்றப்பட்டன. இந்த நாடகங்கள் பற்றியும், பொதுவாகவும் சில கருத்துகளை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்ளுகின்றேன்.
“நீ.ல.ம்” நாடகத்தைப் பொறுத்தவரை, இன்றைய காட்சி தொழினுட்ப ரீதியில் நேர்த்தியானதாகவே இருந்தது. நாடகம் யாழினி எழுதிய கவிதை ஒன்றினைக் கருவாகக் கொண்டது என நினைக்கின்றேன். உறவுகள், தளைகள், அவற்றில் இருந்து வெளியேறும் முனைப்பு ஆகியவற்றைக் கலாபூர்வமாக படைக்கின்ற முயற்சி அந்நாடகம். ஆனால், அவரது நாடகங்களின் நிகழ்த்துகையில் அவரது முன்னைய நாடகங்களின் தாக்கம் (repetition) இருப்பதை உணரக் கூடியதாக – மிக முக்கியமாக உடல் மொழியில் – இருந்தது. இந்த விடயத்தில் அவதானம் செலுத்தவேண்டும். அடுத்து, சமீரா நன்றாக நடித்துவருகின்றார். கனடாவில் தொடர்ச்சியாக நடைபெறும் நாடகங்களில் அவருக்கு எதிர்காலத்தில் நல்லதோர் இடம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரம், சமீரா நாடகங்களில் ஆங்கிலத்திலேயே பெரிதும் பேசிவருகின்றார். ஒரு பாத்திரம் ஆங்கிலம் பேசுவதாக உருவாக்கப்படுமானால் அது படைப்பாளியின் சுதந்திரம். ஆனால், எனது பார்வையில் சமீராவிற்கு தமிழ் மொழிமூலம் உரையாடல்களைச் செய்வது சிரமமானது என்பதாலோ / ஆங்கிலம் அவருக்கு அதிகம் வசதியானது என்பதாலோ அவர் ஆங்கில மொழிமூலமான உரையாடல்களைச் செய்வதாகவே காண முடிகின்றது. சமீரா சற்றே முயற்சி எடுத்து தமிழில் பேசி நடிப்பது பொருத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இளவயதினரில் சமீராவும், அருவி நிருபாவும் எதிர்கால நம்பிக்கைகளாக வரக் கூடியவர்கள் எனக் கருதுகின்றேன். எனவே சமீரா இவற்றில் அக்கறை செலுத்தவேண்டும் எனக் கருதுகின்றேன்.
“காற்றெல்லாம் தென்றல் அல்ல”, ஔவையின் நெறியாள்கையில் உருவானது. எனக்குப் பார்க்கக் கிடைத்த முதலாவது ஔவையின் நாடகமும் இதே. பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் வன்முறையும், அதனை துணிச்சலோடு எதிர்கொள்ள முயலும் பெண்ணின் முயற்சியுமாக இந்நாடகம் பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நாடகத்தைப் பொறுத்தவரை வருகின்ற அனைத்து ஆண் கதாபாத்திரங்களும் பெண்மீது வன்முறை புரிகின்றவர்களாகவோ அல்லது பழமைவாத, பெண்ணை வெறும் போகப் பொருளாக மாத்திரமே நினைக்கின்றவர்களாகவோ படைக்கப்பட்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த ஆண் இனத்தையும் பெண்களுக்கு எதிரானவர்களாகப் பார்க்கின்ற பெண் நிலை வாதம் சரியானது அல்ல. இந்த அடையாளப்படுத்தலை கவனமாகக் கையாண்டிருக்கலாம் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். இறுதியில் வந்த நீதிமன்றக் காட்சி 80களில் வெளியான திரைப்படங்களை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது. குறிப்பாக இந்நாடகத்தில் இடம்பெற்ற நீதிமன்ற வாதங்களும் அவை காட்சிப்படுத்தப்பட்ட விதமும் 1984/85ல் கே. விஜயன் இயக்கத்தில் மோகன் – பூர்ணிமா ஜெயராம் நடித்து வெளியான “விதி” திரைப்படத்தையே நினைவூட்டின. மேலும், நாடகம் முடிவுற்றபின்னர், கதாபாத்திரங்கள் மேடைக்கு திரும்பும்போது திரைச்சீலை சரியான நேரத்தில் இழுக்கப்படாததால் அனைத்துக் கதாபாத்திரங்களும் பெண்கள் குறித்த நேர்மறை கருத்துகளுடன் கூடிய வசனங்களைப் பேசியது இறுதியில் அனைவரும் மனம் திருந்தியது போன்ற தோற்றத்தினையும் சற்றே ஏற்படுத்திவிட்டது. சமயங்களில், இவ்விதமான தொழினுட்பக் கோளாறுகள் மொத்த முயற்சிகளையுமே நீர்த்துப் போகச் செய்வனவாயும் அமைந்துவிடுகின்றது. உண்மையில், கதாபாத்திரங்கள் மேடையில் இறுதியில் தோன்றும்போதுகூட இந்த வசனங்களைப் பேசியிருக்கவே தேவையில்லை என நினைக்கின்றேன்!
ஐஸ்வர்யா சந்துருவின் “சிருஷ்டி” குழந்தைகளின் உலகைக் காட்டுவது. அதனால் மெல்லிய கார்ட்டூன் தன்மையையும் கொண்டிருக்கின்றது. அதே நேரம் அதில் சீரிய நாடகங்களைப் பார்க்க விரும்புகின்றவர்களுக்கான எந்த அம்சமும் இல்லை. அதேநேரம் குழந்தைகளை மையம் கொண்டது என்ற அளவில் இது வரவேற்கத் தக்கதோர் முயற்சியே! நாடகங்கள் நிகழும்போது அனைத்துக் குழந்தைகளும் அவர்களுக்கான பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஒரு முயற்சியாக இந்த நாடகத்தை மாத்திரம் குழந்தைகளும் பார்க்க ஏற்பாடு செய்திருக்கலாம்.
“செரஸ் தேவதை” நாடகமே என்னை உள்ளிட்ட பலருக்கு அதிகம் கவனத்தை ஈர்த்ததாக இருந்தது. இந்த நாடகத்திற்கான பிரதி ஷோபா சக்தியால் எழுதப்பட்டது. ஷோபா சக்தி புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் ஈழத்தைச் சேர்ந்த எழுத்தாளர். பரவலாக இலக்கிய வாசகர்களால் அறியப்பட்டவர். தனது எல்லா சிறுகதைகளும், சற்றே அளவில் பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள் என்பார் ஷோபா சக்தி. அவ்விதமே அவரது நாடகப் பிரதியும் அவர் வழமையாகப் பேசும் அரசியலையே முன்வைக்கின்றது. இன்று மேடையேற்றப்பட்ட அனைத்து நாடகங்களிலும், சிறப்பான நடிப்பாற்றலை இந்த நாடகத்தில் பிரசாத் வெளிப்படுத்தியிருந்தார், குறிப்பாக பிரசாத்தின் உடல்மொழி மிகச் சிறப்பானதாக இருந்தது. ஆரம்பத்தில் ராணுவ உடையில் தோன்றியபோது அவர் உடல்மொழியையும் வசன உச்சரிப்பையும் பதற்றம் நிறைந்ததாக, படபடப்புடன் கூடியதாக வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் பாதிரியார் தோற்றத்தில் அவர் குரலும் உடல்மொழியும் அமைதியுடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. நான் பார்த்த பிரசாத்தின் இரண்டாவது மேடை இது. உயிர்ப்புவின் நாடகவிழாவில் “காலச்சக்கரம்” நாடகத்திலும் அவர் சிறப்பாக நடித்திருந்தபோதும் கூட, அவரது இன்றைய நடிப்பானது பெரும்பாய்ச்சல் என்றே சொல்லவேண்டும். நன்றியும் பாராட்டும் நட்பைக் கொச்சைப்படுத்தும் என்பார்கள். ஆயினும் நண்பர் பிரசாத்திற்கு வாழ்த்துகள்.
ஆனாலும் கருத்தியல் ரீதியாக “செரஸ் தேவதை” பேசும் அரசியல் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டியது. வழமைபோல, போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் மக்கள் பாதிக்கப்பட்டனர், போர் எப்போதும் மக்களுக்கு எதிரானதாக இருக்கின்றது என்கிற கருத்துகளை “மனித உரிமை” என்பதன் பெயரில் இந்நாடகத்தினூடாகவும் பிரதிபலிப்பவராகவும் மனித உரிமை என்ற பெயரில், ராணுவத்தையும், ராணுவத்துக்கு எதிராக போராடியவர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பவராயுமே ஷோபா சக்தி இருந்துவிடுகின்றார். தவிர, குற்றத்திற்குப் பரிகாரம் தண்டனையா அல்லது மன்னிப்பா என்கிற மதவாதிகளதும் சில தத்துவவாதிகளதும் கருத்துநிலைகள் மீளவும் இப்பிரதி ஊடாக பேசப்படுகின்றது. மன்னிப்பை முன்னிறுத்துவது, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுவது என்பனவெல்லாம் எவ்விதம் ஒரு தரப்பினர் அதிகாரத்தைத் தொடர்ந்து பேண உதவின என்பன பற்றி மிக தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டுவந்துள்ளது. குறிப்பாக “மன்னிப்பு” என்பது பற்றி “On the Genealogy of Morals” என்கிற நூலின் முதலாவது கட்டுரையான “Good and Evil”, “Good and Bad” ல் சொல்லியிருப்பார் நீட்சே. அது போல பாவ மன்னிப்பு என்பதை “அதிகாரம்-அறிவு” இணைந்து செயற்படல் (power-knowledge) இன் வடிவங்களில் ஒன்றாக ஃபூக்கோ முன்வைத்த கருத்துகளும் முக்கியமானவை. இவ்வாறான பின்னணிகளின் அறிவுடன் தான் செரஸ் தேவதைகள் நாடகத்தை அணுகமுடிகின்றது.
குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இனப்படுகொலை நிகழ்ந்தது எனபதற்கான விசாரணையும் அதனைச் செய்தவர்களுக்கான தண்டனையும் வேண்டும் என்று போராடிவருகின்ற ஒரு காலப்பகுதியில், இனப்படுகொலை செய்தவனையும் அல்லது இனப்படுகொலைக்குக் கருவியாக இருந்தவனையும் அவனது மனச்சாட்சி உறுத்திக் கொண்டேயுள்ளது; அதுவே அவனுக்குத் தண்டனை என்கிற ரீதியில் இந்நாடகத்தின் ஊடாகக் கூறுவது மிக மலினமான, மிக மோசமான தந்திரம்.
இதே நிகழ்வில் இடம்பெற்ற “காற்றெல்லாம் தென்றல் அல்ல” என்ற நாடகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம், குற்றத்துக்குப் பரிகாரம் தண்டனையே என்று போராடுகின்றது. மறக்கவேண்டும், மன்னிக்கவேண்டும் என்று வாதிடுபவர்கள் எதிர்மறை கதாபாத்திரங்கள் அல்லது பிற்போக்கானவர்கள் என்றே அந்த நாடக அளிக்கை வாதிடுகின்றது. ஆண் எதிர் பெண் என்கிற பால் அரசியலில் குற்றத்துக்குப் பரிகாரம் தண்டனை என்றிருக்க, இனங்களுக்கிடையிலான ஒடுக்குமுறை அரசியலில் எவ்விதம் குற்றத்துக்குப் பரிகாரம் மன்னிப்பாகும்? பிரதிக்கு வெளியே, காற்றெல்லாம் தென்றல் அல்ல நாடகத்திலும், பெண்ணுக்கு எதிராகக் குற்றம் இழைத்தவர்களுக்கு அவர்கள் மனச்சாட்சியே தண்டனை வழங்கும் என்று வாதிட்டால் அல்லது கருத்துச் சொன்னால் எவ்விதம் இருக்கும்?
இன்றைய நிகழ்வில் ஒளியமைப்பு நன்றாக இருந்த நாடகங்களுள் ஒன்று செரஸ் தேவதை. ஆனால், அது பேசும் அரசியலால் எப்படித்தான் வாதிட்டாலும் ஒரு துளி விஷம் ஆகிவிடுகின்றது.
இந்த நாடக அளிக்கையில் நாடகம் என்பதை ஓர் அரங்க நிகழ்வு என்பதற்கான சாத்தியங்களை இயன்றவரை பயன்படுத்தியதாக மெலிஞ்சி முத்தனின் “மோகப் பறவையையே” சொல்லவேண்டும். மெலிஞ்சி ரொரன்றோவில் இருக்கின்ற அசல் கலைஞனாக என்னை எப்போதும் பிரமிப்பில் ஆழ்த்திக் கொண்டிருப்பவர், ஈழத்தவர்களில் நிறையப் பேர் மறந்துவிட்ட அல்லது அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளாத மு. தளையசிங்கம் அவர்கள் மீது பெருமதிப்புக் கொண்டு அவரை தன் மூலச் சிந்தனையாளராகக் கொண்டிருப்பவர். அவரது அக உலகத் தேடல்களும் தத்துவ விசாரணைகளும் அவர் பற்றி நான் எப்போதும் முதன்மையானதாகக் குறிப்பிடுபவை.
முதன் முதலாக நான் மெலிஞ்சியை சந்தித்தபோது அவர் கனவுகள் பற்றிய தேடலில் இருந்தார், பிற்பாடு வெளியான அவரது வேருலகு நாவலுக்குக் கூட அவர் முதலில் வரித்த தலைப்பு “கனவுகள்” என்றே ஞாபகம். மெலிஞ்சி எப்போதும் எது பற்றியாவது தொடர்ந்து அசைபோட்டுக்கொண்டிருப்பார். அந்தக் காலப்பகுதியில் வருகின்ற அவரது படைப்பிலக்கியங்களிலும் அவர் அசைபோட்டுக்கொண்டிருப்பவை எல்லாம் வெளிப்படும். நீண்டகாலமான அவரது தேடல்களின் தெறிப்புகள் பலவற்றை அவரது மோகப் பறவையிலும் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. இன்றைய நிகழ்வுகளில் பெரும்பாலும் எல்லாக் கலைஞர்களும் சிறப்பான நடிப்பினை நல்கிய நாடகமாகவும் மோகப் பறவையையே சொல்லக்கூடியதாக உள்ளது. குறிப்பாக சோக்கல்லா சண்முகம், சுதர்ஷி, பவானி, அரசி, ஐஸ்வர்யா, றொனாட் தேவதாசன் அஷோக் செபஸ்ரியன், அரசி ஆகியோரைச் சொல்லவேண்டும். அதேநேரம் இந்நாடகத்தின் பிற்பாதி சற்றே இழுத்துச் செல்லப்பட்டதாயும், அதன் முடிவினை நாடகீயமானதாயும் உணர முடிந்தது. கிட்டத்தட்ட “யாவும் சுபம்” முடிவு. தவிர இப்பிரதியில் எதுவித தேவையும், தொடர்பும் இல்லாமல் அருந்ததி கதாபாத்திரத்தின் (சுதர்ஷி ஏற்றிருந்தது) கதை சொல்லப்படுகையில் அவர் சிங்கள ராணுவத்தினன் ஒருவனைத் திருமணம் செய்ததாகக் கூறுவதுடன், “என்ட குடும்பத்தையே நான் இழக்கக் காரணமான ராணுவத்தினன் ஒருவனைக் காதலிச்சன், அவன் குடும்ப கஸ்டத்தால ராணுவத்தால சேர்ந்தவன். அவனுக்கு பயங்கரவாதிகளிடன் இருந்து அவன்ட நாட்டைக் காக்கவேண்டும் என்று போதிக்கப்பட்டிருக்காம்” என்கிற வாதம் இடம்பெறுகின்றது. நாடக அளிக்கையில் எதுவித தாக்கத்தையும் செலுத்தாத இதுபோன்ற செருகல்கள் அந்தச் செருகல்களின் அரசியல் செல்வாக்கால் பிரசாரமாகவே பார்க்கப்படவேண்டியன. அந்த விதத்தில் மோகப் பறவை நாடகத்தில் இது ஏன் செருகப்பட்டது என்கிற நியாயமான கேள்வி எழவே செய்கின்றது. இதையும் மெலிஞ்சி முத்தனின் கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகின்றேன்.
இந்த நாடகத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு விடயம் பின்னணி இசையும் பாடல்களும். தென்மோடிக் கூத்தின் நுணுக்கங்களை அறிந்தவனல்ல நான் என்றாலும், என்னை மிகவும் கவர்ந்திருந்தன இசையும் பாடல்களும். அதேநேரம் நாடகம் முழுவதுமே ஒளியமைப்பு மிக மோசமானதாக இருந்தது. ஒத்திகைகளின் போது ஒளியமைப்பினை சரிபார்த்துக்கொள்ளும் வாய்ப்பு எம்மவர்களுக்கு மிகக் குறைவாகவே உள்ளது. தவிர, தொழினுட்ப ரீதியான இதுபோன்ற தவறுகள் அனேகம் தவிர்க்கவே முடியாமல் நிகழ்வன. ஆயினும் மெலிஞ்சியின் நாடகதைப் பொறுத்தவரை பார்வையாளருக்கு இந்த ஒளியமைப்பு சிக்கல்கள் இடையூறாக இருந்தன என்பது உண்மை.
ஏற்கனவே பார்த்த அரங்காடல் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது இம்முறை நாடகங்களின் தரம் சற்றே குறைந்திருப்பதுபோல தோன்றியது. இதற்கான காரணங்கள் பற்றி மனவெளி கலையாற்றுக் குழுவினர் ஆராயவேண்டும். புலம்பெயர் நாடுகளில் கலைஞர்களுக்கு இருக்கக் கூடிய நேரப்பற்றாக்குறை போன்ற காரணிகள் அனைவரும் அறிந்ததே. ஆயினும், இம்முறை அரங்காடலுக்காக நீண்ட நாட்களாக பயிற்சி எடுத்தனர் என்று அறியமுடிகின்றது. அந்த வகையில் கலைஞர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அதே நேரம், பிரதிகளின் தேர்விலும், அவற்றின் காட்சிப்படுத்தலிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று நினைக்கின்றேன். தவிர, இம்முறை அரங்காடல் நிகழ்விற்கான விளம்பரங்களும், முன்னோட்டங்களும், பரப்புரைகளும் மிகவும் அதிகரித்து இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. துரதிஸ்ரமாக அதிகம் பார்வையாளர்கள் வரவேண்டும் என்ற நோக்கமும் நிகழ்த்துகையில் சற்றே தரம் குறைவானதாக இருக்கக் காரணமாயிற்றோ என்றும் யோசிக்கவேண்டியதாக உள்ளது. அதிகளவு மக்கள் நாடகத்திற்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றபோது, அந்த எதிர்பார்ப்பே வழமையான அரங்காடல் நாடங்களிற்கு இருக்கக்கூடிய சீரிய தன்மையிலிருந்து மெல்ல மெல்ல கீழிறங்கி வருகின்றதோ என்று கருத இடம் உண்டு. மனவெளி கலையாற்றுக்குழுவினர் இந்த விடயங்களில் சற்றே கவனம் செலுத்தவேண்டும் என்ற அக்கறை கலந்த வேண்டுதலை முன்வைக்கின்றேன்.
குறிப்பு
இக்கட்டுரை மே மாத தாய்வீடு இதழில் வெளியானது.
நன்றி
இங்கே பாவிக்கப்பட்டுள்ள புகைப்படம் ஓவியக் கலைஞர் சர்வேசன் திரவியம் அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்த அரங்காடல் புகைப்படத் தொகுப்பில் இருந்து இங்கே பாவிக்கப்படுகின்றது.
நன்றாக அலசி உள்ளீர்கள்
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
LikeLike