Amshan Kumarஈழத்தமிழர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்வது போல தமக்கான தனியான பண்பாட்டு வெளிப்பாடுகளையும் பேணவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு.  துரதிஸ்டவசமாக, பெரும்பாலும் நாம் எம்மை தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுடன் கலந்தே அடையாளப்படுத்தி வருகின்றோம்.  இது எமக்கான தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை அழித்துவிடுவதுடன், தேச உருவாக்கத்திலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது.  எளிய உதாரணமாக, புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற திருமண விழாக்கள் போன்ற சடங்குகளில் தமிழகத்து, வட இந்திய பாணியினது செல்வாக்குகள் அதிகரித்து வருவதை அவதானிக்கலாம்.

தவிர, புலம்பெயர் நாடுகளில் (நான் ரொரன்றோவில் வசிப்பதாக் ரொரன்றோவை மையப்படுத்தி இதனை இன்னமும் உறுதியாக்க் கூறமுடியும்) எம்மவர்கள் அதிகம் பார்க்கின்ற தொலைக்காட்சிகளாக விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி என்பன இருப்பதனால் அவற்றின் நிகழ்ச்சிகளின் ஊடாக எம் இடையே பண்பாட்டு ஊருவல் நிகழ்த்தப்படுகின்றது.  தற்போது இங்கிருக்கும் எம்மவர் தொலைக்காட்சிகளும் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளினைப் பிரதிசெய்தே தமது நிகழ்ச்சிகளை தயாரிப்பதையும் அதே பாணியிலான உச்சரிப்புகளுடன் அறிவிப்புகளை மேற்கொள்வதையும் கூட அவதானிக்கலாம்.  இவற்றிலிருந்து விடுபட்டு எமக்கான தேசிய கலை வடிவங்களை உருவாக்குவதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டி இருப்பதுடன் அதற்கு இடையூறாக இருக்கக்கூடிய எமக்கான வளங்களின் போதாமை, நேரப்பற்றாக்குறை மற்றும் தொழினுட்ப அறிவுக் குறைவு என்பனவற்றை நிவர்த்தி செய்யவும் போராட வேண்டியுள்ளது.

இந்த வகையில் தாய்வீடு பத்திரிகையும் சுயாதீன திரைப்பட மையமும் இணைந்து மே 6, 7 ம் திகதிகள் ரொரன்றோ GTA Square ல் ஒழுங்கு செய்திருந்த குறும்பட பயிற்சிப்பட்டறை மிக முக்கியமான முன்னெடுப்பு ஆகும்.  இப்பயிற்சிப் பட்டறையினை ஆவணப்பட இயக்குனரும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னைத் திரைப்படக்கல்லூரி ஆகிய கல்வியகங்களில் திரைப்படப் பேராசிரியாராகக் கடமையாற்றியவருமான அம்ஷன் குமார் நெறிப்படுத்தி இருந்தார்.  இவர், அண்மையில் ரொரன்றோவில் வெளியிடப்பட்ட “தவில் மேதை தெட்சிணாமூர்த்தி”, சுப்ரமணிய பாரதியார் உள்ளிட்ட ஆவணப்படங்களை இயக்கியவர்.  கி. ராஜநாராயணின் கிடை என்கிற சிறுகதையை “ஒருத்தி” என்கிற பெயரில் திரைப்படம் ஆக்கியவர்.  அத்துடன் சினிமா ரசனை, மாற்றுப்படமும் மாற்றுச் சிந்தனைகளும், பேசும் பொற்சித்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்பான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.  சலனம் என்கிற திரைப்படம் தொடர்பான இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  இந்த வகையில்   இந்தக் குறும்படப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன்.  குறும்படங்களைத் தயாரிப்பதிலோ இயக்குவதிலோ ஆர்வம் இருக்காதபோதும், குறும்படம் பற்றியும், திரைமொழி பற்றியும் அறிவதில் ஆர்வம் இருந்த்து.  இந்த ஆர்வத்துடன் இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையிலும் கலந்துகொண்டேன்.

கலந்துகொண்ட அனைவருக்கும் குறும்பட உருவாக்கம் தொடர்பான அடிப்படை விளக்கங்களைக் கொண்ட சிறு கையேடு ஒன்று வழங்கப்பட்டது.  அத்துடன், அசோகமித்திரனின் ரிக்‌ஷா கதையின் பிரதியும் வழங்கப்பட்டது.  இரண்டாம் நாள் முடிவின்போது குறும்படம் ஒன்று வகுப்பில் வைத்தே தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படும் என்று முன்னர் அறிவித்திருந்தனர்.  ரிக்‌ஷா கதையில் இருந்தே குறும்படம் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.  திரைப்படங்கள், நாடகங்கள், குறும்படங்கள் போன்றவற்றில் பல்வேறு பங்களிப்புகளை வழங்கியோரும், இவற்றின் தொடர்ச்சியான ரசிகர்களாகவும் கிட்டத்தட்ட தலா 30 பேர் ஒவ்வொரு நாளும் கலந்துகொண்டனர்.  அவர்கள் சிறு சிறு குழுவினராக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு குறும்படத்தினைத் தயாரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

முதல் நாள், கமராவின் இயக்கம் பற்றிய அடிப்படையான சில விடயங்களும், சொற்பிரயோகங்களுக்கான எளிமையான விளக்கங்களும் வழங்கப்பட்டன.  கமராவின் இயக்கத்துடன் கதை சொல்லலை தொடர்புபடுத்திப் பார்ப்பது பற்றியும் அம்ஷன் குமார் கூறினார்.  அத்துடன் சத்யஜித்ரேயின் சாருலதா திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சியும் திரையிடப்பட்டது.  ஒளிப்படத்தின் தரம் சுமாரானதாக இருந்தபோதும், அம்ஷன் குமார் கூறிய விளக்கத்தைக் கேட்டபின்னர் அந்தக் காட்சியைப் பார்த்தது எம்மைச் சற்றே தெளிவாக்கியது எனலாம்.  இத்துடன் பட்டறையின் முதல் நாள் நிறைவுற்றது.  ஒவ்வொரு குழுவினரையும் திரைக்கதையை உருவாக்கி அடுத்தநாள் வரும்படி அம்ஷன் குமார் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இரண்டாம் நாள் அ. முத்துலிங்கம் எழுதிய பவித்ரா என்ற சிறுகதையை அதேபெயரில்  விக்னேஸ்வரன் விஜயன் என்பவர் இயக்கிய  குறுந்திரைப்படம் திரையிடப்பட்ட்து.  அதைத் தொடர்ந்து, ரிக்‌ஷா கதையை எவ்விதம் திரைக்கதையாக்கலாம் என்று சிறிய கலந்துரையாடல் ஒன்றும் நடந்தது.  அம்ஷன்குமார் தொடர்ச்சியாக தனது உள்ளீடுகளைத் தந்துகொண்டே இருந்தார்.  அதன்பின்னர் அந்த இடத்தில் வைத்தே ஒவ்வொரு குழுவினரும் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்று முடிவுசெய்யப்பட்டது.  கனடாவில் உருவான பல்வேறு குறும்படங்களை ஒளிப்பதிவு செய்திருந்த “சினி மோஷன்” ரூபன் அவர்கள் ஒளிப்பதிவையும், படத்தொகுப்பினையும் செய்ததுடன், தன் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டு நெறிப்படுத்தினார்.  இரண்டாம்நாள் நேரடி அனுபவத்தின் மூலம் தொடர்ச்சியை (continuity) எப்படிப் பேணுவது என்பதுவும், ஒரே திரைக்குள் எந்தெந்த கதாபாத்திரங்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும், close-up, long shot காட்சிகளின் தேவை என்பன பற்றியெல்லாம் நுட்பமாக அறியமுடிந்தது.

படைப்பொன்றினை குறும்படமாக உருவாக்கும்போது அதில் படைப்பாளி எடுக்கக்கூடிய சுதந்திரம் பற்றி சில கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார் அம்ஷன்குமார்.  முன்னதாக அவர் கி.ராஜநாராயணனின் கிடை என்ற சிறுகதையை ஒருத்தி என்றபெயரில் திரைப்படமாக்கும்போது அந்தச் சிறுகதைக்கு உள்ளபடியே திரைவடிவம் கொடுக்கவில்லை என்பதை ஒரு குற்றச்சாற்றாக சிலர் சொல்வது உண்டு.  ஆனால் அனேக இலக்கியங்கள் திரைவடிவில் வரும்போது வெவ்வேறு மாற்றங்களுடன் தான் உருவாகி உள்ளன என்பதே உண்மை.  உமாசந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவலை மகேந்திரன் அதே பெயரில் திரைப்படம் ஆக்கினார்.  ஆனால் அந்த நாவலை அரைவாசிக்கு மேலே தான் வாசிக்கவில்லை என்றும், நாவலில் புலியால் தாக்கப்பட்டு காளி தன் கையை இழந்தவுடன் நாவலினை மேற்கொண்டு வாசிக்காமல் அடுத்து என்ன நடந்திருக்கும் என்று தானே திரைப்படத்துக்கான கதையை உருவாக்கினேன் என்று மகேந்திரன் நானும் சினிமாவும் என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார்.  இலக்கியத்தினை திரைவடிவில் கொண்டு வரும்போது, மாற்றங்களைச் செய்யும் உரிமை திரைக்கதையை அல்லது திரைப்படத்துக்கான கதையை உருவாக்குபவரிடம் உண்டு.  ஆனால் அவர் செய்யும் மாற்றங்களிற்கான அறம் சார்ந்த பொறுப்பினை அவரே ஏற்கவேண்டும்!

இக்குறும்படப் பயிற்சிப் பட்டறையை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவரான தாய்வீடு பத்திரிகை ஆசிரியரோடு இது பற்றிப் பேசியபோது தொடர்ச்சியாக திரைப்படம் தொடர்பான கல்விப் புலம் சார்ந்தோர், தொழினுட்பவியலாளர்களைக் கொண்டு இதே மாதிரியான பயிற்சிப்பட்டறைகளை ஒருங்கிணைக்க உள்ளதாகக் கூறினார்.  சர்க்கரைப் பந்தலிற் தேன்மழை பொழிந்தது போன்றது அந்தச் செய்தி.  இம்முறை அம்ஷன் குமார் அவர்களின் நேரப் பற்றாக்குறை காரணமாக இரண்டு மாலைகள் மாத்திரமே இந்தப் பட்டறை இடம்பெற்றது.  இதனை முழுநாள் நிகழ்வாக ஒழுங்கமைக்கின்றபோது இன்னும் பயனுள்ளதாக அமையும்.  இனிவரும் காலங்கள் அவ்விதமே அமையும் என நம்புகின்றேன்.

 


குறிப்பு

1. இக்கட்டுரை ஜூன் மாத தாய்வீடு பத்திரிகையில் வெளியானது.

2.  இக்கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போன்ற இரண்டாவது பயிற்சிப்பட்டறையும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.  அதனை சொர்ணவேல் அவர்கள் நெறிப்படுத்துகின்றார்.  இம்முறை திரைக் கதைப் பயிற்சி பற்றியதாக பட்டறை அமையும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது!

சொர்ணவேல்