மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் கொண்டாட்டம்
மேற்கிந்தியத் தீவுகளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா என்று சாம் விஜய் எழுதிய கட்டுரை ஒன்று தை மாத “காக்கைச் சிறகினிலே” இதழில் வெளியாகி இருக்கின்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க யுனெஸ்கோ ஒருங்கிணைப்பாளரும் பிரான்சில் உள்ள “நான் இந்தியாவை காதலிக்கின்றேன்” அமைப்பின் தலைவருமான சாம் விஜய் அவர்கள் “தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் அடிச்சுவட்டில் அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று, அவர் ஆராய்ச்சியின் தொடர்ச்சியை தன்னார்வத்துடன் செய்துகொண்டிருப்பவர்” என்று காக்கைச் சிறகினிலே இதழ் மூலம் அறியமுடிகின்றது.
1848ம் ஆண்டு இயற்றப்பட்ட அடிமைகள் ஒழிப்புச் சட்டத்தினால் அது வரை அடிமையர்களாக வேலைசெய்து வந்த ஆபிரிக்க இனமக்கள் விடுதலைபெறுகின்றார்கள். அதன் பின் அவர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்கு வேலை தேடிச் செல்ல, 1854 முதல் 1883 வரை இந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக பெருமளவு தமிழர்கள் குவாதலுப், மர்த்தினிக் ஆகிய தீவுகளிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். தமது கடுமமையன உழைப்பின் மூலமாக பிரான்சியர்களின் நன்மதிப்பைப் பெற்ற இவர்கள் சில சலுகைகளையும் பெறுகின்றனர். அவற்றில் தமிழர் திருநாளாகிய பொங்கலை அவர்கள் வாழ்ந்த கரும்புத் தோட்டங்களில் கொண்டாட அனுமதி பெற்றமையும், அதற்காக 4 நாட்கள் விடுமுறை அளிக்க பிரான்சு நாடு தொழிலாளர் சட்டம் இயற்றியமையும் உள்ளடங்கும். ஏறத்தாழ இரண்டு தலைமுறைகளின் பின்னர் வழக்கொழிந்த இந்தப் பொங்கல் கொண்டாடும் முறைமை புத்தாக்கம் பெற்று கடந்த மூன்றாண்டுகளாக மீண்டும் பொங்கல் கொண்டாடப்படுவதாகவும் சாம் விஜய் எழுதிய இக்கட்டுரை ஊடாக அறியமுடிகின்றது.
இணையத்தில் தேடியபோது, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தனிநாயகம் அடிகள் வாசித்த Tamil Migrations to Guadelope & Martinique, 1853 to 1883 என்ற கட்டுரையையும் வாசிக்க முடிந்தது. (http://tamilnation.co/diaspora/guadeloupe.htm) அக்கட்டுரையிலும் விபரமாக குவார்தலூப், மர்த்தினிக் தீவுகளில் குடியேற்றப்பட்ட தமிழர்கள் பற்றி அறியமுடிகின்றது. தனிநாயகம் அடிகள் இந்த ஆய்வுக் கட்டுரையில் மர்த்தினிக், குவாதலூப் தீவுகளில் முறையே வாழ்ந்த 15,000 , 20,00 இந்திய வழித் தோன்றல்களில் (அவர்களில் பெரும்பாலானவர்களின் முன்னைய தலைமுறையினர் தமிழர்களாக இருந்தவர்கள்) 17 பேர் மாத்திரமே தமிழ் பேசக்கூடியவர்களாக இருந்ததாகவும், அவர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் அவர்களுல் அல்பேர்ட் மாரிமுத்து என்பவர் மிகச் சரளமாக தமிழில் உரையாடக் கூடியவராக இருந்ததாகவும் பதிவுசெய்கின்றார். ஆயினும், 2015 ல் சாம் விஜய் தன் கட்டுரையில் அங்கு தற்போது வாழும் மர்செல் சூலினா முத்துசாமி என்ற 86 வயதானவர் மாத்திரமே தமிழ் பேசக்கூடியவராக எஞ்சியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள், கல்விப்புலம் சார்ந்தோர் ஒரு வகை மாதிரி
(case study) ஆக இவ் விடயத்தை எடுத்து ஆராயலாம்.
000
தவில்மேதை தெட்சிணாமூர்த்தி ஆவணப்பட வெளியீடு
தவில் மேதை லய ஞான குபேர பூபதி தெட்சிணாமூர்த்தி அவர்கள் பற்றிய ஆவணப்பட வெளியீடு ரொரன்றோவில் மே 9ம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் “தெட்சிணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம்” என்கிற தெட்சிணாமூர்த்தி பற்றிய நினைவு மலர் ஒன்றும், தெட்சிணாமூர்த்தி பற்றிய ஆவணப்படமும், 26 மணித்தியாலங்கள் அளவுக்கு ஒலிக்கக் கூடிய தெட்சிணாமூர்த்தி அவர்களின் தவில் இசைத் தொகுப்பும் வெளியிடப்பட்டன. இந்த இசைத் தொகுப்பு வெளிவருவதற்கு முன்னர் தெட்சிணாமூர்த்தி அவர்களின் இசைத்தொகுப்புகள் முழுமையாகத் தொகுக்கப்படாமல் இருந்தனவென்றும், அவரது குடும்பத்தினரிடம் கூட அவை முழுமையாக இருக்கவில்லை என்றும் அறிய முடிகின்றது. இந்த நிலையில் இந்த ஆவணப்படம் ஒரு முக்கியமான முயற்சி. தவிர இத்துடன் வெளியிடப்பட்ட நினைவுமலரில் தெட்சிணாமூர்த்தி அவர்கள் பற்றி வெளியான பல்வேறு கட்டுரைகள், மேற்கோள்கள் என்பவற்றுடன் நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாச்சலம் அவர்களின் மறைவின்போது தெட்சிணாமூர்த்தி அவர்கள் எழுதி “தேனருவி” என்ற சஞ்சிகையில் 1964 மேயில் வெளியான அஞ்சலிக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. அத்துடன், கலாநிதி வ. மகேஸ்வரன் எழுதி, கொழும்புத் தமிழ்ச்சங்கத்தால் 2007ம் ஆண்டு வெளியிடப்பட்ட “தவில் மேதை தெட்சிணாமூர்த்தி” என்கிற சிறுநூலும் இத்தொகுப்பில் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
தெட்சிணாமூர்த்தி அவர்கள் நான் பிறப்பதற்கு முன்னரே மறைந்துவிட்டவர். நான் அவரைப் பற்றி பிறர் சொல்ல மட்டுமே கேட்டிருக்கின்றேன். மிகப்பெரும் இசை ரசிகன் என்று சொல்லமுடியாவிட்டாலும், நாம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் அப்போது நிலவிய போர்க்காலச் சூழலால் மின்சாரம் தடைப்பட்டிருக்க, கோவில்களில் நிகழும் நாதஸ்வர, வில்லிசைக் கச்சேரிகளும் பட்டிமன்றங்களும், சொற்பொழிவுகளும், மெல்லிசைக் கச்சேரிகளுமே எமக்குப் பெரும் பொழுதுபோக்காக திகழ்ந்தன. ஆனால் என் நண்பன் ஒருவன் பெரும் இசை ரசிகன். இசைக்கலைஞர்கள் பற்றி தேடித்தேடி விசாரித்துப் பலரிடம் இருந்தும் பல தகவல்களைச் சேகரித்துக் கொள்வான். தெட்சிணாமூர்த்தி அவர்களின் ஆவணப்பட வெளியீடு பற்றித் தெரிவித்த போது சுவையான தகவல் ஒன்றைக் கூறினான்
சிறுவயதில் தெட்சணாமூர்த்தி சடையாளிப் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு வீடு வந்து கொண்டிருந்த போது, சிவன் கோவிலுக்கு முன்னால் உள்ள கேணியில் குளிக்க சென்று அதிலே மூழ்கிவிட்டாராம். அப்போது அவர் தத்தளித்துக் கொண்டிருந்த போது அமரராகிவிட்ட கோவிலடியைச் சேர்ந்த து.கார்த்திகேசு என்பவர் கேணியிலே குதித்து அவரை மீட்டு வந்தாராம். இதை நினைவுகூரும் விதமாக தெட்சணாமூர்த்தி எந்த வெளிநாடு சென்றாலும் தாயகம் திரும்பியவுடன் காரைநகர் வந்து கார்த்திகேசுவைச் சந்தித்து நன்றி கூறத்தவறுவதேயில்லை என கார்த்திகேசு அவர்களே நேரடியாக என் நண்பனிடம் பகிர்ந்து கொண்டாராம்.
தெட்சிணாமூர்த்தி அவர்களின் ஆவணப்பட வெளியீட்டிலும் ஒரு சுவையான நிகழ்வை அவதானிக்க முடிந்தது. தெட்சிணாமூர்த்தி அவர்கள் இணுவிலில் பிறந்திருந்தாலும், சிறுவயதிலேயே அளவெட்டியில் சென்று வசித்திருக்கின்றார். இதனால் அவரை அளவெட்டி தெட்சிணாமூர்த்தி என்று அழைப்பதா அல்லது இணுவில் தெட்சிணாமூர்த்தி அழைப்பதா என்று இரு தரப்பு வேண்டுதலால் குழப்பம் நேர்ந்ததாகவும், எனவே பொதுவாக, யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி என்று இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டதாகவும் அறிய முடிந்தது. ரொரன்றோவில் நிகழ்ந்த வெளியீட்டு விழாவில் பேசிய ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார் அவர்கள், தமிழகத்தில் தான் தெட்சிணாமூர்த்தி பற்றிய தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றபோது “தஞ்சாவூர் தெட்சிணாமூர்த்தி” என்று பலர் அவரை தமிழகத்தில் குறிப்பிட்டதாகப் பகிர்ந்துகொண்டார். உண்மையில் ஒரு கலைஞனாக தெட்சிணாமூர்த்தி அவர்கள் பெற்ற உயர்வு என்றே இதை உணர்கின்றேன்.
இந்த ஆவணப்பட உருவாக்கத்திற்காக “தவில்மேதை தெட்சிணாமூர்த்தி ஃபவுண்டேஷன்” என்கிற அமைப்பினை உருவாக்கி, பலரை உள்வாங்கி அதனூடாக இவ்வெளியீடு நடைபெற்று இருக்கின்றது. இது நல்லதோர் முன் உதாரணம். எமது மண்ணின் ஏனைய கலைஞர்களை ஆவணப்படுத்தவும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஊர்கூடித் தேர் இழுத்தால் வந்து சேரும்!
000
ஈழத்துத் தமிழ் இதழ்கள்
இலங்கைக்கு வெளியே ஈழத்தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற பெருநகரமான ரொரன்றோவில், தமிழ் புத்தக்க் கடை என்று ஒன்றே ஒன்றுதான் இருக்கின்றது என்பது உவப்பான செய்தி அல்ல. இதனால் ஈழத்தில் இருந்து வெளிவரும் நூல்களையும், இதழ்களையும் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமம் நிகழுகின்றது. தமிழகத்தில் இருந்து வெளிவரும் சிற்றிதழ்களைக் கூட இங்கே பெற முடியாத நிலையே உள்ளது. எனக்குத் தெரிந்து ஈழத்தில் இருந்து தற்போது கலைமுகம், கலைக்கேசரி, ஜீவநதி, மறுகா, மகுடம், அகவிழி, ஞானம், நந்தலாலா, கொழுந்து, மாருதம், கலிங்கம், சமகாலம் ஆகிய இதழ்கள் வெளிவருவதாக அறிய முடிகின்றது. ஆனால் ரொரன்றோவில் இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான சரியான வலையமைப்பு இன்னும் உருவாகவில்லை என்பது வருத்தம் தான்.
இன்று புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக இந்த இதழ்களை வாங்கி வாசிப்பதும், ஆயுள் சந்தா செலுத்துவதும், புலம்பெயர் இதழ்களிலும், ஈழத்தில் இருந்து வெளிவரும் இதழ்களிலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் எழுத்தாளர்களும், ஈழத்தில் வாழும் எழுத்தாளர்களும் தம் ஆக்கங்களை தொடர்ச்சியாக எழுதி வருவதும் நல்லதோர் கருத்துப் பரிமாற்றமும், உரையாடலும் நிகழ உதவும். அத்துடன் தொடர்ச்சியாக இந்த இதழ்கள் வெளியாவதையும் உறுதிப்படுத்தும். இதனைப் பிரக்ஞை பூர்வமாக எழுத்தாளர்களும் வாசகர்களும் பின்பற்றவேண்டும் என்பது என் வேண்டுதல்.
எம்மவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தமிழகத்து இதழ்களில் தம் ஆக்கங்கள் வெளியாவதே பெரும் தகுதி என்கிற மனப்பான்மை இருப்பது வருத்தத்திற்குரியது. அண்மையில் மதிப்பிற்குரிய ஒரு எழுத்தாளரிடம் எனது மேற்படிக் கருத்தினைப் பகிர்ந்து, நாம் ஈழத்தில் இருந்து வெளிவரும் இதழ்களில் அதிகம் எழுதவேண்டும் என்று குறிப்பிட்டதுடன் இத்தனை இதழ்கள் அங்கிருந்து வெளியாகின்றன என்று அவற்றின் பெயரினையும் குறிப்பிட்டேன். “அதை எல்லாம் யார் படிக்கப்போகின்றார்கள்?” என்று அவர் கேட்டார்! இது ஒருவித அறியாமை என்றே கூறவேண்டும். புலம்பெயர் தமிழர்களிற்கும் ஈழத்தில் வாழ்பவர்களுக்கும் இடையில் பண்பாட்டு, கருத்து நிலை மற்றும் சிந்தனைப் பரிமாற்றம் ஒன்றை உருவாக்கவேண்டிய தேவை எப்போதையையும் விட அதிகரித்துள்ள இன்றைய சூழலில் இந்த முயற்சி ஆக்க பூர்வமான ஒன்றாக அமையும் என்பதை உரத்துக் கூறவிரும்புகின்றேன்!
குறிப்பு :
1. இக்கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் நான் எழுதும் “சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற தொடர் பத்தியாக ஜூன், 2015 தாய்வீடு பத்திரிகையில் வெளியானது.
2. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் தவில்மேதை தெட்சிணாமூர்த்தி பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டவர் நண்பன் விசாகன். அவருக்கும் நன்றி.
Leave a Reply