தேவமுகுந்தனின் “கண்ணீரினூடே தெரியும் வீதி”: எங்களில் ஒருவனின் கதை

௶எவதேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்கிற சிறுகதைத்தொகுதி அண்மைக்காலத்தில் ஈழத்தில் இருந்து அல்லது ஈழத்தமிழர்களால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதிகளில் முக்கியமானதொன்றாகும்.  இச்சிறுகதைத் தொகுதியில் 2008 ஏப்ரல் முதல் 2011 யூலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட 9 கதைகளும், தேவமுகுந்தன் க.பொ.த உயர்தரப்ப் பரீட்சை எழுதிவிட்டு இருந்த காலப்பகுதிகளில், 1992ல் எழுதிய மரநாய்கள் என்கிற கதையுமாக மொத்தம் 10 கதைகளைக் கொண்டதாக அமைகின்றது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளியான அதே காலப்பகுதியிலேயே சிறுகதைத் தொகுப்புகளும், நாவல்களும், குறுநாவல்களுமாக பல்வேறு பிரதிகள் வெளியாகி இருக்கின்றன.  அவ்வாறு வெளியானவை பல்வேறு விதமாக அடையாளப்படுத்தப்பட்டும், அந்த அடையாளங்களுக்காகவே ஆதரிக்கப்பட்டும், நிராகரிக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருக்கின்றன.  ஆயினும், இவற்றில் இருந்து வித்தியாசமாக தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதியானது தனித்துவமானதாகத் தெரிகின்றது.  அவ்விதம் இந்த நூலை தனித்துவமாக்குவது யாது? இவரது கதைகளின் நாயகன் நம் எல்லாருக்கும் பரிச்சயமானவன்.  நமது சாயலோ அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் சாயலோ நிறைந்தவன்.  நம் சமகாலத்தவன். குறிப்பாக பெரும்பாலான கதைகள் தமிழர் தாயகத்தில் பிறந்த ஒருவர், தான் பிறந்த இடத்தைவிட்டு வேலைதேடியோ அல்லது உயர்கல்விக்காகவோ கொழும்புக்கோ அல்லது இதர பெரும்பான்மையினர் வாழும் இடங்களுக்கோ இடம்பெயரும்போது அங்கே தன்னைத் தக்கவைத்துக்கொள்வதில் எதிர்கொள்கின்ற இடர்பாடுகளையும் பாதுகாப்பின்மையையும் பேசுகின்றன.  குறிப்பாக இவன் எந்த அரசியல் சார்பும் இல்லாதவன்.  தனது அரசியல் பிரக்ஞையை உரத்த குரலில் பேசாதவன்.  சமூகத்தின் ஒரு அங்கத்தவனாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அவன் எதிவினையாற்றுகின்றான், கோபங்கொள்ளுகின்றான், அறச்சீற்றம் கொள்ளுக்கின்றான்.  இவையாவும் அவன் நாளாந்த வாழ்வில் தன் லௌதீக தேவைகளைப் பூர்த்திசெய்வதில் எதிர்கொள்ளுகின்ற தடைகளின் நிமித்தம் எழுவனவே அன்றி அவனுக்குரிய அரசியலை முன்வைத்தவை அல்ல.

முதலாவது கதையான கண்ணீரினூடே தெரியும் வீதி போர்க்காலத்தில் கொழும்பில் கல்விகற்பதற்கத் தங்கியிருப்பவன் ஒருவன் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும், அவன் அகவுணார்வுகளையும் பதிவுசெய்கின்றது.  யுத்தம் எப்போதும் எல்லாரையும் சந்தேகிக்கவைக்கின்றது.  அது இக்கதையில் வரும் கதாபாத்திரத்தின் மிக சாதாரண நடவடிக்கைகளைக் கூட கட்டுப்படுத்துகின்றது.

“எனக்கு கிளிநொச்சியிலிருந்து அம்மாவின் கடிதங்கள் வந்ததாலேயே, நானும் என்னுடன் கூட அறையிலிருக்கும் நிக்ஸனும் இரண்டு அறைகளைக் காலி பண்ணவேண்டியதாயிற்று.  அங்கிருந்த வரும் கடித உறைகள் கசங்கிய கொப்பிப் பேப்பர்களில் எழுதப்பட்ட கடிதங்களையும், சிலவேளைகளில் காளிகோவில் ஐயர் மந்திரித்துக் கொடுக்கும் திருநீற்றையும், நூலையும் அன்றி, வெடிகுண்டுகளைக் காவி வருவதாகவே இங்கிருப்பவர்கள் நம்புகிறார்கள்.”

கனடாவில் இருந்து அப்பா அனுப்பும் காசை அம்மாவுக்குக் கிளிநொச்சிக்கு அனுப்புவதுகூட கதைசொல்லிக்கு சிக்கல் நிறைந்ததாக இருக்கின்றது.

“வங்கிப் படிவத்தை நிரப்பி பணத்துடன் “கவுண்டரில்” கொடுக்கும்போது  கிளிநொச்சிக் கிளை என்பதைப் வாசித்துவிட்டு “கவுண்டரில்” இருக்கும் கிளார்க்கின் அதட்டல்கள் என்னைச் சிறுமைப்படுத்தும் ………. காசையும் படிவத்தையும் கொடுத்த என்னிடம் நடக்கும் விசாரணைகள் மாதிரி வங்கியில் கள்ளக் காசோலை கொடுத்துப் பிடிபட்டவனிடங்கூட நடந்திராது என்று தோன்றும்”

இப்படியாகப் போர்ச்சூழல் அவன் நாளாந்த வாழ்வைப் பாதிக்கின்றது.  அவனைத் திணறடிக்கின்றது.  ஆனால் கதைசொல்லிக்கு எந்த அரசியல் நிலைப்பாடும் இல்லை.  இந்தபோர்ச்சூழலைத் தாண்டி தன் லௌதீகவாழ்வை கொண்டுநடத்தவேண்டும் என்பதே அவன் எத்தனமாக இருக்கின்றது.  அன்றைய தினம் அவன் இருக்கின்ற வீட்டிற்கு முன்னால் உள்ள வீதியில் இரண்டு வீடுகளில் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டு, இராணுவ உடை தரித்த இரண்டு இளைஞர்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.  அறையின் சொந்தக்காரர் குமுது அங்கிள் சடலங்கள் செஞ்சிலுவைச்சங்கம் மூலம் மல்லாவியில் இருந்து கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று கூறுகிறார்.  மறுநாள் அதிகாலை கனடாவில் இருக்கும் அவன் தந்தை “ராத்திரி இவங்கட ரெலிபோன் நியூசில கேட்டன், கோப்பாயில் நகுலன் செத்திட்டானாம்” என்று சொல்லி இவன் தம்பியின் மரணத்தை தெரிவிக்கின்றார்.

“நகுலனின் உடல் அனாதையாய் ஆசுப்பத்திரிச் சவக்காலையில் இப்ப கிடக்கும்,  உடல் இல்லாமல் கிளிநொச்சியில் செத்தவீடு நடக்கும்.

நாளைக்கு வீட்டுக்கார குமுது அங்கிளோட வீட்டுகு பக்கத்திலை நடக்கப்போற செத்தவீடுகளுக்குப் போகவேண்டும்”

என்றவாறு கதையை நிறைவுசெய்கின்றார் தேவமுகுந்தன்.  இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் சிறந்த கதையாக இக்கதையையே கூறுவேன்.  போர்க்காலங்களில் இருந்த கொழும்புவாழ்க்கை அப்படியே பதிவு செய்யப்படுவதுடன், ஒரு தமிழராக ஒருவர் எவ்விதம் உணர்வார் என்பதை இக்கதையில் பதிவுசெய்கின்றார்.

இடைவெளி என்கிற கதை இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நிலவிய சமாதானகாலம் முறிவடைந்து, குண்டுவெடிப்புகள் மீள ஆரம்பித்திருந்த காலப்பகுதியில், தலைநகரில் பெரும்பான்மை இனத்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற அலுவலகம் ஒன்றில் பணியாற்றுகின்ற தமிழ் இளைஞன் ஒருவன் எதிர்கொள்ளுகின்ற சிக்கல்களை மையமாகவைத்து எழுதப்பட்டுள்ளது.  யுத்தம் எப்போதும் அடுத்தவர் மீதான நம்பிக்கையின்மையை உருவாக்குகின்றது.  அதுவே இனவிடுதலைப் போராகும்போது தவிர்க்கவே முயலாமல் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும், ஒருமைப்பாடும் சிதைவடைந்து விடுகின்றது.

இக்கதையில் வருகின்ற ஜெகனுக்கு தான் அலுவலகத்திற்கு சமுகமளிக்காத நாட்களில் கொழும்பில் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவதற்கான நிகழ்தகவு மிக உயர்வாக இருப்பதற்கான காரணம் என்னவென்பது புரியவேயில்லை.  எழுமானமாய் நடக்கும் இந்நிகழ்வுகள் பற்றி ஆரம்பத்தில் பகிடியாக கதைத்த சிங்களாவர்கள் மெல்ல மெல்ல கோபப்படவும், சந்தேகம் கொள்ளவும் தொடங்குகின்றனர்.  லண்டனில் ஒரே அறையில் இரண்டுவருடம் தங்கியிருந்து நெருக்கமான நட்புக்கொண்டிருந்த விக்கிரம என்பவன், ஜெகன் லீவில் நிற்கும் நாட்களில் தனது பிள்ளைகளை பள்ளிக்கூடம் செல்லாது நிறுத்தவேண்டும் என்கிறான்.  குறுந்தாடி வளர்த்து, பொதுவுடமை பேசித்திரிந்த, புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான காலத்தில் ஏ9 பாதையூடாகச் செல்கையில் போரினால் அழிவுண்ட தமிழர் கிராமங்களைப் பார்த்து கண்கலங்கிய பிரேமசிறி என்பவன் ஜெகன் ஏன் அலுவலகத்திற்கு வரவில்லை என்பதை பொலிஸ்காரரின் தொனியுடன் கேள்வி கேட்கிறான்.  ஏழு வருடங்களாக தொடர்ந்து அலுவலகத்தில் ஒன்றாக கன்ரீனுக்குப் போய் தேனீரும் “அலப்ப”வும் உண்ட, ஜெகனுடன் நெருங்கிப் பழகியதாலோ அல்லது பெரிய மீசை வைத்திருந்ததாலோ அலுவலகத்தில் “தெமிளா” என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஜெயந்த என்பவன் கூட, இவன் வழமைபோல கன்ரீனுக்குப் போக அழைக்கின்றபோது “வேறு வேலையிருக்கின்றது” என்று சொல்லி மறுதலிக்கின்றான்.  இந்த மூன்று பாத்திரங்களும் ஜெகனுடன் நெருக்கமாக இருந்தவர்கள்.  ஆனால் கொழும்பில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்ற நாட்கள் சிலவற்றில் ஜெகனும் அலுவலகத்துக்கு வராமல் இருந்தான் என்பதன் காரணமாக அவர்கள் தமிழனான ஜெகனை சந்தேகிக்கத் தொடங்குகின்றனர்.

ஆனால் அந்தக் குண்டுவெடிப்புகளுக்கு முன்னரும் கூட நிலைமை சுமுகமாக அலுவலகத்தில் இருந்தது என்றோ, தமிழருக்கான சம உரிமை நிலவியது என்றோ சொல்லமுடியாது.  நலன்புரிச்சங்க பொதுக்கூட்டத்தில் கன்ரீனில் பத்திரிகை வாங்கும்போது ஒரு தமிழ்ப் பத்திரிகையேனும் வாங்கும்படி கேட்டுக்கொள்ளுகின்றான்.  3 சிங்களப்பத்திரிகை வாங்குகின்றனர், ஊழியர்களில் 30 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் தமிழர்களாக இருக்கின்றனர்; பத்திரிகைக்காக பணம் அனைத்து ஊழியர்களிடம் இருந்துமே அறவிடப்படுகின்றது; எனவே தமிழ்ப்பத்திரிகையும் வாங்கவேண்டும் என்பதுதானே முறை என்பது ஜெகன் தரப்பு நியாயம்.  ஆயினும் “தமிழர்களுக்கு சிங்களமும், ஆங்கிலமும் தெரியும்,  எனவே தமிழ்ப்பத்திரிகை வாங்குவது வீண் செலவு” என்று கூறி தட்டிக்கழிக்கப்படுகின்றது.  அதன்பின்னர் ஜெகன் ஏனைய தமிழர்களுடன் சேர்ந்து, தமிழ்ப்பத்திரிகை வாங்காவிட்டால் தாம் பத்திரிகை வாங்க பணம் தரமாட்டோம் என்று போராடி, பிரேமசிறி, ஜெயந்த என்ற அவன் நண்பர்களும் ஆதரவு தர தமிழ்ப்பத்திரிகை வாங்க சம்மதித்து  அரசின் ஊதுகுழலாய் இருக்கும் பத்திரிகையொன்று வாங்கப்படுகின்றது.  அவ்வாறு சம்மதம் தெரிவிக்கப்படும்போது கூட்டத்தில் பின்னாலிருந்து “ஜெகன் பயங்கரவாதி” என்ற கூச்சல் எழுப்பப்படுகின்றது.  அதுபோல சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது இரண்டு நாள் சம்பளத்தை வழங்குவது என்று தொழிற்சங்கக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு நிதி திரட்டப்படுகின்றது.  அவ்வாறு திரட்டிய நிதி முழுவதையும் சிங்களப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் வழங்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்து, அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு போன்ற தமிழ்பேசுவோர் வாழும் பகுதிகளில் பாதிக்கப்படவர்களுக்கும் நிதி பகிரப்படவேண்டும் என ஜெகன் வலியுறுத்துகின்றான்.  ஆனால் அதற்கு சம்மதம் கிட்டவில்லை.  அவ்வாறானால் சுனாமி பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியை தமது சம்பளத்தில் இருந்து கழிக்கவேண்டாம் என்று தமிழர்களின் கையொப்பங்களைப் பெற்று அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கின்றான்.  இதை அறிந்து ஒருவர் “நீ முழு இனவாதி” என்று திட்டுகின்றார்.  தமிழர் ஒருவர் பயங்கரவாதியாகவோ அல்லது இனவாதியாகவோ ஆவதற்கு தனது உரிமைக்காக குரலெழுப்புவதே போதுமானதாயிருக்கின்றது.

சிவா என்கிற கதை “சந்தேகத்தின் பேரில்” கைதாகி ஆறு ஆண்டுகளின் பின்னர் விடுதலையாகிவருகின்ற ஒருவனின் கதை.  முன்னர் கூறியிருந்ததுபோல, எவரையும் நம்பாத, சக மனிதரை சந்தேகித்தே பார்க்கின்ற ஒரு வழக்கம் நிலவிய போர்க்காலச்சூழலே இக்கதையிலும் பதிவாகின்றது.  சிவா பல்கலைக்கழகத்தில் அதிகம் சிங்கள நண்பர்களையே கொண்டிருக்கின்றான்.  சிங்களப் பெண்ணொருத்தியைக் காதலிக்கின்றான்.  ஒருநாள் தனது பாடசாலைக்கால நண்பன் ஒருவனை வழியின் கண்டு சைக்கிளில் ஏற்றிச்செல்லுகின்ற போது வழியில் சோதனைக்காக மறிக்கப்பட்டபோது இவன் ஏற்றிச்சென்ற நண்பனின் பையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புத்தகம் இருந்ததாகக் கூறி இருவரும் கைதுசெய்யப்படுகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக சிவா கல்விகற்ற பல்கலைக்கழக வளாகத்துள் பொலீசார் நுழைகின்றனர்.  ஒவ்வொரு மாணவரது அடையாள அட்டையையும் பார்த்து தமிழர்கள் அனைவரும் விசாரணைக்கென்று கைதுசெய்து கொண்டுசெல்லப்படுகின்றனர்.  இக் கைது நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கும் அதே இடத்தில் இருக்கும் “செம்மாணவர் அமைப்பின்” தலைவர் கித்சிறி என்பவன் தொலைக்காட்சியில் ஜெயசூர்யாவும் களுவிதாரணவும் வெளுத்துக்கட்டுவதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றான்.  கைது செய்யப்பட்ட ஏனையவர்கள் இறுதிப்பரீட்சைக்கு முதல்நாள் விடுதலை செய்யப்படுகின்றனர்.  சிவா ஆறு ஆண்டுகளின் பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்படுகின்றான்.  ஆனாலும் அவனைக்காணும் பழைய நண்பர்கள் அவனுடன் கதைப்பதை தவிர்க்கின்றனர்.  தான் நாட்டைவிட்டு வெளியேறி அவுஸ்திரேலியா செல்லமுயல்வதாகக் கூறி சிவா விடைபெறுகின்றான்.  அதன்பின்னர் சிவாவை தொடர்புகொள்ள முயலும் கதைசொல்லிக்கு தொடர்பு கிடைக்கவில்லை.  சில நாட்களின் பின்னர் “காணாமல் போனோர் உறவினர் சங்கம்” நடத்திய ஊர்வலத்தில் சிவாவின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு வெள்ளைச்சேலை அணிந்த வயோதிபப் பெண்ணொருவர் செல்வதைத் தொலைக்காட்சியில் பார்த்ததாக இன்னொரு நண்பன் ஊடாக கதைசொல்லி அறிகின்றான்.  இக்கதையில் “சந்தேகத்தின் பேரில்” என்று நிகழ்ந்த கைதுகளும், பரவலாக இடம்பெற்ற காணமற்போதல்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.  அத்துடன், சந்தேகத்தின் பேரில் என்று கைது செய்யப்பட்ட சிவாவின் நண்பர்களாக வளாகத்தில் இருந்தவர்கள் சிங்களவர்கள்.  அவனது காதலி கூட சிங்களப்பெண்தான்.  ஆனால் அவர்கள் யாருமே விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.  ஆனால் அவனது கைதினைத் தொடர்ந்து வளாகத்தினுள் நுழையும் பொலிசார் அடையாள அட்டையைப் பார்த்து தமிழர்களை அனைவரும் தனி வரிசையில் நிறுத்தி கைது செய்து அழைத்துச்செல்கின்றனர்.  இனப்படுகொலை ஒன்றுக்கான நிலைகளில் மிக ஆரம்ப நிலைகளில் ஒன்றாக, ஒருவரின் இனம், மதம், தேசியம் போன்ற அடையாளங்களை அறியும்பொருட்டு அடையாள அட்டைகளைப் பார்வையிடல், அவர்களை தமர் X பிறர் என்று பிரித்தல் என்பவற்றைக் குறிப்பிடுவர்.  இன்றுவரை ஈழத்தில் தொடரும் இந்நிலையை இக்கதையும் பதிவாக்குகின்றது.

“சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் இணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம் நாட்டுமக்கள் அனைவருக்கும் உரியது” என்று ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்த ஒரு சுதந்திர நாளில் கொழும்பில் வாழ்ந்த தமிழ் இளைஞனின் நாள் எப்படி இருந்தது என்பதே ஒரு சுதந்திர நாள் கதை.  அவன் உணவு வாங்க கடைக்குச் செல்லும்போது தமிழன் என்ற காரணத்தால் அரை மணிநேரம் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதாக உணர்கின்றான்.  இரண்டு வருடங்களாக அவன் உணவுண்ட லக்ஷ்மி பவன் கடையில் பணியாற்றிய மலையக இளைஞர்கள் பொலிஸ் பதிவப் புதுப்பிக்கவில்லை என்பதால் பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.  ஒரே நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டும் பதிவு செய்யும் பொலிஸ் நடைமுறையை நினைத்து வெறுப்புறுகின்றான்.  இனிச் சாப்பாட்டுக்காய் அலைந்து கைதாவதைவிட காலையில் சாப்பிட்டு மிச்சம் வைத்த பழைய பாணைச் சாப்பிடுவது நல்லதென்ற முடிவுக்கு இறுதியில் வருகின்றான்.  தான் வாழும் நாட்டின் சுதந்திரநாளில் கூட தான் பிறந்த இனத்தின் காரணமாக கடுமையான ஒடுக்குமுறை நிலவுகின்றபோது அவனால் காட்டமுடிந்த அதிகபட்ச எதிர்வினை அதுவாக அமைகின்றது.

thevamukunthanஇத்தொகுப்பில் இருக்கின்ற கதைகளில் என் தனிப்பட்ட அக்கறையில் மிகமுக்கியமான விடயத்தைப் பேசுகின்ற சிறுகதை வழிகாட்டிகள் என்பது.  இலங்கையின் இலவசக் கல்விமுறைமை உலக அளவில் கூட சிறப்பான ஒன்று.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இலங்கையில் எல்லாருக்கும் ஒரே பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களும் தான் இருந்தன.  அண்மைக்காலமாகவே கல்வியானது தனியார்துறையினரிடம் மெல்ல மெல்ல கைமாறி வருகின்றது.  ஆனால் கல்விமுறைமைக்கு ஒழுங்கான திட்டம் இருந்தும் தமது மெத்தனத்தால் அதை செயலிழக்கவும், சரியாகச் செயற்படவும் முடியாமற் செய்தவர்கள் பலர், குறிப்பாக கல்வி அதிகாரிகள் உள்ளனர்.  பெரும் பணவசதியும், செல்வாக்கும், ஏற்கனவே ஈட்டிய நற்பெயரும் கொண்ட சில பாடசாலைகள் அனுமதிப்பரீட்சை மூலமாகவே அல்லது புலமைப் பரிசில் போன்ற பொதுப் பரீட்சைகள் மூலமாகவோ மாணவர்களை புள்ளிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, தம்மை மாத்திரம் கல்வியின் மையங்களாக நிறுவிக்கொள்வது பற்றியும், அவற்றில் கல்வி தவிர்ந்த சமூகப் பிரக்ஞை எவ்வாறு மாணவர்களுக்கு ஊட்டப்படுகின்றது என்பது பற்றியும் எனக்குத் தனிப்பட விமர்சனம் உண்டு.  இக்கதையில் வருகின்ற வாமதேவன் போன்றவர்களின் சுயநலன்களுக்கு அப்பால், பொஸ்கோ 92%, ஹிண்டுப் பிறைமரி 90% என்று பெருமைபொங்க புலமைப் பரிசில் பெறுபேறுகளை ஒப்புவிக்கும் வாமதேவனிடம் சில சிறுபாடசாலைகளின் பெறுபேறுகள் பற்றிக் கேட்க எண்ணி கேளாமல் தவிர்த்துவிடும் கதைசொல்லி இந்திரன், கதையின் இறுதியில் கேட்டே விடுகின்றான், “ஸேர், அரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாலயம், கொழும்புத்துறை துரையப்பா, குருநகர் றோக்ஸ், நாவாந்துறை றோ.க., நாவலர் வித்தியாலயம் போன்ற பள்ளிக்கூடங்களின் ரிசல்ட்ஸ் எப்படி?” என்று எரிச்சலுடன் கேட்கின்றான்.  கதை முடிவது இவ்விதம் என்றாலும் இது நல்லதொரு தொடக்கமே.

இத்தொகுப்பில் வருகின்ற மிகச் சிறப்பான கதைகளாக மேலே சொன்ன கண்ணீரினூடே தெரியும் வீதி, ஒரு சுதந்திர நாள், இடைவெளி, சிவா, வழிகாட்டிகள் ஆகிய கதைகளையே எனது வாசிப்பின்மூலம் நான் உணர்கின்றேன்.  ஏனைய கதைகளும் அவை பேசும் விடயங்கள் சார்ந்து முக்கியம் வாய்ந்தனவாக இருப்பினும், அவை ஏனோ சில காரணங்களால் முழுமை அடையாதனவாகத் தோன்றுகின்றன.

இரட்டைக் கோபுரம் என்கிற கதை கதைசொல்லியும் அவரது நண்பர்களாக இரண்டு சிங்கள இனத்தவர்களும் மலேசியாவில் உயர்கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் இடபெற்ற விடயங்ளைப் பேசுகின்றது.  இவர்கள் மலேசியாவில் இருந்த காலத்தில் இவர்களுக்கு அங்கிருந்த சுப்ரமணியம் என்ற தமிழர் பெருமளவில் உதவிவருகின்றார்.  மிக நெருக்கமான உறவுப் பிணைப்பொன்று நால்வருக்கும் இடையில் உருவாகின்றது.  ஒருநாள் இவர்கள் மலேசியாவில் இருக்கும்போது பிறந்த, சுனில் என்ற சிங்கள நண்பரின் குழந்தை இறந்துவிட்டதாக செய்தி வருகின்றது.  விடயம் அறிந்து பயணடிக்கெற்றை சுப்ரமணியமே தனது செலவில் செலுத்துகின்றார்.  விமான நிலையத்தை எல்லாரும் சென்றடைகின்றனர்.  அப்போது கட்டுநாயக சர்வதெச விமான நிலையத்தில் விமானங்கள் தகர்க்கப்பட்டு மோதல்கள் இடம்பெறுவதாகவும், அதன் காரணமாக இலங்கைக்கான எல்லா விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் அறிவித்தல் வருகின்றது.  சிறு குழந்தையின் உடலை பல நாட்களுக்கு வைத்திருக்க முடியாதே.  சுனில் என்ன செய்வான் என்ற வருத்தம் கதைசொல்லிக்கும் ஏற்படுகின்றது.  இந்த நேரத்தில் சுனில், “பற தெமிள” என்று கூறுகிறான்.  “அவனின்  பயணம் தடைப்பட்டதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்,  அவனின் துயர் எங்களிலும் பரவியுள்ளபோது ஏன் எங்களைத் திட்டுகிறான்?” என்ற கதை சொல்லியின் விசனம் நியாயமானதே.  சுனிலின் அடிமனதில் இருந்த தமிழர்கள் மீதான வெறுப்பே இவ்வார்த்தைகளில் வெளிப்பட்டது என்று வாதிடவும் முடியும்.  ஆயினும், தன் சிறுகுழந்தையின் பிணத்தைச் சென்று பார்வையிடமுடியாத தந்தை என்கிற சுனிலின் உணர்வுத் தளமே என்னளவில் இங்கே மேலோங்கி நிற்கின்றது.  அந்த வார்த்தைகள் முழுமையான பிரக்ஞையுடன் வந்திருக்காது என்பதே என் துணிபு.

சின்னமாமா என்கிற கதை எழுத்தாளர் திருநாவுக்கரசு என்பவர்க்கு இருக்கின்ற வெளிஅடையாளத்திற்கும், திருநாவுக்கரசு என்பவரை நேரடியாக அறிந்த அவர் குடும்பத்தினர் மத்தியில் இருக்கின்ற அடையாளத்திற்கும் இடையில் இருக்கின்ற முரண்களைப் பற்றிப் பேசுகின்றது.  எழுத்து வேறு எழுத்தாளன் வேறு என்பதைத் தம்மைக் காபந்து பண்ண பயன்படுத்திக்கொண்டு தொடர்ச்சியாக தம் போலித்தனங்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கும் பல எழுத்தாளர்களை அறிந்திருக்கின்றேன் என்றாலும், இக்கதை ஒரு குறிக்கப்பட்ட எழுத்தாளரை நோக்கி எழுதப்பட்டது என்று ஐயுறுவதால் – அப்படி இருப்பின் அவ்வித முயற்சிகளில் இவ் எழுத்தாளர் தொடர்ந்தும் ஈடுபடலாகது என்பதால் –  இம்முயற்சியை வரவேற்க விரும்பவில்லை.  அதே நேரம், தாழ்த்தப்பட்ட சமூகங்களில் இருந்து வந்தவர்கள் தாம் உயர்வாக்கம் அடையும்போது, தாம் ஏற்கனவே இருந்த தாழ்த்தப்பட்ட சமூகங்களுடனான தமது தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ளுகின்றனர் என்ற கருத்துநிலையும் இக்கதையினூடாக பதிவுசெய்யப்படுவது முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இவன், கூட்டத்தில் ஒருவன் ஆகிய இருகதைகளும் ஒரே தொடர்ச்சியைக் கொண்டவை.  மத்தியதர வர்க்கத்தினருக்கு இருக்கக் கூடிய சமுதாய கோபத்தைக் காட்டுபவை.  ஆயினும் இவை சிறுகதையாக இல்லாமல் பதிவுகளாகவும், விமர்சனத்தின் குரலாயுமே அமையப்பெற்றிருப்பதாகவே உணர்கின்றேன்.  ஆயினும் இவன் கதையில் கொழும்பு நகரில் இருக்கின்ற வேலைகிடைக்காத படித்த இளைஞன் ஒருவனின் நாளாந்த வாழ்க்கையைப் பதிவாக்குகின்றது.

மரநாய்கள் இத்தொகுப்பில் உள்ளதன்படி தேவமுகுந்தன் எழுதிய முதலாவது சிறுகதை.  இக்கதை 1993ல் எழுதப்பட்டுள்ளது.  இத்தொகுப்பில் உள்ள ஏனைய கதைகள் மரநாய்கள் பிரசுரமாகி குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்குப் பின் பிரசுரமானவை.  அந்த 15 வருடங்களுக்குரிய பாய்ச்சலும் தேர்ச்சியும் தேவமுகுந்தனின் பின்னைய எழுத்துகளில் தெரிகின்றது.  இவ்வாறு கூறுவது மரநாய்கள் என்கிற கதையை குறைத்து மதிப்பிடுவது என்று பொருளல்ல.  அது இந்திய ராணுவம் ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் அது எவ்வாறு மக்களின் நாளாந்த வாழ்வை பாதித்தது என்பதையும், அது செய்த கோழித்திருட்டுகள் என்பதையும் ஒரு சிறுவனின் பார்வையில் பதிவாக்கியுள்ளது.  இந்தக் கதை இவ்வாறு முடிகின்றது.

அண்ணா கோழியைப் பிடித்துக்கொண்டு போட்டாங்கள்…” வாழைகளுக்குப் பாத்தி கட்டிக்கொண்டிருந்த தமயன் மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு நிதானமாகச் சொன்னான்

மர நாய்களைத் துரத்த வேண்டும்

ஒன்றும் புரியாதவனாக கோபி அழுகையை அடக்கிக்கொண்டு கண்ணீரினூடு தமயனின் முகத்தை அண்ணாந்து பார்த்தான்அது தெளிவாகத் இருந்ததுஇவனுக்குப் புரிய இன்னும் சிறிது காலம் போதும்!”

இதில் மரநாய்களைத் துரத்த வேண்டும் என்பது இந்திய ராணுவத்தைத் துரத்தவேண்டும் என்ற அர்த்தத்தில் வருகின்றது என்பதை எல்லா வாசகருமே உணரக்கூடும்.  அக்காலப்பகுதியில் ஈழத்தில் வாசித்த பல சிறுகதைகளில் இருந்த ஒருவித பிரச்சாரத் தொனியே இதிலும் தென்படுகின்றது.  அதைவிட முக்கியமாக நான் சொல்ல விழைவது, இக்கதையில் வரும் கோபி, கண்ணீரினூடு அண்ணாந்து பார்த்த தமையன் அல்லது அவன் போன்ற ஒருவன் தான் பிற்பாடு, “கண்ணீரினூடே தெரியும் வீதி” கதையில் செத்துப்போன போராளி நகுலன் ஆகி இருப்பான் என்கிற என் அனுமானத்தையே!

கண்ணீரினூடே தெரியும் வீதி தொகுப்பினை வாசித்த பின்னர் தேவமுகுந்தன் எழுதிய வேறு படைப்புக்களை வாசிக்கும் ஆவலில் தேடினேன்.  இத்தொகுப்பு 2012ல் வெளியாகியுள்ளது.  அதன்பிறகான இரண்டாண்டு காலப்பகுதியில் ஒன்றோ, இரண்டோ சிறுகதைகள் மாத்திரமே எழுதியுள்ளார் என அறியமுடிகின்றது.  தொடர்ந்து எழுதுவதற்கான மனநிலையும், நேரமும் தாராளமாகக் கிடைத்து தேவமுகுந்த தொடர்ந்தும் எழுதவேண்டும் என்பதே என் அவா.

கண்ணீரினூடே தெரியும் வீதி
ஆசிரியர் : தேவமுகுந்தன்
காலச்சுவடு வெளியீடு


குறிப்பு :

ஜூன் 2015 காலம் இதழில் (இதழ் 47) வெளியானது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: