இயல் விருது விழா – 2015

Tamil LG Cover 14/152014ஆம் ஆண்டிற்குரிய இயல் விருது மற்றும் கனேடிய இலக்கியத் தோட்டத்தின் விருதுகள் வழங்கும் நிகழ்வு, ஜூன் 13ஆம் திகதி ரொரன்றோ றடிசன் ஹோட்டலில் இடம்பெற்றது.  2014ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், புனைவுக்கான நாவல் பரிசு தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’, குணா. கவியழகனின் ‘நஞ்சுண்டகாடு’ ஆகிய இரு நாவல்களுக்கும், அபுனைவு நூலுக்கான பரிசு மு. நித்தியானந்தனின் ‘கூலித்தமிழ்’,  ஜெயராணியின் ‘ஜாதியற்றவளின் குரல்’ ஆகிய இரு நூல்களுக்கும், கவிதைக்கான பரிசு கதிர்பாரதியின் ‘மெசியாவிற்கு மூன்று மச்சங்கள்’ நூலுக்கும் மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு கே.வி. ஷைலஜாவின் ‘யாருக்கும் வேண்டாத கண்’ நூலுக்கும், மொழிபெயர்ப்பு நூலுக்கான (ஆங்கிலம்) பரிசு Madras Studios – Narrative Genre and Ideology in Tamil Cinema நூலுக்காக சொர்ணவேல் ஈஸ்வரனுக்கும், தமிழ் மொழியில் தகவல் தொழில்நுட்பத்திற்கான விருது முத்தையா அண்ணாமலைக்கும், மாணவர்களுக்கான புலமைப்பரிசுகள் வாசுகி கைலாசம், யுகேந்திரா ரகுநாதன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. 

கனவுச்சிறை, நஞ்சுண்ட காடு இரண்டுமே அண்மைக்காலத்தில் வெளியான இரு முக்கிய நாவல்கள் என்பது அனைவரும் அறிந்ததே!  அவை இரண்டுமே பரிசுக்குத் தேர்வாகியமை மிக்க மகிழ்ச்சிக்குரியதே!  அதுபோல, கூலித்தமிழ் மிகக் கடுமையான உழைப்பையும், ஆய்வுகளையும் உள்வாங்கி மிகச் செறிவானதாக வெளியாகியிருக்கின்றது.  ஈழத்தமிழர் மத்தியில் இதுபோன்ற நூலாக்க, ஆவணப்படுத்தற் செயற்பாடுகள் மிக அரிதாகவே நிகழ்வன.  அந்த வகையில் கூலித்தமிழ் என்ற நூலை எழுதியமைக்காக மு. நித்தியானந்தன் அவர்களுக்கும், அந்நூலினைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்தமைக்காகக் கனேடிய இலக்கியத் தோட்டத்திற்கும் நன்றிகள்.  ஏனைய நூல்களை நான் இதுவரை வாசித்திருக்காமையால், அவைபற்றிய கருத்துகளைக் கூறமுடியவில்லை. ஆயினும், மொழிபெயர்ப்புப் பிரிவில் பரிசு வழங்கப்பட்டிருக்கும் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்களின் Madras Studios – Narrative Genre and Ideology in Tamil Cinema நூல், மொழிபெயர்ப்பு நூல் அல்ல, ஆங்கிலமொழியில் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்களே எழுதிய நூல்!  மிகுந்த தொழில்நேர்த்தியுடனும் திட்டமிடல்களுடனும் தொடர்ச்சியாக இயங்கிவரும் இயல் விருது தேர்வுகளில், இதுபோன்ற அடிப்படையான விடயங்களைக் கவனிக்கவேண்டியது அவசியம்.

இயல் விருதுனைப் பொறுத்தவரை, அதன் முக்கியத்துவம் அதன் தொடர்ச்சியும் ஒழுங்குமாகும்.  மிகச் சரியான திட்டமிடல்களுடனும் ஒழுங்குமுறையுடனும் 2002ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்வு நடைபெறுகின்றது.  தவிர பல நல்ல படைப்பாளிகள் கௌரவப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.  இந்த வகையில் புறக்கணிக்க முடியாத முக்கியத்துவத்தை இயல்விருது நிச்சயம் கொண்டிருக்கின்றது.  கடந்த ஆண்டுகளில் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் கூட, மென்று விழுங்கப்பட்டு, கொச்சையான உச்சரிப்புடனேயே அறிவிப்புகள் நடந்திருக்கின்றன.  அதுவும் இம்முறை நேர்த்தி செய்யப்பட்டிருந்தது.  குறிப்பாக, இம்முறை நிகழ்வில் பிரதம அறிவிப்பாளராகக் கடமையாற்றிய கங்காதரன் அவர்கள் மிகச் சிறப்பாகத் தன் பணியைச் செய்திருந்தார்.  அதேநேரம், நன்றியுரை வழங்குபவர்கள், விழாவினை நடத்துபவர்கள் சார்பாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பேசுவதே மரபும் முறையும்.  இம்முறை நன்றியுரை வழங்கிய உஷா மதிவாணன் பேசிய முழுப் பேச்சும் ரசிக மனோபாவத்துடன் இருந்தது. அவர் ஜெயமோகன் வாசகர் வட்டத்தின் சார்பில், ஜெயமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியமைக்காக நன்றி கூறுகின்றாரோ என்ற சந்தேகம்கூட ஏற்பட்டது.  அன்று அபுனைவுகள் பிரிவில் பரிசினைப் பெற்றுக்கொண்ட மு.நித்தியானந்தன் அவர்களின் பெயரைத் தவறாக உச்சரித்தார், உஷா மதிவாணன்.  பதற்றத்தில் அந்தத் தவறு நிகழ்ந்திருக்கலாந்தான் என்றாலும், முக்கியமான ஆளுமை ஒருவரின் பெயரினை உச்சரிக்கின்றபோது, அலட்சியப்படுத்தாது பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும்.

இயல் விருதின் ஆரம்ப நாட்கள் முதற்கொண்டே அதுபற்றிய சர்ச்சைகளும் தொடர்கின்றன.  அதுபற்றிய சில விமர்சனங்களை நானும் முன்வைத்திருந்தேன். இம்முறை வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஜெயமோகன்கூட ‘இயல் விருதின் மரணம்’ என்ற கட்டுரை எழுதியதுடன், “வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் சம்பந்தபட்டிருப்பதனால், இயல் விருது பற்றிய ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால், அது மூன்று ஆண்டுகள்கூட உயிர்வாழவில்லை. அடுத்த இயல் விருதை குஷ்புவுக்குக் கொடுத்தால்கூட ஆச்சரியப்படமாட்டேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.  இதில் முக்கிய விடயம் என்னவென்றால்,  “இதன் முதல் விருது சுந்தர ராமசாமிக்கு வழங்கப்பட்டது. அதனாலேயே, இதற்கு ஒரு தனிக் கௌரவமும் பரவலான கவனமும் கிடைத்தன.  அதன்பின்னர் வெங்கட் சாமிநாதன் போன்று பொதுப் பண்பாட்டால் அங்கீகரிக்கப்படாத, ஆனால், நீண்ட நாள் இலக்கியப் பங்களிப்பாற்றிய முன்னோடிகளுக்கு வழங்கப்பட்டது” என்று இதே கட்டுரையில் ஜெயமோகன் குறிப்பிடுகின்றார்.  முதலாம் ஆண்டு சுந்தர ராமசாமிக்கும், இரண்டாம் ஆண்டு கே.கணேஷூக்கும், மூன்றாம் ஆண்டு வெங்கட் சாமிநாதனுக்கும் விருதுகள் கிடைக்கின்றன. (கவனிக்க, ஆயினும் ஜெயமோகன் கே. கணேஷ் அவர்களின் பெயரை இங்கே குறிப்பிடவில்லை.)  அதுவரை, ஜெயமோகனுக்கு இயல் விருது உவப்பானதாகவே இருக்கின்றது.  அதன் பின்னர், 2004 – 2007 வரை முறையே பத்மநாப ஐயருக்கும், ஜோர்ஜ் எல் ஹார்ட்டிற்கும், தாசீசியசிற்கும், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கும் விருது வழங்கப்படுகின்றது.  அதுவே, ஜெயமோகனை இயல் விருது செத்துவிட்டது என்று சீற்றங்கொள்ள வைத்ததுடன், “நவீன தமிழிலக்கியத்தைத் தீர்மானித்த முன்னோடிப் படைப்பாளிகளான லா.ச.ராமாமிருதமோ, ஆ.மாதவனோ, நீல பத்மநாபனோ, அசோகமித்திரனோ, ஞானக்கூத்தனோ, நாஞ்சில்நாடனோ, வண்ணதாசனோ, அபியோ, தேவதேவனோ பொருட்படுத்தப்படாமல் ஜோர்ஜ்.எல் ஹார்ட்டும், லணமி ஹோம்ஸ்ரோமும் தமிழின் பெரும் பங்களிப்பாளர்களாக எப்படிப் படுகிறார்கள் இவ்விருதுக் குழுவின் கண்களுக்கு?” என்று கேள்வியெழுப்பவும் வைத்தது.  அதாவது, ஜெயமோகனின் கண்களுக்கு எந்த ஈழத்து எழுத்தாளார்களும் தெரிவதேயில்லை!

இந்தக் கட்டுரையை ஜெயமோகன் எழுதிய சமயம் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் இயல் விருது இந்தியாவைச் சேராதவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.  (அதனால்தான் அத்தனை சீற்றமோ தெரியவில்லை.)  ஆனால் அக்கட்டுரை எழுதப்பட்டபின்னர் இயல் விருது 8 ஆண்டுகளில் 7 இந்தியர்களுக்கும் ஒரு ஈழத்தவருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது (டொமினிக் ஜீவாவிற்கு வழங்கப்பட்டது சிறப்பு இயல்விருது.  அதையும் சேர்த்தால் இருவர்).   விருதுக்கான ஏற்புரையாக காலம் இதழில் வெளியான “ஒவ்வொரு நாளும் விருது” என்ற கட்டுரையில், “இயல் விருது சுந்தர ராமசாமியும், வெங்கட் சாமிநாதனும், எஸ்.பொன்னுத்துரையும், தியோடர் பாஸ்கரனும், ஐராவதம் மகாதேவனும், ஞானியும், அம்பையும், நாஞ்சில்நாடனும் பெற்றது.  அவ்வரிசை என்னைப் பெருமிதம் கொள்ளச்செய்கிறது” என்று பூரிப்படைகின்றார், ஜெயமோகன்.  இயல் விருது 2014 மலரில் பட்டியலிடப்பட்டிருக்கும் 14 விருது பெற்றவர்களின் பெயர்களில் எஸ்.ராமகிருஷ்ணன் தவிர்த்த அனைத்துத் தமிழகத்தவர்களுமே இங்கே ஜெயமோகனுக்குப் பொருட்படுத்தத் தக்கவர்களாக இருக்கின்றனர். ஜெயமோகன் பரிந்துரைத்த பட்டியலிலும், அவர் பெருமைகொள்ளும்படி இதற்கு முன்னர் விருதுவாங்கியவர்களின் பட்டியலிலும் எஸ்.பொ தவிர எந்த ஈழத்தவர் பெயருமே இல்லை!

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.  சென்ற ஆண்டு ஜூலை மாதம் 88ஆவது பிறந்தநாளை ஒட்டிய சிறப்பு இயல் விருது என்று திடீரென டொமினிக் ஜீவாவிற்கு விருது வழங்கப்பட்டது.  ஆனால், இயல் விருது 2014 மலரில் இயல் விருது வழங்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் அவரது பெயரைக் காணவில்லை!  இதனை ஒருவிதமான அவமானப்படுத்தல் என்றே கருத முடிகின்றது.  தமிழ் இலக்கியத் தோட்டத்தினரைப் பொறுத்தவரை அவர்கள் தமிழ்மொழி என்கிற அடிப்படையில் பார்ப்பதாகவும், ஈழம், இலங்கை, இந்தியா என்று பார்ப்பதில்லை என்றும் தொடர்ந்து கூறிவருகின்றனர்.  வெறும் சலுகையாக இல்லாமல், தங்கள் பங்களிப்பிற்காகத் தகுதிபெற்ற ஈழத்தவர்கள்கூட கண்டுகொள்ளப்படவில்லை என்பதே கவலைக்குரியது.

இயல் விருது என்பதற்கான இலக்கியத் தோட்டத்தினர் வைத்திருக்கின்ற அளவீடுகள், அதற்கான ஜெயமோகனின் தகுதிகள் என்பனவற்றுக்கு அப்பால், ஜெயமோகன் போன்ற ஒருவருக்கு விருது வழங்கிக் கௌரவிப்பதில் இருக்கின்ற அறச்சிக்கலே முக்கியமாகக் கவனத்தில் எடுக்கப்படவேண்டியதாக இருக்கின்றது.  ஈழத்தமிழர்கள் பற்றியும், அவர்களின் விடுதலைக்கான போராட்டம் பற்றியும், ஈழத்துப் படைப்பாளிகள் பற்றியும் தொடர்ச்சியாக நச்சுத்தனமான கருத்துகளைத் தெரிவித்துவருபவர் ஜெயமோகன்.  தொடர்ச்சியாகப் பெண் படைப்பாளிகள் பற்றியும் மோசமான கருத்துகளைத் தெரிவித்துவருபவர். ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் வெளியிட்ட கவனிக்கத்தக்க படைப்பாளிகளின் பட்டியலில் இடம்பெற்ற பெண் படைப்பாளிகள்பற்றி ஜெயமோகன் உதிர்த்த கருத்தினைப் போன்ற ஒரு அயோக்கியத்தனமான கருத்தினை வேறெவரும் உதிர்த்திருக்கவே மாட்டார்கள். ஈழத்தில் இந்திய இராணுவம் செய்த அனைத்து அயோக்கியத்தனங்களையும் மறுத்து, ஓர் இந்திய இராணுவ அதிகாரி எழுதிய கடிதத்தினைப் பிரசுரித்து, அந்த இராணுவ அதிகாரியைவிட மேலாக இந்திய இராணுவத்துக்குப் பரிந்து எழுதியவர், ஜெயமோகன்.  ஜெயமோகனுக்கு இயல் விருது வழங்கிய இலக்கியத் தோட்டத்தினரும் இங்கே ஜெயமோகனுக்குத் தொடர்ச்சியாகச் சந்திப்புகளை ஏற்படுத்தி உருகிக்கொண்டிருப்பவர்களும் நிச்சயம் இவற்றை எல்லாம் வாசித்திருக்கவே செய்வார்கள். அதற்குப் பின்னரும்தான் இத்தனையும் நடக்கின்றன.  தாழ்வுச்சிக்கல் என்பது எம்மவர்களின் இரத்தத்திலேயே இருக்கின்றது போலும்!


2015ம் ஆண்டு இடம்பெற்ற நிகழ்வு என்ற அடிப்படையிலேயே இக்கட்டுரையின் தலையங்கம் “இயல் விருது விழா 2015” என்று அமைகின்றது.  வழங்கப்பட்ட விருதுகள் 2014ம் ஆண்டுக்குரியனவே!

இயல்விருது வழங்கப்படுவதில் தனக்குள்ள செல்வாக்குப் பற்றிய ஜெயமோகனின் ஒப்புதல் வாக்குமூலம் – இணைப்பு https://jeyamohan.in/68541#.XGuPdaJKjIU

ஜெயமோகனின் ஒப்புதல் வாக்குமூலத்துக்கானபிடிஎஃப் jeyamohan on iyal viruthu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: