புதிய பயணி இதழ்
பயண அனுபவங்கள் பற்றி இலக்கியங்கள் ஊடாகப் பதிவுசெய்வது தமிழுக்குப் புதிய மரபன்று. சங்க இலக்கியங்களின் ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகிய பாடல்வகைகளை பயண இலக்கியங்களாக வகைப்படுத்தலாம் என்று அறிய முடிகின்றது. பயண இலக்கியம் சார்ந்து இவ்வாறான ஒரு நீண்ட மரபு இருப்பினும் தமிழில் பயண இலக்கியத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஏ.கே. செட்டியார். இவரே, பயண இலக்கியம் என்கிற பிரக்ஞையுடன் தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டவர். 1850 முதல் 1925 வரை வெளியான பலரது பயணக்கட்டுரைகளைத் தொகுத்து “பயணக் கட்டுரைகள்” என்கிற பெயரில் 6 பாகங்களாக வெளியிட்டார். அவர் எழுதிய பயணக்கட்டுரைகளின் தொகுப்பான “உலகம் சுற்றிய தமிழன்” தமிழின் முக்கியமான பயண இலக்கியமாக இன்றுவரை குறிப்பிடப்படுகின்றது (ஏ.கே. செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆற்றிய உரையினை ஆர்வம் உள்ளவர்கள் https://youtu.be/Ljhh937O0uU என்கிற முகவரியில் காணலாம்). ஏ.கே. செட்டியார் குமரிமலர் என்கிற இதழினையும் வெளியிட்டார் என்று தெரிகின்றது. ஆனால் அதன் உள்ளடக்கம் பயணங்கள் பற்றியதாக இருந்ததா என்பது தெரியவில்லை. எனக்குத் தெரிந்து தமிழில் பயணம் சார்ந்த அனுபவங்களை உள்ளடக்கமாக வைத்து வெளிவருகின்ற முதலாவது இதழ் புதிய பயணி என்றே கருதுகின்றேன்.
புதிய பயணி சிற்றிதழின் ஏப்ரல் மாத இதழை ரஃபேல் வழங்கியிருந்தார். இந்த இதழ் பயணம் சார்ந்த அனுபவங்களை எல்லாருடனும் பகிர்ந்துகொள்ளும் நோக்குடன் வெளிவருகின்றது. பயண அனுபவங்கள் அங்கு சந்தித்த மனிதர்கள், பண்பாட்டு அம்சங்கள், புராதன கட்டடங்கள், அவற்றின் சிறப்பம்சங்கள், சூழலியல் சார்ந்த கவனப்படுத்தல்கள், தொல்லியல், வரலாற்று அம்சங்கள் என்பன பற்றிய பதிவுகளை நிறைய வண்ணப்படங்களுடனும் அவற்றுக்கேற்ற வளவளப்பான தாள்களுடனும் இந்த இதழில் காணலாம். அத்துடன் அவர்கள் குறிப்பிடும் இடங்களிற்கு பேருந்தின் ஊடாக செல்லவேண்டிய தடம், செலவாகும் நேரம், பேருந்துக் கட்டணம் ஆகியனவும் ஒவ்வொரு கட்டுரைகளின் கீழும் குறிப்பிடப்படுகின்றன. இதன் ஏப்ரல் மாத இதழில் கௌதாரிகளின் வாழ்வியல் பற்றிய கட்டுரை, மாமண்டூர் குடவரை கோயில்கள், சித்திரமேக தடாகம், ஆடுவளர்ந்த மலை பற்றிய கட்டுரை, கொல்லிமலை, புனலூர் தொங்கும் பாலம், மகராஷ்டிராவில் இருக்கின்ற கோல்ஹாபூர், வால்பாறை, அருணாசலப் பிரதேசம், குல்பர்கா கோட்டை, இலங்கைப் பயணக் குறிப்புகள், திருவையாறு பற்றிய கட்டுரைகளும், காணிக்காரர்கள் என்கிற தொல்குடிகள் பற்றிய கட்டுரையும் Le Grand Voyage என்கிற பயணங்கள் பற்றிய பிரெஞ்சுமொழித் திரைப்படம் பற்றிய கட்டுரையும், The lost clity of Z என்கிற பயணங்களைக் குறித்த நாவல்பற்றிய கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளன. பயணங்கள் பற்றியும், பயண நூல்கள் பற்றியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு “புதிய பயணி” நல்லதோர் தேர்வாக அமையும்.
000
திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை
தாய்வீடு பத்திரிகையும் சுயாதீன திரைப்பட மையமும் இணைந்து நடத்திய திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை JC Banquet Hall ல் ஜூன் 14ம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வை மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றிவரும் சொர்ணவேல் ஈஸ்வரன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.
இதற்கு முன்னராக ரதனின் “சொல்லப்படாத சினிமா”, அ.யேசுராசாவின் “திரையும் அரங்கும் : ஒரு கலைவெளிப் பயணம்” ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகளில் உரையாற்றும்போது சொர்ணவேல் அவர்களை அவதானித்திருக்கின்றேன். உண்மையில் இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவரது பேச்சு பெரிய அளவில் என்னைக் கவர்ந்திருக்கவில்லை. ஆனால் இந்தத் திரைப்படப் பயிற்சிப் பட்டறையைப் பொறுத்தவரை சொர்ணவேல் அவர்ளுடனான உரையாடல் அண்மைக்காலத்தில் கிடைத்த மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இருந்த்து.
நமது கல்விமுறையில் ஆசிரியர் – மாணவர் உறவு என்பது, ஆசிரியர் தனது அதிகாரங்களை மாணவர்கள் மீது திணிப்பதாக இருப்பதே வழமையாக இருக்கின்றது. கல்விமுறைகள் பற்றியும் ஆசிரியர் – மாணவர் உறவுகள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்ட பாவ்லோ ப்ரைய்ரே (Paulo Freire) வழக்கில் இருந்த அப்போதைய கல்விமுறையை (இப்போதும் கூட பெருமளவு மாற்றங்கள் அந்தக் கல்விமுறையில் நிகழ்ந்துவிடவில்லை) “வங்கிமுறைக் கல்வி” (Banking Concept of Education) என்று குறிப்பிட்டார். அதாவது வங்கியில் பணம் வைப்பிலிடப்படுவது போல மாணவர்களுக்கு “அறிவு” இயந்திர கதியில் வைப்பிலிடப்படுகின்றது என்பது அவரது முக்கியமான அவதானமாகவும் விமர்சனமாகவும் அமைந்தது. இதன் தொடர்ச்சியாக அவர் தன்னுடைய Pedagogy of the Oppressed (தமிழில் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை என்று இரா.நடராசனால் மொழிபெயர்க்கப்பட்டது) என்ற நூலில் ஆசிரியர் – மாணவர் உறவுமுறையில் 10 முக்கிய அவதான்ங்களைப் பட்டியலிட்டார். கல்விமுறைகள் பற்றியும் மாற்றுக் கல்விபற்றியும் அக்கறைகொண்டவர்கள் மாத்திரம் அன்றி சமூக மாற்றங்களில் அக்கறை கொண்டவர்களும் கட்டாயம் இந்த நூலைப் படிக்கவேண்டும்.
இந்த நிலை மாறி ஆசிரியர் தான் தெரிந்த விடயங்களைப் பற்றி மாணவர்களுடன் நடத்தும் தொடர்ச்சியான உரையாடல்களாக்க் கல்விமுறை அமையவேண்டும் என்பதை தொடர்ந்து குறிப்பிட்டுவருகின்றேன். அன்றைய தினம் சொர்ணவேல் அவர்கள் அந்த அனுபவத்தை வழங்கினார். எந்த விதத்திலும் அதிகாரத்தைப் பிரயோகிக்காது, நெருக்கமான ஒரு நண்பருடன் பேசுவது போன்ற கலந்துரையாடலாக அன்றைய நிகழ்வு அமைந்திருந்தது. இவ்வாறான ஓர் உரையாடல் முறையினை சொர்ணவேல் அவர்கள் விரும்புவதனால் தான் சம்பிரதாயமான முறையிலான பேச்சாக அமைந்த, நான் முன்னர் குறிப்பிட்ட புத்தகவெளியீட்டு விழாக்கள் அவருக்குப் பொருத்தமில்லாத்தாக அமைந்திருக்கவேண்டும்.
பார்க்கவேண்டிய முக்கியமான திரைப்படங்கள் பற்றியும், திரைப்படங்களில் தான் ரசித்த சில விடயங்கள் பற்றியும், இலக்கியம் பற்றியும் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். அவரது பேச்சு பொதுவாகப் பல்வேறு விடயங்கள் குறித்துப் பரந்ததாகவும் திரைப்படங்கள் குறித்த விடயங்களில் செறிவாகவும் இருந்தது. இதே கோடைகாலத்தில் முயற்சிசெய்து இன்னொரு முறை 2 அல்லது 3 நாட்கள் ஒரு பட்டறையினை ஒழுங்குசெய்யவேண்டும் என்று சொர்ணவேல் அவர்கள் கூறியிருந்தார். அதுவே அன்று கலந்து கொண்ட அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
000
மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ்
கூலித்தமிழ் புத்தக வெளியீட்டிற்காக ரொரன்றோ வந்திருந்த மு. நித்தியானந்தன் அவர்களுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. நண்பர்கள் ஊடாக அவர் பற்றிய அறிமுகத்தினைப் பெற்றிருக்கின்றேன். பின்னர் பத்மநாப ஐயர் அவர்களூடாக மு. நித்தியானந்தன் அவர்களின் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் பதிப்புத்துறையில் குறிப்பாக தமிழியல் வெளியீடுகளில் அவரது பங்களிப்புகள் பற்றியும் அறிந்திருந்தேன். தீபம் தொலைக்காட்சியில் அவர் செய்த நூல் அறிமுகங்களில் சிலவற்றை யூ ட்யூப் ஊடாகப் பார்க்கமுடியும். நூலொன்றினைப் பற்றி அறிமுகம் செய்யும்போது நூல் பற்றியும், நூலாசிரியர் பற்றியும், அந்த நூல் குறிப்பிடுகின்ற விடயம் தொடர்பாகவும் அறிமுகத்தை வழங்குவதுடன், குறிப்பிட்ட அந்த நூலுக்கு தொடர்பான சிலவிடயங்களை ஏனைய நூல்கள் சிலவற்றில் இருந்தும் சுட்டிக்காட்டிப் பேசுவார். கிட்டத்தட்ட 100 நிகழ்ச்சிகள் இவ்வாறு தீபம் தொலைக்காட்சி ஊடாக நடந்திருப்பதாக அறியமுடிகின்றது. தமிழில் வேறு எந்தத் தொலைகாட்சிகளிலும் இவ்வாறு தொடர்ச்சியாகவும், ஆழமாகவும் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை என்றே கருதுகின்றேன்.
அண்மைக்காலமாக புலம்பெயர் நாடுகளில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் வெளிவரும் பல்வேறு நூல்களில் பிரக்ஞையுடனோ இல்லாமலோ ஆவணப்படுத்தல் சார்ந்த அக்கறைகள் மிளிர்வதை அவதானிக்கலாம். ஒரு உதாரணத்துக்கு இந்த ஜூன் மாதம் மாத்திரம் ரொரன்றோவில் கூலித்தமிழ், பின்லாந்து பசுமை நினைவுகள், சரசோதி மாலை, விடமேறிய கனவு ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. இவையாவும் ஆவணப்படுத்தல் சார்ந்து முக்கியமான பதிவுகளாகவும் அமைகின்றன. இது ஒரு முக்கியமான காலம் என்றே கருத முடிகின்றது.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தேயிலை, கோப்பித் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள், அவ்விதம் வரும்போதே அவர்களின் வாய்மொழி இலக்கியங்களையும் சுமந்தபடியே வந்திருப்பர். ஆயினும் பிற்காலத்தில் அவர்களின் எழுத்து வழி இலக்கியங்களின் ஆரம்ப கால வரலாற்றைப் பதிவுசெய்வதே கூலித்தமிழ் நூலின் நோக்கமாகும். இந்நூலில் மலையகத்தில் வெளியான முதல் இலக்கியமான ஆபிரஹாம் ஜோசப் எழுதிய “கோப்பிக் கிருஷிக் கும்மி”, ஆபிரஹாம் ஜோசப் எழுதிய இன்னொரு நூலான “தமிழ் வழிகாட்டி” முதலிய நூல்கள் பற்றியும் மலையக எழுத்து ஆளுமைகள் பற்றியும் இந்நூல் பதிவுசெய்கின்றது. அண்மைக்காலத்தில் வெளியான திருத்தமான பதிப்புகளில் இந்நூலும் ஒன்று. இந்நூல் எழுதுவதற்காக புத்தகங்களைச் சேகரிக்க தான் செய்த முனைப்புகள் பற்றியும் நித்தியானந்தன் அவர்களிடம் இருந்து அறியமுடிந்தது. அதைக்கூட ஒரு தனி நூலாகப் பதிவுசெய்யலாம். அரசியல், இலக்கியம் என்று தான் சார்ந்த துறைகள் தொடர்பான தன் அனுபவங்களை நித்தியானந்தன் அவர்கள் தொடர்ந்து பதிவாக்கவேண்டும் என்பது என் வேண்டுதல்.
இக்கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் நான் தொடர்ச்சியாசியாக எழுதும் சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற தொடராக ஜூலை 2015 வெளியானது.
Leave a Reply