capitalஅண்மைக்காலமாக பலராலும் முக்கியமான சமகாலத்தியக் கட்டுரையாளாராகக் குறிப்பிடப்படுபவர் சமஸ்.  அவ்வாறு குறிப்பிடப்படத் தொடங்கிய காலம் முதற்கொண்டே அவரது கட்டுரைகளைப் படித்துவருகின்றேன்.  சமஸ் பற்றிய எனது கணிப்பு என்னவென்றால் அவர் மைய நீரோட்ட / வெகுஜன கருத்துகளை முற்போக்குத் தோரணையுடன் வெளியிடுபவர் என்பதே!  இந்தப் போக்கினைப் பின்பற்றுபவர்களும் அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளும் உண்மையான சமூக அக்கறையுடனும் முற்போக்குச் சிந்தனைகளுடனும் இயங்குபவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக ஆக்க் கூடியன.  குறிப்பாக, தமிழ் இந்து என்கிற பெரியதோர் வாசகர் வட்டத்துடன் இயங்குகின்ற பத்திரிகையில் இந்த ஆக்கம் வெளிவருகையில் சில விடயங்களைப் பேசவேண்டி இருக்கின்றன.

இக்கட்டுரையில் சமஸ் குறிப்பிடுகின்றார்,

“மும்பை வீதிகளில் வெள்ளந்தியாகப் போய்க் கொண்டிருந்த யாரோ ஒருவர் அல்ல யாகூப் மேமன். பிரதான குற்றவாளிகளால் ஒருவரான டைகர் மேமனின் தம்பி என்பதைத் தாண்டியும் இந்தச் சம்பவத்தில் அவருக்கு இருந்த தொடர்புகளை விசாரணை அமைப்புகள் நிரூபித்திருக்கின்றன. “குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் அவர் மும்பையைவிட்டு, துபாய்க்குப் புறப்பட வேண்டிய தேவை என்ன?” என்ற ஒரு வரிக் கேள்வி போதுமானது அவருக்கு இந்தச் சம்பவத்தில் உள்ள தொடர்புக்கு. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் விசாரணையை எதிர்கொள்ள வசதியும் இல்லாமல், படிப்பறிவும் இல்லாமல், மொழியும் தெரியாமல் தனது விதியை நொந்துகொண்டு சிறைக்குள் வதைப்படும் எத்தனையோ ஆயிரம் ஏழைக் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அல்ல யாகூப். ஒரு தணிக்கையாளர். நல்ல ஆங்கில அறிவுகொண்டவர். வசதியானவர். போதுமான அவகாசம் அவருக்கு தரப்பட்டிருக்கிறது தன்னுடைய தரப்பை நிரூபிப்பதற்கு. இத்தனையையும் கடந்துதான் அவருடைய குற்றத்தை உறுதிசெய்திருக்கிறது நீதிமன்றம்.

யாகூப் மேமன் குற்றவாளி என்பது எப்படி நம்மில் பலருக்கும் நேரடியாகத் தெரியாதோ, அப்படியே அவர் நிரபராதி என்பதும் நமக்கு நேரடியாகத் தெரியாதது. இந்த வழக்கின் முடிவையே மாற்றக்கூடும் என்று சொல்லப்பட்ட, இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான மறைந்த ராமன் எழுதிய கட்டுரையிலும்கூட “தூக்கிலிடும் அளவுக்குக் குற்றங்களைச் செய்திடாத ஒருவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தேன்” என்றே யாகூப் மேனின் குற்றத்தைக் குறிப்பிடுகிறார் ராமன்; “குற்றத்தோடு தொடர்பே இல்லாதவர் யாகூப்” என்று அல்ல.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸிடம் “யாகூப் மேமனை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும்” என்று மனு அளித்தவர்களில் ஒருவரான துஷார் தேஷ்முக் கேட்கிறார்: “யாகூப் நிரபராதி என்றால், என் அம்மா எப்படி இறந்தார்? இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே?”

இதே பின்னணியுடனும் கேள்விகளுடனும் ராஜீவ் காந்தி கொலை வழக்குப் பற்றியும் அது பற்றிய ஜெயின் கமிஷன் அறிக்கையுடனும், திருச்சி வேலுசாமி அவர்கள் கேட்ட தர்க்க ரீதியான கேள்விகளுடனும், ஶ்ரீநாத் என்கிற அதிகாரி விசாரணைக் கோப்புகள் தொலைந்துவிட்டன என்று கூறுவதிலும், வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன் “’பேரறிவாளன் தன்னிடம் கூறிய வாக்குமூலத்தை மாற்றி எழுதியதின் அடிப்படையிலேயே தண்டனை விதிக்கப்பட்டது’  என்று பிற்பாடு அளித்த வாக்குமூலத்தையும் இணைத்து நோக்கும்போது தர்க்க ரீதியாக தூக்குத் தண்டனைகள் பற்றி இருக்கின்ற பலவீனமான புள்ளிகள் விளங்கும்.  குறிப்பாக // “யாகூப் மேமனை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும்” என்று மனு அளித்தவர்களில் ஒருவரான துஷார் தேஷ்முக் கேட்கிறார்: “யாகூப் நிரபராதி என்றால், என் அம்மா எப்படி இறந்தார்? இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே?”// என்று கூறும்போது “மரண தண்டனை என்பதுவும் ஒரு கொலை” என்பதை உறுதிசெய்வதாக, பழி வாங்கலாகவே, அவற்றை உறுதி செய்வதாகவே இந்தக் கூற்று அமைந்துவிடுகின்றது.

இக்கட்டுரையை நிறைவாக்கும் பொருட்டு தன் கருத்துகளைக் கூறுகையில் சமஸ் கூறுகின்றார்,

//நாம் இந்தத் தவறைத் தொடர்ந்து செய்கிறோம், மரண தண்டனைக்கு எதிர்க் குரல் என்ற பெயரில் குற்றங்களிலிருந்து ஒருவரை விடுவிக்கும் வேலையில் ஈடுபடுவது; கூடவே நீதி அமைப்புகள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாகக் குலைப்பது. இது முறையற்றது மட்டும் அல்ல; நாம் எவருடைய உயிருக்காகக் குரல் கொடுக்கிறோமோ, அவர்களுக்கும் எதிராகத் திரும்பக் கூடியது. இன்னமும் நம் சமூகத்தில் மரண தண்டனைக்கு ஆதரவான குரல்களே ஆகப்பெரும்பான்மைக் குரல்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. வாதத்தில், நம்முடைய குரல்கள் உச்சத்தில் உண்மையற்றதாக மாறும்போது, எதிர்க் குரல்கள் உச்சத்தில் வெறுப்பை நோக்கியே நகரும்.

ஒரு கொலையை எதன் பொருட்டும் நியாயப்படுத்த முடியாது. இந்த ஒரு எளிய நீதி போதும் மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவதற்கு. ஒரு நாகரிகச் சமூகம் ஒருபோதும் மரணத்தை ஒரு நீதி வழிமுறையாகக் கொண்டிருக்க முடியாது. அதுவும் “கண்ணுக்குக் கண் என்பது ஒட்டுமொத்த உலகத்தையும் குருடாக்கவே வழிவகுக்கும்” என்று சொன்ன மகாத்மாவை தேசப் பிதாவாகக் கொண்ட இந்த தேசம் மரண தண்டனையைச் சுமந்துகொண்டிருப்பது அடிப்படை பொருத்தமற்றது. நாம் யாருடைய குற்றங்களுக்கும் வக்காலத்து வாங்க வேண்டியதில்லை. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். குற்றவாளி திருந்தி வாழ வாய்ப்பளிக்க வேண்டும். இது இன்றைக்கு யாகூப் மேமனுக்கு மட்டும் அல்ல; நாளை டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம் பிடிபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் பொருந்தும். கொலைகாரர்களுக்காகவும் பயங்கரவாதிகளுக்காகவும் ஒட்டுமொத்த சமூகமும் கொலைகாரர்களாகவும் பயங்கர வாதிகளாகவும் ஆக முடியாது!//

இதன் தோரணை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளே! அவர்கள் எத்தனை கொடூரங்களை வேண்டுமானாலும் அரங்கேற்றி இருக்கலாம்.  ஆனாலும், நாங்கள் “மகாத்மாக்கள்”! அவர்களையும் அவர்கள் செயல்களையும் பொறுத்தருள்கின்றோம் என்பதாக அமைகின்றது.  இந்த இடத்தில் எம் கண்ணுக்கு முன்னரே வெளிப்படையாகத் தெரிகின்ற ராஜீவ் கொலை வழக்கு என்கிற கபட நாடகத்தில் இருக்கின்ற ஓட்டைகளை கருத்திற்கொள்ளவேண்டும்.  அதை முன்வைத்தும் தன் பார்வைகளை மரணதண்டனை குறித்ததாக சமஸ் பார்க்கவேண்டும் என்று பிரயாசை கொள்ளுகின்றேன்.  மரண தண்டனை ஒழிப்பு என்பது ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர்!


குறிப்பு:

  1. ராஜீவ் காந்தி கொலைவழக்கு தொடர்பாக திருச்சி வேலுசாமியின் கருத்துகளை வைத்து நான் எழுதிய பதிவினை வாசிக்க : https://arunmozhivarman.com/2014/02/20/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86-2/
    1. ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்த் காலப்பகுதியில் சுப. வீராபாண்டியனுக்கும் சுப்ரமணிய சுவாமிக்கும் இடையிலான தொலைக்காட்சி விவாதம் : https://www.youtube.com/watch?v=E1CC82n0iI0
    2. http://tamizachi.com/articles_detail.php?id=337
    3. இக்கட்டுரையை எழுதுவதற்கான சமஸின் கட்டுரை
    4. வாசிப்பவர்களுக்கு இலகுவாக வேறுபடுத்திக் காட்டுவதற்காக சமஸின் கட்டுரையின் பாகங்கள் தடித்த எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளன.