ஒரு மாற்றத்திற்காக தொடர்ச்சியாக சில புனைவுகளைப் படித்துக்கொண்டிருப்பதுவும் நல்லதோர் அனுபவமாகவே இருக்கின்றது. அந்த வகையில் க.நா.சு எழுதிய சர்மாவின் உயில், ஒருநாள் ஆகிய இரண்டு புனைவுகளையும் அடுத்தடுத்து வாசிக்கமுடிந்தது.
“ஒருநாள்”, சாத்தனூர் என்கிற கற்பனை கிராமத்தில் மேஜர் மூர்த்தி கழிக்கின்ற ஒருநாளில் நிகழ்கின்ற நிகழ்வுகளையும், அவனது நினைவு மீட்டல்களையும், அவன் நிகழ்த்துகின்ற உரையாடல்களையும், அவை ஏற்படுத்துகின்ற சிந்தனைகளையும் கொண்டு எழுதப்பட்டது. அமைப்பு ரீதியில் இதனை குறுநாவல் என்று சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.
கிருஷ்ணமூர்த்தி என்கிற மூர்த்தி பெற்றோரை இழந்தவன். திருமணமான சகோதரி ஒருத்தி இருப்பினும் அவளது ஆதரவு இல்லாதவன். மாணவர் விடுதியில் சிறுவேலைகளை செய்து இலவசச்சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு கலாசாலையில் ஏழ்மை காரணமான இலவசமாணவனாகக் கற்றுவருகின்றான். கிருஷ்ணமேனன் என்ற ஆசிரியர் ஆராய்ச்சி ஒன்றிற்காக ஜேர்மனி செல்லும்போது இவனையும் தனது உதவியாளராக அழைத்துச் செல்கின்றார். 1936 இல், அவன் ஜேர்மனி சென்று இரண்டாண்டுகளின் பின்னர், கிருஷ்ணமேனன் கம்யூனிஸ்டுகளின் ஆதரவாளர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு நாடுகடத்தப்படுகின்றார். ஆயி,னும், தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆவலால் ஜேர்மனியிலேயே தங்கிவிடுகின்றான் கிருஷ்ணமூர்த்தி. ஜேர்மனியில் இருந்து படிக்கின்ற இந்தியமாணவர்களில் சிறந்தவனும் அவனே என்று பெர்லின் பேராசிரியர்கள் சிலராலும் மதிப்பிடப்படுகின்றான். ஆயினும் தனது படிப்பினை பூர்த்திசெய்யும் முன்னரே ஹிட்லரின் பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டு ஹிட்லரின் படைகளுடன் இணைந்துகொள்கின்றான். அதன் பின்னர் நேதாஜி சுபாஸ்சந்திரபோஸ் ஜேர்மனியில் இந்தியர்களுக்கு அழைப்புவிடுத்தபோது அவன் தன் தேசத்துக்காகவும், தன் மக்களுக்காகவும் போராடுவதே சிறந்தது என்ற முடிவுக்குவருகின்றான். ஹிட்லரின் ஜேர்மனி அவனுக்கு நரகமாகத் தோன்றுகின்றது. நேதாஜியின் படைகளுடன் இணைந்து அவருடன் ஜப்பான், மலேயா, பர்மா என்று பயணிக்கின்றான். மேஜர் மூர்த்தியாக பதவி உயர்வும் பெறுகின்றான்.
யுத்தம் ஓய்ந்து இந்தியாவும் சுதந்திரமடைய, அவன் கல்கத்தா ஊடாக சென்னை திரும்புகின்றான், சென்னையிலும், டில்லியிலும் வேலை தேடி பலரைச் சந்திக்கின்றான். ஆனால் அதில் அவனால் வெற்றிபெறமுடியவில்லை. சில வாரங்களிலேயே இனி தன் வாழ்வினை தானாகவே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை உணர்ந்துகொள்ளுகின்றான். பத்திரிகைகளில் வந்த அவன் புகைப்படத்தில் அவனை அடையாளம் கண்டுகொண்ட அவன் தாய்மாமா சிவராமையர் அவனை சாத்தனூருக்கு வந்து தங்கிச்செல்லுமாறு எழுதிய கடிதம் அவனுக்குக் கிடைக்கின்றது. எட்டுமணிக்குக் கடிதம் கிடைத்து பத்துமணிக்கே வண்டியேறி சாத்தனூருக்குப் பயணிக்கின்றான். அவ்வாறு சாத்தனூர் வந்துசேர்ந்து அவன் சாத்தனூரில் கழிக்கின்ற ஒரு நாளின் நிகழ்வுகளும், அவன் காணுகின்ற மனிதர்களும், அவன் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களும், எதிர்காலத்திட்டமிடல்களுமே ஒருநாள் என்கிற குறுநாவல்.
இக்குறுநாவலில் இரண்டாம் உலகப்போர் மற்றும் அதை ஒட்டிய நிகழ்வுகளை போரில் நேரடியாக ஈடுபட்டவனும் போரில் நேரடியாக ஈடுபடாதவர்களும் உரையாடல்களின் வழி அலசிப்பார்ப்பதை, போரின் நிமிர்த்தங்களை பரிசீலனை செய்வதை பல இடங்களில் காணலாம். சாத்தனூரில் இருந்து எத்தனைபேர் போருக்குச் சென்றார்கள் என்று வினவுகின்றான் மூர்த்தி.
“மூன்று நாலுபேர் நேரடியாக யுத்தகளத்துக்குச் சென்றிருந்தால் அதிகம். மற்றபடி மற்றவர்களெல்லாம், மறைமுகமாக யுத்தத்தில் பங்கெடுத்தவர்கள் தான்.
மறைமுகமாக என்றால்…?
யுத்தகாலத்தில் சாதாரண குமாஸ்தாக்களுக்குக்கூடக் கிராக்கி ஏறிவிடுகிறதே! அந்தக் கிராக்கியைப் பூராவும் பயன்படுத்திக்கொண்டவர்கள்தான் எல்லாக் குடும்பத்தாரும். குடும்பத்துக்கு ஒரு குமாஸ்தாவுக்குக் குறையாது. ஒன்றிரண்டு அதிர்ஸ்டக் குடும்பங்களில் ஏழெட்டுக் குமாஸ்தாக்கள் கூட உண்டு” (பக்கம் 86)
என்று அவனுக்கும் அவன் மாமாவுக்கும் இடையிலான உரையாடல் நகர்கின்றது. போரில் நேரடியாக ஈடுபட்டவர்களையும் மறைமுகமாக அதன் பாதிப்புகளை உணர்ந்தவர்களையும் ஒரே தட்டில் வைத்து எடைபோடமுடியாதென்றபோதும் போர் எப்போதும் அதில் ஈடுபடும் தேசங்களின், சமூகங்களின் சமூக, பண்பாட்டு, பொருளாதாரத் தளங்களில் ஒட்டுமொத்தமாக தாக்கம் செலுத்துவதாகவே இருக்கின்றது. போரினால் பணப்புழக்கம் கிராமங்களில் அதிகரித்தது பற்றியும் அப்படிப் பணப்புழக்கம் அதிகரித்தபோதும் வறுமைப்பட்டவர்களின் பணப்புழக்கம் அதிகரிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது (பக்கம் 87). அந்தச் சிறிய கிராமத்தில் இருந்து போருக்கு முன்னர் நான்கு தலைமுறைகளாக மக்கள் நகரங்களுக்கு நகர்ந்துகொண்டிருந்து உள்ளார்கள். இவ்வாறு மக்கள் கிராமங்களைக் கைவிட்டு நகர்களுக்குச் சென்றமையால் கிராமங்களில் இருந்த வீடுகள் பாழடைந்து போகின்றன. பின்னர் அந்த வீடுகள் இருந்த நிலங்களை உழுது பயிரிட்டு தோட்டங்களாக்குகின்றனர். சிவராமையரின் தாத்தா காலத்தில்கூட வீடுகள் இருந்த நிலங்களில் மூன்று தலைமுறையில் உழுது பயிரிட்டு தென்னந்தோப்புகள் ஆனதை சிவாரமையர் சுட்டிக்காட்டுகின்றார் (பக்கம் 97). ஆனால் போரின் காரணமாக நகரங்களில் நெருக்கடி ஏற்பட அங்கிருந்து மக்கள் மீண்டும் கிராமங்களை நோக்கி நகர்கின்றனர். மூர்த்தி மேலெழுந்தவாரியாகப் பார்க்கின்றபோதே பாதிக்குமேலான வீடுகள் புதுக்கிச் செப்பனிடப்பட்டிருப்பதைக் காணுகின்றான்.
மூர்த்தி நிலையான மனம் இல்லாமல் அடுத்தது, அடுத்தது என்று தாவும் மனநிலைகொண்டவனாகவே இந்நாவலில் காட்டப்படுகின்றான். ஹிட்லரின் கீழும், இந்திய தேசிய ராணுவத்திலும் இணைந்து போரில் ஈடுபட்டுவிட்டு தன் சொந்த நாட்டிற்கும், ஊரிற்கும் திரும்பும் அவன் போரினையும், போரில் ஈடுபடவைத்த அவனது குறிக்கோளினை அல்லது சிந்தனைப் போக்கினையும் மீள்பரிசீலனை செய்யவிளைகின்றான் அல்லது மீள்பரிசீலனை செய்யும் நிலைக்கு கொண்டுசெல்லப்படுகின்றான். தேசவிடுதலைக்காகப் போராடிய பல போராளிகள் போர் ஓய்ந்த பின்னர் “கைவிடப்பட்ட போராளிகளாக” மாற்றப்படுவதையும் திரு உருக்களாக மாற்றப்பட்டு, நடைமுறை வாழ்விலான அவர்களது தேவைகள் புறக்கணிக்கப்படுவதையும் அனேகம் போர்களினதும் போராட்டங்களினதும் வரலாறுகள் எமக்கு உணர்த்தியிருக்கின்றன. தான் கற்ற (ஆனால் முழுமை செய்யாத) கல்விக்கும், அனுபவங்களுக்கும், இந்திய தேசிய ராணுவத்தில் தான் பெற்ற பதவிக்கும் ஏற்பத் தான் நடந்து தன் தேசத்துக்கு உதவிசெய்து தீரவேண்டும் என்ற உறுதியுடன் இந்தியா திரும்பி உத்தியோகம் தேடுகின்றான் மூர்த்தி. ஆனால் இரண்டொரு வாரங்களிலேயே அவனுக்கு தன் எதிர்காலத்தை அவனே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது தெளிவாகிவிடுகின்றது (பக்கம் 21). இதன் தாக்கமே அவனை சாத்தனூர் வந்தபின்னர், சாத்தனூரில் (அல்லது கிராமங்களில்) போரின் தாக்கம் பற்றியும், எத்தனைபேர் போரில் ஈடுபட்டனர் என்பது பற்றியும், போர் பற்றியும் தொடர்ச்சியாக சிந்திக்கவும் உரையாடவும் வைக்கின்றது.
ஆரம்பத்தில் அவனுக்கு “இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது மகா யுத்தத்தின் கருமேகங்கள் இந்தியாவின் வடக்கு எல்லையில் கவிழ்ந்து கொண்டிருந்தபொழுதுங்கூட சாத்தனூரில் விலைவாசிகள் தவிர வேறு எதுவும் பாதிக்கப்படவில்லை” என்ற அவதானமே தோன்றுகின்றது (பக்கம்78). ஆனால் போரின் மறைமுகமான பாதிப்புகளைப்பற்றி சிவாராமையர் கூறும்போது அதனை ஏற்றுக்கொள்ளுகின்றான். அவன் இணைந்து போராடிய ஹிட்லரின் படைகள் தோற்ற தரப்பினர் ஆகின்றனர். இந்தியா சுதந்திரமடைந்தபோதும் கூட அதில் நேரடியாக இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பு பற்றிய அங்கீகாரம் தரப்படுவதில்லை. அவனும் (தேசத்தால்) கைவிடப்பட்ட போராளியாகின்றான். அவன் ஹிட்லரின் படையில் இருந்தது பற்றியும் பின்னர் நேதாஜியின் படைக்கு மாறியது பற்றியும் ஒரு நுகத்தடியில் இருந்து இன்னொரு நுகத்தடிக்கு மாறியது என்றே கருதுகின்றான். ஒருவேளை அவன் வெற்றிபெற்ற தரப்பினனாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்டவனாகவோ இருந்திருந்தால் அவனது மனநிலை இதுபோல இருந்திருக்காது என்றே கூறலாம். அவனது லட்சியங்களின் வீழ்ச்சியும் அதன் காரணமாக எழுந்த மதிப்பீடுகளின் வீழ்ச்சியும் அவனை கிராமிய முறையை (கிராம சமூகப் பொருளாதார முறைமையை) சரியான முன்மாதிரியாக கருதும்நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது. “முப்பது தலைமுறைகளில் அதிக மாறுதலில்லாமலேயே சாத்தனூர் சர்வமானிய அக்ரஹாரத்தில் வாழ்க்கை நடைபெற்று வருகிறது. இது குடும்பம் என்று, தனி மனிதனின் வாழ்க்கை என்று மகத்தான லட்சியமாகப் பட்டது மூர்த்திக்கு. இப்பொழுது என்று தனக்குள்ளேயே சேர்த்துக்கொண்டான் மூர்த்தி.”(பக்கம் 107). இங்கே குறுப்பிடப்படும் “இப்பொழுது” என்பது மூர்த்தியின் மதிப்பீடுகளில் ஏற்படும் மாறுதல்களை நுட்பமாக சுட்டுகின்றது.
சிறுவயது முதலே தனியனாக இருந்து, எந்தப் பந்தங்களும் இல்லாமல் சுதந்திரமாகவே முடிவுகளை எடுத்துப் பழகிய மூர்த்திக்கு குடும்பம் என்கிற பந்தம், பிணைப்பு அவசியமானதாகப்படுகின்றது. பொதுவாக மேற்கத்திய வழமைகளும் சட்டங்களும் தனிமனிதனை சமூகத்தின் ஆகச் சிறிய அலகாகக் கொண்டிருப்பவை. ஆனால் கீழைத்தேய –குறிப்பாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட தென்னாசிய- நாடுகளில் சமூகத்தின் ஆகச்சிறிய அலகாக குடும்பத்தினைக் கொண்டே மரபுகளும், சமூக அங்கீகாரமும் நடைமுறையில் இருக்கின்றன. ஆரம்பத்தில் மேற்கத்திய மனத்துடன் இருந்த மூர்த்தி மெல்ல மெல்ல குடும்பம், பந்தம் என்பவற்றை முக்கியமானதாக உணரும் கீழைத்தேய மனநிலைக்கு மாறுகின்றான். இது ஒருவிதத்தில் உளவியல் தாக்கங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் தெரபி / ஹீலிங் முறைகளை ஒத்ததாகவும் இருக்கின்றது. தொடர்ச்சியாக பதற்றமான, பரபரப்பான மனநிலையுடன் கூடிய வாழ்வை, அதை சாகசங்களாக நினைத்து அனுபவித்தவனுக்கு சாத்தனூர் சர்வமானிய அக்ரஹாரத்தில் நிலவிய அமைதியும் அங்கு வாழ்ந்த பலதரப்பட்ட குடுபங்களின் இருப்பும், எல்லாவற்றுக்கும் மேலான அவனது மாமாவும் மாமியும் வாழ்ந்த நிதானமான வாழ்வும் ஆதர்சமானதாகப்படுகின்றது.
இந்த சிந்தனையோட்டங்களின் தொடர்ச்சியாக கிராமமும், அதன் வழமைகளும் உயர்வானதாக மூர்த்திக்குத் தோன்றுகின்றது. அதேநேரம் பல இடங்களில் தெளிவானவர்களாக கருதும்படி கட்டமைக்கப்படுள்ள சிவராமையரும், அவர் மனைவியும், மூர்த்தியும் கிராமங்களின் சமூக நடைமுறைகளில் இருக்கின்ற அடிமைத்தனத்தையும், ஒடுக்குமுறைகளையையும் சேர்த்தே ஆதரிப்பது தெரிகின்றது. இந்த இடத்தில் தவிர்க்கவே முடியாமல் க.நா.சுவின் பிற நாவல்களிலும் – அண்மையில் வாசித்தது என்பதால் “சர்மாவின் உயிலை” நல்லதோர் உதாரணமாகக் குறிப்பிட்டுச் சொல்லமுடிகின்றது- இதே போன்ற பழம்பெருமை பேசுதல்களையும், பழைய மரபுகளை நியாயப்படுத்தி மீள வலியுறுத்தல்களும் பரவலாக இருப்பதைச் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. குறிப்பாக விதவைகள் குறித்து,
“மற்றவர்களுக்கு இருந்ததைவிட வாழ்க்கை அவர்களுக்கு சுலபமாகவே இருந்தது. வழிகள் சந்தேகத்துக்கு இடமின்றித் தீர்மானமாகிவிட்டன – பலருக்குப் பெரும் பிரச்சனையாக இருந்த பல விஷயங்கள் அவர்களுக்கு பிரச்சனையேயல்ல. தெருவிலே கன்னி விதவைகள் இருந்தார்கள் – வயது அதிகமாகாத விதவைகள் இருந்தார்கள் – ஒன்றிரண்டு விபச்சார விதவைகள் இருந்தார்கள். ஆனால் விதவைகளின் தொகைக்கு, விபச்சார விதவைகளின் சதவிகிதம் ரொம்பக் குறைவுதான். தற்காலத்து விதவா விவாக உரிமையை வற்புறுத்தும் நாவல்களைப் படித்தறியாததனால் விபசார விகிதம் குறைவாக இருந்ததோ என்னவோ, யார் சொல்ல முடியும்?”
என்பது கதை சொல்லியின் கூற்றாகவே இருக்கின்றது. இதை விதவா விவாகத்தை எதிர்க்கின்ற, விதவா விவாக உரிமைகளைப் பேசுவதை குரூரமாக எதிர்க்கின்ற, அதற்கெதிராக குயுக்தியுடன் பேசுகின்ற ஒருவரின் கருத்தாகவே பார்க்கமுடிகின்றது. அத்துடன் கிராமங்களை நோக்கி மக்கள் திரும்புவதை (கிராமிய வழமைகள் நோக்கி மக்கள் திரும்புவதை), அதன் கட்டுமானத்தை போற்றுகின்ற இந்த நாவல், சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெறவும், சாதிய ஒழிப்பை சாத்தியப்படுத்தவும் ஒடுக்கப்பட்ட சாதியினர் கிராமங்களை விட்டு நகரங்களிற்கு இடம்பெயர வேண்டும் என்று கூறப்பட்டதற்கு எதிரானதாக அமைந்திருப்பதை காணமுடிகின்றது. நாவலில் நுட்பமாக மூர்த்தியின் மன ஓட்டமும் இந்தத் திசையில் நகர்த்திச் செல்லப்படுகின்றது. மலைப்பாம்பை தோளில் போட்டுக்கொண்டு பிச்சை கேட்கும் ஒருவனைப் பார்த்து சிவராமையரிடம் “இவன் எதற்காகப் பிச்சைக்காரனாக வேஷம் போடவேண்டும்? என்கிறான் மூர்த்தி.
“வேலை செய்ய மனசில்லாத சோம்பல்தான் காரணமாக இருக்கவேண்டும்” என்கிறார் சிவராமையர்.
இவங்களை எல்லாம் கட்டாயப்படுத்தி வேலைவாங்கவேண்டும்”
என்று உரையாடல் தொடர்கின்றது. இதே சிவராமையர் பின்னர் இன்னொரு உரையாடலில் சாம்பமூர்த்திராயர் பற்றிய ஒரு உரையாடலில்
“அவர் தன் சுய தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள ஆத்மார்த்தமான ஒரு பரிபூரணத்தை எட்டிப்பிடிக்க ஆரம்பத்திலிருந்துகொண்டு முயன்று கொண்டு வந்தார். குதிரைச் சவாரி செய்யும் மணமகனாகவும், பிறகு சொத்துள்ள கிரஹஸ்தனாகவும், குடியானவனிடம் நெல் வேண்டாத மிராசுதாரராகவும், பண்டரிநாதனை பூஜிப்பவராகவும், பெண்டிழந்தவராகவும், குடிகாரராகவும், கூத்திமார் வீட்டிலேயும், பிறகு சகலமும் ஒடுங்கி நீ அறிந்த சாம்பமூர்த்திராயராகவும், சவுக்கண்டியில் சந்நியாசியாகவும் அவர் ஓர் ஆத்மதேவையைப் பூர்த்தி செய்யப் பாடுபட்டார்”
என்று வாதிடுகின்றார். ஆனால் பிச்சை எடுப்பவனை அவரால் சோம்பல் காரணமாகப் பிச்சை எடுக்கிறான் என்று சாதாரணமாகக் கடந்துசெல்ல மட்டுமே முடிகின்றது. இதேபோல இன்னோர் இடத்தில் மனுவினை நியாயப்படுத்துவதாயும் ஒலிக்கின்றது கதைசொல்லியின் குரல்.
“நியாயத்தை அடிப்படையாகக் கொண்டு மனுவோ, மோஸஸோ, குருகங்கோ தங்கள் சட்டங்களை இயற்றவில்லை. தங்களுக்கெட்டியவரையில் நியாயம், தர்மம் என்கிற நியதி வழுவாமலும், மனித சுபாவம் என்கிற அறிய முடியாத தத்துவத்தை ஒட்டியும், ஒரு தெய்வீக பலத்தினால், சுயநலமற்ற ஆன்ம பலத்தினால், சிந்தனை என்கிற தபோபலத்தினால் அவர்கள் உரியபடி வாழ்க்கை வழிகளை மனிதனுக்கு வகுத்துத் தந்தார்கள். இது சரியான பாதை நட என்றார்கள்.
இப்போது அவர்களது தெய்வீகத் தன்மையையும், தபசையும், நியாயத்தையும், தர்மத்தையும் நாம் சந்தேகிக்கத் தொடங்கிவிட்டோம்.
வாழ்க்கை வழிகள் இன்று கரடு முரடாகிக் கொண்டிருக்கின்றன…”
என்று தொடர்கின்றது அந்த வாதம். இதில் கவனமாக மோஸஸையும், குருகங்கையும் சாதியத்தை கட்டிக்காக்கும் மனுநீதியுடன் “கோர்த்து” விட்டிருக்கின்றார் க.நா.சு. மனுநீதி கட்டிக்காப்பது சாதியத்தையும் அதன் அடிப்படையிலான தீண்டாமை உள்ளிட்ட ஒடுக்குமுறைகளையும் தான் என்றுவைத்துப் பார்க்கின்றபோது, இந்தப் பிரதியின் நோக்கினையும் அதை நோக்கியதாகவே கருத முடிகின்றது. நாவலின் ஆரம்பத்தில் வீட்டுத் திண்ணையில் இருந்து சிவராமையரும், மூர்த்தியும் பேசிக்கொண்டிருக்கும்போது இடம்பெறும் நிகழ்வொன்றை நாவலில் இருந்து அப்படியே பகிர்ந்துகொள்வது பொருத்தமானதாக இங்கே இருக்கும்.
“தெருக்கோடியிலே மூங்கிற் புதரண்டை நின்றுகொண்டு, “சாமி, சாமி!” என்று யாரோ உரக்கக் கத்தினான். “பறையன் வந்திட்டான்” என்றார் சிவராமையர். காவேரிக்கரை போகும் வழியாக அவனைக் கொல்லைப்புறம் வரச் சொன்னார் சிவராம ஐயர். அக்ரஹாரத்துக்குள்ளே ஹரிஜன் வரக்கூடாது என்று கூறுவது உண்மைதான் என்று மேஜர் மூர்த்திக்கு அப்போதுதான் தெரிந்தது. கிறிஸ்துவிற்குப் பின் 1946 இலே மகாத்மா காந்தியின் இருபது வருஷப் பேச்சுக்கெல்லாம் பிறகும், இது சாத்தியமாக இருந்தது என்பது அவனுக்கு ஆச்சரியமூட்டுவதாகத்தான் இருந்தது. (பக்கம் 60)”
இவ்வாறு இருந்த மூர்த்தியின் சிந்தனைப் போக்கு நாவலின் இறுதியில் மனுநீதியை மீறி நடப்பதால் இன்று வாழ்க்கை கரடுமுரடானதாகிவிட்டது என்று கருதுபவனாக “ஒருநாளிலேயே” மாறிவிடுகின்றது. “ஒருநாளின்” நோக்கமும் பழமையின் மீட்டுருவாக்கமாகவே அமைகின்றது. சாத்தனூர் என்பது கற்பனைக் கிராமமா, அல்லது மனுநீதி பேணும் கனவுக் கிராமமா என்பதே இப்போது என் சிந்தனையாக இருக்கின்றது.
இக்கட்டுரை கனடாவில் இருந்து வெளிவரும் உரையாடல் என்கிற காலாண்டு இதழில் வெளியானது.
இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு படங்களும் முறையே கேசவமணியின் இணையத்தளத்தில் இருந்தும் காலச்சுவடு தளத்தில் இருந்தும் பெறப்பட்டவை.
Leave a Reply