புஷ்பராணி அவர்களுக்கு,
அகாலம் குறித்து நான் வாசித்த கட்டுரை தொடர்பான உங்களது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தீர்கள். நன்றி. அவை தொடர்பாக எனது விளக்கங்கள்.
அகாலத்தை ஒரு அனுபவப்பிரதியாக எழுதி இருந்தீர்கள். எனவே நீங்கள் எவ்விதம் உணருகின்றீர்களோ அல்லது உங்கள் நிலைப்பாடு எவ்விதம் இருக்கின்றதோ அதுவே உங்கள் பிரதியில் பதிவாகும். அதே நேரம் அகாலத்தை மட்டுமல்லாமல் ஈழப்போராட்டம் தொடர்பான அனைத்துப் பிரதிகளையும் ஆர்வமுடம் படிப்பதும், அவை பற்றிய உரையாடல்களில் ஈடுபடுவதும் ஒருவிதத்தில் ஈழப்போராட்டம் தொடர்பான case study ஒன்றுக்கான எனது முயற்சி என்றே கருதுகின்றேன். அவ்வகையான வாசிப்பு ஒன்றில் நீங்கள் பார்க்கின்ற பார்வைக்கும் அது தொடர்பாக ஆய்வுநோக்குடன் நான் பார்க்கின்ற பார்வைக்கும் நிச்சயம் மாறுதல் இருக்கும். அந்தத் தெளிவுபடுத்தல் உடனே இந்த உரையாடலை மேற்கொள்ள விரும்புகின்றேன்.// தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்துபோது வாழ்வுக்கு வருகின்ற பெண் ஒருவர் எதிர் கொள்கின்ற சிக்கல்கள் …”அப்படிஎன்றால் என்ன.பொது வாழ்வுக்கு நான் வந்தபோது சமூகத்திலிருந்து சிக்கல் எதுவும் வரவில்லையே..34ம் 36ம் பக்கங்களில் நான் எழுதியவை பற்றி நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை ?..அதாவது ,ஒரு தனிக்குடும்பமாக எனது குடும்பம் ராங்கியாகவே வாழ்ந்தது. எந்தக் காலத்திலும் சாதியைச் சொல்லி எம்மிடம் , யாரும் வாலாட்ட நாம் அனுமதித்ததில்லை.இதுபற்றி அகாலத்தில் விரிவாக எழுதியுள்ளேன்.எனது குடும்பமே ஒரு தீண்டாமை ஒழிப்பு இயக்கமாகவே இருந்தது.//
என்று கூறி இருந்தீர்கள். இது தொடர்பான எனது விளக்கத்தைக் கூறுகின்றேன். அதற்கு முன்னர் இதே அகாலம் நூலிலேயே, கருணாகரன் எழுதியுள்ள முன்னுரையில் பின்வருமாறு கூறுகின்றார்,
“இந்த நிலையில், 1950 இல் இலங்கையில் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவொன்றிற் பிறந்த பெண் ஒருவர் எத்தகைய நெருக்கடிகளுக்கும் அவலத்திற்கும் உள்ளாகியிருப்பார் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். இவ்வாறான ஒருவர் சாதாரணமாகவே இன ரீதியாகவும், சாதி ரீதியாகவும், பெண்ணென்ற நிலையிலும் பலமுனைகளில் நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டும். அதிலும் அரசியல் ஈடுபாட்டைக்கொண்ட பெண் என்றால் இந்த நெருக்கடிகளைச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு அவை எல்லை மீறியவை. இத்தகைய நெருக்கடிகளையும் அவலத்தையும் சந்தித்தவரே புஷ்பராணி”
மேலே நான் குறிப்பிட்டிருக்கும் கருணாகரனின் கூற்று உங்கள் நூலிலேயே, முன்னுரையாக உள்ளது. எனவே நீங்கள் முரண்படுவது ஒருவிதத்தில் உங்கள் நூலுடனும், அதில் உள்ள முன்னுரையுடனும் கூட! ஆயினும் இந்த விடயத்தில் எனது பார்வையும் கருணாகரனின் பார்வையை ஒட்டியதாகவே இருக்கின்றது. அதேநேரம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, உங்கள் நூல் பற்றிய எனது கட்டுரை ஈழப்போராட்டம் தொடர்பான case study ஒன்றிற்கான முயற்சிகளில் ஒன்றே. எனது கட்டுரையில் நான் குறிப்பிடுவதை மீளவும் இங்கே வழங்குகின்றேன்,
“குறிப்பாக ஓரு பெண் சைக்கிள் ஓடுவதே அதிசயமாகப் பார்க்கப்பட்ட ஒரு காலத்தில், பெண்கள் வேலைக்குச் செல்வதோ, மேற்படிப்புக்குச் செல்வதோ கூட அரிதாகவே நிகழ்ந்த 70களின் தொடக்கத்தில் அரசியலில் முழுமையாக அர்ப்பணிப்புடன் ஈடுபடுகின்றார் புஷ்பராணி. அதனை அவர் பதிவுசெய்கின்றபோது அது பல்வேறு விடயங்களுக்கான பதிவாக மாறுகின்றது.
- விடுதலைப் போராட்டம் ஒன்றில் ஈடுபடும் போராளி ஒருவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும், அவர் பெண்ணாக மேலதிகமாக எதிர்கொள்ளும் சிக்கல்களும்
- அவ்வாறு போராட்டத்தில் ஈடுபவும் ஒருவரின் குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கல்கள்
- தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பொதுவாழ்விற்கு வருகின்ற பெண் ஒருவர் எதிர்கொள்ளுகின்ற சிக்கல்கள்
- ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் போராட்டம் வெகுஜனமயமாக்கப்படலும், அகிம்சை ரீதியான போராட்டம் ஆயுதப் போராட்டமாக நகர்தலும் நிகழுகின்ற ஒரு கால கட்டத்தின் பதிவு
அகாலம் நூலை வாசித்தது மூலமாக ஈழப்போராட்டத்தின் ஒரு குறித்த காலப்பகுதி தொடர்பான எனது அவதானங்கள் இவை. “பொலிசாரின் வசை மொழிகள் என்னைப் பொறுத்தவரை செல்லாக்காசுகள்.!” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் உங்களுக்குரிய அதே நிபந்தனைகளுடன் இருக்கக்கூடிய இன்னும் ஒருவரும் அவ்வாறே சொல்வார் என்பது நிச்சயமில்லை அல்லவா?
அடுத்து வரதராஜப் பெருமாள் குறித்த உங்கள் கருத்துகளுக்கு வருவோம். எனது கட்டுரையில் நான் இரண்டு இடங்களில் அழுத்திக் கூறிய விடயமே “உண்மையில் ஆரம்பகால ஈபிஆர் எல் எஃப் போராளிகளுடன் பேசுகின்றபோதும், அவர்கள் பற்றி வாசிக்கின்ற போதும் எமக்கு எழும் கேள்வியே, ஒரு காலத்தில் இத்தனை உயரிய வேலைத்திட்டங்களை வைத்திருந்த ஈபிஆர் எல் எஃப் இனர் எவ்வாறு இந்திய ராணுவ காலத்தில் இத்தனை கொடூரங்களையும் நிறைவேற்றினர் என்பதே” என்பது தான்! தவிர உங்கள் இருபதாம் பருவத்திலிருந்தே உங்களோடு அரசியலில் ஒன்றாக இயங்கிய வரதராஜப்பெருமாளின் நல்லியல்புகளும். அதி புத்திசாலித்தனமும் உங்களுக்கு நன்கு தெரிருக்கலாம். அவற்றின் அடிப்படையில் அமைந்த உங்கள் கருத்துகளை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் அதை வாசிக்கின்ற எனது பார்வையில்
“உண்மையில் ஆரம்பகால ஈபிஆர் எல் எஃப் போராளிகளுடன் பேசுகின்றபோதும், அவர்கள் பற்றி வாசிக்கின்ற போதும் எமக்கு எழும் கேள்வியே, ஒரு காலத்தில் இத்தனை உயரிய வேலைத்திட்டங்களை வைத்திருந்த ஈபிஆர் எல் எஃப் இனர் எவ்வாறு இந்திய ராணுவ காலத்தில் இத்தனை கொடூரங்களையும் நிறைவேற்றினர் என்பதே. இவற்றுடன் நேரடியாகச் சேர்த்தே வரதராஜப் பெருமாளின் முதலமைச்சர் பதவிக் காலமும் பார்க்கவேண்டியதாகின்றது. வரதராஜப் பெருமாள் மீது எந்த விமர்சனமும் இன்றிக் கடந்துசெல்லும் புஷ்பராணி, வட-கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் எதிர்கொண்ட ஆபத்துகளும் துன்பங்களும் ஏராளம் என்று கூறுவதும் “இன்றைக்கிருக்கும் தமிழ்த் தலைவர்களில் மிகச் சிறந்த வரலாற்று அறிவும் தெளிவான அரசியல் பார்வையும் கொண்டவராக நான் வரதராஜப் பெருமாளையே சொல்வேன். எனினும் வரதராஜப் பெருமாளின் பாத்திரம் ஒரு சிந்தனையாளருக்கு உரியது மட்டுமே. இன்றைய அரசியல் நெளிவு சுழிவுகளில் நீச்சலடித்து ஒரு முன்னணி அரசியல்வாதியாக விளங்க அவரது இயல்பு அவரை அனுமதிக்கப்போவதில்லை” என்று நற்சாட்சிப் பத்திரம் வழங்குவதும மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அமைகின்றது.”
என்றே தோன்றுகின்றது. “வரதராஜப் பெருமாள் தன் சக தோழர்களைப் படுகொலை செய்து புதைத்துவிட்டுப் போய்க்குகொண்டே இருக்கவில்லையே…… “ என்று நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் அவர் சாந்திருந்த அமைப்பு அதே இந்திய ராணுவ காலப்பகுதிகளில் செய்த கொலைகளுக்கும் கட்டாய ஆட்சேர்ப்பிற்கும், அந்த அமைப்பின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான வரதராஜப் பெருமாள் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டாரா? இந்தப் பழிகளில் இருந்து அவருக்கு எவ்விதம் நீங்கள் விடுதலை அழிக்கின்றீர்கள்?
கூட்டணித்தலைவர்கள் பற்றி உங்களது கருத்தினைப் பற்றிய எனது பார்வையை எனது கட்டுரையிற் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்,
இன்றுவரை முற்போக்குத் தமிழ்தேசியவாதம் ஒன்றினை முன்னெடுப்பதற்கான எல்லாத் தடைகளையும் அன்றைய கூட்டணித் தலைவர்களின் பாணியிலான உணர்ச்சி அரசியலை முன்னெடுப்பவர்களே செய்கின்றார்கள் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது. ஆயினும், பின்னாளைய ஆயுத இயக்கங்கள் சென்றடைந்த மோசமான பாதையும் அவற்றின் விளைவுகளும் போரின் இறுதியில் நிகழ்ந்த மானுட அவலங்களும் ஏற்படுத்திய விரக்தியே கூட்டணித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்த புஷ்பராணி போன்றவர்களைக் கூட அவர்ககளே பரவாயில்லை என்னும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கலாம் என்றாலும், அரசியல் ரீதியில் அது சரியான நிலைப்பாடு அல்ல என்றே கருதுகின்றேன்.
கூட்டணியினர் பற்றிய உங்களது பார்வை அரசியல் ரீதியாக சரியானதல்ல என்பதையே நான் குறிப்பிட்டிருந்தேன். அன்றைய கூட்டணித் தலைவர்கள் செய்த உணர்ச்சியூட்டப்பட்ட அரசியலினதும், தமது சுயலாபங்களுக்காக அவர்கள் நியாயம் கற்பித்த அரசியற் கொலைகளையும் பற்றி நீங்களே அகாலத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். குறிப்பாக அகாலம் என்கிற 30 வது அத்தியாயத்தில் நீங்களே பின்வருமாறு குறிப்பிடுகின்றீர்கள்,
“தமிழ்ப் போராளி இளைஞர்கள் ஆரம்ப காலத்தில் நடத்திய அரசியற் கொலைகளிற்கு கூட்டணியினர் மறைமுகமாக ஆதவளித்தது மிகப் பெரும் தவறு. அந்தத் தவறு பூதாகரமாக வளர்ந்து கூட்டணித் தலைவர்களை மட்டுமல்லாமல் ஆயிரக் கணக்கான மக்களையும் அழித்துப் போட்டது. தமிழீழ விடுதலைப் போராளிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்கள் என்று கூட்டணியினர் போட்ட அரசியற் கணக்கு பிழைத்துப் போனது”
எனவே உங்களின் வாதத்தின்படியே பின்னாளைய பேரழிவுகளுக்கெல்லாம் மூல காரணங்களாக அமைந்தவை கூட்டணியினர் மேற்கொண்ட நகர்வுகளும் கடைப்பிடித்த நிலைப்பாடுகளும் அல்லவா? அப்படி இருக்கின்றபோது அவர்களது நல்லியல்புகளும் மில்லியன் கணக்காக அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை என்பதும் அவர்களை வரலாற்றுப் பழியிலிருந்து விடுதலை செய்துவிடுமா? அவர்கள் மில்லியன் கணக்காக கொள்ளை அடிக்காமல் இருந்தார்கள் என்பதால் நீங்கள் குறிப்பிட்ட “(கூட்டணியினரின்) அந்தத் தவறு பூதாகரமாக வளர்ந்து கூட்டணித் தலைவர்களை மட்டுமல்லாமல் ஆயிரக் கணக்கான மக்களையும் அழித்துப் போட்டது.” என்கிற குற்றச்சாற்றில் இருந்தாவது கூட்டணியினர் விடுதலை பெற்று விடுவார்களா?
எனது வாதங்களை அனைத்தையும் நீங்கள் எழுதிய அகாலம் நூலில் இருந்தும் அது பற்றி நான் வாசித்த கட்டுரை தொடர்பாக நீங்கள் எழுப்பிய விமர்சனங்களில் இருந்தும் மாத்திரமே முன்வைக்கின்றேன் என்பதை மீள ஒருமுறை நினைவூட்ட விரும்புகின்றேன்.
நன்றி.
என்றென்றும் அன்புடன்
அருண்மொழிவர்மன்
பின்குறிப்பு :
ஓகஸ்ட் 3ம் திகதி உங்களது முகநூல் குறிப்பொன்றில் “என் காதில் விழுந்த சில விடயங்களில் இருந்து…..பால குமாரனுக்கு அப்போது [புலோலிச் சம்பவம் நடைபெற்று எம்மோடு சிறைக்கு வந்தபோது]வயது 25 அல்ல. 27 அல்லது 28 வயது ..இது எனக்கு நன்றாகத் தெரியும்.அகாலத்தில் ,அவருக்கு 25 வயது என்று நான் குறிப்பிடவில்லையே…எதற்காக இந்தச் சந்தேகம் வந்தது?…”
என்று இருந்ததைக் காண நேர்ந்தது. இதனுடன் தொடர்பானவன் நான். அன்று எனது கட்டுரையை வாசித்து முடித்த பின்னர், அவையில் இருந்தவர்களை, அவர்களில் அனேகம் பேர் எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள், நண்பர்கள் என்பதால் “இவ்வளவும் தான் எனது கட்டுரை, மற்றும்படி தெளிவுபடுத்துவதற்காகக் கேட்கின்றேன். இந்த விடயங்கள் பற்றி புத்தகத்தில் இருக்கின்ற தகவல்கள் பிழையாய் இருக்குமோ என்று கருதுகின்றேன் என்ற அடைமொழியுடனேயே, இதில புலோலி வங்கிக் கொள்ளை நடந்தபோது பாலகுமாரன் வங்கி முகாமையாளராக இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில அவருக்கு கிட்டத்தட்ட 25 வயசு அப்படி இருந்திருக்கும். அந்த இள வயதில் ஒருவர் வங்கி முகாமையாளராக பதவி வகிக்க முடியுமா?“ என்று கேட்டிருந்தேன். அது என்னைத் தெளிவுபடுத்த நான் கேட்ட கேள்வி. அரங்கில் இருந்தவர்களே அது கிராமிய வங்கி என்பதனால் இளவயதில் முகாமையாளராகும் வாய்ப்பு இருந்தது என்று குறிப்பிட்டனர். அரங்கில் வைத்தே, அப்படியென்றால் மன்னிக்கவும் என்று கூறியும் இருந்தேன். உங்களிடம் இச்சம்பவம் குறித்து அரைகுறையாகக் கூறியவர்கள் எனது தவறை நான் ஒப்புக்கொண்டதைக் கூற மறந்துவிட்டனர். அவர்களுக்காக வருந்துகின்றேன்.
குறிப்பு:
வாசிப்பவர்களுக்கு தெளிவை ஏற்படுத்துவதற்காக புஷ்பராணி அவர்களின் கூற்றுகளை நீல நிறமாக வேறுபடுத்திக் காட்டியுள்ளேன்.
Leave a Reply