ரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் | வேர்களைத்தேடி நாடகம்

ரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ்

downloadரொரன்றோவில் இருந்து வசந்த காலத்துக்கும் கோடை காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும், இலையுதிர் காலத்துக்கும் பனிக்காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும் ஆண்டொன்றிற்கு இரண்டு இதழ்களாக சென்ற ஆண்டு முதல் The Humber Literary Review என்கிற இலக்கிய இதழ் ஒன்று வெளிவருகின்றது.  இதன் மூன்றாவது இதழில் The Pharaoh’s Refusal or, The Right To Eat Peas With Knife” என்கிற Alberto Manguel எழுதிய அருமையான கட்டுரை வெளியாகி உள்ளது.

ஆஜெந்தீனாவில் பிறந்த Alberto Manguel கனேடிய குடியுரிமை பெற்றவர்.  “வாசிப்பு” பற்றியும் வாசிப்பு அனுபவங்கள் பற்றியும் தொடர்ச்சியாக எழுதிவருபவர்.  இவர் பாடசாலையில் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் புவனஸ் அயர்ஸில் மாலைநேரங்களில் ஒரு புத்தகக் கடையில் பகுதிநேரமாக வேலை செய்துவந்தார்.  அந்தக் கடைக்கு வந்த போர்ஹே, பகுதிநேர வேலையாக தனக்கு புத்தகங்களை வாசித்துக் காட்ட முடியுமா என்று கேட்க, ஆல்பர்ட் மங்குவலும் அதற்கு ஒத்துக்கொண்டார்.  இறுதிக்காலங்களில் கண்பார்வை குன்றியிருந்த போர்ஹேயிற்கு புத்தகங்களை வாசித்துக் காட்டியவர் ஆல்பர்ட் மங்குவல்.  அந்த அனுபவங்களை சுவைபட With Borges என்கிற சிறு நூலாக வெளியிட்டுள்ளார்.

இவர் எழுதிய A Reading Diary, A History of Reading, A Reader on Reading ஆகிய நூல்கள் வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமானவை.  அதேநேரம் வாசிப்பின் பல்வேறு பரிமாணங்களையும் அந்த அந்தக் காலகட்டங்களுடன் அவற்றுக்கு இருந்த வரலாற்றுத் தொடர்பையும் இந்நூல்களின் வழியே தெரிந்துகொள்ளலாம்.  இந்த இதழில் மரபான அச்சுப் பிரதிகளை வாசித்ததில் இருந்து, தற்போது மின்னணு வாசிப்புக் கருவிகளில் வாசிப்பது பற்றியும், மின்னூல்கள் பற்றியதுமான தன் அனுபவங்களைச் சுவைபடச் சொல்லியுள்ளார்.  அச்சுப் பிரதிகளின் காலத்தைச் சேர்ந்த எனக்கு இன்று வரை மின்னூல்களிலான வாசிப்பு முழுமையாகக் கைகூடவில்லை என்றே சொல்லவேண்டும்!  அச்சுப்பிரதிகளுடன் ஒப்பிடும்போது கிரகித்தலுக்கும், ஆழ்ந்த வாசிப்புக்குமான சாத்தியம் குறைந்தனவாகவே மின்னூல்கள் எனக்குத் தோன்றுகின்றன.  ஆல்பர்ட் மங்குவலின் கட்டுரையும் அதையே பேசுகின்றது.

இதே இதழில் Chris Kuriata எழுதிய Lies I Tell Taxi Drivers என்கிற சிறுகதையும் முக்கியமான ஒன்று.  ரொரன்றோவில் இருக்கின்ற SPA ஒன்றில் வேலை செய்கின்ற பெண் கூறுவதாகக் கதை அமைகின்றது.  இந்தக் கதையில் குறிப்பிடப்படும் SPA, வயது வந்தவர்களுக்கான கேளிக்கை மசாஜ் வழங்கும் Spa என்று அறியமுடிகின்றது.  அவ்வாறு வேலை செய்யும் பெண்கள் எவ்விதம் போலி அடையாளங்களைக் காண்பித்துக் கொள்ளுகின்றார்கள் என்றும், அதற்குப் புறத்தே அவர்கள் எப்படி தமக்கான குடும்ப வாழ்வில் இருக்கின்றார்கள் என்றும் நுட்பமாக உணர்த்துவதுடன், அவர்களின் தனிமனித உணர்வுகளையும், பிறருடனாக உறவுகளையும், அவர்கள் பாலியல் ரீதியாக மிக இலகுவாக அணுகக்கூடியவர்கள் என்று சமூகத்தில் இருக்கின்ற பொதுப்புத்தி பற்றியும் இக்கதை கூறுகின்றது.

புலம்பெயர் இலக்கியம் என்பது ஈழத்தவர்களைப் பொறுத்தவரை இன்னமும் குறித்த சில விடயங்கள் பற்றி மாத்திரமே பேசிக்கொண்டிருக்கின்றது.  நாம் வாழுகின்ற கனடாவிலேயே நாம் பேசவே தொடங்காத எத்தனையோ விடயங்கள் இருப்பது இது போன்ற கனேடிய இலக்கிய இதழ்களைப் படிக்கின்றபோது வெளிப்படையாகத் தெரிகின்றது.  கனேடிய மைய நீரோட்டத்துடன் கூடுதலான பரீட்சயம் கொண்டிருக்கக் கூடிய இளைய தலைமுறையினர் எழுத வரும்போது இவை இன்னமும் நுணுக்கமாகப் பதிவாகும் என்று நம்புகின்றேன்.

000

வேர்களைத் தேடி

பொன்னையா விவேகானந்தனின் உருவாக்கத்தில் கனடா இலக்கியத் தோட்டத்தினரால் வழங்கப்பட்ட வேர்களைத் தேடி என்கிற நாடகத்தை ஜூலை 25ம் திகதி பார்க்க்க் கிட்டியது.  அனுபவம் வாய்ந்த பல நாடகக் கலைஞர்களின் நடிப்பில் உருவான இந்த நாடகம் முன்வைக்கின்ற கருத்து முக்கியமானது.  இன்னும் மூன்று தலைமுறைக்குப் பின்னர் கனடாவில் வாழக்கூடிய தமது இன அடையாளங்களை முற்றாகத் தொலைத்துவிட்ட ஒரு தலைமுறை இளைஞர்கள் தமது அடையாளங்களைத் தேட முற்படுகிறார்கள்.   அதற்கான மார்க்கமாக தமிழர்களின் மரபான கலைகளைத் தேடிப் பயிலத் தொடங்குகின்றனர்.  நாடகத்தின் முடிவில் பொன். அருந்தவநாதன் குழுவினரின் காத்தவராயன் தென்மோடிக் கூத்தும் நிகழ்த்தப்பட்ட்து.  இந்நாடகத்தில் இளைய தலைமுறையினைச் சேர்ந்த, 18 வயதுக்குட்பட்ட ஐந்துபேர் சிறப்பாக நடித்திருந்தனர்.  குறிப்பாக கூத்துக் கலைஞரான ரமணீகரனின் மகனான றதுஸ்கரன் மிகச் சிறப்பாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார்.


குறிப்பு:

இக்கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் நான் எழுதும் சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற தொடரில் ஓகஸ்ட் 2015 இதழில் வெளியானது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: