அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் கண்ணன் பாமினி எழுத்துருக்களைப் பற்றிச் சில கருத்துகளைக் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து முகநூலில் தொடர்ச்சியான விவாதம் ஒன்று இடம்பெற்றது. அந்தக் குறிப்பினைப் பார்த்தபோது அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை விட கண்ணனின் தொனியே மிகவும் மோசமானதாகவும், மேட்டிமைத்தனத்தைத் காட்டுவதாயும் அமைந்திருந்தது. அதைத்தொடர்ந்து தனது சிறுகதைகளால் பரவலாக அறியப்பட்ட ரஞ்சகுமார் கண்ணனின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் முன்வைத்த முக்கிய வாதம்,
//எல்லோருக்கும் உடனே புரியக்கூடிய ஒரேயொரு
உதாரணம் தருகிறேன்.
ர் ரி ரீ போன்ற எழுத்துக்கள் பாமினி குடும்பத்தில்
காலொடிந்து வரும். அதாவது ‘அரவு’ இன்மேல் குற்றும் விசிறிகளும் வரும். இது மகா தவறு.
எந்தவொரு பாடநூல் ஆசிரியரோ, பாடவிதான சபையோ இதை அங்கீகரிக்கப் போவதில்லை.//
என்று அமைகின்றது. இதனை எடுத்து நோக்குவோம். கனடாவில் இருந்து வெளிவரும் தாய்வீடு பத்திரிகை பாமினி குடும்ப எழுத்துருக்களையே உபயோகப்படுத்துகின்றது. அதன் ஒக்ரோபர் மாத இதழ் இன்னும் வலைத்தளத்தில் ஏற்றப்படவில்லை என்றாலும் அதற்கு முன்னைய இதழ்களை http://thaiveedu.com/ என்ற தளத்தில் பார்வையிடலாம். பாமினி குடும்ப எழுத்துளையே உபயோகிக்கும் அந்தப் பத்திரிகையில் ரஞ்சகுமார் முன்வைக்கின்ற ர்,ரி,ரீக்கு காலொடிந்துவரும் பிரச்சனை நேர்வதில்லை. சிலசமயங்களில் உள்ளிடுபவர் சரியாக உள்ளிடாததன் விளைவாக நேரும் தவறுகளே பாமினியைப் பொறுத்தவரை “அரவு” மேல் புள்ளி வைத்தும் விசிறி வைத்தும் எழுதும் எழுத்துகள். எனவே இது பாமினியின் பிழை அல்ல. இன்னும் சொல்லப்போனால், இதற்கான தீர்க்கமான தீர்வையும் அனேகமான தமிழகத்துப் பத்திரிகைகளும் பதிப்பகங்களும் பாவிக்கின்ற எழுத்துருக்களைவிட பாமினியே தருகின்றது.
மாறாக, பாமினி பற்றி அலுத்துக்கொள்ளும் கண்ணனி காலச்சுவடு இதழ்களில்தான் இங்கே ரஞ்சகுமார் வைக்கின்ற குற்றச்சாட்டு நிகழுகின்றது. செப்ரம்பர் மாத காலச்சுவடையே எடுத்து நோக்குவோம். அதன் அட்டையில் “யாராக இருந்தார் கலாம்?”, “இந்தி எதிர்ப்பில் இளையராஜா” என்கிற இரண்டு கட்டுரைகளிலும் அரவுக்கு மேல் புள்ளியிடும் முறையே இருக்கின்றது. அது மட்டுமல்ல, செப்ரம்பர் மாத தீராநதி இதழை எடுத்துப் பார்த்தாலும் கூட, அதன் அட்டையிலேயே “நேர்காணல், நேர்கண்டவர், சிவகுமார், ஈழத்தமிழர், எதிர்ப்பும்” ஏகிய சொல்களில் அரவின் மேல் புள்ளியிடும் வழமையே தொடர்கின்றது. அதாவது ரஞ்சகுமார் “சொல்கின்ற எந்தவொரு பாடநூல் ஆசிரியரோ, பாடவிதான சபையோ இதை அங்கீகரிக்கப்போவதில்லை” என்பது மேலே குறிப்பிட்ட தமிழக இதழ்கள் பயன்படுத்துகின்ற எழுத்துருக்களுக்கே சாலப் பொருந்தும். அந்த அடிப்படையில் அவற்றுக்கான சரியான தீர்வு பாமினி என்பதை தர்க்கரீதியாக நேரடியாக விளங்கிக்கொள்ளலாம். மேலதிக விளக்கத்திற்காக இந்த இரண்டு இதழ்களின் அட்டைப்படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்:
இதைவிட முக்கியமானதாக
//பாடப் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் கதை கட்டுரை புத்தகங்களிலும் பயின்ற எழுத்துருக்களே முதன்முதலில் கணினிமயமாக்கப்பட்டன. அவற்றை தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தினார்கள். பிறகு இலங்கை அரச அச்சகத்தில். அங்கிருந்து களவாக எடுக்கப்பட்ட எழுத்துருக்களிலிருந்தே பாமினி தோன்றியது//
என்கிற பாரதூரமான குற்றச்சாற்றையும் சுமத்தியிருந்தார். பிற்பாடு விவாதத்தில் பங்கேற்றவர்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து மேற்படி இரண்டு குற்றச்சாற்றுகளையும் தான் தவறுதலாகக் குறிப்பிட்டுவிட்டதாகக் கூறி பின்வாங்கினாலும் பாமினி எழுத்துருக்கள் மோசமானவையே என்பதைக் காட்ட புதிது புதிதாகக் வேறு குற்றச்சாற்றுகளைக் கூறியும் இருந்தார். இவற்றுக்கான பதிலையும் தொழினுட்ப ரீதியான விளங்கங்களையும் வரைகலைத் துறையில் இருப்பவர்களும் எழுத்துருக்கள் பற்றிய நுட்பங்கள அறிந்தவர்களும் வழங்குவதே பொறுத்தமாக இருக்கும். அதேநேரம் தொடர்ச்சியான இந்த விவாதங்களில் உறுத்தலாகத் தெரிந்தது கண்ணனின் தொனியும் அவர் தமக்கு அந்நியமான “பிறராக” ஈழத்தமிழரை வைத்துத் தெரிவித்த கருத்துகளே. இங்கே கண்ணன் ஒரு உதாரணம் தான். இது போன்ற அணுகுமுறையை தொடர்ச்சியாக எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த மனநிலை எங்கிருந்து வருகின்றது? தமக்குரிய (தமிழகத்து) நியமங்களுள் பொருந்திக்கொள்ளும்படியாக ஈழத்தமிழர்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு என்பன எந்த அடிப்படையில் எழுகின்றது என்பவையெல்லாம் நுணுக்கமாகக் கவனிக்கப்படவேண்டியவை.
அண்மையில் ரொரன்றோவில் இடம்பெற்ற ரதனின் “எதிர் சினிமா” நூல் வெளியீட்டுவிழாவில் பேசிய கங்காதரன் கந்தசாமி, Gun and the ring திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட முயன்றபோது அதில் இருக்கின்ற ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கு புரிந்துகொள்ளச் சிரமமாக உள்ளதாகவும், அதனை தமிழகத்தில் பாவனையில் இருக்கின்ற வட்டாரவழக்கு ஒன்றிற்கு “டப்” பண்ணித்தந்தால் புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும் என்று ஆலோசனை கூறப்பட்டதாகக் கூறியிருந்தார். இவை எல்லாவற்றையும் இணைத்தே இந்த பெரியண்ணன் மனநிலையைப் பார்க்கவேண்டியிருக்கின்றது. ஒருவனை அடிமையாக வைத்திருக்கச் சிறந்த வழி அவன் அடிமை என்று அவனையே நம்பப்பண்ணிவிடுவதுதான். அதைச் செய்யத்தான் இந்தப் பெரியண்ணன்கள் கடுமையாக முயன்றுகொண்டிருக்கின்றார்கள்.
ஈழத்தமிழர்கள் ஆகிய எமது இலக்கியம், எமது பண்பாடு, எமது திரைப்படம் என்று எல்லாமே எமக்கான தனித்துவமான அடையாளங்களைக் கொண்டவை. தென்னிந்தியக் கலைவடிவங்களை எமது முன்மாதிரியாக வரித்து அவற்றைப் பிரதிசெய்ய முனையாமல் எமது கலை வடிவங்களை அவற்றுக்கான தனித்துவத்துடன் அணுகவும் அறியவும், இன்னமும் நேர்த்தியாக்கவும் முடியும். சிங்கள இன ஒடுக்குமுறை போல இந்தியாவில் இருந்து இலங்கைமீது மேற்கொள்ளப்படும் பண்பாட்டுப் படையெடுப்பும் எமக்குப் பாதகமானதே!
இக்கட்டுரை வெளியான அதே தாய்வீடு இதழில் பாமினி எழுத்துரு தொடர்பாக அண்மையில் நடைபெற்ற விவாதத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பான பல்வேறு விளக்கங்களை இந்தக் கட்டுரை வாயிலாக வரைகலைக் கலைஞர் கருணா வழங்குகின்றார். அவரது அனுமதியுடன் அக்கட்டுரையையும் இத்துடன் பகிர்கின்றேன். இந்த இணைப்பில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.Baamini-font
பாமினி எழுத்துருவை வடிவமைத்த சசி அவர்களுடன் விரிவான நேர்காணல் ஒன்றினை ப. ஶ்ரீஸ்கந்தன் அவர்கள் ஒகஸ்ட் மாத தாய்வீது பத்திரிகைக்காகச் செய்திருந்தார். அதனை இந்த இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம். sasi-thaiveedu-aug-15
இக்கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் நான் எழுதும் சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற தொடரில் ஒக்ரோபர் 2015ல் இடம்பெற்றது.
Leave a Reply