கனடாவைப் பொறுத்தவரை நாம் பார்த்தால் கனடிய மைய நீரோட்ட அரசியலில் ஈடுபடும் தமிழர்களில் அனேகம் பேர் இலங்கையில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்று கனடாவிற்கு தமது மத்திம வயதுகளில் வந்தவர்கள். இந்த இடத்தில் நீங்கள் மிகச் சிறிய வயதில் கனடாவிற்கு வந்திருக்கின்றீர்கள். இலங்கை போன்ற ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் கூர்மை பெற்றிருக்கின்றபோது அங்கு அரசியல் ஆர்வம் வருவதற்கான காரணமும், உந்துதலும் வேறு. உங்களது நிலைமையில் அது வேறு. மையநீரோட்ட அல்லது நாடாளுமன்ற அரசியல் தொடர்பான உங்கள் பயணம் எவ்வாறு உருவானது?
அரசியல் என்பதை நான் சமூக அபிவிருத்தி என்பதாக வரையறை செய்கின்றேன். சமூக அபிவிருத்தி நோக்கிய பயணமாகவே எனது அரசியல் ஆர்வமும் உருவானது. எனது ஏழாவது வயதில், நான் அப்போது வசித்துவந்த மிசிசாகாவில் எனது வீட்டிற்கு அருகாமையாக ஒரு தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கவேண்டும் என்று எனது தந்தையுடன் சேர்ந்து கையெழுத்துகளைச் சேகரித்து அதில் வெற்றியும் பெற்றிருந்தது பற்றி முன்னரும் குறிப்பிட்டிருக்கின்றேன். எனது ஏழாவது வயதிலேயே நான் ஒரு அரசியல்வாதியாக ஆகிவிட்டேன் என்று குறிப்பிடமுடியும். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக பாடசாலையிலும், பின்னர் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் அமைப்புகளில் தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கிவந்தேன்.
2004ம் ஆண்டு கார்ல்ரனில் கற்றுக்கொண்டிருக்கும்போது NDP கட்சி பற்றி எனக்குப் பெரிதாகத் தெரியாது. ஒரு குடிவரவாளராக அப்போது லிபரல் கட்சியே எம்மிடையே பிரபலமாக இருந்தது. ஆனாலும் நான் ஒட்டாவாவில் இருந்த “ஒட்டாவா சென்ரர்” தொகுதியில் NDP வேட்பாளராக இருந்த Ed Broadbent இன் தேர்தல் பரப்புரை அணியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். அப்போது சிறுவயதிலேயே பெற்றோர் எனக்குச் சொல்லித் தந்த மதிப்பீடுகள் NDP கட்சியிலேயே இருப்பதை விளங்கிக் கொண்டேன். சிறு வயதில் எனது பெற்றோர் புதிய குடிவரவாளர்கள் கனடா வருகின்றபோது அவர்களுக்கு தொடர்ச்சியாக உதவுவதைக் கண்டிருக்கின்றேன். எல்லா மக்களின் வாழ்வும் நல்ல நிலையை அடையவேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருந்தது. NDP கட்சியும் அதே கொள்கையைக் கொண்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது.
2011 பாராளுமன்ற தேர்தலை ஒட்டி NDP கட்சியின் வேட்பாளர் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதி. அந்த நேரத்தில் ரயர்சன் பல்கலைக்கழகத்தில் வேலைக் காப்புறுதி பற்றிய ஒரு கூட்டத்தில் நான் பேச்சாளராகக் கலந்துகொண்டிருந்தேன். அங்கு பார்வையாளராக வந்திருந்த ஒருவர் ஸ்கார்பறோ ரூஜ் ரிவர் தொகுதியின் வேட்பாளரைத் தெரிவு செய்யும் அணியிலும் இருந்தார். அவர் என்னிடம் நீங்கள் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றீர்களா? என்ற் கேட்டார். இப்போது இல்லை. இன்னும் பத்து ஆண்டுகளில் நிச்சயமாகப் போட்டியிடுவேன் என்றேன்.
எனது சிறுவயதில் தொலைக்காட்சியில் செய்திகளை ஆர்வமாகப் பார்ப்போம். அதில் வருகின்ற எந்த அரசியல்வாதியும் என்னைப் போல இருக்கவில்லை. பெரும்பாலானவர்கள் சட்டத்தரணிகள் / மருத்துவர்களாக, வயதான, வெள்ளை இன, பணவசதி கொண்ட ஆண்களாக இருந்தார்கள். இதில் எதுவாகவும் நான் இருக்கவில்லை. நானும் எனக்குச் சற்று வயதாகும்போது பாராளுமன்ற உறுப்பினராகவேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டேன். அந்த வயதில் நாற்பது வயது என்பது வயதானதாகத் தோன்றியதால், நாற்பது வயதென்பதையே நான் பாராளுமன்ற உறுப்பினராவதற்கான வயதெல்லையாகவும் வரித்துக்கொண்டேன். இதனாலேயே 2009ல் இன்னும் பத்து ஆண்டுகளின் பின்னர் தேர்தலில் போட்டியிடுவதாகச் சொன்னேன். இது நடந்த சிலநாட்களின் பின்னர் ஒரு நிகழ்வில் என்னைக் கண்டு கொண்ட Jack Layton என்னிடம் நேரடியாக வந்து பேசினார். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியாக உங்களைத் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டு வருகின்றோம். நீங்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டு வென்றால் உங்களைப் போன்ற இளைய, நிறத்தோல் கொண்ட, பெண்கள் உங்களைப் பின்பற்றி மைய நீரோட்ட அரசியலுக்கு வருவார்கள். அந்த மாற்றத்தை உங்களால் உருவாக்க முடியும். நீங்கள் கட்டாயமாக எமது கட்சியில் இணைந்து போட்டியிடவேண்டும் என்று கேட்டார். இதற்குப் பிறகு தேர்தலில் போட்டியிடுவது என்கிற முடிவுக்கு நானும் வந்தேன்.
சென்றமுறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது NDP பெரியளவு வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை. நீங்களும் அப்போது முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டீர்கள். ஆனால் இம்முறை கருத்துக்கணிப்புகள் NDP யின் வெற்றிவாய்ப்பே அதிகம் இருப்பதாகக் காண்பிக்கின்றன. இந்த மாற்றத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இது எவ்வாறு சாத்தியமானது?
நீண்டகாலமாக அனேகமான கனடியர்கள் இரண்டு கட்சிகளை மாத்திரமே தெரிந்திருந்தார்கள். அதன் பின்னர் Jack Layton இன் முயற்சியால் எல்லா இன மக்களும் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு, வயது, பால் வேறுபாடுகள் பார்க்காமால் நிறையப் பேர் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். இதன் விளைவாகவே முதன்முறையாக இரண்டாம் இடத்துக்கு NDP கட்சி வந்தது. அதற்குப் பிறகும் ஸ்டீபன் ஹாபர் அரசாங்கத்துடன் மக்கள் நலனை வைத்துத் தொடர்ந்து போராடுபவர்களாகவும், சரியான மாற்றாகவும் கடந்த நான்கு ஆண்டுகளாக நாம் தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம். மக்கள் நிச்சயமாக இவற்றை எல்லாம் பார்த்துகொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் எமது ஆதரவு சீராக அதிகரித்து வருகின்றது. NDP யை எடுத்துக்கொண்டால் இந்தக் கட்சி உழைக்கும் மக்களால், உழைக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது, அதனால் கட்சி உழைக்கும் மக்களுக்கு உண்மையாக இருக்கின்றது.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை வாக்களிக்கச் செல்லும் எம்மைப் போன்ற குடிவரவாளர்களின் மனதில் நிச்சயம் C51 சட்டவாக்கம் பற்றிய கேள்விகள் இருக்கவே செய்யும். இந்த C51 என்பது என்ன? அது குடிமக்கள் உரிமைகளை எவ்வாறு பறிக்கின்றது?
இந்தச் சட்டவாக்கம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் மிகக் கடுமையாகப் பறிக்கின்றது. அத்துடன் உளவு நிறுவனங்களுக்கு குடிமக்கள் உரிமையில் தலையிடக்கூடிய எல்லாவிதமான சுதந்திரத்தையும் வழங்குகின்றது. குறிப்பாக தேசப் பாதுகாப்புக்கு விரோதமானது என்று தாம் நினைக்கின்ற விடயங்களை செய்பவர்களை, செய்யும் குழுக்களை எல்லாம் நேரடியாகக் குறிவைக்கக் கூடிய உரிமையை அது வழங்குகின்றது. இதன் மூலம் சில சமூகத்தினர் கடுமையான பாதிப்புகளிற்கு உள்ளாவார்கள். உங்களுக்கே தெரியாத சில காரணங்களால் நீங்கள் சந்தேக நபராகக் கணிப்பிடப்படும்போது உங்கள் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல், மின்னஞ்சல் உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்படும். ஒரு சிறிய உதாரணத்துக்கு, தீவிரவாத செயல் ஒன்றுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவருடன் நீங்கள் முகநூலில் நண்பராக இருக்கின்றீர்கள் என்பதாலேயே நீங்களும் சந்தேக நபராகிவிடலாம். இதன்மூலம் நீங்களும் கடுமையாகக் கண்காணிக்கப்படுவீர்கள்.
C51 உடன் C24ம் இணைத்துப் பிரயோகிக்கப்படும் என்பதால், இது இன்னும் தீவிரமானதாகின்றது. ஒருவர் இரட்டைக் குடியுரிமை கொண்டிருந்தால் அல்லது வேறொரு நாட்டில் பிறந்து கனடாக் குடியுரிமையைப் பெற்றிருந்தாலும் கூட அவர் ஒரு சந்தேக நபராகக் கணிப்பிடப்படுகின்றபோது அவரது கனேடியக் குடியுரிமை பறிக்கப்படலாம். யோசித்துப் பாருங்கள், நீங்காள் சந்தேகத்துக்குரியவர் என்று கருதப்படுவதாலேயே உங்கள் குடியுரிமை பறிக்கப்படலாமென்றால் அது எவ்வளவு தீவிரமான ஒரு விடயம்? இந்தக் குடியுரிமையை பறிப்பதை ஒரு நீதிமன்றமோ, நீதிபதியோ செய்யத் தேவையில்லை. ஒரு அரசியல்வாதியே கூட உங்கள் குடியுரிமையைப் பறிக்க முடியும்.
குறிப்பாக தமிழ்மக்களுக்கு இந்த C51 எவ்வாறு பாதகமானதாக அமையும் என்று கூறமுடியுமா?
இலங்கையில் கூட பாதுகப்புத்துறைக்கு அளவில்லாத சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அது எவ்வளவு தூரம் மக்களைப் பாதித்தது, எப்படி சிறுபான்மையினரது அடிப்படை உரிமைகளை நசுக்கியது என்பதை நாம் நேரடியாக அனுபவித்திருக்கின்றோம். அதேயளவுக்கு C51 எம்மைக் கனடாவில் பாதிக்கலாம். Sun Sea கப்பலில் வந்த அகதிகளை தமது சந்தேகங்களின் அடிப்படையிலேயே தொடர்ச்சியாக போலி அகதிகள், பயங்கரவாதிகள், பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சாதித்து வந்த அதே அமைச்சர்கள் இருக்கின்ற ஆளுங்கட்சி தான் இந்தச் சட்டத்தையும் கொண்டுவந்திருக்கின்றது.
மேலும் மிக நீண்டகாலமாக ஈழத்தில் நடந்த போரின் காரணமாக நாம் பல்வேறு சமயங்களில் செய்த நன்கொடைகள், உறவினர்களுக்கு அனுப்பிய பணம், செய்த போராட்டங்கள் போன்றவற்றைக் கூட அவர்கள் பயங்கரவாதிகள் என்று கருதுகின்ற அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி அந்த அடிப்படையில் எந்த ஒரு தமிழரையும் கூட அவர்களது “சந்தேகத்துக்குரியவர்கள்” என்ற பட்டியலில் இலகுவாக அடக்கிவிடமுயும்.
கனடாவில் இருக்கின்ற மூன்று பிரதான கட்சிகளில் NDP தவிர்ந்த ஏனைய இரண்டு கட்சிகளும் இந்த C51 இனை ஆதரித்திருக்கின்றன. NDP ஆட்சிக்கு வந்தால் C51 தொடர்பாக என்ன நிலைப்பாடு எடுக்கும்?
ஆம். நாம் மட்டுமே C51 இனை எதிர்த்து இருந்தோம். நாம் ஆட்சிக்கு வரும்போது C51 இன் கீழ் கொண்டுவரப்பட்ட அனைத்துச் சட்டங்களையும் நீக்குவோம்.
C51 பற்றிப் பேசும்போது தேசப் பாதுகாப்பை முன்னிறுத்தியே இச்சட்டவாக்கம் அறிமுகம் செய்யப்பட்டது என்றும் இது கனடியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது என்றும் வாதங்களை C51 இனை ஆதரிப்போர் கூறுகின்றனர். அதனூடாக இது பெரும்பான்மையான கனடியர்களுக்கு நன்மைசெய்வது என்றும் வாதங்கள் வைக்கப்படுகின்றன. அந்த வாதம் சரியானதா?
நிச்சயமாக இல்லை. கனடாவின் நான்கு முன்னை நாள் பிரதமர்கள், முன்னை நாள் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், The Privacy Commissioner, The Assembly of First Nations, Amnesty உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், Canada Bar Association உள்ளிட்ட பலர் இதனை எதிர்த்தே வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை இச்சட்டம் பாதிக்கின்ற வாய்ப்புகள் இருக்கின்றன. பள்ளிவாசல்கள் பயங்கரவாத அமைப்பகளை வளர்க்கும் இடமாக இருக்கின்றன என்ற கருத்துகள் ஏற்கனவே பரப்பப்படுகின்றன. C51 இன் அவசியத்தை வலியுறுத்திப் பேசும்போது எல்லாம் இந்தக் காரணங்களையே வலியுறுத்திப் பேசிவருகின்றனர். இது அப்பட்டமாக பிற இனமக்கள் மீதா வெறுப்பினையே (Xenophobic) உமிழ்கின்றது. ஏற்கனவே சொன்னது போல தமிழ் மக்கள் இதன்மூலம் நிச்சயமாகப் பாதிக்கப்படுவார்கள்.
இன்னுமொரு உதாரணமாக G20க்கு எதிராக நடந்த கவனயீர்ப்புப் போராட்டங்களை எடுத்துக்கொள்வோம். இந்தச் சட்டவாக்கம் மூலம் அதில் கலந்துகொண்ட அனைவரையும் “சந்தேகத்துக்குரியவர்கள்” என்று கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கலாம். புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்போது பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் ஈடுபடுபவர்கள் அனைவரையும் அதே பட்டியலில் சேர்க்கலாம். தமிழ்மக்களை எடுத்துக்கொண்டால், நாம் செய்யும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடுவோர் அனைவருமே கூட இதே பட்டியலில் சேர்க்கப்படலாம். அதன் அடுத்த கட்டமாக அவர்களின் குடியுரிமை பறிக்கப்படலாம். இது எவ்வளவு தீவிரமானது என்பதை விளக்குவதற்காக இன்னுமொரு உதாரணத்தைக் கூறுகின்றேன். தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களது கவனயீர்ப்புப் போராட்டங்களின் போது DVPயில் போக்குவரத்தினை சிலமணிநேரம் தடைசெய்தது நினைவிருக்கும். அரச உட்கட்டுமாணங்களில் தலையீடுசெய்தார்கள் என்ற குற்றச்சாற்றின் கீழ் அவ்வாறு DVPயில் நின்ற அனைவருமே கூட C51 மூலம் பாதிக்கப்படுவார்கள்.
சென்ற முறை நீங்கள் போட்டியிட்ட தேர்தல் தொகுதி இம்முறை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அது ஏன், எவ்வாறு பிரிக்கப்பட்டது என்று கூற முடியுமா?
அதைத் திட்டமிட்டுப் பிரித்தார்கள். இருபது வருடங்களாக பல்வேறு விதமான பிரச்சனைகளில் இருந்து மெல்ல முன்னேறிவரும் மல்வர்ன் ஏன் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு தொகுதிகளில் உள்ளடக்கப்படவேண்டும்? Morningside Heights தற்போது தான் வளர்ந்துவருகின்ற ஒரு சமூகம். ஏன் அது இரண்டாக பிரிக்கப்பட்டு இரண்டு பிரிவினுள் கொண்டுசெல்லப்படவேண்டும்? சமூக அபிவிருத்தியைக் கருத்திற்கொண்ட எவரும் அவ்விதம் செய்யமாட்டார்கள். உண்மையில் அந்தத் தொகுதிகளில் இருந்த வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து “ராதிகாவைத் தோற்க வைக்கவேண்டும்” என்பதற்காகவே இந்தத் தொகுதியைப் பிரித்தார்கள்! ஆனால் மக்கள் புத்திசாலிகள். அவர்களில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது!
சமூக சேவை என்பது வேறு அரசியல் என்பது வேறு. தொடர்ச்சியான சமூக அக்கறை, செயற்பாடுகளின் ஊடாக பயணிக்கும் ஒருவர் கட்சி அரசியலுக்கு வருவதே பொருத்தமானது. ஆனால் அண்மைக்காலமாக தொகுதியில் வாழும் குறித்த இன மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் சில வேட்பாளர்கள் முன்னிறுத்தப்படுகின்றார்களோ என்ற ஆதங்கம் எழுகின்றது. நீங்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
ஒரு கட்சி யாரை வேட்பாளராக நிறுத்துகின்றது என்பதை ஜனநாயகபூர்வமாக அக்கட்சி உறுப்பினர்களுக்குள் நடத்தும் தேர்தலின் மூலமே தீர்மாணிக்கின்றது. அவ்விதம் தேர்வாகும் ஒருவர் வேட்பாளராவதில் எந்தத் தவறும் இல்லை என்றே நினைக்கின்றேன்.
கனடா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற ஒரே ஒரு தமிழர் நீங்கள் என்ற வகையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு எதிராக உங்கள் செயற்பாடுகள் என்ன? நீங்கள் இந்தவிடயங்களில் சரியானமுறையில் செயற்படவில்லை என்பது உங்கள் மீது கூறப்படும் விமர்சனம். இதனை விளக்க முடியுமா?
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு ஐநா தலைமையிலான சர்வதேச விசாரணை தேவை என்கிற தீர்மாணத்தை கனடாவில் எமது கட்சியே முதன் முதலில் எடுத்தது. எனது சமூகத்தில் இருக்கின்ற மக்களுடன் சேர்ந்து நானே அந்தத் தீர்மாணத்தை முன்மொழிந்தேன். கொமன்வெல்த் மாநாட்டினை கனடியப் பிரதமர் புறக்கணிக்கக் காரணம் NDP கட்சியினர் கேட்ட ஆணித்தரமான கேள்விகளும் கட்சியின் நிலைப்பாடுமே. ஈழம் தொடர்பான விடயங்களில் எனது கட்சியினரின் நிலைப்பாட்டுக்கு நானே முக்கியகாரணம் அதேநேரம் எனது கட்சியும் எனக்கு தனது முழுமையான ஆதரவைத் தந்தது. தற்போது எனது கட்சியின் நிலைப்பாடு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பாக ஐநாவின் தலைமமையிலான சர்வதேச விசாரணை இடம்பெறவேண்டும் என்பதாகவே உள்ளது.
இதுதவிர தாய்வீடு பத்திரிகையூடாக மக்களுக்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?
எனது தேர்தல் பரப்புரைக்கு உதவுவதற்காக நிறைய தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். குறிப்பாக எனது தொகுதி பிரிக்கப்பட்ட பின்னர் வரும் முதலாவது தேர்தல் என்பதால் சென்ற முறை பங்களித்த தன்னார்வலர்கள் பலர் சிதறிப்போய்விட்டார்கள். பரப்புரைக்காகவும், விளம்பரங்களுக்காகவும் தேவைப்படும் நன்கொடை கூட போதுமானதாகக் கிடைக்கவில்லை. மிகச் சிறிய தொகையான நிதிப்பங்களிப்புகள் கூட மிக முக்கியமானவையாக இருக்கின்றன. உங்கள் எல்லாரின் உதவியும் ஆதரவும் நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றேன்.
குறிப்பு
கனடியத் தேர்தலை முன்னிட்டு ஒக்ரோபர் 2015 தாய்வீடு இதழுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது. நேர்காணல் என்பது பற்றி நிறைய ஆர்வம் இருந்தாலும் அனுபவம் ஏதும் இல்லை. அப்படியான நிலையில் நேர்காணல் குறித்து வழிகாட்டல்களைச் செய்த சேரன் அவர்களுக்கு நன்றி.
Leave a Reply