செம்மீன்நாவல்களையும், சிறுகதைகளையும் திரைப்படங்களாக்குவது பற்றி பல்வேறு இடங்களில் பேசப்பட்டிருக்கின்றது.  தமிழ்த் திரைப்படங்களில் கதையம்சம் மிகவும் பலவீனமாக இருப்பது பற்றிப் பேசும்போதெல்லாம், நாவல்களும், இலக்கியங்களும் திரைப்படங்களாக்கப்படவேண்டும் என்பதுவும் பரவலாக முன்வைக்கப்படும் ஆலோசனை.  ஆரம்ப காலங்களில் தனது நாவல்களான காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, பிரியா போன்றன திரைப்படங்களாக எடுக்கப்பட்ட போது அவை நாவல்களாக இருந்தபோது கொண்டிருந்த ஜீவனை இழந்து, மிகவும் அந்நியமாக வெளிவந்ததாக சுஜாதா பல்வேறு பத்திகளில் எழுதி இருக்கின்றார்.  பதின்மங்களில் பலருக்கும் பிடித்திருந்த அவரது பிரிவோம் சந்திப்போம் பின்னர் ஆனந்த தாண்டவம் என்ற பெயரில் திரைப்படமான போதும் பாத்திர உருவாக்கங்கள் வெறுமையானவையாக, மிகவும் நாடகத்தன்மையானவையாக இருந்தன.  அதே நேரம் நாவல்கள் / தொடர்கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டால் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருந்த காலம் ஒன்றும் கூட இருந்திருக்கின்றது.  பாலசந்தர் இயக்கத்தில் வெளியான நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திற்குக் கதை எழுதிய சுஜாதா, அதனை வெளியில் சொன்னபோது “இதை ஏதாவது பத்திரிகையில் தொடராக எழுதுங்கள்.  தொடர்கதைகள் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டால் வெற்றிபெறும் காலம் இது” என்று அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது என்பதை அவர் தனக்கே உரிய நகைச்சுவையுடன் பதிவுச் செய்திருந்தார்.

நாவல், தொடர்கதை போன்ற இலக்கிய வடிவங்களை திரைப்படங்களாக எடுப்பது என்பது உண்மையிலேயே சவாலானது.  அடிப்படையில் இரண்டுமே வேறுபட்ட கலை வடிவங்கள்.  ஒரு கதையினை எடுத்துக் கொண்டு அதை மூலமாக வைத்து, சில மாற்றங்களுடனோ, அல்லது நேரடியாகவோ திரைப்படம் ஆக்கலாம் (ஆனால் அவ்விதம் மூலக் கதையில் இருந்து மாற்றங்களைச் செய்கின்றபோது ஏற்படுகின்ற கருத்தியல் சார்புகளுக்கு அதன் திரைப்படத்துக்காக கதையினை உருவாக்குபவரே பொறுப்பேற்கவேண்டும்).  உதாரணமாக இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான முள்ளும் மலரும் திரைப்படம் உருவான கதை பற்றித் தனது “நானும் சினிமாவும்” நூலில் இயக்குனர் மகேந்திரன் பின்வருமாறு கூறுகின்றார்:  “முள்ளும் மலரும் நாவலை நான் படித்த போது கதாபுருஷன் “காளி” வேலை செய்யும் விண்ச் ஒப்பரேற்றர் உத்தியோகமும் அவனுடைய வித்தியாசமான சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன.   நாவலில் காளியை புலியொன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன்.  பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன்”.  இவ்வாண்டு மே மாதம் அளவில் ரொரன்றோவில் ஆவணப்பட இயக்குனர் அம்ஷன்குமார் ஒருங்கிணைத்த குறும்படப் பயிற்சிப்பட்டறையில் அசோகமித்திரனின் “ரிக்‌ஷா” என்கிற சிறுகதையை ஒவ்வொரு குழுவினரும் வெவ்வேறு விதமான திரைக்கதை வடிவங்களுடன் படமாக்கியது நல்லதோர் அனுபவமாக இருந்தது.

ஒப்பீட்டளவில் நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டபோது என்னை அதிகம் கவர்ந்ததுவும் செம்மீன் என்றே சொல்லவேண்டும்.  “கடலினக்கர போனோரே” என்கிற ஜேசுதாசின் பாடல் ஊடாக எனக்கு அறிமுகமான செம்மீன் திரைப்படம், பின்னர் நீண்டநாட்களின் பின்னர் திரைப்படமாகவும், நாவலாகவும் மீளவும் அறிமுகமானது.  நாவலில் பரீக்குட்டி இரவுகளில் கடற்கரையோரமாக ஒரு பாடலைத் தொடர்ந்து பாடுவதாக வரும்.  “மானசமன வரூ…” என்று திரைப்படத்தில் வருகின்ற அந்தப் பாடலும், பரீக்குட்டியும் இன்றும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.  கறுத்தம்மா, பரீக்குட்டி, செம்பண் குஞ்சு, கறுத்தம்மாவின் தாய் (சக்கி) என்கிற பாத்திரங்களும், உறவுகளும் இயன்றவரை நாவலில் உள்ளவிதமே திரைப்படத்திலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.  ஆனாலும், அண்மையில் இத்திரைப்படத்தினை மீளப் பார்த்தபோது நாவலில் வார்க்கப்பட்டிருந்த பழனியின் பாத்திரம் திரைப்படத்தில் ஒற்றைப்படையாகக் காட்டப்பட்டிருந்தது போலத் தோன்றியது.  திரைப்படம் என்கிற வடிவத்தினை உருவாக்குவதற்கு இருக்கின்ற தேவைகள் (பரீக்குட்டி, கறுத்தம்மா காதலை மேம்படுத்திக் காட்ட) கூட இத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கலாம்.

மிக முக்கியமாக நாவல் ஒன்று திரைப்படமாகின்றபோது அதில் நடிக்கின்ற நடிகர்கள் –குறைந்தபட்சம் முக்கிய பாத்திரங்களேனும்- அந்த நாவலை வாசிப்பதும் கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்வதும் அவர்கள் கதாபாத்திரங்களை உயிரோட்டத்துடன் வெளிப்படுத்த உதவும்.  அண்மையில் சத்யஜித் ரேயின் திரைப்படங்களின் சிறப்பு Charularaவெளியீடுகளை தொடர்ச்சியாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.  The Criterion Collection என்கிற இந்த வெளியீடுகளில் முக்கியமான திரைப்படங்களுடன், அவற்றில் பங்களித்த கலைஞர்களின் நேர்காணல்கள், திரைப்படம் தொடர்பான திரைப்பட ஆய்வாளர்களின் கருத்துகள், உரைகள் என்பனவும் இடம்பெறும்.   சத்யஜித் ரே, ரபீந்திரநாத் தாகூரின் “நஸ்தானிர்” (The Broken Nest) என்கிற நாவலைச் சாருலதா என்கிற திரைப்படமாக எடுத்தபோது முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்த மாதவி முகர்ஜி, சௌமித்ரா சட்டர்ஜி இருவரிடமும் கதையைச் கூறியதுடன் அவர்களையும் முழு நாவலையும் வாசிக்கும்படி வேண்டி, நாவலை அனுப்பி வைத்ததாகவும் அவர்கள் இருவருமே கூறுகின்றனர்.  திரைப்படத்தில் “அமல்” ஆகவும், “சாருலதா” ஆகவும் நடித்த சௌமித்ரா சட்டர்ஜி, மாதவி முகர்ஜி இருவரும் முழுமையாக உள்வாங்கி நடித்திருந்தனர் என்றே சொல்லவேண்டும்.  தமிழ்த் திரைப்படச் சூழலில் இதற்கெல்லாம் இருக்கக்கூடிய சாத்தியம் மிகக் குறைவென்றே நினைக்கின்றேன்.

இந்த இடத்தில் ஜெயமோகனின் அனல்காற்று இன்னொரு விதத்தில் முக்கியமானது.  பாலுமகேந்திரா திரைக்கதை அமைத்து திரைப்படமாக்குவதற்கு என்றே ஜெயமோகன் எழுதிய குறுநாவல் அனல்காற்று.  படத்தை எடுக்க இருந்த தயாரிப்பாளர் பங்குச் சந்தை வீழ்ச்சியில் காணாமல் போனதால் படம் கைவிடப்பட்டது என்று ஜெயமோகன் நூலிலேயே குறிப்பிட்டிருகின்றார்.  பாலுமகேந்திராவின் திரைப்படங்களில் முன்னரே நாம் பார்திருக்கக்க்கூடிய குணஇயல்புகளுடன் கூடிய ஆணுக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற காமத்தையும், காதலையும், உறவுச் சிக்கல்களையும் கூறுவதுடன் அவற்றை உளவியல் கண்ணோட்டத்துடனும் அணுகுகின்ற நாவல் இது.  திரைப்படத்துக்காக என்றே எழுதப்பட்டதால், திரைப்படங்களுக்கே உரிய அம்சங்கள் துருத்தித் தெரிகின்றது,  குறிப்பாக இறுதியில் அருண் தன் கையை வெட்டிக்கொள்ளுதல், பின்னர் சுசியுடன் இணைதல், சந்திரா அருணை விட்டு விலகி அவனை சுசியுடன் இணையும்படி கூறுவது போன்றவை வழமையான திரைப்படங்களுக்கேயான முறையில் நிகழுகின்றன.  மேற்குநாடொன்றில் சிறுவயது முதலே இருந்து சொந்த ஊர் (தமிழ்நாடு) திரும்பி வரும் பெண் அந்த வாழ்க்கை முறையையும், பண்பாட்டையும் பார்த்து உள்ளூரில் வாழ விரும்புவதாகவே பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் கதை அமைக்கப்படும்.  கிட்டத்தட்ட அதையே அனல்காற்றும் செய்திருக்கின்றது.  அதேநேரம் அருணை வழமையான நாயகத்தன்மை கொண்டவனாக உருவாக்காமால், தன்னைச் சூழ இருப்பவர்களுடன் தொடர்ச்சியான உறவுச்சிக்கல்கள் கொண்டவனாக நிறைவாகவே உருவாக்கி உள்ளார்.  தனது தாய்க்கும், சந்திராவுக்கும், சுசிக்கும், சிறிய தாய்க்கும், சகோதரிகளுக்கும் என அவன் கொண்டிருக்கின்ற உறவு வெவ்வேறு தன்மையானது.  அதுபோலவே தந்தையை தொடர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்திக்கொண்டும், சந்திராவின் மகனுடன் தொடர்ச்சியாக குற்ற உணர்ச்சியுடன் பழகுபவனாகவும் அவனே இருக்கின்றான்.  நிச்சயமாக இதை ஜெயமோகனின் முக்கியமான நாவல் என்று சொல்லமுடியாது என்றாலும், இதை ஒரு திரைப்படமாக பாலுமகேந்திரா உருவாக்கி இருந்தால் முக்கியமான திரைப்படங்களுள் ஒன்றாக அமைந்திருக்கும்.

செம்மீன் திரைப்படத்திற்கான இணைப்பு


 

இக்கட்டுரை டிசம்பர் 2015 தாய்வீடு பத்திரிகையில் இடம்பெற்றது.(சொல்லத்தான் நினைக்கிறேன் 9)