கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்களில் ஒன்று. விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வம் இல்லாதவனாகிய நான் கிரிக்கெட்டை மட்டும் வாழ்வு ஏற்படுத்திய எந்த சலிப்புகளின்போதும் கூட இடைவிடாது தொடர்ந்தே வந்தேன். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் இருக்கின்றபோது இராணுவம் கொடிகாமம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஏப்ரல் 19, 1996 அன்று கூட கடுமையாக ஷெல் தாக்குதல்கள் எமது வீட்டுக்கு ஒரளவு அருகாமையில் விழுந்துகொண்டிருந்த போதும் கடுமையான பயத்துடனும் கூட அன்று ஷார்ஜாவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்தியாவிற்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் வர்ணனையைக் கேட்டபடியே இருந்தேன் என்பது இப்போதும் நினைவில் இருக்கின்றது. எனது சிறுவயது நண்பர்கள் அனேகமானவர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் என்கிற பொதுத்தன்மையுடன் எனக்கு அறிமுகமானவர்களே. முதல் முதல் நான் புத்தகக் கடையொன்றில் (நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த ஞானம் புத்தகக் கடை) பதிவு செய்து தொடர்ந்து வாங்கிய சஞ்சிகை அப்போது வெளிவந்துகொண்டிருந்த Sports Star என்பதே. பழைய புத்தகக் கடைகளை நோக்கிய எனது படையெடுப்புகள் ஆரம்பித்ததுவும் கூட இவ்வாறாக Sports Star, Wisden Almanac, The Cricketer என்கிற இதழ்களைத் தேடியதாகவே அமைந்தது. யாழ்ப்பாணம் விவேகானந்தா பழைய புத்தகசாலையில் புத்தகக் குவியல்களுக்கிடையிலே Wisden Almanac, The Cricketer போன்ற கிரிக்கெட் தொடர்பான நூல்களைத் தேடித்தேடி எத்தனையோ மணித்தியாலங்களைச் செலவழித்திருக்கின்றேன். மானிப்பாயைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வீரா அண்ணை அவர்கள் வீட்டு மேல் பரண் போன்ற பூர்த்தி செய்யப்படாத மேல்மாடியில் ஒரு ஆளைவிட உயரமாக Sports Star சஞ்சிகைகளை சேகரித்து வைத்திருப்பதாக என் வகுப்பு மாணவர்க்கள் சிலர் கூறக்கேட்டிருக்கின்றேன். கண்ணாற் கண்டிலன். கிரிக்கெட் தொடர்பான என் பூர்வ நினைவுகள் அனைத்தையும் இரைமீட்கத் தூண்டிய கட்டுரை ஒன்றை அண்மையில் CricInfo தளத்தில் பார்க்கக் கிடைத்தது.
Jon Hotten எழுதிய Why didn’t everybody copy bradman? என்கிற இக்கட்டுரையில் பிராட்மன் போன்ற கிரிக்கெட்டின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர் என்று சொல்லப்படக் கூடியவரின் தொழில் நுணுக்கம் என்ன என்றும் அவாவி நிற்கின்றது. தனது சிறு வயதில் இருந்தே இயற்கையாகவே அவர் பந்துவீச்சுகளை எவ்விதம் எதிர்கொள்வது என்பதைத் தன் உள்ளுணர்வின் அடிப்படையில் தீர்மாணித்தே ஆடினார் என்றும், மரபான பயிற்றுனர்கள் மரபான ஆட்டமுறைகள் (புத்தகங்களின் உள்ள ஆட்டமுறை நுணுக்ககங்கள்) பற்றிக் கூறியபோதும் அவர் தன் இயல்பான விளையாட்டையே தொடர்ந்தும் ஆடினார் என்றும் கூறுகின்றது. அதற்குப்பிறகு கட்டுரை வெவ்வேறு விடயங்களைத் தொடர்ந்துபேசிச்சென்றாலும், இதில் பகிர்வதற்கு ஒரு விடயம் உள்ளது. எமது சமகாலத்தில் – குறிப்பாக ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் – பெரும் வெற்றி பெற்றவர்கள் / ஆட்டங்களின் போக்கினைத் திடீரென்று மாற்றி ஆட்டங்களை வென்றுதரும் வீரர்களாக அறியப்பட்டவர்கள் அனேகம் பேர் இவ்வாறான மரபாக புத்தகங்களில் உள்ள நுணுக்கங்களைப் பின்பற்றாமல் தம் உள்ளுணர்வின்படி பந்துவீச்சுகளை எதிர்கொண்டு விளையாடினவர்களே. தோணி, டி வில்லியர்ஸ் போன்றவர்களை இவ்வாறு வகைப்படுத்தலாம். இவர்கள் “காட்டடி” என்று சொல்லும்படி கண்ணை மூடிக்கொண்டு அடிப்பவர்கள் அல்ல. அவர்கள் பந்தை எதிர்கொள்ளும்போது அதை எவ்விதம் அடித்து ஆடவேண்டும், அதற்காக உடலை என்ன நிலைக்கு மாற்றவேண்டும், எவ்வாறு மணிக்கட்டைச் சுழற்றவேண்டும் என்பதையெல்லாம் தமது உள்ளுணர்வு கொண்டு எதிர்கொள்பவர்கள்.
இன்னொரு விதத்தில் தோணியைப் பொறுத்தவரை அவர் தலைமைதாங்கும் போது எடுத்த பல்வேறு முடிவுகளும் கூட இவ்விதம் உள்ளுணர்வின் தடத்தில் எடுத்த முடிவுகளே. அதற்கான தர்க்கங்கள் அவருக்குள் இருந்திருக்கும். ஆனால் அந்தத் தர்க்கம் புள்ளிவிபரங்களைப் பொறுத்தும், புத்தக வழிகாட்டல்களைப் பொறுத்தும் மாறுபட்டதாக இருக்கும். தோணியின் இவ்வாறான உள்ளுணர்வின் அடிப்படையில் அவர் பெற்ற வெற்றிகள் பெரிதாக அவருக்குப் புகழைத் தேடித்தந்த அதே நேரம், அவருக்கு அதிஸ்ரக்காரன், அதிஸ்ரத்தால் வெல்கின்றார் என்கிற பெயர்களும் சேர்த்தே கிடைத்தன. ஆனால் அதே உள்ளுணர்வின் அடிப்படையில் அவர் எடுத்த முடிவுகள் எதிர்பார்த்த முடிவுகளைத் தராதபோதும், தோல்வியடைந்தபோதும் அவர் எடுத்த முடிவுகள் புள்ளிவிபரப்படியும் இவ்வாறு இல்லை, புத்தக விதிகள்படியும் இவ்வாறு இல்லை. முழுக்க முழுக்க பொறுப்பில்லாத அல்லது முட்டாள்தனமான முடிவு என்று சொல்லியே விமர்சிக்கப்பட்டார். இது ஒரு சுவையான முரண். Jon Hotten எழுதிய கட்டுரை கிரிக்கெட்டை / விளையாட்டுகளை இன்னொரு பார்வையூடாக அலசிய கட்டுரை. ஆர்வமிருப்பவர்கள் அதையும் படிப்பது நல்லது.
குறிப்பு:
இக்கட்டுரை சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பெயரில் நான் எழுதும் தொடர்பத்தியில் 2016 ஜனவரி, தாய்வீடு பத்திரிகையில் இடம்பெற்றது.
Leave a Reply