digi-silambam-2015-first-009பழந்தமிழரின் ஆதிக்கலைகளில் முக்கியமானது சிலம்பம்.  சிலம்பல் என்கிற சொல்லுக்கு ஓசை என்பது பொருள்.  இன்றும் கூட வழக்கத்தில் தண்ணீருக்குள் கையையோ காலையோ வீசு சிறுவர்கள் ஓசை எழுப்புகின்றபோது “சிலம்பாதே” என்று பெரியோர்கள் கூறுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  சிலம்ப விளையாட்டில் கம்பினை வேகமாக வீசும்போது அது காற்றைக் கிழித்து ஓசை எழுப்புவதாலும், கம்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஓசை எழுப்புவதனாலும் அதற்கு சிலம்பம் என்கிற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.  மலைகளில் தொடர்ச்சியாக அருவிகளதும், பறவைகளதும் மிருகங்களதும் ஓசைகள் கேட்டுக்கொண்டிருப்பதால் மலைகளுக்கும் சிலம்பம் என்கிற பெயர் உண்டு என்றும், அதன் காரணமாக மலைகளில் வாழும் கடவுளாக முருகனுக்கு சிலம்பன் என்ற பெயர் உருவானதென்றும், அதன் வழி வேடுவர் தலைவனான முருகன் வழி பரப்பப்பட்ட கலைக்கும் சிலம்பம் என்கிற பெயர் உருவானது என்போரும் உள்ளனர்.  அதே நேரம் திருக்குறளில் கோல் என்றும், இன்னும் பழைய இலக்கியங்களில் கம்பு வீசுதல் என்கிற அர்த்தத்திலும் சிலம்பம் குறிப்பிடப்படுகின்றது.  ஆதிமனிதர்கள் தம்மை விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இயல்பாகவே அவர்களுக்கு இலகுவில் பெறக்கூடியதான தடிகளையோ, சிறு கூராயுதங்களையோ வைத்துப் போராடி இருப்பார்கள்.  அதுவே அவர்களது ஆரம்பகால தற்காப்புக் கலையாக இருந்திருக்கும்.  இந்தக் கலையின் வளர்ச்சியே பின்னாளில் சிலம்பமாக உருவாகியிருக்கும்.

இன்று பெரிதும் ஆண்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் சிலம்பக்கலையில் வரலாற்றுக் காலம் முதல் அண்மைக்காலம் வரை பெண்களும் பயிற்சி பெற்றும் அரங்கேற்றங்களைச் செய்தும் வந்துள்ளார்கள்.  தமிழ் மரபு மாதமான தையில், தமிழரின் ஆதி வாழ்வியற்கலைகளில் ஒன்றான சிலம்பத்தைக் கனடாவில், ரொரன்றோவில் கற்பித்துவரும் ஆசிரியர் பத்மகுமாருடனான இந்த உரையாடலின் ஊடாக சிலம்பம் பற்றிய சிறு பகிர்வு ஒன்றினைச் செய்யும் பொருட்டு சந்தித்தோம்.

சிலம்பத்தையும் அதை ஒத்த தமிழர்களது பாரம்பரியக் கலைகளையும் கனடா போன்றதொரு புலம்பெயர் நாட்டில் பயிற்றுவிப்பதில் இருக்கக்கூடிய சவால்களைப் பற்றியும், தான் சிலம்பத்தினைக் கற்ற அனுபவம், அப்போதைய சூழல் பற்றியும் கனடாவில் பத்து ஆண்டுகளாக சிலம்பத்தைக் கற்பித்து வருவதன் ஊடாக தான் பெற்ற அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ளுகின்றார் பத்மகுமார்.  சிலம்பக்கலை, அதன் வரலாறு போன்ற தகவல்களைவிட ஈழத்தில் சிலம்பம் பயின்று, பயிற்றுவித்து, இன்று புலம்பெயர் நாட்டிலும் சிலம்பம் பயிற்றுவிக்கின்ற ஒருவரது நேர்காணல் என்பதுவும், அவரது அனுபவத்தினூடாக புலம்பெயர் நாடு ஒன்றில் எமது பாரம்பரியக் கலைகளை வளர்ப்பதிலும் பயிற்றுவிப்பதிலும் இருக்கக்கூடிய சவால்களை தெரிந்துகொள்வதே இந்நேர்காணலின் மையப்புள்ளியாக அமைந்திருந்தது.  எமது அடையாளங்களைப் பேணுவதிலும், பண்பாட்டின் வேர்களைத் தேடுவதிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக அமையும் என்று நம்புகின்றோம்.

 1. சிலம்பம் தமிழரின் பாரம்பரியக் கலைகளில் ஒன்று என்று அறிவோம். ஆனால் அதனை பயில்பவர்களை சமகாலத்தில் பார்ப்பது அரிதாகவே இருக்கின்றது.  அதிலும் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது இன்னமும் அரிதாகவே உள்ளவர்களாக இருக்கின்றனர்.  உங்களுக்கு சிலம்பத்தில் ஆர்வம் எவ்வாறு உண்டானது? சிலம்பத்துடனான அறிமுகம் எவ்வாறு உருவானது?

சிலம்பம் எனக்கு பரம்பரையாகவே அறிமுகம் ஆனது.  எனது தந்தையார் கூட சிலம்பத்தில் தேர்ச்சி பெற்றவரே என்றாலும், அவர் எனக்கு சிலம்பத்தினைக் கற்பிக்கவில்லை.  சிலம்பத்தினை முறைப்படியாக ஒரு குருவிடம் இருந்து பயிலவேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.  அவர் சிலம்பத்தை மாத்திரம் அல்லாமல் கைவிளையாட்டு மற்றும் நரம்பு சம்பந்தமான கலைகளையும் பயின்று தேர்ந்திருந்தார்.  ஆயினும் அது பற்றி அவர் பெரிதாகப் பேசிக்கொண்டது இல்லை.  பின்னாட்களில்தான் இவை பற்றி எமக்கு அறியக்கிடைத்தது.  அதுபோலவே எனது மாமாவும் மடு (மான் கொம்பு), சிறுத்தாக் கழி, வாள், சுருள் வாள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தார்.  அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரர்களும் கம்பு விளையாடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள்.  அவர்கள் அடிமுறைகளையும் பூட்டு முறைகளையும் எனக்குச் சொல்லித் தந்தார்கள்.

 1. நீங்கள் பேசுகின்றபோது கம்பு விளையாட்டு என்றே குறிப்பிடுகின்றீர்கள். அது சிலம்பத்திற்கான இன்னொரு பெயர் அல்லவா?

ஆமாம்.  எமது ஊரில் கம்பு விளையாட்டு, கம்பு பழகுதல், கம்படி பழகுதல் என்றே குறிப்பிடுவார்கள்.  இந்தியா சென்றபின்னர் தான் சிலம்பம் என்று நானும் குறிப்பிடத் தொடங்கினேன்.  ஊரில் கம்பு, கம்படி என்றுதான் குறிப்பிடுவார்கள்.

 1. உங்கள் முன்னோர்கள் சிலம்பத்தில் கொண்டிருந்த தேர்ச்சி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவர்கள் எங்கே அதனைக் கற்றுக்கொண்டார்கள்?  ஈழத்திலா அல்லது இந்தியாவிலா?  அவர்கள் ஏன் சிலம்பத்தைக் கற்கத் தொடங்கினார்கள்?

எனது முன்னோர்கள் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கப்பலோட்டிகள்.  இதனால் அவர்கள் வெவ்வேறு இடங்களிற்குச் சென்றுவந்தார்கள்.  அவ்வாறு சென்றபோது பர்மா, கேரளா, கன்னியாகுமரி மற்றும் தமிழ்நாட்டின் வேறு சில இடங்களில் இருந்து அவர்கள் இந்தக் கலைகளைக் கற்றுக்கொண்டார்கள்.  அதுபோல பின்னாட்களில் எனக்கு குருவாக அமைந்தவரின் குரு – அவர் ஒரு முஸ்லிம் – இந்தியாவில் இருந்து வந்தபோது அவரிடமும் கற்றுக்கொண்டார்கள்.  எனது குருவின் குருவுக்கு ஒன்பது குருமார் இருந்தனர்.  அதில் கார்த்திகேசு அப்பா என்கிறவர் பெயர் மாத்திரமே எனக்கு நினைவில் உள்ளது.

 1. உங்கள் குருவின் பெயர் என்ன என்று சொல்லமுடியுமா?

கட்டாயமாக சொல்லவேண்டும்.  அவர் பெயர் சோதிசிவம் நடராஜா.  வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்.  அவரும் அவரது தந்தையும் ஒரே குருவிடம் குருகுல முறையில் கற்றவர்கள்.

 1. எப்போது நீங்கள் சிலம்பம் கற்கத் தொடங்கினீர்கள்?

நான் 65 ஆம் ஆண்டு பிறந்தவன்.  எமது ஊரில் புலியப்பா என்று ஒருவர் இருந்தார்.  அவர் திருவிழாக்களில் புலிவேட்டை, கம்பு ஆடுபவர்.  எனது அப்பப்பா அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்வதற்கு ஒழுங்கு செய்தார்.  அவரும் “நிலை” ஒன்றில் நிற்கப் பழக்கினார்.  அப்போது அதிகம் ஆர்வம் இருக்கவில்லை.  இடையில் விட்டுவிட்டேன்.

இதற்கு சில காலங்களிற்குப் பின்னர் ஊரில் கராத்தே திடீரென்று பிரபலமாகத் தொடங்கியது.  நிறையப் பேர் அதன் மீது மோகத்துடன் இருந்தனர்.  எனக்கும் அந்த மோகம் இருந்தது.  இப்படி இருக்கின்றபோது ஒரு நாள் அப்பா என்னிடம், உனக்கு கம்பு விளையாட விருப்பமென்றால் அதனைப் பழக்குகின்றோம் என்றார்.  எனக்கு உண்மையில் அப்போது கம்பு விளையாடப் பழகுவதில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை.  அப்பா கேட்கின்றாரே என்று அவரது மனத்திருப்திக்காகவே கம்பு பழகச் சென்றேன்.  வேட்டியினை வித்தியாசமாகக் கட்டியிருந்த ஒரு மெல்லிய மனிதரிடம் என்னை கம்பு பழக்க அனுப்பினார்கள்.  ஆனால் அதனைப் பயிலத் தொடங்கியதும் சில காலத்தில் அதில் பெரும் ஆர்வமும் ஈர்ப்பும் உருவானது.  கம்பு விளையாட்டுப் பயிற்சியின் காரணமாக எனது உடலிலும் மனநிலையிலும் ஏற்பட்ட வேறுபாடுகளையும் என்னால் உணரமுடிந்தது.  இவ்வாறு 1979 அல்லது 80 இல் கம்பு பயிலத் தொடங்கினேன்.  எனது அரங்கேற்றம் 1983இல் நடைபெற்றது.

 1. உங்களுடன் பேசுகின்றபோது நீங்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் சிலம்பம் பிரபலமானதாகவும், மக்களிடம் நன்கு அறிமுகமானதாகவும் இருந்ததாக அறிய முடிகின்றது. உண்மைதானே?

ஆமாம்.  அப்போது நிறையப் பேர் வெவ்வேறு இடங்களில் சிலம்பம் பயின்று வந்தார்கள்.  வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயிலில் வருடாந்த நிகழும் இந்திரவிழா மிகவும் பிரபலமானது.  வீதிக்குக் குறுக்காக மேம்பாலம் போல அமைத்து மேடைபோட்டெல்லாம் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.  அந்த இந்திரவிழாவிலும் கம்புவிளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும்.

 1. உங்கள் அரங்கேற்றத்துக்குப் பிறகு இந்தியாவில் போய் சிலம்பம் பழகினீர்கள் அல்லவா?

இல்லை.  நான் இந்தியாவில் பெரிதாக சிலம்பம் கற்கவில்லை.  அரங்கேற்றத்துக்குப் பிறகு அனேகமாக உறவினர்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.  மாமாவிடம் இருந்தும் பெரியப்பாவிடம் இருந்தும் மாதகலில் இருந்த அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரர்களிடம் இருந்தும் கற்றுக்கொண்டேன்.  இதற்குப் பிறகு நாட்டைவிட்டு வெளியேறி இந்தியா சென்றபோது மதுரையைச் சேர்ந்த ராஜன் என்பவரிடம் சிலவிடயங்களைக் கற்றுக்கொண்டேன்.

உண்மையில் எனக்கு அப்போது இந்தியாவிற்குச் சென்றபோது ஆச்சரியமாக இருந்தது.  சிலம்பம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருக்கவேண்டும் என்றே கருதுகின்றேன்.  ஆனால் அங்கு முறைப்படுத்தப்பட்ட சிலம்பம் கற்பிக்கும் முறை அப்போது இருக்கவில்லை.  எனது குருநாதர் முறைப்படி, வரிசைகளை ஒழுங்காக்கி சரியான ஓர் ஒழுங்கில் பாடத்திட்டமாக வைத்திருந்தார்.  ஆனால் இந்தியாவில் அப்படி ஏதும் இருக்கவில்லை!

 1. நீங்கள் எப்போது சிலம்பம் கற்பிக்க ஆரம்பித்தீர்கள்?

எனது குருநாதரின் கீழ், சில காலம் கற்பித்தேன்.  அதன்பிறகு நாட்டுச் சூழல் காரணமாக இந்தியாவிற்குச் சென்றபோது அங்கு மதுரையில் சிலகாலம் கற்பித்துவிட்டு பின்னர் கேரளா சென்றேன்.  அங்கும் சில காலம் கற்பித்தேன்.  பின்னர் மீண்டும் தமிழ்நாடு திரும்பி பயிற்சி கொடுத்தேன்.  அது மிக முக்கியமான காலகட்டம்.  என் வாழ்நாளில் மிகவும் திருப்தியளித்த காலகட்டம் அது.  பெருமளவில், கிட்டத்தட்ட 500 பேர் வரை என்னிடம் கற்றுக்கொண்டனர்.  அது பற்றி வெளிப்படையாகப் பேசும் காலம் இன்னும் வரவில்லை.

 1. பொதுவாக சிலம்பம் பற்றிய எமது அறிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. திரைப்படங்களில் பார்த்த சிலம்பமே அதிகளவில் எமக்கு அறிமுகமானது.  தவிர, சிறுவயதில் 90களில் நான் நவாலியில் இருந்தபோது சில கோவில் திருவிழாக்களில் சிலம்ப விளையாட்டு இடம்பெறுவதை அவதானித்து இருக்கின்றேன்.  சிலம்பத்தில் இருக்கின்ற பிரிவுகள், வகைகள் குறித்து சுருக்கமாக கூற முடியுமா?

நிறையப் பிரிவுகள், வீச்சு முறைகள் இருக்கின்றன.  உதாரணமாக அலங்கார வீச்சு என்று இருக்கின்றது.  இரட்டைக் கை வீச்சு, ஒற்றைக் கை வீச்சு என்று இருக்கின்றது.  பந்த வீச்சு என்று இருக்கின்றது.  கோயில்களிலும் கல்யாணவீடுகளிலும் இவை இடம்பெறும்.

அது போலவே மறுக்காணம், துடுக்காண்டம், குறவஞ்சி, அலங்காரச்சிலம்பம் என்றெல்லாம் பிரிவுகளும் பாணிகளும் இருக்கின்றன.  இவையெல்லாம் நேரடியாக செய்துகாட்டியே விளங்கப்படுத்தக் கூடியன.

 1. தமிழகத்தில் வழக்கத்தில் இருக்கின்ற சிலம்பத்திற்கும் ஈழத்தில் நீங்கள் கற்ற சிலம்பத்திற்கும் பெரியளவிலான வேறுபாடுகள் இருக்கின்றனவா?

தமிழகத்திலோ, இந்தியாவிலோ இடத்துக்கு இடம் சில சிறிய வேறுபாடுகள் இருக்கின்றன.  ஆனால் ஒற்றுமைகளே அதிகம்.  குறிப்பிடத்தக்க ஒரு வித்தியாசம் என்னவென்றால் கால்பாடத்தில் ஈழத்தில் ஆறாவது அடிமானம் வரை இருக்கும்.  அங்கு 4 அடிமானமே இருக்கின்றது.

 1. மன்னிக்கவும். கால்பாடம் என்றால் என்ன?

வீடு கட்டுதல் என்று சொல்வார்கள் அல்லவா, அதுதான்.  நாம் நிற்கின்ற ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு அடிமானம்.

 1. கனடாவில் சிலம்பம் பழக்கப்படுகின்றது என்று கேட்டவுடனே அது ஆச்சரியமாகப்பட்டது. இங்கே சிலம்பம் கற்பிக்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி உருவானது? எப்போது ஆரம்பித்தீர்கள்?

1996 இல் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கனடாவுக்கு வந்திருந்தார்.  அப்போது அவர் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று Yonge and Bloor இல் இடம்பெற்றது.  அதில் சிலம்பத்தின் அலங்கார வீச்சு என்று சொல்லப்படுகின்ற வீச்சினை நிகழ்த்திக்காட்டினேன்.  அதுவே கனடாவில் நான் நடத்திய முதலாவது நிகழ்ச்சி.  அதற்கு நிறைய ஆதரவு கிட்டியது.  ஆனாலும் அப்போது சிலம்ப வகுப்புகள் தொடங்கும் உத்வேகம் முழுமையாக வரவில்லை.  கடந்த ஒரு 8-10 வருடங்களாகவே சிலம்பத்தினை வகுப்பாக இங்கே கற்பித்துவருகின்றேன்.  இதுவரை நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் என்னிடம் இங்கே சிலம்பம் கற்றிருக்கின்றனர்.

நாங்கள் சிலம்பத்தினை மிகவும் ஆர்வமாக ஒரு தேர்ந்த குருவிடம் கற்றுக்கொண்டோம்.  எனது குரு காலமான பின்னர், இந்தக் கலைகள் எம்மிடமே தேங்கிவிடக்கூடாது, அடுத்த தலைமுறையினருக்கும் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் உறுதியாகத் தோன்றியது.  அதேநேரம் கனடாவில் இதைக் கற்க ஆர்வத்துடன் மாணவர்கள் வருவார்களா என்ற ஐயமும் இருந்தது.  ஆனால் மிகுந்த ஆர்வத்துடன் சில மாணவர்கள் வந்து சேர்ந்துகொண்டார்கள்.  சிலம்பம் கற்கவேண்டும், எமது கலை வடிவங்கள் அழிந்துவிடக்கூடாது என்கிற எண்ணம் அவர்களிடம் உறுதியாக இருந்தது.  அது என்னையும் ஆர்வத்துடன் கற்பிக்கத் தூண்டியது.  தவிர, இலங்கையில் நான் பழகிய காலங்களில் எல்லாம் சிலம்பம் கற்பிக்கும் இடங்கள் மீது ஒருவிதமான கண்காணிப்பு இருந்துகொண்டேயிருந்தது.  இதனால் பயந்து பயந்தே சிலம்பம் கற்பித்தனர்.  ஆனால் இங்கே அப்படி இருக்கவில்லை.

 1. இவ்வாறு சிலம்பம் கற்பிக்கப்படுகின்றது என்பதை மக்களுக்கு நினைத்த அளவில் பரப்ப முடிந்ததா?

பேராசிரியர் சிவத்தம்பி கலந்துகொண்ட விழாவில் அலங்கார வீச்சொன்றினைச் செய்தது பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.  அதன்பிறகு மொன்றியலில் உள்ள திருமுருகன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி அன்று இடம்பெறும் உறியடித் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிலம்ப நிகழ்வு ஒன்றை நிகழ்த்திவருகின்றோம்.  அதுபோல செல்வச் சந்நிதி கோயில் சப்பறத் திருவிழாவின்போதும் சிலம்ப விளையாட்டுகளைச் செய்கின்றோம்.  ரிச்மண்ட் பிள்ளையார் கோயிலிலும் பல நிகழ்வுகளைச் செய்துள்ளோம்.  இந்நிகழ்வுகளில் ஆண்களும் பெண்களுமாக கிட்டத்தட்ட பத்து பேர்கள் வரை கலந்துகொண்டு சிலம்பம் ஆடிக்காட்டுவோம்.

 1. சிலம்பம் என்றவுடனே அது ஆண்களுக்கான வீரவிளையாட்டு என்கிற தோற்றமே உடனே ஏற்பட்டுவிடுகின்றது. ஆனால் உங்கள் சிலம்ப நிகழ்வுகளில் ஆண்களும் பெண்களுமாகக் கலந்துகொள்வதாகக் கூறினீர்கள். பெண்களும் ஆர்வத்துடன் சிலம்பம் கற்க வருகின்றனரா?

ஆமாம்.  பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் ஐந்து மாணவிகள் வரை இப்போதும் கற்று வருகின்றனர்.  இங்கே நாம் பொது இடங்களில் நிகழ்த்தும் நிகழ்வுகளிலும் அனேகம் பெண்களும் சிலம்பப் பயிற்சிகளைச் செய்துகாட்டுகின்றனர்.  சிலம்பம் ஆண்களுக்கான விளையாட்டு என்பது அண்மைக்காலத்தில் கட்டமைக்கப்பட்ட எண்ணம்.  பெண்கள் நிறையப் பேர் தொடர்ந்து சிலம்பம் பயின்று வந்திருக்கின்றனர்.  ஊரில் நாம் சிலம்பம் பழகியபோதும் நிறையப் பெண்கள் சிலம்பம் கற்றுக்கொண்டனர்.  என்ன பிரச்சனை என்றால் சிலம்பம் கற்க என்று வருபவர்கள் பெரும்பாலும் எமது பாரம்பரியக் கலைகள் மீதிருக்கின்ற ஆர்வத்தாலும், எமது கலைகள் அழிந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தாலுமேயே சிலம்பம் கற்க வருகின்றனர்.  விளம்பரங்கள், பரப்புரைகள் ஊடாக சிலம்பம் கற்க மாணவர்கள் இணைவது என்பது அரிதுதான்.

அந்த வகையில் இங்கே சிலம்பம் கற்க வருகின்ற மாணவர்களை நான் பாராட்டவேண்டும்.  இங்கிருக்கின்ற வேலை நெருக்கடி பற்றி அறிவீர்கள்.  நாங்கள் சிலம்பம் பழகிய நாட்களில் நாள் முழுவதும் சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டது உண்டு.  குருகுல முறைப்படி ஆண்டுக்கணக்காக தொடர்ந்து சிலம்பம் பயின்றோம்.  ஆனால் இங்கே வேலை, படிப்பு குடும்பப் பொறுப்புகள் ஆகியவற்றுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சிலம்பம் கற்க வருகின்றனர்.  அதனை வீட்டில் இருந்து பயிற்சி எடுக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு இருப்பதில்லை.  தவிர தாம் பிறருடன் பழகுகின்றபோது சிலம்பம் கற்கிறார்கள் என்ற ஒளிவட்டமும் அவர்களுக்குக் கிடைப்பது அரிது.  அப்படி இருந்தும் அவர்கள் எடுக்கின்ற ஆர்வம் உண்மையானது.  இதுவே என்னையும் இன்னமும் ஊக்கத்துடன் கற்பிக்கத் தூண்டுகின்றது.

 1. இங்கே உங்கள் மாணவர்கள் எவராவது அரங்கேற்றம் செய்துள்ளார்களா?

இதுவரை இல்லை.  அதற்கு முன்னர் இங்கே கற்பித்தல் முறைகளை ஒழுங்காக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.  இங்கு இருக்கின்ற கல்வித்திட்டத்திற்கு ஏற்ப, சில சில மாதங்களிற்கு ஏற்ப ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து, சான்றிதழ்களை வழங்கிக் கற்பிக்கின்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.

எனக்குத் தெரிந்து இலங்கையில் கூட இன்றுவரை எந்தப் பாடசாலையிலும் சிலம்பம் கற்பிக்கத் தொடங்கப்படவில்லை.  ஆனால் ஏதாவது விதத்தில் பாடசாலைகளில் சிலம்பம் கற்பிக்கத் தொடங்கப்பட்டாலே அது பரவும்.  இப்போதுள்ள மாணவர்களது பெரும்பாலான நேரத்தினை தனியார் வகுப்புகளே எடுத்துவிடுகின்றன.  அதுவும் அவர்கள் இதுபோன்றக் கலைகளைப் பயில்வது குறைவாக இருக்க ஒரு காரணம்.  இன்று ஊரில் பழகுபவர்களுக்கும் பெரிதும் அலங்காரவீச்சுக்களும், பந்த வீச்சுக்களுமே கற்பிக்கப் படுகின்றது.  முழுமையாகக் கற்கும் வாய்ப்பு அங்கும் இல்லை.  தவிர, சனசமூக நிலையங்களிலும், ஆலயங்களிலும் கற்பிக்கத் தொடங்கும்போது இன்னமும் நிறையப் பேரை ஈர்க்கலாம் என்றும் நினைக்கின்றேன்.

 1. இந்தக் காரணங்கள் தவிர சிலம்பத்தை மாணவர்கள் பயில்வதற்கு பெற்றோரும் குடும்பத்தினரும் அதிகம் ஊக்கம் தராத நிலை இருக்கின்றது அல்லவா?

ஆமாம்.  சிலம்பம் கற்பது என்றவுடனே அதனை சண்டைபிடிக்கப் போகின்றனர் என்கிற கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றனர்.  வன்முறை சார்ந்ததாகப் பார்க்கின்றனர்.  இது ஒரு முக்கிய காரணம்.  உண்மையில் சிலம்பம் சிறந்த உடற்பயிற்சி மாத்திரமல்ல.  அது உள ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது.  ஞாபக சக்தியைப் பெருக்குகின்றது.  மனதை ஒருநிலைப்படுத்த உதவிகின்றது.  சுறுசுறுப்பாக இயங்கவைக்கின்றது.

 1. கனடாவில் சிறுவர்கள் பாடசாலைக் கல்வி தவிர ஏனைய விளையாட்டு, கலை சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதனை அரசு ஆதரிக்கின்றது. சிறுவர்கள் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்வதற்கும் ஆன கட்டணங்களைச் செலுத்த வருமானவரி சலுகைகளும் அளிக்கப்படுகின்றது. அப்படி இருந்தும் எம்மவர்கள் மத்தியில் குறிப்பாகப் பெற்றோர்கள் மத்தியில் உடற்பயிற்சி, தற்காப்புக்கலைகள் பற்றிய போதுமான விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை என்றே கருதுகின்றேன்.  தற்காப்புக்கலை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் சிறிது கூறமுடியுமா?

 (அப்போதுதான் பயிற்சி முடித்துவிட்டு வந்திருந்த தனது மாணவனான சாந்திபூஷன் என்பவரை இதற்காக பதிலளிக்குமாறும் உரையாடலில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறார்)

என் சொந்த அனுபவத்தில் இருந்து நான் கூறுகின்றேன்.  நான் இடது கைப்பழக்கம் உள்ளவன்.  இதனால் எனது வலது பலம் குன்றியதாகவும், இடது கையால் மாத்திரமே வேலைகள் செய்யக்கூடியவனாகவும் இருந்தேன்.  பின்னர் நான் தற்காப்புக்கலைகளைப் பழகத்தொடங்கிய பின்னர் இரண்டு கைகளாலும் செயலாற்றும் தன்மையைப் பெற்றுக்கொண்டேன்.  இதனால் மூளையின் இரண்டு பக்கங்களும் செயலாற்றும் தன்மை கிட்டியது.  பாடசாலையில் இது எனக்கு அதிகம் உதவியது.  தவிர, தலைமைத்துவப் பண்பையும் ஊட்டியது.  தாழ்வு மனப்பான்மையுடன் எதற்கும் பின்வாங்கிக்கொண்டிருந்த என்னை, விடயங்களை முன்னின்று செயற்படுத்துபவனாக்க இது உதவியது.  கனடிய வாழ்வில், இது மிக முக்கியமான அம்சமாக உணர்கின்றேன்.  அதுபோல, உடல் ஆரோக்கியத்துக்கும் நிறைய விடயங்களை அறிய முடிந்தது.  நாங்கள் இங்கே உணவுப்பழக்கங்கள் பற்றியும் கூட சொல்லிக்கொடுக்கின்றோம்.

 1. கனடாவில் 10 ஆண்டுகளுக்குக் கிட்டவாக சிலம்பம் கற்பித்து வருகின்றீர்கள். சிலம்பம் பரவலாக மக்களைச் சென்றடையாமல் இருப்பதற்கான காரணங்களாக எவற்றைக் கூறுகின்றீர்கள்?

இங்கே பரவலாக இருக்கின்ற தற்காப்புக்கலைகளைப் பார்த்தோம் என்றால் அவை பெரும்பாலும் சர்வதே ரீதியிலான போட்டிகளில் இடம்பெறுபவை.  சர்வதேச ரீதியாக விதிகளையும் நெறிமுறைகளையும் கொண்டவை.  இதனால் இவை பற்றி ஊடகங்களிலும் நிறையப் பேசப்படுகின்றது.  விளையாட்டுகளுக்கென சர்வதேச ரீதியில் இயங்குகின்ற தொலைக்காட்சி, வானொலி மற்றும் சஞ்சிகைகளிலும் இந்த தற்காப்புக்கலைகள் பற்றிய செய்திகளும் தகவல்களும் இடம்பெறுகின்றன.  ஆனால் சிலம்பம் உள்ளிட்ட எமது பாரம்பரிய தற்காப்புக்கலைகளுக்கு இந்த வாய்ப்பு இல்லை.  அனேகமான தற்காப்புக்கலைகளை பல்வேறு நாடுகள் தம் தேசியக் கலைகளாக அங்கீகரித்து ஆதரவளிக்கின்றன.  நிதியுதவிகளும் நிறையக் கிடைக்கின்றன.

ஆனால் எமது நிலை வேறு.  காலனித்துவ காலங்களில் நாம் அடக்கப்பட்டபோது நமது கலைவடிவங்களும் நசுக்கப்பட்டன.  ஆங்கிலேயர் காலத்தில் சிலம்பம் கற்பது தடைசெய்யப்பட்டிருந்தது.  இவையெல்லாம் எமக்கு எதிராக அமைந்த காரணிகள்.

 1. சர்வதேச ரீதியில் போட்டிகளில் கலந்துகொள்ள விதிகள், நெறிமுறைகளை ஒழுங்கமைக்கவேண்டியது அவசியம். அதற்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக்கம் முக்கியம். சிலம்பத்தைப் பொறுத்தவரை அத்தகைய முயற்சிகள் ஏதேனும் நடைபெற்றிருக்கின்றனவா?

மலேசியாவை மையப்படுத்தி அதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.  கடந்த மூன்று ஆண்டுகளாக வெவ்வேறு நாடுகளில் இருப்பவர்கள் கலந்துகொள்ளும் சிலம்பப் போட்டிகளும் கூட நடைபெறுகின்றன.  ஆனால் இது மிகவும் சவாலானது.  உதாரணமாக World Karate Federation என்கிற அமைப்பு கிட்டத்தட்ட 168 நாடுகளை ஒன்றிணைத்து அந்தந்த நாடுகளின் அரசுகளின் உதவியுடன் சம்மேளனங்களை உருவாக்கி சர்வதேசப் போட்டிகளையும், அந்த நாடுவாரியான போட்டிகளையும் ஒருங்கிணைக்கின்றது.  நேரடியாகச் சொன்னால் எமக்கென்றோர் நாடோ, எமது நலன்களில் அக்கறை கொண்ட நாடோ இல்லாமல், விளையாட்டுத்துறை இல்லாமல் இதற்கான சாத்தியங்கள் குறைவுதான்.

 1. வெவ்வேறு நாடுகளில் உள்ள உங்களை ஒத்த சிலம்பம் கற்பிப்பவர்கள் இணைந்து சங்கங்களை உருவாக்கலாம் அல்லவா? குறைந்தபட்ச சாத்தியங்களையாவது அடைவதற்கு எமக்குள்ள வாய்ப்பாக அது அமையும் என்று நம்புகின்றேன்.

உண்மைதான்.  அதற்கான திட்டமிடும் பணியில் தான் தற்போது உள்ளோம்.  அதைத்தாண்டிச் செல்வது சவாலாகவே உள்ளது.  நாங்கள் அனைவரும் வெவ்வேறு வேலைகளைப் பிழைப்புக்காகச் செய்துகொண்டு ஆர்வத்தின் அடிப்படையிலேயே இதில் ஈடுபட்டிருப்பவர்கள்.  ஆசிரியராக இருந்தும் கூட வேறு வேலையைத்தான் பிழைப்புக்காகச் செய்யவேண்டி இருக்கின்றது.  எமக்கான நிலையான இடமோ அலுவலகமோ கூட இல்லை.  நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் இந்த இடம் கூட டேக் வாண்டோ கற்பிக்கப்படும் இடம்தான்.  இங்கே வாரந்தம் சில மணித்தியாலங்களை நாம் எமக்காக பதிவுசெய்து பெற்றுத்தான் சிலம்பப் பயிற்சியைச் செய்கின்றோம்.  சிலம்பம் பயிலும் இடம் குறைந்தபட்சம் 12 அடி தன்னும் உயரமானதாக இருக்கவேண்டும்.  அப்படியான இடங்களைத் தேடுவது, வாடகைப்பணத்தைக் கொடுப்பது என்று மிகுந்த நெருக்கடிக்குள்தான் இதையெல்லாம் செய்ய முடிகின்றது.

இதையெல்லாம் தாண்டியும் சிலம்பத்தை நாம் தொடர்ந்து கற்பிக்கக்காரணம் அதில் எமக்கு இருக்கின்ற ஆர்வமும், கற்க வருகின்ற மாணவர்களின் ஆர்வமும் தான்.  இன்றைய காலங்களில் எத்தனையோ விதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றோம்.  நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள், மூட்டு வலி, மணிக்கட்டு வலி, இடுப்பு வலி தொடர்பான பிரச்சனைகள், கொலஸ்ரோல், உடற்பருமன் அதிகரிப்பு என்று எத்தனையோ பிரச்சனைகள்.  இவற்றுக்கெல்லாம் தீர்வென்று நாம் பெருமளவு பணத்தினை Gym களில் செலவளிக்கின்றோம்.  விளம்பரங்களால் முன்னிறுத்தப்படும் இந்த Gym உடற்பயிற்சிகளில் நிறைய விடயங்கள் கேள்விக்குரியன.  பெரும்பாலும் அங்கே உடற்பயிற்சிச் சாதனங்களுக்கு முன்னால் இருக்கின்ற தொலைக்காட்சிகளைப் பார்த்தபடி உடற்பயிற்சி செய்கிறார்கள்.  மனமும் உடலும் ஒருநிலைப்படாத உடற்பயிற்சிகளால் உண்மையில் முழுமையான பலனேதும் கிடைப்பதில்லை.  ஒப்பீட்டளவில் எமது தற்காப்புக்கலைகளுக்கு கட்டணமும் குறைவாகத்தான் உள்ளது.   ஒரு சோதனை முயற்சியாகக் கூட இதை வந்து பார்ப்பதில் எம்மவர்கள் தயக்கம் காட்டுவதுதான் வருத்தமாக இருக்கின்றது.  நிலையான இடம் இல்லாமல் ஒவ்வொரு முறை lease முடியவும் வெவ்வேறு இடங்களிற்கு மாறி மாறி இதனைக் கற்பிக்கவேண்டி உள்ளது.  கற்பிக்கின்ற ஆசிரியர்களே நிர்வாகம் சார்ந்த வேலைகளையும் செய்யவேண்டி உள்ளது.  கனடாவில் இத்தனை ஆயிரம் தமிழர்கள் இருந்தும் எமக்கென்றோர் பொதுவான நிலையம் – ஒரு சீனக் கலாசார நிலையம் மாதிரியோ, ஆர்மீனியன் கலாசார நிலையம் மாதிரியோ – எமக்கென்றில்லை.  அப்படி ஒன்று உருவானால் நிலையான ஓர் இடத்தில் நாம் இந்தக் கலைகளைக் கற்பிக்கலாம்.  கனடா ஒரு பல்கலாசார நாடு.  இங்கே எமது தனித்துவங்களையும், கலைவடிவங்களையும் பேண அருமையான வாய்ப்புகள் உள்ளன.  ஆனால் நாம் ஒன்றிணைந்தால் தான் அதனையெல்லாம் செய்யமுடியும்.  சிலம்பம் என்றில்லாமல் எமது எல்லாக் கலைவடிவங்களுக்கும் இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சனை இதுவே.  இதனை எப்படி எதிர்கொள்ளுகின்றோம் என்பதில்தான் எம்மை எப்படி இங்கே தக்கவைக்கப்போகின்றோம் என்பதுவும் தங்கியிருக்கின்றது.

மிக அருமையான உரையாடல்.  உரையாடலின் ஓர் இடத்தில் சிலம்பம் தற்காப்புக் கலைக்கெல்லாம் தாய்க்கலை என்றீர்கள்.  உங்களுடன் பேசி முடிந்தபின்னர் அந்த நம்பிக்கை எமக்கும் உருவாகின்றது.  மிக்க நன்றி.

 

digi-silambam-2015-first-017-01


 

இந்நேர்காணல் ஜனவரி 2016 தாய்வீடு இதழுக்காக மேற்கொள்ளப்பட்டது.  இந்நேர்காணலில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் ஓவியக் கலைஞர் கருணா அவர்களால் எடுக்கப்பட்டவை.

நேர்காணலுக்காக அறிமுகக் குறிப்பு பல்வேறு கட்டுரைகள், இணையத்தளங்களில் இருந்து திரட்டப்பட்டது.