லண்டன்ஈழத்து இலக்கியம், ஈழத்தவர் அடையாளம், அவர்கள் வாழ்வியல் பற்றிய கேள்விகளும் உரையாடல்களும் பெருமளவில் அண்மைக்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.  அண்மைக்காலமாக ஈழத்தவர்களது நாவல்களாகவும், குறுநாவல்களாகவும் பல்வேறு வெளியீடுகளையும் வாசிக்கக் கிடைத்திருக்கின்றது.  இவற்றின் பொதுத்தன்மையை எடுத்துக்கொண்டால் இவற்றில் பெரும்பாலனவை ஈழப்போரின் பிந்தைய காலகட்டங்களில் வெளியானவை, ஓரளவு சுய அனுபவக் குறிப்புகளை உள்வாங்கியவை.  அது தவறானதும் அல்ல.  கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான அரசியல் குழப்பங்களும், இடது சாரிய புரட்சிகர நடவடிக்கைகளிற்கான முயற்சிகளும், சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூகப் போராட்டங்களும் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த ஆயுதப் போராட்டமும் நடந்த நிலம் ஒன்றில் இருந்து வந்தவர்கள் இவற்றின் பாதிப்புகளைத் தவிர்த்து எவற்றைப் பேசுவது? இந்தப் போரும், அதன் நேரடியான விளைவுகளையும், பாதிப்புகளையும், உளவியல் ரீதியான தாக்கங்களையும் அனுபவிக்காமல் ஒருவராவது இருக்க முடியுமா?  நாம் எல்லாருமே போரை வெறுத்தாலும், போரைக்கண்டு ஓடினாலும் கூட, போருடன் வளர்ந்தவர்கள் என்பதுதானே யதார்த்தம்.  அப்படி இருக்கின்றபோது அரசியலைப் பேசாத பிரதி ஒன்றை எழுதுவது என்பது கூட எம்மவர்களைப் பொறுத்த்வரை மிகப் பெரிய அரசியல் அல்லவா?  போரின் இன்னொரு குழந்தை புலப்பெயர்வு.   அந்தப் புலம்பெயர் வாழ்வில் அங்கே தன்னைப் பொறுத்திக்கொள்ள முயலும் மக்களது வாழ்வின் இன்னொரு பக்கத்தை, பல்லின மக்கள் வாழும் பிரதேசங்களில் தம்மைப் பொருத்திக்கொள்வதிற்கு அவர்கள் படுகின்ற பாடுகளையும் பேசுகின்ற பிரதியே லண்டன்காரர்.

லண்டன்காரர் என்ற பெயர் எம் நினைவுகளில் எவ்விதம் பதிந்துள்ளது என்று பார்ப்பது சுவையான நினைவுமீட்டல்களில் ஒன்று.  நாம் ஊரில் இருந்த காலங்களில் எம் அனைவர் உறவுகளிலும் ஒருவரோ, ஊரவர்களில் ஒருவராகவோ லண்டனில் இருப்பவர் ஒருவரை அல்லது லண்டனில் இருந்து ஊர் திரும்பியிருக்கின்ற ஒருவரையோ அறிந்திருப்போம்.  லண்டன்காரர் என்பது தேவகுமாரர்களுக்கு நிகராகப் பார்க்கப்பட்ட காலம் ஒன்று என் நினவிலும் உண்டு.  காலனித்துவ விளைவுகளில் ஒன்றாக எம் மத்தியில் கட்டமைக்கப்பட்ட லண்டன் அபிமானத்துடன் இணைந்த பார்வை அது.   ஆனால் சேனன் காட்டும் லண்டன்காரர்கள் வித்தியாசமானவர்கள்.  புலம்பெயர் வாழ்விலும் நேரடியாக எலைற் / மேட்டுத்தன வாழ்வுடன் தம்மை உடனே இணைத்துக்கொள்ளும் வாய்ப்புக்கிடைக்காதவர்கள் பற்றி எந்தப் பரிகாசமும் இன்றி கரிசனையுடன் இவர்கள் இவ்வாறாக இருந்தார்கள், இருக்கின்றார்கள் என்பதைக்காட்டும் பார்வை சேனனுடையது.  சிக்கனைப் பொறித்து, பொறித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து விற்கின்ற கடையில் வேலை செய்வோரும், வீடு வீடாகச் சென்று பிளையர்கள் (Flyers) போடுகின்ற ஆபிரிக்க, ஆசியர்களும், கிளீனிங் வேலை செய்வோரும் மட்டுமல்ல ஒரு காலத்தில் “மட்டை போடுதல்” என்கிற கடன் அட்டை மோசடிகளில் ஈடுபட்டவர்களும் கூட இதில் கதாபாத்திரங்கள் ஆகின்றனர்.  இரண்டறை கொண்ட வீட்டில் பாதுகாப்பின் நிமித்தம் குசினி ஜன்னலை திறக்காமல் கம்பியினால் பிணைத்துக் கட்டி, 4 பிள்ளகளை தனியாக வளர்க்கின்றாள் சாந்தெலாவின் தாய்.  அவள் அவிக்கும் பன்றிக் கால் சுப்பின் வாசம் பிளட் (flat) முழுவதும் வீசும் என்று சொல்கின்றபோது புலம்பெயர் வாழ்வின் ஒரு கூறினை நெருக்கமாக வெளிப்படுத்துபவராக தோன்றுகின்றார் சேனன்.

கதையெங்கும் கறுப்பி என்று அழைக்கப்படுபவளுக்கு சாந்தெலா என்றொரு பெயரும் இருக்கின்றது.  ஆனால் அவள் தனது இனம் சார்ந்து கறுப்பி என்றே அழைக்கப்படுகின்றாள்.  14 வயதில் தனது காதலனுடன் சேர்ந்து சிறு களவுகளைச் செய்தவள், அவன் கைதாகும்போது அவனைப் பார்க்கச் செல்லும்போது அவளுக்கும் கிரிமினல் ரெகோர்ட் உருவாகின்றது.  “அவள் வேலை தேடத் தொடங்கும்போதுதான் கறுப்பி என்ற அடையாளத்தை மேலும் கண்டுபிடித்தாள்” என்கிறார்.

ஐயர் கதையின் முக்கிய பாத்திரங்களில் ஒருவர்.  பெயரில் மாத்திரம் ஐயர் என்பதைச் சுமந்துகொண்டு விளிம்புநிலை வாழ்வு என்று சொல்லப்படுகின்ற வாழ்வினை வாழ்வோருடன் தன்னையும் நெருக்கமாக்கிக் கொள்ளுகின்றார்.  முன்னாள் மனைவியின் வீட்டில் இருமுறை திருடுகின்றார்.  கறுப்பியுடன் இணைந்து வாழ்கின்றார்.  ரமேஷ் என்கிற கதாபாத்திரம் கைதாகி நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்ற சூழல் உருவாகின்றபோது அவனும் தானும் ஓரினச்சேர்க்கையாளர்கள், சிவில் பார்ட்னர்கள் என்று கூறி அவன் விடுதலைக்காக போராடுகின்றார்.  கதையின் நிறைவில்

//ஐயரை ஒருத்தரும் தற்போது ஐயர் என அழைப்பதில்லை.  அவனே? அவன் ஒரு கம்பிக்காய் என்பான் சுகன்.  “அது ஒரு செக்ஸ் வெறி பிடிச்ச பூதம்” என்பான் தெய்வம்.  “ஆள் விசரன், ஆளுக்கு வூடு (சூன்யம்) செய்து போட்டான்கள்” என்பான் பாஸ்கரன்.  “அப்படி ஒரு ஆளை எனக்குத் தெரியாது” என்பார் கேதாரநாதன்.  இவனுக்கு அடிச்சுப் போட்டாலும் அரசியல் வரப்போவதில்லை, சுத்த அரசியல் சூனியமாக இருக்கின்றான் என நினைத்துக்கொண்டு ஐயரை இறுக்கி அணைப்பாள் சாந்தெலா//

என்று ஐயர் குறிப்பிடப்படுகின்றார்.

கதையில் வருகின்ற பாஸ்கரன் இன்னொரு சுவையான பாத்திரம்.  விபத்தொன்றில் அடிபட்டு அவன் உடலில் வெள்ளையினத்தவரின் பல உறுப்புகள் பொறுத்தப்படுகின்றன.  தனது உடலில் உள்ள உறுப்புகள் நல்ல வெள்ளை உடையன என்று கூறும் அவன் தன் கடைக்குச் சாப்பிட வரும் வெள்ளியினத்தவர்கள் ஊத்தை வெள்ளைகள் என்றும் கசாவாக்காரார் என்றும் கூறி அவர்களுக்கு பாவித்த எண்ணையையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தி பொறிக்கச் சொல்லுகின்றான்.

இக்குறுநாவலில் லண்டனில் உண்மையிலேயே இடம்பெற்ற கலவரம் ஒன்றினைக் குறிப்பிட்டு அதை நோக்கி இட்டுச்சென்ற சம்பவங்கள் என்று கதையை நகர்த்தியிருக்கின்றார் சேனன்.  அவ்வாறு செய்யும்போது வரலாறு என்பது எவ்வாறு எழுதப்படுகின்றது, கட்டமைக்கப்படுகின்றது, செய்தி என்பது என்ன? அது எவ்வாறு செய்தியாக்கப்படுகின்றது என்பதை இக்குறுநாவலின் பிற்பகுதியூடாக குறியிட்டுக் காட்டுகின்றார்.  “பாஸ்கரனுக்கும் டியகோ என்கிற தெருப்பொறுக்கிக்கும் இடைப்பட்ட பழைய பிரச்சனையால் ஒரு பிரதேசமே டியகோவால் தீயிடப்பட்டது” என்கிற மேலோட்டமான புரிதல் உட்பட ஒரு சம்பவம் எவ்வாறு புரிந்துகொள்ளப்படலாம் என்பதைக் காட்டுகின்றார்.  ஒரு விடயம் குறித்த ஒருவரது புரிதலும் அதை அவர் வெளிப்படுத்தும் பாங்கும் அவரது சமூக பொருளாதார அரசியல் நிலைப்பாடுகளுடன் தொடர்புள்ளவை.  ஊடகங்கள் கூறும் செய்திகளும் அவ்விதமே என்பதை, பாஸ்கரன் குறித்து பொய்யான தகவல்களால் ஊடகங்களில் உருவாக்கப்பட்டு ஊதி ஊதிப் பெருப்பிக்கப்படும், தூய இங்கிலாந்து தேச நல்பிரசை விம்பம் நல்லதோர் உதாரணம்.  இன்னொரு விதத்தில் தீயில் இருந்து தப்பிப் பிழைக்க கீழே குதிக்கும் கறுப்பியின் புகைப்படத்தை, ஒரு வெள்ளை இனப்பெண் என நினைத்து வெளியிடும் ஊடகங்கள் பின்னர் அவள் கறுப்பினத்தவள் என்று தெரிந்து அமைதிகாப்பதையும் சுட்டிக்காட்டலாம்.

சேனன் எமக்குத் தெரிந்த இடதுசாரி, ட்ரொஸ்கிச வாதி.  அவரது அரசியலும், பார்வையும் சமூகம் குறித்த அக்கறையும் லண்டன்காரரில் பளிச்சிட்டுத் தெரிகின்றன.  ஒரு செயற்பாட்டாளர் தன்னால் இயன்ற அனைத்து வடிவங்களையும் தனது செயற்பாட்டுக்கான கருவியாக உபயோகிப்பார்.  லண்டன்காரர் சேனன் பாவித்த காத்திரமான, வலிமையான கருவி.  அதேநேரம் நேர்த்தியான பாத்திர உருவாக்கங்களும் லண்டன்காரர்கள் என்று அறியப்படாத ஒரு சாரி லண்டன்காரர்களின் வாழ்வியலும் சிறப்பாக அமைந்திருப்பதையும் குறிப்பிடவே வேண்டும்.  இக்குறுநாவலில் இறுதி அத்தியாயம் அவர் விமர்சனம் என்கிற அதிகாரம் நோக்கிய கிண்டல் என்றும் சொல்லலாம்.  நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்குபோது அவர் சொன்னது போல, தான் சொல்லவந்த அத்தனையையும் மிச்சம் விட்டு விட்டு ,விமர்சனத்திற்கு தேவையானவற்றையும் எழுத்தரையும் பிரதிக்குள் வைத்தே கொன்றுவிட்டு முடிகிறது நாவல்.


  1. இந்த உரை டிசம்பர் 5, 2015 அன்று ரொரன்றோவில் இடம்பெற்ற லண்டன்காரார் அறிமுகவிழாவில் வாசிக்கப்பட்டது.
  2. இக்கட்டுரையில் உபயோகிக்கப்பட்டுள்ள படம் இணையத்தில் பெறப்பட்டது.  உரிமம் எவருடையது என தெரியமுடியவில்லை.
  3. //நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்குபோது அவர் சொன்னது போல, தான் சொல்லவந்த அத்தனையையும் மிச்சம் விட்டு விட்டு ,விமர்சனத்திற்கு தேவையானவற்றையும் எழுத்தரையும் பிரதிக்குள் வைத்தே கொன்றுவிட்டு முடிகிறது நாவல்.// நண்பர் யதார்த்தன் கூறியது.  அவர் லண்டன்காரர் பற்றி எழுதிய அபிப்பிராயத்திலும் இடம்பெற்றது.