அகரமுதல்வனின் “சாகாள்” : சில குறிப்புகள்

அகரமுதல்வனின் சாகாள் கதை மே 2009 இல் ஈழப்போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட பின்னரான பெண்போராளிகளின் நிலையையும் அவர்கள் இராணுவத்தின் பிடியில் இருந்தபோது என்ன நடந்தது என்பதையும் சித்திகரிப்பதாக அமைகின்றது.  அந்தக் கதையினை அவர் சிவகாமி என்கிற விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான பெண்தலைவர் ஒருவரை மையமாகக்கொண்டு கதை எழுதுகின்றார்.  இந்தக்கதை பேசுவது முழுக்க சிவகாமி பற்றியதே என்பதுடன் இது சிவகாமியைப் பற்றி எழுதுவதற்காகவே எழுதப்பட்ட கதை என்பதே உண்மை.  இந்த சிவகாமி என்பவர் அண்மையில் காலமான தமிழினி அவர்களே என்பதை எந்த மேலதிகமான விளக்கங்களும் இல்லாமல் புரிந்துகொள்ளமுடிகின்றது.  சிவகாமி பற்றிய இந்தக்கதை எழுதப்பட்ட முறையாலும், இலக்கியம் என்ற பெயரால் கதைமுழுவதும் நிறைந்திருக்கின்ற வக்கிரத்தாலும் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்திருந்தன.  கண்டனங்களைப் பதிவுசெய்திருந்த பலரும் தாம் ஏன் இந்தக் கதைமீது காட்டமான விமர்சனங்களை முன்வைக்கின்றோம் என்று கூறியே எதிர்ப்பினைப் பதிவுசெய்தபோதும் துரதிஸ்ரவசமாக அவை யாவும் இன்னொரு திசைக்கு மடைமாற்றப்பட்டன.  இந்தக் கதையை தமிழ்தேசியத்துக்கு எதிரானவர்களும் புலி எதிர்ப்பாளர்களும் எதிர்க்கின்றனர் என்பதால் அகரமுதல்வனை ஆதரிக்கவேண்டும் என்கிற அபத்தமான வாதத்தினை பரவலாகக் காணக்கூடியதாக இருந்தது.  அதேநேரம், இப்படியாக அவதூறும் செய்யும் படைப்புகளை எழுதும் வழக்கம் ஒன்று ஈழத்தவர்களிடையே ஏற்கனவே இருந்திருக்கின்றது, ஆகவே இதற்கு முன்னரும் இவ்வாறான கடைகளை எழுதியவர்களை விமர்ச்சித்துவிட்டு, அவர்கள் மீதான விசாரணையைச் செய்துவிட்டு அகரமுதல்வன் மீது திரும்பலாம் என்கிற இன்னொரு வாதமும் எழுந்தது.  அகரமுதல்வன் கதை அது இடம்பெற்ற இடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது, அதன்பிறகு இதனைப் பேசக்கூடாது என்கிறதான வாதமும் எழுந்தது.  எல்லாவற்றிற்கும் சிகரம் வைப்பதுபோல, அகரமுதல்வனின் எழுத்து போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துகின்றது, இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவதால் பதற்றமடைபவர்களே இந்தக் கதையை எதிர்க்கின்றார்கள் என்கிற திசைதிருப்பல்களும் நடந்தன.  அகரமுதல்வன் வெறுமே 23 வயதுமட்டுமே ஆனவர் என்கிற சலுகைகளும் அவருக்கு அளிக்கப்பட்டன.  இந்த வாதங்களைப் பின்வருமாறு பார்ப்போம்.

அகரமுதல்வனின் சாகாள் கதைக்கு முன்னரே ஈழத்தவர்களால் வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களை அவதூறு செய்யும் விதமாகவும், ஆளுமைகளைப் பகடி செய்யும்விதமாகவும் படைப்புகள் வந்திருக்கின்றன என்பது உண்மையே.  அ. முத்துலிங்கம் எழுதிய “பதினொரு பேய்கள்”, நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதிய “கர்ணலின் காமம்”, சாத்திரி எழுதிய “திருமதி செல்வி”, யோ. கர்ணன் எழுதிய “துவாரகாவின் தந்தை பிரபாகரன்” ஆகிய கதைகளை இவ்விதம் குறிப்பிடலாம்.  இவற்றில் அ. முத்துலிங்கத்தின் கதை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகால பெண்போராளி பற்றிய வக்கிரமான சித்திகரிப்புகளுடன்,  அலன் தம்பதிகள் கடத்தலை வைத்து எழுதப்பட்டது.  பொதுவாகவே அ. முத்துலிங்கம் போராளிகள் பற்றியும் போராட்டம் பற்றியும் எழுதும்போதும் அவர் நகைச்சுவை என்று நினைத்து எழுதும் எரிச்சலூட்டம் அபத்தமும், மேல்தட்டுப் பார்வையும் இருந்துகொண்டே இருக்கும்.  அது இந்தக் கதையெங்கும் நிறைந்தே இருந்தது.  விடுதலைப் புலிகளின் ஆரம்பகால தளபதிகளில் ஒருவராக இருந்த கிட்டு மீது நிகழ்த்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலை மையமாகவைத்து கிட்டுவிற்கு பல்வேறு பாலியல் தொடர்புகள் இருந்ததாக சித்திகரித்து எழுதப்பட்டது “கர்ணலின் காமம்” கதை.  அனேகமான விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட திருவுருவாகவே பார்க்கப்படுகின்றார்.  அந்தத் திருவுருவை பகடி செய்வதாக அமைந்த கதை “துவாரகாவின் தந்தை பிரபாகரன்”.  அதிகார பீடங்களின் மீது செய்யப்படவேண்டிய பகடியானது போர் முடிந்த குறுகிய இடைவெளியின் தோற்றுப்போன மக்களின் மன உணர்வுகள் மீது செய்யப்பட்டது என்ற அளவில் இந்தக் கதையும் அறம் தவறியதாகவே அமைந்தது.  சாத்திரி எழுதிய திருமதி செல்வி, ஒருவிதத்தில் அகரமுதல்வனின் சாகாள் கதைக்கு முன்னோடி என்று சொல்லலாம்.  இந்தக்கதை விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வனின் மனைவியைப் பற்றிய மோசமான சித்திகரிப்புடன் எழுதப்பட்டது.  இந்தக் கதைகள் அனைத்துமே அவை வெளிவந்த காலப்பகுதிகளில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டவயே.

அகரமுதல்வனின் சாகாள் கதை வெளியான சமகாலப்பகுதியிலேயே தமிழினி எழுதிய “ஒரு கூர்வாளின் நிழலில்” உம் வெளியாகியிருந்தது.  இந்நூலில் தமிழினி விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றியும், அதன் தலைமை பற்றியும், அரசியல் நகர்வுகள் பற்றியும், போராட்டம் முன்னெடுக்கப்பட்ட விதம் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.  இந்த விமர்சனங்களுக்கான அகரமுதல்வனின் எதிர்வினையாகவோ அல்லது இந்த விமர்சனங்களால் தமிழினி மீது அதிருப்தியுற்றிருந்தவர்களை திருப்திப்படுத்தும் முயற்சியாகவோதான் “சாகாள்” ஐப் புரிந்துகொள்ளமுடிகின்றது.  அத்துடன் சிவகாமிக்கு அல்லது தமிழினிக்கு இவ்வாறாக நடந்து என்பதை அவரே வாக்குமூலம் சொல்வதாக எழுதுகின்ற புனைவினூடாக அவரது ஒரு கூர்வாளின் நிழலில் என்கிற நூலில் அவர் இவற்றையெல்லாம் குறிப்பிடவில்லை என்றுகூறி ஒரு கூர்வாளின் நிழலில் நூலின் நம்பகத்தன்மையை இல்லாது செய்துவிடலாம் என்கிற மோசமான உத்தி ஒன்றும் இதன்பின்னணியில் இருக்க வாய்ப்புண்டு.  சில பஞ்சாயத்து முறைகளில் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு செய்வதை அவர்களுக்கான தண்டனையாக வழங்கும் வழக்கமிருப்பதை செய்திகளில் பார்த்து அதிர்ச்சியடந்திருக்கின்றோம்.  அவ்வாறான தண்டனையை வழங்கும் அதிகாரம் கைவரப்பெறாத அகரமுதல்வன் தன் எழுத்தினூடாக அந்தத் தண்டனையை சிவகாமி மீதும் சிவகாமியின் பெண்ணுடல் மீதும் நிகழ்த்தியிருப்பதன் விளைவே சாகாள்.  அதன் உச்சபட்ச விளைவே “எய்ட்ஸ் நங்கி” என்கிற எள்ளிநகையாடல்.

இந்தக் கதையை போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவதாக எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிடமுடியாது.  போர்க்குற்றங்களை புனைவுகளின் ஊடாக அம்பலப்படுத்துவது என்றால் குற்றம் இழைக்கப்பட்டவர்கள் மீது காண்பிக்கப்பட்டிருக்கவேண்டிய குறைந்தபட்ச பரிவைக்கூட காட்டாமலேயே போராளிகள் காண்பிக்கப்படுகின்றனர்.  //மெகஸின் சிறையில் கொண்டுவந்து அடைக்கப்பட்டாள்.  வதைமுகாமில் பறிக்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட்டதே தவிர அங்கிருந்தவர்கள் எல்லாரும் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்// என்று எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் எழுதுகின்றார் அகரமுதல்வன்.  போரில் கைதாகியும், சரணடைந்தும் சிறைகளில் அடைக்கப்பட்டும், புனர்வுவாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியில் வந்த பெண்கள் இன்றளவும் சமூகத்தில் இயல்புவாழ்க்கைக்குத் திரும்பமுடியாமல் இருக்கின்றபோது இவ்வாறான புனைவுகள் எவ்வளவு குரூரமானவை?  போராளிகள் அவர்கள் அமைப்புகளில் போராளிகளாக இருந்தாலும் மீண்டும் பொதுச்சமூகத்தில் இணையவேண்டி ஏற்படும்போது அங்கு நிலவும் சமூகநம்பிக்கைகளை அவர்களும் எதிர்கொள்ளவேண்டியவர்களாக அல்லவா இருக்கின்றார்கள்.  அப்படி இருக்கின்றபோது இவ்வாறு நடந்ததாக சிவகாமியே  வாக்குமூலமாக அரசியல்வாதி ஒருவருக்குக் கூறப்பட்டதாகக் கூறுவதில் என்ன எத்தனை வக்கிரம் இருக்கின்றது?  தன் மீது பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்படவில்லை என்று தமிழினி பதிவுசெய்கின்றபோது //தொடர்ந்து 23 தடவைகள் எல்லாருக்கும் தெரிந்து வன்புணர்வு செய்யப்பட்ட சிவகாமியை இராணுவக் கோப்ரல் எய்ட்ஸ் நங்கி என்றுதான் இப்போது கூப்பிடுகின்றான்// என்று எழுதுவதை வன்மத்தைத் தவிர வேறு எதைத் துணையாகக்கொண்டு எழுதமுடியும் என்று தெரியவில்லை.  சிவகாமியைத் தாக்கி எழுதுவதை மையாமகக்கொண்ட இந்தக்கதை சிவகாமி மாத்திரமல்ல, கைதுசெய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அத்தனை போராளிகளும் வன்புணர்வுசெய்யப்பட்டார்கள் என்கிறது.  மகசீன் சிறையில் இருந்து வெளியில்வந்து வாழ்ந்துகொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கு இது எத்தனை உளவியல் சித்திரவதையைத் தரும் என்கிற குறைந்தபட்ச அக்கறையேனும் உள்ள ஒருவரால் இந்தக் கதையை எழுதவோ அல்லது ஏதேனும் காரணங்கள் காட்டியோ அல்லது நிபந்தனைகளில் அடிப்படையிலோ இதைக் கடந்து செல்லவோ ஏனும் முடியுமா?

இக்கதையில் இன்னொரு இடத்தில் வருகின்ற //அக்கா நீங்கள் ஏன் இவங்களிட்ட பிடிபட்டனீங்கள்? இன்னொரு பிள்ளை இவளிடம் கேட்டாள்.  அந்தக் கேள்வியின் அடியாழத்தில் நீங்கள் குப்பி கடித்திருக்கலாம் என்கிற இன்னொரு சாரமும் இருந்தது// என்ற பகுதி உண்மையில் அகரமுதல்வன் போன்றவர்களின் ஆதங்கமாக இருக்கவேண்டும்.  போரில் மரணமடையாத, குப்பி கடிக்காத அனைவரும் இவர்கள் பார்வையில் துரோகிகளே அல்லது துரோகம் இழைக்கக் கூடியவர்களே!  அதற்கான தண்டனை அவர்களுக்கு எவ்விதத்திலும் வழங்கப்படலாம், இவ்வாறு புனைவுகள் என்ற பெயரில் எந்தவித மனிதத்தனமும் இல்லாத வக்கிரங்களை அள்ளி இறைப்பது உட்பட என்பதே இவர்கள் நிலைப்பாடு.

அகரமுதல்வன் வெறும் இருபத்துமூன்று வயதே ஆனவர் என்பதாகக் கூறி அவர் மீது சலுகைகாட்ட முனைவது அடுத்த அபத்தம்.  அனுபவமின்மையாலும், அறியாமையாலும் செய்த தவறுகளை வயதைக் காரணம்காட்டி மீளாய்வுசெய்யலாம்.  ஆனால், //கட்டிலில் கிடந்த சிப்பாய் ஒருவன் எழும்பி வந்து அவளின் பிறப்புறுப்பில் தனது கைகளால் சத்தம் வரும்படி பொத்தி அடித்தான்.  எல்லாரும் கைதட்டி மகிழ்ந்தார்கள்// என்று எழுதுகின்ற வக்கிரம் இருபத்துமூன்று வயதிலேயே எப்படி வந்தது என்பதுதான் இங்கே கேள்வியாக இருக்கின்றது.  இந்த வக்கிரத்தை எல்லாம் போர்க்குற்ற அம்பலப்படுத்தல் என்பதுவும், இப்படி எழுதுகின்றவரை தமிழ்த்தேசியத்தின் ஆதரவாளராகவும், முன்னெடுப்பவராகவும் கூறுவதும் மிகவும் பிற்போக்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.  உண்மையில் தமிழ்த்தேசியத்தின் ஆதரவாளர்களும், அதனை முன்னெடுப்பவர்களும் முற்போக்குச் சிந்தனைகளையும், தெளிவான பரந்த பார்வையையும் கொண்டியங்குவதே ஆரோக்கியமானது.  அதைவிடுத்துத் தமிழ்தேசியத்தை ஆதரிக்கின்றார் என்றோ அல்லது புலிகளை ஆதரிக்கின்றார் என்றோ ஒருவரை ஆதரிப்பதும், பரிவுகாட்டிக் காப்பதும் எமது சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற ஒருவிதமான நோய்க்கூறு என்றே கருதவேண்டும்.  இவ்வாறு காட்டப்படும் சலுகைதான்

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் – அப்பர்

யதார்த்தத்தை உள்வாங்குவதும் அதனை இருக்குமிடத்தில் மேலாக ஓரடி முன்னெடுப்பதிலும் தான் வரலாற்றின் வளர்ச்சிப்பாதை அடங்கியுள்ளது. அதற்கு மாறாக தொடர்ந்து கண்மூடித்தனமாக வடக்கு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தால் மீண்டும் தொடங்கிய இடமான தெற்கில் மிதக்க வேண்டி ஏற்படும்.

– அகரமுதல்வன்
03.20.2016

 

என்று நிலைத்தகவல்களைப் போட்டு எந்தச் சலனமும் இல்லாமல் அகரமுதல்வனைப் பயணிக்கவைக்கின்றது.  அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று எழுந்த குரல், அவர் தன் தவறை உணரவேண்டும் எனபதற்காகவே அன்றி அவரை சிறுமைப்படுத்தவேண்டும் என்பதற்கானது அல்ல.  துரதிஸ்ரவசமாக அகரமுதல்வன் அதனை உணராமல் இன்னமும் இனவெறியைத்தூண்டும் விதமாகவும் இலக்கியம் என்ற பெயரில் மிகமோசமான வெளிப்பாடுகளுடன் செயற்பட இருப்பதையே அவரது அகங்கார மௌனமும் அவருக்கு வழங்கப்படும் ஆதரவுகளும் காட்டுகின்றன.  இந்தக் கதையில் அகரமுதல்வன் தேர்ந்த சிவகாமி என்கிற மையத்தைத் தவிர வேறுவிடயங்களும் கதை தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியன.  கீழே வரும் வசனங்களைப் பார்ப்போம்,

  • “மாற்றினத்துப் பெண்களின் மார்புகளை அறுக்கும் மானுடர்களை உலகம் சிங்களர் என்று அழைக்கட்டும்”
  • “இதனைக் கண்காணிக்கும் சிப்பாய் தமிழில் பேசிக்கொண்டிருந்தான். அவன் தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லுவதன் மூலம் வெளியேற்றத்தைப் பறைசாற்றிக்கொண்டிருந்தான் (போராளிப்பெண்களுக்கு உணவு வழங்கப்படும்போது கண்காணித்துக்கொண்டிருந்த இராணுவத்தினன் பற்றி)

இலங்கையில் இருக்கின்ற வேறு இரண்டு தேசிய இனங்கள் மீது வெறுப்பூட்டும் விதமாக நேரடியாக இனவாதத்தைப் போதிக்கும் இந்த எழுத்துகள் எவ்விதம் தமிழ்தேசியப் போராட்டம் சரியான திசையில் பயணிக்க உதவும்?  ஈழப்போராட்டம் பற்றியும் அங்கு இனங்களுக்கிடையில் இருக்கின்ற சிக்கலான தொடர்புகள், கலாசாரத் தொடர்புகள், நிலப்பரம்பல்கள் பற்றியெல்லாம் அறிந்திராமல், அது தொடர்பான சரியான புரிதலும் இல்லாமல் வெறும் இனவெறியூட்டும் எழுத்துகளையும் பாலியல் வக்கிரங்களையும் வன்மங்களையும் மாத்திரம் இலக்கியம் என்று சொல்லி எழுதுவது இலக்கியத்தின் பெயராலும் தமிழ்த்தேசியத்தின் பெயராலும் செய்யப்படும் மாபெரும் மோசடியன்றி வேறொன்றில்லை.


குறிப்பு:

அகரமுதல்வனின் சாகாள் என்கிற கதை கூடு என்கிற இணைய இதழில் (மார்ச் 2016) வெளியாகி பின்னர் நீக்கப்பட்டிருக்கின்றது.  இந்தக் கதை தற்போது அது பதிவேற்றப்பட்ட தளத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் அது உருவாக்கிய சில உரையாடல்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.  அத்துடன் இக்கதை குறித்த உரையாடல்களிலும், பலர் வெளிப்படுத்திய நிலைப்பாடுகாளிலும் தெரிந்த சில அம்சங்கள் அபாய சமிக்ஞைகளாகவும் தோன்றுகின்றன.  இந்த அடிப்படையில் உடனே எழுத இருந்து பிற்போட்ட இக்கட்டுரையை எழுதுவது இப்போதும் முக்கியமானதாகவே அமைகின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: