கதாகாலம்: மகாபாரத மறுவாசிப்பு

 

கதாகாலம்அரசர்களும் ராஜ்யங்களும் நிறைந்த அரச கதைகள் கேட்பதென்பது எல்லாருக்கும் சிறு வயதில் பிடித்தமானதொன்றே.  எனக்கும் என் பத்தாவது வயதில் ஏற்பட்டிருந்த இந்த மோகத்துக்கு அம்புலிமாமாவும் அதில் வெளியாகி வந்த அரசகதைகளும் தீனியிட்டு வளர்த்துவந்தன.   அதே நேரம் எமக்குப் பாடமாக இருந்த வரலாறும் அதனை சுவாரஸ்யமாக கற்றுத்தந்த ஆசிரியர்களான சண்முகராஜாவும், கோபியும் கூட வரலாற்றுப் புதினங்களை வாசிப்பதில் பெரும் ஆவலை தூண்டியிருந்தார்கள்.   இதன் தொடர்ச்சியாக அப்போது ஏதோ வெறி பிடித்ததுபோல பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வேங்கையின் மைந்தன், பாண்டிமாதேவி, பார்த்திபன் கனவு என்று வாசித்து தள்ளியிருக்கின்றேன்.   எல்லா விதமான பொழுது போக்குகளும் தடுக்கப்பட்டிருந்த அந்த காலத்தில் சாரத்தை, அல்லது போர்வையை தோளில் கட்டியபடி, மரக் கொப்புகளை வெட்டிச் செய்த வில்லும், அம்பும், வாளுமாக கையிலேந்தியபடி வீட்டுப் பின் வளவுகளில் நானும் சகோதரர்களும் அலைந்திருக்கின்றோம்.  வரலாற்று நாயகர்களையும், அவர் வீரப் பிரதாபங்களையும் பேசிப் பேசியே இறுமாந்திருந்த அந்த நாட்களின் பசுமை இப்போதும் அடிமனதில் இருக்கின்றது.

ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கின்றபோது வரலாற்றுப் புதினம் என்பதே தாம் நிலை நிறுத்த விரும்பிய ஒருவனின் புகழை கூறுவதற்காக புனையப்பட்டதொன்றே என்று புலனாகின்றது.  வரலாறு என்பது கூட அதுதானே? எந்த நாட்டின் வரலாறு உண்மையை மட்டும் பேசுகின்றது? அப்படி பேசுவது சாத்தியமான ஒன்றுதானா? அமெரிக்க புகழ் பாடும் ஊடகங்களில் “சே” எப்படி சித்திகரிக்கப்பட்டுள்ளார்? இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்ட வி.பி.சிங் இறந்தபோது இந்தியா டுடேயில் அவர் பற்றி வெளியான செய்தி எல்லாருக்கும் நினைவில் இருக்கும் என்று நினக்கின்றேன்.   இதே வகையில்தான் ஒரு காலத்தில் என் கனவு நாயகர்களாகவே இருந்த ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கின்றது என்று பின்னாளில் தெளிவாக புரிந்து கொண்டேன்.   காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய திருஞான சம்பந்தர்தான் சமணர்களை தூக்கிலேற்ற தூண்டினார் என்பதை ”சம்பந்தர் செய்த் அற்புதங்கள்” என்று பட்டியலிட்டு எழுதி புள்ளிகளும் பெற்றிருக்கிறோம் என்று நினைக்கும்போதே வெறுப்பாக இருக்கின்றது.   ஏனைய மதங்களின் வரலாற்றுப் பக்க்கங்களை திருப்பியபோதும் இது போன்ற அதிர்ச்சிகளே காத்திருக்கின்றன.   இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் எல்லாம் மன்னர்களின் வரலாறுகளே தவிர மக்களின் வரலாறுகள் இன்னும் எழுதப்படவே இல்லை.  மன்னர்களின் வரலாறுகள் கூட வென்றவர்களின் பார்வையில்தான் கதை சொல்கின்றனவே தவிர தோற்றுப்போனவனின் வரலாறும், சிறுபான்மையினரின் வரலாறும் கூட எழுதப்படவில்லை.   இந்த வகையில்தான் நான் அண்மையில் வாசித்த தேவகாந்தன் எழுதிய “கதாகாலம்” என்கிற மகாபாரதத்தின் மறு வாசிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

-2-

மகாபாரதக் கதையை தெரியாதவர்கள் எவரும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அதை முழுதாக தெரிந்தவர்கள் எவரும் இல்லை என்பதும்.  வேத காலத்தின் இறுதியில் நடந்ததாக சொல்லப்படும் இந்தக் கதை இன்று வரை கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகையில் “தர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும்; தர்மம் வெல்லும்” என்ற அறத்தை காக்கும் நோக்கில் அதன் நாயக்ர்களாக சொல்லப்படும் பாண்டவர்களும், கிருஷ்ணனும் அதிகம் புனிதப்படுத்தப்பட்டிருக்கலாம்.  ஆனால் தேவகாந்தனின் மீள்வாசிப்பில் கதை சொல்லிகள் கதையை வாழ்வியல் யதார்த்ததுடன் அணுக்கமாக, அதன் கதை மாந்தர்களை எல்லா மனிதர்களைப் போலவே நல்ல, தீய குணங்கள் நிரம்பியவர்களாக சொல்லிச் செல்லுகின்றார்.  அதைவிட முக்கியமாக, பாரதக் கதை நடப்பதில் முக்கிய பங்கெடுத்த, ஆனால் மற்றைய பிரதிகளில் பெரிதும் பேசப் படாத கதை மாந்தர்களான சத்தியவதி (மச்ச கந்தி), அம்பை (சிகண்டி), காந்தாரி, குந்தி, திரௌபதி, சகாதேவன், சுபத்திரை போன்றவர்களின் உணர்வுகள் பெரிதும் பேசப்படுகின்றன.  பாரதக் கதையை கண்ணன் நடத்தினான் என்று கண்ணனை தெய்வமாக்கி இதிகாசங்கள் சொல்ல, பாரதக் கதையை அத்தினாபுரத்துப் பெண்களே நடாத்தினார்கள் என்றும் கண்ணன் தந்திரம் மிகுந்த, அர்ச்சுணனின் நண்பன் மாத்திரமே என்று சொல்லி கதையை கொண்டு செல்கின்றார் தேவகாந்தன்.

-3-

கதையில் பிடித்த சில பக்கங்கள்

காந்தாரி

தன் கணவனுக்கு கண் தெரியாது என்று தன் கட்புலனை இறக்கும்வரை துறந்தவள் காந்தாரி என்று சொல்லி காந்தாரியை “தாம் எதிர்பார்ர்கும்” பெண்மையின் இலக்கணம் என்று சொல்வதை கேட்கும்போதெல்லாம், கணவனுக்காக பார்வை துறந்தாள்; சரி!  ஆனால் தானும் பார்வையை மறுத்ததால் தம் பிள்ளைகளை சரியாக வளர்க்காமல் விட்ட பழி அவளுக்குரியதுதானே? என்று யோசித்திருக்கின்றேன்.  ஆனால் காந்தாரி தான் கண் தெரியாத திருடராஷ்டிரனைத்தான் கல்யாணம் செய்யப்போகிறேன் என்று தெரியாமல் பீஷ்மக் கனவுகளுடன் இருந்தவள் என்றும், அதற்கான எதிர்ப்பாகவே தன் கண்களை மறைத்து துணிகட்டி மணவறை வந்தாள் என்றும் சொல்லும்போது அதிகாரத்துக்கு எதிரான சற்றுப் பலவீனமான எதிர்க்குரலாகவே காந்தாரி தெரிகின்றாள்.  “இதுபற்றிக் கேட்டபோது “திருடராஷ்டிரன் சாம்பிப் போனான்.  அவள் தன்னையோர் அபாக்கியவதியாய்ச் சபையில் அடையாளப்படுத்தியதாய் அவன் எண்ணிப் புழுங்கினான்.  ஆனால் சபையோ அவளின் பதி பக்தியாய் அதைக்கண்டு மெய் மறந்திருந்தது.-பக்.21)”

 குந்தி

பாரதக் கதையை பொறுத்தவரை அதீதமான அமானுஷ்யத் தன்மை வாய்ந்த கதாபாத்திரமாகவே குந்தியின் பாத்திரத்தை பார்க்கமுடிகின்றது.  ஆனால் கதாகாலத்தில் வரும் குந்தியோ தொடர்ச்சியாக கட்டுடைக்கப்படுகின்றாள்.  (ஒரு வாசகனாக பாரதத்தை வாசித்தபோது குந்தி பற்றி என்னுள் உருவாகியிருந்த விம்பம் கதாகாலத்தில் வரும் கட்டுடைக்கப்பட்ட குந்தி பாத்திரமே).  முதலில் குந்தி புத்திரர்களை எடுத்துக்கொள்வோம்.  குந்தி துர்வாச முனிவருக்கு செய்த பணிவிடையால் மகிழ்ந்த அவர் கொடுத்த வரம் மூலமே அவளுக்குப் பிள்ளைகள் பிறந்தன என்பதே இதுவரை சொல்லப்பட்டது.  ஆனால் கதாகாலத்தில் துர்வாசருக்கு பணிவிடை செய்த நாட்களில் ஏற்பட்ட இயற்கையான உடல் உறவின்மூலமே குந்தி கர்ப்பமாகி கர்ணனை ஈன்றாள் என்றும், அவள் கருவுற்று இருந்ததால்தான் யாககாலம் முடிந்து துர்வாசர் வெளியேறிய பின்னரும் கூட அவள் அங்கேயே தங்கி இருந்து கர்ணனை ஈன்று ஆற்றோடு போகவிட்டாள் என்றும் சொல்லப்படுகின்றது.  (தகாப் புணர்ச்சியின் விளைவுகளை தாய் தன் குழந்தையில் சுமத்திவிட்டு தப்பிக்கொண்ட தருணம் அது – பக்.24) இதே வகையில்தான் உறவுகொள்வதற்கான உடற்தகுதி அற்ற பாண்டுவின் மறைமுகமான ஆதரவுடன் வனவுலா சென்று பிறருடன் கூடி பிற மூன்று பிள்ளைகளையும் ஈன்றாள் (அந்நாட்களில் வழக்கத்தில் இருந்த நியோகம் எனும் முறை இது).

குந்தி பற்றிய இன்னுமொரு விபரிப்பு மாத்ரி, பாண்டுவுடன் உடன் கட்டை ஏறியபோது சொல்லப்பட்டுள்ளது.  மாத்ரியுடன் உடல் நிலை இடம் தராதபோதும் பாண்டு கூடலில் ஈடுபட்டதே அவன் இறப்புக்கு காரணம் என்று சொல்லி குந்தி எழுப்பிய இழிமொழிகள் கேட்க முடியாதே மாத்ரி சிறு குழந்தையாக இருந்த சகாதேவனின் கண் முன்னரே தீயில் வீழ்ந்து இறந்தாள் என்றும் அன்று உணர்ந்த சோகமும் தனிமையுமே சகாதேவனை ஞானத்தேடலில் ஆழ்த்திற்று என்றும் சொல்கிறார்.  சற்று யோசித்தால், வம்ச விருத்திக்கான உடல்நிலையான தகுதி இல்லாதவன் பாண்டு.  இது தெரிந்தும் அத்தினாபுர பெரியோர்கள் குந்தி மேல் பழி போட்டு மறுதாரமாய் மாத்ரியை மணம் செய்துவைக்கின்றனர்.  சமகாலத்திலும் நடப்பது இதுதானே? அசுவத்தாமா மட்டுமல்ல, குந்தியரும் கூட இன்றும் வாழ்ந்துகொண்டேதான் இருக்கின்றனர்.

கணவனை இழந்து நாடு திரும்பிய குந்தி அங்கு தன் பிள்ளைகள் இரண்டாம் பட்சமாய் நடத்தப்படுவது கண்டும், தன் பிள்ளைகள் பாண்டுவின் புத்திரர்கள் என்ற பொருள்பட ”பாண்டவர்” என்று மட்டும் அழைக்கப்பட காந்தாரியின் புத்திரர்கள் “கௌரவர்கள்” என்று, மரியாதைக்குரியவர்கள் என்று பொருள்பட அழைக்கப்படுவது கண்டு மனம் வேகுகின்றாள்.  இதற்கு காரணம் பாண்டவர்கள் பாண்டுவுக்குப் பிறக்காமல், தானும் மாத்ரியும் செய்த “வனவுலா”வின் விளைவால் பிறந்தவர்கள் என்பதை சத்தியவதியும், பீஷ்மனும் அறிந்திருப்பார்களோ என்றும், முழுமையான அரச குலப் பெண் இல்லை என்பதால்தான் இப்படி ஓரங்கட்டப்படுகின்றோமோ என்றும் பலவாறாக சந்தேகித்து, முடிவாக இனி தன் பணி பாண்டவர்கள் ஐவரையும் அத்தினாபுர மன்னர்களாக ஆக்குவதொன்றே என்று தீர்க்கமாகின்றாள்.  தம் வாழ்வின் இன்பங்கள் எல்லாம் தம் மணவாழ்வினால் பறிக்கப்பட்ட இரண்டு பெண்களான காந்தாரியும், குந்தியும் தம் பிள்ளைகள் அத்தினாபுர அரசுக்கட்டேற வேண்டும் என்று காய் நகர்த்தினார்கள்.  ஒரு நல்ல எச்சம் பாரதக் கதை.  மோசமான எச்சம் ஏறத்தாழ குருவம்சம் முழுதுமே அழிந்து போனதுடன் நல்லது நடக்க வேண்டும் என்று எத்தனை தீயதும் செய்யலாம் என்ற மோசமான நீதி சொல்லப்பட்டது.

திரௌபதி

பாரதக் கதையை வாசிக்கும்போது திரௌபதிக்கு இழைக்கபட்ட அநியாயத்தை எத்தனை பேர் யோசித்துப் பார்த்திருக்கின்றோம்.  சுயம்வரத்தின்போது தகப்பன் அவளை தான் வைத்த வீர விளையாட்டிற்கான பரிசுப் பொருளாக்கினான்.  சூதாட்டத்தின்போது தர்மன் அவளை தன் உடமைப் பொருளாக்கினான்.  திரௌபதி என்ற பெண்ணை பெண்ணாக யார் பார்த்தார்கள்?.  ஐவீரும் ஒருவீராய்….  என்று அன்னை சொன்னதின் வழியொழுகினார்கள் என்று உரை எழுதுவதை விடுத்து, அன்னை சொன்னால் கூட ஏற்க முடியாத அறம் இதென்றல்லவா பாண்டவ புத்திரர்கள் மறுத்திருக்கவேண்டும்?  பாடசாலையில் பரிசாக பெற்றுவரும் விளையாட்டுக் காரை “எல்லாரும் சேர்ந்து விளையாடவேண்டும்” என்று அம்மா சொல்வதுபோல அல்லவா குந்தியும் சொல்கின்றாள்.  ஒவ்வோராண்டும் ஒவ்வொருவருக்கு அவள் உடமை என்று முறை வைத்துக் கொண்டார்களாம்.  இதனால், ஒருவனின் கருவை தாங்கிய நிலையில் இன்னொருவனின் உடமையாக போகின்றாள் திரௌபதி.  எவ்வளவு கொடுமை இது.  திரௌபதி சிரித்ததற்கான பழிவாங்கலே சூதாட்டம் என்றால், ஒரு கேலிச் சிரிப்பும் ஒரு துகிலுரிவும் நேர் சமமா?  சூதாட்ட அவையிலே அதிகம் அவமானப் பட்டவள் திரௌபதி.  தீர்க்கமுடியாத அவமானம் அது.  அதனால்தான் அவள் பாண்டவர்களுக்குள் இருக்கும் பழிவாங்கும் நெருப்பு – வனவாசம், அஞ்ஞாத வாசம் என்று அணைந்துவிடக்கூடாது என்று அவர்கள் கூடவே சென்று, சூதாட்ட சபையிலே செய்த சபதங்களை தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தாள் என்று கதாகாலத்தில் கதை சொல்லி சொல்வது யதார்த்தமானதாகவே இருக்கின்றது.  விராட நாட்டில் போரில் அர்ச்சுனன் வெளிப்படுகிறான்.  அஞ்ஞாதவாச காலம் முடியமுன்னரே அர்ச்சுனன் வெளிப்பட்டான் என்ற சலசலப்பு எழுகின்றது.  தர்க்கரீதியாக அந்தக் குற்றச்சாற்று சரியானதே என்று சகாதேவனும் உணர்கின்றான்.  இதை அறிந்த திரௌபதி சகாதேவனிடம் சென்று பேசிவிட்டு பின் கிருஷ்ணனிடமும் பேசுகின்றாள்.  அப்போதெல்லாம் அவளுக்கு எந்த சமரசமும் ஏற்பட்டுவிடாமல் நிச்சயம் போர் நடைபெறவேண்டும் என்ற முனைப்பே இருக்கும்.  இதை தேவகாந்தன் “கூந்தல் அவளைச் சிறைப் பிடித்துள்ளதாய்க் கண்டுகொண்டிருந்தான் கிருஷ்ணன்” என்பார்.  அதாவது பழிவாங்கும் உணர்ச்சி அவளுக்குள் இருக்கவில்லை.  பழிவாங்கும் உணர்ச்சிக்குள் அவள் மூழ்கிப் போய் இருந்தாள் என்கிறார்.  இறுதியில் சத்தியவதியிடமிருந்து காந்தாரிக்கும், குந்திக்கும், பின் திரௌபதிக்கும் தாரைவார்க்கப்பட்ட அத்தினாபுரத்து சோகங்கள் எல்லாம் திரௌபதியிடமிருந்து உப பாண்டவர்களின் மனைவியருக்கும், அபிமன்யு மனைவி உத்தரைக்கும் தாரைவார்க்கப்படுகின்றன.

அம்பை

அம்பை, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று சகோதரிகளின் தந்தையான காசிராஜன் தன் பிள்ளைகளுக்கு நடத்திய சுயம்வரத்தில் அழைப்பின்றிப் போய் மூன்று பெண்களையும் கவர்ந்துவருகின்றான் பீஷ்மன்.  அந்த நேரம் அம்பை பிரம்மத்தன் என்ற பிறிதொரு மன்னன் மேல் தான் கொண்ட காதல் பற்றி சொல்ல பீஷ்மனும் அவளை பிரம்மத்தத்தனிடம் அனுப்பி வைக்கின்றான்.  பிறிதொருவனால் கவர்ந்து செல்லப்பட்ட பெண்ணை தன்னால் மணுமுடிக்க முடியாதென்று அவன் அவளை திருப்பி அனுப்ப தன் பிறந்த தேசம் செல்கிறாள் அம்பை.  பீஷ்மனால் கவர்ந்து செல்லப்பட்ட அவள் இனி பீஷ்மனுடன் இருப்பதே முறை என்று அவள் தந்தை காசிராஜனும் திருப்பி அனுப்ப தன்னை ஏற்குமாறு பீஷ்மனிடம் வேண்டுகிறாள் அம்பை.  ஏற்கனவே தான் தன் சிற்றன்னைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை (பிரம்மசாரிய விரதம்) சுட்டிக்காட்டி அவளை ஏற்க மறுக்கிறான் தெரிந்தோ தெரியாமலோ தன் செயலால் ஒரு பெண்ணின் வாழ்வு நிர்மூலமானால் கூட பரவாயில்லை, தான் சத்தியம் காக்கவேண்டும் என்பது தான் பீஷ்மனின் புத்தியாக இருந்தது.  (இத்தனை அறம் காத்த பீஷ்மர் தான் பின்னர் துரியோதனின் அவையிலே திரௌபதி துகிலுரியப்பட்ட போது அமைதி காக்கிறார்!).  இதன் பின் தான் இந்த நிலைக்கு வரக் காரணமான பீஷ்மனை வெல்வேன் என்று சபதமிட்டு வனமேகி, கடுமையான பயிற்சிகள் மூலம் பெண்தன்மை இழந்து ஆண்தன்மை உடலில் ஏற்றி யதுசேன மன்னனிடம் அடைக்கலம் பெற்று சிகண்டி என்ற பெயரில் உறுமீன் வரக் காத்திருகிறாள் அம்பை.  முன்னரே குறிப்பிட்டது போல பாரதக் கதையின் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமகைகளுக்கெதிரான பலவீனமான எதிர்க்குரலாக காந்தாரி தன் கண்களை மறைத்ததைத் சொன்னால், அதன் தொடர்ச்சியாக அதே கொடுமைகளுக்கெதிரான பலமான எதிர்க்குரலாக அம்பையே தெரிகிறாள்.  (திரௌபதியை இதில் எதிர்க்குரலாக சொல்லவே முடியாது அவள் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை தன் கணவர்கள் மூலமாக பழிவாங்கிய, சராசரி தமிழ் திரைப்பட கதாநாயகி போன்றவளே).  இங்கு மூலக் கதையில் அம்பை தவமிருந்து பீஷ்மனை கொல்ல வரமும், ஆணாக மாற வரமும் பெற்றதாய் சொல்ல தேவகாந்தன் ”அம்பை, தபோ கிருத்தியங்களாலும் அசுர அஸ்திர சாதகங்களாலும் தன் பெண் தன்மையையே அழித்தாள்.  மிருதுவான மேனி வன்மை கண்டது…………………………………பெண்ணின் மாறா அவயத்துடன் ஆணாய் ஓர் அபூர்வ அடைதல் – பக் 11” என்று நடைமுறை யதார்த்தத்துடன் கூறுகிறார்.  அதுபோல போரிலே சிகண்டி பீஷ்மன் மீது அம்பு தொடுக்க தொடங்க அவள் அடிப்படையில் ஒரு பெண் என்பதால் அவளுடன் போரிடல் (அக்கால வழக்கப்படி) முறையில்லை என்பதால் சும்மாயிருந்த பீஷ்மர் மீது அம்பெய்து சிகண்டி கொண்டான் என்று மூலத்தில் சொல்லப்பட கதாகாலம் “சிகண்டியின் அம்புகள் காற்றைத் துளைக்கத் துவங்கின.  சிகண்டிக்குள் அம்பையை கண்டிருப்பார் பீஷ்மர்.  நெஞ்சுக்குள் ஒரு மூலையில் இருந்த வலி மறு படி எழுந்திருக்கும்” என்று குற்ற உணர்ச்சியின் கைதியாய் பீஷ்மர் இருந்தபோதே கொல்லப்பட்டதாய் கதாகாலம் சொல்லும்.

 சகாதேவன்

பாண்டவ புத்திரர்களில் பிறவி ஞானி என்று அழைக்கப்படுபவன்.  பெரியன்னை குந்தியின் தூற்றல்களாலே தாய் மாத்ரி உடன் கட்டை ஏறுவதன் சாட்சியாக இருந்த சோகம் கைகூடியவன்.  அந்த சோகமும், குந்தி மேல் இயல்பாக ஏற்பட்ட வெறுப்பினால் ஏற்பட்ட தனிமை உணர்வுமே அவனை ஞானியாக்கிற்று என்று கதாகாலம் சொல்வதை மறுக்கமுடியவில்லை.  இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால் ஞானியான சகாதேவனே ஒரு இடத்தில், ஐவருக்கும் சம உரிமையாக பங்கிடப்பட்ட திரௌபதியிடன் தனக்கான உரிமைகள் குறைவாக இருந்ததாக வருந்துகிறான்.  அஞ்ஞாத வாசம் முடிந்த பின்னர் திரௌபதியும் சகாதேவனும் சந்திக்கும் பகுதி ஒன்றை இலங்கையின் கிழக்குமாகாண நவீன கதை சொல்லி சொல்வதாக கூத்து வடிவிலே சொல்கிறார் தேவகாந்தன்.  துரியோதன் ரகசியமாக சகாதேவனை சந்தித்ததையிட்டு திரௌபதி சகாதேவன் மேல் சந்தேகம் கொல்லும்போதும் பின்னர் தன் தாயிழந்த துயரை ஒரு மகளை ஈன்றிருப்பின் அவள் வடிவிலே சிறிதேனும் மறந்திருப்பேன் என்று சகாதேவன் சொல்லும்போதும் சக மனிதர்களுக்கேயான குணவியல்புகள் நிறைந்த கதாபாத்திரங்களாகவே மகாபாரதக் கதாபாத்திரங்களை மறுஉருவாக்கத்தில் காணமுடிகின்றது.

இதைவிட முக்கியமாக விராட நாட்டிலே அஞ்ஞாத வாசம் முடியும் முன்னரே அர்ச்சுனன் வெளிப்பட்டான் என்று அறிந்தும் திரௌபதிக்காக அதை சகாதேவன் மறைக்கிறான்.  அதை தொடர்ந்தே இந்த சந்திப்பில் சகாதேவனை விட்டு விலகியே இருந்த திரௌபதி அவனுடன் கூடுகிறாள்.  இதை சகாதேவன் “அர்ச்சுனன் வெளிப்பாட்டில் காலக் குறைபாட்டை / நான் மடுத்துக் கட்டுதற்கே / தன்னை எனக்குத் தந்தாளென்று / எனக்குத் தெரியாதோ” என்கிறான்.  பாரதப் போர் நடந்து தன் சபதம் நிறைவேற வேண்டும் என்பதில் திரௌபதி எவ்வளவு உறுதியாக இருந்தாள் என்றும் இந்த அத்தியாயம் உறுதிப்படுத்துகின்றது.

 தருமன் / யுதிஷ்டிரன்.

பாரதக் கதையை வாசிக்க தொடங்கிய நட்களில் இருந்து என்னுள்ளே அதிகளவு கேள்விகளை எழுப்பிய கதாபாத்திரம் தருமனின் கதாபாத்திரம்.  பாண்டவர்கள் ஐவருள்ளும் தருமன் தவிர ஏனைய நால்வரும் தமக்கேயுரிய தனித்திறன்களை கொண்டவர்கள்.  அர்ச்சுனன், பீமன் போன்றோர் பலவீனங்களையும் கொண்டவர்கள்.  ஆனால் தர்மனைப் பொறுத்தவரை அவன் தனித்திறன் என்று எதையுமே கொண்டிருக்கவில்லை.  ஆனால் அவன் பலவீனமான சூதாட்டம் குருக்ஷேத்திரப் போருக்கே காரணமானது.  இங்கு முக்கியமாக காணவேண்டிய விடயம், அர்ச்சுணனும் பீமனும் தத்தம் பலவீனங்களால் வந்த எல்லா துன்பங்களையும் தாமாகவே எதிர்கொள்ள தர்மன், தான் சூதாடி தோற்றபோது தன் தோல்வியின் பங்காளிகளாக தன் தம்பியரையும், திரௌபதியையும் ஆக்கிக்கொண்டான்.  பாரதப் போர் நடந்தபோது கூட போர்க்களத்தில் தர்மனின் வெற்றியாக எதையும் பதிவாக்கப்படவில்லை.  ஒரு தலைவனாக அவன் போரைக் கொண்டு நடத்தக்கூட இல்லை.  பாரதப் போரில் அவன் பெயர் இடம்பெறுவது அவன் சொன்ன “அஸ்வத்தாம ஹத” என்பதுவே.  கதாகாலத்தில் இந்தக் கட்டத்தை சொல்லும் கதை சொல்லி “இதுவரை யுதிஷ்டிரன் என்று அழைத்தவன், தர்மம் தவறியதின் குறியீடாக இனி அவன் தர்மன் என்றழைப்பேன்” என்கிறான்.  தர்மன் தர்மம் காத்து வாழ்ந்தான் என்பதைவிட, தன் பக்க பலங்களை சரியாக பாவித்து தன்னை வளமாக்கிக் கொண்டான் என்பதே பொறுத்தமாக இருக்கும்.  தன் திறன் பாவித்து தான் வென்ற திரௌபதி மீது தன்னால் முழுமையான ஆளுமை செலுத்தப்படாமல் போனதே அர்ச்சுனன் கட்டுக்கடங்கா காமம் கொண்டலையக் காரணம் என்றும், குருக்ஷேத்திரப் போர் முடிவடைந்த பின்னர் பட்டத்து ராணியாக தர்மனுக்கே அதிகம் உரித்துடையவளாக திரௌபதி மாற பீமன் கூட தர்மனிடம் கோபம் கொண்டான் என்றும் கதாகாலத்தில் கட்டுடைக்கப்படும்போது மறுக்க முடியாமல்தான் இருக்கின்றது.

அசுவத்தாமன்

வழி வழியாக வந்த பெரும்பாலான கதைகளில் அசுவத்தாமனை மரணமற்றவன் என்று சொல்வர்.  ஆனால் தேவகாந்தனின் கதாகலத்தில் அஸ்வத்தாமன் தீராப்பழியின் நினைவாக சொல்லப்படுகின்றான்.  உப பாண்டவர்களை கொன்றதிலும், இறுதியில் அர்ச்சுனன் மீது அவன் எய்த அம்பு, நதிக்கரையில் பிதிர்க்கடன் செய்துகொண்டிருந்த அபிமன்யுவின் மனைவியைத் தாக்கியதாலும், எத்தனையோ அறங்களைக் காத்தவனும், ஆற்றல் மிகுந்தவனுமாகிய அஸ்வத்தாமன், ஒரு பழியின் நினைவாகவே காலமெல்லாம் நினைக்கப்படுவான் என்கிறது கதாகாலம்.

“அஸ்வத்தாமனின் நினைவே அவன் ஜீவன், அவன் மரணமற்றிருந்த முறைமை அதுதான்.  அவன் தீராப் பழியின் நினைவு-பக்கம் 144”

 கதாகாலத்தின் இன்னும் சில அம்சங்கள்

பாரதம் என்கிற அமானுஷ்யத்தன்மை அதிகம் பொருந்திய, நடைமுறைக்கு பெரிதும் ஒவ்வாத இதிகாசத்தை ஒரு நாவல் வடிவில் நடைமுறையுடன் ஒத்த, முன்னொரு காலத்தில் நடந்தது என்று சொல்லக்கூடியதாக கதாகாலம் அமைகின்றது.  இந்த இடத்தில் திரௌபதி துகிலுருவுதல் பற்றி தேவகாந்தன் சொல்வது ஒரு பொறிமுறை சார்ந்த விளக்கமாக இருந்தாலும் மிகுந்த சுவாரஸ்யமானதாகவே இருக்கின்றது.

“”துச்சாதன் அவளாது ஆடையை இழுத்தான்.  நிலையில் பெயராது நின்று அவள் சுழன்றாள்.  அவிழ்ந்து நிலம் புரண்டு கிடந்த அவள் கூந்தல் மேலிருந்து கீழ்ப் புரியாய்ச் சுற்றி அவள் அவயங்களை மறைத்து வந்தது.  அவமானத்தைச் செறிவாய் இறக்க வெறீபிடித்து நின்ற துச்சாதனன் துகிலை விட்டு அவள் கூந்தலை இழுத்தான்.  கீழிருந்து மேற்புரியாய் துகில் அவளது நிர்வாணம் மறையச் சுற்றியது.  திரும்ப அவன் துகில் பற்றி இழுக்க கூந்தலும், கூந்தல் பற்றி இழுக்க துகிலும் அவள் செந்நிற மேனி யார் கண்ணும் காணாது மறைத்துவர, மௌனித்த சபை சலசலக்கத் துவங்கியது.  அமானுஷ்யமொன்றின் செயற்பாடாய் அதைக் கணித்து அச்சமடைய ஆரம்பித்தது.  ……………………………………….துச்சாதன் களைத்து வீழ்ந்த்தான்.  அனைவர் மனதிலும் துரோபதி “தெய்வமே” என்று கூவிய சொல் ஒரு உருவமாய் நின்றிருந்தது………..பக்-85.”

 

-பின்குறிப்பாக-

devakanthanஉண்மையில் தேவகாந்தனின் கதாகாலம் தவிர்த்து உபபாண்டவம் என்ற எஸ்.  ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகமும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் மகாபாரதத்தின் மறுவாசிப்பாக வெளியானது.  ஆனால் உபபாண்டவம் பெற்ற கவனிப்பு அளவு கதாகாலம் கவனிக்கப்படவேயில்லை.  இத்தனைக்கும் உபபாண்டவத்துக்கு எந்த அளவிலும் குறைவில்லாதது கதாகாலம்.  ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமான எழுத்தாளார்களில் ஒருவராக அடையாளம் காணப்படவேண்டிய தேவகாந்தனின் எத்தனையோ புத்தகங்களை ஈழத்தமிழ் வாசகர்களே வாசித்தது கிடையாது என்றறியும்போது ஈழத் தமிழினம் என்றொன்று இருந்தது என்பதே வரலாற்றில் மறக்கப்பட்டுவிடும் என்றுதான் தோன்றுகின்றது.  எம்மவர் எழுத்துக்களை நாமே படிக்காததால்தான் ஜெயமோகன் போன்ற சிலர், ஈழத்தமிழ் எழுத்துக்களே தட்டையானவை, ஒரு வட்டத்துள் உழல்பவை என்றெல்லாம் உதறித் தள்ள, புலம்பெயர் நாடுகளில் உள்ள அவர் ரசிகர்கள் சொல்லும் சில நியாயங்களையும் கேட்டுக்கொண்டு அதை சகிக்குமாறு நாமும் சபிக்கப்பட்டிருக்கின்றோம்.


குறிப்பு:

ஈழத்து எழுத்தாளர்களில் தனித்தவமானவர்களில் ஒருவரும், எனக்கு மிகப்பிடித்தவர்களில் ஒருவருமான தேவகாந்தனின்கதாகாலம்” என்கிற மகாபாரத மறுவாசிப்பிற்கு 7 வருடங்களிற்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை இது.   தற்போது கதாகாலத்தின் மறுபதிப்பு நற்றிணை வெளியீடாக வெளிவந்திருக்கின்றபோது அந்தக் கட்டுரையை மீள்பிரசுரம் செய்வதில் பெருமகிழ்வடைகின்றேன்.   கதாகாலம் தவிர்த்து, தேவகாந்தன் எழுதிய விதி, கனவுச்சிறை, லங்காபுரம் (இராமாயண மறுவாசிப்பு), கலாபன் கதை (நூலாக்கம் பெறவில்லை) ஆகியன எனக்கு பிடித்த அவரது நாவல்கள்.   இன்னொரு புதிய நாவலான கந்தில் பாவை தமிழகத்தில் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கின்றது.   மிகவிரைவில் புலம்பெயர் நாடுகளிலும் அதன் வெளியீட்டு நிகழ்வுகள் திட்டமிடப்படுகின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: