தமிழ்நதியின் பார்த்தீனியம் நூல்பற்றிய விமர்சன உரையை ஆற்றுமாறு நான் இங்கே கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றேன். கொடுக்கப்பட்ட கால இடைவெளிக்குள் சொல்லவேண்டிய விடயங்களைச் சொல்லிமுடிப்பது என்பது சவாலானது. எனக்குத் தரப்பட்டிருக்கின்ற கால இடைவேளைக்குள் இந்நாவல் பற்றி ஆவணப்படுத்தல், வராலாற்றெழுதியல் என்பவற்றில் அக்கறைகொண்டிருப்பவன் என்கிற பின்னணியுடன் கூடிய எனது விமர்சனத்தை இங்கே பகிர இருக்கின்றேன். அந்த அளவில் இந்த “விமர்சனமானது” முழுமையான விமர்சனமாக அமையாமல் இருக்கக்கூடும் என்பதை முற்குறிப்பாக கூறிக்கொள்ளுகின்றேன்.
இந்நாவலானது ஈழப்போராட்டத்தில், பெருமளவு இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்துகொள்ளத் தொடங்கிய 80களின் தொடக்கப்பகுதியில் இருந்து ஆரம்பித்து இந்திய இராணுவம் ஈழத்தை விட்டு வெளியேறிய காலப்பகுதியை ஒட்டியதாக நிறைவுறுகின்றது. வானதி – வசந்தன் / பரணியை பிரதான கதாபாத்திரங்களாகக் கொண்டு நகரும் இந்நாவல், 3 பிரதான தளங்களில் நகர்கின்றது.
- வானதிக்கும் வசந்திக்கும் இடையிலான காதல் முகிழ்வதில் இருந்து வசந்தன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து பரணியாக இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெறுகின்ற காலப்பகுதி
- பரணி, இலங்கை திரும்பி அரசியல் வேலைகளிலும் இயக்கப் பணிகளிலும் ஈடுபடுவது. இயக்கம் பற்றிய பற்றுறுதியும் கனவுகளும் கொண்டவனாக வசந்தன் இருந்த காலப்பகுதி
- இந்திய இராணுவ வருகையும் அதனூடாக மக்கள் எதிர்கொள்ளும் வதைகளும் இயக்கங்கள் பற்றிய கனவுகளின் வீழ்ச்சியுமாக இக்காலப்பகுதி நகர்கின்றது
ஆயினும் இந்நாவலின் பிரதான பேசுபொருளாக ஈழத்தில் இந்திய இராணுவத்தின் காலப்பகுதியில் செய்யப்பட்ட கடுமையான சித்திரவதைகள், குற்றச் செயல்கள், பாலியல்ரீதியான குற்றங்கள், வன்புனர்வுகள், கொலைகள் என்பவற்றை எடுத்துரைப்பதாகவும் பதிவுசெய்வதாகவும் அமைகின்றது. ஒருவிதத்தில் அதுவே இந்நாவலின் நோக்கமாகவும் அமைந்திருக்கக் கூடும். அந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கின்றபோது எனக்கு வரலாற்றைப் புனைவொன்றினூடாக எழுதுவதன் சாதக பாதகங்கள் பற்றிய கேள்விகள் எழுகின்றன. கட்டுரைகளையும் ஆய்வறிக்கைகளையும்விட மக்களை இலகுவாகச் சென்றடையக்கூடியதாகவும், உணர்வுரீதியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் புனைவுகள் அமைகின்றன என்பது உண்மையே. அதன் காரணத்தாலேயே அரசியல்/சமூகச் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக புனைவுகளூடாக தமது உரையாடல்களை மக்களுடன் மேற்கொள்ள விரும்புகின்றார்கள். ஈழத்துப் பேராசிரியர்களில் தலையாயவராக நான் கருதுகின்ற பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை 50களுக்கு முன்னரே, புனைவுகளினை இவ்வாறான நோக்கத்துடன் கையாளுவதன் அவசியம் பற்றி பலதடவைகள் எடுத்துரைத்திருக்கின்றார். தமிழ்நதியும் அந்தத் தேவையை உணர்ந்தவராகவே இருக்கின்றார். அந்தப் புரிதலுடன் நாம் நாவலைப் படிக்கின்றபோது இந்த நாவல் யாருக்காக அல்லது யாருடன் எதை உரையாடுவதற்காக, எழுதப்பட்டது என்கிற கேள்வி எழுகின்றது. கூடவே இந்த நாவல் கூறுகின்ற வரலாறானது வளைத்து அல்லது விடுபடல்களுடன் கூடியதாக எழுதப்பட்டிருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது. ஒரு படைப்பாளிக்கு தான் எழுதுவது எதை என்பதை தேர்ந்தெடுக்க, அல்லது தீர்மாணிக்கக் கூடிய சுதந்திரம் இருக்கின்றது என்பதாக எழக்கூடிய வாதத்திற்கு எதிராக, படைப்பாளியின் சுதந்திரம் எதிர் பொறுப்புடைமை என்கிற கோணத்தில் இந்த விடயத்தை எதிர்கொள்ளவேண்டும் என்று கருதுகின்றேன்.
வரலாற்றைப் பதிவுசெய்யவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது வரலாற்றுப் பின்புலத்துடனோ எழுதப்படும் நாவல்களில் இடம்பெறும் விடுபடல்களும் போதாமைகளும் ஏற்படுத்தக் கூடிய எதிர்விளைவுகள் பற்றிய பிரக்ஞையுடனே இதை அணுகவேண்டியிருக்கின்றது. பார்த்தீனியம் நாவலின் என்னுரையில் கூட தமிழ்நதி பின்வருமாறு குறிப்பிடுகின்றார், ஆயினும் அதனை நாவலூடாக எவ்வளவுதூரம் செய்யமுடிந்தது என்பது பற்றிப் பேசவேண்டியிருக்கின்றது.
“1983-1990 காலப்பகுதியில், நேர்முகமாக நான் கண்டதை, அனுபவித்ததை, உய்த்து உணர்ந்ததை, கேட்டறிந்ததை எனது பார்வையில் நாவலாக எழுதியிருக்கிறேன். மனச்சாய்வுகளை, பக்கச்சார்பின் பள்ளங்களை உண்மையைக் கொண்டு நிரப்பும் கடமை அரசியல்வரலாற்றினைத் தொட்டெழுதும் படைப்பாளிக்கு உள்ளது எனும் பிரக்ஞையோடே இதை எழுதினேன். புனைவிலக்கியத்தில் அத்தகைய பிரக்ஞை நிலை கலையின் இயல்பான ஓட்டத்திற்கு எதிரானது என்று சிலர் கூறக்கூடும். அரசியல் புதினங்களில் வரலாறு குறித்த பிரக்ஞையோடு இயங்கவில்லை எனில், அதுவும் கலைக்கு அடிப்படையாக இருக்கவேண்டிய நேர்மைக்கு எதிர்த்திசையில் செல்லக்கூடியதே (பக்கம் 5)”
பார்த்தீனியத்தைப்போல சம்பவங்களும் வரலாற்று நிகழ்வுகளும் பதிவுசெய்யப்பட்ட ஆவணங்கள் அந்தச் சமூகங்கள் குறித்தும் அரசியல் குறித்தும் நீண்டநாட்களின் பின்னர் இடம்பெறும் வரலாற்று எழுதுகைகளுக்கும், வரலாற்று ஆய்வுகளுக்கும் வரலாற்றுப் பின்னணியுடனான புனைவுகளின் எழுதுகைகளுக்கும் மூல ஆவணங்களாகவும் ஆதாரங்களாகவும் அமைகின்றன. துரதிஸ்ரவசமாக, சரியான முறையில் பதிவுகள் செய்யப்படாத எமது சமூகத்தைப் பொறுத்தவரை, வரலாற்று எழுத்துகளும், வரலாற்றின் அடிப்படையிலான புனைவுகளும் சரி நினைவுகளில் இருந்தும் சாய்வுகளில் இருந்துமே எழுதப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாகவும், மக்களிடம் இருக்கக் கூடிய பிரக்ஞைக் குறைவு காரணமாகவும் வரலாற்றைப் புனைவாக எழுதுவதும், புனைவுகளினூடாகவே வரலாற்றை எழுதுவதும், புனைவுகளில் இருந்து வரலாற்றை அறிந்து கொள்வதுமான போக்கு அதிகரித்து வருவதாகவும், ஆரோக்கியமானதாகக் கூறப்படுவதாகவும் இருக்கின்றது. அந்தப் போதாமைகள் பார்த்தீனியத்திலும் இருக்கவே செய்கின்றன.
முக்கியமான குறைபாடாக, உண்மையான கதாபாத்திரங்களும், சம்பவங்களும் புனைவுகளுடனும், அனுமானங்களுடனும் சேர்ந்தே எழுதப்படுகின்றன. பிரபாகரன், மாத்தையா, கிட்டு, ராதா, உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தலைவரும் முக்கிய தளபதிகளும் அதே பெயரிலேயே கதாபாத்திரங்களாக வருகின்றனர். அதுபோலவே பிரபாகரன் திருமணம், ஆரம்ப காலப் பயிற்சிகள், ரீகன் கொலை, விஜிதரன் கொலை, புலிகளுக்கும் பிற இயக்கத்தினருக்குமான மோதல் என்கிற உண்மைச் சம்பவங்களும் விபரமாகக் குறிப்பிடப்படுகின்றன. ஆயினும் இவற்றை எழுதும்போது அவை இந்த நாவலில் படைப்பாக உள்வாங்கப்படாது இவற்றையெல்லாம் சொல்லவேண்டும் என்கிற கதை சொல்லியின் ஆதங்கத்துடனான குரலாகவே மாறிவிடுகின்றது. குறிப்பாக பயிற்சிக் காலம் (ஆறாம் அத்தியாயம், ஏழாம் அத்தியாயத்தின் பெரும்பகுதி) பற்றி இவ்வாறு குறிப்பிட்டலாம். அதுபோல விஜிதரன் கொலை பற்றி எழுதப்படும்போது அதில் உண்ணாவிரதம் ஔவை, விமலேஸ்வரன் உள்ளிட்டவர்களது பெயர்கள் உட்பட விபரங்கள் தரப்பட்டிருக்கின்றன. ஆயினும் விஜிதரனைக் கொலை செய்தவர்கள் யார் என்று கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தில் அன்றைய காலப்பகுதியில் இருந்த எல்லாருக்கும் தெரிந்த உண்மையை ஐயங்களுக்கு ஆதாரங்களில்லை என்று சொல்லிக் கடந்துபோவது ஏமாற்றமும் பலவீனமும் நிறைந்த புள்ளி. விஜிதரன் மட்டுமல்லாமல் விஜிதரன் கடத்தப்பட்டதற்கான உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவராக பார்தீனியத்தில் குறிப்பிடப்படுகின்ற விமலேஸ்வரனும் கூட உண்ணாவிரதம் கைவிடப்பட்ட சிலநாட்களுக்குள்ளாகவே கொலைசெய்யப்பட்டார் என்பதுவே வரலாறு! அதுபோல பல்கலைக்கழகத்தை முக்கிய மையமாகக் கொண்டு நகரும் இந்த நாவலில், நாவல் நகரும் அதே காலப்பகுதியில் இடம்பெற்ற ராஜினி கொலையும் நாவலில் குறிப்பிடவில்லை. ஈழப்போராட்டம் பற்றிய இதற்கு முன்னர் வெளியான புனைவுகளிலும் ஏன் வரலாற்று எழுத்துகளிலும் கூட இதேமாதிரியான விடுபடல்கள் (அவரவரின் அரசியல் சார்பினால்) இருந்தே இருக்கின்றன. எனினும் வரலாற்றும் பார்வை என்று பார்க்கின்றபோது, எமது அரசியல் சாய்வுகளுக்கு அப்பால் இது போன்ற விடுபடல்களைக் கட்டாயம் சுட்டிக்காட்டி எழுதவேண்டி இருக்கின்றது.
இதுபோல நாவலில் ஒரு இடத்தில் புதியதோர் உலகம் நாவல் பற்றி வருகின்றபோது “அதை எழுதியவர் டொமினிக் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. இதுவும் சரி செய்யப்பட்டிருக்கவேண்டும். (விழாவின் முடிவில் ஏற்புரையில் தமிழ்நதி புதியதோர் உலகம் கோவிந்தனுக்கு டொமினிக் என்கிற புனைபெயரும் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். பின்னர் சரிபார்த்தபோது அந்தத் தகவல் விடியல் வெளியீடாக 1997 இல் வெளிவந்த நூலின் இரண்டாவது பதிப்பிலேயே “புதியதோர் உலகம் நூலாசிரியர் கோவிந்தன் குறித்த விபரங்கள் என்கிற தலையங்கத்தின் கீழ் தரப்பட்டுள்ளது. ஆயினும் 1985 இல் வெளியான முதலாவது பதிப்பில் இந்த விபரங்கள் இடம்பெறவில்லை என்றும் புதியதோர் உலகம் எழுதியவராக கோவிந்தன் என்ற பெயரே அந்தக் காலப்பகுதியில் அறியப்பட்டிருந்தது என்றே கருதுகின்றேன்.)
பொதுவாக ஒரு விடயத்தை சம காலத்தில் பார்க்கின்ற கோணத்துக்கும், நீண்டகாலத்திற்குப் பின்னர் பார்க்கின்ற கோணத்துக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கவே செய்யும். இடைப்பட்ட்ட காலங்களில் நடந்திருக்ககூடிய நிகழ்வுகள், அவற்றின் பாதிப்புகள், மேலதிகமாக நாம் பெற்றுக்கொண்ட தகவல்கள் என்பனவற்றின் தாக்கத்தால் இந்த வேறுபட்ட கோணத்திலான பார்வை சாத்தியமாகும். ஒரு விதத்தில் அது தவிர்க்கமுடியாததும் கூட. ஆயினும் முன்னொருபோது நடந்த விடயங்களைப் பற்றி நீண்டகாலத்தின்பின்னர் எழுதும்போது, பின்னர் பெற்றுக்கொண்ட பார்வை மாற்றத்தினையும் சேர்த்து எழுதுவதில் சற்று அவதானமாக இருக்கவேண்டும். நிறைய இடங்களில் தமிழ்நதி இந்தத் தெளிவுடனேயே இருந்திருக்கின்றார் என்றபோதும் மாத்தையா பற்றி சித்திகரிப்பு ஆரம்பம் முதலே அவரை ஒரு எதிர்மறையான பாத்திரமாகவே சித்திகரிப்பதை அவதானத்துக்கு உரியதாக்கவேண்டி இருக்கின்றது.
நாவலில் பல்வேறு இடங்களில் கட்டுரைத் தன்மை ஒரு குறுக்கீடாக அமைந்தது என்பதைக் குறிப்பிடவேண்டும். “ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி அதிகாலை 5 மணிக்கு” என்றும், “பிரேமதாசா பதவியேற்று 11 நாட்களின் பின்னர் ஜனவரி 13ம் திகதி மன்னார் வீதியில் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில்” என்றெல்லாம் வருகின்றபோது நாவலுக்கான மொழி பலவீனமாகி கட்டுரைத்தன்மை மேலோங்கிவிடுகின்றது. தமிழ்நதி இயல்பாகவே கவித்துவமும் மிகுந்த நுன்னுணர்வும் கொண்ட மொழி கைவரப்பெற்றவர். அவரது வழமையான இந்தப் பலம் அபூர்வமாகவே இந்த நாவலில்,
- காடு பற்றிக் குறிப்பிடும்போது “காடு பல்லுயிர்களால் ஆன பேருயிர்”
- சருகுகள் பற்றி “வெக்கையைக் குடித்த மயக்கத்தில் சுருண்டு கிடந்தன இலைகள்
- வீட்டுக்காரரின் கண்ணொன்று படமாக சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதாக தயாபரன் உணர்ந்தார்
- ஷெல் வீச்சு குறித்து “எரிந்து கொண்டுவரும் அன்னாசிப்பழங்கள்”
- இராணுவம் என்பது இரண்டுகாலுள்ள துப்பாக்கி, அதற்கு குண்டுகளாக மாத்திரமே பேசத்தெரியும்
என்று சில இடங்களில் காணக்கிடைக்கின்றன. முன்னர் சொன்னதுபோலவே “எமக்கு நடந்த கொடுமைகள் எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்திடவேண்டும்…” என்கிற படைப்பாளியின் ஆதங்கத்தின் விளைவாக இவ்விதம் அமைந்து இருக்கலாம். ஆனால் போரை முழுமையாக தகவல்பூர்வமாக பதிவுசெய்வதற்கான ஊடகம் புனைவு அல்ல என்றே கருதுகின்றேன். போரையும் போரின் விளைவுகளையும் உணர்வு பூர்வமாக அவற்றின் பாதிப்பின் வெளிப்பாடுகளாகப் பதிவுசெய்வதே புனைவினால் செய்யக்கூடிய சாத்தியமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். புனைவு என்று சொல்லி எழுதாதே வரலாற்றை என்பதை இங்கே நினைவுகூர வேண்டும். இந்நாவலின் பிரதான பாத்திரங்களாக பரணி, வானதி, தனபாக்கியம், தனஞ்செயன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இருக்கின்றபோதும், நாவல் முழுவதும் கதை சொல்லி தான் சொல்லவந்த விடயங்களைச் சொல்லிச்செல்வதற்கே முதன்மை கொடுக்கப்பட்டு பாத்திரங்கள் ஒரு வித சடங்களாக, உயிர்ப்பாக வாசகரால் உணரப்படமுடியாதவர்களாகவே இருக்கின்றனர். இதன்காரணமாக பார்த்தீனியம், ஒரு கலைப்படைப்பாக உணரப்படாமல் தகவல்களின் தொகுப்பாக அமைந்துவிடுகின்றது.
இந்நாவலில் சீலன் என்கிற பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. சாதியக் கொடுமைகளால் வஞ்சிக்கப்பட்ட சீலன் என்கிற சிறுவனின் பாத்திரம், தொடர்ச்சியாக வதைபடுகின்றான்; அவமானப்படுத்தப்படுகின்றான்; அதுவும் தன் சொந்த இன மக்களாலேயே. ஆயினும் ஆயுதம் அல்லது அதிகாரம் கையில் கிடைத்த பின்னர் அவன் பழிவாங்கும் ரீதியிலாக வன்முறைகளைச் செய்வதாக வருவதானது மிகவும் தவறான “காட்சிப்படுத்தல்” (சாம்ப்ளிங்). அதுபோல புலிகள் தவிர்ந்த பிற இயக்கத்தினர் மீது நாவலில் வருகின்ற சித்திகரிப்புகளில் எனக்கு உடன்பாடில்லை. புலிகளால் தடைசெய்யப்பட்ட பின்னர், இந்திய இராணுவ காலத்தில் மீண்டும் இலங்கை வந்த இந்த இயக்கங்களால் மக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பது உண்மையென்றாலும், இந்த நாவலில் பல இடங்களில் – குறிப்பாக பிற இயக்கங்கள் தடை செய்யப்படுவது போன்றவற்றில் விடுதலைப் புலிகளின் கண்ணோட்டத்துடனான வாதங்களே இடம்பெறுவதும் பெருமளவு மக்களும் அந்த நிலைப்பாட்டுடன் இருந்தனர் என்பது போன்ற ஒரு கருத்து வருவதும் முறையானதல்ல. அதேநேரம் இங்கே ஒரு வரையறைக்குட்பட்டு விடுதலைப் புலிகள் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பவர்களாக அமைகின்ற கீதபொன்கலன், ஜீவானந்தம் ஆகிய இரண்டு பாத்திரங்கள் முக்கியமானவை. இவர்கள் இருவருமே பார்த்தீனியத்தின் இறுதிப்பகுதியில் விடுதலைப் புலிகளின் அரசியல் செல்நெறியை ஏற்றுக்கொள்பவர்களாகவே மனமாற்றம் அடைபவர்களாகவும் இருக்கின்றனர்.
இங்கே ஒரு விடயத்தைக் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எமது காலத்தில் ஈழப்போராட்டத்தை கிட்டத்தட்ட விடுதலைப்புலிகளே முன்னெடுத்தனர். அந்தப் பின்னணியிலும், அன்று நாம் எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியவர்கள் என்ற வகையிலும் விடுதலைப் புலிகள் பற்றிய மென்போக்கு எனக்கு இருக்கின்றது. ஆயினும், அரசியல், வரலாற்றுப் பிரக்ஞை கொண்டவனாக எமக்கு முன்னைய வரலாற்றை ஆழமாகவும் பரவலாகவும் படிக்கவும் அறிந்துகொள்ளவும் வேண்டிய தேவையை மிக முக்கியமானதாக உணர்கின்றேன். தமிழ் தேசியம் அல்லது ஈழத்தில் தமிழர்களின் இருப்பானது தனக்கு எதிரான ஒடுக்குமுறை இருக்கும்வரை அந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய தேவையைக் கொண்டதாக இருக்கும். அந்தத் தேவையின் விளைவாக அந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்ற அமைப்புகள் அல்லது கருவிகள் உருவாகும். இவை அனைத்தும் பதிவுசெய்யவும், ஆவணப்படுத்தவும் வேண்டியன. ஆயினும் அவ்விதமான பதிவுகளிலும் ஆவணப்படுத்தல்களிலும் வேண்டுமென்றே தமது தேர்வுகளுக்கு உட்பட்டு செய்கின்ற சாய்வுகள் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டியன.
ஈழத்தவர்களால் அண்மைக்காலமாக பலநாவல்கள் எழுதப்பட்டு வருகின்றன என்பது மிகுந்த ஆரோக்கியமான ஒன்று. 30 ஆண்டுகள் கொடிய போரல் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் எழுத்துகளில் போரும் அதன் கொடுமைகளும் நிறைந்திருப்பதைத் தவிர்க்க முடியாதது. அந்த வகையில் ஈழத்தில் இந்திய இராணுவம் அரங்கேற்றிய கொடுமைகளை பார்த்தீனியத்தினூடாக தமிழ்நதி படைப்பாக்கி இருப்பது முக்கியமான ஒன்று. தமிழகத்தில் இந்த நூல் கணிசமான வரவேற்பைப் பெற்றிருப்பதாக அறியமுடிகின்றது. இந்த நாவலூடாக அவர்கள் நிறையத் தகவல்களைப் பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு பெறப்படுகின்ற தகவல்களையே ஈழம் பற்றிய தமது “அறிவாகவும்” வரித்துக்கொள்வார்கள். ஆயினும் அண்மைக்காலமாக எம்மவர்களிடையே வளர்ந்துவருகின்ற வரலாற்றைப் புனைவுகளில் இருந்து படிப்பது என்கிற வழக்கத்துடன் வைத்துப் பார்க்கின்றபோது சற்று எச்சரிக்கையுணர்வு தோன்றுகின்றது. அதன் அடிப்படையிலேயே எனது அவதானங்களுக்கு அழுத்தம் கொடுத்துப் பதிவுசெய்வது முக்கியமான பணி என்றே கருதுகின்றேன்.
யூலை மாதம் 9ம் திகதி ரொரன்றோவில் இடம்பெற்ற பார்த்தீனியம் நாவல் வெளியீட்டுவிழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை
Leave a Reply