யேசுராசா1946 டிசம்பர் 30 அன்று ஈழத்தின் வடகரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற குருநகர் என்கிற கடலோரக் கிராமத்தில் பிறந்த யேசுராசா அவர்கள் ஈழத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும், இலக்கியச் செயற்பாட்டாளர்களில் ஒருவருமாவார்.  இவர் ஈழத்தில் இலக்கியத்தின் போக்குப் பற்றிய விவாதங்களும் உரையாடல்களும் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த எழுபதுகளில் இலக்கியத்தின் உள்ளடக்கம், அழகியல் தொடர்பாகவும் படைப்பாளிகளுக்கான அறம், இதர கலை வடிவங்களில் இருக்கவேண்டிய பரிச்சயம் என்பன குறித்தும் தொடர்ச்சியாகப் பேசியும், வலியுறுத்தியும் வருபவர்.  இன்றுவரை ஈழத்தின் கலை இலக்கிய இதழ்களுக்குச் சரியான முன்மாதிரியாக விளங்குகின்ற “அலை” இதழின் ஆரம்பத்தில் அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும், பின்னர் அதன் ஆசிரியராகவும் விளங்கியவர் அ. யேசுராசா.  தவிர மாணவர்களுடையே கலை இலக்கியம் பற்றிய புரிதலை ஏற்படுத்துகின்ற நோக்குடன் வெளிவந்த கவிதை, தெரிதல் இதழ்களின் ஆசிரியராகவும் பங்களித்திருக்கின்றார்.  ஒரு இடைவெளிக்குப் பின்னர் தெரிதல் இதழ் தற்போது மீண்டும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றது.  இதழியல் துறையில் திசை என்கிற வாரப் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியிருக்கின்றார்.

தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் என்கிற இவரது சிறுகதைத் தொகுதி 1975ம் ஆண்டு இலங்கை சாஹித்திய மண்டலத்தின் சிறுகதைக்கான பரிசினைப் பெற்றது.  அது தவிர அறியப்படாதவர்கள் நினைவாக என்கிற கவிதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.  இவர் மொழியாக்கம் செய்த கவிதைகள் பனிமழை என்ற பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.  ஆவணப்படுத்தலில் அக்கறை கொண்டுள்ள அ. யேசுராசா தொடர்ச்சியாக ஈழத்தின் கலை இலக்கியப் போக்குகள் பற்றிய பதிவுகளையும் தனது கருத்துக்களையும் பத்திகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதிவந்துள்ளார்.  இவையாவும் தொகுக்கப்பட்டு பதிவுகள், குறிப்பேட்டிலிருந்து, தூவானம், நினைவுக் குறிப்புகள் என்கிற பெயரில் வெளியாகியுள்ளன.  இதுதவிர திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “திரையும் அரங்கும்: கலைவெளியில் ஒரு பயணம்” என்கிற பெயரில் 2013இல் வெளியாகியிருக்கின்றது.

பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், மரணத்தில் வாழ்வோம், காலம் எழுதிய வரிகள் என்கிற கவிதைத்தொகுப்புகளின் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கின்ற அ. யேசுராசா, ஓவியர் மார்க்கு அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட தேடலும் படைப்புலகமும் என்கிற தொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவரும் ஆவார்.  பதிப்புத்துறை சார்ந்து அலை வெளியீடு, தமிழியல் வெளியீடுகள் என்பவற்றிலும் இவரது கணிசமான பங்களிப்பு இருக்கின்றது.

1966 முதலே மரபுக் கவிதைகள் சிலவற்றை எழுதிவந்தாலும் 1968இலேயே புதுக்கவிதைகள் வடிவில் எழுதத்தொடங்கியதாகக் குறிப்பிடும் யேசுராசா தன் முதலாவது சிறுகதையான வரவேற்பையும் அதே ஆண்டிலேயேஎழுதியதாகக் குறிப்பிடுகின்றார்.  ஆயினும் இச்சிறுகதை 1970 இலேயே வெளியானது.  அவரது முதலாவதுகட்டுரையும் கே. எஸ். சிவகுமாரன் கேட்டுக்கொண்டதன் படி 1969 இலேயே “ஒரு வாசகனின் அபிப்பிராயம்” என்கிற பெயரில் தினகரனில் செ. கணேசலிங்கம் மௌனி சிறுகதைகள் பற்றிய பிரமிளின் கட்டுரைக்கு எழுதிய விமர்சனத்துக்கான எதிர்வினையாக எழுதப்பட்டபோதும் அது  – கட்டுரையை எழுதியர் பிரபலமில்லாதவர் என்ற காரணத்தால் பிரசுரத்துக்கு மறுக்கப்பட்டதால் 1971 இலேயே அக்கட்டுரை குருநகர் வளர்பிறை மன்றம் வெளியிட்ட நெய்தல் என்ற பெயரில் வெளியிட்ட மலரில் “குருநகரோன்” என்ற பெயருடன் வெளியானது.  இன்றுவரை 50 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக கலை இலக்கியச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அ. யேசுராசாவின் கனடாப் பயணத்தின்போது தாய்வீடு பத்திரைகையின் சார்பில் அவரைச் சந்தித்து உரையாடினோம்.   ஜூலை 2016 தாய்வீடு இதழில் வெளியான அந்த  உரையாடல் இங்கே …

  1. ஈழத்தைப் பொறுத்தவரை கலை இலக்கிய செல்நெறியில் மிக முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்த காலப்பகுதியாக எழுபதுகளைக் குறிப்பிடலாம். குறிப்பாக அக்காலப்பகுதியில் அமைப்பு ரீதியான பலத்துடனும், அதற்குக் கோட்பாட்டு ரீதியான ஆதரவையும் அங்கீகாரத்தையும் வழங்கக்கூடிய கல்விப் புலம் சார்ந்தவர்களின் ஆதரவுடனும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விளங்கிய காலப்பகுதியில், இலக்கியம் தொடர்பாக அதன் வடிவம், அழகியல் போன்ற அம்சங்கள் குறித்துக் கணிசமான விவாதங்களும் நடந்தனஇந்த விவாதங்களின் வழியாக ஒரு புதிய இலக்கியப்போக்கும் உருவானதுஇவ்வாறு உருவான புதிய இலக்கியப்போக்கினை முன்னெடுத்தவர்களில் ஒருவரும், அதற்கான கணிசமான பங்களிப்பை வழங்கியவர்களில் ஒருவராகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.   எழுத்தாளர்களும் வாசகர்களும் எழுத்து / வாசிப்பு என்பவற்றுடன் மாத்திரம் நின்றுவிடாது ஓவியம், திரைப்படம், இசை உள்ளிட்ட ஏனைய கலைவடிவங்களிலும் அக்கறை காட்டவேண்டும் என்று நீங்களும் பலதடவை குறிப்பிட்டிருக்கின்றீர்கள்பின்னாட்களில் நீங்கள் எழுதிய பத்தி எழுத்துகளிலும் சரி, உரைகள், நேர்காணல்களிலும் சரி இதையே நீங்கள் வலியுறுத்தி வந்தீர்கள்இந்தப் போக்கு எழுபதுகளில் இயல்பாக உருவான ஒரு போக்கா? அல்லது உங்களுக்கு ஏற்பட்ட சில உந்துதல்களால் நீங்கள் இதை முன்னெடுத்தீர்களா?

நாங்கள் எழுபதுகளில்தான் இலக்கிய உலகிற்குள் வருகின்றோம்.  கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம் என்கிற அமைப்பொன்றை, 1969 இன் பிற்பகுதியில் தொடங்கினோம். இந்த அமைப்பில், நான் கொழும்பில் இருக்கும்வரை இணைந்து செயற்பட்டேன்.  1971 இல் கொழும்புக்கு வெளியே நான் மாற்றலானபோதும் கூட, இந்த அமைப்புடன் தொடர்புகளைப் பேணிவந்தேன்.  இவ்வாறு கொழும்பில் இருந்தபோது எமக்கு ஐரோப்பியத் திரைப்படங்களைப் பார்க்கவும், சிங்கள நாடகங்களைப் பார்க்கவும், கலாபவனத்தில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சிகளைப் பார்க்கவும் வாய்ப்புக்கள் கிட்டின.  இந்நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகள் தமிழ்ப் பத்திரிகைகளில் அதிகம் இடம்பெறாவிட்டாலும், டெய்லி நியூஸ் போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் தகவல்களையும், தொடர்ந்து பார்த்துக்கொள்வோம்.  நாம் என்று சொல்வதில் குப்பிழான் ஐ. சண்முகன், தில்லைக்கூத்தன், மாவை நித்தியானந்தன், அண்ணா இராசேந்திரம் போன்றோர் முக்கியமானவர்கள் என்றாலும் – வேறு சில நண்பர்களுங்கூட இருந்தார்கள்.  அந்தக் காலப்பகுதியில்தான் தாசீசியஸ், முருகையன், சிவானந்தன், சுந்தரலிங்கம் போன்றோர் இணைந்து நாடோடிகள், கூத்தாடிகள் என்று சில அமைப்புகளின்மூலம் நவீன நாடகங்களை அரங்கேற்றவும் தொடங்குகின்றார்கள்.  இதன்வழி ஒரு புதிய நாடகப் போக்கும் உருவாகின்றது.

இக்காலப் பகுதியில் ஈழத்தில் இருந்து வருகின்ற அநேகமான இலக்கிய இதழ்களை நாங்கள் வாசித்து வந்தாலுங்கூட, தமிழகத்தில் இருந்து வருகின்ற இலக்கிய இதழ்கள், சிற்றிதழ்கள் போன்றவற்றின் தாக்கம்தான் எம்மில் அதிகமாக இருந்தது.  இலங்கையில் வருகின்ற பல்வேறு இதழ்களில், இலக்கியம் பற்றியவையே அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டு வந்ததை அவதானிக்க முடிந்தது.  இலக்கியத்துறை சார்ந்தவர்களுக்கு நவீன நாடகம், நவீன திரைப்படம், நவீன ஓவியம் போன்றவற்றில் பெரிய நாட்டம் இருக்கவில்லை.  எனவே எமது ரசனை நிலையில் இவற்றையெல்லாம் பார்த்துவந்த எமக்கு, தமிழிலும் இவையெல்லாம் எழுதப்படவேண்டும் – அறிமுகம் செய்யப்படவேண்டும் என்ற அவா இருந்தது.  இக்காலப்பகுதியில் தமிழ்நாட்டில் – சிற்றிதழ்களில் – குறிப்பாக வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள், எழுத்தாளர்களுக்கு அல்லது படைப்பாளிகளுக்கு பல்வேறு கலை வடிவங்களின் தாக்கமும் பரிச்சயமும் இருப்பது, அவர்களது கலை இலக்கிய வெளிப்பாட்டுத் திறனிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி வந்தார்கள்.  இதில் எமக்கும் உடன்பாடு இருந்தது.  க.நா. சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா போன்றவர்களின் பிறமொழி இலக்கிய மொழிபெயர்ப்புகளையும், இந்தியாவின் பிராந்திய மொழி இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வரும்போது அவற்றையும் படித்த எமக்கு, வெவ்வேறு சமூக, கலாசார, அரசியல் பின்னணிகொண்ட மக்களின் பண்பாட்டையும் வாழ்க்கையையும் அறிந்துகொள்ள முடிந்தது.  இவற்றையெல்லாம் நாமும் இலங்கையில் செய்யவேண்டும் என்று விரும்பினோம். என்றாலும் அதற்கான தளம் எமக்குப் போதுமானதாக இருக்கவில்லை. முற்போக்கு இலக்கிய அணியினரிடம் இருந்து விலகி நின்ற அ. செ. முருகானந்தன், வ.அ. இராசரத்தினம் , கனக. செந்திநாதன்  போன்ற எழுத்தாளர்களிடம் கூட –  நமது மொழி, நமது பண்பாட்டு மரபு என்பதான பெருமித உணர்வும், வழமையான இலக்கியபோக்கையே  தொடர்ந்து கொண்டாடும் போக்கும் இருந்தனவே அன்றி, பன்முகப்பட்ட பார்வைகள் இருக்கவில்லை.  எனவே, அப்போது நிலவிய போக்குக்கு மாற்றான ஒரு கலை இலக்கியப் பார்வையும் விமர்சன மதிப்பீடுகளும், எழுபதுகளில் இளைஞர்களாக இருந்த எம்மை ஒத்தவர்களிடம் இருந்தது.  அலை போன்ற சஞ்சிகையும் எமது செயற்பாடுகளும், இப்படியான பின்னணியிலேயே உருவாகின என்றே நினைக்கின்றேன்.

  1. இந்த இடத்தில் இன்னொரு விடயத்தைக் கேட்கவேண்டும். அப்போது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் முன்னெடுத்த இலக்கியங்கள் பற்றியும், அவர்களது இலக்கியக் கோட்பாடு பற்றியும் கறாரான விமர்சனங்களை முன்வைத்தவர் நீங்கள்இந்தக் காலப்பகுதியில்தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்என்கிற சிறுகதைத் தொகுப்பு வெளிவருகின்றதுஇதில், 1966 முதல் 1974 வரையான காலப்பகுதியில் நீங்கள் எழுதிய 11 சிறுகதைகளில் 10 சிறுகதைகள் வெளியாகின்றனசிறுகதை, இலக்கியம் தொடர்பாக அவை எவ்விதமாக இருக்கவேண்டும் என்று உங்களது விமர்சனங்கள் மூலமாக நீங்கள் முன்வைத்த மதிப்பீடுளுக்கு ஈடுசெய்வதாக, உங்கள் சிறுகதைத் தொகுப்பு அமைந்திருந்ததுநீங்கள் எழுதி வெளியான ஒரேயொரு சிறுகதைத் தொகுப்பு அது என்பது மட்டுமல்லாமல் அதற்குப் பிறகு வேறு சிறுகதைகளை நீங்கள் எழுதவும் இல்லைஆயினும் இன்றுவரை ஈழத்தில் வெளியான மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்றாக உங்கள் சிறுகதைத் தொகுப்பைக் கருதமுடிகின்றதுஉங்களது தொகுப்பை இலக்கியம் தொடர்பான உங்களது மதிப்பீட்டிற்கான மாதிரியாக நீங்கள் எழுதினீர்கள் என்று கருதலாமா?

அப்படிச் சொல்லமுடியாது என நினைக்கிறேன்.  என்னை நான் ஒரு வாசகனாக, ரசிகனாகத்தான் முதன்மையாகக் கருதுகின்றேன்.  எனது வாசிப்புக்கூட, கடந்த ஆறேழு வருடங்களாகக் குறைந்துவிட்டது.  குறிப்பாகப் புனைவுகளில் எனது ஆர்வம் மிகவும் குன்றிவிட்டது.  திரைப்படங்களில் இப்போதும் ஆர்வம் இருக்கின்றது;  அதில்தான் பிரதானமாக எனது கவனமும் இருக்கின்றது.  எழுபதுகளில் எனது நண்பர்கள் – குறிப்பாக குப்பிழான் ஐ. சண்முகன், தில்லைக்கூத்தன், சாந்தன், ராஜகோபாலன், நெல்லை க. பேரன், வன்னியகுலம் போன்றவர்கள் – நிறைய எழுதிவந்தார்கள்.  இவர்கள் எழுதியவை வீரகேசரி, தினகரன், அஞ்சலி, தமிழமுது போன்றவற்றில் எல்லாம் வெளியாகிவந்தன.  நான் அப்போதும் வாசகனாகவே இருந்துவந்தேன்.  அதனால், நண்பர்களுக்கிடையில் கலந்துரையாடும்போது, எனது மதிப்பீடுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வேன்.  ஆனால் இவையெல்லாம் நண்பர்களுக்கிடையிலான உரையாடல்களாக நிகழ்ந்ததனவேயன்றி, நான் வெளியில் அறியப்படவில்லை.  இக்காலப்பகுதிகளில் அவ்வப்போது நான், சில சிறுகதைகளை எழுதியும் வந்தேன். நாம்  இப்போது முற்போக்கு அணியினர் என்று குறிப்பிட்டாலும், அவர்களுக்குள்ளும் புறநடையாக நல்ல கதைகளை எழுதினவர்கள் இருக்கின்றார்கள்.  உதாரணமாக செ. கதிர்காமநாதனின் கதைகள் வித்தியாசமான, நல்ல கதைகள்.  செ. கணேசலிங்கனின் ஆரம்பகாலக் கதைகள் – குறிப்பாக நல்லவன், சங்கமம், ஒரே இனம் போன்ற தொகுதிகளில் உள்ள சில கதைகள் – மிக நல்ல கதைகள்.  இதற்குக் காரணம் என்னவென்றால் அவர்கள், தமது ஆரம்பகாலத்தில் தங்கள் உணர்வுகளை, தங்களைப் பாதித்தவற்றைத்தான் நேர்மையாக எழுதினார்கள்.  பின்னர் அவர்கள் தமது கட்சிக்குக் கடமைப்பட்டு, கோட்பாடுகளுக்குத் தம்மை வரித்துக்கொண்டு எழுதியபோது, அவர்களது எழுத்துக்கள் செயற்கைத்தனமாக ஒரு தொழிற்சாலைத் தயாரிப்புப் போல உருவாகின.  அண்மையில், ஒரு வருடத்துக்குள் இருக்கும், ஈழத்தில் முன்பு வெளியான பத்துப் பதினைந்து நாவல்களை ஒருசேர வாசித்துப் பார்த்த போதும், கணேசலிங்கனின் ‘நீண்ட பயணம் ஒரு முக்கியமான நாவல் என்றே உணர்ந்தேன்.  ஆனால் அதற்குப் பிறகு அவர் ஒரு ஐம்பது நாவலாவது எழுதியிருப்பார்.  அவற்றில் சிலவற்றைத் தவிர நிறைய நாவல்கள், நான் மேலே சொன்னதுபோல செயற்கையானவை.  இதை ஒத்த தன்மைகளை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பலரது எழுத்துக்களிலும் அவதானிக்கலாம்.  இவற்றைப் பற்றியெல்லாம் நாம் நண்பர்களாக மிகத் தீவிரமாக உரையாடினோம்.  ஆயினும் இவற்றைக் கட்டுரைகளாக எழுதவோ அல்லது பத்திரிகைகளுக்கு அனுப்பவோ அப்போது முயலவில்லை.  அப்படிச் செய்வதற்கு இளைஞர்களாக இருந்த எமக்குக் களமும் இருக்கவில்லை.  இந்தச் சூழலில், மௌனி சிறுகதைகள் தொகுப்பிற்கு தருமு சிவராம் எழுதியிருந்த முன்னுரையை விமர்சித்து கணேசலிங்கன் எழுதிய கட்டுரை ஒன்று, தினகரனில் வெளியாகியிருந்தது.  அந்தக் கட்டுரையின் வாதங்களை மறுத்து எனது கருத்துக்களை நான், அப்போது பெயர்பெற்ற விமர்சகராக இருந்த கே.எஸ். சிவகுமாரனிடம் கதைத்தபோது பகிர்ந்துகொண்டேன்.  அவரும் அதனை எழுத்துவடிவில் தருமாறு கேட்டுக்கொண்டார்.  கே.எஸ். சிவகுமாரனுக்கும், பின்னர் அந்தக் கட்டுரையை படித்த தருமு சிவராமுக்கும் கட்டுரை பிடித்திருந்தபோதும், தினகரன் அந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க மறுத்துவிட்டது.  எமது நண்பர்கள் பலர் இவ்வாறான வேறுபட்ட பார்வைகளைக் கொண்டவர்களாக இருந்தபோதுங்கூட, நாம் எழுதுகின்ற விமர்சனங்களை வெளியிட எமக்கான தளம் இருக்கவில்லை.  அதேசமயம் நண்பர்கள் எழுதுகின்ற புனைவுகளை வெளியிட எமக்கு ஓரளவு இடம் கிடைத்ததும் உண்மை.  ஆனால், முற்போக்கு எழுத்தாளர்களது படைப்புக்களையும் இலக்கியக் கருத்துக்களையும்பற்றிய எமது மதிப்பீடுகளைக் கட்டுரைகளாக எழுதவேண்டிய தேவையே இருந்தது.  மற்றது, இப்போது யோசித்துப் பார்க்கின்றபோது, எழுத்தில் இருக்கின்ற வறட்சி என்பது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தவர்களின் எழுத்துக்களில் மாத்திரம் இருந்தது என்றும் சொல்லமுடியாது.  தமிழ்த் தேசியம் பேசுகின்ற எழுத்தாளர்கள் பலரது எழுத்துகளிலுங்கூட, இந்த வறட்சியைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  ஏன், முற்போக்கு எழுத்தாளர்களது எழுத்துக்களை அப்போது விமர்சித்த மு.பொவின் பின்னாளைய எழுத்துக்களிலும், அதே வறட்சித் தன்மையைக் காணலாம்.  முன்பு நல்ல கதைகளை எழுதிய சட்டநாதன் பிற்காலங்களில் எழுதுகின்ற எழுத்துக்களிலும் கூட, இதே வறட்சியைக் காணலாம்.  இது ஏன் இவ்விதமாக அமைந்தது என்று யோசிக்கும்போது எனது புரிதல் என்னவென்றால், கலையின் அடிப்படை என்பது அனுபவ வெளிபாடுதான்.  இந்த அனுபவம் என்பது முதல்நிலை அனுபவமாகவோ இரண்டாம் நிலை அனுபவமாகவோ இருக்கலாம்.  எனக்கு நிகழாமல் இன்னொருவருக்கு நிகழ்ந்த அனுபவத்தைக்கூட, நான் எனது அனுபவமாக உள்வாங்கி வெளிப்படுத்தலாம்.  எமது அடிமனநிலையின் ஒரு செயற்பாங்குதான் கலைச் செயற்பாடு என்று சொல்கின்றார்கள்.  “நான் எழுதும் வசனத்தை நான் அறியமாட்டேன்” என்கிற அர்த்தத்தில், ஹெமிங்வே ஓரிடத்தில் சொன்னதை இங்கே தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.  ஏதோ ஒரு தருணத்தில் இந்தப் பொறி அல்லது தூண்டல் எம்மைப் படைப்பு மனநிலைக்கு இட்டுச்செல்கின்றது. இதைத்தான் தருமு சிவராம் Creative state of mind  என்று தனது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.  இந்தத் தருணத்தில் நாம் எழுதத் தொடங்கும்போது, உயிர்ப்பான படைப்புச் செயற்பாடு ஒன்று உருவாகின்றது.  அந்தப் படைப்பு, எமது முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை அனுபவத்துடன் வெளிப்பாடு காண்கின்றது.  நான் எழுதிய கதைகள், எனது  அனுபவங்களால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவையே.  ‘ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது’ என்கிற எனது கதையை படித்த பலர், அக்கதை ‘அந்நியமாதலை வெளிப்படுத்துகின்றது என்று கூறியுள்ளனர்.  உண்மையில், அதனை எழுதும்போது நான் அந்தப் புரிதலுடன் எழுதவில்லை.  எனது சுய அனுபவம் ஒன்றின் அடிப்படையில் எழுதப்பட்டதே அந்தக் கதை.

வெங்கட் சாமிநாதன் சொன்ன ‘அஞ்சறைப் பெட்டி மனநிலை என்ற விடயம் முக்கியமானது.  ஒரு பிரக்ஞை உள்ள உணர்வுஜீவி எல்லா விடயங்களாலும் பாதிக்கப்படுவான், ஈர்க்கப்படுவான்.  அவற்றின் பாதிப்புகளின் அடிப்படையில் அவனது கலைசார்ந்த செயற்பாடுகளும் வெளிப்பாடுகளும் அமையும் என்றவர் அவர்.  வெங்கட் சாமிநாதன் ஒரு மார்க்சிய எதிர்ப்பாளர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  அவரது மார்க்சிய எதிர்ப்புக் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.  ஆனாலும் கலை பற்றிய அடிப்படைகளை, நான் அறிந்தவரையில் தமிழ்ச் சூழலில் தெளிவாகத் தந்தவர் அவர்.  அந்தவிதத்தில் அவர் மீது எனக்கு மரியாதையும் உண்டு.  இந்தக் காலப்பகுதியில் சின்னப்பபாரதியின் ‘தாகம்’ என்கிற – இரண்டு பாகங்களைக்கொண்ட  நாவலைப் பற்றி கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் விதந்து கூறிக்கொண்டிருந்தபோது, எனக்கு அந்த நாவலின் ஒரு பகுதி மாத்திரமே இலக்கியத்தன்மை வாய்ந்ததாகப்பட்டது.  வெங்கட் சாமிநாதன் அந்நாவல் பற்றி எழுதிய விமர்சனத்திலும் அதையே குறிப்பிட்டிருந்தார்.  இது என்னைக் கவர்ந்ததிருந்தது.  அதுபோல ராஜமார்த்தாண்டனும், வானம்பாடிக் கவிஞர்கள் குறித்து ‘சதங்கை’ இதழில் எழுதியவையும் நான் அதே கவிதைகளைப் படித்தபோது பெற்ற அனுபவத்தைப் பிரதிபலிப்பதாகவே இருந்தன.  இவ்வாறான அனுபவங்களின் பாதிப்பாலும், எமது உள் சுற்றுக்குள் நடந்த உரையாடல்களாலும், நான் எட்டிய கருத்துநிலைகளின் தாக்கத்தால் எனது கதைகள் அமைந்தனவே அன்றி, அவை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரின் எழுத்துக்களுக்கான மாற்றாகவோ அல்லது மாதிரியாகவோ திட்டமிடப்பட்டு அமைந்தவை அல்ல.

  1. ஆனால் அந்த ஒரு தொகுப்பிற்குப் பிறகு நீங்கள் கதைகள் எதுவும் எழுதவில்லைத்தானே, அது ஏன்?

அதற்குப் பிறகு கதைகள் ஒன்றும் நான் எழுதவில்லைத்தான்.  கவிதைகள் எழுதியிருக்கின்றேன்.  கவிதைகளைக்கூட நீண்டகாலம் தொடர்ச்சியாக எழுதாமல் இருந்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ச்சியாக ஏழெட்டுக் கவிதைகளை எழுதினேன்.  அந்தக் கவிதைகள் கலைமுகம் இதழில் வெளியாகின.  சிலவற்றை ஆங்கிலத்தில் லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் மொழிபெயர்த்தார்.  ஒரு கவிதையை மலையாளத்தில் சச்சிதானந்தன் மொழிபெயர்க்க இருப்பதாக அறிந்தேன்.  உண்மை என்னவென்றால், நான் பதினொரு சிறுகதைகளும் சுமார் அறுபது கவிதைகளும் எழுதியிருக்கின்றேன்; பத்திகளும் கட்டுரைகளும் நிறைய எழுதியிருக்கின்றேன். ஆனாலும் நான் என்னை ஒரு வாசகனாகத்தான் உணர்கின்றேன்; படைப்பாளியாக உணர்வதில்லை. மற்றது, ஒரு படைப்பாளி தொடர்ந்து செயற்படவேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதாகவும், நான் உணரவில்லை.  தொடர்ந்து எழுதவேண்டும் என்பதற்காக வலிந்து எழுதிக் குவித்தவர்களின் எழுத்துக்களைப் பார்க்கின்றபோது, அவற்றுள் பெரும்பாலானவை மோசமாகவே அமைந்திருக்கின்றன என்பதையும் காணமுடிகின்றது.

  1. உங்கள் எழுத்துகளில் பலமுறை படைப்பாளி தனது எழுத்துக்கு நேர்மையாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுவந்துள்ளீர்கள். நேரடியாக இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இருந்தாலும், ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையை எமக்குத் தெரியாதவரை, அவரது ஒரு படைப்பினை அதனளவிலான வெற்றியை வைத்துஅவர் தனது படைப்புக்கு நேர்மையாக இருக்கின்றாரா என்பது பற்றிய எந்தக் கேள்வியும் இல்லாமல்அணுகி நல்லதோர் வாசிப்பு அனுபவத்தைப் பெறக்கூடியதாகவே இருக்கின்றதுநீங்கள் சொல்லுகின்ற படைப்பாளி தனது படைப்புக்கு நேர்மையாக இருக்கவேண்டும் என்பதை எந்த அடிப்படையில் வைத்து சொல்கின்றீர்கள்? அது தரக்கூடிய வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையிலாஅது வாசிப்பு அனுபவத்தைப் பாதிக்குமா? அல்லது நீங்கள் இதை அறம் சார்ந்த நிலைப்பாடாக சொல்கின்றீர்களாஇது ஒருவிதமான தூய்மைவாதம் அல்லவாஇந்தக் கேள்வியை ஏன் கேட்கின்றேன் என்றால், நீங்கள் படைப்பாளியை புனிதமானவராக, சமூகத்தில் மேம்பட்ட நிலையில் இருக்கின்ற ஒருவராகக் கருதுகின்றீர்களா?

அடிப்படையில் இருந்து இதற்கான பதிலைச் சொல்லலாம். கலைஞர்கள், படைப்பாளிகள் என்பவர்களுக்கு மாத்திரமன்றி “மனிதர்கள் என்றாலே அவர்கள் நேர்மையாகத்தான் இருக்கவேண்டும்.”  நேர்மையாக என்று சொல்லும்போது தன்னளவிலும், சமூகத்திற்கும் நேர்மையாக இருக்கவேண்டும்.  தனிப்பட்ட முறையில் அயோக்கியத்தனம் செய்கின்ற ஒருவர், சமூகத்துக்கு நல்லவிதமான முகம் காட்டுவது தவறு.  சமூகத்துக்குத் தன்னை நல்லவிதமாகக் காட்டிக்கொண்டிருக்கின்றவர்கள், தனிப்பட்ட முறையில் மோசமானவர்களாகவும் அவதூறுகளைச் செய்பவர்களாகவும் இருப்பதை எவ்விதம் ஏற்றுக்கொள்ளமுடியும்? எனவே, அறமும் நேர்மையும் மனிதர்களுக்குக் கட்டாயமானதாக இருக்கின்றபோது, எழுத்தாளர்களும் மனிதரே என்பதால், அவர்களுக்கும் அவை அவசியமானவையே.  அவ்வாறில்லாமல் தனக்குள்ளேயே முரண்பட்டுக்கொண்டிருப்பவர்களால், படைப்பைச் சிறப்பாகத் தரமுடியாது.  ஓர் உதாரணத்துக்கு, குடிகாரர் ஒருவர் தனது படைப்பில் குடியை விமர்சித்தும், அதன் தீமைகளைப் பேசியும், அது தனக்கு குடும்பவாழ்விலும் நண்பர்களுடனான உறவிலும் எப்படி எல்லாம் பாதிப்புகளைத் தந்தது என்றெல்லாம் உணர்ந்து எழுதுவதில் பிழையில்லை.  ஆனால் அப்படி எழுதும்போது, அவர் தன்னளவில் உண்மையாக அப்படி உணர்ந்து எழுதவேண்டும்.  “தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்றுதானே குறளும் சொல்லுது. அதேநேரம் நேர்மையாகவும், தனக்கு உண்மையாகவும் ஒருவர் எழுதுவதால் மட்டுமே அவரது படைப்பு சிறந்த படைப்பாகியும்விடாது.  1983 அளவில், நானும் நண்பர் கேதாரநாதனும், றோல்வ் புஷ் (Rolf Busch) என்கிற ஜேர்மனிய நெறியாளருடன் அலைக்காகச் சந்தித்துப் பேசியபோது அவர், “படைப்பில் உண்மைத்தன்மை இருக்கவேண்டியது முக்கியம்.  ஆனால் அதைவிட, அது எந்தக் கலைவடிவமாக உருவாக்கப்படுகின்றதோ அதற்கான அம்சங்களை, மூலங்களைப் பேணி உருவாக்கப்படுவதாலேயே முழுமை பெறுகின்றது” என்று சொன்னதை இங்கே நினைவுகூருகின்றேன்.  எனக்கு ஷோபா சக்தி மற்றும் வேறு சிலரது கருத்துநிலை வெளிப்பாடுகளுடன் உடன்பாடில்லாதபோதும் கூட, அவர்களது படைப்புகளில் உள்ள படைப்புத் திறன், மொழியைக் கையாள்வதில் உள்ள சிறப்பம்சம் போன்றவற்றை அடையாளங் காணக்கூடியதாக உள்ளது.  மற்றது வாசிப்பனுபவம், ரசனை போன்றவை ஆளுக்காள் மாறுபடக் கூடியன.  உதாரணமாக ஷோபா சக்தியின் BOX கதைப்புத்தகத்தைப் படித்தபோது, எனக்கு அவரில் இருந்த மரியாதை குறைந்துபோனது.  ஆனால், உங்கள் நண்பர்கள்  சிலர் அதனைக் கொண்டாடுகின்றனர்.  அதேநேரம், அவர்கள் நிராகரிக்கின்ற சில படைப்புகள் எனக்கு வேறுவிதமான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன.

  1. உங்களது வாசிப்பு அனுபவத்தில் மொழிசார்ந்து நீங்கள் குறையாகக் கருதுகின்ற விடயங்களாக எவற்றைக் கருதுகின்றீர்கள்?

எமது எழுத்தாளர்கள் பலருக்கு, படைப்புகளில் உரையாடலை எழுதுவதில்-  பேச்சு மொழியையும் பிரதேச வழக்குகளையும் கையாள்வதில் பிரச்சினைகள் இருக்கின்றன.  பகுதி பேச்சுவழக்காகவும், பகுதி கற்பனையான ஒரு வழக்காகவும் எழுதுகின்றனர்.  செங்கை ஆழியான், கணேசலிங்கன் போன்றவர்களில் ஏன் டானியலில் கூட இந்தக் குறைபாடுகள் இருக்கின்றன.  உதாரணமாக, ஒரே படைப்பிலேயே ஒருவரே “போகவில்லை” என்றும், “போகேயில்லை” என்றும், “போகயில்லை” என்றும் பேசுவதாக எழுதுகின்றார்கள்.  இப்படி வரமுடியாது.  ஒன்றிரண்டு பிழைகள் வரலாம்.  ஆனால், செப்பனிடுதலின்போது அவையும் நீக்கப்பட்டு செப்பனிடப்பட வேண்டும்.  ஒரு ‘போஸ்ற் கார்ட்’ எழுதினால் கூட, அதைத் திரும்பவும் வாசித்துப்  பார்க்கின்றோம் அல்லவா? பலர் படைப்புகளில் அதைச் செய்வதேயில்லை.  படைப்புகளைத் திரும்பவும் வாசித்து, வடிவ நேர்த்தி, மொழிவழக்கு என்பவற்றைக் கவனித்து, செப்பனிடல் வேண்டும்.  ஜானகிராமன் தஞ்சாவூர் பற்றி எழுதும்போதும்; ராஜநாராயணன் இடைச்செவல் பற்றியும் மதுரையைப் பற்றிப் பலர் எழுதும்போதும், அந்த மொழிப் பிரயோகப் பரிச்சயம் எமக்கு இல்லை என்றாலும் – நெருடலாக, செயற்கையானதாக அவை இருப்பதில்லை.  நாம் உண்மையானவை என்று நம்பக்கூடியவாறு  வலிமையுடன்  அவர்களின் பேச்சுமொழி விபரிப்புகள்  உள்ளன.

(நான் குறுக்கிட்டு : எமக்கு அந்த மொழி வழக்கு பரிச்சயம் இல்லாததால் அப்படி இருக்கலாம் அல்லவாபரிச்சயம் இருப்பவர்கள் சிலர் அதிலும் ஒரு செயற்கைத் தன்மையை உணரக்கூடும் அல்லவா?)

அப்படி இருக்கச் சாத்தியம் உண்டு என்பதைப் புறக்கணிக்க ஏலாதுதான்.  ஆனால், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் எழுதும்போது அவர்களது மொழிநடை  பல  இடங்களில்  செயற்கையானதாக எனக்குத் தோன்றுகின்றதே! ஜெயமோகனது எழுத்துக்கள், குறிப்பாக அவரது நாவல்களின் பல பகுதிகள் செயற்கைத்தனமானவை என்கிற கருத்து எனக்கு இருக்கின்றது.

றெஜி சிறிவர்த்தன ஒருமுறை, “தோல்வியுற்ற படைப்பில்தான் உருவம், உள்ளடக்கம் பற்றிய பிரச்சினைகள் வருகின்றன” என்று கூறினார்.  அதில் எனக்கு உடன்பாடு உண்டு.

பேச்சுமொழியைக் கையாள்வது பற்றிக் கதைத்தோம்.  இன்னொரு பிரச்சினை என்னவென்றால், எமது ஈழத்து எழுத்தாளர் பலரிடம் ‘படைப்பு மொழி என்பது இல்லை.  நீங்கள் ‘ழகரம்’ இதழில் எழுதிய ஆனந்தமயில் பற்றிய கட்டுரை படித்தேன்.  ஆனந்தமயில் போல படைப்புமொழியைக் கையாளக்கூடியவர்கள், எம்மிடையே அபூர்வமாக மிகச் சிலரே!  இந்த வகையில் எம்.எல்.எம் மன்சூர் மிக உச்சத்தில் இருப்பவர்.  அவர் எழுதிய 15 கதைகளில் 6 மாத்திரமே இப்போது கிடைக்கின்றன.  துரதிர்ஷ்டவசமாக ஏனைய கதைகளின் பிரதிகள் அவரிடங்கூட இல்லை.  எம்.எல்.எம். மன்சூர், ஆனந்தமயில், குப்பிழான் ஐ. சண்முகன், உமா வரதராஜன், ரஞ்சகுமார் – அவையடக்கம் என்று தட்டிக்கழித்துவிடக் கூடாது – என்னுடைய சில கதைகள் என்று, நான் அறிந்தவரை மிகச் சிலரது எழுத்துக்களில்தான் படைப்புமொழி சிறப்பாக வருகின்றது.  இன்னும் சில எழுத்தாளர்கள் அனுபவத்தாக்கம், தமது எழுத்துக்கு நேர்மையாக இருத்தல், நல்ல இலக்கியங்களுடனான பரிச்சயம், தமது படைப்புகளைச் சிறப்பானதாக்கவேண்டும் என்பதற்குச் செய்கின்ற முயற்சி என்பவற்றால், எளிமையான நடையிலும் சிறந்த படைப்புகளை எழுதுகின்றனர்.  உதாரணமாக நந்தினி சேவியர், என்.எஸ்.எம். ராமையா, தெளிவத்தை ஜோசப்; புதிய எழுத்தாளர்களில் வசந்தி தயாபரன், தாட்சாயணி போன்றோரை இத்தகையவராகக் குறிப்பிடலாம்.  இப்படியாக நாம் உரையாடும்போது, சிலரது பெயர்கள் தவறிவிடக்கூடும் என்பதையும் இங்கே பதிவுசெய்ய வேண்டும்.  கனகசெந்திநாதனை எடுத்துக்கொண்டால் – அவர் மரபுவாதியாக இருந்தாலும் நேர்மையாக இருந்தவர், சக மனிதரை நேசித்தவர், சாதிய ஒடுக்குமுறையை ஏற்காதவர்.  ஆனால், பெயரை மறந்துவிட்டேன்…. அவரது சிறுகதைத் தொகுப்பில் – இவ்வாறான முக்கிய சிறுகதைகள் சில இருக்கின்றன.

  1. இதுவரை உங்களுடன் பேசியதில் இருந்து உங்களது கலை இலக்கியச் செயற்பாடுகள் நண்பர்களுடனான உள்சுற்று உரையாடல்கள், விவாதங்களினூடாக வலுப்பெற்றவை என்று உணரமுடிகின்றது. இவ்வாறான உள்சுற்று உரையாடல்கள் முக்கியமானவையும் கூடஅதேநேரம் இவ்வாறாக உள்சுற்று விவாதங்களில் ஈடுபடுவோர் பொதுவெளியில் இயங்க வருகின்றபோது அவர்களைப் பிறர் குழுவாக அடையாளம் காணுவதும், குழுமனப்பான்மையுடன் (இது இருவழியிலும் நிகழலாம்) அணுகுவதுமே வழமையாக இருக்கின்றது அல்லவா? அதுபோலவே, சில கருத்துகளில் முரண்பாடு கொண்டவர்களும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் இணைந்து இயங்குவதுவும் கூட தவறான கண்ணோட்டத்தில்தானே பார்க்கப்படுகின்றதுஇதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

என்னைப் பொறுத்தவரை நான் குழு மனப்பான்மையுடன் இயங்குபவன் அல்ல.  மாறுபட்ட கருத்துநிலை கொண்டவர்களுடன் அன்றுமுதல் இன்றுவரை, நான் உரையாடிக்கொண்டுதான் இருக்கின்றேன்.  தார்மீக ரீதியில் அடிப்படை நிலைகளில் இருந்து பிறழ்ந்து போனவர்களுடன் உரையாட, நான் விரும்புவதில்லை.  எமது ஆரம்பகாலத் தொகுப்புகளில் ஒன்றான மரணத்துள் வாழ்வோம் நூலை எடுத்துப் பார்த்தால் கூட அதைச் சேரன், பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி. நடராசன், நான் ஆகியோர் இணைந்தே தொகுத்தோம்.  அதில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் கவிதைகளையும் தேசிய இன ஒடுக்குமுறை, எமது மக்களின் துயர், வரலாறு என்பவற்றை ஆதாரமாகக் கொண்ட கவித்துவமான கவிதைகள் என்ற அடிப்படையில் தொகுத்திருந்தோம்.  சில குறைகளைச் சிலர் இனங்காணலாம் யேசுராசா2என்றாலும், நாம் மேலே சொன்ன நோக்குடனேயேதான் ‘மரணத்தில் வாழ்வோம்’ இனைத் தொகுத்திருந்தோம்.  எனது இந்தக் கனடாப் பயணத்தின்போதும் கூட, தமிழ்த் தேசியம் உள்ளிட்ட எனது சில கருத்துக்களுடன் மாற்றான நிலைப்பாடுகள் கொண்ட பலர், சுமுகமாகச் சந்தித்துப் பழகுகின்றனர்.  சில கருத்துநிலை வேறுபாடுகள் இருக்கின்றன.  சில சில இடைவெளிகளுடனும் நன்கு பழகுகின்றோம்.  சிலருடன் ஆறுதலாக உரையாட முடிகின்றது.  அவ்விதம் உரையாடும்போது சில விடயங்களில் இடைவெளி குறைந்து, சற்றே நெருக்கம் ஏற்படுகின்றது.  தமிழ்த் தேசிய நிலைப்பாடுடன் நாம் இருந்தாலும், அதை முன்னெடுப்பவர்களின் எல்லாவிதமான கருத்துக்களும் எமக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியனவாக இருப்பதில்லைத்தானே. இதுபோல சில சிங்களக் கலைஞர்கள், திரைப்படம் சார்ந்து இயங்குபவர்கள் ஆகியோருடன் நாம் தொடர்பில் இருப்பதையும், அவர்களுடன் இணைந்து செயற்படுவதையுங்கூட விமர்சிப்பவர்கள் இருக்கின்றனர்.  சிங்களத் திரைப்பட இயக்குநர்களில் பிரசன்ன விதானகே, 1980 முதலே எனக்கு நெருக்கமான நண்பர்.  ஆனால், அவரது திரைப்படங்களில் ‘இர மதியம’வில் தமிழர் பிரச்சினைகள் சொல்லப்படாமல் விடுபட்டிருப்பதையும், விடுதலைப் புலிகள் பற்றிச் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதத்தையும் தவறான அணுகுமுறைகள் என்றும்; பின்னர்  ‘ஒபத் எக்க ஒப நத்துவ’ (உன்னுடனும்  நீ இல்லாமலும்) முக்கியமான படம் என்றும் வெளிப்படுத்தியிருக்கின்றேன்.

ஆனால், நீங்கள் சொல்வது போல, நேர்மையான கருத்துப் பகிர்தல் என்பது எமது  சூழலில் அதிகளவில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  உதாரணமாக, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரை எடுத்துக்கொண்டால், ஏன் அவர்களால் மஹாகவி ஓரங்கட்டப்பட்டார், ஏன் அவர்களால் தளையசிங்கம் புறக்கணிக்கப்பட்டார் என்பது எல்லாம் அடிப்படையான கேள்விகள் அல்லவா? தளையசிங்கம் பற்றிய மதிப்பீடு பல்வேறு தளங்களில் வைத்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.  அவரது படைப்பியல் தன்மை, நேர்மையான  சமூகச் செயற்பாடுகள், விமர்சன மதிப்பீடுகள் என்பன மிக முக்கியமானவை.  அதேநேரம் தற்போது மறுபரிசீலனை செய்யும்போது, சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவான அவரது நிலைப்பாடு பற்றி, எனக்கு விமர்சனம் உண்டு.  1961 இல் ‘ஒரு தனிவீடு’ எழுதிய தளையசிங்கம், பத்தாண்டுகள் கழித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரித்து, தமிழரசுக் கட்சியை எதிர்த்து – சட்டத்தரணி கதிரவேலுவை முன்னிறுத்தி அரசியற் செயற்பாடுகளில் ஈடுபட்டது, தவறான நிலைப்பாடு என்றே சொல்லவேண்டும்.  ஆனால் இவற்றுக்கு அப்பால், தளையசிங்கம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரால் முற்றாக ஒதுக்கப்பட்டார் என்பதையும் சொல்லவேண்டும்.  இன்றும் கூட, கோட்பாடுகளின் அடிப்படையில் திரளாமல்விட்டாலுங்கூட, குழு மனப்பான்மை இருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்.  கலை, இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு ஓர் அடையாளம் உருவாகுவது  பெருமைதரும் என்றாலும், அடையாளம் பெறவேண்டும் என்பதை முன்னிலைப்படுத்திச் செயற்படுவது தவறானது.  பொதுவாகக் கலைஞர்களுக்குச் சிறிய அளவிலாவது ‘ஈகோ’ இருக்கவே செய்யும். அதனைப்  புரிந்துகொள்ளலாம்.  அதேநேரம் அதுவே பெரிதாகிச் சிலசமயங்களில், விமர்சனக் கருத்துக்களை எதிர்கொள்ளாமல் – விமர்சனங்களை முன்வைப்பவர்களை எதிராளிகளாகக் கருதுகின்ற நிலைப்பாடாக இருக்கின்றதையும் அவதானிக்க முடிகின்றது.  இதுபோன்ற காரணங்களால் நான் இப்போது, இலக்கியக் கூட்டங்களுக்குப் போவதேயில்லை. மேலும், இலக்கியக்காரர் களுடனும் இலக்கிய உலகத்துடனும் எனக்கு, தற்போது தொடர்புகளும் குறைவே.  ஆயினும், இலக்கியம் அல்லாத கூட்டங்களுக்கு, பெரும்பாலும் சென்றுவருகின்றேன்.

  1. எண்பதுகள் தொடக்கம் நீங்கள் எழுதிய பத்திகளில் ஓவியங்கள் பற்றியும், அவ்வப்போது நிகழ்கின்ற ஓவியக் கண்காட்சிகள் குறித்தும், புதிதாக உருவான ஓவியர்கள் குறித்தும் தொடர்ச்சியாக பதிவுசெய்து வந்துள்ளீர்கள். குறிப்பாக உங்களது ஒத்த வயதினரும் ஈழத்தின் மிக முக்கியமான ஓவியர்களுமான மாற்கு மாஸ்ரருடனும் ஆசை இராசையாவுடனும் நெருக்கமானவர் நீங்கள்கிட்டத்தட்ட இவர்களாலும், அந்தக் காலப்பகுதியாலும் ஓவியம் பற்றிய ஒரு கவனயீர்ப்பு ஏற்பட்டாலும் அதன் இன்றைய போக்கு எவ்வாறு இருக்கின்றது?  அண்மைக்காலத்தில் சில இளவயது ஓவியர்களை இனங்காண முடிகின்றது என்றாலும் ஈழத்தில் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்ற இதழ்களில் ஓவியம் போன்ற கலைகளுக்கு சரியான இடம் கொடுக்கப்படுகின்றதாஇந்தக் கேள்வியைக் கேட்கின்றபோது இன்னொரு விடயத்தையும் குறிப்பிட விரும்புகின்றேன்அண்மையில் கலாநிதி என்கிற 1940 களில் வெளியான இதழ் ஒன்றினைப் படிக்கக் கிடைத்தது.   அந்நாட்களிலேயே அது படைப்பிலக்கியத்துடன் சேர்ந்து கோட்பாடு சார்ந்தும், சிற்பம் உள்ளிட்ட ஏனைய கலைவடிவங்கள் குறித்தும் கட்டுரைகளைப் பிரசுரித்திருந்ததுஇன்றளவும்அலை இதழ்கள் இலக்கியம் உள்ளிட்ட ஏனைய கலைவடிவங்களையும் உள்ளடங்கி இருப்பதால் விரும்பிப் படிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள்பின்னாட்களில் மூன்றாவது மனிதனும் இவ்வாறே அமைந்திருந்ததுஆனால் இதன் தொடர்ச்சி பின்னர் வெளியான இதழ்களில் இருக்கின்றதா?

முதலில் சிறிய  திருத்தம் ஒன்று. மாற்கு  மாஸ்ரர் எனக்கு  வயதால்  மூத்தவர். ஆசை  இராசையா இரண்டொரு  வயது  வித்தியாசமுடையவர். பத்திரிகைகளிலும், சிற்றிதழ்களிலும் ஓவியம் போன்ற கலைவடிவங்கள் இடம்பெறுவது, அவற்றின் ஆசிரியர்களுக்கு இந்தக் கலைவடிவங்களில் இருக்கின்ற ஈடுபாட்டிலும் பரிச்சயத்திலுமே அதிகம் தங்கியிருக்கின்றது.  ஜீவநதியில் மாற்கு மாஸ்ரரின் சில ஓவியங்கள், சில புதியவர்களது ஓவியங்கள் மற்றும் இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்ட ஓவியங்கள் சில என்பன வெளிவந்திருக்கின்றன.  ஆனால் இதைவிடவும் அதிகம் செய்யலாம் என்பதை ஜீவநதி ஆசிரியரிடமும் கூறி இருக்கின்றேன்.  மருதனார்மடத்தில் இயங்கி வருகின்ற யாழ்ப்பாணப்  பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் பயிலும் மாணவர்களின் கண்காட்சிகள் பல, யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும்  நடைபெறுகின்றன.  நல்லூரிலுள்ள சமகாலக் கலை, கட்டடக்  கலைக்கான ஆவணக் காப்பகத்திலும் பல கண்காட்சிகளும் இத்துறைகள்சார்ந்த உரைகளும் நிகழ்வுகளும் அவ்வப்போது இடம்பெறுகின்றன.  புதியவர்களான இந்த மாணவர்களது ஓவியங்களைப் பெற்று, இதழ்களிலும்  பத்திரிகைகளிலும் வெளியிடலாம்.  அண்மையில், எஸ். பி. புஷ்பகாந்தனின் ஓவியம் ஒன்றினைக் கனடாவில் இருந்து வெளிவரும் ‘காலம்’. இதழுக்கு அனுப்பியிருந்தேன்; அது அட்டையில் வெளியாகியுள்ளது.  இவ்வாறு ஏனைய இதழ்களும் எமது ஓவியர்களின் ஓவியங்களை வெளியிடுவதன்மூலமாக, ஓவியங்கள் பற்றிய கவனயீர்ப்பை உருவாக்குவதோடு, அவர்களைப் பொருளியல்ரீதியில் ஊக்குவிக்கவும் முடியும்.  ஈழத்தில் ஜீவநதியில் குறைந்த  அளவிலென்றாலும் ஓவியங்கள் வெளிவருகின்றன, ஞானத்தில் போதாது. மகுடம் இதழில்  உள்ளே சில கோட்டோவியங்கள் வருகின்றன.  புதிய சொல்லில் அட்டையிலும் உள்ளேயும் ஓவியங்கள் வருகின்றன.  திரைப்படங்கள் குறித்து ஜீவநதியில் ரதன், இ.சு. முரளீதரன் மற்றும் நான் எழுதும் கட்டுரைகள் வெளிவருகின்றன.  ஞானத்தில் ஓர் இளம்பெண், தான் பார்த்த நல்ல திரைப்படங்கள் குறித்து அண்மைக்காலமாகத் தொடர்ந்து எழுதுகின்றார்.  புதிய சொல்லில் குறும்படம் சார்ந்தவர்களைப் பற்றி அனோஜனும் மதுரனும் எழுதுகின்றனர்.  மகுடத்தில் திரைப்படங்கள் குறித்துப் பெரிதாக வருவதில்லை.  அதேநேரம், அநேகமான சமகால எழுத்தாளர்களிடம், தமிழ்த் திரைப்படங்களுக்கு அப்பாலான திரைப்பட ரசனையும் கலைப்படங்கள் பற்றிய அக்கறையும் குறைவாகவே உள்ளன என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

1998 முதல் 2006 வரை பேராசிரியர் சிவச்சந்திரனின் உதவியுடன், இராமரூபனும் நானும் இணைந்து, பல்கலைக்கழகப் புறநிலைப் படிப்புகள்  அலகின் திரைப்பட வட்டம் சார்பில், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக ஐரோப்பியத் திரைப்படங்கள்; தமிழில் வெளியான உப்பு, நதிக்கரையினிலே, குட்டி போன்ற நல்ல திரைப்படங்கள்; இந்தியாவின் பிராந்திய மொழிக் கலைத் திரைப்படங்கள்; சிங்களத் திரைப்படங்கள் போன்றவற்றை இலவசமாகத் திரையிட்டுவந்தோம்.  ஆயினும் அதற்கு வருகைதந்த எழுத்தாளர்கள் மிகக் குறைவே.  ஏன், நுண்கலைத்துறை மாணவர்கள்கூட வருவது குறைவு.  ஆனால், இவர்களுக்கு அப்பால் திரைப்பட ரசிகர்களாக வெளியார் பலர் வந்து, இத்திரைப்படங்களைப் பார்த்துச் சென்றனர்.  தற்போதுங்கூட ஒவ்வொரு வியாழக்கிழமையும் பின்னேரம் 4.00 மணிக்கு, யாழ்ப்பாணக் கச்சேரிக்கு அருகாமையில் உள்ள ‘அலையன்ஸ் ஃப்ரான்சேஸ்’ இல், நல்ல திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஆனாலும் இவற்றைப் பார்வையிட வருபவர்களும் வெறும் ஏழெட்டுப் பேர்கள் மாத்திரமே.  இப்படியாக எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும், பத்திரிகை ஆசிரியர்களும், இலக்கியச் செயற்பாட்டாளர்களுங்கூட இவற்றில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கின்றபோது – அது அவர்கள் நடத்துகின்ற, வாசிக்கின்ற இதழ்களிலும் பிரதிபலிக்கவே செய்கின்றது.  உண்மையில் தற்போது திறமை வாய்ந்த இளம் ஓவியர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர்.  சில சிங்கள ஓவியர்கள் வருகை தந்து உரையாற்றுகின்றார்கள்.  அண்மையில் வந்த ‘தெரிதல்’ இதழிலும்கூட, யாழ்ப்பாணத்தில் ஆவணக் காப்பகத்தில் நடைபெற்ற இவ்வாறான நிகழ்வுகள் பற்றிய கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருந்தேன்.  ஓவியம், திரைப்படம் என்பன போலவே பாரம்பரிய இசை, மற்றும் தற்போது பரவலாக ஈழத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியிருக்கின்ற மெல்லிசைப் பாடல்கள் குறித்த விடயங்களுங்கூட இதழ்களில் வெளிவரவேண்டும்.  திரும்பவும் வெங்கட் சாமிநாதன் குறிப்பிட்ட ‘அஞ்சறைப் பெட்டி மனநிலை’ பற்றித்தான் குறிப்பிடவேண்டும்.  சாதாரணமாக ஒரு கடற்கரையில் சென்று இருக்கின்றபோது, எல்லாரும் செல்கின்ற கடற்கரை ஒன்றுதான் என்றாலும், அங்கு பெறுகின்ற அனுபவம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானது அல்லவா? கலைநுகர் மனங்கொண்ட ஒருவரின் அந்த அனுபவ வெளிப்பாடுகள் கலையாகின்றபோதும், இந்த வேறுபாடுகள் பிரதிபலிக்கும் அல்லவா?

  1. இன்னொரு விடயம் உங்களிடம் கேட்கவேண்டும். அண்மைக்காலமாக பல்வேறு இடங்களில் உங்களை ஒத்தவர்கள் பற்றிக் குறிப்பிடும்போதும், எஸ். பொ போன்றவர்கள் பற்றிக் குறிப்பிடும்போதும் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பியை போன்றவர்களை தோற்கடித்தவர்கள் என்றும், அவர்கள் காலாவதியாகிப் போனவர்கள் என்றும் கூறப்படுகின்றதுநீங்கள் கனடாவில் இருந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் இதனை அவதானித்திருக்கக் கூடும்இவ்வாறு கூறுபவர்கள் உங்களைப் போன்றவர்கள் மீதும், எஸ்.பொ போன்றவர்கள் மீதும் வைத்திருக்கின்ற அன்பினாலோ அவ்வாறு கூறுவதாக இருக்கலாம்அதேநேரம், இவ்வாறு கூறப்படுகின்ற வாதங்கள் அனேகம் அவர்களது இலக்கிய மதிப்பீடுகள் குறித்த உங்களது எதிர்வினைகளைக் குறித்தனவே என்பதை நாம் கவனிக்கவேண்டி இருக்கின்றதுஈழத்தில் உருவான வளமான புலமையாளர் மரபும் அவர்களது அறிவுச் செயற்பாடுகளும் பற்றிய முறையான புரிதலும் அக்கறையும் இன்றி அவர்களது இலக்கிய மதிப்பீடுகளை மாத்திரம் வைத்து அவர்களைப் பலவீனமானவர்களாகக் குறிக்கின்ற இந்த வழமையைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள் சார்ந்து முறையான ஆய்வுகளுடனும் உசாத்துணைகளுடனும் கூடிய ஆய்வுக்கட்டுரைகளும், தர்க்க ரீதியான வாதங்களும் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் வருவது அண்மைக்காலமாக, குறிப்பாக எண்பதுகளுக்குப் பிறகு எழுத ஆரம்பித்த தலைமுறையினரிடம் மிகவும் அரிதாக இருப்பதற்கும் இந்தப் போக்கிற்கும் தொடர்பிருக்கலாம் அல்லவா?

கலை, இலக்கியம் சார்ந்து பேராசிரியர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியும் கோட்பாட்டு ரீதியாக எடுத்த முடிவுகளில்தான், பல தவறுகள் இடம்பெற்றிருப்பதாகப் பலரும் சுட்டிக்காட்டி யிருக்கின்றனர்.  இவ்வளவு புலமையுள்ளவர்கள் சோஷலிச யதார்த்தவாதம் இலங்கைக்குப் பொருத்தமற்றது என்பதைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டு, அதனடிப்படையில் செய்த மதிபபீடுகளின்படி, சிலவற்றைச் சிறந்ததென்றும் ஏனையவற்றை ஓரங்கட்டியும் வந்தார்கள்.  இவர்கள், குறிப்பாகக் கட்சி அமைப்புச் சார்ந்த மார்க்சியக் கருத்துகளின் அடிப்படையில்தான், தமது வாசிப்பு அனுபவங்களை முன்வைத்தார்கள்.  குறிப்பாக கணேசலிங்கனின் நூல்களுக்கு கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் எழுதிய முன்னுரைகளைப் பார்த்தால், அவற்றில் இலக்கிய அனுபவத்தை, இலக்கியம் சார்ந்த மதிப்பீடுகளை முன்வைக்காமல் – வறட்டுத்தனமாகத் தாம் புரிந்துகொண்ட மார்க்சியக் கோட்பாடுகள், கருத்துக்களை அந்த நூல்கள் எவ்வாறு முன்வைக்கின்றன என்பனவாகவே அவை அமைந்திருக்கின்றன.  இலக்கியங்கள் குறித்து அநேகமான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எழுதிய கட்டுரைகளிலும், இதே குறையைக் காணலாம்.  மற்றது கலை, இலக்கிய அழகியல் குறித்த மதிப்பீடுகளைச் செய்வதற்கு, பல்கலைக்கழக மரபில் வருகின்ற முறையியல் தேவையா  என்ற கேள்வி என்னிடம்  இன்றும் உள்ளது.  அதேநேரம் நீங்கள் சொல்வதுபோல சமூகவியல், வரலாற்று ஆய்வுகள், பண்பாட்டு ஆய்வுகள் போன்றவற்றில் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களின் தேவை இருக்கின்றதுதான்.  தவிர, இலக்கியத்துக்கு அப்பால் பொருளாதாரம், அரசியல், நிலவும்  சமூகச் சூழல், மானுடவியல் கூறுகள் என்பவற்றையும் இணைத்து ஆராய்ச்சி முடிவுகளுக்கு வருகின்ற முறைமையில்தான் கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களை விட வேறுபட்டவர்களாகவும் பரந்துபட்ட பார்வை கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.  பழந்தமிழ் இலக்கியம் குறித்த அவர்களது ஆய்வுகள் பற்றிக் கருத்துக்கூறும் அளவுக்கு, எனக்குப் பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் இல்லை.  அவர்களுடனான எனது கருத்து முரண்பாடுகள் பெரிதும், நவீன கலை இலக்கியம், அரசியல் நிலைப்பாடுகள்  குறித்த அவர்களது கருத்துக்களின் அடிப்படையிலானவை.  அவர்களது ஆய்வுகள் பற்றி மு. தளையசிங்கம், எஸ். பொ. , தமிழவன், வெங்கடாசலபதி, ஞானி, வெங்கட் சாமிநாதன்  போன்றோர் மாற்றுக் கருத்துக்களைக் கூறியுள்ளார்கள்.  ஆனாலும் நீங்கள்  குறிப்பிடுவதுபோல, பல்வேறு துறை சார்ந்த ஆளுமையுடனான புலமை மரபு தற்போது எமது சூழலில் அருகிப்போய்விட்டமை, ஒரு குறைபாடுதான். கைலாசபதி, சிவத்தம்பி  ஆகியோரின் கருத்துக்கள்  பலவற்றை  ஏற்கமுடியவில்லையாயினும், முற்றிலுமாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் என்பது போன்ற பிரயோகம் மிகைக்கூற்றுத்தான்; அது தவிர்க்கப்படலாம். ஒவ்வொருவருக்கும் அவர்கள்  அளவில், வரலாற்று ரீதியில் உரிய பங்களிப்பு உள்ளது என்பதை, நாம்  ஏற்கவேண்டும்.

000

யேசுராசா அவர்களுடன் உரையாடுவது என்றால், எதை உரையாடுவது என்பதே முதலாவது கேள்வியாக வருமளவுக்கு படைப்பிலக்கியம், ஓவியம், புகைப்படம், திரைப்படம், குறும்படம், இசை, இதழியல், மொழியாக்கம் என்று பல்வேறு துறைகளில் ஈடுபட்டும் விமர்சனங்களை முன்வைத்தும் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்துள்ளீர்கள்.  இந்த உரையாடல் பெரிதும், ஈழத்துக் கலை இலக்கிய செல்நெறியில் உங்களை ஒத்த கருத்துநிலை உடையவர்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும், அந்த மாற்றங்கள் பற்றிய அவற்றுக்குப் பின்னைய பார்வையாக அமையவேண்டும் என்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தினேன்.  மிகக் குறுகிய நேரத்தில் எந்தத் தயக்கமும் இல்லாமல் உங்கள் கருத்துகளை கோர்வையாகத் தெரிவித்தீர்கள்.  உரையாடல்கள் ஒருபோதும் முடிவதில்லை.  தொடர்ந்து பேசுவோம்.

000


அ. யேசுராசா குறித்த எனது முன்னைய பதிவுகள் சில

நூலகம் திட்டத்தின் கீழ் ஆவணப்படுத்தப்பட்டுள்ள யேசுராசாவின் புத்தகங்களை வாசிக்க:
http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE,_%E0%AE%85.