img_0927ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசித்துவருகின்ற கருணாவின் ஓவியக் கண்காட்சி ஜனவரி மாதம் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.  சமகாலத்தின் முக்கியமான ஓவியர்களில் ஒருவரும், வரைகலை நிபுணரும், புகைப்படக் கலைஞருமான கருணா அதற்கும் அப்பால் இதழ்கள், நாடகங்கள், அரங்க நிர்மாணம், இலக்கியம் என்று கலையின் பல்வேறு பரிமாணங்களிலும் முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்ற ஆளுமையும் ஆவார்.  கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கனடாவில் கற்சுறா ஒழுங்கு செய்திருந்த ஐரோப்பிய ஓவியங்கள் பற்றிய கலந்துரையாடல் என்கிற நிகழ்வானது அண்மைக்காலத்தில் ஓவியக்கலை தொடர்பாக தமிழ்ச் சூழலில் இடம்பெற்ற ஆகச்சிறந்த நிகழ்வென்று சொல்லமுடியும்.  இந்நிகழ்வு சமூக வலைத்தள தொழினுட்பங்களின் சாத்தியத்தால் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதுடன் சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவலாகச் சென்றடைந்து ஓவியக்கலை பற்றிய ஆர்வத்தைப் புதியவர்களுக்கும் எடுத்துச் சென்றிருந்தது.  அதன் அடுத்த கட்டமாக கனடாவில் இருந்து வெளிவருகின்ற தாய்வீடு பத்திரிகையில் ஓவியங்கள் தொடர்பான தொடர்கட்டுரைகளையும் கருணா கடந்த சிலமாதங்களாக எழுதிவருகின்றார்.

ஈழத்தின் தனித்துவமான ஓவியர்களில் ஒருவரும் வளமான ஓவியர்கள் பலருக்கு ஓவியக்கலையைப் பயிற்றுவித்தவருமான மாற்கு அவர்களின் மாணவர்களில் கருணாவும் ஒருவர்.  இவரது சொந்தப் பெயர் இயூஜின் வின்சென்ற் என்பதாகும்.  தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கனடாவுக்கு வந்த கருணா, கனடாவிலும் வரைகலை தொடர்பான தொழினுட்பங்கள் சிலவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார்.  1992/93 காலப்பகுதிகளில் இருந்து டிஜிற்றல் முறையில் ஓவியங்களை வரைந்துவருகின்ற கருணாவே, ஈழத்தமிழர்களில் டிஜிற்றல் முறைகளில் ஓவியங்களை முதன்முதலில் வரைய ஆரம்பித்தவருமாவார்.  புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த, வெளிவந்துகொண்டிருக்கின்ற இதழ்கள், மலர்கள், சிற்றிதழ்கள் மற்றும் இதர பிரசுரங்கள் பலவற்றில் கருணாவின் கணிசமான பங்களிப்பும் நிறைந்திருக்கும்.  ஒரு தேர்ந்த வாசகருமாகவும் தொடர்ச்சியான தேடல்களில் ஈடுபடுபவருமாக கருணா இருப்பதனால் அவரது படைப்புகள் எப்போதும் உயிரோட்டம் கொண்டனவாக இருக்கின்றன.

1989 இல் யாழ்ப்பாணத்தில் ஓவியர் வாசுகியினதும் மாற்கு மாஸ்ரரின் ஏனைய மாணவர்களதும் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டபோது கருணாவின் ஓவியங்களும் அவற்றில் இடம்பெற்றிருந்தன.  அதுவே கருணாவின் ஓவியங்கள் இடம்பெற்ற முதலாவது ஓவியக் கண்காட்சியாகும்.  அதன் பிறகு 1993 இல் கனடாவில் இருக்கின்ற தேடகம் அமைப்பினர் ஆடிக்கலவரத்தின் பத்தாண்டு நிறைவினை நினைவுகூரும் விதமாக கருணாவினதும் ஜீவனதும் ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சியை ஒருங்கமைத்திருந்தனர்.  அதன் பின்னர் காலம் இதழ் வாழும் தமிழ் என்கிற பெயரில் தொடர்ந்து ஒழுங்கு செய்த நிகழ்வுகளில் ஒன்றாக கருணாவின் ஓவியக் கண்காட்சியும் 1996 இல் இடம்பெற்றது.  இந்த இரண்டு நிகழ்வுகளும் கனடாவிலேயே இடம்பெற்றன.  அதன் பிறகு 2004 இல் யாழ்ப்பாணத்தில் முதுசம் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த பதின்மூன்று யாழ்ப்பாணத்து ஓவியர்கள் என்கிற கண்காட்சியில் கருணாவின் ஓவியமும் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கண்காட்சிகளுக்குப் பிறகு நீண்ட இடைவெளியின் பின்னர், தமிழ் மரபுமாதமான ஜனவரி மாதத்தில், மார்க்கம் மாநகர சபையால் ஒருங்கமைக்கப்பட்ட பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக இக்கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.  நிகழ்வு மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகும் என்று திட்டமிடப்பட்டபோதும் அதற்கும் முன்னராகவே பெருமளவிலானவர்கள் வந்து நிறைந்திருந்தமை முக்கியமான ஒன்றாகும்.  இந்தக் கண்காட்சியில் கருணா வெவ்வேறு காலப்பகுதிகளில் வரைந்த 39 ஒவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.  வந்து நிறைந்திருந்த ஆர்வலர்கள் பலரும் சம்பிரதாயமாக இல்லாமல், ஒவ்வொரு படங்களின் முன்னரும் ஆற அமர தரித்து நின்று அந்த ஓவியங்கள் குறித்து சிறு சிறு உரையாடல்களைச் செய்து நகர்ந்து சென்றது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நேர்மறை சமிக்ஞையாகத் தோன்றியது. இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களில் வீடு திரும்புதல், முகக் கொலு, ஆடும் நினைவுகள், பனிபெய்யும் இரவு, நடுகல், மீண்டும் கடலுக்கு, நடை ஆகிய ஓவியங்கள் பெரிதளவில் வரவேற்பைப் பெற்றிருந்தன.  அது போல துவிச்சக்கர வண்டி தொடர் ஓவியங்களும், முள்ளிவாய்க்கால் தொடர் ஓவியங்களும் பெரிதளவு வரவேற்பைப் பெற்றிருந்தன.  கருணாவின் இந்த ஓவியக் கண்காட்சியும், ஓவியங்கள் தொடர்பான அவரது தொடர் செயற்பாடுகளும் ஓவியக்கலை பற்றிய ஆர்வலர்கள் மத்தியில் உந்துசக்தியையும் எழுச்சியையும் கொடுக்கின்றன என்றால் மிகையாகாது.

k


1. ஓவியக் கண்காட்சியில் எடுக்கப்பட்ட இரண்டாவதாக உள்ள புகைப்படம் சேகர் தம்பிராஜாவால் எடுக்கப்பட்டது.
2. இந்தக் கட்டுரை உமா வரதராஜன் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஈழத்தில் இருந்து வெளிவருகின்ற தினகரன் பத்திரிகையின் பிரதிபிம்பம் பகுதிக்காக எழுதப்பட்டது.
3. இக்கட்டுரை எழுதப்பட்டதற்குப் பின்னர் கருணாவின் ஓவியக் கண்காட்சிகள் ரொரண்ரோ கல்விச் சபையால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் மரபுத்திங்கள் நிகழ்விலும், ஒன்ராரியோ மாகாண சபை தமிழ் ஊழியர்களுக்காக நிகழ்வொன்றிலும் இடம்பெற்றிருக்கின்றன.