அண்மையில் வழமைபோல ரொரன்றோ முருகன் புத்தக நிலையத்துக்குச் சென்றிருந்தபோது பாட்டி சுடாத வடை என்கிற அழகிய முகப்புடன் கூடிய புத்தகத்தினைப் பார்க்கக் கிடைந்தது. சிறுவர் நூல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்ற இன்றைய சூழலில் (குறிப்பாக கனடாவில் அல்லது புலம்பெயர் நாடுகளில்) சிறுவர்களுக்கான நூலொன்றினைக் காண நேர்ந்தது ஈர்க்கவே அதனை எடுத்துப் பார்த்தேன். இந்த நூலினைக் கனடாவைச் சேர்ந்த ஆரணி ஞானநாயகன் என்கிற மாணவி எழுதியிருப்பது இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
தற்போது கனடாவில் 12ம் வகுப்பில் கல்விகற்று வருகின்ற ஆரணி, கனடாவில் அல்பேர்ட்டா மாகாணத்தில் பிறந்தவர். தற்போது தொகுப்பாகியுள்ள இந்தக் கதைகள் அவர் தனது 13வது வயது முதலாக, கனடாவில் இருந்து வெளிவருகின்ற விளம்பரம் என்கிற பத்திரிகையில் எழுதி வருகின்ற கதைகளின் தொகுப்பாகும். கதைகள் கட்டுரைகள் என்று தொடர்ந்து எழுதிவரும் இவர் விளம்பரம் பத்திரிகையில் மாத்திரம் இதுவரை 60 நீதிக்கதைகள் வரை எழுதியுள்ளதாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கதைகளுடன் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஓவியங்களையும் ஆரணியே வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ஜனவரி 31, 2015 அன்று உருவாகும் புதிய தலைமுறை என்கிற பெயரில் ஒருங்கிணைத்திருந்த மாதாந்த இலக்கியக் கலந்துரையாடலில் பொன்னியின் செல்வன் பற்றிய கருத்துரையொன்றையும் ஆரணி வழங்கியிருந்தார்.
நாம் சிறுவர்களாக இருந்தபோது நிறைய சிறுவர் இதழ்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. அம்புலிமாமா, ரத்னபாலா, பூந்தளிர், பாலமித்ரா, கோகுலம் என்று பல இதழ்களை எனது சிறுவயதில் தொடர்ச்சியாக வாசித்துவந்திருக்கின்றேன். ஆயினும் அவற்றில் பல இதழ்கள் தற்போது நின்று விட்டன என்று அறியமுடிகின்றது. ஈழத்தில் இருந்தும் கூட அப்போது அர்ச்சுனா, அறிவுக்களஞ்சியம் ஆகியன வெளியாகிக்கொண்டிருந்தன. ஆயினும் இன்று சிறுவர்களின் வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவருகின்றமையாலும், தொலைக்காட்சி, வீடியோ கேம்கள் போன்றவற்றின் ஆதிக்கத்தாலும் ஈழத்தைப் பொறுத்தவரை தனியார் கல்வி நிலையங்கள் பெருமளவு நேரத்தை எடுப்பதாலும் கல்வித் தேவைகளுக்கு அப்பாலான பொதுவான வாசிப்பு என்பது மிக அரிதாகிவிட்டது. இதே நேரத்தில் புலம்பெயர் நாடுகளில் சிறுவயது முதல் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க இங்கே இருக்கின்ற கல்விமுறை பெரிதும் அக்கறை எடுக்கின்றது. வாராந்தம் நூலகங்களுக்கு அழைத்துச் செல்வது முதல், ஆறாம் வயதிலேயே பொது நூலகங்களிற்கான அங்கத்தவர் அட்டையை பாடசாலைகளே பெற்றுக்கொடுப்பது வரை வாசிப்புப்பழக்கம் சிறுவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்படுகின்றது. ஆயினும், புலம்பெயர் நாடுகளில் பிறக்கும் சிறுவர்களிடம் தமிழில் வாசிப்பு என்கிற பழக்கம் மிகக் குறைவாகவே இருக்கின்றது. இத்தகைய பின்னணியில் ஆரணி எழுதி வெளிவந்துள்ள பாட்டி சுடாத வடை என்கிற நீதிக் கதைகளின் புத்தகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. ஆரணிக்கும்ப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதோடு இந்தக் கதைத்தொகுப்பினை வெளியிட்டுள்ள விளம்பரம் பப்ளிகேசன்ஸ் இற்கும், ராஜா மகேந்திரனிற்கும் நன்றியையும் பாராட்டினையும் தெரிவிக்கவிரும்புகின்றேன்.
ரொரன்றோவில் இருக்கின்ற முருகன் புத்தக நிலையத்தில் (தொலைபேசி இலக்கம் 416 321 0285) இந்நூல் விற்பனைக்கு இருக்கின்றது. இப்புத்தகத்தினை வாங்குவது மூலமும் சிறுவர்களுக்கு இதனைப் பரிசளிப்பதன் ஊடாகவும் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கவும், சிறுவர்களும் வாசிப்புப் பழக்கத்தினையும் எழுத்து முயற்சிகளையும் ஊக்குவிக்க முடியும்.
Leave a Reply