அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா
அதிகாரத்திற்கெதிரான நமது இதயங்களைச்
சிலுவையில் அறைவதா?
என்கிற ஒரு காலத்தினதும் தலைமுறையினதும் மனசாட்சிகளின் தவிப்பாக இருந்த நிராதரவுக் குரலை எழுதிய எஸ்போஸ் என்றறியப்பட்ட சந்திரபோஸ் சுதாகர் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி தனது ஏழு வயது மகனின் கண்ணெதிரே மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் எஸ்போஸ் படைப்புகள் மற்றும் எஸ்போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் என்கிற இந்தத் தொகுப்பு நூல் கருணாகரன், ப, தயாளன், சித்தாந்தன் ஆகியோரைத் தொகுப்பாசியரியர்களாகக் கொண்டு வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது.
எமது தலைமுறையின் மிக முக்கியமான குரல்களில் ஒன்றாக தொண்ணூறுகளிலும் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலும் ஒலித்த நேர்மையான குரல் எஸ்போஸினுடையது. இந்தத் தலைமுறை ஒருவிதத்தில் குழப்பமான ஒரு தலைமுறை. தமது பால்ய பருவத்திலேயே போருக்குள் நுழைந்துவிட்ட, போர்ச்சூழலில் தம் வாழ்வினை தகவமைத்துக்கொள்ள நேர்ந்துவிடப்பட்ட இந்தத் தலைமுறை இயல்பாகவே அந்தப் போர்ச் சூழலுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும், போரை ஏற்றுக் கொள்ளவும், ஏன் போரைக் கொண்டாடவும், ஆயுதக் கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளவும் தொடங்கியிருந்தது. ஒரு விதத்தில் ஏற்கனவே தொடங்கிவிட்டிருந்த போரில் இருந்து வெளியேற அந்தத் தலைமுறைக்கு வழியும் இருக்கவில்லை. எனவே போரையும் ஆயுதத்தையுமே தன்னைக் காக்கும் அரணாகவும் அந்தத் தலைமுறை தன் நினைவடுக்குகளில் பதிய வைத்திருந்தது. போரையும் வன்முறையையும் ஆயுதக் கலாசாரத்தையும் ஏற்காதவர்களும் மாற்றுகள் இல்லை என்று தம்மைச் சமாதானப்படுத்திக்கொண்டும், தம்மை மௌனிப்பதே தமது பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் என்றும் முழுமையாக நம்பிக்கொண்டு மௌனித்திருந்ததே அன்றைய நிலைமையாக இருந்தது. இப்படியான ஒரு சூழலில் போரையும், வன்முறையையும் மட்டுமல்ல மானுடத்தின் மீது திணிக்கப்படும் எல்லாவிதமான அதிகாரங்களுக்கும் எதிராக அழுத்தமாக ஒலித்த குரலாக எஸ்போஸின் குரல் அமைந்தது.
ஒரு காலத்தின் மிக நேர்மையான குரலாகவும், காலத்துக்கான குரலாகவும் ஒலித்த அவரது குரலை அதிகாரம் அதற்கான பலங்களுடன் எதிர்கொண்டது. இங்கே அதிகாரம் என்று சொல்கின்றபோது இயக்கங்கள், அரசு என்பனவற்றை மாத்திரம் குறிப்பிடவில்லை. எமது சமூக உறவுகள், வர்க்கங்கள், வேலைத்தளங்கள், பாடசாலைகள் என்று அனைத்து மட்டங்களிலும் அதிகாரம் செயற்பட்டவிதங்களையும் தனது கூர்மையான அவதானத்தோடு நன்கறிந்து அவற்றைப் பற்றி தனது எழுத்துக்களூடாகவும் உரையாடல்கள் ஊடாகவும் பதிவுசெய்ததோடு தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியவராகவும் எஸ்போஸ் இருக்கின்றார். ஒழுக்கமும் வாழ்க்கையும் கற்றுத்தரப்படுவதோடு மனிதருக்கான அடித்தளம் அமைக்கப்படுவதாகவும் இன்றுவரை எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படும் பாடசாலைகளில் செயற்படும் அதிகாரம் பற்றி எஸ்போஸ் விசனப்பட்டதை இந்த நூலில் கருணாகரன் பதிவுசெய்திருக்கின்றார்.
“பள்ளியை எஸ்போஸ் அதிகாரம் திரண்டிருக்கிற மையமாகவே பார்த்தார். “கைத்தடியில்லாமல் ஒரு ஆசிரியரை நீங்கள் கற்பனை செய்யமுடியுமா? மாணவர்களை சக மனிதர்களாக, தங்களையும் விட கூர்ப்புள்ளவர்களாக கருதுகின்ற ஆசிரியர்கள் எங்காவது இருக்கின்றார்களா?” என்றெல்லாம் கேட்பார். இந்தளவில்தான் எங்களின் மனதில் ஆசிரியரைப் பற்றிய படிமம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த மாதிரியான படிமத்தை ஆசிரியர்கள் எம்மிடம் உருவாக்கியிருக்கின்றார்கள்
“குழந்தைகளிடம் அதிகாரத்தைத் திணிக்கும் பெரும் நிறுவனமே பள்ளி” என்பது அவரது நிலைப்பாடு.
பிள்ளைகளுக்கு அடிக்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவந்திருக்கிறார்களே!” என்றொரு நண்பர் சுதாகரிடம் கேட்டபோது சிரித்தார் எஸ்போஸ், இதற்கெல்லாம் சட்டம் கொண்டு வரவேண்டுமா என்பது போலிருந்தது அந்தச் சிரிப்பின் அர்த்தம்.”
அதுபற்றிய உரையாடல்கள் தமிழ்ச்சூழலிலும் ஈழத்திலும் ஓரளவு அறியப்பட்டபின்னரும் கூட பாடசாலைகள் அதிகார மையங்களாகத் தொழிற்படுவது பற்றிய பிரக்ஞை இன்னமும் எமது சூழலில் வராத நிலையில் ஆகக் குறைந்தது பத்தாண்டுகளுக்கு முன்னரேயே இதுபற்றி மிகத் தெளிவாக எஸ்போஸ் உரையாடியிருக்கின்றது எஸ்போஸ் பற்றிய முக்கியமான சித்திரமாகும்.
அதுபோல தான் பணிபுரிந்த இடங்களிலும் தொடர்ச்சியாக அவற்றின் நிர்வாகம் குறித்து எதிர்க்குரல் எழுப்புபவராகவும் அவர் இருந்துவந்துள்ளமையும் இந்த நூலின் பதிப்புரையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
”வேலை செய்த இடங்களில் ஏற்பட்ட நிர்வாக நடைமுறைகளை விமர்சித்தும் கண்டித்தும் அந்த நிர்வாகங்களில் அதிகாரம் செய்தவர்களின் மனநிலையை எதிர்த்தும் தனிப்பட்ட கடிதங்கள் பலவற்றை எழுதினார் எஸ்போஸ். சில கடிதங்கள் மிகமுக்கியமானவையாக இருந்தன. அவை அவருக்கும் அவர் பணியாற்றிய நிர்வாகத்துக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரங்களுடன் முடிந்துவிடக் கூடியன அல்ல. உழைக்கின்ற – நம்பிக்கையோடு இயங்குகின்ற – மனிதர்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தி மனிதாபிமானத்தை நிராகரிக்கின்ற போக்கின் மீதான கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புக் குரலுமே”
எஸ்போஸின் சிறப்பான தன்மையே அதிகாரத்துக்கு எதிரான இந்தப் போக்குத்தான். அதிகாரத்தை எதிர்த்தும் அதற்கெதிராகக் குரல் எழுப்பி துணிச்சலாக போராடுகின்ற போக்கும், எமக்கு பழக்கப்படுத்தப்பட்ட, பதியவைக்கப்பட்ட சிந்தனை முறையில் இருந்து வேறுபட்டு சுயமாகவும் தெளிவாகவும் தனது அடிப்படைகளை ஏற்படுத்திக்கொண்ட அவரது பண்புமே அவரது எழுத்துக்களுக்கும் செயற்தளங்களுக்குமான அடிப்படைகளாகும்.
எஸ்போஸின் கவிதைகள் பலராலும் பல இடத்தில் பேசப்பட்டிருக்கின்றன. அவை எழுதப்பட்ட சமகாலங்களில் அவற்றை வாசித்திருக்கின்றேன். போர் நடந்த காலத்தில் அது நடந்துகொண்டிருந்த நிலத்தில் போரையும் வெற்றிகளையும் பாடியும் அரசியலைப் பாடியும் கவிதைகள் வெளிவந்துகொண்டிருந்த காலத்தில் முழுக்க முழுக்க போருக்கு எதிராகவும் மானுட விடுதலைக்கு ஆதரவாகவும் வந்த கவிதைகளாக அவரது கவிதைகள் எனது நினைவுகள் இருக்கின்றன. உறவு, சிலுவைச் சரித்திரம், தலைப்பிட முடியாத கவிதை, சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம், கடவுளைத் தின்ற நாள் மற்றும் நாட்குறிப்பு போன்ற கவிதைகள் எனக்கு இப்போதும் பிடித்தன. ஆயினும் கவிதைகள் பற்றிய பரிச்சயமும் பயிற்சியும் சமகாலத்தில் எனக்கு அதிகம் இல்லாததால் அவைபற்றி விரிவாக எதையும் கூறமுடியவில்லை. அதேநேரம் மிகக் குறைவாகவே எழுதியிருக்கின்றபோதும் எஸ்போஸின் புனைவுகள் முக்கியமானவை என்று கருதுகின்றேன். குறிப்பாக மீட்சியற்ற நகரத்தில் செண்பகம் துப்பிய எச்சம், நெருப்புக்காலத்தில் ஒரு துளிர் என்கிற இரண்டு கதைகளும் முக்கியமானவை. அதிகாரத்துக்கெதிராக புனைவுகளைப் பயன்படுத்துகின்றபோது இருக்கின்ற குறியீடுகள், படிமங்கள் உள்ளிட்ட சகல சாதகமான அம்சங்களையும் இந்தக் கதைகளில் கையாண்டுள்ளார் எஸ்போஸ். மீட்சியற்ற நகரத்தில் செண்பகம் துப்பிய எச்சம் என்கிற கதையை பின்வருமாறு நிறைவுசெய்வார் எஸ்போஸ்,
“தெருவில் இறங்கியபோது ஈக்களும் குட்டையும் நிறைந்த வலியாலான நாயொன்று இன்னொரு நாயைத் துரத்திக்கொண்டிருப்பதை அவன் கண்டான். ஒரு சந்தர்ப்பத்தில் துரத்தப்பட்ட நாய் வெறுமனே வந்துகொண்டிருந்த வேறு நாயொன்றைத் துரத்தத் தொடங்கியது. வீதி முழுக்கப் படர்ந்து போயிருந்த அவனது கண்களின் நிழலில் நூறு நாய்களின் கூட்டம் சொல்லிலடங்கா அருவருப்புடன் ஆனால் வெறியுடன் பிறாண்டிக்கொண்டிருந்தது, வாழ்வின் எல்லாத் தகுதிகளையும் நிராகரித்து!”
வன்முறையும், அதிகார வெறியும் எப்படி அடுத்தடுத்தவர்களிடம் கையளிக்கப்படுகின்றது என்பதற்கும் அது எப்படி ஒரு தொற்றுநோய்க் கிருமிபோல எல்லா உயிரிகளையும் பாதிக்கின்றது என்பதையும் மிக நுட்பமாக பதிவுசெய்துள்ளார். இதே கதையில் வருகின்ற “பழைய இருளடைந்த தெருக்களின் மேலே காகங்கள் சிறகுகளை ஒடுக்கியபடி பறந்துபோயின” என்கிற படிமம் தருகின்ற போர்க்கால நெருக்கடிநிலை பற்றிய சித்திரமும் ஆழமாகப் பதிகின்றது.
அதுபோல எஸ்போஸின் எழுத்துக்களின் இன்னொரு முக்கிய அம்சம் அவர் – அவரது அல்லது அவரை ஒத்த குண இயல்புகளையும், பொருளாதார சமூக பண்பாட்டுப் பின்னணிகளையும் கொண்ட ஒருவரது இருத்தலியல் சிக்கல்களைப் பற்றிப் பேசுவதாகும். உண்மையில் அவரது இந்தக் கதைகளைப் படித்தபோது எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளரான கோபிகிருஷ்ணனே திரும்பத் திரும்ப நினைவில் தோன்றிக்கொண்டிருந்தார். தாடியும் நீல நிறச்சட்டையும் போட்ட மெல்லிய தோற்றமுடைய ஒருவராக ஒரே ஒரு புகைப்படம் மூலமாக எனக்கு எஸ்போசின் விம்பம் அறிமுகமாகியிருந்தது. ஆனால் அதற்கு நெடுநாள் மூலமாகவே, எஸ்போசைப் போலவே ஒரே ஒரு புகைப்பட விம்பத்துடன் ஆனாலும் தொடர்ந்து வாசித்து மனதுக்கு நெருக்கமான உணர்ந்த ஒரு பிரியத்துக்குரிய மனிதராக கோபிகிருஷ்ணன் நினைவுகளில் பதிவாகி இருந்தார். மானுட நேயமும், சிறுமை கண்டு பொங்குவதும், அதிகாரங்களுக்கு எதிராக போராடுவதுமான இயல்புடைய இந்த உண்மை மனிதர்கள் எப்போதும் சமூகத்துடன் தம்மைப் பொறுத்திக்கொள்ள முடியாத ஒருவிதமான தளம்பல் நிலையில் இருப்பவர்கள். இந்த தளம்பல் நிலை ஒருவிதத்தில் அந்நியமான தன்மையை நோக்கி அவர்களைச் செலுத்துகின்றது. ஒரு இரவும் ஒரு காலமும் என்கிற எஸ்போஸின் சிறுகதை இந்த விதத்தில் மிக முக்கியமானது. ஒரு விதத்தில் இந்தக் கதையின் தொடர்ச்சியாக இந்த நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள சுதாகரின் நாட்குறிப்பு வடிவிலான குறிப்புகளினைப் பார்க்க முடிகின்றது.
எஸ்போஸ் இந்தக் குறிப்புகளை மிக நேர்மையாக தன்னை எந்தப் புனிதத்துக்கும் ஆட்படுத்தாமல் பதிவுசெய்திருக்கின்றார். இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் கவனப்படுத்த வேண்டும், தான் வாழும் காலத்திற்கும் அப்பாற்பட்டு தீர்க்கமாக சிந்தித்து நுன்னுணர்வுடன் செயற்பட்ட எஸ்போஸின் இந்நூலில் உள்ள குறிப்புகளில் அதுவும் அ-புனைவுகளில் நேரடியாகவே பெண்களின் உடை குறித்தும் பெண்கள் குறித்தும் சொல்கிற கருத்துகள் மிகுந்த அயற்சியையே தருகின்றன,
”பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் பிறா வெளியில் தெரியவும் நிக்கர் வெளியில் தெரியவும் ஆடைகளை அணிகிறார்கள். அநேகமாக கொழும்பு போன்ற பெரிய நகரங்களில் இவை சாதாரண விடயம். விதிவிலக்கான உடை முழுவதையும் மூடி உடை அணியும் பெண்களும் இருக்கிறார்கள். மேலே நான் குறிப்பிட்டபடி பிறா, நிக்கர் தெரிய உடை அணிவதை மற்றவர்கள் கவனிக்கவேண்டும் தங்களின் உடலின் அந்தரங்கங்களை என்று விரும்பி அணிகிறவர்களை அல்லது கொழும்பில் பிறந்து வளர்ந்தவர்கள் கணக்கில் எடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அணிகிறார்களா என்று தெரியவில்லை. எனினும் சடுதியாக கொழும்பிற்குள் பிரவேசிப்பை நிகழ்த்தியிருக்கும் “கலாசாரத் தூய்மையைப்” பேணுவதற்கு வளர்க்கப்பட்ட எமது மனநிலையால் அதனை ஜீரணிக்க முடியாது”
இந்த இடத்தில் “தமது கலாசார தூய்மை பேணுகின்ற மனநிலை என்று குறிப்பிட்டாலும் இதே நூலின் வேறு இடங்களிலும் இதே தொனி அவரிடம் இருப்பதைக் காணமுடிகின்றது. ஒருவிதத்தில் பார்க்கின்றபோது போர்க்காலத்தில் போர் நடந்த சூழலில் இருந்து வெளியேறி கொழும்பு உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் புலம்பெயர் நாடுகளுக்கும் குடியேறியவர்கள் எதிர்கொண்ட பண்பாட்டு நெருக்கடியாக இதைக் கருத முடியுமா என்றும் தோன்றுகின்றது.
இந்தக் குறிப்புகளில் அன்றைய வாழ்வு, வீடுதேடல்களில் இருந்த சிக்கல்கள் என்பன பதிவுசெய்யப்படுவதுடன் ஊடகவியல் பற்றிய அவரது அக்கறையும் புலப்படுகின்றது. தான் செயற்படுதம் தளங்களில் முழுமையாக அர்ப்பணித்து உழைக்கின்ற தன்மையை ஊடகத்துறை, இதழியல் குறித்து அவரது தேடல்களிலும் அவை பற்றி அவர் சிவத்தம்பி உள்ளிட்டவர்களுடன் செய்த உரையாடல்களிலும் தெரிகின்றது.
”இலங்கை பத்திரிகைத் துறையில் “நேரடியாக எதிர்கொள்ளல்” என்ற பதம் பல்வேறு உயிரழிவுகளையே தந்திருக்கிறது. இந்த அச்சம் சரியானபடி ஒரு பத்திரிகையாளனை இயங்கவிடாமல் தடுக்கிறது. ஆயினும் இதையே சாட்டாகவும் கொண்டு அநேகமானோர் தப்பிவிடுகின்றனர். இந்த நிலையில் இருந்து ஒரு மாற்றத்தை விரும்பிய நான் இந்தத் துறையைக் கற்கத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.”
என்கிற அவரது பதிவின் எழுத்தின் வலிமையையும் வல்லமையையும் நன்கறிந்து அதனையே தன் ஆயுதமாக்கி தன் அறப்போராட்டத்தை நிகழ்த்தியிருக்கின்றார் எஸ்போஸ் என்றே கருதமுடிகின்றது.
இன்னொரு விதத்தில் அன்றை சமகாலப் போக்கில் இருந்து கவிதைகள் ஒரு புதிய செல்நெறியில் பயணிக்கவேண்டும் என்கிற அவாவும் அவருக்கு இருந்திருக்கின்றது. தனது கவிதைகளினூடாக அதனை நிகழ்த்திக்காட்டிய எஸ்போஸ், தான் எழுதிய விமர்சனங்களூடாக அதை நீட்டித்தும் இருக்கின்றார். கவிதை பற்றிய தனது கோட்பாட்டுத் தளத்தினை நடைமுறைப்படுத்தும் பெரும் கனவுடன் நிலம் என்கிற கவிதைக்கான இதழைத் தொடங்கினார் எஸ்போஸ், அதன் முதலாவதும் மூன்றாவதுமான ஆசிரியர் தலையங்கம் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. அவரது கவிதைகள் பற்றிய விமர்சனங்களூடாக நாம் அவரது கவிதைக் கோட்பாட்டை வைத்துப் பார்க்கின்றபோது இந்த ஆசிரியர் தலையங்களில் அது வெளிப்படவில்லை என்பது ஏமாற்றமே.
வீண் பொழுதுபோக்காகவும், நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனாவாதமாகவும், சமூகத்தால் ஒருவித அந்நியத்தன்மையுடனும் பார்க்கப்படுகின்ற எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் பற்றிய பதிவுகளும் ஆவணப்படுத்தல்களும் நிகழ்வது எமது சமுதாயத்தில் மிக குறைவானது. அப்படியான ஒரு சூழலில் அனைத்து அதிகாரங்களையும் கேள்வி எழுப்பி தொடர்ந்து விமர்சித்துக்கொண்டிருந்த, எந்த அமைப்புகளினதும் அதிகாரங்களினதும் நிழலில் அண்டிக்கொள்ளாத எஸ்போஸ் போன்ற எழுத்தாளர்களும் அவர்கள் எழுத்துக்களும் தொகுக்கப்படுவதும் ஆவணப்படுத்தப்படுவதும் மீண்டும் நினைவுகூரப்படுவதும் பேசப்படுவதும் அவசியம். அதனைச் செயற்படுத்திய வடலிபதிப்பகத்துக்கும் நண்பர் அகிலனுக்கும், தொகுப்பாசிரியர்களான கருணாகரன், சித்தாந்தன், தயாளன் ஆகியோருக்கும் மற்றும் இம்முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஏப்ரல் 15, 2017 அன்று ரொரன்றோவில் வடலி பதிப்பகம் ஒழுங்கு செய்திருந்த எஸ்போஸ் கவிதைகள் வெளியீட்டுவிழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது.
Leave a Reply