-சிறுகுறிப்பு
தமிழ்த் தாய் மன்றம் ஒழுங்கு செய்திருந்த “போர்க்காலக் கவிஞர்களின் போர்க்கால கவிதைகள்” என்கிற இலக்கிய அமர்வொன்று செப்ரம்பர் ஒன்பதாம் திகதி நடைபெற்றது. தமிழ் முறைத் திருமணம் செய்து வைத்தல், தமிழ்ப் பெயர் உள்ள குழந்தைகளுக்குப் பரிசு வழங்குதல் என்பவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் தமிழ்த்தாய் மன்றம் ஒழுங்குசெய்திருந்த முதலாவது இலக்கிய நிகழ்வு இது என்று நிகழ்விலேயே குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த நிகழ்வில் அம்புலியின் “மீண்டும் பிறக்கின்றோம்”, கப்ரன் கஸ்தூரியின் “வல்லரசுகள்” மேஜர் பாரதியின் “விடிவிற்காய் எழுவோம்”, வியாசனின் (புதுவை இரத்தினதுரை) ”சாலப் பொருந்தும் சட்டம் வந்தாச்சு, ஏல விற்பனை இனியிங்கில்லை”, மலைமகளின் “உயரும் என் குரல்” என்கிற கவிதைகள் வாசிப்பும், அவை பற்றிய திறனாய்வும் இடம்பெற்றன. இந்தக் கவிதைகளை எழுதிய ஐவருமே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். நிகழ்விற்கு வருகை தந்த அனைவருக்கும் வாசிக்கப்பட்ட ஐந்து கவிதைகளும் அச்சிடப்பட்ட சிறிய பிரசுரம் ஒன்றும் வழங்கப்பட்டது. நிகழ்வில் திறனாய்வு செய்தவர்களில் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களின் உரையில் வெளிப்பட்ட சாதியம், சீதன முறைமை பற்றிய விமர்சனம் நன்றாக இருந்தது. ஏனையவர்கள் அனேகம் இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதில் ஆரம்ப நிலைகளில் இருப்பவர்கள் என்று நினைக்கின்றேன். தொடர்ச்சியான வாசிப்புகளாலும், எழுத்துக்களாலும் உரையாடல்களாலும் அவர்கள் சிறப்பாக வெளிப்படுவார்கள் என்று நம்புகின்றேன்.
ஆயினும் தீவிரமாக தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமக்கான கலை இலக்கிய வெளிப்பாடுகளைக் கண்டடையவேண்டும் என்பதையும், தாம் நம்புகின்ற கருத்துநிலை, விமர்சனம் என்பவற்றைப் பற்றி தொடர்ச்சியாக உரையாடவும் படைப்புகள் ஊடாகவும் கலை இலக்கியச் செயற்பாடுகள் ஊடாகவும் வெளிப்படுத்தவேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். தமிழ்த் தாய் மன்றம் போன்ற அமைப்புகள் தொடர்ச்சியாக இயங்கும்போதும் இது போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கும்போதும் அது நல்லதோர் தொடக்கமாக அமையும் என்றும் முழுமையாக நம்புகின்றேன்.
அதன் மின்னூல் வடிவினை இத்துடன் இணைத்துள்ளேன்.
தாய்வீடு பத்திரிகையில் நான் எழுதும் சொல்லத்தான் நினைக்கிறேன் என்கிற தொடர் பத்தியில் ஒக்ரோபர் 2017 இல் வெளியானது
இந்த நிகழ்வில் உரையாற்றிய இன்னும் ஒருவர் மா. சித்திவிநாயகம். அவர் எழுதிய கவிதை மரணத்தில் வாழ்வோம் தொகுப்பிலும் இடம்பெற்றிருந்தது. 30 ஆண்டுகளுக்கு மேலாக கலை, இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுவருபவர். பண்டிதர் ச.வே பஞ்சாட்சரத்தைத் தவிர ஏனையவர்கள் அனேகம் இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதில் ஆரம்ப நிலைகளில் இருப்பவர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். மா. சித்திவிநாயகமும், தேன்மொழியாளும் தொடர்ந்து செயற்பட்டு வருபவர்கள். ஆயினும் அன்றைய தினம் அவர்களது உரைகள் அந்தக் கவிதைகள் குறித்த திறனாய்வாக, பேச்சாக முழுமையடையவில்லை என்றே கருதுகின்றேன்.
Leave a Reply