விபீஷன் மகேந்திரராஜாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கின்ற “நிறம் தீட்டுவோம்” என்கிற ஆவணப்படத்தினை அண்மையில் பார்க்க முடிந்தது. வவுனியாவில் வசிக்கின்ற விபீஷன் இருபதுகளின் ஆரம்ப வயதில் இருப்பவர் என்று அறியமுடிகின்றது. சமூக வலைத்தளங்களை மையமாகக் கொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற அல்லது முன்னெடுப்புகளை ஆரம்பிக்கின்ற தலைமுறையைச் சேர்ந்த அவரது சமூக அக்கறையையும், பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக இந்த ஆவணப்படம் அமைகின்றது.
நிறம் தீட்டுவோம் என்கிற ஆவணப்படம் பற்றிய அறிமுகக் குறிப்பினை “பார்வைப்புலனை முற்றிலும் இழந்த மாணவன் கலைச்செல்வனின் வாழ்க்கைப்பயணத்தினூடாக மாற்றுவலு மாணவர்களின் இன்றையநிலைப்பாட்டை தேவைகளை அவை நிவர்த்தியாக்கப்படும் விதத்தை அறிந்து கொள்ளல், அவர்களைப்பற்றிய சமூகத்தின் உணர்திறனை ஆய்வு செய்தல்..” என்று பதிவுசெய்கின்றார் விபீஷன். தனது இரண்டு வயதில் கண்பார்வையை இழந்த கலைச்செல்வன் தனது பதின்மூன்றாவது வயதில் தாயையும் பதினான்காவது வயதில் தமக்கையையும் இழக்கின்றார். அதன் பிறகு VAROD அமைப்பினரால் பொறுப்பெடுக்கப்பட்டு, வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் சேர்ந்து கற்கின்றார். அவரது சக மாணவர்களும் ஆசிரியர்களும் சொல்பவற்றுடன் கலைச்செல்வன் தற்கூற்றாகச் சொல்பவையும் கலைச்செல்வன் பற்றிய மேலதிக அறிமுகத்தினைத் தர, பாடசாலை அதிபரும், வரோட் அமைப்பின் நிர்வாக இயக்குனரும், மன நல மருத்துவர் சிவதாஸும் மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் சவால்கள், சமூகம் அவர்களை எவ்விதம் எதிர்கொள்ளுகின்றது என்பதை கலைச்செல்வனை ஒரு வகைமாதிரியாகக் கொண்டு ஆய்வு செய்கின்றார்கள். இந்த ஆவணப்படத்தில் கலைச்செல்வனை ஒரு வகைமாதிரியாகக் கொண்டு பகிரப்படும் கருத்துகளும், அறிதல்களும் கட்டாயமாக உரையாடப்படவேண்டியன என்று கருதுகின்றேன்.
இந்த ஆவணப்படத்தின் வாயிலாக, கலைச்செல்வன் ஆளுமையான, திறமையான ஒரு மாணவராகவே தெரிகின்றார். ஆயினும், எமது நாட்டில் மாற்றுத் திறனாளிகளின் நலனை கருத்திற்கொண்ட கட்டமைப்புகள் இன்னும் சரியாக உருவாகாத காரணத்தால் அவர் ஒரு விதத்தில் தங்கி வாழவேண்டியவராகவே இருக்கின்றார். அவரது சக மாணவர்களும் அவர் மீது கருணையும் இரக்கமும் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். அதனைக் குறையாகவும் சொல்ல முடியாதுதான். ஆயினும் அவற்றின் வழியாக மாற்றுத் திறனாளிகள் தொடர்ச்சியாகத் தங்கிவாழ்பவர்களாகவே இருக்கவேண்டிய ஒரு சூழலையே ஈழத்துச் சமூகக் கட்டமைப்பு பேணுகின்றது என்பதை நாம் அவதானிக்கவேண்டும். போருக்குப் பிந்திய சூழலில் மாற்றுத்திறனாளிகள் கணிசமாக அதிகரித்துள்ளது பற்றிய பல்வேறு அறிக்கைகளும் கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் பல்வேறு நிதி உதவிகளும், திட்டங்களும் பல்வேறு அமைப்புகளாலும் தனிநபர்களாலும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆயினும், மாற்றுத் திறனாளிகள் தற்சார்பில் வாழ்வதற்கான அவர்களது எதிர்காலம் குறித்த நீண்டகால நோக்கிலான திட்டமிடல்களும் கட்டமைப்புகளும் உருவாக்கப்படவேண்டும் என்பதில் தீவிரமாகக் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும். புலம்பெயர் நாடுகளில் இருந்து செய்யப்படுகின்ற நிதியுதவிகள் போலவே தொழில்சார் நிபுணத்துவமும் ஆலோசனைகளும் கூட ஈழத்தை நோக்கிக் கொண்டுசெல்லப்படவேண்டியதும் முக்கியமானது. இதுபோன்ற உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான திறப்பினைச் செய்கின்றது என்கிற வகையில் விபீஷனின் நோக்கம் நிறம் தீட்டுவோம் ஊடாக நிறைவேறியிருக்கின்றது என்றே கூறவேண்டும்.
நிறம் தீட்டுவோம் நல்லதோர் முயற்சி, விபீஷனுக்கும் இந்த ஆவணப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இருக்கின்ற அக்கறை முக்கியமானது. அதேநேரத்தில் இருக்கின்ற குறைகள் சிலவற்றையும் பேசவேண்டும்; குறிப்பாக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்ட விதத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றியதாக இல்லாமல், கலைச்செல்வன் பற்றியதாக மாறிவிடுகின்றது. மேலும், மாற்றுத்திறனாளிகள் பற்றியும் அவர்கள் தேவைகள் பற்றியும் உசாவல்களை மேற்கொள்வதற்கு “கலைச்செல்வன்” மட்டும் தேரிவுசெய்யப்பட்டிருப்பது பொருத்தமானதல்ல என்றே கருதுகின்றேன். அவருக்குக் கிடைத்த வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையிலேயே அனேகமான மாணவ பருவத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள் என்பதையும் இந்த ஆவணப்படம் கவனமெடுத்திருக்க வேண்டும். அடுத்து இந்த ஆவணப்படத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பின்னணி இசையானது இடைஞ்சல் செய்வதாகவே இருக்கின்றது. அதனையும் நிவர்த்தி செய்திருக்கலாம். இந்த ஆவணப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவதும் தமது தேடல்களூடாக தம்மை இன்னும் விசாலித்துக்கொள்வதும் அவர்களது படைப்புகள் முன்னெடுக்கும் உரையாடலை இன்னும் கனதியாக்கும் என்று நம்பிக்கையுடன் கூற விரும்புகின்றேன்.
1. இக்கட்டுரை டிசம்பர் 2017 தாய்வீடு பத்திரிகையில் வெளியானது
Leave a Reply