நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழைய மாணவர்களில் ஒருவன்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள கல்விமுறையில் பாடசாலை அனுமதிகள் கிடைக்கும் விதம் பற்றியும் அது இலங்கையில் இருக்கக் கூடிய அனைத்துப் பாடசாலைகளின் செல்நெறியிலும் ஏற்படுத்தி இருக்கக்கூடிய தாக்கம் குறித்தும், சில பாடசாலைகள் மாத்திரம் வசதிகளும் சலுகைகளும் குவிக்கப்பட்டனவாய் அமைந்திருப்பது குறித்தும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக சிறு கிராமங்களில் இருக்கின்ற பாடசாலைகள் கிட்டத்தட்ட கவனிப்பாரற்று மாணவர்கள் வரத்தற்று கைவிடப்படும் நிலைமையே காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் நிகழும் தாக்கங்களுக்கும் அப்பால், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி தனக்கே வரித்துக் கொண்ட சில குணாம்சங்கள், பாடசாலையுடன் தொடர்புடைய சங்கங்கள், பழைய மாணவர்கள், ஆளுமைகள் போன்றவர்களின் பாராமுகம் அல்லது பிரக்ஞையின்மை காரணமாக பாடசாலை குறித்த கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் எனக்கு இருக்கின்றன. அவற்றை என் சக நண்பர்களுடன், பாடசாலையுடன் தொடர்புபட்டு இயங்குகின்றவர்களிடமும் எந்தத் தயக்கமும் இன்றித் தெரிவித்து வருகின்றேன்.
ஆயினும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பற்றிய நெருக்கமான உணர்வும் நேசமும் கொண்ட பழைய மாணவர்கள் பலரும் இருப்பதை அண்மைக்கால முகநூல் உரையாடல்கள் மூலமாக அறியக்கூடியதாக இருந்தது. அவர்களை வினைத்திறனாகச் சிந்திக்க வைக்கும் நோக்குடன் இந்தச் சிறு கேள்வி.
1990ம் ஆண்டு நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இணைந்தேன். அப்போதைய பாடசாலை இலச்சினையை இத்துடன் இணைக்கின்றேன்.
காங்கேசன் துறை வீதியில் அமைந்திருக்கின்ற பிரார்த்தனை மண்டப நுழைவாயிலில் தற்போது எடுக்கப்பட்ட படத்தினை இத்துடன் இணைத்துள்ளேன்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இலச்சனையில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1887 என்று இருக்கக் கூடியதாகவே பாடசாலை இதழ்களிலும் பிரசுரங்களிலும் பாடசாலை வரலாற்றை 1890 இலிருந்து தொடங்குகின்ற போக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டிருந்தது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பின்வரும் கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களைத் தேட முற்படுது முக்கியம் என நம்புகின்றேன்.
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இலச்சனையின் கீழ்ப்பாகத்தில் இருந்த ESTD 1887 என்பது எப்போது நீக்கப்பட்டு அந்த இடத்தில் Jaffna Hindu College என்பது இடம்பெற்றது.
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஸ்தாபிதம் 1887 என்பது எல்லாக் குறிப்புகளிலும் இருந்து நீக்கப்ப்ட்டு 1890 இல் இருந்து யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வரலாற்றினை எழுதும் போக்கு எப்போது முழுமையாக்கப்பட்டது. இலச்சனையில் இருந்து ESTD 1887 என்பது நீக்கப்படுவது குறித்து விளக்கம் ஏதாவது கொடுக்கப்பட்டதா? என்ன விளக்கம் பொது வெளியில் கொடுக்கப்பட்டது?
- ESTD 1887 என்பதற்கும் 1890 இற்கும் இடையில் இருக்கக் கூடிய வித்தியாசம் என்ன?
- 1990 ஆம் ஆண்டு நான் பாடசாலையில் ஆறாம் ஆண்டில் சேர்ந்தபோது எமக்கு சமூகக் கல்வி கற்பித்த ஆசிரியர் பாடசாலை ஸ்தாபகர்களாக செல்லத்துரை, நாகலிங்கம், பசுபதிச் செட்டியார் என்கிற மூவரைக் குறிப்பிட்டார். இப்படியா இப்போதும் சொல்லப்படுகின்றது?
மரபுரிமை, வரலாறு சார்ந்த பிரக்ஞை எல்லாரிடமும் இருக்கவேண்டும். நான் கற்ற பாடசாலை என்றவகையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி நிர்வாகத்தில் செல்வாக்குச் செலுத்துபவர்கள் தவறிழைத்தததாகவே இது குறித்து நம்புகின்றேன். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் தவப்புதல்வர்கள் அனைவரும் இது குறித்து அக்கறை செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். வரலாறு முக்கியம் என்பது வெறும் வடிவேல் திரைப்பட நகைச்சுவை மாத்திரம் அல்ல நண்பர்களே!
1990 ஆம் ஆண்டு நாம் யாழ் இந்துவில் இணைந்த போது குமாரசுவாமி மண்டபத்தில் இருந்தது எமது கல்லூரி இலச்சினை அல்ல, அது நிறப்பூச்சுடன் மெருகேற்றப்பட்ட இலட்சசினையை ஒத்த உருவம் என்பது எனது கருத்து. 1979 ஆம் ஆண்டு JHC OBA Colombo மலர் ஒன்றில் தற்போது பாவனையில் உள்ள இலட்சசினை பயன்படுத்தப்பட்டுள்ளது. 1971 இல் தற்போது பாவனையில் உள்ள இலச்சினையில் கீழுள்ள வளைவு இல்லாமல் இலட்சினை பாவனையில் இருந்துள்ளதாக தெரிகின்றது 1971 இல் வெளிவந்த இந்து இளைஞன் இதற்க்கு சான்று. 1971 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட ஆவணங்கள் எதுவும் எனது பார்வைக்கு கிட்டவில்லை. யாரிடமாவது அந்த ஆவணங்கள் இருக்குமாயின் எத்தனையாம் ஆண்டு இது மாறியது என்பதை அறிய முடியும். இந்த தேடலை தூண்டியமைக்கு நன்றிகள்.
இந்து இளைஞன் 1971 மலர் http://noolaham.net/project/127/12684/12684.pdf
JHC OBA Colombo book 1979 – http://noolaham.net/project/127/12631/12631.pdf
நன்றி நூலகம் – http://noolaham.net
குணதர்சன்
LikeLike