எங்கட புத்தகங்கள் முதலாவது இதழ் வாசித்து முடித்தேன். கச்சிதமாக வெளிவந்திருக்கின்றது. வாசிப்பினையும் வாசிப்புப் பழக்கத்தையும் பரவலாக்கம் செய்யவேண்டும் என்ற நோக்குநிலையுடனான ஒரு செயற்பாட்டு வாதத்தை எங்கட புத்தகங்கள் முன்னெடுத்திருப்பது குறித்து நன்றியும் மகிழ்ச்சியும். நாம் எதை நோக்கி வேலை செய்கின்றோமோ அந்த எல்லையை சென்றடைவதற்குத் தேவையான எல்லாக் கருவிகளையும் நாம் கைவசம் கொள்ளவும் கையாளும் பக்குவம் கொள்ளுவதும் அவசியம். எங்கட புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியினைத் தொடர்ந்து, எங்கட புத்தகங்கள் இதழும் வெளிவந்திருப்பது அவர்கள் அதனை செவ்வனே உணர்ந்திருக்கின்றார்கள் என்பதைக் காட்டி நிற்கின்றது.
2020 ஜனவரியில் எங்கட புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியையும் விற்பனையையும் ஒருங்கமத்தபோது, ஈழத்தவர்களின் நூல்களை ஈழத்தவர்களிடம் கொண்டுசெல்வது என்பதை நோக்காகக் கொண்டு அதனை ஆரம்பித்திருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஈழத்தவர் நூல்களை ஈழத்திலே ஈழத்தவர்களிடம் கொண்டுசெல்வதற்கென்று ஒரு பிரத்தியேக முனைப்பு தேவையா என்று இதைப் படிப்பவர்கள் யோசிக்கலாம். உண்மையில் ஈழத்தைப் பொருத்தவரை அதிலும் குறிப்பாக ஈழத்தவரின் கலை இலக்கிய வெளிப்பாடுகளை ஈழத்தவரிடம் கொண்டு செல்வதற்காகத்தான் பெருமுயற்சி எடுக்கவேண்டி இருக்கின்றது. அந்த வகையில் “125க்கு மேற்பட்ட எழுத்தாளர்களின் 350க்கும் அதிகமான புத்தகங்களின் 3500க்கும் அதிகமான பிரதிகளை காட்சிப்படுத்தி அவற்றில் 1500க்கும் அதிகமான பிரதிகளை 3 நாளில் விற்று முடித்தது சாதனை என்பதற்கும் அப்பால் ஆரோக்கியமான சமிக்ஞை என்றே கூறுவேன்.
அதன் தொடர்ச்சியாக எங்கட புத்தகங்களின் இன்னொரு முயற்சியாக “எழுத்து – பதிப்பு – வாசிப்பு” என்ற எண்ணக்கருவோடு, எழுத்துத்துறை, பதிப்புத்துறை மற்றும் வாசிப்புத்துறை சார்ந்த விடயங்களுடன் அவற்றுடன் தொடர்பான சமகால நிகழ்வுகள் மற்றும் தகவல்களும் கொண்டதோர் இதழாக எங்கட புத்தகங்கள் இதழை குலசிங்கம் வசீகரனை ஆசிரியராகவும், என். செல்வராஜா, சற்குணம் சத்தியதேவன் ஆகியோரை இணையாசிரியர்களாகவும் கொண்டு வெளியிட்டிருக்கின்றார்கள். இந்த நோக்குடன் தொடர்ந்து பயணிப்பார்களேயானால் அது காத்திரமானதோர் செயற்பாடாக அமையும் என்பதுடன் ஈழத்தில் பண்பாட்டு அரசியல் மற்றும் பண்பாட்டுச் செயற்பாடுகள் குறித்த பிரக்ஞைபூர்வமான உரையாடல்களை உருவாக்குவதற்கான ஒரு தளமாகவும் அமையும் என்றே நம்புகின்றேன்.
ஈழத்துப் பதிப்புத்துறை எதிர்கொள்ளுகின்ற முதன்மையான சவால்களில் ஒன்று, அது தொழில்முறையாக்கப்படாமல் தன்னிச்சைகாக இயங்குவதாகும். அந்தவகையில் நூலகவியலாளர் என். செல்வராஜா எழுதியிருக்கும் “தமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்” என்ற கட்டுரை ISBN குறித்த அறிமுகத்தையும் அதனைப் பெறவேண்டிய அவசியத்தையும் தெளிவாகக் கூறுகின்றது. பதிப்புத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் ஈடுபட ஆர்வமுள்ளவர்களும் கட்டாயமாகப் படிக்கவேண்டிய கட்டுரை இது.
தாழ்த்தப்பட்ட சமூத்தைச் சேர்ந்த மக்களின் நலன்களுக்காகக் குரல்கொடுத்து யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது சங்கம் 1926 இல் உருவாக்கப்பட்ட “யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம்” என்பதாகும். இந்த நோக்கத்தின் பொருட்டு இச்சங்கம் வெளியிட்ட இதழான திராவிடன் குறித்த கட்டுரை ஒன்றினை இந்த இதழில் தி. கோபிநாத் எழுதியுள்ளார். திராவிடனுக்கு முன்னரே வெளியான தேசபக்தன், மேல்நோக்கு ஆகிய பத்திரிகைகளும் சாதிய வேறுபாடுகளைக் களைவது உள்ளிட்டவற்றை சமூகச் சீர்திருத்தங்கள் என்ற வகையில் தமது நோக்கங்களில் ஒன்றாக ஆசிரியர் தலையங்கம் போன்றவற்றில் குறிப்பிட்டிருந்தாலும், தாழ்த்தப்பட்டவர்களின் நலனை முதன்மைப்படுத்தியதாக ஈழத்தில் வெளியான முதல் இதழ் திராவிடனே (திராவிடன் தொடக்கத்தில் செய்திப்பத்திரிகையாக வெளிவந்தபோதும் அது தீண்டாமை ஒழிப்பினை நோக்காகக் கொண்ட உள்ளடக்கங்களைக் கொண்டிருந்ததாக இ. சிவகுருநாதனும் பதிவு செய்திருக்கின்றார்). இந்தச் சங்கத்தின் போஷகர்களாக ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களே இருந்திருப்பதுடன். இந்தச் சங்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறுவதைத் தடுப்பதற்கான உபாயமாகவே அவர்களை சமமாக நடத்தவேண்டும் என்பதையும் அவர்களுக்குப் “போதுமான கல்வியைக்” கொடுக்கவேண்டும் என்பதையும் கைக்கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கோபிநாத்தின் கட்டுரை இந்தத் தகவல்களையெல்லாம் சேகரித்தும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறிவிடுகின்றது. றமீஸ் அப்துல்லா எழுதிய இலங்கைத் தமிழ்ப்பத்திரிகைகள் (1841 – 1950) நூல் திராவிடனின் முதலாவது இதழ் 28.01.1927 இல் வெளியானதாகக் கூறுகின்றபோது கோபிநாத் 11.02.1927 அன்றுதான் முதல் இதழ் வெளிவந்ததாகப் பதிவுசெய்கின்றார். இந்தக் குழப்பம் தெளிவிக்கப்படவேண்டியது. இதழின் முகப்பில் ஆங்கில நாட்காட்டி என்று பொதுவாகச் சொல்லப்படுகின்ற கிரிகோரியன் நாட்காட்டியையும் உட்பக்கத்தில் ஆசிரியர் தலையங்கத்தின் கீழ் “இந்து நாட்காட்டியையும்” பின்பற்றி திகதிகள் இடப்பட்டிருப்பதால் வந்துள்ள குழப்பம் இது. றமீஸ் அப்துல்லா ஆசிரியர் தலையங்கத்தின் கீழ் இடப்பட்டிருக்கும் “இந்து நாட்காட்டி”யைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார், கோபிநாத் முன்பக்கத்தில் உள்ள கிரிகோரியன் நாட்காட்டித் திகதியைச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். 1927 முதல் 1931 வரை 45 மாதங்களாக திராவிடன் வெளிவந்ததாகவும் கோபிநாத் குறிப்பிடுகின்றார். திராவிடனின் முழு இதழ்களும் தொகுக்கப்பட்டு முறையாகப் பதிப்பிக்கப்படவேண்டும்.
எனது பார்வையில் ஈரநிலத்தின் வாசிப்பு என்கிற எஸ்.பி. பாலமுருகனின் கட்டுரை, மலையகத்தின் இன்றை எழுத்து வாசிப்புச் சூழல் குறித்துக் கூறுவதுடன் அதற்கான காரணங்களையும் ஆராய முற்படுகின்றது. சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னருமான காலப்பகுதியில் தமிழ்நாட்டுத் தொடர்புகள் மூலம் பெரியாரிய, கம்யூனிசக் கொள்கைகள் மலையகத்தில் பரவி ஏற்படுத்திய தாக்கம் காரணமாக அங்கே சமூக பொருளாதார விழிப்புணர்ச்சி உருவாகி, இடதுசாரிய அமைப்புகள், போராட்ட நடவடிக்கைகள் என்பன முனைப்புப்பெற்றதாகும்,1983 இற்குப் பின்னர் ஏற்பட்ட நிலைமைகளால் இவை சீர்குலைந்ததாகவும் குறிப்பிடுகின்றார். மேலும், அண்மைக்காலமாக கைத்தொலைபேசி பாவனையும், தொழினுட்ப பரவலாக்கலும் இளையோர் சமூகத்தை தகவல் தொடர்பாடலை வீண்பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன்படுத்துவோராக மாற்றியிருப்பதையும் குறிப்பிடுகின்றார்.
விதை குழுமத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான “நூலகங்களை உருவாக்குதல்” குறித்து அதன் செயற்பாட்டாளர் கிரிசாந் எழுதிய கட்டுரை அந்தச் செயற்திட்டத்தினைப் பற்றியும் அதன் தேவை குறித்தும் முன்வைக்கின்றது. நூலகங்களும் வாசிப்பும் ஒரு கட்டடமும் கடமையுமாக நோக்கப்படாமல், அவை சமூகப் பண்பாட்டு நடவடிக்கைகளாக மாறவேண்டும். வாசிப்பது என்பது மூளைக்குள் தகவல்களத் திணிப்பதாக மாறிவிடாமல் வாசித்தவற்றைக் குறித்து உரையாடவும், அதனூடாக புதியவற்றைக் கண்டடையவும் வரலாற்றையும் சமகால நிகழ்வுகளையும் ஒன்றைவைத்து ஒன்றைப் புரிந்துகொள்வதற்கான சிந்தனை முறையை உருவாக்கவும், தான் வாசித்தவற்றில் இருந்து விடுபட்டு புதியவற்றைக் கண்டடையவும் வழிகாட்டியாக வாசிப்பு அமையவேண்டும். இந்தக் கட்டுரை சமூகச் செயற்பாட்டாளர்களுடனும் ஆசிரியர்களுடனும் நூலகர்களுடனும் தனது உரையாடலை நிகழ்த்த, இதே இதழில் வெளிவந்திருக்கின்ற “வளரும்போதே அறிவையும் கொஞ்சம் தேடுவோம் வாருங்கள்” என்கிற கட்டுரை மாணவர்களுடன் வாசிப்புப் பண்பாடு குறித்துப் பேசுகின்றது.
கனடாவில் இருந்து வெளிவரும் கூர் 2011 இதழில் ரஃபேல் எழுதிய ”நூலில் அகப்பட்ட சொல்” என்றொரு புனைவு வெளியாகி இருந்தது. புத்தகங்களை வாங்கிக் குவிப்பதை (கவனிக்க, வாங்கி வாசிப்பதை அல்ல, வாங்குவதை மட்டும்) வழக்கமாக கொண்டு ஒருவர் பற்றிய புனைவு. உண்மையில் அப்படிச் சிலரை நான் கண்டும் இருக்கின்றேன். சத்தியதேவன் எழுதியிருக்கின்ற “புத்தகப் பூச்சிகளில் ஒளிந்திருக்கும் புத்தகத்தின் மரபணு” என்கிற தலையங்கம் மிரட்டலாக இருக்கலாம், ஆனால் கட்டுரை மிக சுவாரசியமான கட்டுரை. புத்தகத்துடன் ஒருவருக்குள்ள தொடர்பு வெறுமே வாசிப்பினால் மாத்திரம் உருவானதல்ல, அதற்கும் அப்பாலான உறவுகளை இந்தக் கட்டுரை கூறுகின்றது. கட்டுரையை வாசித்து முடித்து நாம் அறிந்த மனிதர்களில் யார் யார் புத்தக சேகரிப்பாளர், புத்தக காதலர் என்று என்று மனம் அலாவுகின்றது. புத்தகங்களுக்கும் பெண்களுக்கும் இருக்கின்ற நெருக்கமான உறவைச் சொல்கின்ற சத்தியன், எத்தனை பெண்கள் தொடர்ந்தும் புத்தகக் காதலர்களாகத் தொடரமுடிகின்றது என்ற கேள்வியை முன்வைக்கின்றார்.
குலசிங்கம் வசீகரன் எழுதியுள்ள இணுவில் பொது நூலகம் குறித்த கட்டுரை, அந்தப் பொது நூலகத்தின் குறுகிய காலத்திலான வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுகின்றது. மார்ச் 2002 இல் 1200 புத்தகங்களுடன் மீள இயங்க ஆரம்பித்த இந்த நூல்நிலையத்தில் தற்போது 25,000 புத்தகங்களைக் கொண்டதாகவும் அதன் வாசகர் பகுதியில் 40 சஞ்சிகைகளும் 14 பத்திரிகைகளும் வாசிக்கக் கிடைக்கின்றன என்பது வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் செய்தி. ஏனைய கிராமிய நூலகங்களும் இப்படிப் புதுப்பிக்கப்படவேண்டும். புலம்பெயர் நாடுகளில் உள்ள கிராமச் சங்கங்களும் பாடசாலைச் சங்கங்களும் இப்படியான முயற்சிகளுக்கு உதவுவதுடன் உள்ளூர் தலைமையின் கீழ் சுயாதீனமான அவை செயற்படுவதற்கான வெளியையும் ஆதரவையும் கொடுக்கவேண்டும்.
இந்த இதழில் ஈழத்தில் வெவ்வெறு பகுதிகளில் இடம்பெற்ற நூல் வெளியீடுகள் குறித்தும் புத்தகக் கண்காட்சிகள் குறித்தும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அண்மைக்காலத்தில் வெளியான ஈழத்தவர்கள் நூல் குறித்த பட்டியலொன்றும் வெளியாகி இருக்கின்றது. அந்த வகையில் இந்த இதழ் எழுத்து – பதிப்பு – வாசிப்பு குறித்து சரியானதோர் ஆரம்பத்துடன் தொடங்கியிருக்கின்றது. இதழில், குறிப்பாக ஆசிரியர் தலையங்கத்தில் ஆண்பால் விகுதிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுத்தலாக உள்ளது. அதனை அடுத்தடுத்த இதழ்களில் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புகின்றேன்.
Leave a Reply