நதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும்

ஈழத்திலக்கியம் பெரிதும் போரையும் போரின் தாக்கங்களையுமே தன் உள்ளடக்கமாகக் கொண்டதாக அமைவதான குற்றச்சாற்று பரவலாக முன்வைக்கப்படுவதுண்டு.  அதை முன்வைத்தே ஈழத்திலக்கியம் புலம்பல் இலக்கியமாகவே அமைகின்றது என்கிறதான அபிப்பிராயமும் கூறப்படுவதுண்டு.  போரும் போரின் தாக்கமும் அதன் நேரடி அனுபவமும் என்பது எப்போதும் தமிழகத்தவருக்கும் ஈழத்தவருக்கும் வெவ்வேறு அனுபவங்களை தரக்கூடியதாகவே இருக்கின்றது.  போரையோ அல்லது அதன் தாக்கத்தையோ நேரடியாகவோ அல்லது நெருங்கிய உறவுகளூடாகவொ சந்தித்திராத ஈழத்தவர் ஒருவரைக் காண்பது என்பதே மிக அரிதானதாகவே இருக்க, மாறாக போரை நேரடியாக – அதுவும் தமிழ் நாட்டு நிலப்பரப்பில் அனுபவித்த தமிழகத்தவர் ஒருவரைக் காண்பதென்பதே கூட மிக அரிதான ஒன்றாகவே இருக்கும்.  திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களைத் தொடர்ச்சியாக எழுதிவருகின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் அண்மையில் இரண்டாம் உலகப்போரில் வெடித்த கடைசிக் குண்டு திரைப்படம் பற்றி முகநூலில் எழுதிய குறிப்பொன்றில் “தமிழ்த் திரைக்கு இது போன்ற மையம் புதிதுதான். வரவேற்கத்தக்கதுதான். ஆனால் நவீன போர்களை, அதன் விளைவுகளை யதார்த்தத்தில் சந்திக்காத (எம்டன் குண்டு போன்ற அரிதானவற்றைத் தவிர்த்து) தமிழ் மனது இதனுடன் எளிதில் ஐக்கியமாவது கடினம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.  போரும் அதன் விளைவுகளுமே யதார்த்தமாகிப் போன வாழ்வை முப்பதாண்டுகளுக்கு மேலாக – இப்போதும் வாழ்ந்து வருகின்ற ஈழத்தவர் அவர் சொன்ன தமிழ் மனதுக்குள் இல்லை என்றே நினைக்கின்றேன்.  போரை வெறும் வீரப் பெருமிதமாகவும், வாய்ச் சவாடலாகவும் திரைப்படங்களில் வருகின்ற நாயகத்துவம் சார்ந்த ஒன்றாகவும் நினைக்கக் கூடியவர்களே போர்ப்பிரகடனம் செய்வதையும், அண்மைய காணொலி ஒன்றில் சீமான் தெரிவிப்பது போல, “எங்கள் மேல் யார் கைய வச்சாலும் போடுவம்” என்று அபத்தங்களை அள்ளி இறைப்பதையும் வழமையாகக் கொண்டிருக்கின்றார்கள்.  போரின் அழிவுகள், போர்க்குற்றங்கள்,  காணாமல் ஆக்கப்படுதல்கள், மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை என்கிற அனைத்திற்கும் அப்பால் நிற்பது ஒரு மானுட அவலம்.  போர் பற்றிய ஒவ்வொரு எழுத்துகளும், பதிவுகளும் இந்த மானுட அவலத்தையே எனக்கு நினைவூட்டுகின்றன.  போர் பற்றி நேரடியாக எழுதப்படும் ஆயிரம் சொற்களையும் விவரணங்களையும் தாண்டி உணர்வுத் தளத்தில் அவை ஏற்படும் தாக்கங்களும் தவிப்புகளுமே அந்த எழுத்துகளுக்கு நியாயம் தேடித் தருவன.  வடலி பதிப்பகம் தேவாவின் மொழியாக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற என் பெயர் விக்டோரியா என்கிற தன் வரலாற்று நூல் அந்த வகையில் மிக முக்கியமான ஒன்றாகும்.

1976 இல் ஆர்ஜண்டீனாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பின்னர் அங்கே இராணுவ ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது.  இதன்போது காணமற்போனவர்களின் தொகை கிட்டத்தட்ட 30,000 ஆக இருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.  இதன்போது சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு / கடத்தப்பட்டிருந்த கர்ப்பிணிகளுக்குப் பிறந்த கிட்டத்தட்ட 500 இற்கு மேற்பட்ட குழந்தைகள் தமது பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு இராணுவ ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான வட்டத்தினரிடம் வளர்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்டனர்.  தமது பெற்றோர் பற்றியும் உண்மையான அடையாளம் குறித்தும் எந்தவிதமான அறிவும் இல்லாமலே இந்தக் குழந்தைகள் வளர்க்கப்பட்டு வந்தார்கள்.  இந்தக் குழந்தைகளை மீட்டெடுக்கவும், அவர்களது உண்மையான பெற்றோர் குறித்த தகவல்களை உறுதிப்படுத்தவும், இந்தக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டும் என்ற நோக்குடன் பெரும்பாலும் இந்தக் குழந்தைகளின் பாட்டிமார்களால் உருவாக்கப்பட்ட சங்கம் ஒன்றும் (Grandmothers of the Plaza de Mayo) ஆர்ஜண்டீனாவின் மனித உரிமை அமைப்பான எச் ஐ ஜே ஓ எஸ் (H.I.J.O.S) என்ற அமைப்பும் போராடி வருகின்றன. 

இந்தப் போராடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே, இவ்வாறு களவாடப்பட்ட குழந்தைகளில் ஒருவரும் பின்னர் புலனாய்வுப் பத்திரிகையாளராகி இராணுவ ஆட்சிக் காலத்தில் சிறையில் இருந்தவருமான மிரியம் லெவின் என்பவர் ஆட்சிக் கவிழ்ப்புக் காலத்தில் கடற்படை முதல்நிலை அதிகாரியாக இருந்த அடொல்போ தொந்தோ இடதுசாரிகளான தனது தம்பியார் காபோ என்றழைக்கப்படும் யோசே மரியா தொந்தோவையும் அப்போது ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த அவர் மனைவி கோரி என்றழைக்கப்படும் கில்டா மரியா பெரஸ் ஆகிய இருவரையும் கடத்தி, சித்திரவதை செய்து கொலை செய்தார் என்றும் குற்றஞ்சாற்றுகின்றார்.  இவர்கள் சிறையில் இருக்கின்றபோது கோரி ஒரு மகளைப் பெற்றெடுத்தார் என்றும் அந்தக் குழந்தைக்கு விக்ரோரியா என்று பெயரிட்டார்கள் என்றும் சிறையில் அதேகாலப்பகுதியில் இருந்தவர்கள் தெரிவிக்க, அந்தக் குழந்தை இப்போது எங்கே இருக்கின்றது என்பது குறித்து தேடல்களும் ஊகங்களும் தொடர்கின்றன.  ஊடகங்களின் அவசரத்தினால் மரியேல் தொந்தோ என்கிற பெண்ணே அந்தக் குழந்தையாக இருக்கலாம் என்று செய்தி பரவலாகி மரபணுச்சோதனை செய்யப்படுகின்றது.  ஆனால் மரியேலின் மரபணுவுக்கும் காபோ, கோரியின் மரபணுக்களுக்குமான பொருத்தம் ஏற்படாமல் போகின்றது, 

ஊடகங்களைப் போன்று அவசரப்படாமல், பாட்டிமார்களின் பொறுப்புணர்வுடன்கூடிய தொடர்ந்த தேடல்களினூடாக முன்னாள் சித்திரவதைகளுக்குப் பொறுப்பாக இருந்த முன்னைய இராணுவ அதிகாரியான ரவுல் – கிறசில்லாவின் மகளாக வளர்ந்து வந்த அனலியாவே உண்மையில் பெற்றோர் கடத்தப்பட்டு சிறையில் பிறந்து, பெற்றோர் கொல்லப்பட்டபின் கைமாற்றப்பட்ட குழந்தையான விக்ரோரியா தொந்தோ என்பது உறுதிசெய்யப்படுகின்றது.  இந்தப் பூர்வ கதையுடன் அனலியாவின் கதையையும் விக்ரோரியா தொந்தா கண்டுபிடிக்கப்பட்ட கதையையும் விக்ரோரிய தொந்தா எழுதியிருக்கின்றார்.  My Name is Victoria : The extraordinary story of one woman’s struggle to reclaim her true identity என்ற பெயரில் ஆங்கிலத்திலிருந்து தேவாவின் மொழிபெயர்ப்பில் இது தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.

இராணுவப் புரட்சிக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து, தொடரும் இராணுவ சர்வாதிகார ஆட்சி, இராணுவப் புரட்சியின்போது இழைக்கப்பட்ட படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் இருந்து தமது தரப்பைக் காபந்து பண்ணுவதற்காக ஆட்சியாளர்கள் செய்த தந்திரங்கள் மற்றும் அதிகாரமீறல்கள், இவற்றுக்கெதிராகத் தொடர்ந்து முதிய பெண்கள் மற்றும் மனித உரிமைவாதிகளின் போராட்டங்களினால் வென்றெடுக்கப்பட்ட நீதி போன்றவற்றினை அங்கே வாழ்ந்த மக்களின் பின்னணியில் வைத்து எழுதப்பட்டிருப்பது என் பெயர் விக்ரோரியாவின் சிறப்பு.  ஆயினும் எனது வாசிப்பில் என் பெயர் விக்ரோரியா உயர்ந்துநிற்பதற்குத் தலையாய காரணம் அதில் வருகின்ற விக்ரோரியா, அவளின் உண்மையான அக்காவான டானியலா, விக்ரோரியாவின் தோழியாக வருகின்ற இன்னொரு விக்ரோரியா, ரவுல், காபோவின் தகப்பனாக வருகின்ற தெல்மா மற்றும் காணாமலாக்கப்பட்ட இரட்டையரான ரெகியாதோ – கொலாசா என்று அதில் வருகின்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையும் பார்வையும் தனித்துவமான அடையாளங்களும் இருக்கின்றன என்பதே.  தனது கருத்தியலை உரத்துப் பேசுவதற்காக ஒற்றைத்தன்மையாக பாத்திரங்களையே தாங்கியே அனேகமான புனைவுகள் வருகின்ற சமகாலத்தில் ஒரு தன்வரலாற்று நூல், அதிலும் நேரடியாக அரசியலைப் பேசுகின்ற ஒரு அரசியற் செயற்பாட்டாளராகவும் பாரளுமன்ற அரசியல்வாதியாகவும் உள்ள ஒருவரது தன் வரலாறானது தான் வாழ்வில் சந்தித்து தன் வாழ்வில் ஏதோ ஒரு பாதிப்பையேனும் ஏற்படுத்தியவர்களையெல்லாம் அவர்களுக்கான தனித்துவமான பார்வைகள் மற்றும் அடையாளங்களுடனேயே வெளிப்படுத்துவது முக்கியமான ஒரு விடயம்.

மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவராகவே ரவுலின் மகள் அனலியாவாக வளர்ந்துவரும் விக்ரோரியாவிற்கு தனது “வளர்ப்புத் தகப்பன்” ரவுல் போர்க்குற்றங்கள் செய்தார், தன் பெற்றோரையும் புரட்சியாளர்கள் பலரையும் கொன்ற இராணுவத் தரப்பில் முக்கியமான ஒருவராக இருந்ததுடன் சித்திரவதைகளுக்கும் பொறுப்பாக இருந்தார், இராணுவப் புரட்சியின்போது இடம்பெற்ற பல கடத்தல்களில் அவருக்கும் பங்கிருந்தது என்று தெரியவருகின்றது. அதேநேரத்தில் தனது செயற்பாடுகள் குறித்து ரவுலுக்கு நேர்மறையான பார்வையில்லாதபோதும் கூட பல சந்தர்ப்பங்களில் ஆதரவாக இருந்ததுடன் தான் முன்னெடுத்த சில சமூகசேவைகளில் ரவுலும் சேர்ந்து வேலைசெய்தது போன்றனவும் சேர்த்தே நினைவுக்கு வருகின்றன.  அரசியல் ரீதியாக தனக்கும் தனது வளர்ப்புத் தகப்பனான ரவுலுக்கு இடையில் எதிரெதிர் நிலைப்பாடு இருந்தபோதும் கூட இந்த உதவிகளை ரவுல் செய்தார் என்பதும் தனது முடிவுகளுக்கு எதிராகத் தன்னைக் கட்டாயப்படுத்தவில்லை என்பதுவுமே அனலியாவின் மனதில் இருக்கின்றது.

காணாமலாக்கப்பட்ட இரட்டையர்களான ரெகியாதோ – கொலசோ சிறுவர்களாக இருந்தபோதே அவர்களது உண்மைப் பெற்றோர் கண்டறியப்பட்டு பரகுவேயில் அவர்களை வளர்த்துவந்த பெற்றோரிடமிருந்து பிரித்து உண்மைப் பெற்றோரிடம் சேர்க்கும்படி நீதி விசாரணைகள் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் இடம்பெறுகின்றன.  கடைசியில் 1993இல் உண்மைப் பெற்றோரிடம் இரட்டையரை ஒப்படைக்கும்படி தீர்ப்பு வெளியாகின்றது.   இந்த வழக்கு நீண்டகாலம் நடந்ததாலும் கிட்டத்தட்ட 9 வயதிலிருந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளாலும் அவை பற்றிய செய்திகளைக் கேட்டுவந்ததாலும் ஏற்பட்ட அழுத்தங்களாலும் இரட்டையருக்கு  ஏற்பட்ட குழப்பத்தாலும் உண்மைப் பெற்றோருக்கு வழங்கப்பட்ட பராமரிப்பு உரிமையை நீதிபதி ரத்துச் செய்கிறார்.  இரட்டையரும் தமது வளர்ப்புப் பெற்றோருடனே தாம் வாழப்போவதாகச் சொல்கின்றனர்.  இது பாட்டிமார் சங்கம், மனித உரிமைவாதிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றது.  சர்வாதிகரிகளுக்குச் சார்பான பழமைவாத ஊடகங்களும் இந்த வழக்கையும் அதன் முடிவையும் மனித உரிமைவாதிகளுக்கும் பாட்டிமார் சங்கத்துக்கும் எதிரான பிரசாரத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.  இவைபற்றிய விவரணப்படங்களைப் பார்க்கின்ற விக்ரோரியா, ஒருவேளை தனது பெற்றோர் பற்றிய உண்மை தெரியவந்தபோது தானும் குழந்தையாக இருந்திருந்தால் எந்த முடிவை எடுத்திருப்பேனோ என்று தன்னால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை என்றே கூறுகின்றாள்.  ஆனாலும் தன் அடையாளங்களைக் கண்டடையும் விக்ரோரியா, பாட்டிமார் சங்கத்தில் காணாமலாக்கப்பட்ட தன் பேரக்குழந்தை உட்பட்ட குழந்தைகளுக்காக ஓயாது போராடிவரும் எஸ்ரெல்லாவிடம் அழுதபடி நன்றிகூறிக்கொள்வதுடன் ரவுலிங்கிற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கின்றாள்.

மூத்தமகன் இராணுவ அதிகாரிகளில் ஒருவராக இருந்து இந்தக் கடத்தல்களையும் கொலைகளையும் முன்னின்று நடத்தியவராகவும் இளையமகன் இராணுவ அடக்குமுறைக்கு எதிரான இடதுசாரிப் புரட்சிக்காரனாகவும் இருக்கின்றபோது காணாமற்போன தனது இரண்டாவது மகனுக்காக மனித உரிமைகள் சங்கத்திடம் ஐம்பது தடவைகள் மனுத்தாக்கல் செய்கின்றார் விக்ரோரியாவின் அப்பப்பா தெல்மா.  அவர் ஒருமுறை சொல்லுவார் “எனக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். மொன்ரோநேரோவாக இருந்த மகன் இறந்துபோனான்.  மற்ற மகன் ஒரு கொலையாளி.  அவனும் என்னைப்பொறுத்தவரை செத்துவிட்டான்” என்று. 

விக்ரோரியாவிற்கும் அவளது உண்மையான அக்காவான டானியலாவிற்குமான முரணும் ஒருவிதத்தில் சுவாரசியமானது.  தனது அடையாளங்களைக் கண்டடையும் விக்ரோரியா, அந்த அடையாளம் பற்றித் தொடர்ந்து தேடுகின்றாள்,  அத்துடன் ஒருவிதத்தில் அது அவளது அரசியலையும் கூர்மையாக்குகின்றது.  அவளுக்கு யாருடனும் வெறுப்பில்லை.  அடொல்போ, ரவுல், டானியலா உட்பட அனைவரையும் புரிந்துகொள்ளவே அவள் முயற்சிக்கின்றாள்.  ஆயினும் அவள் தனது அடையாளங்களுடன் நின்றே அதனைச் செய்கின்றாள்.  ஆனால் டானியலா உண்மையை நோக்கி பயணிக்கவே தயங்கிவிடுகின்றாள்; அவளது அடையாளத்தை அழிப்பதற்காக அவளுக்கு வழங்கப்பட்ட டானியலா என்ற பெயரையே அவள் தன் அடையாளமாக்கிக் கொள்கின்றாள், இடதுசாரித்துவத்துவ நிலைப்பாட்டுடன் போராடிய தனது பெற்றோரை அவள் கிரிமினல்கள் என்றே குறிப்பிடுகின்றாள். டானியலா அங்கேயே தேங்கிவிட, விக்ரோரியாவோ தன்னுடையதும் தன்னுடன் சேர்த்து அழிக்கப்பட்டவர்களதும் அடையாளத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுவதையே தன் பாதையாகக் கொள்கின்றாள்.  அரச பயங்கரவாதம், அதன் விளைவுகள், காணாமலாக்கப்பட்டவர்கள், தொடரும் ஒடுக்குமுறைகள் என்பவற்றுக்கு அப்பாலும் விக்ரோரியா நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்தும் பயணிக்கின்றாள்.  முப்பதாண்டுகளுக்கு முன்னால் கடத்தப்பட்டவர்களுக்காகவும் காணாமற்போனவர்களுக்காகவும் போராடத் தொடங்கிய பாட்டிமார் ஏந்திக்கொண்டிருந்த நம்பிக்கையே இப்போது விக்ரோரியாக்களின் கைகளுக்கு வந்திருக்கின்றது.  போரினால் பாதிக்கப்பட்டு அழிவுற்ற எந்த சமூகத்தினரும் தனித்துவிடப்பட்டவர்கள் இல்லை; என்றோ, எங்கோ, எவருக்காகவோ ஒருவர் எடுத்து வைத்த விடுதலைக்கும் உரிமைக்குமான ஓர் அடியால் தொடங்கிய உலகளாவிய பயணத்தின் எல்லைகளைக் கடந்து அவர்களுக்காக நடப்பவர்கள் இருக்கின்றார்கள். 

நதியைக் கடக்க முனைந்தவர்கள் பாட்டிமார்களும் அவர்கள் பேத்தியர் விக்ரோரியாக்களும்.

*இக்குறிப்பு ஜூலை – செப்ரம்பர் 2020 கலைமுகம் இதழில் வெளியானது

இது ஒரு வடலி பதிப்பக வெளியீடாகவும். வடலி பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ள http://vadaly.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: