ஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்

ஈழத்து இலக்கியம் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் தொடர்ச்சியாக உரையாடுகின்றபோது ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்கவேண்டி இருக்கின்றது.  குறிப்பாக ஈழத்து இலக்கியம் வளர்ச்சியை நோக்கிச் செல்வதான ஒரு கருதுகோள் அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகின்றபோது அதன் உண்மைத்தன்மை பற்றியும் குறுக்குவெட்டுத் தோற்றம் பற்றியும் அலசவேண்டியது அவசியமாகின்றது.  அப்படிப் பார்க்கின்றபோது அவற்றின் செல்நெறி, இலக்கியத் தரம், கலைத்துவம், அவற்றின் உள்ளடக்கம் தனித்துவம் என்பவற்றோடு சமகாலத்தில் இலக்கிய முயற்சிகளும் செயற்பாடுகளும் ஈழத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலும் எவ்வாறு பரவியும், வளர்ச்சியடைந்தும் இருக்கின்றன என்பதைக் குறித்துக் கவனம் செலுத்தவேண்டியதும் முக்கியமானதாகும்.  அந்த வகையில் இந்தக் கட்டுரையானது ஈழத்தின் வெவ்வேறு பிரதேசங்களதும் சமகால இலக்கியப் பங்களிப்பு எப்படி இருக்கின்றது என்பதையும் அதில் புதிதாக எழுத வந்திருப்பவர்களின் எவ்வளவு பங்கேற்கின்றார்கள் என்பது குறித்தும் ஆராய்கின்றது.

சமகால இலக்கியப் போக்குகளையும் புதிதாக எழுத வருகின்றவர்களையும் அறிந்துகொள்வதற்கு இதழ்களே அதிகம் பொருத்தமானவை என்ற புரிதலின் அடிப்படையிலே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.  முதலில் ஈழத்தில் இருந்து தற்போது வெளிவருகின்ற இலக்கிய இதழ்கள் என்று எடுத்துக்கொண்டால் ஞானம், கலைமுகம், ஜீவநதி, மறுகா, மகுடம், படிகள், புதியசொல், தளவாசல் ஆகிய இதழ்களைக் குறிப்பிடலாம்.  இவற்றில் ஏதாவது விடுபடல்கள் இருக்கலாம், எனது கவனத்தை எட்டியவை இவையே.  இவற்றில் படிகள், தளவாசல் இரண்டு இதழ்களின் பிரதிகளும் எனக்குக் கிடைக்கவில்லை, ஏனையவற்றைத் தொடர்ச்சியாக வாசித்துகொண்டிருக்கின்றேன் என்ற வகையிலேயே எனது அவதானங்களை முன்வைக்கின்றேன்.

ஈழத்து இலக்கியம் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் அது ஒற்றைத்தன்மையானதாக இருக்காது என்பது அடிப்படையான புரிதலாகும்.  ஈழத்தில் வாழும் தமிழ் பேசும் சமூகத்தினரின் இலக்கியமே ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டாலும் அவர்கள் மூன்று வெவ்வேறு தேசிய இனங்களைச் சார்ந்தவர்கள்; வெவ்வேறு மதங்களையும், பண்பாட்டு, பொருளாதார, சமூகப் பின்னணிகளையும் சார்ந்தவர்கள்; தவிர பிரதேச வேறுபாடுகளும் அவர்களின் வெளிப்பாடுகளில் தாக்கம் செலுத்துகின்றன.  இதுதவிர ஒவ்வொரு பிரிவினரும் எதிர்கொள்ளும் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளும் கூட வேறுபட்டவை.  இவற்றின் தாக்கங்களின்  காரணமாக பிரதேசங்களுக்கேற்ப தனித்துவமான இலக்கிய வெளிப்பாடுகளும் அமையும்.  இவ்வாறு பல்வகைத்தன்மையான எழுத்துகளும் படைப்பிலக்கியங்களும் ஒருவிதத்தில் ஈழத்து இலக்கியம் என்பதற்கு வலுவும் வளமும் சேர்ப்பன.  எனவே ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சி பற்றியும் செல்நெறி பற்றியும் பேச முற்படுகின்றபோது வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து வரும் இலக்கிய வெளிப்பாடுகள் எங்ஙனம் அமைகின்றன என்று நோக்குவது முக்கியமானதாகும்.  ஈழத்து இலக்கியம் என்பதை பிரதேச ரீதியாக

  1. யாழ் குடாநாடு
  2. திருகோணமலை
  3. கிளிநொச்சி மற்றும் வன்னி மாவட்டங்கள்
  4. மலையகம்
  5. கொழும்பு
  6. மட்டக்களப்பு, அம்பாறை

என்கிற பிரதேச அலகுகளாகப் பிரிக்கலாம்.  இதற்கு அப்பாலும் தென்பகுதியிலும் மேற்குக்கரையோரமாகவும் தமிழர் வாழும் பிரதேசங்கள் இருந்தாலும் அவற்றில் போதுவான இலக்கிய அசைவியக்கங்கள் நடைபெறுவதை அவதானிக்க முடிவதில்லை.

இந்தப் பிரதேச அலகுகளையும் மேலே குறிப்பிட்ட இலக்கிய இதழ்களையும் ஒப்புநோக்குவோமானால் எமக்குக் கிடைக்கின்ற முடிவுகள் அத்தனை ஆரோக்கியமானவை ஆகா.  முன்னர் குறிப்பிட்ட 8 இதழ்களில் கலைமுகம், ஜீவநதி, புதிய சொல், தளவாசல் ஆகிய 4 இதழ்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்றன.  மறுகாவும் மகுடமும் மட்டக்களப்பில் இருந்து வெளிவருகின்றன.  ஞானம் கொழும்பில் இருந்தும் படிகள் அநுராதபுரத்தில் இருந்தும் வெளிவருகின்றன.  இந்தப் பிரதேசங்களில் இருந்து வெளிவருகின்ற இதழ்கள் தத்தம் பிரதேசத்தின் தனித்துவங்களை முறையாக வெளிப்படுத்துகின்றன என்று முழுமையாகக் கூறமுடியாவிட்டாலும் இந்த இதழ்களின் ஊடாக குறித்த பிரதேசங்களின் இலக்கிய செல்நெறிகள் பற்றிய அறிதலினை ஓரளவாவது அறியமுடியும்.  அதேநேரத்தில் இந்த இதழ்களை ஒட்டுமொத்தமாக நோக்குகின்றபோது இவற்றில் எழுதுபவர்கள் குறித்தும் அவர்கள் சார்ந்த பிரதேசங்கள் குறித்தும் ஓர் அவதானத்தைச் செய்யவேண்டியது அவசியமாகின்றது.

இந்த இதழ்களை எடுத்துக்கொண்டு அவற்றில் எழுதிவருபவர்களில் இரண்டாயிரமாம் ஆண்டுக்கு பின்னர் எழுத ஆரம்பித்தவர்கள் என்று (புதிய தலைமுறையில் / புதிதாக எழுத ஆரம்பித்திருக்கின்ற இளைஞர்களினை வைத்து இந்த ஆய்வினைச் செய்வதற்காகவே 2000 என்கிற ஆண்டுப் பிரிப்பு எடுக்கப்பட்டதே அன்றி அதற்கு இலக்கிய செல்நெறியில் முக்கியத்துவம் கிடையாது என்பது உண்மையே) நோக்குவோமானால் அதில் மீளவும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும், மட்டக்களப்பு, அம்பாறையையும் சேர்ந்தவர்களைத் தவிர வேறு பிரதேசங்களில் பெரிதாக ஒருவரையும் இனங்காண முடியவில்லை என்றே கூறவேண்டும்.  குறிப்பாக திருகோணமலை, மலையகம், கொழும்பு போன்ற தனித்துவமான பண்பாட்டுப் பின்னணியும் இலக்கியத் தொடர்ச்சியும் கொண்ட பிரதேசங்களில் கூட குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எழுத்தாளர்களை இனங்காணமுடியவில்லை என்பது கவனத்திற்கொள்ளவேண்டிய அம்சமாகும்.  இன்னும் குறிப்பாக நோக்குவோமானால் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து புதிதாக எழுத வருகின்ற இளைஞர்களும் இலக்கிய அசைவியக்கங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன.  இவர்களில் பலர் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டும் உரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டுமிருக்கின்ற அதேவேளை இலக்கியச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டபடியே இருக்கின்றார்கள்.  அதேநேரம் மட்டக்களப்பையும் அம்பாறையையும் பொறுத்தவரை நிறைய புதுமுயற்சிகளையும் சீரிய தன்மைகளையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  குறிப்பாக கவிதைகளிலும் இலக்கியம் குறித்த உரையாடல்களிலும் இவர்கள் மிகவும் தீவிரமாக இயங்கிவருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  அத்துடன் தொடர்ச்சியாக வெவ்வேறு இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகள் போன்றவற்றிலும் காத்திரமான ஒரு செல்நெறியை இந்தப் பிரதேசங்களில் இருந்து அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. 

இலங்கையின் பிற பிரதேசங்களைவிட வேறுபட்ட சமூக பொருளாதார உறவுகளையும் பண்பாட்டுப் பின்னணியையும் கொண்ட மலையகம் தனக்கென தனித்துவமானதும் தொடர்ச்சியானதுமான ஒரு இலக்கிய மரபினையும் கொண்டது.   ஆயினும் அதனை வெளிப்படுத்துமளவுக்கான இலக்கிய வெளிப்பாடுகள் சமகாலத்தில் போதுமானதாக இல்லை என்றே கூறவேண்டும்.  குறிப்பாக தொண்ணூறுகள் வரை தொடர்ச்சியாக இலக்கியப் பங்களிப்பைச் செய்துகொண்டிருந்த மலையகத்தின் இலக்கிய வளர்ச்சியானது அதற்குப் பிறகு தேக்கமடைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.  எனவே அந்தத் தலைமுறையினர் தொடர்ச்சியாக இயங்கிவருகின்ற போதும் புதிய தலைமுறையினர் எவரும் இவர்களைப் போன்ற வீச்சுடன் இங்கிருந்து உருவாகாத நிலையே காணப்படுகின்றது.  மலையகத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த கொழுந்து இதழும் தற்போது வெளிவருவதில்லை என்றே அறியமுடிகின்றது.  அதே நேரத்தில் வரலாற்று ரீதியான பதிவுகள், ஆவணப்படுத்தல் முயற்சிகள், என்பன தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது ஒரு ஆரோக்கியமான சமிக்ஞையே.  இதே முயற்சிகளுடன் மலையகத்தின் இலக்கிய வளர்ச்சிக்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவது முக்கியமானது என்பதை இங்கே சுட்டிக்காட்டவேண்டி இருக்கின்றது.  மற்றும் எனக்குத் தெரிந்து பெருவிரல் போன்ற அமைப்புகள் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் கருத்தரங்களும் நிகழ்வுகளும், இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்ற காலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற “இலங்கை மலையகத் தமிழ் இலக்கியமும் கலை பண்பாட்டு வடிவங்களும்” போன்ற கருத்தரங்குகளும் ஏற்படுத்தக்கூடிய சலனம் புதியவர்களை ஊக்குவிக்கவும், சிறந்த இலக்கியச் செல்நெறி உருவாகவும் வழிசமைக்கும் என்று நம்புகின்றேன்.

கொழும்பைப் பொறுத்தவரை அங்கிருந்து ஞானம் இதழ் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றது.  ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரை இத்தகைய தொடர்ச்சித் தன்மை முக்கியத்துவம் வாய்ந்தது.    ஈழத்தைப் பொறுத்தவரை பெருநகர வாழ்வு என்கிற அம்சம் இருக்கின்ற ஒரே நகரம் என்று கொழும்பினையே குறிப்பிட முடியும்.  ஆயினும் அந்த வாழ்வு இதுவரை ஈழத்து இதழ்களில் முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.  குறிப்பாக, உலகமயமாக்கலின் தீவிரத்துக்கும் போருக்கும் பிந்தையதுமான கொழும்பு வாழ்க்கையும் கேளிக்கைகளும் களிப்புகளும் நிரம்பிய அதன் இரவு வாழ்க்கையும் இன்னும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு சரியான முறையில் அறிமுகமாவில்லை.  அதுமட்டுமல்லாமல் கொழும்பின் வறுமையும் நெருக்கமான சிறு இடங்களில் அமைந்த வாழ்விடங்களும் அது சார்ந்த பிரச்சனைகளும் கூட முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.  மேலும் கொழும்பை மையமாக வைத்து வருகின்ற ஞானம் இதழில் மட்டுமல்லாது ஈழத்தில் இருந்து வெளிவருகின்ற எந்த இதழ்களிலும் புனைவிலக்கியங்கள் எழுதுகின்ற கொழும்பினைச் சேர்ந்த இளைய தலமுறையினர் எவரையும் அடையாளம் காணமுடியவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது. 

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டங்கள் இன்னும் போரின் அழிவுகளிலிருந்து முழுமையாக மீளவில்லை.  அத்துடன் போரினால் ஏற்பட்ட இழப்புகளும் இடப்பெயர்வுகளும் அப்பிரதேசத்தின் சமூகக் கட்டமைப்பிலும் பாரிய தாக்கத்தை செலுத்தியிருக்கின்றன என்பதும் உண்மையே.  அதேநேரம் கிளிநொச்சியையும் வவுனியாவையும் மையமாக வைத்து சில இலக்கிய நகர்வுகள் இடம்பெறுவதையும் வாசிப்பிலும் எழுத்துச் செயற்பாட்டிலும் அக்கறை கொண்ட ஒரு இளையதலைமுறை உருவாகி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.  அத்துடன் இவர்களில் சிலரது ஆக்கங்களும் இதழ்களிலும் இணைய இதழ்களிலும் தொடர்ச்சியாக வெளிவரவும் ஆரம்பித்தும் இருக்கின்றன.  இது ஒருவிதத்தில் நம்பிக்கையூட்டுகின்ற சமிக்ஞையாகும்.  இவர்கள் தொடர்ச்சியாக உரையாடல்களிலும் கூட்டுச் செயற்பாடுகளிலும் ஈடுபடும்போது நேர்மறையான விளைவுகளை அது உருவாக்கும்

இந்தக் கட்டுரையில் இதழ்களே குறிப்பிடப்பட்டாலும் அதற்குஅப்பால் பத்திரிகைகளில் கவிதைகளையும் புனைவுகளையும் தொடர்ச்சியாக எழுதுகின்றவர்கள்சிலரையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  அதேநேரம் இதழ்களில் எழுதாமல் பத்திரிகைகளில்தனித்து எழுதுகின்றவர்கள் என்று எவரையும் சிறப்பாக அடையாளங் காணமுடியாமல் இருப்பதுடன்அவ்வாறு பத்திரிகைகளில் மட்டும் தனித்து எழுதுபவர்கள் அனேகமானவர்களது எழுத்துகள் இலக்கியமாகஇன்னும் வளரவில்லை என்பதையும் குறிப்பிடவேண்டியிருக்கின்றது.  இதற்கும் அப்பால் வலைப்பதிவுகளின் அறிமுகத்திற்குப்பின்னர் அச்சு ஊடகங்களை நாடாமல் இணையத்தளங்களின் ஊடாகவும் வலைப்பதிவுகளின் ஊடாகவும்மாத்திரமே தொடர்ச்சியாக எழுதுகின்றவர்களும் நிறையப் பேர் இருக்கின்றனர்.  குறிப்பாக இளந்தலைமுறையினரில் பெரும்பாலோனோர்இந்த ஊடகங்களையே கைக்கொள்ளுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறைய திரட்டிகள் இருந்தபோது அவற்றில்தமது வலைப்பதிவுகள் ஊடாக தம்மை இணைத்துப் பதிவுகளை எழுதத் தொடங்கிய பலர் இருந்தனர்.  தற்போது பெரும்பாலான திரட்டிகள் செயலிழந்துவிட்டநிலையில் (தமிழ்மணம் தவிர்ந்த ஏனைய திரட்டிகள் செயலிழந்துவிட்டதாகவேஅறியமுடிகின்றது) பலரும் இவ்வாறான இணைய இதழ்களில் தமது பங்களிப்புகளைச் செலுத்துகின்றனர்.  அண்மையில் கூட ஈழத்தில் இருந்து உவங்கள் (http://uvangal.com/),ரோர் (https://roartamil.com/) என்கிற இரண்டு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.  நானிலம்தொடர்ச்சியாக இயங்கியும் வருகின்றது. ஆயினும் இவ்வாறு ஆரம்பிக்கப்படும் இணையத்தளங்களின் ஆயுட்காலம்மிகக் குறைவானதாகவே இருக்கின்றது என்பதை ஒரு எதிர்மறை சமிக்ஞையாகக் கருதவேண்டி இருக்கின்றது.  தவிர தற்போதைய இளந்தலைமுறையினர் அதிகமாகமுகநூல் போன்ற சமூக ஊடகங்களிலேயே தமது எழுத்துகளைப் பகிர்கின்ற வழக்கம் ஒன்றினை வைத்திருக்கின்றனர்.  இது ஆழமான, தொடர்ச்சியானஉரையாடல்களையும் பரவலையும் ஏற்படுத்தாமல் வெறும் பரபரப்புகளை ஏற்படுத்துவதாக அமைவதையும்கருத்திற்கொள்ளவேண்டி இருக்கின்றது. இந்த விடயம் குறித்துத் தனியாக ஆராயவேண்டி இருப்பதனால் அதனைஇங்கே தவிர்த்துக்கொள்கின்றேன்.         

ஈழத்து இலக்கியம் என்பதை ஒற்றைத்தன்மை கொண்டதாகக் கட்டமைக்காமல் அதனைப் பல்வேறு ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்களினது வெளிப்பாடாக நோக்குவதும் பிரதேசங்களிற்கான சமூக, பொருளாதார உறவுகள் மற்றும் அரசியல் நெருக்கடிகளின் காரணமாக வெவ்வேறு வெளிப்பாட்டு முறைகளையும், வடிவங்களையும் பிரச்சனை மையங்களையும் அவை கையாள்வதையும் ஆராய்வதும் புரிந்துகொள்வதும் முக்கியமானது.  குறிப்பாக இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் இந்தப் பிரக்ஞை இருப்பது அவசியமானது.  இந்த அடிப்படையில் ஈழத்தில் தமிழர்கள் வாழுகின்ற, இலக்கிய வெளிப்பாடுகள் இருக்கவேண்டியதாக எதிர்ப்பார்க்கப்படுகின்ற வெவ்வேறு பிரதேசங்களில் இலக்கிய வெளிப்பாடுகளில் இருக்கக் கூடிய போதாமையும் அசமத்துவம் குறித்துவம் எவ்விதம் செயலாற்றுவது என்ற கேள்வி எழுகின்றது. இந்தப் பிரதேசங்களில் இலக்கிய வெளிப்பாடுகள் குறைவாக இருந்தாலும் கூட கலை இலக்கிய ஆர்வலர்களும் செயற்பாட்டாளர்களும் இருக்கவே செய்வார்கள்.  முதற்கட்டமாக அவர்களை இனங்காணவேண்டும்.  அவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களை ஏற்படுத்துவது மூலமாக ஈழத்து இலக்கியம், அதன் தனித்துவம், அதன் தொன்மை, தொடர்ச்சி மற்றும் எமது கலை, இலக்கியங்களின் வரலாறு, பண்பாட்டுப் பின்னணி என்பன தொடர்பான விழிப்புணர்வையும் பொதுத் தளத்திலான ஒத்த சிந்தனையயும் பொது வேலைத்திட்டத்தையும் உருவாக்கலாம்.  இந்தத் தொடர்புகளையும் விழிப்புணர்வையும் பிரக்ஞை பூர்வமாகப் பயன்படுத்தி அந்தந்தப் பிரதேசங்களில் உரையாடல்கள், சிறு சிறு அமைப்புகள், நூல்களின் பரிவர்த்தனைக்கான வலையமைப்பு என்பவற்றை உருவாக்கலாம்.  அடுத்து இதழாசிரியர்கள் இலக்கிய வெளிப்பாடு குறைவான பிரதேசங்களில் இருந்து ஆக்கங்களைப் பெறுவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும்.  அத்துடன் பிரதேசங்களுக்கான சிறப்பிதழ்களையோ அல்லது இதழ்களில் சிறப்புப் பக்கங்களையோ ஒதுக்கலாம்.  இதன் மூலம் அந்தப் பிரதேசங்களில் கவனக் குவிப்பு நிகழ்வதுடன் அங்கிருக்கின்ற வாசகர்களுடன் உரையாடல்களை ஏற்படுத்தவும் ஆரம்ப நிலை எழுத்தாளர்களை ஊக்கமூட்டவும் முடியும். ஜீவநதி இதழ் இந்த வகையில் திருகோணமலைச் சிறப்பிதழ், மலையகச் சிறப்பிதழ் என்பவற்றை வெளியிட்டிருப்பது முக்கியமானது. அடுத்து ஏற்கனவே இயங்கி வருகின்ற இதழ்கள் வெவ்வெறு பிரதேசங்களில் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளின் மூலமாக அப்பிரதேசங்களில் உரையாடல்களையும் கருத்தரங்குகளையும் ஒருங்கிணைக்கலாம். 

ஈழத்தைப் பொறுத்தவரை எமது இலக்கிய வரலாறு தமிழ்நாடு அளவிற்குப் பழமையானது என்றாலும் எமது இதழ்களின் தொடர்ச்சி என்பது மிகப் பலவீனமாகவே இருக்கின்றது.  தனியாக இதழ்கள் உருவாவதற்கு முன்னர் வெளிவந்த பத்திரிகைகளாக வீரகேசரியும் தினகரனும் ஈழகேசரியும் இலக்கியத்துக்கென்று விசேட கவனம் எடுத்தும் ஊக்குவித்தனர் என்பது வரலாறு.  ஆனால் கலை, இலக்கிய இதழ்கள் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 70 ஆண்டுப் பாரம்பரியத்தைக் கொண்ட ஈழத்து இதழியல் வரலாற்றில்

  • மல்லிகை – 1966 முதல் 2016 வரை 401 இதழ்களையும்
  • ஞானம் – ஜூன் 2000 முதல் செப்ரம்பர் 2017 இல் 205 இதழ்கள்
  • ஜீவநதி – ஓகஸ்ட் 2007 முதல் செப்ரம்பர் 2017 வரை 108 இதழ்கள்

என்றுவெறும் 3 இதழ்களே 100 இதழ்களுக்கு மேல்வெளிவந்துள்ளது என்று அறியமுடிகின்றது. இதழ்கள் தொடர்ச்சியாக வருவதற்கு உள்ள சவால்களில் முதன்மையானவையாகசந்தைப்படுத்தல் தொடர்பிலான பிரச்சனைகளும் பதிப்புத்துறை ஆரம்பநிலையிலேயே உள்ளதால்இதழ்களுக்கான தயாரிப்புச் செலவு மிக அதிகமாக இருப்பதுவும் அமைகின்றன.  இலக்கியச் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும்முன்னெடுத்து புலம்பெயர் நாடுகளிலும் இலங்கைக்குள்ளும் இந்தியாவிலும் வலையமைப்புகளைஉருவாக்குவதன் மூலம் இந்த இதழ்களை பரவலடையச் செய்யவும் சந்தைப்படுத்தலில் ஏற்படுகின்றதடைகளையும் நிதி நெருக்கடிகளையும் எதிர்கொள்ளவும் முடியும்.  இதற்குச் சமநேரத்தில் வெவ்வேறு பிரதேசங்களில்இருந்தும் புதிய தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவித்தும் உள்வாங்கியும் தொடர்ச்சியாக ஒப்பீட்டுஆய்வுகளையும் விமர்சனங்களையும் உரையாடல்களையும் உருவாக்கவேண்டும்.  ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்பது படைப்பிலக்கியவளர்ச்சி, விமர்சனத்துறையின் வளர்ச்சி, இதழியல்துறையின் வளர்ச்சி என்பவற்றுடன் வெவ்வேறு பிரதேசங்களைச் சார்ந்ததும் பல்வகைத்தன்மைஉடையதுமான படைப்பிலக்கியங்களினதும் விமர்சகர்களதும் வருகையிலுமே தங்கியிருக்கின்றதுஎன்ற தெளிவும் அதை ஈடேற்றுகின்ற தொலைநோக்குப் பார்வையுமே ஈழத்து இலக்கியத்தை உயிர்ப்புடனும்செழிப்புடனும் வளர்க்கும்.

கூர் 5வது இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை.  

தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்

Saththiyan

ஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை.  குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.  ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது.  இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன.  இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும் பொறிமுறைகளையும் நாம் கண்டடையவேண்டி இருப்பதுடன் பரவலாக ஈழத்து இலக்கியத்தின் வரலாற்றைப் பற்றிய ஆய்வுகளைச் செய்வதற்கான மூலங்களை தொகுப்பதும், கண்டுபிடிப்பதும், மீள் பதிப்பாக்கம் செய்வதும், ஆவணப்படுத்துவதும் இருக்கின்றது.  Continue reading “தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்”

ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு

Ulakam Palavitam Cover

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன.  கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். Continue reading “ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு”

ஞாயிறு இதழ்

ஞாயிறு“ஈழத்தின் தமிழ் வளர்ச்சிக்கு ஆறுமுக நாவலர் செய்த தொண்டை சிற்பத்துக்கு ஸ்ரீ நவரத்தினம் செய்துள்ளார்” என்று எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கியால் விதந்து கூறப்பட்டவர் கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள்.  1898 இல் இலங்கையின் வடபுலத்தில் உள்ள வண்ணார்பண்ணை என்கிற கிராமத்தில் பிறந்த இவர் இலங்கை, இந்தியாவின் கலைகள், சிற்பங்கள் குறித்தும் சமயவியலிலும் குறிப்பாக சைவசித்தாந்தத்திலும் முக்கியமான நூல்களை எழுதியவர்.  இவர் எழுதி 1941இல் வெளியான “தென்னிந்திய சிற்பக் கலைகள் என்கிற நூலே தமிழில் சிற்பக்கலைகள் குறித்து வெளியான முதலாவது விமர்சன நூல் என்று கருதப்படுகின்றது.  இந்நூலைப்பற்றி கல்கி கூறும்போதே Continue reading “ஞாயிறு இதழ்”

ஈழத்தின் முதல் தலைமுறைப் பெண்படைப்பாளி பவானி ஆழ்வாப்பிள்ளை

bavani-2ஈழத்தின் மூத்த, முதல் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான பவானி ஆழ்வாப்பிள்ளை, அறுபதுகளில் எழுத ஆரம்பித்தவர்.  ஈழத்தில் பெண்ணிய நோக்கிலான கருத்துகளை தனது படைப்புகளினூடாக வெளிப்படுத்திய முதல் பெண் எழுத்தாளர் இவரே என்று ஈழத்துச் சிறுகதை வரலாறு நூலில் செங்கை ஆழியான் குறிப்பிடுகின்றார்.  ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற அளவெட்டிக்கிராமத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார்.  1958/59 ஆம் ஆண்டுக்குரிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின் இதழாக “இளங்கதிரில்” இவரது அர்ப்பணம் என்கிற சிறுகதை “மதிற்பிற்குரியது, நூற்பரிசு பெற்றது” என்கிற சிறுகுறிப்புடன் வெளியாகியிருக்கின்றது.  அவர் அக்காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது எழுதிய கதையாக இது இருக்கலாம்.  Continue reading “ஈழத்தின் முதல் தலைமுறைப் பெண்படைப்பாளி பவானி ஆழ்வாப்பிள்ளை”