கக்கூஸ் ஆவணப்படம் – உரையாடலுக்கான குறிப்பு

kakkoosஇந்த ஆவணப்படத்தினை முன்வைத்து சில விடயங்களை முக்கியமாகக் கவனப்படுத்தவேண்டும் என்று கருதுகின்றேன்.  இந்த ஆவணப்படமானது இந்தியச் சூழலை (தமிழ்நாட்டுச் சூழலை) மையமாக வைத்து உரையாடலை முன்வைக்கின்றது.  இதனைப் பார்க்கின்ற நாம் இந்தியச் சூழலில் மலம் அள்ளும் தொழிலாளர் மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள் என்கிற புரிதலோடு என்று படம் பார்ப்பதாகக் கடந்துபோய்விடக் கூடாது,  நாம் இவற்றை, இலங்கைச் சூழலிலும், புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்ற வகையில் கனடியச் சூழலிலும் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்.  இது நமக்குப் புறம்பான பிரச்சனை அல்ல, இது வெவ்வேறு வடிவங்களில் ஈழத்துச்சூழலிலும், புலம்பெயர் நாடுகளிலும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒடுக்குமுறை.  இந்த ஆவணப்படம் முக்கியமாக 4 விடயங்களைக் குறிப்பிடுகின்றது. அவையாவன Continue reading “கக்கூஸ் ஆவணப்படம் – உரையாடலுக்கான குறிப்பு”

தற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிராக நீங்களும் நாங்களுமாய்

தற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிரான
கருத்துரைப்பும் கலந்துரையாடலும்
Gay/Lesbian/Trans-gender ற்கு எதிரான பல்வேறு வகையான கருத்துக்கள் இயல்பாக்கப்படுவதும் (Normalizing Discourses), அவர்களது தெரிவுசார் உரிமைகள் மறுக்கப்படுவதும், சமூகத்தின் அங்கத்தவர்களாக அவர்களது இருப்பு தொடர்ந்தும் ஒடுக்கப்படுவதும் தமிழ்ச்சமூகத்தில் நீண்டகாலமாக நிலவிவருகிறது. பரவலான இக்காழ்ப்புணர்வுக்கு எதிராக எமது எதிர்க்குரல்களைப் பதிவு செய்தல் அவசியமாகின்ற இந்தவேளையில்….
பொது ஊடகங்கள் சிலவும் இக்காழ்ப்புணர்வு முழுத் தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ற பிரமையை ஏற்படுத்த முயல்கின்றன. ஊடகங்கள் தம் விழுமியங்களைத் தவறுவதைச் சுட்டிக்காட்டவும், எமது தன்னிலையை சுயவிமர்சனம் செய்யவும், விளிம்புநிலையாக்கம் (Process of Marginalization) குறித்தான விவாதங்களை மேற்கொள்ளவும்….
நாங்களும் நீங்களுமாய் ஓர் உரையாடலுக்கான பொதுக்களத்தில் சந்திப்போம்
Where: Scarborough Civic Centre
150 Borough Road
(McCowan & Ellesmere)
When: Friday, November 19, 2010
At 6.00 PM
Friends Aganinst Homophobia
416 725 4862 / 647 829 9230/ 416 841 6810 / 647 216 6496
email: friendsagainsthomophobia@gmail.com

அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் – பாகம் 2

 

அத்தினாபுரத்துப் பெண்களும், பாரதம் பேசும் கதைகளும் என்று தேவகாந்தனின் கதாகாலத்தை முன்வைத்து சென்ற வாரம் எழுதிய பதிவிலே என்னை அறியாமலே பெருந்தவறொன்றை செய்துவிட்டேன். கதாகாலம் என்பதற்குப் பதிலாக அசிரத்தையால் மூன்று இடங்களில் கதாவிலாசம் என்று இடம்பெற்றுவிட்டது. வாசித்தவர்கள் கூட இதுபற்றி தெரிவிக்கவில்லை. கடைசியில் தேவகாந்தனே இதை சுட்டிக்காட்டும்படி ஆகிவிட்டது. அக்கறை இன்மையால் இடம்பெற்ற மிகப்பெரும் தவறு இது. இது போன்ற தவறுகள் இனியும் இடம்பெறக்கூடாது என்று உறுதியும், எழுத்தாளர் தேவகாந்தனிடம் மன்னிப்பும் கேட்டபடி இந்த பகுதிக்குள் புகுகின்றேன்.

அம்பை

அம்பை, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று சகோதரிகளின் தந்தையான காசிராஜன் தன் பிள்ளைகளுக்கு நடத்திய சுயம்வரத்தில் அழைப்பின்றிப் போய் மூன்று பெண்களையும் கவர்ந்துவருகின்றான் பீஷ்மன். அந்த நேரம் அம்பை பிரம்மத்தன் என்ற பிறிதொரு மன்னன் மேல் தான் கொண்ட காதல் பற்றி சொல்ல பீஷ்மனும் அவளை பிரம்மத்தத்தனிடம் அனுப்பி வைக்கின்றான். பிறிதொருவனால் கவர்ந்து செல்லப்பட்ட பெண்ணை தன்னால் மணுமுடிக்க முடியாதென்று அவன் அவளை திருப்பி அனுப்ப தன் பிறந்த தேசம் செல்கிறாள் அம்பை. பீஷ்மனால் கவர்ந்து செல்லப்பட்ட அவள் இனி பீஷ்மனுடன் இருப்பதே முறை என்று அவள் தந்தை காசிராஜனும் திருப்பி அனுப்ப தன்னை ஏற்குமாறு பீஷ்மனிடம் வேண்டுகிறாள் அம்பை. ஏற்கனவே தான் தன் சிற்றன்னைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை (பிரம்மசாரிய விரதம்) சுட்டிக்காட்டி அவளை ஏற்க மறுக்கிறான் தெரிந்தோ தெரியாமலோ தன் செயலால் ஒரு பெண்ணின் வாழ்வு நிர்மூலமானால் கூட பரவாயில்லை, தான் சத்தியம் காக்கவேண்டும் என்பது தான் பீஷ்மனின் புத்தியாக இருந்தது. (இத்தனை அறம் காத்த பீஷ்மர் தான் பின்னர் துரியோதனின் அவையிலே திரௌபதி துகிலுரியப்பட்ட போது அமைதி காக்கிறார்.). இதன் பின் தான் இந்த நிலைக்கு வர காரணமான பீஷ்மனை வெல்வேன் என்று சபதமிட்டு வனமேகி, கடுமையான பயிற்சிகள் மூலம் பெண்தன்மை இழந்து ஆண்தன்மை உடலில் ஏற்றி யதுசேன மன்னனிடம் அடைக்கலம் பெற்று சிகண்டி என்ற பெயரில் உறுமீன் வரக் காத்திருகிறாள் அம்பை. சென்ற பதிவில் நான் சொன்னது போல பாரதக் கதையின் தனக்கு இழைக்கப்பட்ட் கொடுமகைகளுக்கெதிரான பலவீனமான எதிர்க்குரலாக காந்தாரி தன் கண்கள் மறைத்ததை சொன்னென். அதன் தொடர்ச்சியாக அதே கொடுமைகளுக்கெதிரான பலமான எதிர்க்குரலாக அம்பையே தெரிகிறாள். (திரௌபதியை இதில் எதிர்க்குரலாக சொல்லவே முடியாது அவள் தனக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை தன் கணவர்கள் மூலமாக பழிவாங்கிய, சராசரி தமிழ் திரைப்பட கதாநாயகி போன்றவளே). இங்கு மூலக் கதையில் அம்பை தவமிருந்து பீஷ்மனை கொல்ல வரமும், ஆணாக மாற வரமும் பெற்றதாய் சொல்ல தேவகாந்தன் ”அம்பை, தபோ கிருத்தியங்களாலும் அசுர அஸ்திர சாதகங்களாலும் தன் பெண் தன்மையையே அழித்தாள். மிருதுவான மேனி வன்மை கண்டது…………………………………பெண்ணின் மாறா அவயத்துடன் ஆணாய் ஓர் அபூர்வ அடைதல் – பக் 11” என்று நடைமுறை யதார்த்தத்துடன் கூறுகிறார். அதுபோல போரிலே சிகண்டி பீஷ்மன் மீது அம்பு தொடுக்க தொடங்க அவள் அடிப்படையில் ஒரு பெண் என்பதால் அவளுடன் போரிடல் (அக்கால வழக்கப்படி) முறையில்லை என்பதால் சும்மாயிருந்த பீஷ்மர் மீது அம்பெய்து சிகண்டி கொண்டான் என்று மூலத்தில் சொல்லப்பட கதாகாலம் “சிகண்டியின் அம்புகள் காற்றைத் துளைக்கத் துவங்கின. சிகண்டிக்குள் அம்பையை கண்டிருப்பார் பீஷ்மர். நெஞ்சுக்குள் ஒரு மூலையில் இருந்த வலி மறு படி எழுந்திருக்கும்” என்று குற்ற உணர்ச்சியின் கைதியாய் பீஷ்மர் இருந்தபோதே கொல்லப்பட்டதாய் சொல்லும்.

சகாதேவன்

பாண்டவ புத்திரர்களில் பிறவி ஞானி என்று அழைக்கப்படுபவன். பெரியன்னை குந்தியின் தூற்றல்களாலே தாய் மாத்ரி உடன் கட்டை ஏறுவதன் சாட்சியாக இருந்த சோகம் கைகூடியவன். அந்த சோகமும், குந்தி மேல் இயல்பாக ஏற்பட்ட வெறுப்பினால் ஏற்பட்ட தனிமை உணர்வுமே அவனை ஞானியாக்கிற்று என்று கதாகாலம் சொல்வதை மறுக்கமுடியவில்லை. இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால் ஞானியான சகாதேவனே ஒரு இடத்தில், ஐவருக்கும் சம உரிமையாக பங்கிடப்பட்ட திரௌபதியிடன் தனக்கான உரிமைகள் குறைவாக இருந்ததாக வருந்துகிறான். அஞ்ஞாத வாசம் முடிந்த பின்னர் திரௌபதியும் சகாதேவனும் சந்திக்கும் பகுதி ஒன்றை இலங்கையின் கிழக்குமாகாண நவீன கதை சொல்லி சொல்வதாக கூத்து வடிவிலே சொல்கிறார் தேவகாந்தன். துரியோதன் ரகசியமாக சகாதேவனை சந்தித்ததையிட்டு திரௌபதி சகாதேவன் மேல் சந்தேகம் கொல்லும்போதும் பின்னர் தன் தாயிழந்த துயரை ஒரு மகளை ஈன்றிருப்பின் அவள் வடிவிலே சிறிதேனும் மறந்திருப்பேன் என்று சகாதேவன் சொல்லும்போதும் சக மனிதர்களுக்கேயான குணவியல்புகள் நிறைந்த கதாபாத்திரங்களாகவே அவர்களை காணமுடிகின்றது.

இதைவிட முக்கியமாக விராட நாட்டிலே அஞ்ஞாத வாசம் முடியும் முன்னரே அர்ச்சுணன் வெளிப்பட்டான் என்று அறிந்தும் திரௌபதிக்காக அதை சகாதேவன் மறைக்கிறான். அதை தொடர்ந்தே இந்த சந்திப்பில் சகாதேவனை விட்டு விலகியே இருந்த திரௌபதி அவனுடன் கூடுகிறாள். இதை சகாதேவன் “அர்ச்சுணன் வெளிப்பாட்டில் காலக் குறைபாட்டை / நான் மடுத்துக் கட்டுதற்கே / தன்னை எனக்குத் தந்தாளென்று / எனக்குத் தெரியாதோ”என்கிறான். பாரதப் போர் நடந்து தன் சபதம் நிறைவேற வேண்டும் என்பதில் திரௌபதி எவ்வளவு உறுதியாக இருந்தாள் என்றும் இந்த அத்தியாயம் உறுதிப்படுத்துகின்றது.

தருமன் / யுதிஷ்டிரன்.

பாரதக் கதையை வாசிக்க தொடங்கிய நட்களில் இருந்து என்னுள்ளே அதிகளவு கேள்விகளை எழுப்பிய கதா பாத்திரம் தருமனின் கதாபாத்திரம். பாண்டவர்கள் ஐவருள்ளும் தருமன் தவிர ஏனைய நால்வரும் தமக்கேயுரிய தனித்திறன்களை கொண்டவர்கள். அர்ச்சுணன், பீமன் போன்றோர் பலவீனங்களையும் கொண்டவர்கள். ஆனால் தர்மனைப் பொறுத்தவரை அவன் தனித்திறன் என்று எதையுமே கொண்டிருக்கவில்லை. ஆனால் அவன் பலவீனமான சூதாட்டம் குருக்ஷேத்திரப் போருக்கே காரணமானது. இங்கு முக்கியமாக காணாவேண்டிய விடயம், அர்ச்சுணனும் பீமனும் தத்தம் பலவீனங்களால் வந்த எல்லா துன்பங்களையும் தாமாகவே எதிர்கொள்ள தர்மன், தான் சூதாடி தோற்றபோது தன் தோல்வியின் பங்காளிகளாக தன் தம்பியரையும், திரௌபதியையும் ஆக்கிக்கொண்டான். பாரதப் போர் நடந்தபோது கூட போர்க்களத்தில் தர்மனின் வெற்றியாக எதையும் பதிவாக்கப்படவில்லை. ஒரு தலைவனாக அவன் போரைக் கொண்டு நடத்தக்கூட இல்லை. பாரதப் போரில் அவன் பெயர் இடம்பெறுவது அவன் சொன்ன “அஸ்வத்தாம ஹத” என்பதுவே. கதாகாலத்தில் இந்தக் கட்டத்தை சொல்லும் கதை சொல்லி “இதுவரை யுதிஷ்டிரன் என்று அழைத்தவன், தர்மம் தவறியதின் குறியீடாக இனி அவன் தர்மன் என்றழைப்பேன்” என்கிறான். தர்மன் தர்மம் காத்து வாழ்ந்தான் என்பதைவிட, தன் பக்க பலங்களை சரியாக பாவித்து தன்னை வளாமாக்கிக் கொண்டான் என்பதே பொறுத்தமாக இருக்கும். தன் திறன் பாவித்து தான் வென்ற திரௌபதி மீது தன்னால் முழுமையான ஆளுமை செலுத்தப்படாமல் போனதே அர்ச்சுணன் கட்டுக்கடங்கா காமம் கொண்டலையக் காரணம் என்றும், குருக்ஷேத்திரப் போர் முடிவடைந்த பின்னர் பட்டத்து ராணியாக தர்மனுக்கே அதிகம் உரித்துடையவளாக திரௌபதி மாற பீமன் கூட தர்மனிடம் கோபம் கொண்டான் என்றும் கதாகாலத்தில் கட்டுடைக்கப்படும்போது மறுக்க முடியாமல்தான் இருக்கின்றது.

அசுவத்தாமன்

வழி வழியாக வந்த பெரும்பாலான கதைகளில் அசுவத்தாமனை மரணமற்றவன் என்று சொல்வர். ஆனால் தேவகாந்தனின் கதாகலத்தில் அஸ்வத்தாமன் தீராப்பழியின் நினைவாக சொல்லப்படுகின்றான். உப பாண்டவர்களை கொன்றதிலும், இறுதியில் அர்ச்சுணன் மீது அவன் எய்த அம்பு, நதிக்கரையில் பிதிர்க்கடன் செய்துகொண்டிருந்த அபிமன்யுவின் மனைவியைத் தாக்கியதாலும், எத்தனையோ அறங்களைக் காத்தவனும், ஆற்றல் மிகுந்தவனுமாகிய அஸ்வத்தாமன், ஒரு பழியின் நினைவாகவே காலமெல்லாம் நினைக்கப்படுவான் என்கிறது கதாகாலம்.

“அஸ்வத்தாமனின் நினைவே அவன் ஜீவன், அவன் மரணமற்றிருந்த முறைமை அதுதான். அவன் தீராப் பழியின் நினைவு-பக்கம் 144”

கதாகாலத்தின் இன்னும் சில அம்சங்கள்

பாரதம் என்கிற அமானுஷ்யத்தன்மை அதிகம் பொருந்திய, நடைமுறைக்கு பெரிதும் ஒவ்வாத இதிகாசத்தை ஒரு நாவல் வடிவில் நடைமுறையுடன் ஒத்த, முன்னொரு காலத்தில் நடந்தது என்று சொல்லக்கூடியதாக கதாகாலம் அமைகின்றது. இந்த இடத்தில் திரௌபதி துகிலுருவுதல் பற்றி தேவகாந்தன் சொல்வது ஒரு பொறிமுறை சார்ந்த விளக்கமாக இருந்தாலும் மிகுந்த சுவாரஸ்யமானதாகவே இருக்கின்றது.

“”துச்சாதன் அவளாது ஆடையை இழுத்தான். நிலையில் பெயராது நின்று அவள் சுழன்றாள். அவிழ்ந்து நிலம் புரண்டு கிடந்த அவள் கூந்தல் மேலிருந்து கீழ்ப் புரியாய்ச் சுற்றி அவள் அவயங்களை மறைத்து வந்தது. அவமானத்தைச் செறிவாய் இறக்க வெறீபிடித்து நின்ற துச்சாதனன் துகிலை விட்டு அவள் கூந்தலை இழுத்தான். கீழிருந்து மேற்புரியாய் துகில் அவளது நிர்வாணம் மறையச் சுற்றியது. திரும்ப அவன் துகில் பற்றி இழுக்க கூந்தலும், கூந்தல் பற்றி இழுக்க துகிலும் அவள் செந்நிற மேனி யார் கண்ணும் காணாது மறைத்துவர, மௌனித்த சபை சலசலக்கத் துவங்கியது. அமானுஷ்யமொன்றின் செயற்பாடாய் அதைக் கணித்து அச்சமடைய ஆரம்பித்தது. ……………………………………….துச்சாதன் களைத்து வீழ்ந்த்தான். அனைவர் மனதிலும் துரோபதி “தெய்வமே” என்று கூவிய சொல் ஒரு உருவமாய் நின்றிருந்தது………..பக்-85.”

-2-

உண்மையில் தேவகாந்தனின் கதாகாலம் தவிர்த்து உபபாண்டவம் என்ற எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகமும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் மகாபாரதத்தின் மறுவாசிப்பாக வெளியானது. ஆனால் உபபாண்டவம் பெற்ற கவனிப்பு அளவு கதாகாலம் கவனிக்கப்படவேயில்லை. இத்தனைக்கும் உபபாண்டவத்துக்கு எந்த அளவிலும் குறைவில்லாதது கதாகாலம். ஈழத் தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமான எழுத்தாளார்களில் ஒருவராக அடையாளம் காணப்படவேண்டிய தேவகாந்தனின் எத்தனையோ புத்தகங்களை ஈழத்தமிழ் வாசகர்களே வாசித்தது கிடையாது என்றறியும்போது ஈழத் தமிழினம் என்றொன்று இருந்தது என்பதே வரலாற்றில் மறக்கப்பட்டுவிடும் என்றுதான் தோன்றுகின்றது. எம்மவர் எழுத்துக்களை நாமே படிக்காததால்தான் ஜெயமோகன் போன்ற சிலர், ஈழத்தமிழ் எழுத்துக்களே தட்டையானவை, ஒரு வட்டத்துள் உழல்பவை என்றெல்லாம் உதறித் தள்ள, புலம்பெயர் நாடுகளில் உள்ள அவர் ரசிகர்கள் சொல்லும் சில நியாயங்களையும் கேட்டுக்கொண்டு அதை சகிக்குமாறு நாமும் சபிக்கப்பட்டிருக்கின்றோம்.

இருள்-யாழி : திருமாவளவனுடன் ஒரு இலக்கிய சந்திப்பு


கவிஞர் திருமாவளவனுடனான எனது அறிமுகம் சென்ற ஆண்டு நடந்த குறுந்திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் நடந்தது. வழமை போல காலம் செல்வம் அறிமுகம் செய்து வைத்தார். அப்
போது அவரைப் பற்றி எனக்கு பெரிதாக தெரிந்திருக்கவில்லை. அதன் பின்னர் அவர் நடத்திய வலைத்தளத்திலும் இணையத்திலுமாக அவரது சில கவிதைகளை ரசித்திருக்கின்றேன். பின்னர் நண்பர்களுடனான உரையாடலின்போது அவர் “உயிர் நிழல்” கலைச்செல்வனின் சகோதரர் என்று அறிந்தேன். புலம் பெயர் சூழலில் கலைச்செல்வன் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் ஆதரவு தந்தவர் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இதே நேரம் திருமாவளவன் ஏற்கனவே எழுதிய “பனி வயல் உழவு”, ”அதே இரவு, அதே பகல்” தொகுதிகளும் ஓரளவு கவனிப்பை பெற்றிருக்கின்றன. பொதுவாக ஈழத்து எழுத்தாளர்கள் புலம் பெயர்ந்து எழுதும் கவிதைகளில் தத்தமது அரசியல் நிலைப்படுகள் பற்றிய தொனிகளோ அல்லது ஈழம் பற்றிய நனவிடை தோய்தல்களோ கருப்பொருள்களாக இருப்பது வழக்கம். ஆனால் திருமாவளவனின் எழுத்துக்களில் புலம் பெயர் வாழ்வென்பதே பெரிதும் கருப்பொருளாக இருக்கின்றது. நமக்கான கதையை நாமே எழுதுவோம் என்ற வாதம் வலுப்பெற்றுவரும் இந்நாட்களில், புலம்பெயர்ந்தவர்களின் கதைகளை, வாழ்வை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, சாதனைகளையும் அவர்களே எழுதவேண்டும் என்றே நினைக்கின்றேன். அந்த வகையில் திருமாவளாவன் ஒரு முக்கியமான படைப்பாளி என்றே சொல்வேன்.

சென்ற ஆண்டிறுதியில் அவரது மூன்றாவது தொகுப்பாக “இருள் – யாழி” என்ற கவிதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது. இதில் பெரும்பாலும் 2004 முதல் 2008 வரை அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நண்பர்களுக்கிடையேயான இந்நூல் குறித்த ஒரு சந்திப்பு மே 30ம் திகதி அவரது வீட்டிலேயே இடம்பெற்றது. ஏற்கனவே இயல் விருது நிகழ்வுகளுக்காக வந்திருந்த மௌனகுரு, சித்ரலேகா, அம்பை போன்றவர்களும் கனடா வாழ் முக்கியமான இலக்கிய நண்பர்களும் சந்தித்துக்கொண்டனர்.


நிகழ்வின் சில துளிகள்


  • விழாவிற்கு வந்தவர்கள் அனைவருக்குமே அவரது “இருள் -யாழி” புத்தகப் பிரதி வழங்கப்பட்டது. அதன் பின்னரே புத்தகம் குறித்த விவாதங்கள் ஆரம்பித்தன. எல்லா விழாக்களிலும் முன் மாதிரியாய செய்யவேண்டிய ஒரு விடயம் இது. இதனால் கவிதைகள் வாசிக்கப்படும்போது அந்த வாசிப்பில் எல்லாரும் கலந்து கொள்ளுவது சாத்தியமாகின்றது.


  • கவிஞர் சேரன் பேசும்போது, இருள் யாழி என்று வைக்கப்பட்ட பெயர் எமது இன்றைய சூழலுக்கு பொருத்தமாக உள்ளது என்று சொன்னார். யாழி என்பது சீனாவின் சின்னமான ட்ராகனுக்குரிய தமிழ்ப் பெயர். இலங்கையில் நடந்த இன அழிப்பில் சீனா பெரிதளவு பங்கேற்றது தெரிந்ததே.


  • மே 17, 18ல் நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக மாற்றுக்கருத்தாளர்கள், தீவிர புலி ஆதரவாளார்கள், நடு நிலையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், அப்படி தம்மை சொல்லிக் கொண்டிருந்தோர் என்று எல்லாத் தரப்பிலும் கனத்த மௌனமே வெளிப்படுவதை குறிப்பிட்ட அவர், இரண்டாம் உலகப் போர் நடைபெற்று முடிவுற்ற காலத்திலும் இப்படியான ஒரு நிலை நடைபெற்றதாயும், அந்நாளைய பெரும் கவிஞர் ஒருவர் ”இனி கவிதைழுதப் படக்கூடிய மனநிலை ஒருவருக்கும் கிடைக்கப் போவதில்லை” என்று சொன்னதையும் சுட்டிக்காட்டினார். இதை ஒட்டிப் பேசிய சக்கரவர்த்தி 20 பேர், 30 பேர் சாகும் போதெல்லாம் தான் கவிதை வந்தது, 20,இரு000 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள் என்ற போது கவிதை வராது. அழுகைதான் வரும் என்றார். அதே நேரம் சுமதி ரூபன், இது ஒரு அதிர்ச்சி தரும் மௌனமே என்றும், இனி வரும் நாட்களில் இது பற்றி நிறைய எழுத்துக்கள் உருவாகும் என்றும் கூறினார்.


  • சேரன் என்ற ஆளுமை மீது எனக்கு நீண்ட காலமாகவே பெரு மதிப்பிருந்தது. அவர் பற்றி இங்கிருக்கும் இன்னொரு இலக்கியப் பிரபலமிடம் கேட்டபோது சேரன் பழகுவதற்கு மிகக் கடினமான கோபக்காரன் என்று சொல்லியிருந்தார். அவர் எழுதிய “உயிர் கொல்லும் வார்த்தைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பில் கோபம் தெறிக்கும் அந்த தொனி எனக்கும் மிகப் பிடித்திருந்தது. அந்நாட்களில் கனடாவில் தமிழ் குழுக்களிடையே தொடர்ந்து நிகழ்ந்த மோதல்கள் பற்றி கோபமாக அவர் எழுதிய “கையில் பியர் போத்தலும், பேஸ் போல் பட்டுமாய் கொடிகட்டிப் பறக்கிறது மறத்தமிழ் வீரம்” என்ற வரிகள் எனது உணர்வுகளாகவே இருந்தன. இந்த நிகழ்வில் கூட பல இடங்களில் அவர் பட்ட கோபங்களுடன் உடன்பட முடியாவிட்டாலும் ரசிக்கவே செய்தேன்.
  • இது போல அன்று நான அதிகம் ரசித்த இன்னொருவர் சக்கரவர்த்தி. இவர் மிகப் பெரும் கலகக்காரர் என்ற விம்பம் எனக்கு நெடு நாளாக இருந்தாலும் அவருடன் முதன் முதலில் அறிமுகமானது அன்றுதான். முன்பொருமுறை முரசொலிக்கு எழுதிய கடிதத்திலும், பின்னர் வைரமுத்து கனடா வந்த போது கவியரங்கில் இவர் வாசித்த கவிதையாலும் பெரும் சலனத்தை ஏற்படுத்தியவர் இவர். அது போல வைகறையில் இவர் எழுதிய கட்டுரைகளும் என்னை கவர்ந்திருந்தன. அன்று நடந்த விவாதங்களிலும் அவரது கலகக் குரல் ஓங்கியே ஒலித்தது. சேரன் சொன்ன இருள்-யாழிக்கான பெயர் விளக்கத்தை தவிர்த்து இவர் சொன்ன விளக்கமும், யாழ்ப்பாண மையவாதம் பற்றிய கருத்தும் என்னைப் பொறுத்தவரை கசப்பான நிஜங்களே. கசப்பை விரும்புபவர்கள் குறைவென்பதாலோ என்னவோ அந்த விவாதம் கூட இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. புத்தகமாக வந்திருக்கும் அவரது ஆக்கங்களை இன்னும் வாசிக்கவில்லை என்றாலும் வாசிக்கும் ஆர்வம் அதிகம் உயர்ந்திருக்கின்றதே என்றே சொல்ல வேண்டும்.
  • அம்பை பேசியபோது தான் சிறு வயதில் கவிதை எழுத முயன்று தோற்றதாயும் அதனால் தனக்கு மோசமான கவிதைகள் எப்படி இருக்கும் என்று தெரியும் என்று அடக்கத்துடன் தொடங்கியவர் பெண் கவிஞர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களை பற்றி அதிகம் பேசினார். அது போல ஈழத்துக் கவிஞர்கள் , அரசியல்கள், தற்போதைய நிலை என்பன பற்றிய பேச்சுகள் எழுத்தபோது ஆர்வமாகவும் பொறுமையாகவும் கேட்டறிந்துகொண்டார். தனக்கு எல்லாம் தெரியும் என்று முட்டாள்த்தனமாக உளறிக்கொட்டாமல் அவர் ந்டந்து கொண்ட விதம் அவர் மீதான மதிப்பை அதிகரிக்க செய்தது.


  • காலம் – ஜூன் 2009 இதழ் பற்றிய தன்னுடைய வருத்தத்தை திருமாவளவன் பகிர்ந்து கொண்டபோது, மீண்டும் காலம் பற்றி வழமையாக முன் வைக்கப்படும் விமர்சனங்கள் எழுந்தன. உண்மையில் முன்னைய காலம் இதழ்களுடன் ஒப்பிடும்போது இம்முறை மிக அதிகமான அளவு இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வந்திருந்தும் அது பற்றி யாரும் குறிப்பிடாமல் தொடர்ச்சியான குற்றச் சாட்டுகளையே சொன்னது சரியாகப்படவில்லை. அது மட்டுமல்லாமல் கனடா போன்ற ஒரு வறண்ட இலக்கிய வாசகர்கள் உள்ள (200, 000க்கு அதிகமான ஈழத்தமிழர்கள் வசிக்கும் டொரண்டோவில் நட்க்கும் எந்த இலக்கிய நிகழ்வுக்கும் 100 பேர் கூட வருவது கிடையாது.) மோசமான சூழலில் ஒரு இலக்கிய இதழை தொடர்ந்து கொண்டு வருவதிலும் சந்தைப்படுத்துவதிலும் உள்ள சிக்கல்களை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஏற்கனவே இலக்கிய விடயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வெளியான வைகறை வார இதழ் கூட நின்று விட்ட நிலையில் எமக்கிருக்கும் ஒரே ஆறுதல் காலம்தான் என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


  • நிகழ்வு முடிந்து திரும்பும் போது அதிகம் பாராட்டிக் கொண்ட விடயம் திருமாவளாவனினதும், அவரது குடும்பத்தாரதும் விருந்தோம்பல்தான். தொடர்ச்சியாக எல்லாரையும் அக்கறையுடன் உபசரித்த அவரது மனைவி, மகன், மகளுக்கும், புறப்பட்ட எம்மை தடுத்து இரவு உணவு தந்து உபசரித்த திருமாவளவனும் குடும்பத்தாரும் நிச்சயமாக நன்றிக்குரியவர்கள்.

பொ. கருணாகரமூர்த்தி | அ. முத்துலிங்கம்: இரண்டு நிகழ்வுகள், சில விமர்சனங்கள்

கனடாவில் பிடித்த காலம் எது என்ன என்று கேட்டால் கோடைகாலம் என்று உடனடியாகவே சொல்லிவிடுவேன். கோடை காலம் தொடங்கிவிட்டாலே பல் கலாசார நிகழ்வுகளும், கொண்டாட்டங்களும் களைகட்டத் தொடங்கிவிடும். இந்த முறையும், வழமையைவிட சற்று அதிகமாகவே இலக்கிய நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. மே மாதம் 16ம் திகதி முதல் இன்றுவரை 5 ஈழத்து எழுத்தாளர்களின் புத்தக அறிமுகங்கள் நடைபெற்று இருக்கின்றன

பொ. கருணாகரமூர்த்தி

80களின் தொடக்கத்திலேயே போரினால் இடம்பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வரும் எழுத்தாளார் கருணாகரமூர்த்தி அண்மையில் வெளியிட்ட பெர்லின் இரவுகள் என்ற புத்தகம் மூலம் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றுக் கொண்டவர். இவர் எழுதிய அகதி உருவாகும் நேரம், அவர்களுக்கென்று ஒரு குடில், பெர்லின் இரவுகள், கூடு கலைதல், போன்ற நூல்கள் பற்றிய விமர்சனமாக ஸ்கார்பரோவில் நடைபெற்ற நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்றது. தேவகாந்தன், குரு அரவிந்தன், நவம், என். கே. மகாலிங்கம், இளங்கோ ஆகியோர் நூல்கள் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க பொ. கருணாகரமூர்த்தி ஏற்புரையாற்றினார். பொ. கனகசபாபதி நேர்த்தியான முறையில் நிகழ்ச்சி தொகுப்பை வழங்கினார்.

நிகழ்வில் பலரும் பேசும்போதும் அ.முத்துலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி என்ற வரிசையை முன்வைத்து பேசினர். நவம் சொன்னது போல, அ.முவின் எழுத்துகளை படிக்கும்போது கொடுப்புக்குள் சிரிப்பு வரும். பொ. கருணாகரமூர்த்தியின் எழுத்துகளை படிக்கும்போது கொல்லென்று சிரிப்புவரும் என்ற கருத்தை எல்லா வாசகர்களுமே உணர்ந்திருப்பர். இருவரும் கதை சொல்லும் பாங்கில் கூட நிறைய ஒற்றுமைகளை காணலாம். (இதே போல சுவையாக கதை சொல்லக்கூடிய இன்னொரு ஈழத்துக் கதை சொல்லி சுகிர்தராஜா).

நிகழ்வில் எனக்கு அதிகம் நெருடலாகப் பட்ட விடயம் ஏறத்தாழ பேசிய எல்லாருமே பொ. கருணாக்ரமூர்த்தியை ஜெயமோகன் பாராட்டியிருக்கின்றார், ஜெயமோகன் இவரைப் பற்றி இப்படி சொல்லியிருக்கின்றார் என்கிற ரீதியில் பேசியதும், தாம் சொல்வதற்கெல்லாம் ஜெயமோகனை மேற்கோள் காட்டியதும். ஒரு கட்டத்தில் இது என்ன ஜெயமோகன் குருகுலப் பள்ளியின் விழாவா அல்லது ”ஜெயமோகன் பார்வையில் பொ.கருணாகரமூர்த்தி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கமா என்ற சந்தேகமே எனக்கு தோன்றிவிட்டது. ஜெய்மோகன் பல விடயங்களை பார்க்கும் விதத்தில் இருக்கின்ற கோளாறை நான் சொல்லி அறியவேண்டியதில்லை. அண்மையில் கமலாதாஸ் சூரையா பற்றிய பதிவில் அவர் தெரிவித்த கண்டுபிடிப்புகள் அவரது தீவிர ரசிகர்களை கூட மௌனமாக்கியிருப்பதை அவதானித்து இருக்கின்றேன். ஈழத்து எழுத்துகள் தட்டையானவை என்ற தேய்ந்துபோன தட்டையே திரும்ப திரும்ப எனக்கு தெரிந்து 10 வருடமாக சொல்லிவரும் இவரது அங்கீகாரத்தை இவ்வளவு முக்கியத்துவப்படுத்த வேண்டியதில்லை. அ.முத்துலிங்கம் தவிர்ந்த வேறு ஈழத்து எழுத்துகளை இவர் தொடர்ந்து படிக்கின்றாரா என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. இதையொற்றி எதிர்வினையாற்றின இளங்கோ “திசேரா, மலர்ச்செல்வன், இராகவன், மைக்கேல், சித்தார்த்த சேகுவேரா, நிருபா” போன்றவர்களின் எழுத்துகளை ஜெயமோகன் வாசித்திருப்பாரா என்பதே தெரியாது என்று சொன்னார். ஈழத்து எழுத்துகள் தட்டையானவை, ஒற்றைத்தன்மையானவை என்று தொடர்ந்து அறிக்கைவிடும் ஜெயமோகனின் எழுத்துகள் பல சமயங்களில் எவ்வளாவு அலுப்பூட்டும் பிரதிகளாக இருக்கின்றன என்பதை கனடாவில் இருக்கும் அவரது நண்பர்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லி மாடன் மோட்சம், பல்லக்கு போன்ற நல்ல சிறுகதைகளை எழுதிய ஜெயமோகன் மீள உதவலாம் என்பது என் வேண்டுகோள். மேலும் தொடர்ந்து தலையணை அளவு புத்தகங்களை எழுதுவதை சற்றுக் குறைத்து, கூறியது கூறாமல் தன் கருத்துகளையும், பார்வையையும் மீள்பரிசீலனை செய்வது நல்லது என்று நினைக்கின்றேன்.


இறுதியில் ஏற்புரையாற்றிய பொ.கருணாகரமூர்த்தி தனக்கேயுரிய மென்மையுடன் தன் உரையை படித்தார். இஸங்கள் பற்றிய கருத்துகளோடு அவர் மீது முன்வைக்கபட்ட விமர்சனங்களை “எனக்கு எந்த இசங்கள் பற்றியும் தெரியாது, அதனால் தான் அப்படியான குறைகள் வந்திருக்கும்” என்று ஏற்றுக்கொண்டது என்னைக் கவர்ந்திருந்தது. பொதுவாக எழுத்தாளார்கள் என்றால் எல்லாவிடயங்கள் பற்றியும் தெரிந்திருக்கவேண்டும் என்ற கருதுகோள் எம்மவர்களிடையே உள்ளது. சில எழுத்தாளர்களும் இப்படியே உள்மனதில் நினைப்பதால்தான் தமக்கு தெரியாத விடயங்கள் பற்றியெல்லாம் ஏதோ உளறித்தள்ளி விடுகின்றனர் (சரியான உதாரணம் காலச்சுவடில் கருணா பற்றிய கட்டுரை). அதே நேரம் ஒரு அகதி உருவாகும் நேரம் தொகுப்பில் சொல்லப்பட்ட கற்பு, சோரம் போதல் போன்ற கற்பிதங்கள் பற்றிய விமர்சனத்துக்கு அவர் எந்த எதிர்வினையுமே ஆற்றாமல்விட்டது ஏமாற்றத்தையே தந்தது. ஏற்கனவே கருணாகரமூர்த்தியை நண்பர்களுடன் ஒருமுறை சந்தித்திருந்திருக்கின்றேன். இந்த இரண்டு சந்தரிப்பத்திலும் கருணாகரமூர்த்தி எந்த ஒளிவட்டத்தையும் தனக்கு அணிவித்துக் கொள்ளாத, பழகுவதற்கு இனிய மனிதராக, மனதுக்கு மிக நெருக்கமாக எனக்கு தோன்றினார். அதன் பிறகு அவரது பெர்லின் இரவுகளை வாசித்தபோது அவரே முன்னல் இருந்து கதை சொல்வதுபோன்ற ஒரு அனுபவத்தையே உணர்ந்தேன்.

================================================================

அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது ஆண்டுகள் – அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கத்தின் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணியை முன்வைத்து ஒரு விமர்சன நிகழ்வினை காலம் குழுவினர் மே 23 அன்று ஏற்பாடு செய்திருந்தனர். தற்கால தமிழ் இலக்கியத்தில் ஒரு தவிர்க்க முடியாத இடத்துக்குச் சொந்தக்காரர் அ. முத்துலிங்கம். அவரது எழுத்தில் அவர் மௌனம் சாதிக்கும் தளங்களும் களங்களும் பற்றி எனக்கு நிறைய விசனங்களும் விமர்சனங்களும் இருந்தாலும் அவரது எழுத்து தருகின்ற வாசிப்பனுபவம் அருமையானது. சுஜாதா, அசோகமித்திரன், கோபிகிருஷ்ணன், சாரு போன்றவர்களிடம் நான் அனுபவித்த அதே கட்டுமானத்தை இவரிடமும் உணர்ந்திருக்கின்றேன். நிகழ்வுக்கு முன்னதாக “காலம்” குழுவினரின் “வாழும் தமிழ்” புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பேச்சுக்களாக நுஹ்மானின் பேச்சும், பொ. கருணாகரமூர்த்தியின் பேச்சும் இடம்பெற்றன.

அனேகமாக பேசியவர்கள் எல்லாம் அ.முத்துலிங்கம் இந்தியாவிலும் பிரபலமான ஈழத்து எழுத்தாளர், இந்தியாவில் அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனையாகின்றன என்று தவறாமல் குறிப்பிட்டனர். இது பற்றிய எனது பார்வை வித்தியாசமானது. அ.முவைப் பொறுத்தவரை அவர் ஈழத்தில் பிறந்த எழுத்தாளரே தவிர அவர் எழுதுபவை ஈழத்தவரின் இலக்கியம் அல்ல. ஒரு பயணியாக தனக்கு கிடைத்த அனுபவங்களை சுவைபட கதை சொல்பதே அவரது பாணி. அப்படிப் பார்க்கும்போது அவரது எழுத்துக்கள் ஒரு பொதுவான தளத்தில் அமைந்த எழுத்துக்கள். அதாவது ஒரு ஈழத்து வாசகன் அவரது எழுத்துக்களை வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கும் இந்திய வாசகன் வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஏனென்றால் அவர் கதைகள் ஒரு பொதுவான தளாத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றியவையே. மேலும், நண்பர் ஒருவர் குறிப்பிட்டபடி தான் ஒரு கணவான் எழுத்தாளர் என்பதை அவர் தொடர்ந்து பேணிவருகின்றார். இதுவரை எந்த ஒரு சமுதாய கோபங்களோ அல்லது, காட்டமான விமர்சனங்களோ அவர் எழுத்துக்க்ளில் இருந்தது கிடையாது. இலங்கையில் பிறந்த எழுத்தாளர் ஒருவரின் புத்தகங்கள் இந்தியாவில் அமோகமாக விற்பனையாகின்றன என்று மகிழும் அதேவேளை, அவரை ஈழத்து எழுத்தாளர் என்று முழுமையாக உரிமை கொண்டாடமுடியவில்லை என்ற வருத்தம் உண்டு. அது மட்டுமல்ல அண்மையில் அவர் உயிர்மையில் ஜெயமோகனுடன் நடத்திய உரையாடலிலும், இந்த நிகழ்விலும் எழுத்துக்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் பேசியதில் எல்லாமே மேற்கத்திய இலக்கியத்தின் ஆதிக்கமாகவே இருந்தன. தமிழ் பெயரை தேடித்தான் பார்க்கவேண்டியிருந்தது. அ. முத்த்லிங்கம் எம்மை விட்டு அந்நியமாகிக்கொண்டு போகின்றர் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டித்தான் இருக்கின்றது.

சில காரணங்களால் சற்று தாமதமாக சென்றதால் நுஹ்மானின் உரையை என்னால் கேட்கமுடியவில்லை. ஆனால் ஜயகரன், வெங்கட்ரமணன், மகாலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி போன்றவர்கள் தாம் எப்படி எப்படியெல்லாம் அ.முவை ரசித்தோம் என்று கூறினர்.

இதற்கு ஒருவாரம் முன்பாகத்தான் தனது புத்தக அறிமுக நிகழ்வில் கருணாகரமூர்த்தி என்னை வெகுவாக கவர்ந்திருந்தார். அதே எதிர்ப்பார்ப்புடன் அவரது பேச்சை எதிர்பாத்திருந்த எனக்கு அன்றைய அவரது பேச்சு மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. கிட்ட தட்ட 30 நிமிடம் பேசிய கருணாகரமூர்த்தி அ.முவின் ஒரு கதையை அரைவாசியும் இன்னுமொரு கதையை முக்கால்வாசியும் வாசித்துக்காட்டினார். அதைவிட ஏமாற்றமாக “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” ஒரு நாவலா என்ற விமர்சனத்தை எடுத்துக்கொண்ட அவர், இனிமேல் இதையும் நாவல் வடிவமாக எடுத்துக்கொள்வோம் என்றார். எனக்கு 91ம் ஆண்டு தளபதி திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வரும் என்றூ ஜீவி அறிவித்தபின் படப்பிடிப்பு தாமதமாக ஒரு ஒரு பத்திரிகையாளர் “தளபதி தமிழ் புத்தாண்டுக்கு வந்துவிடுமா என்று கேட்டபோது; ஜீவி தளபதி என்று வருகுதோ அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு என்றூ சொன்னது ஞாபகம் வந்தது. உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல் இல்லை என்பவர்கள் சொல்லும் கருத்து, நாவலுக்குரிய இயல்புகளான சம்பவங்களின் தொடர்ச்சி, பாத்திரங்களின் தொடர்ச்சி, நிலத்தின் தொடர்ச்சி என்பன இதில் இல்லை என்பது. இதற்கு பொ. கருணாகரமூர்த்தி கிராவின் கோபல்லபுரத்து மக்களிலும் இந்ததொடர்ச்சிகள் இல்லை என்றார். ஆனால் அதில் நிலத்தின் தொடர்ச்சி, சம்பவங்களின் தொடர்ச்சி இருந்தன. மேலும் ஒரு வாதத்துக்கு உண்மை கலந்த நாட்குறிப்புகள் ஒரு நாவல் என்று எடுத்தால் 80 கள் முதல் 2008வரை சுஜாதா அவ்வப்போது எழுதிய ஸ்ரீரங்கத்து கதைகளை தொகுத்து உயிர்மை பதிப்பகம் ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று ஒரு புத்தகமாக வெளியிட்டதே அதுவும் நாவலா?

இறுதியில் முத்துலிங்கம் வழங்கிய உரைகூட மிகுந்த ஏமாற்றமாகவே அமைந்தது. பல மணி நேரம் சமைத்த உணவை ஒரே விள்ளலியே உப்பு சரியில்லை அது இதென்று குறை சொல்வதுபோல கஷ்டப்பட்டு எழுதிய நாவலை குறை சொல்கின்றர்கள் என்று அங்கலாய்த்தார். மேலும்தான் எழுதவில்லை என்று குறை சொல்பவர்கள் தாமே எழுதலாம் என்ற புத்திசாலித்தனமான ஒரு கருத்தையும் சொன்னார். ஒரு முறை ஒரு நடன போட்டி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடனமாடிய சோடிக்கு 0 புள்ளிகள் இட்டபோது அவர்கள் தாம் கஸ்டப்பட்டு பழகியதுக்குத் தன்னும் தமக்கு புள்ளிகள் தந்திருக்கலாம் என்று சொன்னபோது சூர்யா, தான் ஒரு திரைபடத்தில் கஸ்டப்பட்டு நடித்தேன் அதனால் நீங்கள் அதனை வெற்றிப்படமாக்கவேண்டும் என்றூ எதிர்ப்பார்ப்பது, அது போலதான் உங்கள் மன நிலையும் என்று சொன்னார். அ.முவைப் பொறுத்தவரை அவரது படைப்புகள் முற்று முழுதாக நிராகரிக்கவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆரோக்கியமான விமர்சனமாக அதில் கண்ட குறைகள் பற்றிக் கூறுவதற்கான வெளியை அவர் முற்றாக மறுத்தார் என்றே சொல்ல வேண்டும்.