நமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம்!

யாழ்ப்பாணத்து நினைவுகள் என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக நான் எழுதிவந்த சில கட்டுரைகளை, போர் சூழ்ந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் குறிப்பாக 90க்கும் 96க்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்த பதின்மவயதுகளைச் சேர்ந்த ஒருவனின் நினைவுகளின் பதிவுகளாகவே பதிவுசெய்தேன். வெறும் நனவிடைதோய்தலாக மாத்திரமல்லாமல், அன்றைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய வாழ்வியலின் ஒரு பகுதியை இப்பதிவுகள் பதிவுசெய்திருக்கும் என்பது என் நம்பிக்கை. இதேபோல, இன்னும் பலரும் தம் அனுபவங்களை ஆவணப்படுத்தும்போது அவை மிகப்பெரிய வரலாற்று ஆவணமாக மாறும். உதாரணமாக இக்கட்டுரைகளை எழுதியவர் வாழ்ந்த இடம், படித்த பாடசாலை, அவரது பால், சாதிப் பிரிவு, வயது, அவரது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை என்பன அவரது கட்டுரைகளில் நிச்சயம் தாக்கம் செலுத்தியே இருக்கும். எனவே பரவலான அனுபவப் பதிவுகள் எமது சமூகத்தின், அக்குறித்த காலப்பகுதியின் வாழ்வியல் பற்றி முழுமையான வரலாறு நோக்கிய பயணிக்க உதவும். நினைவுப்பதிவுகளாகவும், அனுபவப் பகிர்வுகளாகவும், நனவிடை தோய்தல்களாகவும் எழுதப்படும் எழுத்துக்கள் இலக்கியமாகுமா என்கின்ற விமர்சனங்களும், விவாதங்களும் நடப்பதை பலவிடங்களிலும் அவதானித்திருக்கின்றேன். ஆனால் நினைவுப்பதிவுகள் சமூக வரலாற்று ஆசிரியர்களுக்கான முக்கிய ஆவணங்களாகப் பயன்தரத்தக்கவை என்ற வகையில் மிகவும் முக்கியம் வாய்ந்தன என்றே கருதுகின்றேன்.

இத்தகைய எழுத்துக்களுக்கு நல்லதோர் உதாரணமாக ஈழத்துச் சூழலில் இருந்து வெளிவந்த இரண்டு நூல்களை சுட்டிக்காட்டுவது இன்னும் பொருத்தமாகவிருக்கும் என்று கருதுகின்றேன். எஸ் பொ எழுதிய நனவிடை தோய்தல் என்கிற நூலை அனைவரும் அறிந்திருப்பீர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்னைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறையை மிக மிக அழுத்தமாகவும் உணர்வுபூர்வமாகவும், அதே நேரம் வீண் அலங்காரங்களைத் தவிர்த்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு ஆவணப்பதிவாக இந்தப் புத்தகம் இருக்கின்றது. உதாரணத்துக்கு நண்பர்கள் பலரிடம் தனிப்பட்ட உரையாடல்களில் பகிர்ந்துகொண்ட, இந்நூலில் இருக்கின்ற ஒரு சிறிய பகிர்வை எஸ்பொவின் எழுத்துக்களிலேயே தருகின்றேன்

“பின்னர், ஐந்து சத நோட்டுக்களும் பாவனைக்கு வந்தன. இது புதினமான நோட்டு. ஒரே தாளில் இடப்பக்கம் இரண்டு சத முத்திரை போலவும் வலப்பக்கம் மூன்று சத முத்திரை போலவும் அச்சிடப்பட்டிருந்தன. தேவை கருதி அந்தத் தாளை இரண்டு முத்திரைகளாகக் கிழித்து, இரண்டு சதமாகவும் மூன்று சதமாகவும் பாவித்துக் கொள்ளலாம். மூன்று சய இரண்டு சமன் ஒன்று என்கிற வாய்ப்பாட்டில் ஒரு சதக் கணக்கும் சரி செய்யப்பட்டது ”

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்வரை இப்படியான ஐந்து சத நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன என்பதையே நான் அறிந்திருக்கவில்லை. பலரிடம் இதுபற்றிப் பகிர்ந்திருந்தபோதும் எவருமே இதுபற்றிய விபரங்கள் வேறேதாவது ஆவணங்களில் இருக்கின்றனவா என்று பகிர்ந்துகொள்ளவும் இல்லை. எனவே, வரலாற்று சமூகவியல், பண்பாட்டு வரலாற்றியல் என்பன பற்றிய அக்கறை உள்ளவனுக்கு இந்நூல் ஒரு முக்கிய ஆவணமாகின்றது.

அது போலவே வரதர் எழுதிய “மலரும் நினைவுகள்: 1930-40 களில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல்” என்கிற நூல் பற்றியும் குறிப்பிடவேண்டியிருக்கின்றது. இந்நூல் வரதரின் சிறுவயதில் நடந்த விடயங்களையும், தனது ஊர் பற்றியும், மக்களின் வாழ்வியல் பற்றியும் மல்லிகையில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகளில் பொன்னாலை ஊர் பற்றியும், அவ்வூர் 1930 களில் புன்னாலை என்றே வழங்குப்பட்டுவந்ததாகவும், பொன்னாலை வரதராஜர் கோவிலுக்கு ஏதோவொரு காலத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்களும், ஏழு வீதிகளும் இருந்ததாகவும், ஒல்லாந்தர் காலத்தில் இக்கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அக்கற்கள் சங்கானை வரை மக்களை சங்கிலித் தொடராக நிறுத்திவைத்து காவ வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார். அதுபோலவே,

“எனக்குத் தெரிய தேயிலையும் சீனியும் இலவசமாகக் கொடுத்து ஒரு பொது இடத்தில் தேநீர் தயாரித்து வீட்டுக்கு வீடு இலவசமாகத் தேநீர் கொடுத்துப் பழக்கினார்கள். தேயிலைப் பிரசாரச் சபையின் வேலையாய் இருந்திருக்கும். அதன் பயன் ? இன்றைக்குக் காலையில் எழுந்தவுடன் தேநீர் கொடுக்காவிட்டால் ஏதோ வாழ்க்கையே நாசமாகிவிட்டது போன்ற மனப்பான்மை வந்துவிடுகின்றது.”

வரதரின் மலரும் நினைவுகள் நூலில் இவ்வாறான பதிவுகள் முக்கியமானவையாக அமைந்துவிடுகின்றன.

ப. ஶ்ரீஸ்கந்தன் எழுதி சென்ற ஆண்டு வெளியான “மனசுலாவிய வானம்” என்கிற நூலும், “அரியாலை ஊர் நாடகக் கலைஞர்கள்” என்று நூலும் இவ்விதமான பதிவுகளுக்கு நல்ல உதாரணங்களாகும். குறிப்பாக அரியாலை ஊர் நாடகக் கலைஞர்கள் நூலில் அரியாலை ஊரைச் சேர்ந்த நாடகக் கலைஞர்கள் பற்றியும், நாடகங்கள் பற்றியும் ஆவணப்படுத்தியிருப்பதுடன், நாடகங்களில் மேடைக்குப் பின்னாலான பங்களிப்பைச் செய்தவர்கள் பற்றியும் ஆவணப்படுத்தியிருப்பார் ஶ்ரீஸ்கந்தன்.

பதிவுசெய்தல், ஆவணப்படுத்தல், பகிர்தல் என்கிற பிரக்ஞையோடு 70கள் முதல் இன்றுவரை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இன்னொருவர் மதிப்புக்குரிய அ. யேசுராசா. அவர் எழுதிய பதிவுகள், தூவனம், குறிப்பேட்டிலிருந்து போன்ற நூல்களைப் படிக்கும் ஒருவர் இலகுவாக 70 கள் முதல் இலங்கையில், குறிப்பாக யாழ் மாவட்டத்தில் கலை, இலக்கியத்துறைகளில் இடம்பெற்ற பண்பாட்டு அசைவியக்கங்களை அறிந்துகொள்ளமுடியும். 70கள் முதலாக அச்சு ஊடகங்களூடாக இந்தப் பதிவுகளைச் செய்துவந்த அதே யேசுராசாதான் இன்றும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளை பகிர்ந்துவருகின்றார் என்பது அவர் மீதான வியப்பை இன்னும் அதிகரிக்கின்றது.

எனது அவதானிப்பில் 90 – 95ல் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு உள்ளிட்ட விடயங்களில் இவ்வாறு பதியப்படாத எத்தனையோ விடயங்கள் எஞ்சி இருக்கின்றன. தெருவோரமெல்லாம் பதுங்குகுழி வெட்டப்பட்டிருந்த யாழ்ப்பாணத்து வீதிகள் இப்போதும் என் நினைவில் இருக்கவேசெய்கின்றன. பாடசாலைகளில் விழுந்த குண்டுகளும், அகதி முகாம்களில் விழுந்த குண்டுகளும், மருத்துவமனைகளில் விழுந்த குண்டுகளும் கூட காட்சிகளாகவும், செய்திகளாகவும் இப்போதும் நினைவில் இருக்கின்றன. நவாலி தேவாலயம் மீது குண்டுவீசப்படுதுவதற்கு சில மணித்தியாலங்களின் முன்னர் நான் அதே நவாலி தேவாலயத்தில் தான் இருந்தேன். எனது நினைவு தெரிந்து என் எட்டாவது வயதில் சுதுமலையில் நடந்த குண்டு வீச்சொன்றில் பாலமுருகன் என்ற என் வகுப்பு மாணவன் ஒருவன் கொல்லப்பட்டான். அதன் பின் எத்தனையோ மரணங்கள். போர் செய்த கொலைகள்! இவை எல்லாமும் கூட பதிவுசெய்யவேண்டியவைதான்.

கூப்பன் கடை என்றும் சங்கக் கடைகள் என்றும் சொல்லப்படுகின்ற பல நோக்குக் கூட்டுறவு சங்கங்களில் பொருளாதார தடைகளின்போதும், உணவுத் தட்டுப்பாட்டின்போதும் விடிய முதல் போய் வரிசையில் பொருட்கள் வாங்கியதை மறக்கமுடியாது. குறிப்பாக அவ்வாறு வாங்கப்பட்ட “அம்மா பச்சை” என்கிற வகை அரிசியை. அப்போதெல்லாம் மண்ணெய்க்குத் தட்டுப்பாடு. இந்தத் தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ளவே குப்பி விளக்கு என்கிற விளக்குவகைகள் செய்யப்பட்டன. சில கடைகளில் இவை விற்பனைக்கும் இருந்தன. அதுபோல பெற்றோல் இல்லாத காலங்களில் மண்ணெய் மூலம் ஓடக்கூடியவாறு வாகனங்களின் இயந்திரங்களில் சிறுமாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி சில துளிகள் பெற்றோல்களால் “என்ஜின்” உயிர்ப்பிக்கப்பட்டு அதன்பின்னர் வாகனம் தொடர்ந்து மண்ணெய்யில் இயங்கும். அப்போது நாச்சிமார் கோயிலடியில் இருந்த “கார்பரேற்றர் ஆனந்தன்” என்பவர் இந்த வித்தையில் அப்போது புகழ்ப்பெற்றவராக இருந்தார். இந்த தொழினுட்பம் பற்றி யாராவது விளக்கமான ஒரு கட்டுரையை எழுதவேண்டும் என்பது என் அவா.

1994ம் ஆண்டில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆயினும், பரவலாக “கள்ளமாக” திரைப்படங்களைப் பார்ப்பது வழமையாகவிருந்தது. மின்சாரம் இல்லாது போல 90கள் முதலே திரைப்படம் பார்ப்பதென்றால் அது முழுநாள் நிகழ்வு. காலை 5 திரைப்படங்கள் வரை தொடர்ச்சியாக திரையிட்டுப் பார்ப்பார்கள். இடையில் தென்னிந்தியத் திரைப்படங்கள் தணிக்கை வேறு செய்யப்பட்டன. இந்து, ஐ லவ் இந்தியா போன்ற திரைப்படங்கள் தணிக்கையில் கிட்டத்தட்ட அரைவாசியாகக் குறைந்திருந்தன. பாட்ஷா திரைப்படம் தென்னிந்தியத் திரைப்படங்கள் தடைசெய்யப்பட்ட பின்னரே “கள்ளத்தனமான” யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தது. இவ்வாறு வந்த பிரதியில் ஏதோ குளறுபடி நிகழ்ந்த பட ரீல்கள் வேறு ஒழுங்கில் பதிவுசெய்யப்பட்டிருந்தன. படத்தைப் பார்த்த எமக்கு தலையும் விளங்கேல்ல, காலும் விளங்கேல்ல. இது ஏதோ பூர்வ ஜென்மக் கதைபோல என்று நினைத்திருந்தோம். இவை எல்லாம் பதிவுசெய்யப்படவேண்டி நினைவுகள். எமது நினைவுகளில் தேங்கியிருக்கும் இதுபோன்ற நினைவுகளை நாம் பதிவாக்கும்போது அது நமக்கான ஒரு வரலாற்று ஆவணமாகும். நமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம்.


குறிப்பு

இக்கட்டுரை யாழ் உதயனின் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிதழான சூரியகாந்தியில் டிசம்பர் 14, 2014, அன்று இடம்பெற்றது. இக்கட்டுரைத்தொடரின் நிறைவுக் கட்டுரையாகவும் இதுவே அமைந்தது.

இக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97வரை, தன் பதின்மங்களிலும், பதின்மங்களை ஒட்டிய காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுதத் திட்டமிட்டுள்ளேன். இதேமுயற்சியில் தொடர்ச்சியாக எழுதப்படும் தனியன்களின் பதிவுகள் தொகுக்கப்படும்போது ஒரு சமூகத்தின் வரலாற்று ஆவணமாக அமையும். அவ்விதம் அமையவேண்டும் என்பதே என் அவா.

நமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம் என்பது முன்னர் நான் நவாலி தேவாலயப் படுகொலைகள் பற்றி எழுதிய ஒரு பதிவிற்கு (https://arunmozhivarman.com/2011/11/19/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/)
நண்பன் தீபன் சிவபாலன் இட்ட ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்ட தகவலின் தாக்கத்தால் வந்த தலையங்கமாக உணர்கின்றேன். நன்றி தீபனுக்கு.

தீபன் பகிர்ந்த பின்னூட்டமாவது, //நமக்கான கதையை நாமே எழுதுவோம்……!நவாலிப் படுகொலைகளின் முதலாண்டு “எத்தனை எத்தனை வித்துகள் விழுந்தன” என்ற தலைப்பில் நினைவு கூரப்பட்டபோது எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் குறிப்பிட்டதை நீங்கள் பதிவு செய்திருப்பதாகவே படுகிறது.//

இத்தொடரை எழுத ஊக்கமளித்ததுடன் நான் கடைசி நேரங்களில் அனுப்பும் ஆக்கங்களை பொறுமையுடன் பிரசுரித்த நண்பன் ஜெரா தம்பிக்கும், பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும்போதே தொடர்ச்சியாக ஆலோசனைகளையும், தகவல்களையும் தந்துதவிய நண்பன் விசாகனுக்கும் நன்றி.

-அருண்மொழிவர்மன்

ஒவ்வொரு பாடலிலும்… (யாழ்ப்பாணத்து ஒலிப்பதிவுக் கூடங்கள்)

“ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு” என்ற ஓர் அழகானபாடலினை என்னவளே திரைப்படத்திற்காக எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வைரமுத்து எழுத உன்னிகிருஷ்ணன் பாடியிருந்தார். சற்று நினைத்துப்பார்த்தால் எல்லா நினைவுகளுக்கும், மறக்கமுடியாத நிகழ்வுகளுக்கும் அவற்றுடன் தொடர்புடையதாக ஏதோ ஒரு பாடல் எப்போதும் இசைத்துக்கொண்டே இருக்கின்றது. நாம் கேட்கும் பாடல்களும், வாசிக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும் எம் வாழ்விற்காக பிண்ணனி இசையை தாமே அமைத்துச் செல்கின்றன. கடந்துபோன நினைவுகளை எப்போதாவது மீட்டிப் பார்க்கும்போது நினவுகளும், பாடல்களும் ஒரு கோர்வையாக, சரம்சரமாக ஒன்றுடன்ஒன்று தொடுத்து வருவதை காணமுடியும்.

உங்களுக்கு ஆகப்பிடித்த பாடல்கள் எவை என்று ஒருமுறை நினைவுகூர்ந்து பாருங்கள், பெரும்பாலும் அவையெல்லாம் உங்கள் பால்ய வயதிலோ அல்லது இளமைப்பிராயத்திலோ வெளியான பாடல்களாகவோ அல்லது அக்காலங்களில் நீங்கள் விரும்பிக்கேட்ட பாடல்களாகவோ அல்லது அக்காலங்களை நினைவுகூறும் பாடல்களாகவோ அமைந்திருப்பதை உங்களால் உணரமுடியும். நினைவு அடுக்குகளில் புதைந்துகிடக்கின்ற பால்யத்தையும் அதையொட்டிய நனவிடைதோய்தலைகளையும், அவ்வப்போது இரைமீட்டு வாழ்வை ஒருபடி அழகாக்குகின்றன பாடல்கள். அப்படி அழகாக்கும்பாடல்களே நமக்குப் பிடித்தனவாகவும் அமைகின்றன. கொத்தித் தின்கின்ற ஞாபகக் காக்கைகள் என் நேற்றை என்கிற கவித்துவமான வரிகளைப் படித்திருக்கின்றேன். அப்படி ஆறிவரும் ரணங்களைச் சற்றே சொறிந்து சுகங்காணும் பாடல்களும் உண்டு. நினைவுகள் எப்போதும் இனிமையானவை மட்டும் அல்லவே!

பாடல்கள் கேட்பதும் திரைப்படங்கள் பார்ப்பதும் எனக்கு எப்போதும் பிடித்தமானவை என்றாலுங்கூட எனது பால்யம் கழிந்த போர்சூழ்ந்த யாழ்ப்பாணத்தில் இவை அத்தனை இலகுவானவையல்ல. மின்சாரவசதி இல்லாத, தொலைத்தொடர்பு வசதிகளும் மிகமிக குறைவான அன்றையகாலம் பற்றி, தற்போதைய தலைமுறையினருக்கும், “வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும்” புரியவைப்பதே பெரும் பிரயத்தனமானது. சைக்கிள் ரைனமோவை இயக்கி அதன் மூலம் பெறப்படும் மின்சக்தியினை அதற்கான தொழிநுட்பத்துடன் வானொலிப்பெட்டிகளுக்கு வழங்கியோ, மோட்டர் பைக், கார் போன்ற வாகனங்களின் மின்கலங்களில் இருந்து வானொலிப்பெட்டிக்கு மின்சக்தியை வழங்கியோ அதன்மூலம் பாடல்களைக் கேட்டுக்கொள்ளுவோம். அந்நாட்களில் சில கடைகளில் “இங்கே பற்றறி சார்ஜ் செய்து கொடுக்கப்படும்” என்று அறிவித்தல் பலகைகளைக் கண்டது இப்போதும் நினைவிருக்கின்றது. அது தவிர, சிலர் சைக்கிள் ரிம், ரைனமோ, இவற்றை இணைக்கும் சிறிய தோல் பட்டி, சுற்றுவதற்கான கைபிடி அல்லது சைக்கிள் பெடல் என்பவற்றினை மரச்சட்டகம் ஒன்றில் இணைத்து விற்பனை செய்தும் வந்தார்கள். இது தவிர, துவிச்சக்கரவண்டிகளை அப்படியே தலைகீழாக கவிழ்த்துப்போட்டுச் சுற்றுவதும், டபிள் ஸ்டாண்ட் (துவிச்சக்கரவண்டியில் பொதுவாக ஒருபக்கமே ஸ்டாண்ட் இருக்கும். டபிள் ஸ்டாண்ட் என்றால் துவிச்சக்கரவண்டியின் இரண்டுபக்கமும் இருக்கும்படியாக இரும்பினால் செய்யப்பட்டு இருப்பது) போட்டு ஏறி இருந்து சுற்றுவதும்கூட வழமையாக இருந்தது. வானொலி, ரோச் என்பவற்றுக்குப்பயன்படுத்து பழுதாகிய மின்கலங்ககளை மெல்லமாக கடித்து / கற்களால் தட்டிவிட்டு சுவர்க்காரங்களில் பொருத்தினால் சுவர்க்கடிகாரம் சிலகாலம் இயங்கும். இப்படி எத்தனையோ குட்டிக் குட்டித் தொழினுட்பங்கள்.

மின்சாரம் இல்லாதபோதும் கூட, பாடல் ஒலிப்பதிவு நிலையங்கள் (ஓடியோ ரெக்கோர்டிங் பார் என்று இவை முன்னர் அழைக்கப்பட்டன) லாபகரமாக இயங்கிவந்தன என்றே சொல்லவேண்டும். யாழ்நகரில் இயங்கிவந்த சண் ரெகோர்டிங், சுப்பசோ / ரவி ஒளிகானம், நியூ விக்ரர்ஸ், மானிப்பாய் வீடியோ ஆனந்த் ஸ்டூடியோ, சங்கானை மிது வீடியோ மற்றும் ஆனைக்கோட்டையில் மூத்த விநாயகர் கோவிலடியில் இயங்கிவந்த ஓர் ஒலிப்பதிவுகூடம் போன்ற கடைகளே பொதுவாக என் தேர்வுகள். குறிப்பாக ரவி ஒளி கானத்தில் சத்தி அண்ணை என்றொருவர் இருப்பார். அருமையான மனிதர். மணித்தியாலக் கணக்காக அவரது கடையில் தவம் இருந்து பாடல்களை பட்டியலிடும் எம்மிடம் ஒருபோதும் சலிப்பைக்காட்ட மாட்டார். தவிர நாம் தேர்ந்தெடுத்திருக்கின்ற பாடல்களின் அதேபாணியிலான பாடல்களையும் எமக்குத் தேர்ந்தெடுத்து உதவுவார். 60 நிமிடங்கள் வருகின்ற “கசற்” ஒன்றினை முழுமையாகப் பதிவுசெய்ய 60 ரூபாய் எடுப்பார்கள். கிட்டத்தட்ட 12 பாடல்கள் வரும். அப்போதைய பாடல்கள் சராசரியாக 5 நிமிடம் என்ற காலஅளவையைக் கருத்திற்கொண்டே இசையமைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். மக்ஸ்வல், டிடிகே என்கிற கசற்றுகள் பிரபலமாகயிருந்தன. இவற்றில் பாடல்களைப் பதிவுசெய்துகொள்வோம். அவ்வாறு பதிவுசெய்துகொள்ளும் கசற்றுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வோம். மின்சாரம் இல்லாத காலம் என்பதால் மின்சக்தியைச் சேமிக்க கசற்றுகளை fast forward / rewind செய்யவேண்டும் என்கிற சந்தர்ப்பங்கள் எழும்போதெல்லாம், கசற்றினுள் பேனையை நுழைத்து அதனைச் சுழற்றுவதன்மூலம் தேவையான fast forward / rewind இனைச் செய்துகொள்ளுவோம்.

அப்போது இந்த ஒலிப்பதிவுகூடங்களில் தம்மிடம் உள்ள திரைப்படப் பாடல்களை திரைப்படவாரியாகப் பட்டியலிட்டு, பாடியவர்கள் பெயர், இசையமைப்பாளர் என்பவற்றுடன் சோகப்பாடல்களாயின் அடைப்புக்குறிக்குள் சோகம் என்று குறிப்பிட்டும் வைத்திருப்பார்கள். எந்தப்பாடல் எந்தப்படம் என்று பார்க்க கும்பலாகச் சென்று அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்போம். 94ம் ஆண்டு முதல் இசைத்தட்டுகள் (கொம்பாக்ட் டிஸ்க்) பரவலாக யாழ்ப்பாணத்து ஒலிப்பதிவுகூடங்களிற்கு வர ஆரம்பித்திருந்தன. சண் ரெகோர்டிங்கிலும், ரவி ஒளிகானத்திலும் இந்த இசைத்தட்டுகளில் வருகின்ற பாடல்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அட்டைகளை கண்ணாடி அலுமாரியின் உட்புறமாக ஒட்டி வைத்திருப்பார்கள். தவிர, பாடல்களை ஒலிப்பதிவு செய்துதரும்போது இசைத்தட்டுகளில் இருந்து ஒலிப்பதிவுசெய்து தருவார்களேயானால் அதற்கு மேலதிகக் கட்டணம் அறவிடப்படும் என்ற – தற்போது யோசித்துப்பார்க்கும்போது – தர்க்கரீதியில் முரணான வழமையும் சில ஒலிப்பதிவுக்கூடங்களில் பின்பற்றப்பட்டது. அதுபோலவே சில கடைகளில் ஒலிப்பதிவுசெய்யும்போதே “மாஸ்ரர் கொப்பி” அடித்துதருகிறோம் என்றும் சொல்வார்கள். அப்போது சிறுவர்களான நாங்கள் அப்படித்தான் மாஸ்ரர் கொப்பி அடியுங்கோ அண்ணை என்றே கேட்போம். மாஸ்ரர் கொப்பி என்றவுடன் எனக்கு மறக்கமுடியாத நினைவொன்று உண்டு.

தொழில் நிமித்தமாக கொழும்பு சென்றுவரும் என் தந்தையார், கொழும்பில் இருந்து நான் கேட்டபாடல்களை ஒலிப்பதிவு செய்துகொண்டுவந்து தருவார். அவ்விதமே காதலன் திரைப்படப் பாடல்களையும் அவர் ஒலிப்பதிவு செய்துகொண்டுவந்திருந்தார். அந்த கசற்றில் காதலன் திரைப்படப் பாடல்களுடன் துறைமுகம் என்ற திரைப்படப்பாடல்களும் பதிவுசெய்யப்பட்டிருந்தன. ஏதோ கோளாறால், இரண்டு படப்பாடல்களும் இடம்மாறி, காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஊர்வசி, ஊர்வசி பாடலும் என்னவளே அடி என்னவளே பாடலும் துறைமுகம் திரைப்படப் பாடல்களாகவும், துறைமுகம் திரைப்படத்தில் இடம்பெற்ற ராஜராஜாவின் ராஜ்ஜியத்தில் பாடலும், ஏண்டா பொறந்த பாடலும் காதலன் திரைப்படப்பாடலாகவும் அந்த கசற்றில் இருந்தது. என்னிடம் இருந்து இந்த கசற்றைப்பெற்ற நண்பன் ஒருவன் மானிப்பாயிலிருந்த ஓர் ஒரு ஒலிப்பதிவுக்கூடத்துக்கு அதனை ~மாஸ்ரர் கொப்பி” என்று சொல்லிக் கொடுக்க அவர்களும் நீண்டநாட்கள் அவ்விதமே கலைச்சேவை புரிந்தனர்.

ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோயிலுக்கு அருகாமையில் இருந்ததாக நான் இப்பதிவின் தொடக்கத்தில் சொன்னகடையில் நிறைய ஆங்கில, பொப் பாடல்களின் கசற்றுகள் இருந்தன. பொனியம் மற்றும் மைக்கேல் ஜாக்சனின் தொகுப்புகள் இருந்தது நன்கு ஞாபகம் இருக்கின்றது. எமது வகுப்பில்கூட ஆங்கிலப்பாடல்களை, குறிப்பாக பொனியத்தை விரும்பிக்கேட்ட பலர் இருந்தார்கள். ஆனால் Rap, Raggae பாடல்கள் எவையும் கேட்கப்பட்டதாய் நினைவில்லை. தவிர, பெரும்பாலும் பாடல் கேட்பது two in one என்றழைக்கப்படும் கசற்போடவும், வானொலி கேட்கவும் வசதியுள்ள “கருவி”ஊடாக என்பதனால் நுட்பமான இசைக்கோர்வைகளைக் கேட்பது நடைமுறையில் கடினமானதாகவும் இருந்தது. தவிர, பெரும்பாலும் இந்தக் கருவிகள் ரைனமோவை சுழற்றுவதன்மூலமாகவே இயக்கப்பட்டதனால் இயல்பாகவே ஏற்படக்கூடிய இரைச்சலும் கவனக்குறைவும் கூட கூர்மையான அவதானத்துடன் பாடல்களைக்கேட்பதற்கு தடையாக இருந்திருக்கக்கூடும்.

இதே காலப்பகுதியில் போராட்டத்திற்கான பிரச்சாரப் பாடல்களும் பெருமளவில் வெளியாகிக்கொண்டிருந்ததுடன் மக்களால் பெரிதும் விரும்பிக்கேட்கவும்பட்டன. பெரும்பாலான தெருச்சந்திகளில் ஒலிபெருக்கிகள் நிரந்தரமான பொருத்தப்பட்ட இவ்வாறான எழுச்சிப்பாடல்கள் தொடர்ச்சியாக இசைக்கப்பட்டன. எளிமையான இசைக்கோர்புடன், உணர்வூட்டக்கூடிய வசனங்களுடன் இவை அமைந்திருந்தன. இவற்றின் காரணமாக இவை இயல்பாகவே மனனம் ஆகியும் இருந்தன. அதேநேரம் எழுச்சிப்பாடல்களையும் திரைப்படப் பாடல்களையும் கலந்து ஒலிப்பதிவுசெய்வது தடைசெய்யப்பட்டிருந்ததாகவும் நினைவுள்ளது.

இப்போது நினைத்துப்பார்க்கின்றபோது நான் வாழ்ந்த எல்லா இடங்களிலும் எனக்கு அதிகம் நெருக்கமானவர்களாக அவ்விடங்களில் புத்தகக்கடை, சாப்பாட்டுக்கடை, ஓடியோ/வீடியோ கடை வைத்திருந்தவர்கள் அமைந்திருந்துள்ளார்கள் என்பதை உணரமுடிகின்றது, என் வாழ்வை அழகாக்கியதிலும் பங்குதாரர்கள் இவர்கள். எனக்குப் பிடித்த பாடல் அது உனக்குப்பிடிக்குமே என்று பாடியதும், அந்த பாடல்கள் நினைவுக்குக்கொண்டுவந்ததும், மறக்கத்தான் நினைத்ததும், மறக்கத் தான் நினைத்ததுவுமாய் ஆயிரம் நினைவுகள் அந்தப் பாடல்களுடன் சங்கமம். இவை தவிர எத்தனையோ எழுச்சிப்பாடல்கள், அவற்றை சிறுவயதில் கொப்பி ஒற்றைகளில் எழுதித்தந்த நண்பர்கள் இவற்றையெல்லாம் இன்றும் உயிரில் சுமந்துகொண்டிருக்கும் நான் எல்லாருமே எனக்குப் பிரியமானவர்கள். எனக்குப் பிடித்த பாடல்களைப்போலவே.

குறிப்பு

இக்கட்டுரை யாழ் உதயனின் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிதழான சூரியகாந்தியில் நவம்பர் 30, 2014, அன்று இடம்பெற்றது.

இக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97வரை, தன் பதின்மங்களிலும், பதின்மங்களை ஒட்டிய காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுதத் திட்டமிட்டுள்ளேன்.

-அருண்மொழிவர்மன்

அது ஒரு அழகிய நிலாக்காலம் (யாழ்ப்பாணத்து ட்யூசன் காலம்)

யாழ்ப்பாணத்துக் கலாசாரம் என்ன கலாசாரம் என்று யாரேனும்கேட்டால், யாழ்ப்பாணத்துக் கலாசாரம் ட்யூஷன்கள் நிறைந்த கலாசாரம் என்று சொல்லும் அளவுக்கு 90களில் முதலாம், இரண்டாம் வகுப்புப்படிக்கும் பிள்ளைகள் முதல் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வானவர்களுக்கான ஆங்கிலவகுப்புகள் என பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற ட்யூஷன்கள் நிறைந்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே பாடத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த பெருமையும் இந்த ட்யூஷன்களுக்கே உண்டு.

வேலாயுதம் அவர்களால் நடத்தப்பட்ட மணி கல்வி நிறுவனம், பாஸ்கரன் அவர்களின் எடிசன் அக்கடமி, கோண்டாவிலில் இயங்கிய நிரு ட்யூஷன், மானிப்பாயில் நாயும் பூனையும் மதில் என்று எல்லாருக்கும் தெரிந்த மதிலுடன் கூடிய பிட்ஸ்மன், சித்தன்கேணியில் இயங்கிய நாவலர் கல்விநிலையம், 5ம்ஆண்டு புலமைப்பரிசில் எழுதும் மாணவர்களுக்கு மாதிரிப்பரீட்சைகள் நடத்துவதில் புகழ்பெற்ற “புதிய கல்வி நிலையம்”, ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, தற்போதைய மாகாணசபை உறுப்பினர் பொ. ஐங்கரநேசன் அவர்களால் நடத்தப்பட்ட யுனிவேர்சல், எந்தப் பெயரும் இல்லாமல் நவாலியில், ஒழுக்கத்துக்கும் கண்டிப்பிற்கும் பெயர்போன மரியதாஸ் என்பவரால் நடத்தப்பட்ட ஒரு கல்விநிலையம், பகல்நேர வகுப்புகளுக்குப் பெயர் பெற்ற விக்னா என்பன இவற்றுள் முக்கியமானவை. தவிர, சில ஆசிரியர்கள் தனிப்பட நிர்வகித்துவந்த சிறிய அளவிலான ட்யூஷன் வகுப்புகளும் இருந்தன.

நான் 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியபோது எனக்கு ஆசிரியராக இருந்த அருட்பிரகாசபிள்ளை அவர்கள் சுதுமலை என்கிற சிறிய ஊரில், சிந்மயபாரதி என்கிற ஒப்பீட்டளவில் சிறிய பாடசாலையில் தொடர்ச்சியாகக் கணிசமான மானவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்குக் காரணகர்த்தா என்று சொல்லத்தக்கவர். போக்குவரத்துவசதிகள் அதிகம் இல்லாத காலங்களில், வண்ணார்பண்ணையில் இயங்கிவந்த புதிய கல்வி நிலையத்தில் இருந்து வினாத்தாள்களைப் பெற்றுவந்து தனதுவீட்டில் வைத்தே பல மாணவர்கள் புலமைப்பரிசில் மாதிரிப்பரீட்சைகளை எழுதவைத்து ஊக்குவித்தவர்.

அதுபோலவே நவாலியில் மரியதாஸ் என்ற ஆசிரியர் நடத்திவந்த கல்வி நிலையமும். அவர் ஆற்றிய பணி என்னவென்று அறியவேண்டுமானால், நவாலியில், குறிப்பாக சென் பீற்றர்ஸ் தேவாலயம் அமைந்துள்ள சூழலில் அவர் ட்யூஷன் வகுப்புகளை ஆரம்பிக்கும் முன்னரும், பின்புமாக எத்தனை பட்டதாரிகள் உருவானார்கள் என்று பார்த்தாலே தெரியும். கண்டிப்பிற்கும் ராணுவ ஒழுங்கிற்கும் பெயர் போனவர். எனக்குத் தெரிந்து ட்யூஷன் வகுப்பிற்கு மாணவர் எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து வெளிக்கிட்டார், எத்தனை மணிக்கு வகுப்புமுடிய வீடு திரும்பினார் என்பதையெல்லாம் பெற்றோரிடம் விசாரித்து, அவற்றை கொப்பிகளின் பின்பக்கமாக பெற்றோரின் கையெழுத்துளுடன் பதிவுசெய்த ஒரே ஆசிரியர். அத்துடன், எவ்வளவு தூரத்தில் இருந்து வருபவர் சைக்கிளில் வரலாம், இவ்வளவு சுற்றுவட்டத்துக்குள் இருந்துவருபவர்கள் நடந்துதான் வரலாம் என்கிற ஒழுங்குமுறைகளும் இருந்தன. வகுப்புக்கு ஏதேனும் காரணங்களால் வரமுடியாவிட்டால் பெற்றோர் / பாதுகாவலரிடம் இருந்து கடிதத்துடனோ அல்லது கையுடன் அழைத்து வந்தாலே, அதுவும் சரியான காரணங்களுடன் வந்தாலே வகுப்பில் அனுமதி கிடைக்கும். ஒருமுறை அங்கே ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் ஒருவர் திடீரென இரண்டு வகுப்புகளுக்கு வராமல் இருந்துவிட்டு மீண்டும் கற்பிக்க வந்தபோது தனது தகப்பனையும் அழைத்துவந்ததை இப்போதும் நண்பர்களுடன் பேசிச்சிரிப்போம். ட்யூஷன் என்பதை ஒருபோதும் வியாபாரமாகப் பார்க்காதவர் அவர். ஐந்து பாடங்களிற்கு ஏழு ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். ஆனால் கட்டணம் மாதம் ஐம்பது ரூபாய் மாத்திரமே. குடும்பத்தின் பொருளாதாரநிலைமை காரணமாக நிறையமாணவர்கள் அவரிடம் இலவசமாகவே படித்ததை நான் அறிவேன். மின்சாரம் இல்லாத மண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவிய அன்றையகாலங்களில் இரவுகளில் நிறையமாணவர்கள் அவரது வீட்டிற்குச் சென்று – வகுப்பறைகளில் ஏற்றிவைத்திருக்கும் அரிக்கன்லாம்பிலும் பெற்றோமக்ஸிலும் – படித்தார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மொனிற்றர் (வகுப்புத் தலைவர்) இருப்பாரென்றாலும், அவர் மொனிற்றர் என்றழைப்பது என்னைத்தான். “மொனிற்றரை வந்து என்னைச் சந்திக்கச் சொல்லும் ஐசே” என்று நண்பன் தெய்வீகனிடம் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் சொல்லிவிட்டார். இரண்டாம்நாள் போய்ச்சந்தித்தேன். நெடுநேரம், படிப்புப்பற்றி இல்லாமல் நெருக்கமாகப் பேசிக்க்கொண்டிருந்தார். அவர் அவ்விதம் பேசுவது அரிது. இருட்டி விட்டது சென்றிக்குள்ளால போறது கவனம் ஐசே என்று சொல்லி என்னை வழியனுப்பிவைத்தார். அடுத்தநாள் காலை அப்போது படித்துக்கொண்டிருந்த உயர்தரவகுப்புகளுக்கான ட்யூஷனுக்குப் போனபோது தெய்வீகனைக் காணவில்லை. எங்கே என்றுகேட்டபோது, “மரியர் செத்துவிட்டார் மச்சான்” என்றான் இன்னொருநண்பன். உடனே அவர் வீடுநோக்கி ஓடினேன். நான் கதைத்துவிட்டுச் சென்ற சிலமணித்தியாலங்களில் இறந்திருக்கின்றார். “உங்களிட்டச் சொல்லிட்டுப் போகோனும் என்றோ உங்களை வரச்சொன்னவர் மொனிற்றர்” என்று என்னைக்கண்டு அழுதார் அவரின் மனைவி புஷ்பம் அக்கா.

மரணப் படுக்கையிலும் மறக்காத நினைவுகள் என்றால் எடிசன் அக்கடமியில் கல்விகற்ற காலந்தான் இப்போதும் நினவுவருகின்றது. எடிசன் அக்கடமி அப்போது யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகிலும், கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு அருகிலுமாக இரண்டு இடங்களில் இயங்கிவந்தது. பாஸ்கரன், அரவிந்தன், கோபி, கொலின்ஸ், சந்திரமோகன் என்று பெரும்பாலும் இளைஞர்களே வகுப்பெடுத்தார்கள். அங்கு சமூகக்கல்வியும் வரலாறும் கற்பித்த கோபி யாழ்ப்பாணத்தில் ஒரு குட்டி கதாநாயகன். சற்று தடித்தகுரலில் சாதுவான “கொன்னை”யுடன் கைகளை வேகமாக அசைத்துக்கொண்டும், shirt sleeve களை அடிக்கடி இழுத்துவிட்டபடியும் அவர் பேசும் அழகுக்கு ரசிகர்கூட்டமே இருந்தது. அத்துடன் சுருக்கமாகவும், தெளிவாகவும் அவர் படிப்பிப்பதால் அரங்கம் நிறைந்த வகுப்புகளாகவே அவரது வகுப்புகள் நடைபெறும். ஒருமுறை பலமாக கொட்டாவிவிட்ட ஒரு மாணவனை பார்த்து “தம்பி வாய மூடும், நேற்று சாப்பிட்ட இடியப்பம் சாம்பாரில மிதக்கிது” என்றபோது கடலலை போல சிரிப்பலை எழுந்தது. பின்னொருநாள் “சத்யா கட்” உடன் வந்த நண்பன் தயாவைப் பார்த்து “நீர் என்ன மிச்ச காசுக்கும் தலமயிர் வெட்டினீரா” என்று கேட்டது இப்போதும் எமக்குள் பிரபலமான நகைச்சுவை.

எடிசன் அக்கடமியில் அப்போது விஞ்ஞானம் கற்பித்த ஆசிரியர் ஒருவர் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இடையில்விலகிவிட அவருக்குப் பதிலாக வடமராட்சியில் பிரபலஆசிரியராக இருந்த ந. மகேந்திரன் என்பவர் முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் கற்பிப்பதற்காக எடிசன் அக்கடமிக்கு பாஸ்கரன் அவர்களால் அழைத்துவரப்படுகிறார். இப்போதும் நன்றாக நினைவில் இருக்கின்றது. கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு அருகில் அப்போது இயங்கிவந்த எடிசன் அக்கடமிக்கு அருகில் தெருவுக்குக்குறுக்காக முழுத்தெருவின் அகலத்தில் பெரியதோர் பனர், “ —ம் திகதி முதல் வடமராட்சி பிரபலஆசிரியர் ந. மகேந்திரன் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில்” என்று. அப்போது பதினோராம் ஆண்டு விஞ்ஞான பாடத்தில் “இலத்திரனியல்” என்றொரு அத்தியாயம் இருந்தது. அதற்கும் விளம்பரம், “ஆரம்பம், வடமராட்சிப் பிரபல ஆசிரியர் ந. மகேந்திரனின் “இலத்திரனியல்” —-ம் திகதி முதல். உடனே பதிவு செய்யுங்கள்” என்று. அப்போது அங்கு வெளியான பத்திரிகைகளிலும் இந்த விளம்பரங்கள் வெளியாகும். பின்னாட்களில் ரட்சகன் திரைப்படம் வெளியானபோது, நடிகர் ரஜினியுடன் அதிருப்தி கொண்டிருந்த தயாரிப்பாளர் குஞ்சுமோன், நடிகர் நாகார்ஜூனாவை “தென்னினிந்திய சுப்பர் ஸ்ரார்” என்கிற அடைமொழியுடன் தமிழகத்தில் விளம்பரம்செய்தபோது எனக்கு ஏனோ மேற்படி சம்பவமே ஞாபகம் வந்தது. எடிசனில் அப்போது 7 பாடங்கள் கற்கவான கட்டணம் மாதம் 135 ரூபாய்களே.

தனியார் கல்வி நிலைய ஒன்றியம் என்ற அமைப்பின் கீழ் அப்போதைய தனியார் கல்விநிலையங்கள் / ட்யூஷன்கள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டன. அவ்வாறு ஒன்றிணைக்கப்பட்டபோது, பதினோராம் ஆண்டுவரை ஒரு பாடத்திற்கு – எத்தனை ஆசிரியர்கள் கற்பித்தாலும் கூட – 20 ரூபாய்க்கு மேல் கட்டணம் அறவிடப்படமுடியாது. வாரத்தில் எத்தனை நாட்கள் வகுப்புகள் நடத்தப்படலாம், என்ன நேரம்வரை நடத்தப்படலாம், விடுமுறைகள் எவை என்பனவெல்லாம் ஓர் ஒழுங்குமுறையின் கீழ் தீர்மானிக்கப்பட்டன. பாடக்குறிப்புகளையோ அல்லது மாதிரி வினாத்தாள்களையோ வழங்கினால் அதற்கு எவ்வளவு கட்டணம் அதிகபட்சமாக அறவிடப்படலாம் என்பதுவரை எல்லாமும் இந்த ஒன்றியத்தால் தீர்மானிக்கப்பட்டன. தனியார் வகுப்புகளை நடத்தியபலர் வியாபார நோக்குடையவர்களாக இருந்தபோதும், அவை முழுமையாக வியாபார நிலையங்களாகிவிடாது இந்த ஒழுங்குமுறைகள் பாதுகாத்தன

எப்போதும் கொண்டாட்டத்துடன் மட்டுமே நினவுக்குவரும் எடிசனில் வகுப்புகள் முடிந்துசென்ற ஒருநாளில்தான் அன்றுகாலை ஷெல் தாக்குதல்கள் ஆரம்பமாகி, அகதிகளாக வந்த மக்களுக்கு உதவிகளைச் செய்துகொண்டிருந்த என் சிறுவயது நண்பன் பிரதீஸை, எமது அப்போதைய கொண்டாட்டங்கள் பலவற்றில் இணைந்துமிருந்த பிரதீஸை, நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்தின் அருகாமையில் சந்தித்துப் பேசிவிட்டுச்சென்றேன். நான் விடைபெற்றுச்சென்ற சில மணித்தியாலங்களில் அங்கு நிகழ்த்தப்ட்ட குண்டுத் தாக்குதல்களில் அவனும் கிராமசேவகராக இருந்த அவனது ஒன்று விட்ட சகோதரியும் பலியானது பெருங்கொடுமை.

பீடா, நிஜாம் பாக்கு, அருகில் இருந்த வள்ளிநாயகி கடையில் குடிக்கும் டீ, பின்பு நண்பன் விசாகன் வீட்டில் விளையாடும் கிரிக்கெட் என்று போன வாழ்வை குலைத்தது 95 ஒக்ரோபரில் நடந்த பாரிய இடப்பெயர்வு. இடம்பெயர்ந்து கால்நடையாக செல்கையில் எடிசனை கடக்கும்போது வடிந்த கண்ணீர் இப்போதும் கரிக்கிறது. பின்னர் 96 ஏப்ரலில் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய சிலநாட்களின்பின்னர் மீண்டும் எடிசனுக்குப் போனேன். ஓலைக் கூரைகள் சிதைந்துபோய் இருந்தன. உள்ளே நுழைந்து வழமையாக நாம் அமரும் வாங்கில் சிலநொடிகள் அமர்ந்து பார்த்தேன். மேசையில் இருந்த தூசியை தட்டியபோது எனது பெயருடன் எனது 4 நண்பர்களின் பெயரை எழுதி இருந்ததை கண்டதும் கண்ணில் நீர் கட்டியது. அதற்கு கீழாக சற்று மெல்லிய எழுத்துகளில் எழுதப்பட்டு ஆனால் பிரகாசமாக தெரிந்தது அந்த தேவதையின் பெயர். காதல் பழசாவதும் இல்லை, தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை.

குறிப்பு

இக்கட்டுரை யாழ் உதயனின் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிதழான சூரியகாந்தியில் நவம்பர் 23, 2014, அன்று இடம்பெற்றது.

இக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97வரை, தன் பதின்மங்களிலும், பதின்மங்களை ஒட்டிய காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுதத் திட்டமிட்டுள்ளேன்.

-அருண்மொழிவர்மன்

நான் கடந்த நளபாகம்

உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து நாம் உணவுண்ட சாப்பாட்டுக்கடைகளின், தேநீர்க்கடைகளின், உணவு வண்டிகளின், இனிமையான பொழுதுகளை மீளநினைவூட்டும் குளிர்பானச்சாலைகளோ கூட இந்தக் கேள்விகளுக்குப் பதில்சொல்வதாக அமையக்கூடும்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கடைகளுக்குச் சென்று உணவு உண்ணுவது, அதுவும் குடும்பமாகச்சென்று உணவுண்ணுவது மிக அரிதானதொன்றாகவே இருந்துவந்தது. அது மரியாதைக்குறைவாகவும் பார்க்கப்பட்டது. தெருவுக்குத் தெரு இருக்கின்ற சாப்பாட்டுக்கடைகள் பெரிதும் ஆண்களின் ராஜ்ஜியமாகவே இருந்தன. அதுவும் அசைவம் பரிமாறுகின்ற கடைகளில் என்றால் அரிது அரிதிலும் அரிதாகிவிடும். வேலைக்குச் செல்லும் பெண்களை அவர்களது அலுவலகங்களுக்கு அருகாமையில் இருக்கின்ற தேநீர்ச்சாலைகளில் சிலசமயங்களில் காணமுடியும். குளிர்பானசாலைகளில் ஓரளவுக்கு பெண்களைக் காணலாம். மற்றும்படி கடைச்சாப்பாடோ அல்லது கடையில் சென்று சாப்பிடுவதோ தேவையின் காரணமானதாக அமைந்ததே அன்று, கொண்டாட்டமாக அமையவில்லை. கடை உணவு என்று மாத்திரமல்ல உணவு என்பதைக் கொண்டாட்டமாக அணுகும் வழக்கம் குறைவானதாகவே இருந்தது. புலம்பெயர் நாடுகளில் பல்வேறு துறைகளில் வெற்றிக்கொடிகட்டியதாக சொல்லப்படும் ஈழத்தமிழர்கள் “தமிழ்உணவுகளை” பரிமாறும், அமர்ந்து உணவு உண்ணக்கூடிய உணவு விடுதிகளில் (Restaurant) சொல்லிக்கொள்ளும்படியான எந்த வெற்றியையும் பெறவில்லை என்பதையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதே.

ஆனைக்கோட்டை என்றவுடன் புகழ்பெற்ற ஆனைக்கோட்டை நல்லெண்ணை அனேகம்பேருக்கு நினைவுவரும். ஆனைக்கோட்டைக்கு சென்று அங்கே மூத்த விநாயகர் கோயிலுக்கு பக்கத்தில் உள்ள குளத்துடன்கூடிய சிறியகடையில் வடை சாப்பிட்டவர்களுக்கு ஆனைக்கோட்டை என்றாலே வடைக்கடை தான் ஞாபகம் வரும். மிகச் சிறியகடை. அங்கே தாமரை இலையில் தான் வடையைப் பரிமாறுவார்கள். எப்போது போனாலும் சுட்ட வடையை கொண்டுவந்த வெளியில் இருக்கும் கண்ணாடி அலுமாரியில் தூக்கிக் கொட்டியபடியே இருக்கும் ஒரு கடைவேலையாளைக் காணக்கூடியதாக இருக்கும். வடையுடன் சட்டினியும் பரிமாறப்படும். ஒரு வடை 5 ரூபாய் என்றும், தேநீர் 3 ரூபாய் என்றும் நினைவு. நண்பர்களாகச் சென்று சாப்பிடுவோம். ஒருமுறை பந்தயம் வைத்து தெய்வீகன் என்ற நண்பன் 20 வடைக்கு மேலாக சாப்பிட்டதாக ஞாபகம். அதுவரை எம்மால் மறக்கமுடியாத கடையாக இருந்தவர்கள் அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்களுக்கு மறக்கமுடியாதவர்களாக நாங்களும் மாறிப்போனோம். அருமையான இட்லி செய்வார்கள் என்றும் நினைவிருக்கின்றது. அப்போது சிறுவர்களாக இருந்த நாம் அங்கே சென்று சாப்பிடும்போது தயிர்வடையை விரும்பிச் சாப்பிடுவோம். தயிர் வடை சாப்பிட்டுவிட்டு தேநீர் கேட்டால், கடையில் இருக்கும் ஐயா பால் கலக்காத வெறுந்தேநீர் மாத்திரம் தருவார். தயிர்வடை சாப்பிட்டுவிட்டு பால் கலந்த தேநீர் அருந்தினால் வயிற்றுக்கோளாறு வருமாம்.

இளையதம்பி போசனசாலை என்றொரு கடை மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையில் இருந்தது. அசைவ உணவுகளும் பரிமாறுவர். தற்போது சரியாக நினைவில் இல்லாத ஏதோ காரணங்களால் சிறுவயதில் ஓரிரு தடவைகள் அங்கு சென்று மீன் சாப்பாட்டுப் பார்சல்கள் வாங்கியிருக்கின்றேன். வாடிக்கையாளார்களுக்கு என்ன உண்ணக் கொடுக்கின்றோம் என்பதில் அக்கறைகொண்டவர்கள் கடையை நடத்திய தம்பதியினர். ஒருநாள் நான் உணவு தயாராவதற்காகக் காத்திருந்தபோது ஒரு நடுத்தர வயதினர் உணவுவாங்க வந்தார். தனக்கு நீரிழிவு இருப்பதாகவும், சில கறிகளை பார்சலில் கட்டவேண்டாம் என்றும் கூறினார். அவரை சில நிமிடங்கள் பொறுக்கும்படி கூறிவிட்டு, உடனேயே முருங்கையிலையை கடகடவென வெட்டி கண்முன்னாலேயே வறை செய்துகொடுத்தார் உரிமையாள பெண்மணி. அவர் விறுவிறுவென முருங்கையிலையை வெட்டியதும், வேகவேகமாக வறையைச் செய்துமுடித்ததும் இப்போதும் எனக்குள் காட்சிப்படமாக இருக்கின்றது. அந்தக் கடைபற்றிய என் இறுதி நினைவு இதுவாக இருந்து 95ம் ஆண்டு இடம்பெற்ற ஷெல்தாக்குதலில் அந்தக் கடை பலத்த சேதமடைந்ததென்ற செய்தியை நான் அறியாமல் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

“மிதிவெடி” என்றொரு சிற்றுண்டி. ஈழத்திற்கே பிரத்தியேகமானது. ஈழத்தமிழர்களால் புலம்பெயர் நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது. எனக்குத் தெரிந்து இதனை தயாரித்த முதல் கடை ஆனைக்கோட்டையில் இருந்த “சும்மா டீ ரூம்” என்ற கடையினர். சும்மா டீ ரூம் என்ற கடையும் அதற்கடுத்ததாக ஒரு மதுபானசாலையும் இருக்கும். ஒரே உரிமையாளர்கள் என நினைக்கின்றேன். அதனால் அப்போது சிறுவர்களான எனக்கும் பிரசன்னா என்ற என் நண்பனுக்கும் அங்கே சென்று உண்பதில் ஒரு சின்ன “த்ரில்”. மிதிவெடி என்றால் மதிய உணவுக்காக தயாரிக்கப்பட்ட அசைவ உணவுகள் அனைத்தையும், குறிப்பாக கணவாய், இறால், மீன், இறைச்சி வகை என்பவற்றுடன் அவித்த முட்டையின் ஒருபங்கும் சேர்த்து “கட்லட்” செய்யும் நுட்பத்துடன் ஆனால் சற்று தட்டையான உருளை வடிவில் பொறித்து வைத்திருப்பார்கள்.

92-93ம் ஆண்டுகளில் உருளைக்கிழங்கிற்கு பொருளாதாரத்தடை காரணமாக பெரும்பற்றாக்குறை நிலவியது. இறைச்சிகளை விட விலை கூடியதாக உருளைக்கிழங்கு இருந்திருக்கும் என நினைக்கின்றேன். சில கடைகளில் “இன்றைய ஸ்பெசல் உருளைக்கிழங்குக் கறி” என்ற விளம்பரப் பலகைகள் இருப்பதைக் கண்டிருக்கின்றேன். சோபிதா புத்தக நிலையத்தைக் கடந்து கஸ்தூரியார் வீதியால் செல்லும் வழியில் ஒரு கடையில் “இங்கே உருளைக்கிழங்கு கறியுடன் மசாலா தோசை கிடைக்கும்” என்ற அறிவிப்பைக் கண்டதும் ஞாபகம் இருக்கின்றது. மசால் தோசை என்றவுடன் உடனே நினைவுவரும் இன்னொரு கடை தாமோதரவிலாஸ். தெருவோரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு ஓடையால நடந்துபோகவேண்டும். உள்ளே மிக பிரபலமான மரக்கறி உணவுக்கடை. சிறுவயதில் அப்பாவுடன் பலதடவைகள் அங்கே சென்றிருக்கின்றேன். அனேகம் மசால்தோசையும் தயிர்வடையும் சாப்பிடுவோம். வீடு திரும்பும்போது கார முறுக்கும், பூந்தி முறுக்கும் வாங்கிச்செல்லுவோம். வேறு கடைகளுக்குப் போகின்றபோது என்னவேண்டும் என்று கேட்டு வாங்கித்தருவார் அப்பா. தாமோதரவிலாசில் மாத்திரம் அவர் கேட்டு நாம் ஒன்றும் வேண்டாம் என்றாலும் இவற்றை வாங்கித்தருவார். தாமோதரவிலாஸ் போல பிரபலமாக இருந்த இன்னும் இரண்டு உணவகங்கள் மலாயன் கபேயும், சரஸ்வதி விலாஸ் என்ற கடையும். மலாயன் கபேயில் அதிகம் சாப்பிட்டதில்லை. சிறுவயதில் ஒருமுறை பெரியப்பாவும் பெரியம்மாவும் மலாயன் கபே கோழி வாங்கிவந்துள்ளதாக சொன்னார்கள். நானும் கொழும்பு சென்றிருந்தபோது அங்கு தெருக்களில் முழுக்கோழியை அப்படியே வாட்டி விற்பதைக் கற்பனையில் நிறுத்தி அதுபோல ஒரு கோழி என்று நினைத்திருந்தேன். கடைசியில் அவர்கள் ஒரு சிறிய காகிதப் பையைத் தந்தார்கள். திறந்துபார்த்தபோது உள்ளே மஞ்சளாக என்னவோ இருந்தது. பிறகுதான் தெரிந்தது, அவர்கள் மலாயன் கபே போளி என்று சொன்னதை நான் கோழி என்று நினைத்துக்கொண்டிருந்துவிட்டேன் என்று. ஆனால் சரஸ்வதி விலாசிற்கு 96ம் ஆண்டு “ட்யூசன்” காரணமாக தொடர்ந்து சென்றுள்ளோம். வடைக்குப் பிரபலமான இன்னுமொரு கடை. அங்கே வடைக்கு அதிகாலை 4 மணி முதலே மா அரைப்பதாக ஒரு நண்பன் சொல்வான். இல்லை இல்லை, இரண்டு மணிக்கே ஆயத்தப்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்று இன்னொரு நண்பன் சொல்வான். வடையை சட்னியில் குளிப்பாட்டி உண்டபடியே இது பற்றி ஆராய்ந்து கொள்வோம். கடையில் ஒரே ஒரு பிரச்சனை, இலையில் ஏதாவது உணவு மிச்சம் வைத்தால் கடையில் மேற்பார்வையாளராக இருந்த ஐயா திட்டத்தொடங்கிவிடுவார். அதற்கும் ஒரு வழி பிடித்தோம். அவரிடம் தண்ணீர் கொண்டுவரும்படியோ அல்லது “பில்” கொண்டுவரும்படியோ கேட்போம். அவர் எம்மைவிட்டு நகர்ந்ததும் மின்னல் வேகத்தில் எல்லா இலைகளையும் தூக்கி எறிந்துவிடுவோம்.

இதுபோல கொக்குவிலில் நந்தினி பேக்கறி என்று பேக்கறி இருந்தது. அப்போது கொக்குவில் எடிசனில் படித்துக்கொண்டிருந்த நாம் மாலை நேரங்களில் வீடு திரும்பும்போது அங்கே சுடச் சுட பாண் தயாராகி அந்த நறுமனம் அவ்விடம் முழுவதும் பரவிவிடும். அங்கே “ரோஸ்” பாணும், வாழைப்பழமும் வாங்கிக்கொள்ளுவோம். அப்போது யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இருக்கவில்லை. அதனால் அஸ்ட்ரா மாஜரின் சிறிய பக்கற்றுகளில் வரும். விலை 7 ரூபாய். அவற்றை தண்ணீருக்குள் போட்டு வைத்திருப்பார்கள். அப்படியானால் மாஜரின் உருகி திரவமாகாது மாஜரினுக்குரிய கெட்டித்தன்மையுடன் இருக்கும். அவற்றிலும் சிலவற்றை வாங்கிக்கொண்டு ஆனைக்கோட்டையில் இருக்கின்ற மண்பிட்டிகள் நோக்கிச் செல்லுவோம். சுடச்சுட இருக்கின்ற ரோஸ் பாணை குறுக்காக இரண்டாகப் பிளந்து அதற்குள் அஸ்ரா மாஜரினை அப்படியே இடுவோம். பாணின் சூட்டில் மாஜரின் உருகி பாணுக்குள் ஊறும். அதனை வாழைப்பழத்தையும் கடித்துக்கொண்டு உண்டபடியே வெட்டிக் கதைகள் முதல் பின்னாளில் காவியங்களாகப்போகும் பல காதற்கதைகளையும் பேசிக்கொண்டிருப்போம். இந்தக் கதைகளை மறைந்திருந்த யாராவது கேட்டிருந்தால் இயக்குனர் விக்கிரமனிற்கு ஏற்ற சில காதல் கதைகளும், 90களில் நடிகர் விஜய் நடித்த திரைப்படங்கள் சிலவற்றுக்கான வசனங்களும் இலவசமாகக் கிடைத்திருக்கும்.

தாவடிச் சந்தியில் அப்போது ஒரு கொத்துரொட்டிக்கடை இருந்தது. பிளாஸ்ரிக் உணவுத்தட்டுகளில் “சொப்பிங் பை” ஒன்றினையோ அல்லது சாப்பாட்டுப் பொதிகட்டும் பொலித்தீன் பேப்பர் ஒன்றினையோ போட்டு அதன்மேல் கொத்துரொட்டியைப் பரிமாறுவார்கள். முட்டைக்கொத்து 15 ரூபாய் என்றும், ஸ்பெசல் கொத்து 25 ரூபாய் என்றும் நினைவு. அதுபோல பின்னர் உயர்தர வகுப்பில் படிக்கும்போது சயன்ஸ் ஹாலிற்கு அருகில் இருக்கின்ற ஒருகடையிலும் ரொட்டியும் “மாட்டு ரோஸ்” உம் உண்போம். கடையில் போய் மாட்டு ரோஸும், ரொட்டியும் சாப்பிட்டாலே ஒரு “கெத்தான” உணர்வு வரும் (இப்போது பரோட்டா என்றே யாழ்ப்பாணத்திலும் அழைக்கப்படுகின்றது ஆனால் அப்போது ரொட்டி என்றே அழைக்கப்பட்டது). இவ்வாறு கடைகளில், அதுவும் சிறுவர்கள் அசைவ உணவகங்களில் உணவுண்பது எல்லாம் கலகம் செய்வதாகப் பார்க்கப்பட்ட காலம் அது.

அதுபோல கொக்குவில நாச்சிமார் கோவிலடி தாண்டிச்செல்பவர்கள் அனேகம் தவறவிட்டிருக்கமுடியாத ஒருவர் நாச்சிமார்கோவிலுக்கு எதிராக சிறிய மோர்க்கடை வைத்திருப்பவர். மோர் ஒன்றினை அவர் தயாரிப்பதே அவ்வளவும் அழகாக ரசிக்கக்கூடியதாக இருக்கும். சிறிய சிறிய கண்ணாடிப்போத்தல்களில் ஊறவிட்ட வெந்தயம், தண்ணீரில் ஊறவிட்ட ஊறுகாய், வெட்டிய சிறுவெங்காயம், வெட்டிய பச்சைமிளகாய், உப்புக்கரைசல் என்பவற்றை வைத்திருப்பார். மோர் கேட்டால் கண்ணாடிக் குவளையை எடுத்து நன்றாக துடைப்பார். பின்னர் நிதானமாக ஒவ்வொரு கரைசல்களில் இருந்தும் கரண்டியால் எடுத்து கண்ணாடிக்குவளையில் ஊற்றுவார். அதன் பிறகு குவளை நிரம்பும் வரை மோரை ஊற்றித் தருவார். ஐந்தே ஐந்து ரூபாய் என்று ஞாபகம்.

உணவு என்பது இன்றுவரை எனக்கு ரசனைபூர்வமாக அணுக்ககூடிய ஒன்றாகவே இருக்கின்றது. நான் உண்ட அனேகமான நல்ல உணவுகளை தயாரித்தவர்களை விசாரித்துச் சென்று பாராட்டியிருக்கின்றேன். அவர்கள் அந்த உணவை எப்படி ஆக்கினார்கள் என்று குறிப்புகளைக் கேட்டிருக்கின்றேன். பின்னொருநாளில் அதை எவ்விதம் வீட்டில் எனக்குப் பிடித்தவர்களுக்குச் செய்துதர முயன்றிருக்கின்றேன். ரொரன்றோவில் எனக்குப்பிடித்த தமிழ் உணவகங்களின் சமையல் கலைஞர்களை என் திருமணவரவேற்பு விழாவிற்கு அழைத்து மகிழ்ந்திருக்கின்றேன். அவர்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளை வைத்திருக்கின்றேன். எனக்குப்பிடித்த இலக்கியப் படைப்பொன்றைச் செய்தவரையும், எனக்குப்பிடித்த திரைப்படங்களின் இயக்குனர்களையும் கொண்டாடுவதுபோல எனக்குப் பிடித்த உணவுகளைத் தயாரித்தவர்களையும் கொண்டாடிய்யிருக்கின்றேன். என் வாழ்வில் இனிமையான பல பொழுதுகளை உருவாக்கியவர்கள் அவர்கள். கலைஞர்கள். படைப்பவர்கள். அதனால் அவர்களும் இறைவர்கள்.

குறிப்பு

இக்கட்டுரை யாழ் உதயனின் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிதழான சூரியகாந்தியில் தொடர்ச்சியாக நவம்பர் 9, 2014, நவம்பர் 16, 2014 ஆகிய இரண்டுவாரங்களில் இடம்பெற்றது.

இக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97வரை, தன் பதின்மங்களிலும், பதின்மங்களை ஒட்டிய காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுதத் திட்டமிட்டுள்ளேன்.

-அருண்மொழிவர்மன்

185ம் கட்டை, மீசாலை வடக்கு : நினைவுகள்

jaffna2சோகங்களில் எல்லாம் பெரிய சோகம் சொந்த ஊரை விட்டுப் பிரியும் சோகம் என்று போறாளே பொன்னுத்தாயி பாடலிற்கு முன்னராக பாரதிராஜாவின் குரலில் ஒரு சிறு அறிமுகம் ஒன்று செய்துவைக்கப்படும். நினைவுதெரிந்து எந்த இடப்பெயர்வையும் அனுபவித்திராத அந்தவயதில் இதெல்லாம் ஒரு வலியா என்றுதான் நினைத்திருந்தேன். பின்னாட்களில் அந்த வலியை 1995ம் ஆண்டு ஒக்ரோபர் 30ல் நானும் உணர்ந்தேன். உறவினர் ஒருவரின் மரணச்சடங்கிற்காக என்னையும் ஒரு தம்பியையும் தவிர குடும்பத்தில் மற்ற எல்லாரும் கொழும்பு சென்றிருந்தனர். நாம் அப்பம்மா மற்றும் அப்பாவின் சகோதரர்களுடன் தங்கியிருந்தோம். முன்னேறிப்பாய்ச்சலின் வெற்றிக்குப் பின்னர் மீளவும் போர்மூண்டிருந்த காலம். அதற்கேற்றாற்போல பிரசாரக்கூட்டங்களும் மூலைக்குமூலை நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆயினும், இத்தனை சடுதியாக யாழ்ப்பாண வெளியேற்றம் நிகழக்கூடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. நினைக்காதவை எல்லாம் நடந்தவைதானே எமது வாழ்க்கையே ! யாழ்ப்பாணத்தைவிட்டு மக்களோடு மக்களாக வெளியேறி தென்மராட்சியை வந்தடைந்திருந்தோம். மிக மோசமான நெருக்கடிகளில் மனிதர்கள் எப்படி தெய்வங்கள் ஆகின்றார்கள் என்பதையும், மனிதன் மகத்தான சல்லியப்பயல் என்பதையும் ஒருங்கே அறியும்படியான நினைவுகளை மனதில் பதியவைத்த ஒரு பயணம், பாடம், அலைவு அது.

கடைசியாக மீசாலையில் இருந்த எனது பெரியம்மாவின் வீட்டில் தஞ்சமடைந்திருந்தோம். 185ம் கட்டை, மீசாலை வடக்கு, கொடிகாமம். இந்த முகவரியை இப்போது நினைத்தாலும் மிக இனிமையான அந்த நினைவுகள் மீள ஞாபகம் வரும். கிட்டத்தட்ட 7 மாதங்களும் மறக்கவே முடியாத இனிய பொழுதுகள். வெறுங்கையுடன் தான் நாம் இடம்பெயர்ந்து சென்றிருந்தோம். பெரியம்மாவின் வீட்டு வளவு மிகப் பெரியதென்றாலும் சிறியவீடு. அதனால் வீட்டில் சிலரும், வீட்டிற்கு பின்னால் தனியாக கொட்டில் போட்டு சிலருமாகவே இருந்தோம். எமக்கு முன் அறிமுகம் இல்லாத வேறுசிலரும் கூட அதேவளவில் தங்கியிருந்தனர். பாடசாலைகள் இல்லை. மாற்று உடுப்புகளும் அதிகம் இல்லை. பாடப்புத்தகங்கள் சிலவற்றை எடுத்து வந்திருந்தாலும், இருந்து படிக்க மேசையோ, கதிரையோ எதுவும் இல்லை. பொருளாதாரத்தடை வேறு. அதன் காரணமாக பொருட்களின் விலையேற்றங்களும் குடும்பங்களை அழுத்தத்தொடங்கியிருந்தன. ஆயினும் எமது வயது காரணமாக பொறுப்புகள் அதிகம் இருக்கவில்லை. அதேநேரம் இன்னுமொரு இடப்பெயர்வு எப்போது வேணுமானாலும் வரக்கூடும் என்கிற பதற்றம் உருவாகியிருந்தது. பெரும்போர் ஒன்று ஆரம்பமாகவிருப்பதை ஊகிக்கமுடிந்தது. மீளவும் பிரச்சாரக்கூட்டங்கள் முழுவேகத்தில் நடைபெறத்தொடங்கியிருந்தன. வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையும் மெல்லிய விரக்தியும் குடிகொள்ளத் தொடங்கியிருந்தன. ஆனால் மனிதன் எப்போதும் பல ஆச்சர்யங்கள் நிரம்பியவன். அடுத்தகணம் பற்றிய நம்பிக்கையும் உத்தரவாதமும் இல்லாமல் போகின்றபோது அந்தக் கணத்திலேயே வாழ்வது நிகழத் தொடங்கிவிடுகின்றது. பேரானந்த நிலை அது. அதுவே அங்கே நடந்தது.

தென்மராட்சியில் மறக்க முடியாத பல பொழுதுகளை உருவாக்கிய பெருமை உங்களில் பலரும் அறிந்திருக்ககூடிய சண்முகம் அண்ணையையே சேரும். வண்ணைச் சிவன் கோவிலின் முன்புறமாக இருக்கின்ற சைவ உணவு நிலையத்தின் உரிமையாளர்தான் சண்முகம் அண்ணை. அவர் அப்போது சாவகச்சேரியில் கடை வைத்திருந்தார். அவர் தங்கியிருந்த வீடும் சாவகச்சேரியிலேயே இருந்தது. அந்த வீட்டில் முன்பாக 96ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டிகளை அவர் ரீவி, ஜெனரேற்றர் கொண்டு ஒலிபரப்பியதுடன் அதை கிரிக்கெட்ரசிகர்கள் எவரும் வந்து பார்க்கலாம் என்றும் அனுமதியளித்தார். அப்போது நாம் சிறுவர்களாக இருந்தபோதும், யாழ்நகரில் இருந்தகாலங்களில் அங்கு பரவலாக நடைபெற்றுக்கொண்டிருந்த கிரிக்கெட் போட்டிகளை அனேகம் சென்று பார்த்திருக்கின்றோம் என்பதால் அங்கிருந்த அனேக கிரிக்கெட்ரசிகர்களை நாம் அறிந்துவைத்திருந்தோம். தவிர, அப்போதைய ஈழநாதம் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் பற்றி பல்வேறு கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. பெரும்பாலான கட்டுரைகளை தவபாலன், சுஜீவன் என்போர் எழுதுவர். இவற்றில் சுஜீவன் மூலம் எமக்கும் சண்முகம் அண்ணையின் அறிமுகம் உருவாக்கப்பட்டு விசாகன், தயாபரன் ஆகிய இரண்டு நண்பர்களுடன் நானும் அங்கே போனேன். நினைவுதெரிந்து நேரலையில் பார்க்கும் முதல் கிரிக்கெட் போட்டிகள். அதுவரை ஸ்போர்ட்ஸ் ஸ்ரார் இதழில் புகைப்படங்களைப் பார்த்தும் வர்ணனைகளைக் கேட்டும் கற்பனையாலேயே பார்த்த கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் பார்ப்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த அணி வெல்லவேண்டும் என்ற பதற்றத்துடன் இருந்ததைக் காணமுடிந்தது. சண்முகம் அண்ணை தென்னாபிரிக்க அணியின் ஆதரவாளர். தென்னாபிரிக்கா எதிர்பாராதவிதமாக மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது. ரொஜர் ஹார்பரின் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகள் விழுந்தபோது சண்முகம் அண்ணை இருந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிவிட்டதாக நினைவு. சுஜீவன் இலங்கை அணி ஆதரவாளர். அதுபோல இன்னொருவர் வருவார். அவரின் பெயர் கூடத் தெரியாது. ஆனால் “இந்தியர் சப்போற்றர்” என்று சொன்னால் அவரை அனைவருக்கும் தெரியும். இந்திய அணி விளையடும்போது அவ்வளவு பதற்றத்துடன் காணப்படுவார். உலகக்கிண்ணப் போட்டிகள் முடிவதற்கு முன்னர் சுஜீவனும் அவரும் கைகலப்பில் ஈடுபடலாம் என்று எதிர்பார்த்தோம். அப்படியேதும் நடக்கவில்லை.

சாப்பாட்டுக் கடைகளுக்கு பரவலாகச் சென்று சாப்பிடத் தொடங்கியதும் இக்காலப்பகுதியில் தான். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் நாட்களில் மதியம் நாம் விழுந்தடித்துச் சென்று சண்முகம் அண்ணையின் கடையிலோ அல்லது வேறு கடைகளிற்கோ சென்று வடையும் தேநீரும் உண்போம். சிலசமயம் ரொலெக்சிலும் “ரோல்ஸ்” அல்லது சாப்பாடு உண்போம். யாழ்ப்பாணத்தில் இருக்கின்றபோதும் ரொலெக்ஸ் பாண் (அப்போது வெதுப்பி என்ற பெயர் பாவிக்கப்பட்டது) மிகப் பிரபலமானதாக இருந்தது. பாணுக்கு தட்டுப்பாடு நிலவாத காலங்களில் கூட ரொலெக்சில் வரிசையில் நின்று பாண் வாங்குவதை அவதானித்திருக்கின்றேன். அன்றைய யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் தினேஷ் வெதுப்பகமும் ரொலெக்சும் (ரொலெக்சும் அப்போது தமிழ் பெயர் ஒன்றிற்கு மாற்றப்பட்டிருந்தது) பாணிற்கு பிரபலமானவை. போர்ச் சூழலில் கூட அங்கே பேஸ்ற்றீகள் சுடச்சுட செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்தன.

பாடசாலை இல்லாததாலும் பகல் முழுவதும் சும்மா இருப்பதால் நாளெல்லாம் பாடல் கேட்கும் பழக்கமும் இருந்தது. அப்போது எமக்கு மிக விருப்பமான பாடல்களில் ஒன்றாக திரு.மூர்த்தி திரைப்படத்தில் வரும் செங்குருவி, செங்குருவி என்ற பாடலும் இருந்தது. ஒரு முறை நானும் விசாகனும் எனது பெரியம்மாவை வேலைக்கனுப்ப கொடிகாமச் சந்திக்கு சென்றிருந்தோம். பெரியம்மாவை பஸ்சில் ஏற்றி விட்டு திரும்பும் போது மூலையில் இருந்த கடையின் வானொலி “விளம்பரங்களை அடுத்து திரு மூர்த்தி திரைப்படத்தில் எஸ்பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி இணைந்து பாடிய பாடல் ஒலிபரப்பாகும். பாடலுக்கு இசை தேவா” என்று ஒலிப்பானது. அந்த பாடலைக் கேட்டே ஆகவேண்டும் என்று இருவரும் ஒரே நேரத்தில் யோசித்தோம். கடைக்கு வெளியில், தெருவோரமாக இருந்து பாடல் கேட்டால் ஒழுங்காக இராது. வாகன இரைச்சல் வேறு. சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே நுழைந்தோம். அது ஒரு அப்பக் கடை. ஆளுக்கு இரண்டு அப்பமும் தேனீரும் பாடலைக் கேட்டபடியே, பாடலைக் கேட்பதற்காகவே சாப்பிட்டோம்.

யாழ்ப்பாணத்தில் இருந்த அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் புத்தகங்கள் வாசிக்கவில்லை. ஆனால் இந்திய சஞ்சிகைகள் அப்போது எமக்கு பெரியப்பாவால் அனுப்பப்பட்டு வந்துகொண்டிருந்தன. மானிப்பாய் தொகுதியினருக்கான தபால்நிலையம் நுணாவிலுக்கு அண்மையில் இருந்த வீடொன்றில் தற்காலிகமாக இயங்கியது. ஒருமுறை அப்பாவும் நானும் அங்கே சென்றபோது எம்முடைய முகவரிக்கு வந்திருந்த புத்தங்கள் ஒரு சாக்கொன்றினுள் கட்டப்பட்டு பெரும் மூட்டையாக இருந்தது. யோசித்துப்பாருங்கள் ஒரு மூட்டை முழுக்க இதழ்கள், மாத நாவல்கள், எப்படி இருக்கும்?

முன்னர் கொக்குவில் நாச்சிமார் கோவிலடியில் இயங்கி வந்த ஞானம் புத்தகநிலையம் இக்காலப்பகுதியில் புத்தூர்ச்சந்திக்கு அருகாமையில் இயங்கியது. நானும் விசாகன் என்ற நண்பனும் அங்கே அடிக்கடி சென்று பேசிக்கொண்டிருப்போம். சில சமயங்களில் அவர் எம்மைக் கடையைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு தன் வேலைகளைப் பார்க்கக் கிளம்பிடுவார். நாம் அங்கிருந்து பாட்டுப் புத்தகங்களையும், சினிமாச் செய்திகளையும் பார்த்துக்கொண்டிருப்போம். அன்றாட களநிலவரங்களை உதயன் பத்திரிகை மூலம் அறிந்துகொண்டோம். வீரகேசரி ஞாயிறு இதழ்கள் வரும். அனேகமாக ஒவ்வொரு இதழிலும் நடிகர் பிரசாந் பற்றி வீரகேசரியில் ஏதாவது செய்தி வரும். ஒருமுறை கிட்டத்தட்ட பத்து திரைப்படங்களின் பெயர்களும் சில புகைப்படங்களும் போட்டு, இவையெல்லாம் பிரசாந் நடித்துவெளிவர உள்ள திரைப்படங்கள் என்று கிட்டத்தட்ட அரைப்பக்கத்துக்கு ஒரு செய்திவந்தது. அதில் ஒரு படம் கூட வெளியானதாக நினைவில்லை (புலித்தேவன், உளிச்சத்தம், துளசி, வைரம், படகோட்டி பாபு, ஜித்தன் என்கிற பெயர்கள் இப்போதும் நினைவில் உள்ளன).

இது தவிர சில சமயம் விடத்தல் பளையில் இருந்துவெளிக்கிட்டு மட்டுவில், கைதடி என்று போகும் வழியில் இருக்கின்ற நண்பர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு போவோம், காணாமற்போன, தொடர்பில்லாது போன நண்பர்களை எங்காவது காணலாம் என்ற நப்பாசையுடன். யாழ்ப்பாண இடப்பெயர்வின்பின்னர் ஒருமுறை கூட காணாத, பேசிக்கொள்ளாத, தொடர்பேயில்லாது போன எத்தனையோ நட்புகள் உண்டு. கொக்குவிலில் எமக்கு கணக்கியல் கற்பித்த அரவிந்தன் என்ற ஆசிரியர் சிலதடவைகள் என் வீடு தேடிவந்து என்னுடனும் எப்போதும் என்னுடன் இருக்கும் நண்பர்கள் விசாகன், தயாபரனுடனும் பேசிக்கொண்டிருப்பார். நான் கல்விகற்ற ஆகச்சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் அவர். அப்போது இளைஞராக, பல்கலைக்கழக மாணவராக, எம்மைவிட சிலவயதுகளே கூடியவராக இருந்த அவரை எம் ஆசிரியர் என்று நம்புவதே என் பெற்றோருக்கு சிரமமாக இருந்தது. சில தடவைகள் நண்பர்கள் போல ஒன்றாக ஊர் சுற்றியும் இருக்கின்றோம். பூம்பொய்கை என்று சாவகச்சேரி சந்தியில் இருந்த குளிர்பானநிலையத்திற்கு கூட்டிச் சென்று ஐஸ்கிறீம் வாங்கித்தந்தும் இருக்கின்றார்.

இந்தக் காலகட்டம் பற்றி எழுதுவதற்கு இன்னும் ஏராளமான நினைவுகள் உள்ளன. எவ்வளவோ நெருக்கடிகளுக்குள் வாழ்ந்த அந்தக் காலப்பகுதியில் நாம் அந்த வயதில் வாழ்வை எதிர்கொண்டவிதம் இவ்வாறாக இருந்தது. அன்று இருந்த பொருளாதார நெருக்கடி, காசோலையை மாற்றுவதற்கு கூட  மக்கள் எதிர்கொண்ட சிரமம், காசோலையை காசாக்க 10% வரை கொமிசனை மக்கள் கொடுக்கவேண்டி நேர்ந்த கொடுமை என்று பேச எத்தனையோ இருக்கின்றன. அன்று நேசித்த தென்னிந்திய திரைப்படங்கள், கிரிக்கெட் பற்றிய இன்றைய அவதானமும் முழுக்கவும் மாறி இருக்கின்றது. ஆனால் அன்று இவ்விதமே வாழ்ந்தோம் என்பதுதான் நிஜம். அப்போது நான் புரட்சிகரமானவனாக இருந்தேன் என்று பொய்சொல்லி என் அரசியலை சரியானதாக்குவதைவிட, அன்றைய வாழ்வை நான் எதிர்கொண்டவிதத்தை ஆவணப்படுத்துவதே நேர் என்று நினைக்கின்றேன்.

பின்குறிப்பு :

இக்கட்டுரை யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழான சூரியகாந்திக்காக எழுதப்பட்டு 02-11-2014 அன்று வெளியானது.

இக்கட்டுரைகள் போர் சூழ்ந்த 90 முதல் 97 வரை, தன் பதின்மங்களிலும் பதின்மங்களை ஒட்டிய பருவங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வை, வாழ்வை அவன் எதிர்கொண்டவிதங்கள் பற்றிய நினைவுமீட்டல்களாக எழுதிவருகின்றேன்.