லண்டன்காரர்: அறிமுக உரை

லண்டன்ஈழத்து இலக்கியம், ஈழத்தவர் அடையாளம், அவர்கள் வாழ்வியல் பற்றிய கேள்விகளும் உரையாடல்களும் பெருமளவில் அண்மைக்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.  அண்மைக்காலமாக ஈழத்தவர்களது நாவல்களாகவும், குறுநாவல்களாகவும் பல்வேறு வெளியீடுகளையும் வாசிக்கக் கிடைத்திருக்கின்றது.  இவற்றின் பொதுத்தன்மையை எடுத்துக்கொண்டால் இவற்றில் பெரும்பாலனவை ஈழப்போரின் பிந்தைய காலகட்டங்களில் வெளியானவை, ஓரளவு சுய அனுபவக் குறிப்புகளை உள்வாங்கியவை.  அது தவறானதும் அல்ல.  கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான அரசியல் குழப்பங்களும், இடது சாரிய புரட்சிகர நடவடிக்கைகளிற்கான முயற்சிகளும், சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூகப் போராட்டங்களும் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த ஆயுதப் போராட்டமும் நடந்த நிலம் ஒன்றில் இருந்து வந்தவர்கள் இவற்றின் பாதிப்புகளைத் தவிர்த்து எவற்றைப் பேசுவது? இந்தப் போரும், அதன் நேரடியான விளைவுகளையும், பாதிப்புகளையும், உளவியல் ரீதியான தாக்கங்களையும் அனுபவிக்காமல் ஒருவராவது இருக்க முடியுமா?  நாம் எல்லாருமே போரை வெறுத்தாலும், போரைக்கண்டு ஓடினாலும் கூட, போருடன் வளர்ந்தவர்கள் என்பதுதானே யதார்த்தம்.  அப்படி இருக்கின்றபோது அரசியலைப் பேசாத பிரதி ஒன்றை எழுதுவது என்பது கூட எம்மவர்களைப் பொறுத்த்வரை மிகப் பெரிய அரசியல் அல்லவா?  போரின் இன்னொரு குழந்தை புலப்பெயர்வு.   அந்தப் புலம்பெயர் வாழ்வில் அங்கே தன்னைப் பொறுத்திக்கொள்ள முயலும் மக்களது வாழ்வின் இன்னொரு பக்கத்தை, பல்லின மக்கள் வாழும் பிரதேசங்களில் தம்மைப் பொருத்திக்கொள்வதிற்கு அவர்கள் படுகின்ற பாடுகளையும் பேசுகின்ற பிரதியே லண்டன்காரர். Continue reading

C-51 குடியுரிமையையும் சுதந்திரத்தையும் பறிக்கிறது -ராதிகா சிற்சபைஈசன்

Rathika Sitsabaiesan

கனடாவைப் பொறுத்தவரை நாம் பார்த்தால் கனடிய மைய நீரோட்ட அரசியலில் ஈடுபடும் தமிழர்களில் அனேகம் பேர் இலங்கையில் தமது ஆரம்பக் கல்வியைக் கற்று கனடாவிற்கு தமது மத்திம வயதுகளில் வந்தவர்கள்.  இந்த இடத்தில் நீங்கள் மிகச் சிறிய வயதில் கனடாவிற்கு வந்திருக்கின்றீர்கள்.  இலங்கை போன்ற ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் கூர்மை பெற்றிருக்கின்றபோது அங்கு அரசியல் ஆர்வம் வருவதற்கான காரணமும், உந்துதலும் வேறு.  உங்களது நிலைமையில் அது வேறு.  மையநீரோட்ட அல்லது நாடாளுமன்ற அரசியல் தொடர்பான உங்கள் பயணம் எவ்வாறு உருவானது?

அரசியல் என்பதை நான் சமூக அபிவிருத்தி என்பதாக வரையறை செய்கின்றேன்.  சமூக அபிவிருத்தி நோக்கிய பயணமாகவே எனது அரசியல் ஆர்வமும் உருவானது.  எனது ஏழாவது வயதில், நான் அப்போது வசித்துவந்த மிசிசாகாவில் எனது வீட்டிற்கு அருகாமையாக ஒரு தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கவேண்டும் என்று எனது தந்தையுடன் சேர்ந்து கையெழுத்துகளைச் சேகரித்து அதில் வெற்றியும் பெற்றிருந்தது பற்றி முன்னரும் குறிப்பிட்டிருக்கின்றேன்.  எனது ஏழாவது வயதிலேயே நான் ஒரு அரசியல்வாதியாக ஆகிவிட்டேன் என்று குறிப்பிடமுடியும்.  அதற்குப் பிறகு தொடர்ச்சியாக பாடசாலையிலும், பின்னர் பல்கலைக்கழகங்களிலும் மாணவர் அமைப்புகளில் தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கிவந்தேன்.

Continue reading

குறும்படப் பயிற்சிப் பட்டறை : சர்க்கரைப் பந்தலிற் தேன்மழை

Amshan Kumarஈழத்தமிழர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்வது போல தமக்கான தனியான பண்பாட்டு வெளிப்பாடுகளையும் பேணவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு.  துரதிஸ்டவசமாக, பெரும்பாலும் நாம் எம்மை தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுடன் கலந்தே அடையாளப்படுத்தி வருகின்றோம்.  இது எமக்கான தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை அழித்துவிடுவதுடன், தேச உருவாக்கத்திலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது.  எளிய உதாரணமாக, புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற திருமண விழாக்கள் போன்ற சடங்குகளில் தமிழகத்து, வட இந்திய பாணியினது செல்வாக்குகள் அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். Continue reading

ரொரன்றோ தமிழ்ச் சங்கம் | ரொரன்றோ பொது நூலகம் | வைரமுத்து – குமுதம் கார்ப்பரேட் வியாபாரம்

ரொரன்றோ தமிழ் சங்கம்

ரொரன்றோ தமிழ்ச் சங்கம் சார்பில் ஒழுங்கு செய்யப்படும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்களில் இயன்றவரை கலந்துகொள்ளுகின்றேன்.  ஒவ்வொரு மாதமும் இறுதிச் சனிக்கிழமை மாலை என்று ஒரு குறித்த தினத்தில் நிகழ்வுகள் தொடர்ச்சியாக திட்டமிட்டு நடத்தப்படுவது முக்கியமானது.  அதுபோல ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு மையப் பொருள் தேர்வு செய்யப்பட்டு, அது பற்றிய ஒரு விரிவான கட்டுரை வாசிப்பு ஒன்றும், பின்னர் அதை ஒட்டிய துணைத் தலைப்புகளிலான கட்டுரை வாசிப்புகளுமாக நிகழ்வு நடைபெற்று வருகின்றது.  இறுதியாக ஐயந்தெளிதல் அரங்கு என்ற பெயரில் உரையாடலுக்கான நேரமும் ஒதுக்கப்படுகின்றது.  மேலும், இந்நிகழ்வுகளில் தேர்வுசெய்யப்படும் தலைப்புகளும் கனதியைக் கொடுப்பனவாகவே இருக்கின்றன.  சில சந்தர்ப்பங்களில் உரையாற்றுபவர்கள் தலைப்புகளை விலத்தியோ, அதற்கான ஆழத்திலோ பேசாதபோதும், தொடர்ச்சியாக இந்தக் கனதியைப் பேணுவது நாளடைவில் உரையாற்றுபவர்களையும் அந்தத் தளத்தைச் சென்றடைய உதவும் என்பது நம்பிக்கை. Continue reading

வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

 

மரணம் மனிதர்களை மறக்கச்செய்துவிடுகின்றது, மகா மனிதர்களை மனதில் நிலைக்கச்செய்துவிடுகின்றது. பழகியவர்களைக் கூட மரணத்தின்பின்னர் மறந்துசெல்கின்ற இன்றைய காலத்தில், இலேசான அறிமுகம் மாத்திரம் உள்ள ஒருவரை மரணத்தின் பின்னர் அறிந்து, அவர் பற்றி மதிப்புற்று, இன்னும் இன்னும் தேடி அறிந்து அதிசயிப்பது என்பது அரிதாகவே நிகழ்கின்றது. அப்படி ஒருவர் பவன் என்று பலராலும் அறியப்பட்ட சத்தியபவன் சத்தியசீலன் அவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் சிலர் இணைந்து இலக்கிய நிகழ்வொன்றை ஒழுங்குசெய்திருந்தோம். எம் அனைவருக்கும் அது முதன்முயற்சி. அப்போது தமிழ்வண் தொலைக்காட்சியில் பணிபுரிந்துகொண்டிருந்த நண்பன் ஒருவன் எமது நிகழ்வை ஒளிப்பதிவுசெய்து தொலைக்காட்சியில் சிறு ஒளித்துண்டுகளாக ஒளிபரப்பலாம் என்று கூறி, ஊக்குவித்ததுடன் தமது தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து ஒருவர் வருவார் என்றும் கூறி இருந்தான். வந்தவர், புன்னகை பூத்த முகம் என்று சொல்வார்களே அவ்விதமே இருந்து அமைதியாக தனது வேலைக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். புரொஜெக்ரர் ஒன்றை இணைக்க முயன்று கொண்டிருந்தோம். அது பற்றிய அறிமுகம் எமக்கு இருக்கவில்லை. நாம் பதற்றமடைவதைக் கண்டு அவர் உணர்ந்திருக்கவேண்டும்; தானாகவே வந்து தள்ளுங்கோ என்று விட்டு இணைப்புகளை ஒழுங்காக்கினார். நன்றி சொன்னோமா என்று நினைவில் இல்லை. ஆனால் அதை அவர் எதிர்ப்பார்க்கவில்லை என்பது நினைவில் இருந்தது. அன்று புதியவர்கள் எம்மை ஆதரிக்கவேண்டும் என்ற நோக்குடன் வழமையான இலக்கிய நிகழ்வுகளிற்கு வருபவர்களைவிட அதிகமானோர் வந்திருந்தனர். வந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருக்குமே அவரைத் தெரிந்திருந்தது. அப்போது தான் இலக்கிய/சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஆரம்பித்திருந்த எனக்கும் அவரை கண்ட அளவிலான பரிச்சயம் இருந்தது. வந்தவர்கள் பெரும்பாலும் அவரைக் கண்டவுடன் சிரித்தனர். சிலர் பேசினர். அவரும் சிரித்தார். மென்மையாக தலையசைத்தார். பேசினாரா அல்லது உதடசைத்தாரா அல்லது அவர் பேசுவதே உதடசைவது போலா என்று தெரியவில்லை. ஏனோ நெருக்கமானவராக தோன்றினார். அவர்தான் பவான்.

அதன் பின்னர் அவரை தொடர்ச்சியாக எல்லா நிகழ்வுகளிலும் கண்டிருக்கின்றேன். கிட்டத்தட்ட அவர் இல்லாத நிகழ்வுகளே இல்லை எனும் அளவிற்கு அவரது பிரசன்னம் நிறைந்திருக்கும். “கனடாவில் நமது இனம் சார்ந்த, மொழி, சார்ந்த, கலை சார்ந்த, அரசியல் சார்ந்த, அனைத்து நிகழ்வுகளையும் ஏனைய சமூகங்கள் சார்ந்த பல முக்கிய நிகழ்வுகளையும் அவர் தோளில் சுமந்த கமரா அழகாக ஒளிப்பதிவு செய்து உலகெங்கும் பரப்பியது” என்று அவர் பற்றிய குறிப்பொன்றை அவரது மரணத்தின்பின்னர் காணக்கிடைத்தது. முழுக்க முழுக்க உண்மையான வரிகள் இவை.
2009ல் ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தை அடைந்திருந்தபோது ரொரன்றோவில் தொடர்ச்சியாக போராட்ட நிகழ்வுகளும், கவனயீர்ப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றுவந்தன. அவற்றில் எல்லாம் பெரிதும் அவரைக், கர்ணனின் கவச குண்டலம் போல கமராவுடன் கண்டிருக்கின்றேன். அக்காலப்பகுதியுல் தமிழ்வண் தொலைக்காட்சியில் செய்தித் தயாரிப்பாளராக பணியாற்றிய நண்பர் கிருஷ்ணா பவான் பற்றி கூறும்போது, “நான் வேலைக்கு காலையில் புறப்படும்போதே பவான் அண்ணாவிடம் இருந்து போன் வரும். கிருஷ்ணா இன்றைக்கு இந்த இந்த இடத்தில் ப்ரொரெஸ்ற் நடக்கிது. நீங்கள் நியூசை ரெடி பண்ணுங்கோ, நான் கிளிப்ஸோட வாறன்” என்று பவான் அண்ணா கூறுவார் என்று நினைவுகூர்ந்தான். அவருக்கு எல்லாத் துறையினருடனும் நல்ல தொடர்பும் உறவும் இருந்தது. உடுக்கை இழந்தவன் கைபோல உதவும் அவர் இயல்பு எல்லாருடனும் நல்லுறவைப்பேணா அவருக்கு உதவியிருக்கும். அவருடன் பணியாற்றிய சிலருடன் அவர் பற்றி அறிந்தபோது இதனை முழுதாக உணரமுடிந்தது.

அவரது ஆரம்பகால நண்பர்களில் ஒருவரான கருணா அவர்களிடம் பேசியபோது பவான் எனக்கு இன்னமும் நெருக்கமானவராகத் தோன்றினார். அனேகம்பேருக்கு வீடியோ படப்பிடிப்பாளராகவே தெரிந்திருந்த பவான், ஆரம்பகாலங்களில் DJ கலைஞராகவே பணியாற்றியிருக்கின்றார். அது மட்டுமல்ல நல்லதோர் புகைப்படக்கலைஞராகவும் இருந்திருக்கின்றார். விமானம் ஒன்றை பின்னணியில் வைத்து சிறுவர்களை பவான் எடுத்திருந்த ஒரு புகைப்படம் பற்றி விதந்து பேசிக்கொண்டிருந்தார் கருணா. வீடியோப் படப்பிடிப்பு என்பது அவருக்கு “உயிருக்கு நேராகவே” (Passion என்பார்களே அப்படி) இருந்திருக்கின்றது.

வீடியோ படப்பிடிப்பு என்பதே அவர் உயிராக இருந்தபோதும், அதில் அசாத்தியமான திறமைகொண்டவராக இருந்தபோதும், செய்யும் தொழிலே தெய்வம் என்பவராக இருந்தபோதும், நிறைய தொடர்புகளை (Contacts) உடையவராக இருந்தபோதும் அதனை தனக்கு பணம் கொழிக்கவைக்கும் தொழிலாக்க தெரியாதவராகவே இருந்தார் பவான். தனது நாளாந்த வாழ்வைக் கொண்டுநடாத்தத் தேவையான குறைந்தபட்ச நிதியைப் பெறுவதே அவருக்கு தேவையானதாக இருந்தது. மற்றும்படி, தன்னையும் தன் திறன் அனைத்தையும் வீடியோ படப்பிடிப்பிற்கும், தான் பணியாற்றிய இடத்துக்கும் நேர்ந்துவிட்டவராக இருந்தார் பவான். அந்த வகையில் அவர் மரணம் மிகக் கடுமையான செய்தி ஒன்றினை விட்டுச்சென்றிருக்கின்றது. கலை சார்ந்த துறைகளில் காதல் கொண்டிருக்கும் ஒருவர் அதனை வணிகமாக்காது ஆத்மார்த்தமாக அதில் ஈடுபடுவதற்கும், அப்படியான ஒருவர் சுரண்டல்களும், வணிக தந்திரங்களும் நிறைந்த புறச்சூழலிலும், வேலைத்தளங்களிலும் எதிர்கொள்ளும் சவால்களும், அது நிஜ வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய நெருக்கடிகளுக்கும் இடையில் போராடி தோற்றுப்போனாலும் ஒரு மகாமனிதராக தன்னைத் தக்கவைத்தவராகவே பவான் அவர்களின் மரணம் எனக்குத் தோன்றுகின்றது. பொருளீட்டலையே இலக்காகக்கொண்டு நகரத்தொடங்கியிருக்கும் புலம்பெயர் தமிழர் வாழ்விலும், அவர்களில் பலர் அதே புலம்பெயர் தமிழர்களின் ஒரு சாரராலேயே சுரண்டப்படுவதற்குமான சமகால உதாரணம் அவர். கனடாவில் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தவர் பவான். அரசியல் கூட்டங்கள், போராட்ட நிகழ்வுகள், பரப்புரைகள், வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள் என்று கமராவுடன் கூடிய பவானைக் காணாத நிகழ்வுகள் அபூர்வம். இனியும் இவை நடைபெறும். பவான் இருக்கமாட்டார். ஆனால் அவர் விட்டுச்சென்ற செய்திகளும் படிப்பினைகளும் இருக்கும்.

ஜனவரி 2015 தாய்வீடு இதழில் பிரசுரமானது.
தகவல்களுக்கு நன்றி : புகைப்படக் கலைஞர் கருணா மற்றும் நண்பன் கிருஷ்ணா