கிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3)

Richards1996 உலகக் கிண்ணம் தொடங்கியபோது இலங்கை அணி முதலாவது ஆட்டத்திலேயே புத்துணர்ச்சியுடனும் வித்தியாசமான வியூகங்களுடனும் விளையாடியது.  சிம்பாப்வே அணியுடனான முதலாவது போட்டியில் ஆரம்ப ஆட்டக்காரர்கள் இருவரும் பெரிதாக ஓட்டங்கள் எதையும் பெறாதபோதும் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இந்தியாவுடன் இலங்கை மோதியது.  இந்தப் போட்டி இலங்கை அணி, அதற்கு முன்னர் இருந்த இலங்கை அணி அல்ல என்பதை பிரகடனம் செய்த போட்டி போல அமைந்தது என்றே சொல்லவேண்டும்.  அன்றைய காலத்தில் நல்ல ஓட்டங்கள் என்று சொல்லக்கூடிய 271 ஓட்டங்களை இந்திய அணி குவித்திருந்தது.  இலங்கை அணி பதிலுக்கு ஆடியபோது ஜெயசூரியாவும் களுவிதாரனவும் ஆடிய விதம் உருத்திர தாண்டவம் என்றே சொல்லவேண்டும்.  Continue reading “கிரிக்கெட்டின் மூலம் “இலங்கையர்” ஆகுதல் /ஆக்குதல் (அரசியல் கிரிக்கெட் 3)”

அரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும்

165479.2இந்தியக் கிரிக்கெட் வாரியம் தனியார் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புக்கான அனுமதியை விற்கத் தொடங்கியது நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் கிரிக்கெட்டின் பரவலிலும் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியதுடன் கிரிக்கெட் ஒளிபரப்பானது பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய அளவில் உதவக்கூடியது என்பதையும் நிரூபிப்பதாக இருந்தது.  இந்தியாவை எடுத்துக்கொண்டால் 1980 வரை கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக கிரிக்கெட் வாரியம் தூர்தர்ஷனுக்கு கட்டணம் செலுத்துகின்ற நிலைமையே இருந்தது.  மெல்ல மெல்ல இந்த நிலைமை மாறி 1992 இல் இடம்பெற்ற இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் இடம்பெற்ற தொடரினை கிரிக்கெட் வாரியம் Trans World International என்கிற தொலைக்காட்சிக்கு 600,000 டொலர்களுக்கு விற்றது.  அன்றைய நிலைமையில் கிரிக்கெட் ஒளிபரப்பு லாபம் கொழிக்கின்ற ஒரு துறையாக மாறுவதற்காக தொடக்கமாக அமைந்தது.  இதன் காரணமாக கிரிக்கெட் மிகப் பெரிய ஊடக கவனத்தைத் தொடர்ந்து பெற்றுக்கொள்கின்ற ஒரு விளையாட்டாக மாறியதுடன் அது நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவத் தொடங்கியது.  இந்தியாவில் சம காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் அப்போது ஈழத்தில் நிலவிய மின்சாரத் தடை மற்றும் போர்ச்சூழல் காரணமாக உடனடியாகப் பரவாமல் இருந்தது.  இப்படியான ஒரு பின்னணியில் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நடைபெறுவதற்கான ஒழுங்குகளும் நடக்கின்றன. Continue reading “அரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும்”

அரசியல் கிரிக்கெட் பகுதி 1

world-cup_647_062515054704ப்போது எனக்கு பத்து வயதிருக்கும்.  பாடசாலையில் மதிய இடைவேளையில் பக்கத்து வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது வழக்கம்.  வழமையான போட்டிகளின்போது ஸ்கோர் பதிவுகளைச் செய்கின்ற மாணவன் வராத நாளொன்றில் என்னை ஸ்கோர் பண்ணுமாறு கேட்டார்கள்.  நானும் கொப்பி ஒன்றின் பின்பக்கத்தில், விளையாடுகின்ற ஒவ்வொருவரது பெயரையும் எழுதி பந்துவீச்சில் கொடுத்த ஓட்டங்கள், துடுப்பாட்ட வீரர்கள் எடுத்துக்கொண்ட ஓட்டங்கள் என்று பதிவுசெய்தேன்.  ஒவ்வொரு வீரரும் எப்படி ஆட்டமிழந்தார்கள், யாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்கள் என்கிற விபரங்களை எல்லாம் குறித்தேன்.  Continue reading “அரசியல் கிரிக்கெட் பகுதி 1”

கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட்

bradmanகிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்களில் ஒன்று.  விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வம் இல்லாதவனாகிய நான் கிரிக்கெட்டை மட்டும் வாழ்வு ஏற்படுத்திய எந்த சலிப்புகளின்போதும் கூட இடைவிடாது தொடர்ந்தே வந்தேன்.  யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் இருக்கின்றபோது இராணுவம் கொடிகாமம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஏப்ரல் 19, 1996 அன்று கூட கடுமையாக ஷெல் தாக்குதல்கள் எமது வீட்டுக்கு ஒரளவு அருகாமையில் விழுந்துகொண்டிருந்த போதும் கடுமையான பயத்துடனும் கூட அன்று ஷார்ஜாவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்தியாவிற்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் வர்ணனையைக் கேட்டபடியே இருந்தேன் என்பது இப்போதும் நினைவில் இருக்கின்றது.  Continue reading “கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட்”

The Lost Boys of Jaffna என்கிற விஷமத்தனம் பற்றி

The cricket monthly என்ற பெயரில் ESPN Cricinfo தளத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கின்ற கிரிக்கெட்டிற்கான இதழில் The Lost Boys of Jaffna என்கிற பெயரிலான கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கின்றது. இக்கட்டுரையில் போர்க்காலங்களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்களான காண்டீபன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்), நிஷாந்தன் (சென். பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்) இருவரும் கட்டுரைக்காக சந்திக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் பற்றிய பல்வேறு தகவல்களையும் கொண்டதாக இக்கட்டுரை அமைதிருக்கின்றது. இக்கட்டுரையை பலர் மகிழ்வுடன், எம் மண்ணைச் சேர்ந்தவர்களைப் பற்றி முக்கியமான தளங்களில் கட்டுரை பிரசுரமாகியுள்ளது என்கிற புளகாங்கிதத்துடன், போர் இருந்திராவிட்டால் இவர்கள் இலங்கை அணியில் விளையாடி இருப்பார்கள் என்கிற தொனி கட்டுரையில் இருக்கின்றதே என்கிற பெருமிதத்துடன், தமது நினைவலைகளை கட்டுரை மீட்டியிருக்கின்றதே என்ற பரவசத்துடன் பகிர்ந்துவருவதையும், குறிப்பிட்டுவருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அவர்கள் அனைவரும் மேற்படி கட்டுரையை முழுமையாக ஒருமுறை படித்துப்பார்க்கும்படி வேண்டிக்கொள்ளுகின்றேன்.

இக்கட்டுரை முன்வைக்கும் கருத்து அபத்தமானது மட்டுமல்ல விஷமத்தனமானது. போர்க்காலங்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் வாழ்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெறும் வாய்ப்பை தடுத்தது புலிகளின் “பாஸ்” நடைமுறையே என ஓயாது பிரசாரம் செய்கின்றது இக்கட்டுரை. உண்மையில் நிலைமை அப்படியா இருக்கின்றது? சென்ற மாதம் (ஜூலை 2014) அதாவது போரினை நிறைவுக்குக்கொண்டுவந்து 5 ஆண்டுகளின் பின்னரும் தேசிய இளைஞர் விவகார அமைச்சினால் நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அம்பாந்தோட்ட அணியினை காலிறுதிப்போட்டியில் வெற்றிபெற்று அரை இறுதியில் கம்பஹா அணியுடன் ஆட இருந்த யாழ் அணி மீது தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. தமிழர்கள் அல்லது சிறுபான்மையினர் மீதான ஒவ்வாமை / வெறுப்புணர்வு இவ்விதம் வெளிப்படையாகவே காண்பிக்கப்படுகின்றபோது இச்சம்பவம் இடம்பெற சில நாட்களின் முன்னர் மேற்படி கட்டுரை வெளியாகி உள்ளது.

தயவு செய்து இக்கட்டுரையை சரியான முறையில் பரிசீலிக்கவேண்டும் என்பதை ஒரு வேண்டுதலாக மறுபடியும் முன்வைக்கின்றேன். ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் “அரசியல் வேறு விளையாட்டு வேறு” என்று தம்மை முதிர்ச்சியான சிந்தனைப்போக்குடையவர்கள் என்பதாகக் காட்டிக்கொண்டு பலர், குறிப்பாக தமிழ் தேசியம் பேசுவோர் சிலரும் கூட இலங்கைக் கிரிக்கெட் அணியைக் கொண்டாடுவதையும் அவதானித்துள்ளேன். இந்த இடத்தில் நண்பர் ஒருவர் முன்னர் எழுதிய குறிப்பு ஒன்றில் இருந்து சிறுபகுதியின இங்கே பகிருகின்றேன்.

“கருத்தியல் ரீதியில் இருக்கின்ற விடயங்கள் தவிர்த்து நடைமுறையில் இருந்துவருகின்ற பிரச்சனைகளையும் ஆராயவேண்டியுள்ளது. இலங்கைக் கிரிக்கெட் அணியில் சிறுபான்மை அடையாளத்துடன் எத்தனைபேர் இடம்பெற்றுள்ளனர், சிறுபான்மைக் கருத்தியல் உடையோர் எத்தனைபேர் அணியில் இடம்பெற்றுள்ளனர் என்கிற பல்வேறு கேள்விகளூடாக இவ்விவாதம் விரிவுறும். அத்துடன் தொடர்ச்சியாக இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் அரசியலுக்கு வருவதும், அரசியலில் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கருத்துநிலைகள் என்ன என்பதும், கிரிக்கெட் வீரர்கள் சிறுபான்மை இனத்தவர்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் இனப்போராட்டம் குறித்து தெரிவிக்கும் கருத்துகள் என்பவற்றையும் நாம் உரையாடவேண்டியிருக்கின்றது. அரசியல் பிரக்ஞையுள்ள எவரும் இந்த விமர்சனங்களை கடந்தோ தவிர்த்தோ இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு ஆதரவளிப்பது (அல்லது கிரிக்கெட்டுக்கு) தொடர்பான கருத்துக்களைக் கூறமுடியாது என்பதே எனது புரிதல்.”

தொடர்பான கட்டுரைகள்
http://www.thecricketmonthly.com/story/761915#_=_

http://www.tamilcnn.ca/the-attack-on-jaffna-district-cricket-players-condemned-vavuniya-district-youth-parliament-member-j-m-jawaz-speech.html