தோற்றுப்போன வெற்றி: என் உயிர்த் தோழன்

மிக தீவிரமான திரைப்பட ரசிகனாக இருந்தும் நல்ல சினிமா, கெட்ட சினிமா என்கிற விவாதங்களில் நான் ஒரு போதும் ஈடுபடுவதில்லை. என்னை பொறுத்தவர சினிமாவை ரசித்த சினிமா, ரசிக்காத சினிமா என்றுதான் பாகுபடுத்த முடிகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று கூறுவது இப்போதெல்லாம் ஒரு fashion ஆகவே மாறிவிட்டது. மொழி திரைப்படத்தின் 100வது நாள் விழாவின் போது ஞாநிக்கு பதிலாக இயக்குநர் அமீர் சொன்னது போல நல்ல சினிமாக்களை எல்லாம் திரையரங்கில் சென்று பார்த்திருந்தால், அதனை மற்றவர்களுக்கும் சொல்லியிருந்தால் நிச்சயம் நிறைய நல்ல படங்கள் வந்திருக்கும். எந்த இயக்குநர்களும் மோசமான படங்களை எடுக்கவேண்டும் என்று படம் எடுப்பதில்லை. திரைப்பட தயாரிப்பில் பெருமளவு பணமும் முதலீடு செய்யப்படுவதால் வணிகரீதியான வெற்றி பற்றிய தயக்கம் சில சமயங்களில் நல்ல படங்கள் எடுப்பதை தவிர்த்துவிடுகிறது. இந்த தொடரில் நல்ல கதையம்சத்துடன் வெளியாகி, பரவலான கவனிப்பை பெறாத, வசூல் ரீதியாக தோல்வியடைந்த சில திரைப்படங்கள் பற்றிய பார்வை.

என் உயிர்த் தோழன்

பாரதிராஜா இயக்கிய திரைப்படங்களில் முக்கியமான படங்களில் ஒன்றான இது வசூல் ரீதியாக எடுபடாமல் போனது பலத்த ஏமாற்றமே. 16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு பூபாளமாக புகுந்த பாரதிராஜா வித விதமான கிராமத்து காதல்கதைகளை திரையில் கவிதையாக விவரிப்பதில் தனித்த ஆளுமை கொண்டவராக விளங்கினார். இடையில் நகர்ப்புற கதைகளுக்கு வந்த போதும் அந்த கதைகளிலும் கூட அவரது கிராமத்து தேவதைகள் வெள்ளையுடையுடன் வந்து போனார்கள், சில காட்சிகள் கிராமங்களில் நடந்தன, அவையே மக்களால் பெரிதளவும் ரசிக்கப்பட்டன (உதாரணம் : நிழல்கள், ஒருகைதியின் டயரி, சிகப்பு ரோஜாக்கள்). இந்த நிலையில் தொடர்ந்து கிராமத்து காதல்களையும், த்ரில்லர்களையும் எடுத்து வந்த பாரதிராஜா சற்று மாறுபட்டு விமர்சனத்துக்குரிய ஒரு காதலை முதல் மரியாதை என்ற பெயரில் இயக்கினார். படம் பெரு வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ரஷ்யாவில் தாஷ்கெண்டில் வைத்து கௌரவிக்கப்பட்டபோது (வழமைபோல ) உணர்ச்சிவசப்பட்டு இனி சமூக சீர்திருத்த படங்களை மட்டுமெ எடுப்பேன் என்று கூறினார். அதனை தொடர்ந்து வேதம் புதிது, கொடி பறக்கிது (இது சமூக நீதிக்காக எடுக்கபடவில்லை, நிதி ரீதியான சில சிக்கல்களை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டது.)

இதன் பிறகு 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்து கொண்டு தந்த அற்புதமான படம் தான் என்னுயிர் தோழன். இந்த படத்தின் டைட்டில் வரும்போது கூட பாரதிராஜாவின் என்று ஒரு slide வரும் பின்னர் என்னுயிர் தோழன் என்று அடுத்த slide வரும். பின்னர் இளையராஜா என்று அடுத்த slide வரும். அதாவது சேர்ந்து வாசித்தால் பாரதிராஜாவின் என்னுயிர் தோழன், இளையராஜா என்று அர்த்தம் வரும். ஆனால் இளையராஜாவுடன் இணைந்ததால் 1980ம் ஆண்டு வைரமுத்துவை அறிமுகம் செய்த பின்னர் இந்த படத்தில் தான் (10 ஆண்டுகளின் பின்னர்) முதன் முதலாக வைரமுத்து பாடலெழுதாமல் ஒரு பாரதிராஜா திரைப்படம் வெளியானது.

புதுமுகங்களை வைத்து பெரு வெற்றிகளை பெற்ற பாரதிராஜா கமல், ரஜினி, சத்யராஜ் என்று பெரிய நடிகர்களை வைத்தே படங்களை இயக்குகிறார் என்ற குற்றசாட்டு பலமாக வைக்கப்பட்டபோது மீண்டும் மூன்று புதுமுகங்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து இப்படத்தை தயாரித்தார். இப்படத்தில் கதாநாயகனாக நடித்த பாபுவே வசனங்களை எழுதியிருந்தார். (இது போலவே புதிய வார்ப்புகள் திரைப்படத்துக்கும் அதன் வசன கர்த்தாவான பாக்யராஜையே நாயகனாக்கியிருந்தார்). மண்வாசனை, டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வா படங்களை போலவே கலைமணியே இதற்கும் கதையெழுதிருந்தார்.

இந்த படத்தின் முக்கிய விடயம் இது சொல்லும் செய்தியாகும். எல்லா அரசியல்வாதிகளிற்கும் உணார்ச்சிவசப்பட்ட இளைஞர்களையும், மாணவர்களையும் தமது சுயநலத்துக்கு உள்ளாக்கினாலும் அதை விமர்சித்து எடுக்கப்பட்ட படங்கள் மிக குறைவு. இதற்கு காரணம் ஒரு புறம் அரசியல்வாதிகளால் வரக்கூடிய எதிர்ப்பாக இருந்தாலும் இன்னொரு காரணம் அரசியலில் ஈடுபடும் இளைஞர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்ற நிஜத்தை முகத்தில் அடிப்பது போல சொல்லி திரையரங்குகளுக்கு இளைஞர்களின் வருகை குறைந்துவிடக்கூடாதே என்பதுதான். இன்னும் சொன்னால் புதிய மன்னர்கள் (விக்ரம் நடிக்க விக்ரமன் இயக்கம்), சத்யா (கமல் நடிக்க சுரேஷ் கிருஷ்ணா இயக்கம்) போன்ற பெரிய நட்சத்திரங்கள் இணைந்த படங்கள் பெருந்தோல்வியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

சிட்டு (ரமா) வசிக்கும் கிராமத்தில் நாடகம் போடவரும் தென்னவன் (ரமேஷ், பின்னர் தனது பெயரை தென்னவன் என்றே மாற்றி ஜெமினியில் “கை”யாக நடித்து பிரபலமானவர்) சிட்டை காதலித்து அவளை கூட்டிக்கொண்டு சென்னை செல்வதாக ஏமாற்றி அவளது நகைகளையும் எடுத்துக்கொண்டு அவளை ரயிலில் விட்டு விட்டு பிரிகிறான். அவள் தர்மனிடம் அடைக்கலம் கோருகிறாள். அதே நேரம் உள்ளூர் அரசியல்வாதி டெல்லியும் (லிவிங்ஸ்டன்) அவளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயல்கிறார். அப்போதைய எதிர்கட்சியான பொதுக்கட்சியின் தொண்டனான தர்மன் டெல்லியின் முயற்சிகளை முறியடைத்து அவளை மணக்கிறான். இதே சமயம் தென்னவனும் போர்முரசு பொன்வண்ணன் என்ற பெயரில் நடிகனாகிறான். டில்லி அரசியல் லாபம் தேடி டெல்லி பொதுக்கட்சியில் இணைந்து பின்னர் போர்முரசு பொன்வண்ணனையும் அதேகட்சியில் இணைக்கிறான். தர்மன் – பொன்னி இருக்கும் குயிலு குப்பம் தொகுதியில் போர்முரசு பொன்வண்ணன் வேட்பாளராக நிறுத்தப்படுகிறான். அவனை அடையாளம் காணும் பொன்னி தர்மனிடம் உண்மையை சொல்ல அவன் கட்சி செயல்பாடுகளிலிருந்து விலக, ஊரே பொதுக் கட்சியை புறக்கணிக்கிறது. அதன் பின்னர் கட்சி தலைவர் தர்மனை அழைத்து அழகு தமிழில் உணார்ச்சிமயமாக் ஒரு உரையாடலை நிகழ்த்த தர்மன் மனம் மாறி மீண்டும் தன் தலைவரின் நியாயங்களை பொன்னியிடம் சொல்லுகிறான். மீண்டும் கட்சி பணியில் முழுவீச்சில் இறங்குகிறான். தலைவர் புகழ்பாடி போஸ்டர்களை ஒட்டிவிட்டு, தேர்தல் பணிசெய்து களைத்துபோய் தன் சக கட்சி தொண்டனிடம் உணர்ச்சிவசப்பட்டு தன் தலைவரின் புகழ்பாடி, அவருக்கு பணி செய்யும்போதே தான் இறந்துவிடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தர்மனை கொன்று அந்தப் பழியை எதிர்க்கட்சி மீது போட்டால் தாம் பெரு வெற்றி பெறலாம் என்ற அவன் கட்சியின் சதியில் பரிதாபமாக கொல்லப்படுகிறான். அதன் பின்னர் இறுதி காட்சியில் ஊரே கூடி போர்முரசு பொன்வண்ணனை, கட்சி தலைவரை, டெல்லியை என்று எல்லாரையும் கொன்று தள்ளுகிறது.

சமுதாயமும் அதில் இருக்கின்ற கட்சிகளும் எப்படியெல்லாம் மக்களை, அப்பாவி மனிதர்களை தமது சுயநலத்துக்கு பகடைகளாக பாவிக்கின்றாது என்று அருமையாக சொல்கிறதுபடம். எந்த விடயத்தையும் அளவுக்கு மிஞ்சி உணார்ச்சிவசப்பட்டு பார்க்கின்ற தமிழர்களின் நிலையை படம் துல்லியமாக் சொல்கின்றது. கட்சிதலைவர் பொன்னம்பலத்தை விடுதலை செய்யவேண்டும் எனக்கேட்டு தர்மன் தீக்குளிக்கும் காட்சி ஒரு உதாரணம். இந்த தீக்குளிக்கும் கலாசாரம் மிகப்பெரிய ஒரு பித்தலாட்டம் என்பது என் கருத்து. நடிகர்கள் இறக்கின்றபோது, அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரி, அவர்கள் புதிய பட அறிவிப்பை செய்யவேண்டும் என்றேல்லாம் கேட்டு செய்யப்படும் தீக்குளிப்புகள் மிகப்பெரிய அபத்தங்கள். படத்தின் இறுதியில் வரும் தர்மனுடனான கட்சிதலைவரின் உரையாடல் அரசியல்வாதிகளின் கபட பேச்சுக்கு ஒரு உதாரணம். தமிழர்களை பொறுத்தவரை அரசியல்வாதிகளுக்கு இருக்கவேண்டிய டாப் 10 குணாம்சங்களுல் முண்ணனி வகிப்பது அவர்களது பேச்சாற்றல். உணர்ச்சிவசப்படுத்தி மக்களை அறிவுரீதியாக சிந்திக்க வைக்காமல் உணர்வுபூர்வமாக சிந்திக்க வைக்கும் இந்தப் பேச்சுகளால் எமது வாழ்க்கைநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டது என்று கடந்த கால வரலாற்றை பார்த்தால் தெரியும். படத்தின் ஆரம்பத்தில் வரும் பொன்னியுடனான தென்னவனின் பேச்சுகளும் தர்மனுடனான பொன்னம்பலத்தின் பேச்சுகளும் இதற்கு உதாரணங்கள். அதேபோல மக்கை கையில் பிடித்துகொண்டு எல்லாரும் பேசும் அப்த்தமான பேச்சுகள் (உதாரணமாக LIC கட்டடத்தை இரவில் ஏழைகள் தஙும் இடமாக மாற்றவேண்டும் போன்றா கருத்துகளை இப்படத்தில் ஒரு அரசியல்வாதி பேசுகிறார்). மேலும் எல்லா கதாபாத்திரங்களும் வழமையான தமிழில் கதிக்கின்றன, ஆனால் போலியான, மற்றவரை ஏமாற்றும் விடயங்களை பேசும்போது மட்டும் அழகு தமிழுக்கு மாறுகின்றன. திராவிடக்கட்சிகளினால் தமிழரின் பல அடையாளங்கள் காக்கப்பட்டாலும், இந்த ஆடம்பரமான அலங்கார வார்த்தைகளாலான பேச்சுகளும், ரசிகர்மன்ற, கட்சி தொண்டர் என்கிற, கட் – அவுட் போன்ற மக்களின் அடிப்படை வாழ்வை பெருமளவு பின்னோக்கி தள்ளிய கூறுகள் வாழ்வியலுடன் இணைந்தது மிகப்பெரிய ஒரு பாதிப்பே.

படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஒரு குறியீடாக காட்டபடும் முதியவரின் கதாபாத்திரம். அது பார்வையாளரை / அவர்களது மனநிலையை குறிப்பதாக அமைகின்றது. இறுதிக்காட்சியில் அந்த கதாபாத்திரம் மூலமாகவே டில்லி (லிவிங்ஸ்டன் – அப்போது அவர் ரஞ்சன் என்ற பெயரில் நடித்துவந்தார்) மற்றும் அரசியல்வாதிகள் கதாபாத்திரங்கள் கொல்லப்படுகின்றன. இதே போன்ற உத்தி பாலாவின் சேது திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டது. அதேபோலவே கட்சிக்காரர்கள் தயாரிக்கும் தர்மன் பற்றிய மரண அறிவித்தலிலும் அதேபோல தர்மன் எழுதும் தலைவர் ”பொன்னம்பபலம் வாழ்க” என்கிற சுவரோர வரிகளிலும் காண்பிக்கபடும் எழுத்துப்பிழைகள் கூட இயக்குணரின் வேண்டுமென்றே செய்தகுறியீடுகளாஅகத்தான் இருக்கவேண்டும்.

இந்தப் படத்தின் வணிக ரீதியான தோல்வியை நான் மக்களின் மனநிலையுடனேயே தொடர்புபடுத்தி பார்க்கின்றேன். என்னுயிர் தோழன் சொல்லும் நீதிகளை எவருமே ஒத்துக்கொள்ளப்போவதில்லை. கேட்டால் எனது தலைவர் அப்படிப்பட்டவரில்லை என்பார்கள். இருக்கலாம், ஆனால் ஒரு தனிமனிதனை தலைவனாக ஏற்று அவன் சொல்லும் கருத்துகளை எல்லாம் கண்மூடி தலையாட்டி மாற்றுகருத்துக்களை அடியோடு நிராகரிக்கும் சமுதாயம் மீளவே முடியாத பின்னடைவைத்தான் சந்திக்கும். இது வரலாறு சொல்லும் பாடம்.

நான் பார்த்த சினிமா


எல்லாற்ற மாடும் உழுகிதென்றிட்டு சுப்பற்ற பேத்தை மாடும் உழுகைக்கு போச்சாம் என்று அடிக்கடி என் நண்பன் விசாகன் சொல்வது போல எல்லாரும் ஏதோ செய்யினம் போல இருக்கு என்றுதான் நானும் வலைப்பூக்களுக்க வந்தனான். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமென்று எழுதினாலும் இதில் ஒரு சந்தோஷம் கிடைத்தது உண்மை. அதை கொஞ்சம் கூட்டுவதுபோல கானாபிரபா வேற எனக்கு சினிமா பற்றிய தொடர் பதிவுக்கு அழைப்பு தந்தார். அவருக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.

கால் நூறாண்டை கடந்துவிட்ட வாழ்க்கை பயணத்திலே, சற்று நிதானித்து திரும்பும்போது, வாழ்க்கை பூங்காவின் பூக்களின் வாசனையை மீண்டும் மீட்டிப் பார்க்கும்போதெல்லாம் நினைவுப் பெட்டகங்களை நிரப்பி நிற்பவை மிக சில உறவுகள், அற்புதமான புத்தகங்கள் போன்ற நண்பர்கள், நண்பர்கள் போன்ற புத்தகங்கள், ரசனையான திரைப்படங்கள், பாடல்கள், கிரிக்கெட் ஆட்டங்கள்தான். சினிமா மீதுதான் என் வாழ்வின் முதல் ரசனை தொடங்கியது ஆனாலும் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மானிப்பாய் மணியம்ஸ் மூலமாக முளைவிட்ட எனது சினிமா மோகம் யாழ்ப்பாணம் சுப்பர் ஷோ (ரவி ஒளி காணம்) மூலம் கிளைவிட்டு கொழும்பு ஹம்டன் லேன் காயத்ரியில் செழித்து இன்று கனடாவில் பல விழுதுகளுடன் பலமாக வளர்ந்து நிற்கிறது. இதுதான் எனக்கும் சினிமாவுக்குமான முன்னுரை.

என்ன வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?, நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா?, என்ன உணர்ந்தீர்கள்?

சினிமா பார்த்தால் கூடது, அது ஒரு தீய / தேவையில்லாத பழக்கம் என்கிற கட்டுப்பாடுகள் இல்லாதது என் வீடு. இதனால் இயல்பாகவே சிறு வயது முதல் படம் பார்த்து வந்திருக்கிறேன். முதன் முதல் பார்த்ததாக நினைவில் உள்ள படம் காளி. இது ரஜினி நடித்து 80ல் வெளியானபடம். ஆனால் நான் பார்த்து 84ன் தொடக்கங்கள் என்று நினைக்கிறேன். இப்படத்தில் அழும் இரண்டு குழந்தைகளை ரஜினி அணைத்துக்கொண்டிருக்கும் ஒரு காட்சியும், வேகமாக மோட்டார் சைக்கிளில் வரும் ஒரு காட்சியும் நினைவில் உள்ளன. எத்தனையோ பழைய படங்களை பின்னர் பார்த்திருக்கிறேன். ஏனோ இத்திரைப்பட பிரதிமட்டும் கிடைக்கவில்லை. இன்றுவரை ரஜினி ஒரு ஆதர்ச நாயகனாக இருப்பதற்கு இப்படத்தில் அவர் அழும் இரண்டு குழந்தைகளை அணைத்தபடி ஆறுதல் சொல்லும் அந்த காட்சிதான் காரணமாக கூட இருக்கலாம். அப்போது மானிப்பயில் இருந்து மணியம்ஸ் என்ற பெயரில் உள்ளூர் ஒளிபரப்பு ஒன்று இருந்தது. அதன்மூலமாகத்தான் இப்படங்களை திரையிடுவார்கள். பார்த்ததாக முழுமையாக நினைவில் இருக்கும் படம் சிம்லா ஸ்பெஷல் மற்றும் அபூர்வ சகோதரிகள். சிம்லா ஸ்பெஷலில் வரும் உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் அப்போது நிறைய பிடிக்கும். அந்த பாடலில் வரும் சில அசைவுகளை ஆடிப்பார்க்க முற்பட்டு எம் வீட்டு ஹாலில் பலதடவை விழுந்து அடிவாங்யிருக்கிறேன். அபூர்வ சகோதரிகள் ஊர்வசி, ராதா நடித்த படம் என்று ஞாபகம். அப்போதெல்லாம் வீடுகளில் அன்ரனா பூட்டினால் தான் படம் தெரியும். அதையும் அடிக்கடி திசைமாற்ற வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் படங்கள் ஏதோ ஆவிகளின் நடமாட்டம் போலத்தான் திரையில் தெரியும். எனது அம்மாவுக்கு சினிமாவில் நிறைய ஈடுபாடு. அப்போது அவர் ஒரு பச்சை நிற டயரியில்தான் பார்த்த படங்களை எல்லாம் தொடர்ந்து எழுதிவந்தார். அது அருமையான ஒரு பதிவு. அது போலத்தான் எனது அப்பாவும். வீட்டில் இரவு உணவுக்கு பிறகு ஒரு மணித்தியாலம் தன்னும் நாங்கள் எல்லாரும் இருந்து பல விடயங்களை பற்றி கதைப்போம். தமிழ்வாணன், ஆனந்தவிகடன், கமல், ரஜினி, எம். ஜி. ஆர், சிவாஜி என்று என்னவென்றாலும் கதைப்போம். ஏதோ ஒரு எம் ஜி ஆரின் திரைப்படத்தில் நடித்த இரண்டு நாயகியரும் தமது பெயர் தான் டைட்டிலில் முதல் வர வேண்டும் என்று சண்டையிட்டதாகவும் இதனால் வெறுப்புற்ற எம் ஜி ஆர் தனது பெயரை எல்லாரின் பெயரும் திரையிட்ட பின்னர் “இவர்களுடன் எம் ஜி ஆர்” என்று போட்டதாகவும் அப்பா சொல்வார். வெறும் புத்தகப் புழுவாக இராமல் பல தரப்பட்ட விடயங்களையும் அறிந்து கொள்ளும் எம் இயல்பு அந்த சாப்பாட்டு மேஜையில் வைத்தே தீர்மானிக்கப்பட்டதென்று நினைக்கிறேன்.
நல்ல ரசனைகள் எப்போதும் நல்ல நண்பர்க்ள் மூலமே வளர்த்து செல்லப்படும். அந்த வகையில் எனது ரசனைகள் தொடர்ச்சியான விவாதங்கள் மூலமே வளர்ந்து சென்றன. என் பெற்றோருடனும் சகோதரருடனும் தொடங்கிய இந்த வழக்கம் பின்னர் நண்பர்கள் தயா, தெய்வீகன், விசாகன், குணாளன் என்று இலங்கையிலும் பின்னர் புலம்பெயாந்து கல்லூரியில் ஒரு தோழி ஒருத்தியுடனும் (அவள் தந்த ஒரு பார்க்கவேண்டிய சினிமா பட்டியல் என் ரசனையையே மாற்றி அமைத்தது), கனடாவில் நண்பன் தீபனுடனான மணித்தியால கணக்கான விவாதங்களாலும் வளந்தது.

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

காஞ்சிவரம்.
பிரகாஷ் ராஜ் ஒரு சிறந்த நடிகர் என்பதில் கூட சிலவேளை சந்தேகம் தோன்றலாம். ஆனால் அவர் ஒரு அற்புதமான ரசிகர் என்பதில் எவருக்குமே சந்தேகம் தோன்றக்கூடாது. ஒரு அற்புதமான ரசிகனால் மட்டுமே இத்தகைய தேர்ந்த, அமைதியான ஓடை போன்ற ஒரு நடிப்பினை படம் வழியாக எடுத்துச்செல்லமுடியும். கனடாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட இப்படத்தினை ஒரு பத்திரிகை விளம்பரம் மூலமே அறிந்துகொண்டு பிரகாஷ்ராஜ்க்காகவும் பிரியதர்ஷனுக்காகவும் பார்க்க சென்றேன். அதுவரை இப்படம் பற்றி ஏதும் கேள்விப்படாததால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி போய் நல்லதோர் பொழுதை அனுபவித்தேன்.

கடைசியாக அரங்கிலின்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

பறவைகள் பலவிதம்.
மோசஃபெர் நிறுவனம் மீது எனக்கு பலவிதமான் விமர்சனங்கள் உண்டு. உதாரணமாக அது பல படங்களின் உரிமையை வாங்கி டிவிடி களை வெளியிடுகின்றது. ஆனால் தரம் ஒரு மாற்று கம்மிதான். உதாரணமாக மொழி, சென்னை 600028.
ஆனால் மொசஃபேர் மீது மரியாதை கொள்ள காரணம் டிவிடிக்கு வராத பிரபலமாகாத ஆனால் நல்ல பல திரைப்படங்களை டிவிடியாக வெளியீடுசெய்தது. அருமையான ஒரு உதாரணம் “பறவைகள் பலவிதம்”. உங்களில் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்தீர்களோ தெரியாது. ராம்கி-நிரோஷா, நாசர் – சபீதா ஆனந்த், ஜனகராஜ் – சிந்து என்று மூன்று சோடி கல்லூரி நண்பர்கள் தம் காதலைகூட வெளிப்படுத்தாமல் கல்லூரி நிறைவு நாளன்று பிரிகிறார்கள். சரியாக ஒரு வருடத்தில் சந்திப்பதாக ஏற்பாடு. இடையில் என்ன நடந்தது? அதன் பிறகு என்ன ஆனது என்று அற்புதமான கதை. ராம்கியின் நடிப்பு திறன் பற்றி சில சந்தேகங்கள் இருந்தாலும் பல நல்ல படங்களில் நடித்துள்ளார். உதாரணம்: செந்தூரப்பூவே, என் கணவர், மருது பாண்டி, சின்னப் பூவே மெல்லப்பேசு, மிக குறுகிய காலத்தில் உச்சிக்கு போய் காணாமல் போன நடிகர். திரைப்பட கல்லூரியினர் திரியுலகில் வெற்றிக்கொடி கட்டியிருந்த காலத்தில் இவர் கொடியும் பறந்தது. பின்னர் மெல்ல காணாமல் போய், சில விஜயசாந்தி டைப்படங்களில் நடித்து பரிதாபமாக வில்லன்களிடம் அடிவாங்கினார். ராபர்ட் ராஜசேகரன் இயக்கிய இப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமத்ததுடன் எல்லாப் எழுதியும் உள்ளார். பாடல்கள் உணர்வுபூர்வமான வரிகளால் அமைக்கப்பட்டுள்ளன.

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

ஒவ்வொரு கட்டங்களிலும் ஒவ்வொன்று. ஆனால் முதன் முதலாக ஒரு திரைப்படத்தை பார்த்து அழுதது என்றால் பிரபு, சரத்பாபு நடித்த மனசுக்குள் மத்தாப்பூ திரைப்படத்தை பார்த்து. கதாநாயகியின் தந்தை ஒரு வைத்தியர், பிரபுவை அவர் செயல் இழந்த (கோமா மாதிரி) நிலைக்கு கொண்டுவர சரத்பாபு பிரபுவை கருணை கொலை செய்வதாக படம் முடியும். கதாநாயகி வேறு மனநிலை பாதிக்கப்பட்டுவிடுவார். பூந்தென்றலே நீ பாடிவா, வெண்ணிலவை முதல் நாள்… போன்ற சிறந்த பாடல்கள் இடம்பெற்ற படம் .
பின்னர் பூவே உனக்காக மிக பெரிய ஒரு மாற்றத்தை தந்தது. காதல் என்றால் கலைது சென்று கண்ணடித்தல், சைக்கிளோடி சைட்டடித்தல் என்றிருந்த நிலையை மாற்றி அதனை ஒரு உணர்வாக புரிய வைத்த படம். பெண்களை மரியாதையாக பார்க்க வேண்டும் என்று பாலகுமாரனை படிக்க ஆரம்பித்து வேர்விட்ட கொள்கை பெருமரமாக வளர உரமிட்ட படம்.
அதற்கு பிறகு கோகுலத்தில் சீதை, பூவேலி, தொட்டாசிணுங்கி என்று ஆரம்பித்து அண்மைக்கால சுப்ரமணியபுரம் வரை எத்தனையோ. இதுதவிர வேலை இன்மை, கம்யூனிச சித்தாந்தம், சுயமரியாதை போன்ற பல விடயங்களும் சட்டையை பிடித்து உலுப்ப பார்த்து பார்த்து பரவசப்பட்ட படம் வறுமையின் நிறம் சிகப்பு. அதுபோல அன்பே சிவம் படத்தை அரங்கில் விசில், கைதட்டல் ஓசையில்லாமல் இருந்து பார்க்கவேண்டும் என்பதற்காக கனடாவில் பகல் 1:30 காட்சிக்கு நானும் நண்பன் தீபனும் போய் பார்த்துவிட்டி அதிகாலை 2, 3 மணி வரை பேசிக்கொண்டிருந்ததும் ஒரு சுகமான நினைவு.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் – சினிமா அரசியல் சம்பவம்?

பல. படைப்பாளிகளை சுதந்திரமாக செயல்படமுடியாமல் பழைய சித்தாந்தங்களில் மூழ்கிய சிலர் கட்டிப்போடுவது. குருதிப்புனல், மகளிர் மட்டும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, என்று கமல் எத்தனையோ அழகு தமிழ் பெயர்களை படங்களிற்கு சூடியிருக்க மும்பை எக்ஸ்ப்ரஸை பிரச்சனையாக்கியது. அடுத்ததாக கிசுகிசுக்கள். அண்மையில் உளவியலில் சிறப்பு பட்டம் பெற்ற நண்பன் ஒருவன் கதைத்தபோதுதான் இவையெல்லாம் மனநிலை சம்பந்தமான குறைபாடுகளின் விளைவுகள் என்ற புரிதல் ஏற்பட்டதும் அவர்கள் மேல் பெரும் பரிதாபமே உண்டானது. அதுபோலவே படம் தோல்வியடைந்தால் விநியோகஸ்தர்கள் மீண்டும் பணத்தை கேட்பது. ஒரு சின்ன கேள்வி, எதிர்பாராமல் படம் பெருவெற்றி பெற்ற போதெல்லாம் இவர்கள் மேலதிக பணத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தார்களா?

தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய…. ஆனால் ஒரு போதும் கிசுகிசுக்கள் என்கிற முட்டாள்தனத்தை வாசிப்பதில்லை. அவை நிஜமாக பின்னால் மாறியும் உள்ளன. ஆனால் எனது தனிப்பட்ட வாழ்வை நான் தனித்து வைத்திருப்பதுபோல எல்லாருக்கும் ஒரு privacy இருக்கின்றது. நான் வங்கி ஒன்றில் பணிபுரிவதால் அதன் வாடிக்கையாளர்கள் என் தனிப்பட்ட வாழ்வை, காதலை, குடும்ப விடயங்களை அலசுவதை ஒருபோதும் விரும்பமாட்டேன். சற்று யோசித்து பார்த்தால் இது நடிகர்களின் புகழ் மற்றும் வெற்றி மீதான் பொறமைகாரணமாகவும், அந்த இயலாமை காரணமாகவுமே பிறக்கின்றது. அதாவது தனக்கு பல பெண்களுடன் நெருக்கம் வரவில்லை என்று ஏங்குபவனே அந்த நடிகன் இரண்டு நடிகையருடன் நெருக்கமாக் உள்ளான் என்று கூவுவான்.

சுஜாதா எழுதிய 360 , பாலகுமாரனின் பலகட்டுரைகள், அ. ராமசாமியின் ஒளிதரும் உலகம் உட்பட பல கட்டுரை தொகுப்புகள், எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா மற்றும் ஷாஜி ஏழுதும் கட்டுரைகள், பலதரப்பட்ட திரைக்கலைஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் இப்படியாக விரிந்துபட்ட வாசிப்பு பழக்கம் என்னுடையது. சுஜாதாவின் கட்டுரைகள் எனக்கு நிறைய அற்புதமான திரைப்படங்களை அறிமுகம் செய்துவைத்தன. அதுமட்டுமன்றி வலைப்பூக்களில் கானாபிரபா, முரளிகண்ணன், மு. கார்த்திகேயன் (இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லையே, ஏன்), போன்றவர்களின் பதிவுகளை அடிக்கடி பார்த்து உடனுக்குடனேயே வாசித்துவிடுவேன்.

தமிழ் சினிமா இசை?

என்னை விட்டு பிரிக்கவே முடியாத ஒன்றென்றால் அது இசை மீதான என் காதல் தான். என் இசையுலகம் இளையராஜாவை மையம் கொண்டே வளர்ந்திருந்தாலும் விஸ்வநாதன் – ராமமூர்த்தி காலம் முதல் இன்று வந்த இசையமைப்பாளார்கள் வரை பலரது இசையையும் ரசிப்பது உண்டு. ஆசையாசையாக சேர்த்து பாடல் வெளியான ஆண்டு, படம், பாடியவர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், பாடலாசிரியர் போன்ற எல்லா விபரங்களையும் தொகுத்து வைத்திருந்த பதினெட்டாயிரத்துக்கு அண்மித்த பாடல்கள் கணனியின் தொழிநுட்ப கோளாறு காரணமாக ஒரேநாளில் தொலைந்தபோது தாளவே இயலாது துயரம் தோன்றியது.
இளையராஜா, பரத்வாஜ், வித்யாசாகர், யுவன், ரஹ்மான் போன்றவர்கள் என்விருப்ப இசையமைப்பாளார்கள். அத்துடன் எஸ். பி. பாலா, ஜென்சி, சுசீலா, ஜானகி, அனுராதா ஸ்ரீராம், ஷாஹுல் ஹமீத், கார்த்திக், இளையராஜா, கமல்ஹாசன் போன்ற பாடகர்கள் பாடியவையும் வைரமுத்து, முத்துக்குமார், கண்ணதாசன் போன்றாவர்கள் எழுதிய பாடல்களும் எனது தெரிவுகள். இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களையும் சேகரித்து வைத்து என் முதுமையை கொண்டாட வேண்டும் என்பது என் ஆசை. இப்பொழுது யுவன் மற்றும் ரஹ்மான் இசையமைத்த எல்லாப்பாடல்கலையும் தொகுத்து வைத்துள்ளேன். இளையராஜாவுக்கும், ரஹ்மானுக்கும் வைரமுத்துவுடன் ஏற்பட்ட பிரிவும் விரிசலும் நல்லபாடல்களின் வருகையில் பெரும் தேக்கநிலையை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமாக்களை பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

உலக மொழி சினிமாக்களில் குறிப்பிடதக்களவில் பார்த்ததில்லை. அனிமேஷன் என்கிற கற்பனாவாதத்து கதைகளை என்னல் ரசிக்க முடிவதில்லை. என்னை பொறுத்தவரை ஒரு திரைப்படம் ஒரு மனிதனின் அல்லது சமூகத்தின் வாழ்வினை சொல்லவேண்டும். ஆனால் நிறைய மலையாளப்படங்கள் பார்த்திருக்கிறேன். வடக்கும் நாதன், தன்மாத்ரா, அச்சுவிண்டே அம்மா,தேன்மாவின் கொம்பத்து போன்ற பல மலையாளப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். முன்பொருமுறை கானாபிரபா மலையாளப்படங்களின் பட்டியல் ஒன்றை எனக்கு பிரத்தியேகமாக அனுப்பினார். அதுதான் என்னை மலையாளக்கரையோரம் கொண்டுசேர்தது. ஆங்கிலப்படங்களின் கவர்ந்தவை the great Gatsby, a beautiful mind என்று மிகச்சில.

தமிழ் சினிமா உலகத்துடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் சிலருடன் தொடர்புகொள்ள வேண்டும் என்ற தீராத ஆசை உண்டு. திரைப்பட உலகில் தொடர்புகொண்டவர்களுல் எழுத்தாளர்கள் பாலகுமாரனுடன் மட்டுமே தொடர்புகள் உள்ளன. அற்புதமான மனிதர். மனம் சஞ்டலப்படும் பல நேரங்களில் கதைக்கும் போதெல்லாம் பேராதரவு தரும் பேச்சு அவருடையது.

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிறைய யதார்த்தமான படங்கள் வருகின்றன, வெற்றி பெறுகின்றன. 80களுக்கு பிறகு இப்போதுதான் நிறைய படங்கள் நல்ல கதாம்சத்துடன் வந்து வெற்றிபெறுகின்றன. ஆனால் இசையின் தரம், அது பிண்ணனி இசையானாலும், பாடல்களானாலும் சற்று குறைந்துவிட்டன. எப்போதெல்லாம் என்னை நானே தாலாட்டவேண்டும் என்று நினைக்கிறேனோ அப்பொதெல்லம் இளையராஜாவின் இசையைத்தான் இப்போதும் கேட்கவேண்டியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அமீர், பாலா, சசிக்குமார், ராம், வெங்கட் பிரபு, முருகதாஸ், கௌதம் இப்படி நிறைய புதிய இயக்குணர்களின் வருகை நம்பிக்கை அளிக்கிறது. அதுபோல எல்லா துறையிலும் நிறைய போட்டியாளார்கள் இருப்பதால் மெத்தனம் இல்லாமல் அவரவர் பாணியில் கடும் உழைப்பைக்காணமுடிகின்றது. ஆனால் மக்களுக்கும் திரையரங்கில் சென்று சினிமா பார்க்கும் குணம் வரவேண்டும். ஒரு டொலருக்கு கள்ள (திருட்டு) வி டி யில் படம் ஒரு குடும்பமே திரைப்படம் பார்த்துவிட்டு படம் குப்பை என்று சொல்லும் போக்கு பொறுப்பில்லாத்தனத்தின் உச்சக்கட்டம்.

அடுத்த ஒரு ஆண்டில் தமிழ் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலக்காட்சிகள், இணையம் உள்ளிட்ட ஊடகங்கள் எதிலுமே கிடையாது என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு எப்படியிருக்கும்?. தமிழர்களுக்கு என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்?

புதிதாக வந்த படங்களைதான் பார்க்கவேண்டும் என்பதில்லையே? என்னைப் பொறுத்தவரை சற்று பழைய படங்களில் மீதுதான் எனக்கு நாட்டம் அதிகம், சரியாக சொன்னால் இந்த கதாநாயகர்கள் கையிலே கட்டையை தூக்கி கொண்டு பன்ச் டயலாக்குகளை சொல்லதொடங்க முதல் வந்த படங்கள். எத்தனை அருமையான படங்களை நாம் பார்க்காமலே கடந்து வந்திருக்கிறோம்?. இதுதான் சந்தர்ப்பம் என்று அவற்றை எல்லாம் தேடிபார்ப்பேன். அந்த ஓராண்டும் புதிதாக திரைப்பாடல்களும் வராது என்பதால், என்னிடமுள்ள பாடல்களை எல்லம் கணிணியேற்றி ஒழுங்கு செய்வேன்.
ஆனால் திரைப்படம் இல்லாவிட்டால் அது நிச்சயம் மக்களை மனவியல் ரீதியாக பாதிக்கும். தமிழர்களை பொறுத்தவரை அவர்களுக்கிருக்கின்ற மிகப்பெரும் கேளிக்கை சினிமாதான். (ஓரளவுக்கு ஒரே கேளிக்கை என்று கூட சொல்லலாம்). இதனால் அவர்களுக்கான வடிகால் (outlet) இல்லாமல்போக மிக மோசமான நிலையில் மக்களின் மனது பாதிக்கப்படும்.

தமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து காணாப்படும் கதை வறட்சிக்கு பலராலும் முன்வைக்கப்படும் காரணங்களில் ஒன்று அதில் எழுத்தாளார்களின் குறைவான பங்களிப்பாகும். இந்த தலைமுறை எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற வெகு சிலர் மட்டுமே திரையுலகிலும் பங்களித்து வருகிறார்கள்.

பாலகுமாரனை பொறுத்தவரை அவரது திரையுலக பங்களிப்பு சற்று தீவிரமானதாகவே இருந்தது. நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான பாலகுமாரன், அதே கால கட்டத்தில் வசந்த் (அப்போது பாலசந்தரின் உதவியாளராக இருந்தார்), பாக்கியராஜ் போன்றவர்களுடனும் நெருக்கமாக இருந்தார். இக்காலகட்டத்தில் திரையுலகினாலும் அதில் கிடைக்கும் ஒரு விதமான புகழினாலும் தான் கவரப்பட்டதாக கூறியிருக்கிறார் பாலகுமாரன். பாக்கியராஜ் முந்தானை முடிச்சு திரைப்பட கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த அக்காலத்தில் பாலகுமாரனும் கலந்து கொண்டிருக்கிறார். பாலகுமாரனின் கதைகளை படித்த எவருமே அவர் கதையை கொண்டு செல்லும் விதத்தையும், காட்சிகளை கோர்த்து கதையை கொண்டு செய்வதில் இருக்கும் கட்டுமானத்தையும் ரசித்தேயிருப்பார்கள். இந்த கதை விவாதங்களின் போது பாக்கியராஜும் பாலகுமாரனை திரையுலகுக்கு வருமாறு அழைப்புவிடுத்திருக்கிறார். இதன்பிறகு முந்தானை முடிச்சு படத்தின் ப்ரீவியூ பார்த்தபோது அப்படத்தில் பாக்யராஜுடன் இணிந்து பணியாற்றவில்லையே என்று தான் வருந்தியதாகவும் பாலகுமாரன் கூறியிருக்கிறார். பாலகுமாரன் தான் அக்காலத்தில் புகழ் மீது பெரும் போதை கொண்டிருந்ததாக பலமுறை கூறியிருக்கிறார். சுஜாதாவின் போஸ்டர்களை பார்த்து அப்படி தனது போஸ்டர்களும் வரவேண்டும் என்று ஏங்கியதாகவும் சினிமாவின் ஜிகினா வெளிச்சம் தன்னை அதிகம் ஈர்த்ததாகவும் ஓரிருமுறை எழுதியிருக்கிறார். காலச்சுசுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்கள் புத்தக பதிப்பில் ஈடுபட முதல் வானதி, விசா (திருமகள்), பாரதி பதிப்பகம் போன்றவை புத்தகங்கள் வெளியிடும்போது பெரும் எழுத்தில் புத்தகத்தின் பெயரும் சிறிய எழுத்தில் எழுத்தாளரின் பெயரும் இருக்கும். இந்நிலையை மாற்றியது சுஜாதா, பின்னர் இது பாலகுமாரனுக்கும் தொடர்ந்தது.

இதன்பிறகு கமல்ஹாசனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் பாலகுமாரன். “புகழுக்காக சினிமாவுக்கு வாரதீங்க பாலா, அந்த புகழ் உங்களுக்கு இப்பவே இருக்கு. உங்கட புத்தக வெளியீட்டு விழாவில (இரும்பு குதிரைகள்) வைரமுத்து உங்கள புகழ்ந்ததே இதுக்கு உதாரணம். அத தாண்டி வரணும்ணு நினச்சா இப்படி அட்வைஸ் கேக்காதீங்க,” என்று கமல் கூற அதை தொடர்ந்து தனக்கு நெருக்கமான சாருஹாசன், சுஹாசினி, அனந்து, சிவகுமார் என்று அனைவரிடமும் ஆலோசனை கேட்டிருக்கிறார். பலதரப்பட்ட கருத்துகளால் அவர் குழம்பிபோயிருந்த நேரத்தில் சாருஹாசன் ஏற்பாடு செய்த seven samurai (Akira Kurasawa -1954) என்ற திரைப்படத்தை பார்த்து தான் திரைப்பட உலகின் நுழைய துடிப்பதற்கு தனக்குள் இருக்கும் போர்க்குணமும் காரணம் என்று தெளிந்து சினிமாவில் நுழைவதாக தீர்மானம் எடுத்ததாகவும் கூறுகிறார். இதனை தொடர்ந்து 1984/85ல் தான் பார்த்து வந்த ட்ராக்டர் கம்பனி வேலையை உதறிவிட்டு சினிமாவில் முழுநேரமாக நுழைகிறார்.

இது கூட அவரது ரசிகர்கள் / வாசகர்கள் உணர்ந்ததுதான். பாலகுமாரன் பிரபலமாக முன்னர் நடந்த நிகழ்வு இது. ஒரு இலக்கிய ஒன்று கூடலில் சுஜாதா பேசுகிறார், பாலகுமாரனும் சுப்ரமணிய ராஜுவும் (பாலகுமாரனின் மிக நெருங்கிய நண்பர். சிறந்த எழுத்தாளர். 1985 காலப்பகுதியில் ஒரு விபத்தில் இறந்தார். அவரை பற்றி “தாக்கம்” என்று பாலகுமாரன் ஒரு சிறுகதை எழுதினார்) கலந்து கொள்ளுகிறார்கள். அப்போது சுஜாதாவை இடைமறித்து தகராறும், வாக்குவாதமும் செய்து அதனால் வெளியேற்றப்படுகிறார் பாலகுமாரன். இவருடன் சென்ற சுப்ரமணிய ராஜு உள்ளே நின்றுவிட, தான் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்ததாகவும் சுஜாதா போன்ற பெரும் எழுத்தாளராக தானும் வருவேன் என்று சபதம் செய்ததாகவும் கூறுகிறார் பாலா. இதனை தொடர்ந்து K. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சிந்து பைரவியில் தனது திரைப்பயணத்தை தொடங்குகிறார்.

உதவி இயக்குனராக :
அடிப்படையில் ஒரு எழுத்தாளராக இருந்தாலும் பாலகுமாரன் திரைத்துறையில் நுழைந்தபோது ஒரு டைரக்டராக வேண்டும் என்றுதான் நுழைந்தார். திரைத்துறையில் நுழைவதன் மூலம் புகழும் பிரபலமும் பெறுவது, தன்னை ஒரு சாதனையாளனாக நிலைநிறுத்துவது என்று நுழைந்த பாலகுமாரனை பொறுத்தவரை
 இது மிகப் பொருத்தமான முடிவுதான். தமிழ் சினிமாவில் கதாசிரியர் புகழ்பெறுவது என்பது மிகவும் கடினமானது. சுஜாதா கூட ஒருமுறை தமிழ்சினிமாவை பொறுத்தவரை கதாசிரியரின் வேலை “நொட் (முடிச்சு)” என்பதுடன் முடிந்துவிடுகிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். ஒரு நேர்முகத்தில் பாலகுமாரனிடம் அவரது மெர்க்குரிப் பூக்களை திரைப்படமாக்க முயற்சித்தபோது அவர் மறுத்ததாக வந்த செய்தி உண்மையா என்று கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டிருந்தார். சாவித்திரியின் காதலை, மற்ற கதாபாத்திரங்களை எவர் சரியாக திரையாக்கப்போகிறார்கள், அவர்களின் துடிப்பை யார் வெளிக்காட்டப்போகிறார்கள் என்பதாலேயே தான் மறுத்ததாக அவர் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

இவர் சிந்து பைரவி, புன்னகை மன்னன், சுந்தர சொப்பனகளு (கன்னடம்) முதலிய திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இயக்குனராக பணியாற்றிய படங்கள் :
ஒரு இயக்குனராகும் எண்ணத்துடன்தான் பாலசந்தரிடம் சேர்ந்து உதவி இயக்குனராக இவர் பணியாற்றினார். அதன் பின்னர் அப்படியான ஒரு வாய்ப்புன் வந்தது. K பாக்கியராஜ் – ஷோபனா நடிக்க பாக்கியராஜ் இசையமைத்து 88/89ல் வெளியான படம் இது நம்ம ஆளு. பெரு வெற்றி பெற்ற படம். இத்திரைப்படத்தை பார்த்தால் டைரக்க்ஷன் – பாலகுமாரன் என்ற டைட்டிலை காணலாம். படம் வெளியான பின்னர் பிராமணர்கள் உட்பட சாதிய ரீதியான கடும் எதிர்ப்பை சந்தித்த படம் இது. அப்போது எல்லாம் பாலகுமாரனின் பெயர் ஒரு கேடயம் போல பயன்பட்டது. ஆனால் பாக்கியராஜ் தரப்பில் இருந்து பாக்கியராஜே படத்தை இயக்கியதாகவும் கூறப்பட்டு படத்தின் பெருவெற்றியும் பாக்கியராஜின் திறனாகவே கருதப்பட்டது. இதனை தொடர்ந்து ராசுக்குட்டி என்ற திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்த காலப்பகுதியில் பாக்கியராஜ் இது நம்ம ஆளு திரைப்படத்தில் பாலகுமாரன் உதவியாளராக பணிபுரிந்ததாகவும் ஆனால் அவரால் ஒரு சிறு காட்சியை கூட விவரிக்க முடியவில்லை என்றும் கூறினார். இதனால் பாதிக்கபட்ட பாலகுமாரன் தான் இனிமேல் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக மட்டுமே பணிபுரிவேன் என்றும் அறிவித்தார்.

நடிகராக :
ஒரு நடிகராக வரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஒரு போதும் இருந்ததாக தெரியாத போதும் தான் பரவலாக அறியப்படவேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஆர்வம்  அவர் சில திரைப்படங்களில் சில காட்சிகளில் தோன்றியதற்கு காரணமாக இருக்கலாம்.

இவரது நண்பர் வசந்த் முதன்முதலாக இயக்குனரானபோது கேளாடி கண்மணி திரைப்படத்தில் ஒரு ஆசிரம நிர்வாகியாகவும் (திரையில் கடைசி 20 நிமிடங்களுக்குள் வரும் காட்சி. தாடி இல்லாத, மெலிந்த, தலை நரைக்காத பாலகுமாரனை அடையாளம் காண்பது கூட கடினமாக இருக்கும்), இவரது பெரும் வாசகர்களான ஜேடி- ஜெர்ரி முதன் முதலில் இயக்கிய உல்லாசம் திரைப்படத்தில் பஸ் கண்டக்டராகவும் திரையில் தோன்றினார். அது போல மென்மையான படங்களை மட்டும் இயக்கிவந்த விக்கிரமன் முதன் முதலில் தனது பாணியை விட்டு விலகி புதிய மன்னர்கள் என்ற திரைப்படத்தை அரசியல் பிண்ணனியில் இயக்கியபோது மாணவர்கள் அரசியலுக்கு வருவது போல வருகின்ற காட்சிகள் ஏற்கப்படுமா என்ற கேள்வி வந்தபோது பாலகுமாரன் உட்பட சில பிரபலங்கள் திரையில் தோன்றி தமது கருத்தை கூறுவது போல படமாக்கியிருப்பார். மேலும் முன்னர் குறிப்பிட்ட இது நம்ம ஆளு திரைப்படத்தில் கூட ஒரு றெஸ்டாரண்ட் மனேஜராகவும் நடித்திருந்தார்.

வசனகர்த்தா:
திரையுலகை பொறுத்தவரை பாலகுமாரன் பெரு வெற்றிபெற்றது ஒரு வசனகர்த்தாவாகத்தான். திரைப்படங்களை பொறுத்தவரை வசனகர்த்தாவின் பங்கென்ன என்று ஒரு முறை கேட்டபோது வசனம் எழுதுவதுடன் சில காட்சிகளை அமைக்கவும் அதாவது கதையை கொண்டு செல்ல உதவுவது என்றும் கூறினார். உண்மையிலேயே அவரது பெரும் பலமான கதைஜ்களை இறுக்கமாக கட்டியமைஇகும் திறன் இயக்குனர்களுக்கு பெரும் துணைதான். இவர் பணியாற்றிய படங்களே அ
தற்கு சாட்சி. அதிலும் ஷங்கர் தனது படங்களுக்கு இவரையும் சுஜாதாவையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி தனது படங்களை மெருகேற்றி கொண்டது கவனிக்கதக்கது. அது போல பல இயக்குனர்கள் இவருடன் கைகொடுத்து அருமையான படங்களை தந்துள்ளனர். அவற்றின் முழு விபரம்
நாயகன் – (மணிரத்னம்)
குணா – (சந்தானபாரதி)
செண்பகத்தோட்டம்
மாதங்கள் ஏழு – (யூகி சேது)
கிழக்கு மலை (
ஜெண்டில்மேன்,காதலன், ஜீன்ஸ் – (ஷங்கர்)
பாட்ஷா – (சுரேஷ் கிருஷ்னா)
ரகசிய போலீஸ் – (சரத் குமார் நடித்தது)
சிவசக்தி – (சுரேஷ்கிருஷ்ணா)
வேலை – ( சுரேஷ் )
முகவரி, காதல் சடுகுடு – (துரை)
சிட்டிசன் – (சரவண சுப்பையா)
உல்லாசம் ( ஜேடி – ஜெர்ரி)
உயிரிலே கலந்தது (ஜெயா)
கிங் – (சாலமன்)
மன்மதன், வல்லவன் – (சிலம்பரசன்)
கலாபக் காதலன் – (இகோர்)
புதுப்பேட்டை – (செல்வராகவன்)
ஜனனம் – (ரமேஷ்)
ஜூன் ஜூலை – வெளியாகாத படம் / தயாரிப்பு நிறுத்தப்பட்டது
இது காதல் வரும் பருவம் – (கஸ்தூரி ராஜா)

திரைப்படமாக வரவேண்டும் என்று நான் எதிர்பார்க்கும் இவரது சில நாவல்கள்:

தாயுமானவன்
பயணிகள் கவனிக்கவும்
சினேகமுள்ள சிங்கம்
மெர்க்குரி பூக்கள்
அகல்யா
இரும்புக் குதிரைகள்
பொய்மான்

கரையோர முதலைகள்
ம்ம்ம்ம்ம்… இப்படியெல்லாம் நடிக்க, படம் எடுக்க இப்போது அல்லது இங்கே யார் இருக்கிறார்கள்… அவதாரங்கள் போலவே கையில் அரிவாளுடணும் உருட்டுக்கட்டையுடனும் துப்பாக்கியுடனும் திரியும் நம் திரை நாயகர்களுக்கு பாலகுமாரன் சொன்ன “என் அன்பு மந்திரம்” புரியுமா?

கார்த்திக் என்றொரு மகா நடிகன்

90 களின் பிற்பகுதியில் தொடர்ச்சியான ஹிட்களை கொடுத்து ரசிகர்களை பரவசப்படுத்தியும், சக நடிகர்களை வயிறெரியவும் பண்ணி கொண்டிருந்தார் ஒரு ஹீரோ. அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்து விஜய் தன்னை நிலைப்படுத்திக்கொண்டிருந்த, அஜித் ஒரு அங்கீகாரத்துக்காக போராடிக்கொண்டிருந்த, சூர்யா, விக்ரம் இருவரும் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த, பிரசாந்தின் காற்று ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், காதல் கவிதை என்று சற்று பலமாக வீசிவிட்டு ஓய ஆரம்பித்திருந்த அந்த நாட்களில் மேற்சொன்ன ஹீரோக்களின் பதின்ம வயதுகளிலேயே பிரபல நாயகனாக இருந்த அந்த ஹீரோ அப்போதும் அவர்களுக்கு போட்டியாக, மாறாத இளமையுடனும் குறும்புடனும் இருந்தார். கேள்வி பதில் பகுதியில் பத்திரிகை வட்டாரத்தில் பிரபலமான அரசு கேள்வி பகுதிகளில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. பூவே உனக்காக, காதல் கோட்டை, லவ்டுடே என்று விஜய் அஜித் புறப்பட்டிருந்த காலம். விஜய், அஜித், பிரசாந்த், பிரபுதேவா, அரவிந்த்ஸ்வாமி இந்த இளம் நாயகர்களில் உங்களை கவர்ந்தவர் யார் என்பது கேள்வி. அதுக்குஅரசு சொன்ன பதில் “இவர்களெல்லாம் இருக்கட்டும், அந்த துடிப்பென்ன, குறும்பென்ன, உற்சாகமென்ன…ம்ம்ம் முன் முடியில் உதிர்ந்த அந்த முடிகள் மட்டும் இல்லாவிட்டால் முத்துராமனின் குமாரனை பிடிக்க இன்னும் சில ஆண்டுகளுக்கே யாருமில்லை” என்பது. ஆம் அந்த நாயகன் நவரச நாயகன் கார்த்திக். கமல், சிவாஜி, விக்ரம், சூர்யா என்று சிறந்த நடிகர்களை பற்றி பேச்சு வரும்போதெல்லாம் நான் அழுத்தம் திருத்தமாக சொல்லும் கருத்து ஒப்பனையாலோ, வேடங்களை மாற்றியோ, மிகை நடிப்பாலோ காட்டப்படுவது மட்டுமே நடிப்பல்ல. இவையேதுமில்லாமல் யதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த ஒப்பற்ற இரண்டு மகா நடிகர்கள் ரகுவரனும் கார்த்திக்குமே என்பது.

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக அவருக்கு இருக்கவேண்டிய தகுதி அவர் யாராவது ஒரு சினிமா பிரபலத்தின் வாரிசாக இருக்கவேண்டும் என்பது தான். அப்படி வாரிசு நடிகர்களாக உருவானவர்களுல் தம் பெற்றோரின் புகழை காத்தவர்கள் என்றால் கார்த்திக், விஜய், சூர்யா என்று மிக சிலரை மட்டுமே கூறலாம். சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, மயங்குகிறாள் ஒரு மாது, குரு போன்ற பிரபல படங்கஈள் நடித்த காலஞ்சென்ற நடிகர் முத்துராமனின் மகன் தான் கார்த்திக். பதினாறு வயதினிலே என்று அறிமுகமான பாரதிராஜா பின்னர் மணிவண்ணனின் கதையினை வைத்து நிழல்கள் என்ற படத்தை எடுத்தார். இப்படத்தில் தான் வைரமுத்து முதன் முறையாக திரைப்பாடல் எழுதியிருந்தார். அற்புதமான கதையினை கொண்ட இப்படம் தோல்வியைதழுவ மணிவண்ணன் ஒரு மாபெரும் வெற்றிப்படத்துக்கான கதையை உங்களுக்கு தருவேன் என்று சபதமிட்டு அமைத்த கதைதான் அலைகள் ஓய்வதில்லை. 1981ல் வெளியான இப்படத்தின் அறிமுக நாயகனாக அறிமுகமானவர் முரளி என்ற இயற்பெயர் கொண்ட கார்த்திக். அப்பொழுது அவரது வயது 21. ஜாதி மத வேறுபாடுகளை கடந்து காதலிக்கும் நாயகனும் நாயகியும் இறுதிக்காட்சியில் ஊரைவிட்டே ஓடுவதாக கதை. வைரமுத்துவின் வரிகளும் இளையராஜாவின் இசையும் அற்புதமாக கைகொடுக்க மாபெரும் வெற்றி பெற்ற படம் இது. இதை தொடர்ந்து கேள்வியும் நானே, பதிலும் நானே, சீறும் சிங்கங்கள், இளஞ்சோடிகள் முதலிய படங்களில் நடித்தாலும் அவை எதுவுமே பெரிய வெற்றியை தரவில்லை. ஆனால் 82ல் வெளியான இயக்குனர் ஸ்றீதரின் நினைவெல்லாம் நித்தியா, ஆயிரம் நிலவே வா போன்ற படங்கள் அவற்றின் பாடல்களுக்காக பெரும் புகழ்பெற்றவை. நினைவெல்லாம் நித்தியாவில் வரும் பனிவிழும் மலர்வனம், ரோஜாவை தாலாட்டும் போன்ற பாடல்களும் ஆகாய கங்கையில் வரும் தேவதை இளம் தேவி போன்ற பாடல்களும் இன்றளவும் காதலர்களின் வேதங்களாக இருப்பதோடு கார்த்திக் மீதான ஒரு ரொமாண்டிக் ஹீரோ என்கிற விம்பத்தையும் ஏற்படுத்தின. பின்னர் 85ல் குறிப்பிடவேண்டிய படமாக நல்லவனுக்கு நல்லவன் படத்தை குறிப்பிடவேண்டும். இத்திரைப்படத்தில் ரஜினியின் மருமகனாக வரும் கார்த்திக்கிற்கு ரஜினியின் மகளை கொடுமைப்படுத்தும் சற்றே வில்லத்தனமான ஒரு வேடம். கிட்டதட்ட ஒரு துணை நடிகர் / குணசித்திர வேடம் மட்டும் ஏற்ற இப்படமும் 86ல் வெளியான மௌனராகம் திரைப்படமும் இவரது திரையுலக வாழ்வில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தின. மணிரத்ணம் இயக்க, மோகன் – ரேவதி நடித்த மௌனராகம் திரைப்படத்தில் கிட்டதட்ட ஒரு 20 நிமிடம் மட்டுமே கார்த்திக் வருவார். ஆனால் படம் பார்த்து முடித்ததும் எல்லார் மனதிலும் அவர்தான் நிறைந்திருப்பார். அப்படியான ஒரு நிறைவான நடிப்பை இப்படம் மூலமாக வழங்கியிருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படத்தில் ஒரு கௌரவ நடிகர் இவ்வளவு பாதிப்பு ஏற்படுத்துவது தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக மிக கடினமானது.

அதன் பிறகு அக்னி நட்சத்திரம், உரிமைகீதம், வருஷம் 16 என்று 90களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் கார்த்திக். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவரது திரைவாழ்வு சற்று வித்தியாசமானது. பொதுவாக அவரது எல்லாப் படங்களுமே பார்க்க கூடியதாக இருந்தாலும் திடீர் திடீரென்று மாபெரும் ஹிட்களை அவர் தருவார். கிட்டதட்ட ஒவ்வொரு இரண்டாண்டுகளிலும் அவரது ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை பார்க்கமுடியும். அது மட்டுமின்றி இமேஜ் பாராமல் பல படங்களில் இரண்டு நாயகர்களுடன் இணைந்தும் நடித்திருக்கிறார். ரஜினியுடன் நல்லவனுக்கு நல்லவன், ராகவேந்திரா போன்ற படங்களிலும், பிரபுவுடன் இரும்பு பூக்கள், உரிமை கீதம், அக்கினி நட்சத்திரம், தை பொறந்தாச்சு, குஸ்தி போன்ற படங்களிலும், அர்ஜீனுடன் நன்றி படத்திலும், அஜித் உடன் ஆனந்த பூங்காற்றே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்படங்களிலும் விஜய காந்துடன் ஊமை விழிகள், தேவன் படங்களிலும் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் ராஜெஷ்வர் (அமரன், இதயத்தாமரை), ஆர். வி. உதயகுமார் (முத்துக்காளை, பொண்ணுமணி, உலகைவிலை பேசவா), கே. சுபாஷ், சுந்தர். சி (உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி,) என்று சில இயக்குனர்களின் ஆஸ்தான நடிகராகவும் திகழ்ந்தார்.

தற்போதைய நடிகர்களை போல இல்லாமல் கார்த்திக்கின் சிறப்பம்சம் எந்த வேடமானாலும் அதில் வெளுத்துவாங்குவது தான். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசியும் (கோகுலத்தில் சீதை) வருவார், வாய் நிறைய வெற்றிலையோடும் (பொண்ணுமணி) வருவார், நாகரீக இளைஞராகவும் வருவார்(கோகுலத்தில் சீதை, உள்ளத்தை அள்ளித்தா, தொட்டா சிணுங்கி) பேட்டை ரவுடியாகவும் வருவார் (அமரன்). 80 களின் இறுதியில் அவர் இளம் தாடியுடன் நடித்தால் படம் வெற்றி என்ற செண்டிமெண்ட் பரவியபோது சினம் கொண்ட இளைஞனாக இவர் நடித்த இதய தாமரை, உரிமை கீதம், காளிச்சரண், அக்னி நட்சத்திரம், காதல் கீதம், போன்ற படங்கள் இன்றளவும் சிறப்பாகவே உள்ளன. அது போல சின்ன தம்பி, சின்ன கவுண்டர், என்று கிராமிய படங்கள் ஆதிக்கம் செலுத்திய 90களின் தொடக்கத்தில் அவர் நடித்த கிழக்கு வாசல், பொண்ணுமணி, முத்துக்காளை, சின்ன ஜமீன் (மனவளர்ச்சி குன்றிய வேடம்), படங்களில் கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார் கார்த்திக். இத்தனைக்கும் அவர் கான்வெண்டில் ஆங்கில மொழியில் படித்து வளர்ந்தவர். பின்னர் நகைச்சுவை படங்களும் மென்மையான உணர்வுகளி கொண்ட படங்களும் (நட்பு, காதல், பாசம்) வெற்றி பெற்ற 90 களின் பிற்பகுதியில் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, மேட்டுக்குடி, கண்ணன் வருவான், அழகான நாட்கள் போன்ற நகைச்சுவை படங்களும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி, தொட்டா சிணுங்கி, கோகுலத்தில் சீதை, நிலவே முகம் காட்டு போன்ற மென்மையான படங்களும் பெரு வெற்றி பெற்றன. அதுவும் கோகுலத்தில் சீதை, தொட்டா சிணுங்கி, பூவேலி போன்ற நடிப்பினை இப்போதைக்கு மற்றவர்களால் நினனத்துப் பார்க்க கூட முடியாது.

சில பாடல்களை பாடியும் இருக்கிறார். அவற்றில் அமரனில் பாடிய வெத்தல போட்ட சோக்கில மிக பிரபலமானது. தவிர பிஸ்தா, சிஷ்யா படங்களிலும் பாடியிருக்கின்றார். இது தவிர இவரது இன்னொரு குறிப்பிட தக்க குணாதிசயம் நட்பை பேணும் விதம். பல நடிகர்களால் சிறந்த நண்பர் என்று போற்றப்படுபவர் இவர். அது மட்டுமன்றி சுஹாசினி, குஷ்பூ, ரேவதி என்ற நடிகையராலும் சிறந்த நண்பரென கூறப்படுபவர் இவர். தனது வீட்டு வரவேற்பறையில் இருக்கும் ஒரே ஒரு சினிமாக்காரரின் புகைப்படம் கார்த்திக்கின் புகைப்படம் தானென்று ஒரு முறை குஷ்பூ கூறியிருந்தார்.

பெரும்பாலான கலைஞர்களுக்கு இருப்பது போலவே இவருக்கும் சில பலவீனங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை விட்டு மீளமுடியாமல் போனது அவரைவிட தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம். 89ல் சோலைக்குயில் திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ராகிணியை திருமணம் செய்த கார்த்திக் பின்னர் ராகிணியின் சகோதரி ரதியையும் திருமணம் செய்தார்( இதை 99ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியொன்றில் அவராகவே கூறினார்). அதே வேளைகளில் படப்பிடிப்புக்கு தாமதமாக போகும், சிலசமயம் போகாமல் விடும் இவரது பழக்கம் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேசமயம் வினியோகஸ்தர்களும் இவரது படங்களை வாங்க தயக்கம் காட்ட இவரது சினிமா வாழ்க்கை பெரும் முடக்கத்தை சந்தித்தது. பின்னர் நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது கொடுத்த ஆதரவினால் இவர் ஓரளவு மீண்டு வந்தாலும் அது கண்கெட்ட பிறகான சூரிய நமஸ்காரமாகவே அமைந்தது. ஏற்கனவே வாங்குவாரில்லமல் இவரது படங்கள் தயார் நிலையில் இருக்கும் நிலையில் புதிதாக படம் தயாரிக்க யாரும் தயாராகவில்லை.

இதன் பின்னர் தன் சமூகம் (தேவர்) சார்ந்து சரணாலயம் என்ற சேவை அமைப்பினை தொடங்கிய கார்த்திக் பின்னர் அரசியலில் சேர்ந்து (F)பார்வார்ட் ப்ளாக் என்ற கட்சியின் தமிழ்நாட்டு தலைவராகவும் இருந்தார். பின்னர் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்தார். அவரது அரசியல் ரீதியான பார்வைகளை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் கார்த்திக் என்ற மகா நடிகனுக்கான இடம் இன்னுமே காலியாக இருக்கையில் ஒரு ரசிகனாக கார்த்திக்கின் அரசியல்பிரவேசம் எனக்கு அர்த்தமற்றதாகவேபடுகிறது.

சில வாரங்களின் முன்னர் பத்திரிகைகளில் ஊர்ஜிதப்படுத்தாத ஒரு செய்தி வந்தது. அதாவது மணிரத்ணத்தின் அடுத்த படத்தில் கார்த்திக் ஒரு வில்லனாக நடிக்கிறாராம்.
அது நிஜமாகவே ஆகட்டும். எப்படி மௌனராகம் ஒரு வாழ்வு தந்ததோ, அப்படியே மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகட்டும். வில்லன் என்பதெல்லாம் ஒரு விடயமே அல்ல. 99% கதாநாயகர்களைவிட ரகுவரனையும், பிரகாஷ்ராஜையும் ரசிக்கும் என்போன்ற ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

தொட்டாச்சிணுங்கி உறவுகள்

“ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட ஐஸ்கட்டி உடைய, நட்பு பெருக, வரும்
தலைமுறை மீது அக்கறை அதிகமாகும். முன்பைவிட அக்கறையாய், அன்புச் சூழ்நிலையில் அமைதியான இடத்தில் அடுத்த தலைமுறை வளாரும். அந்த தலைமுறையில் கலை இலக்கியமும், அரசியலும், பொருளாதரமும், வாழ்க்கை நிலையும் உயரும்…..” – பாலகுமாரன்

அண்மையில் மீண்டும் ஒருமுறை தொட்டா சிணுங்கி திரைப்படத்தை பார்த்தேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நல்ல சினேகிதம் மலரலாம், தொடரலாம் என்பதை அழுத்தமாக கூறிய மிகச்சில படங்களில் இதுவும் ஒன்று. மனதோடு மழைக்காலம் (ஷாம்-நித்யா தாஸ்), மறுபடியும் (அரவிந்த் சாமி-ரேவதி) போன்ற படங்களில் ஆண், பெண் சினேகிதம் பற்றி காட்டப்பட்டாலும் நடைமுறை வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை யதார்த்தமாக காட்டியது இப்படத்தில் தான். ரகுவரன் தாழ்வு மனப்பான்மையுட ரேவதி- கார்த்திக் நட்பினை சந்தேகிப்பது போல வரும் காட்சிகளில் அவர் ஒரு சாதாரண மனிதனுக்கு இயல்பாக ஏற்படகூடிய மன உணர்வுகளை அல்லது மன உளைச்சல்களை பிரதிபலிக்கிறார். மேலும் வசனம் எழுதிய இயக்குனர் அதியமானின் அற்புதமான வாதத்திறமையினால் ரேவதி, கார்த்திக், ரகுவரன், தேவயானி, நம்பியார், பிரசாத் என்று அனைத்து கதாபாத்திரங்களின் நியாயங்களும் சரியான முறையில் முன்வைக்கப்படுகின்றன.

உண்மையில் நாம் வாழும் பிற்போக்கான சமூகத்தினால் நிராகரிக்கப்படும் ஆண், பெண் நட்புகள் ஆண்களையும், பெண்களையும் மனதளவில் அங்ககீனர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. சகோதரியாகவோ. தாயாகவோ அதன் வழிவந்த உறவுகளாகவோ அல்லது மனைவியாகவோ மட்டும் தான் ஒரு பெண்ணுடன் உறவு ஏற்படமுடியும் என்பது இங்கே எழுதாத சட்டமாக மாறிவிட்டது. நான் உயர் கல்லூரியில் படித்தபோதும், அதன் பின்னும் இந்த நெருக்கடிகளுக்கு ஓரளவு வளைந்து “அவரோட அண்ணாமாதிரிதான் பழகுகிறேன்” என்று கூறும் பெண்களையும் “அவ எனக்கு தங்கச்சி மாதிரி” என்று கூறும் ஆண்களையும் எண்ணிக்கையில்லாமல் கண்டிருக்கிறேன். எனது நண்பன் ஒருவன் அக்கா, அக்கா என்றழைத்த பெண்ணுக்கு அவனைவிட இரண்டு வயது குறைவு… இதைபற்றி அவனிடம் கேட்டபோது சொன்னான் “நான் அவவை லவ் பண்ணேல்ல, ஒருவேளை அவவோ இல்லை வேறு யாராவதோ அப்படு நினனக்காமல் இருக்க தான் இப்படி கதைக்கிறேன்”. இப்போது அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது…. ஆனால் அக்கா, அக்கா என்று அன்பாக பழகியவனுக்கு அழைப்பு இல்லை. தனது புனித்ததை காக்க அந்த பெண் செய்த / செய்யவேண்டிய காரியம் இது…. இதற்கு காரணாம் இத்துப்போன எமது சமூக கட்டமைப்பு. ஆணும் பெண்ணும் மனதில் எந்த கள்ளமும் இல்லாமல் இவன் எனது தோழன் என்றோ அல்லது எனது தோழி என்றோ தனது குடும்பத்தினரிடமோ அல்லது கணவன், மனைவிக்கோ அறிமுகப்படுத்தும் நிலை
எம்மிடையே இன்று இல்லை.

ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் நல்ல தோழமையாக இருப்பதாலும், ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பதாலும் அவர்கள் வாழ்வில் எவ்வளவு அனுசரிப்பு அதிகரிக்கும் என்பது ஏன் எவருக்குமே புரிவதில்லையோ?? கல்யாணச்சந்தையில் பெண் சினேகம் அதிகம் என்பது ஒரு ஆணின் மார்க்கெட்டை குறைக்கும் விடயமாகவே இருக்கின்றது, பெண் சினேகம் என்பதே ஏன் ஒரு கொச்சையான விடயமாக கருதப்படுகிறதோ தெரி்யாது, எதற்கெடுத்தாலும் ராஜராஜசோழன் என்றும், ராஜேந்திரன் என்றும் பழம்பஞ்சாங்கத்தை புரட்டும் நம்மவர்கள் ஏனோ அவர்கள் இருவரும் பெற்றா வழங்களுக்கு அவர்களுக்கு அமைந்த அற்புதமான பெண் தோழியரும் காரணம் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

இப்படியான சமுதாய நிர்ப்பந்தங்களுக்கு வளாஇந்து கொடுக்காமல் கல்லூரி நாட்களில் நெருக்கமாக பழகிய (இந்த நெருக்கமாக என்பதை கூட வேறு அர்த்தத்தில் தான் சமுதாயம் பார்க்கும்) தோழனும் தோழியும் அவர்கள் குடும்பங்களாலேயே மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டு இருவரும் கண்டால் கூட கதைக்கக்கூடாது என ஆயுத முனையில் மிரட்டப்பட்டதை நன்றாக அறிந்தவன் நான்.

தொட்டாசிணுங்கி படத்தை முதன் முதலில் யாழ்ப்பாணத்தில் பார்த்துவிட்டு அதை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது எனது நன்பன் ஒருவன் இந்த நட்பு நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று கூற நான் சாத்தியம் என்று கூறினேன். இதற்காக பந்தயமும் பிடித்தோம். இப்போது அவன் மணந்திருப்பது எனது சினேகிதியை, எம் நண்பன் ஒருவனின் சகோதரியை. மீண்டும் அவனை நேரில் காணும்போது அவனிடம் கேட்கவேண்டும்; அது சாத்தியமா இல்லையா என்று.