மணற்கேணி இதழும் சில எண்ணங்களும்

நிறப்பிரிகை ரவிக்குமார் ஆசிரியராக இருக்கின்ற மணற்கேணி இதழின் முதல் இரண்டு இதழ்களை பெற்றுக்கொண்டேன்.  இதழ்களை புரட்டிப் பார்த்தவுடனேயே மனதில் தோன்றிய விடயம், அவற்றின் அச்சு நேர்த்தி.  தமிழ்ச் சிற்றிதழ்களின் அச்சு நேர்த்தி பற்றிய பேச்சுகள் எழும்போதெல்லாம் பரந்தாமனின் அஃக் இதழ் பற்றியே சிலாகிக்கப்படும்.  துரதிஸ்டவசமாக எனக்கு அந்த இதழ்களில் ஒன்றையேனும் பார்க்கக் கிடைக்கவில்லை என்றாலும் தமிழ்ச் சிற்றிதழ் சூழலில் அச்சு நேர்த்தி, ஒரு/ழுங்கமைப்பு போன்ற விடயங்களில் காட்டப்படும் சிரத்தையின்மை பற்றி நிச்சயமாக அங்கலாய்ப்பு இருக்கின்றது.  மணற்கேணி இதழ்களைப் பொறுத்தவரை உயிர்மை, காலச்சுவடு, தீராநதி போன்றவற்றின் அதே வகையான உள்ளடக்கத்துடன் அவற்றை விட பல மடங்கு தரமான பக்கங்கள், நேர்த்தியுடன் வெளிவருகின்றது.

ரவிக்குமார் என்னைப் பொறுத்தவரை விதைத்திருந்த நம்பிக்கைகள் விழுதுகள் விட்டுப் பரந்திருக்கும் ஆலமரம் போன்று பரந்தவை.  இன்று அதே ரவிக்குமார்தான் கருணாநிதி தனக்கு அண்ணா விருது கொடுத்த போது பேசிய பேச்சினை தனது வலைத்தளத்தில் வெளியிட்டு பெருமிதம் கொள்கிறார்.  அந்தப் பேச்சின்போது கருணாநிதி சொல்கிறார்,

“ரவிக்குமார் அவர்கள் பல நூல்களை எழுதியவர். எனக்கே ஆச்சரியமாக இருந்தது – இவ்வளவு நூல்களா ,நாமே இவ்வளவு எழுதவில்லையே என்று. அவ்வளவு நூல்களை – உலகத்திலே உள்ள பல தலைவர்களைப் பற்றி – பல கருத்துகளைப் பற்றி விமர்சனங்களையெல்லாம் எழுதியவர் அவர். இன்னும் சொல்லப்போனால் ஆரம்ப காலத்தில் அவர் எங்களைத் தீவிரமாக எதிர்த்தவர். தீவிரமாக எதிர்த்தால்தான் பிறகு தீவிரமாக ஆதரிப்பார்களென்று எனக்கு நன்றாகத்தெரியும் . எனக்கு அவரிடம் எப்போதுமே அவருடைய பேச்சில் ,அவருடைய நடவடிக்கையில் , அவருடைய எழுத்தில் மயக்கம் உண்டு. இவர் நம்மிடமே இருக்கவேண்டுமே என்று கருதியிருந்தேன். பிறகு பார்த்தால் அவர் சிறுத்தைகளிடம் இருந்தார். அதுவும் நம் இடம்தான் என்று அதிலே ஒரு ஆறுதல் கொண்டேன்.”

என்று.  கருணாநிதியின் இலக்கியச் சேவையை ரவிக்குமாரின் எழுத்துக்களோடு ஒப்பிட்டு – அதுவும் எண்ணிக்கையளவில் – பேசுகிறார் கருணாநிதி.  இதைவிட ரவிக்குமாரை வேறு எப்படியாவது கேவலப்படுத்தலாமா என்பது தெரியவில்லை.  ரவிக்குமார் பற்றிய நம்பிக்கைகளும் எதிபார்ப்புகளும் எனக்கு உயர்ந்திருந்த காலமொன்றில் ரவிக்குமாரின் பேட்டி ஒன்றை வாசித்தேன்.  அதில் நிறப்பிரிகை குழு பிரிந்தது பற்றிப் பேசும்போது நிறப்பிரிகை என்ற பெயரை அ. மார்க்ஸ் தன் சொந்தச் சொத்துப் போல தனது வீட்டிற்கும் பெயராக வைத்துள்ளார் என்று குறைபட்டிருந்தார் ரவிக்குமார் (வல்லினம்  மே – ஜூலை 2002).  அண்மையில் வல்லினம்நேர்காணல்களின் தொகுப்பை வாசித்தபோது அதில் ரவிக்குமாரின் மேற்சொன்ன நேர்காணலுடன் அதற்கு அ. மார்க்ஸ் ஆற்றியிருந்த எதிர்வினையையும் அதன் “முக்கியத்துவம்” கருதி வெளியிட்டிருந்தனர்.  அதில் அ. மார்க்ஸ் கூறுகிறார்

“எனக்கு ஒரே ஒரு வீடு தஞ்சாவூரில் உள்ளது.  அதில் என் பெயர்ப் பலகை கூட இல்லை.  வீட்டுக்குப் பெயரும் கிடையாது.  நிறப்பிரிகை இல்லம் என்பது என் மனைவி விஜி தான் கட்டிய வீட்டிற்கு வைத்த பெயர்.  ….  பல சொந்தக் காரணங்களுக்காகவும் நிறப்பிரிகையின் மீதும் என் மீதுமுள்ள அன்பை வெளிப்படுத்தும் முகமாகவும் இந்தப் பெயரை அவர் தேர்வு செய்தார்.”(வல்லினம் ஓகஸ்ட் – ஒன்ரோபர் 2002).

முதன் முதலாக ரவிக்குமாரின் நேர்காணலை வாசித்த போது ஐயோ இரண்டு நல்ல மனிதர்கள் இப்படி சண்டை பிடிக்கிறார்களே என்று நினைத்திருந்தேன்.  இப்போது…. அதை விடுங்கள்.  அ.மார்க்ஸ் தனது நிறப்பிரிகை என்கிற இதழின் பெயரை தனது வீட்டிற்கும் வைத்ததாக குறைபட்டுக் கொண்ட அதே ரவிக்குமாரின் இன்றைய வலைப்பதிவு முகவரி http://nirappirikai.blogspot.com.  எனக்கு இதையெல்லாம் பார்க்கின்றபோது கவுண்டமணி சூரியன் திரைப்படத்தில் சொல்லிப் பிரபலமான “அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்” என்கிற காட்சிதான் ஞாபகம் வருகின்றது.

தமிழ்ச் சிற்றிலக்கிய சூழலில் நிறப்பிரிகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது மறுக்கமுடியாத உண்மை.  நிறப்பிரிகையின் பெரும் வெற்றி என்னவென்றால் நிறப்பிரிகை நின்றபின்னரும் கூட அதிலிருந்து பிரிந்துபோனவர்கள் தனிநபர்களாக தம்மை, தம் அடையாளங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள் என்பதே.  தற்போது நிறப்பிரிகையின் தொடர்ச்சியாக என்று சொல்லிக்கொண்டு லும்பினி என்கிற இணைய இதழ் இயங்குகிறது.  நிறப்பிரிகையின் இதழ்களின் PDF தொகுப்புகள் கிடைக்கின்றன என்பதைத் தவிர லும்பினி வேறு ஏதாவது வகையில் தன்னை நிலை நிறுத்தியதா என்றால் இல்லை என்பதே ஒரே பதில்.  சர்வதேச  தமிழ் எழுத்தாளர் மாநாடை வரவேற்கிறோம் என்கிற அறிக்கை லும்பினி தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.  அதே நேரம் 2000ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இனி மாநாட்டுக்கு எதிராக நிறப்பிரிகை எடுத்த நிலைப்பாடு பற்றிய நிறப்பிரிகையின் தொடர்ச்சி என்று நம்பப்படும் லும்பினியின் தற்போதைய நிலைப்பாடு என்னவென்பதை அறிய ஆவலாக உள்ளது.  ‎தமிழ் இனி மாநாடு பற்றி நிறப்பிரிகை சார்பில் அ. மார்க்ஸ் தமிழ் இனி 2000 என்கிற கும்பமேளா என்று ஒரு கட்டுரை எழுதினார். இது அவரது சொல்வதால் வாழ்கிறேன் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. இப்போது இலங்கையில் “கம்பன் விழாப் பாணியில்”நடைபெற்று முடிந்திருக்கின்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி இன்றைய நிறப்பிரிகைக்காரர்களான லும்பினிகாரர்களோ அல்லது அ. மார்க்ஸோ என்ன சொல்கின்றனர் என்பது பற்றி இன்னமும் ஓரிடத்திலும் பதியப்படவில்லை.  அதே நேரம் இவர்கள் இப்போது செய்கிற தகிடு தித்தங்களுக்காக நிறப்பிரிகையின் பங்களிப்பினை நாம் குறித்து மதிப்பித்துவிடமுடியாது.  உயிர்மை, காலச்சுவடு, தீராநதி போன்றவை எல்லாம் சிற்றிதழ்கள் என்று தம்மை அறிமுகம் செய்துகொள்ளும் இன்றைய காலங்களில் நிறப்பிரிகை போன்ற தீவிரமான, ஆழமான கட்டுரைகளுக்கும், விவாதங்களுக்கும் இடந்தரக்கூடிய இதழ்கள் வரவேண்டியது அவசியமே.  உன்னதம் அந்த வகையில் வந்திருந்தாலும் அது பெரும்பாலும் மொழிமாற்றுகளை முன்வைத்தே இயங்கி வந்தது.  தவிர உன்னதம் தொடர்ந்து வெளிவருகின்றதா என்றும் எனக்கு சரியாகத் தெரியவில்லை.  அதே நேரம் இலங்கையில் இருந்து வெளிவந்த கூடம் என்கிற இதழ் முக்கியமானதொன்று என்று நினைக்கிறேன்.  தற்போது கூடமும் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டாலும், அதன் முக்கியத்துவம் கருதி கூடத்தில் பழைய இதழ்களை வாசிப்பது அவசியம்.  நூலகம் தளத்தில் கூடத்தின் பழைய இதழ்கள் இருக்கின்றன.  (http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)

இது போன்ற ஒரு சிற்றிதழ் அல்லது தீவிர இதழ் என்கிற தானத்தை ரவிக்குமாரின் மணற்கேணி அடைவது சிரமமாக இருக்குமென்றாலும் அவர் நினைத்தால் முடியும்.  சிறீராம் சிட் பன்ட்ஸ் குழுமத்தில் ஆதரவில் வெளிவந்த சுபமங்களா இதழை, சிறீராம் சிட் பண்ட்ஸ் நட்டக் கணக்கு காட்டுவதற்காகவே நடாத்தியதாகக் குறைபடுவோரும் உள்ளனர்.  சிலவேளை அப்படி நட்டக் கணக்கு காண்பிப்பதற்காக ரவிக்குமார் நடத்துவதாக கருதப்படும் மணற்கேணி தமிழ்த் தீவிர இலக்கிய உலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தவும் முடியும்.  பூக்கோ பற்றிய அறிமுகங்களை தமிழ்ச் சூழலில் முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் ரவிக்குமார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனால் பூக்கோவிற்குப் பின்னரான சிந்தனையாளார்கள், இப்பொதும் வாழும் கோட்பாட்டாசிரியர்கள் பற்றித் தமிழ்ச் சூழலில் வாதங்களும் உரையாடல்களும் நடைபெற்றது இல்லையெனவே சொல்லலாம்.  முடியும், ரவிக்குமார் மனது வைத்தால்.

படங்கள் நன்றி: சவுக்கு இணையத்தளம்

http://www.savukku.net/index.php

பாரதி பாடல்களுக்குத் தடை புத்தகம் பற்றிய சில பகிர்தல்கள்

“சென்னை அரசாங்கம் சுயமாகத் தீர்மானிக்கும் ஆற்றல் முற்றிலும் தனக்குக் கிடையாது என்பதை இந்த விஷயத்தின் மூலம் வெளிக்காட்டி விட்டது. தமிழ் படிக்கும் மக்கள் நேரடியாக இகழ்ந்து அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இதை அவர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். இந்த அரசாங்கம் மக்கள்
கருத்துக்களுக்கு ஏதேனும் மதிப்புக் கொடுக்கிறது என்றால், இந்த நடவடிக்கையை அது மறுபரிசீலனை செய்யவேண்டும். தென்னிந்திய மக்களின் தேசிய உணர்வினை இந்த நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்திவிடமுடியும் என எண்ணினால் அவர்கள் கருத்து முற்றிலும் தவறானது”.
இந்த வரிகளைப் பார்த்ததும் அது ஏதோ தமிழக அரசின் அண்மைக்கால நடவடிக்கைகள் பற்றி எழுதப்பட்டவை போல தோன்றும். ஆனால் இவை 82 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட/ பேசப்பட்ட வரிகள். பேசப்பட்ட இடம் சென்னை சட்டமன்றம். காலம் : ஒக்டோபர் மாதம் 9ம் திகதி மாலை 3 மணி. பேசியவர் : திரு சி. என். முத்துரங்க முதலியார். பேசப்பட்ட காரணம் பற்றி அறிய சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
2
ஆளும் வர்க்கத்துக்கும் அதிகார வர்க்கத்துக்கும் சவால் விடும் எந்த ஒரு முனைப்பும், அல்லது ஆளும் மற்றும் அதிகார வர்க்கங்கள கேள்விக்கோ அல்லது கேலிக்கோ உள்ளாக்கும் முனைப்புகளோ ஒடுக்கப்படுவது அனாதி தொட்டு நடந்தே வருகின்றது. சிந்தனை மையங்களுக்கும், ஆளுமைகளுக்கும், அமைப்புகளுக்கும் எதிராக தொடுக்கப்படும் இந்த ஒடுக்குமுறைக்கு எழுத்துக்களும், படைப்புக்களும் மட்டும் விதிவிலக்காகிவிடுவதில்லை. பாரதி பாடல்களுக்குத் தடை என்கிற இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் அ.மார்க்ஸ் தரும் தடை விதிக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலை வாசிக்கின்றபோது தவிர்க்கமுடியாத வியப்பே தோன்றுகின்றது. இலக்கியத்தரத்திலும், ஜனநாயக மற்றும் குடியுரிமைச் சிந்தனைகளின் உச்சங்கள் என்றும் இன்று கொண்டாடப்படும் சில புத்தகங்கள் கூட ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டனவாக இருந்திருக்கின்றன.  Alice in wonderland (சீனாவில்), animal form (ஜெர்மனி, கென்யா, யுகோஸ்லாவியா) , rights of man (பிரிட்டன்), uncle tom’s cabin (ரஷ்ய மாநிலங்கள் சில), ulyssis (அமெரிக்கா) , lady chatterleys lovers , naked lunch, போன்ற புத்தகங்களுடன் பின்னர் மேற்கு வங்க அரசு தடை செய்த தஸ்லீமா நஸ்ரினின் சுய சரிதம் உட்பட மிக நீண்ட பட்டியலில் ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டு பின்னர் பிரபலமான புத்தகங்களின் பட்டியல் தொடர்கின்றது. அண்மையில் கூட லீனா மணிமேகலையின் ”உலகின் அழகிய முதல் பெண்” கவிதைத் தொகுப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் காவல்துறை ஆளுனரிடம் மனுக் கொடுத்ததும் எல்லாரும் அறிந்ததே. எனவே நூல்கள் தடை செய்யப்படுவது உலகின் பிற மொழிகள் போலவே முன் தோன்றிய மூத்த மொழி என்று நாமே அழைத்துக் கொள்ளும் தமிழிலும் இருந்திருக்கிறது என்பது தெளிவு. அது போன்ற ஒரு தடையை பாரதி பாடல்களும் சந்தித்து இருக்கின்றன.
3
1928ம் ஆண்டு ஆகஸ்டு 7ம் திகதி பாரதியின் சுதேச கீதங்கள் என்ற நூலின் இரண்டு பாகங்களுக்கும் பர்மா அரசு தடை விதித்தது. அந்த நேரம் பர்மாவும் பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னையைப் போன்ற ஒரு மாகாணமாக இருந்தது. அந்நாளைய பிரிட்டிஷ் இந்தியாவின் அரசாணைப்படி பிரிட்டிஷ் இந்தியாவின் ஏதாவது ஒரு மாகாணத்தில் தடை செய்யப்படும் புத்தகங்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் அனைத்து மாகாணங்காளிலும் தடைசெய்யப்பட்டனவே என்றிருந்திருக்கிறது. பர்மிய மாகாண அரசு பிறப்பித்த இந்த அரசாணையை சென்னை அரசு தனது கஸட்டில் பதிவு செய்தது.  இதனைக் காட்டி சென்னை நகர போலீசார், சென்னை மாகாண மாஜிஸ்ட்ரேட்டை அணுகி பாரதியாரின் பாடற் பிரதிகளை பறிமுதல் செய்யும் ஆணையைப் பெற்று அதனை நடைமுறைப்படுத்தினார். பாரதியாரின் குடும்பத்தினருக்கு தேவையான வாழ்வாதார வருமானத்தை ஈட்டித்தருவதற்காக பாரதியின் நலன் விரும்பிகளால் அமைக்கப்பட்ட பாரதி ஆசிரமம் மற்றும் தண்டபாணி கம்பெனி போன்ற இடங்களில் இருந்த புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தடுத்து நிறுத்துவதற்காக இரட்டை ஆட்சி முறையின் கீழ் தமக்குக் கிடைத்த குறைந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி முதற்கட்டமாக இந்த ஆணையின் மீதான ஒத்திவைப்புப் பிரேரனை ஒன்றைக் கொண்டு வந்தனர். அது பற்றிய சட்டமன்ற விவாதங்களின் தொகுப்பினை மிகத் திறம்பட அ.மார்க்ஸ் மொழிபெயர்த்துள்ளார்.
4

சத்தியமூர்த்தி, முத்துரங்க முதலியார், கே. வி, கிருஷ்ணசாமி நாயக்கர் போன்றோர் ஒத்திவைப்புப் பிரேரணைக்கு ஆதரவாக வாதிட்டனர். இந்த விவாதங்கள் யாவும், இலக்கியச் சிறப்புடனும், அலுப்பூட்டாத சுவையுடனும் இருப்பது தனிச் சிறப்பு. திராவிட முன்னேற்றக்
கழக்ம் ஆதிக்கம் பெற்ற பின்னர் தமிழ்நாட்டு சட்ட சபையில் விவாதனங்கள் இலக்கியச் சுவையுடன் நடந்ததாக கூறுவர். கருணாநிதி, அண்ணாத்துரை போன்றோரின் சட்டமன்ற பேச்சுக்கள் தொகுப்புகளாக வெளியிடப்பட்டும் இருக்கின்றன. ஆனல் தி.மு.க உருவாகுவதற்கே 20 ஆண்டுகளின் முன்னர் தமிழ்ப் பாடல்கள பற்றிய விவாதம் சுவையுடன் சட்டமன்றத்தில் நடந்திருக்கிறது. அப்படி இருந்தும் (அ.மார்க்ஸின் குறிப்புப்படி) கே. வி, கிருஷ்ணசாமி நாயக்கர் தவிர வேறு எவரும் தமிழில் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியேற முன்னர் கடிதங்களில் சம்பிரதாயமாக எழுதப்படும் ‘நமஸ்காரம்’ என்பது கூட ஆங்கிலத்தில் Namashkarams என்று தான் எழுதப்பட்டது என்கிற பாலமகுமாரனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.)

ஆங்கில மொழியில் கவிதைகள் எழுதிய லார்ட் டெனிஸன், வில்லியம் பிளேக், பார்க்கர் போன்றவர்கள் எப்படி இங்கிலாந்தின் பெருமையை பீற்றிக்கொண்டு, அவர்கள் பிறரை அடிமை செய்யப் பிறந்தவர்கள் என்ற தொனியில் பேசும்போது பாரதியின் பாடல்கள் எல்லா இனங்களுக்கும் பொதுவான, எல்லா நாடுகளின் தத்துவ ஆசிரியர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய விதமான கவிதகளைப் பாடியிருக்கின்றார் என்று எஸ். சத்தியமூர்த்தி மேற்கோள் காட்டி பேசும் இடம் குறிப்பிடத்தக்கது.
அது போல இங்கு முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய இன்னொரு விடயம் இறுதியில் நடைபெற்ற வாக்களிப்பு பற்றிய விபரங்கள். 76 பேர் ஒத்திவைப்புப் பிரேரணைக்கு ஆதரவாகவும், 12 பேர் எதிராகவும் வாக்களிக்க 15 பேர் நடுநிலை வகித்தனர். நடுநிலை வகித்த 15 பேரில் அப்போதைய பிரதம மந்திரியான பி. சுப்பராயனும் அடக்கம். அவர் வகித்த பிரத மந்திரி பதவியே அவரை நடுநிலை என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்திருக்கும். இல்லாவிட்டால் அவரும் கூட ஆதரவாக வாக்களித்து இருக்கக் கூடும். வாழும் காலத்தில் கவனிக்கப்படாத பாரதி என்கிற கவிஞனுக்கு வாழ்வின் பின் கிடைத்த கௌரவங்களில் இதுவும் ஒன்றே.
5
இந்த நூலை மொழிபெயர்த்த அ.மார்க்ஸ் தன் முன்னுரையில் எஸ். சத்தியமூர்த்தி பற்றிக் கூறும்போது “பாரதி பாடல்கள் மீதான தடையை எதிர்த்துக் குரல் கொடுத்த காரணத்துக்காக சத்தியமூர்த்தி போன்றோரைக் கருத்துரிமை ஆர்வலர்களாகவோ, முற்போக்குச் சிந்தனை உடையவர்களாகவோ நாம் கருதிவிட இயலாது. சத்தியமூர்த்தியின் தீர்மானத்தை ஆதரித்து அன்று வாக்களித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் கொண்டு வந்த தேவதாசி ஒழிப்பு மசோதாவின் மீது இதே சத்தியமூர்த்தி உதிர்த்த சனாதன சாக்கடைக் கருத்துகளை நாம் மறந்துவிடக்கூடாது. இன்றைக்கு தேவதாசிகள் வேண்டாம் என்பார்கள். நாளைக்கு அர்ச்சகர்களே வேண்டாம் என்பார்கள் என்று பேசி பலவழிகளில் எதிர்த்தவர் சத்தியமூர்த்தி” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

ஒருவர் ஓரிடத்தில் சரியான அல்லது தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என்றால் அவர் எல்லா இடத்தும் அப்படி இருக்கவேண்டும் என்பது இல்லை. எழுத்தாளர்கள் உள்ளிட்ட நிறைய ஆளுமைகளை அணுகும்போது இதே கருத்துடன் அணுகுவதே எனது வழக்கம். துரதிர்ஸ்டவசமாக அதில் 
முக்கியமானவர் அ.மார்க்ஸ். வர்க்கப் போராட்டங்களிலும், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் அ.மார்க்ஸ் எடுக்கும் பல நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் ரசித்த என்னால் இலங்கைப் போராட்டத்தில் அ.மார்க்ஸின் பார்வையில் இருக்கும் சொத்தைத்தனத்தை எந்த அடிப்படையில் எழுந்தது என்று அனுமானிக்கவே முடிவதில்லை. ஈழப்பிரச்சனையில் எத்தனையோ விதமான பரிமாணங்களில் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்க, புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றினர் என்பதையும் புலிகள் வலது சாரித்தனமாகச் செயற்பட்டனர் என்பதையும் மட்டுமே தொடர்ச்சியாக அ.மார்க்ஸ் உதிர்த்து வருவதற்கு அவருக்கு பிறவியிலேயே புலிகள் என்ற பெயரைக் கேட்டாலே வரும் ஒவ்வாமையத் தவிர வேறு எந்தக் காரணங்களும் இருக்க முடியாது.

இதற்கு அண்மைக்கால உதாரணம் லும்பினியில் எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்தில் டக்ளசுக்கே வாக்களித்தனர் என்று நிறுவும் முயற்சியுடன் எழுதிய கட்டுரை ஒன்று. இலங்கைப் பிரச்சனையில், தமிழகக் கட்சிகளின் நிலைப்பாடு, மத்திய அரசின் நிலைப்பாடு என்பன பற்றி இவர் கூறும் கருத்துக்கள் முக்கியம் வாய்ந்தனவாக இருப்பினும், ஒரு காலத்தில் வியந்து பார்த்த அ.மார்க்ஸ் இத்தனை சிறு பிள்ளைத்தனமாகவா ஓரின மக்களின் வாழ்வாதார பிரச்சனை பற்றி செயற்படுவார் / சிந்திப்பார் என்பது புரிவதே இல்லை.

ஈழநேசன் இணையத் தளத்துக்காக எழுதப்பட்டது.