பொ. கருணாகரமூர்த்தி | அ. முத்துலிங்கம்: இரண்டு நிகழ்வுகள், சில விமர்சனங்கள்

கனடாவில் பிடித்த காலம் எது என்ன என்று கேட்டால் கோடைகாலம் என்று உடனடியாகவே சொல்லிவிடுவேன். கோடை காலம் தொடங்கிவிட்டாலே பல் கலாசார நிகழ்வுகளும், கொண்டாட்டங்களும் களைகட்டத் தொடங்கிவிடும். இந்த முறையும், வழமையைவிட சற்று அதிகமாகவே இலக்கிய நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. மே மாதம் 16ம் திகதி முதல் இன்றுவரை 5 ஈழத்து எழுத்தாளர்களின் புத்தக அறிமுகங்கள் நடைபெற்று இருக்கின்றன

பொ. கருணாகரமூர்த்தி

80களின் தொடக்கத்திலேயே போரினால் இடம்பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வரும் எழுத்தாளார் கருணாகரமூர்த்தி அண்மையில் வெளியிட்ட பெர்லின் இரவுகள் என்ற புத்தகம் மூலம் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றுக் கொண்டவர். இவர் எழுதிய அகதி உருவாகும் நேரம், அவர்களுக்கென்று ஒரு குடில், பெர்லின் இரவுகள், கூடு கலைதல், போன்ற நூல்கள் பற்றிய விமர்சனமாக ஸ்கார்பரோவில் நடைபெற்ற நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்றது. தேவகாந்தன், குரு அரவிந்தன், நவம், என். கே. மகாலிங்கம், இளங்கோ ஆகியோர் நூல்கள் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க பொ. கருணாகரமூர்த்தி ஏற்புரையாற்றினார். பொ. கனகசபாபதி நேர்த்தியான முறையில் நிகழ்ச்சி தொகுப்பை வழங்கினார்.

நிகழ்வில் பலரும் பேசும்போதும் அ.முத்துலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி என்ற வரிசையை முன்வைத்து பேசினர். நவம் சொன்னது போல, அ.முவின் எழுத்துகளை படிக்கும்போது கொடுப்புக்குள் சிரிப்பு வரும். பொ. கருணாகரமூர்த்தியின் எழுத்துகளை படிக்கும்போது கொல்லென்று சிரிப்புவரும் என்ற கருத்தை எல்லா வாசகர்களுமே உணர்ந்திருப்பர். இருவரும் கதை சொல்லும் பாங்கில் கூட நிறைய ஒற்றுமைகளை காணலாம். (இதே போல சுவையாக கதை சொல்லக்கூடிய இன்னொரு ஈழத்துக் கதை சொல்லி சுகிர்தராஜா).

நிகழ்வில் எனக்கு அதிகம் நெருடலாகப் பட்ட விடயம் ஏறத்தாழ பேசிய எல்லாருமே பொ. கருணாக்ரமூர்த்தியை ஜெயமோகன் பாராட்டியிருக்கின்றார், ஜெயமோகன் இவரைப் பற்றி இப்படி சொல்லியிருக்கின்றார் என்கிற ரீதியில் பேசியதும், தாம் சொல்வதற்கெல்லாம் ஜெயமோகனை மேற்கோள் காட்டியதும். ஒரு கட்டத்தில் இது என்ன ஜெயமோகன் குருகுலப் பள்ளியின் விழாவா அல்லது ”ஜெயமோகன் பார்வையில் பொ.கருணாகரமூர்த்தி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கமா என்ற சந்தேகமே எனக்கு தோன்றிவிட்டது. ஜெய்மோகன் பல விடயங்களை பார்க்கும் விதத்தில் இருக்கின்ற கோளாறை நான் சொல்லி அறியவேண்டியதில்லை. அண்மையில் கமலாதாஸ் சூரையா பற்றிய பதிவில் அவர் தெரிவித்த கண்டுபிடிப்புகள் அவரது தீவிர ரசிகர்களை கூட மௌனமாக்கியிருப்பதை அவதானித்து இருக்கின்றேன். ஈழத்து எழுத்துகள் தட்டையானவை என்ற தேய்ந்துபோன தட்டையே திரும்ப திரும்ப எனக்கு தெரிந்து 10 வருடமாக சொல்லிவரும் இவரது அங்கீகாரத்தை இவ்வளவு முக்கியத்துவப்படுத்த வேண்டியதில்லை. அ.முத்துலிங்கம் தவிர்ந்த வேறு ஈழத்து எழுத்துகளை இவர் தொடர்ந்து படிக்கின்றாரா என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. இதையொற்றி எதிர்வினையாற்றின இளங்கோ “திசேரா, மலர்ச்செல்வன், இராகவன், மைக்கேல், சித்தார்த்த சேகுவேரா, நிருபா” போன்றவர்களின் எழுத்துகளை ஜெயமோகன் வாசித்திருப்பாரா என்பதே தெரியாது என்று சொன்னார். ஈழத்து எழுத்துகள் தட்டையானவை, ஒற்றைத்தன்மையானவை என்று தொடர்ந்து அறிக்கைவிடும் ஜெயமோகனின் எழுத்துகள் பல சமயங்களில் எவ்வளாவு அலுப்பூட்டும் பிரதிகளாக இருக்கின்றன என்பதை கனடாவில் இருக்கும் அவரது நண்பர்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லி மாடன் மோட்சம், பல்லக்கு போன்ற நல்ல சிறுகதைகளை எழுதிய ஜெயமோகன் மீள உதவலாம் என்பது என் வேண்டுகோள். மேலும் தொடர்ந்து தலையணை அளவு புத்தகங்களை எழுதுவதை சற்றுக் குறைத்து, கூறியது கூறாமல் தன் கருத்துகளையும், பார்வையையும் மீள்பரிசீலனை செய்வது நல்லது என்று நினைக்கின்றேன்.


இறுதியில் ஏற்புரையாற்றிய பொ.கருணாகரமூர்த்தி தனக்கேயுரிய மென்மையுடன் தன் உரையை படித்தார். இஸங்கள் பற்றிய கருத்துகளோடு அவர் மீது முன்வைக்கபட்ட விமர்சனங்களை “எனக்கு எந்த இசங்கள் பற்றியும் தெரியாது, அதனால் தான் அப்படியான குறைகள் வந்திருக்கும்” என்று ஏற்றுக்கொண்டது என்னைக் கவர்ந்திருந்தது. பொதுவாக எழுத்தாளார்கள் என்றால் எல்லாவிடயங்கள் பற்றியும் தெரிந்திருக்கவேண்டும் என்ற கருதுகோள் எம்மவர்களிடையே உள்ளது. சில எழுத்தாளர்களும் இப்படியே உள்மனதில் நினைப்பதால்தான் தமக்கு தெரியாத விடயங்கள் பற்றியெல்லாம் ஏதோ உளறித்தள்ளி விடுகின்றனர் (சரியான உதாரணம் காலச்சுவடில் கருணா பற்றிய கட்டுரை). அதே நேரம் ஒரு அகதி உருவாகும் நேரம் தொகுப்பில் சொல்லப்பட்ட கற்பு, சோரம் போதல் போன்ற கற்பிதங்கள் பற்றிய விமர்சனத்துக்கு அவர் எந்த எதிர்வினையுமே ஆற்றாமல்விட்டது ஏமாற்றத்தையே தந்தது. ஏற்கனவே கருணாகரமூர்த்தியை நண்பர்களுடன் ஒருமுறை சந்தித்திருந்திருக்கின்றேன். இந்த இரண்டு சந்தரிப்பத்திலும் கருணாகரமூர்த்தி எந்த ஒளிவட்டத்தையும் தனக்கு அணிவித்துக் கொள்ளாத, பழகுவதற்கு இனிய மனிதராக, மனதுக்கு மிக நெருக்கமாக எனக்கு தோன்றினார். அதன் பிறகு அவரது பெர்லின் இரவுகளை வாசித்தபோது அவரே முன்னல் இருந்து கதை சொல்வதுபோன்ற ஒரு அனுபவத்தையே உணர்ந்தேன்.

================================================================

அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது ஆண்டுகள் – அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கத்தின் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணியை முன்வைத்து ஒரு விமர்சன நிகழ்வினை காலம் குழுவினர் மே 23 அன்று ஏற்பாடு செய்திருந்தனர். தற்கால தமிழ் இலக்கியத்தில் ஒரு தவிர்க்க முடியாத இடத்துக்குச் சொந்தக்காரர் அ. முத்துலிங்கம். அவரது எழுத்தில் அவர் மௌனம் சாதிக்கும் தளங்களும் களங்களும் பற்றி எனக்கு நிறைய விசனங்களும் விமர்சனங்களும் இருந்தாலும் அவரது எழுத்து தருகின்ற வாசிப்பனுபவம் அருமையானது. சுஜாதா, அசோகமித்திரன், கோபிகிருஷ்ணன், சாரு போன்றவர்களிடம் நான் அனுபவித்த அதே கட்டுமானத்தை இவரிடமும் உணர்ந்திருக்கின்றேன். நிகழ்வுக்கு முன்னதாக “காலம்” குழுவினரின் “வாழும் தமிழ்” புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பேச்சுக்களாக நுஹ்மானின் பேச்சும், பொ. கருணாகரமூர்த்தியின் பேச்சும் இடம்பெற்றன.

அனேகமாக பேசியவர்கள் எல்லாம் அ.முத்துலிங்கம் இந்தியாவிலும் பிரபலமான ஈழத்து எழுத்தாளர், இந்தியாவில் அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனையாகின்றன என்று தவறாமல் குறிப்பிட்டனர். இது பற்றிய எனது பார்வை வித்தியாசமானது. அ.முவைப் பொறுத்தவரை அவர் ஈழத்தில் பிறந்த எழுத்தாளரே தவிர அவர் எழுதுபவை ஈழத்தவரின் இலக்கியம் அல்ல. ஒரு பயணியாக தனக்கு கிடைத்த அனுபவங்களை சுவைபட கதை சொல்பதே அவரது பாணி. அப்படிப் பார்க்கும்போது அவரது எழுத்துக்கள் ஒரு பொதுவான தளத்தில் அமைந்த எழுத்துக்கள். அதாவது ஒரு ஈழத்து வாசகன் அவரது எழுத்துக்களை வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கும் இந்திய வாசகன் வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஏனென்றால் அவர் கதைகள் ஒரு பொதுவான தளாத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றியவையே. மேலும், நண்பர் ஒருவர் குறிப்பிட்டபடி தான் ஒரு கணவான் எழுத்தாளர் என்பதை அவர் தொடர்ந்து பேணிவருகின்றார். இதுவரை எந்த ஒரு சமுதாய கோபங்களோ அல்லது, காட்டமான விமர்சனங்களோ அவர் எழுத்துக்க்ளில் இருந்தது கிடையாது. இலங்கையில் பிறந்த எழுத்தாளர் ஒருவரின் புத்தகங்கள் இந்தியாவில் அமோகமாக விற்பனையாகின்றன என்று மகிழும் அதேவேளை, அவரை ஈழத்து எழுத்தாளர் என்று முழுமையாக உரிமை கொண்டாடமுடியவில்லை என்ற வருத்தம் உண்டு. அது மட்டுமல்ல அண்மையில் அவர் உயிர்மையில் ஜெயமோகனுடன் நடத்திய உரையாடலிலும், இந்த நிகழ்விலும் எழுத்துக்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் பேசியதில் எல்லாமே மேற்கத்திய இலக்கியத்தின் ஆதிக்கமாகவே இருந்தன. தமிழ் பெயரை தேடித்தான் பார்க்கவேண்டியிருந்தது. அ. முத்த்லிங்கம் எம்மை விட்டு அந்நியமாகிக்கொண்டு போகின்றர் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டித்தான் இருக்கின்றது.

சில காரணங்களால் சற்று தாமதமாக சென்றதால் நுஹ்மானின் உரையை என்னால் கேட்கமுடியவில்லை. ஆனால் ஜயகரன், வெங்கட்ரமணன், மகாலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி போன்றவர்கள் தாம் எப்படி எப்படியெல்லாம் அ.முவை ரசித்தோம் என்று கூறினர்.

இதற்கு ஒருவாரம் முன்பாகத்தான் தனது புத்தக அறிமுக நிகழ்வில் கருணாகரமூர்த்தி என்னை வெகுவாக கவர்ந்திருந்தார். அதே எதிர்ப்பார்ப்புடன் அவரது பேச்சை எதிர்பாத்திருந்த எனக்கு அன்றைய அவரது பேச்சு மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. கிட்ட தட்ட 30 நிமிடம் பேசிய கருணாகரமூர்த்தி அ.முவின் ஒரு கதையை அரைவாசியும் இன்னுமொரு கதையை முக்கால்வாசியும் வாசித்துக்காட்டினார். அதைவிட ஏமாற்றமாக “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” ஒரு நாவலா என்ற விமர்சனத்தை எடுத்துக்கொண்ட அவர், இனிமேல் இதையும் நாவல் வடிவமாக எடுத்துக்கொள்வோம் என்றார். எனக்கு 91ம் ஆண்டு தளபதி திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வரும் என்றூ ஜீவி அறிவித்தபின் படப்பிடிப்பு தாமதமாக ஒரு ஒரு பத்திரிகையாளர் “தளபதி தமிழ் புத்தாண்டுக்கு வந்துவிடுமா என்று கேட்டபோது; ஜீவி தளபதி என்று வருகுதோ அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு என்றூ சொன்னது ஞாபகம் வந்தது. உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல் இல்லை என்பவர்கள் சொல்லும் கருத்து, நாவலுக்குரிய இயல்புகளான சம்பவங்களின் தொடர்ச்சி, பாத்திரங்களின் தொடர்ச்சி, நிலத்தின் தொடர்ச்சி என்பன இதில் இல்லை என்பது. இதற்கு பொ. கருணாகரமூர்த்தி கிராவின் கோபல்லபுரத்து மக்களிலும் இந்ததொடர்ச்சிகள் இல்லை என்றார். ஆனால் அதில் நிலத்தின் தொடர்ச்சி, சம்பவங்களின் தொடர்ச்சி இருந்தன. மேலும் ஒரு வாதத்துக்கு உண்மை கலந்த நாட்குறிப்புகள் ஒரு நாவல் என்று எடுத்தால் 80 கள் முதல் 2008வரை சுஜாதா அவ்வப்போது எழுதிய ஸ்ரீரங்கத்து கதைகளை தொகுத்து உயிர்மை பதிப்பகம் ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று ஒரு புத்தகமாக வெளியிட்டதே அதுவும் நாவலா?

இறுதியில் முத்துலிங்கம் வழங்கிய உரைகூட மிகுந்த ஏமாற்றமாகவே அமைந்தது. பல மணி நேரம் சமைத்த உணவை ஒரே விள்ளலியே உப்பு சரியில்லை அது இதென்று குறை சொல்வதுபோல கஷ்டப்பட்டு எழுதிய நாவலை குறை சொல்கின்றர்கள் என்று அங்கலாய்த்தார். மேலும்தான் எழுதவில்லை என்று குறை சொல்பவர்கள் தாமே எழுதலாம் என்ற புத்திசாலித்தனமான ஒரு கருத்தையும் சொன்னார். ஒரு முறை ஒரு நடன போட்டி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடனமாடிய சோடிக்கு 0 புள்ளிகள் இட்டபோது அவர்கள் தாம் கஸ்டப்பட்டு பழகியதுக்குத் தன்னும் தமக்கு புள்ளிகள் தந்திருக்கலாம் என்று சொன்னபோது சூர்யா, தான் ஒரு திரைபடத்தில் கஸ்டப்பட்டு நடித்தேன் அதனால் நீங்கள் அதனை வெற்றிப்படமாக்கவேண்டும் என்றூ எதிர்ப்பார்ப்பது, அது போலதான் உங்கள் மன நிலையும் என்று சொன்னார். அ.முவைப் பொறுத்தவரை அவரது படைப்புகள் முற்று முழுதாக நிராகரிக்கவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆரோக்கியமான விமர்சனமாக அதில் கண்ட குறைகள் பற்றிக் கூறுவதற்கான வெளியை அவர் முற்றாக மறுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

காலம் – 2009: சில எண்ணங்கள்

கனடாவில் நல்ல படைப்பாளிகள் இருக்கின்ற அளவுக்கு இலக்கிய அமைப்புகளோ, இலக்கிய இதழ்களோ வெளிவருவதில்லை என்றிருக்கின்ற பொதுக் கருத்தை அவ்வப்போது வெளிவந்தாலும் “காலம்” தழ் அடிக்கடி தகர்த்து வருவது வழக்கம். இந்த வகையில் ஜூன் – ஆகஸ்ட் 2009 ற்கான 32வது காலம் இதழ் இதுவரை வெளிவந்த காலம் இதழ்களில் என்னளவில் அதிக நிறைவை தந்ததாக இருக்கின்றது.

கடந்த காலம் இதழ்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவு சிறு கதைகளையும், கவிதைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் அகோரமான யுத்தத்தில் அகப்பட்டிருக்கின்ற ஒரு காலத்தின் சாட்சியாக போர்க் கொடுமைகள் பற்றிய ஆக்கங்களே அதிகளவில் இடம்பெற்றிருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் இரண்டாவது சார்ள்ஸ் மன்னனின் காலத்தில் இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவியபோது மக்கள் நூற்றுக்கணக்கில் செத்துவிழுந்தார்களாம். இந்த நாட்களில் அரச சேவகர்கள் “பிணங்களை வெளியில் கொண்டுவாருங்கள்” என்றூ கூவியபடி கை வண்டியுடன் தெருத் தெருவாக வருவார்களாம். இந்த நிகழ்வை தற்போதைய வன்னிக் கொடுமைகளுடன் ஒப்பிட்டு அ. முத்துலிங்கம் “பிணங்களை வெளியே கொண்டுவாருங்கள்” என்ற அருமையான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவர் கூறிய படி முற்றான இன அழிப்பு முடிவடைந்த பின்னர் “இலங்கை அரசு ஆறுதலான ஒரு பெரிய பெரு மூச்சை விடலாம். என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக வேடிக்கை பார்த்து வந்த உலக நாடுகளும் பெரு மூச்சு விடும். இந்தியாவின் பெரு முச்சு மிக நீண்டதாக இருக்கும்” போலத்தான் இருக்கின்றது. எனக்குத் தெரிந்து இது இலங்கைப் பிரச்சனை பற்றி இவர் எழுதிய மிகச் சொற்பமான ஆக்கங்களுல் (கிட்டுமாமாவின் குரங்கு ?????, பொற்கொடியும் பார்ப்பாள், மற்றும் 83 கலவரம் பற்றி ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கதை) இதுவே சிறப்பானதாக இருக்கின்றது. இதே இதழில் பத்து நாட்கள் என்ற இவர் எழுதிய இன்னுமொரு சிறு கதையும் இருக்கின்றது. அண்மையில் இவர் எழுதிய “உண்மை கலந்த நாட் குறிப்புகள்” என்ற நாவலில் (?) எந்த ஒரு அத்தியாயத்துக்கு இடையிலும் இதை தூக்கிப் போட்டுவிடலாம். அ. முத்துலிங்கத்தைப் பொறுத்தவரை அவரது எழுத்துக்களின் உச்சத்தில் இருக்கின்றார். அண்மைக்காலமாக அவர் எழுதுபவை எல்லாம் நல்ல “மகிழ்வூட்டும் பிரதிகளாக” இருக்கின்றன.

ஒரு கவிஞராகவும், புனைவு எழுத்தாளாராகவும் பரவலாக அறியப்பட்ட டிசே தமிழனின் “ஹேமாக்கா” என்ற சிறு கதை இந்த இதழில் வெளிவந்திருக்கின்றது. அண்மையில் நான் வாசித்த ஆகச் சிறந்த கதை என்று இன்னும் சில காலத்துக்கு நான் சொல்லிக் கொண்டிருக்கப்போகும் கதை இது. போர்க்கால வன் முறைகளால் பாதிக்கப்பட்ட ஒருவன் அந்த அந்த வயதுக்குரிய ஆச்சரியங்களுடன் கதை சொல்வதாக அமைகின்றது. யுத்தம் நடந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் பலர் அந்தந்த இடங்களை நீங்கி பலகாலம் பிற தேசங்களில் வாழ்ந்தாலும் வன்முறையின் தாக்கம் அவர்கள் மனதில் பலத்த தாக்கமாக தங்கியிருப்பதை பல தடவைகள் அவதானித்து இருக்கின்றேன். தொடர்ச்சியான கசப்புகளும், ஏமாற்றங்களும் வடுக்களுமே நிலையாகிப்போன எம் மனதில் ஹேமாக்காவும் நெடுங்காலம் வாழ்வார் என்பதற்குரிய எல்லா சாத்தியங்களும் கதையில் தெரிகின்றன. இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் ஒரு சொல்ல முடியாத பாரத்தை மனதில் உணர்வார்கள். ஹேமாக்காவின் கண்ணீரை எல்லார் மனதிலும் ஏற்றி வைத்துவிட்டார்போலும்.

ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து செழியன் எழுதிய “தோற்றோடிப்போன குதிரை வீரன்” என்ற கதை ராணுவ ரோந்துகள் என்ற அட்டூழியங்களை கண் முன்னர் நிறுத்துகின்றது. அதே நேரம் உரையாடல்களில் அடிக்கடி பாவிக்கப்படும் “தோழர்” என்ற சொல் வலிந்து திணிக்கப்பட்டதாகவே தோன்றுகின்றது. இக்கதையில் பாவிக்கப்படும் அளவுக்கு தோழர் என்ற சொல் ஈழத்தில் விடுதலை இயக்கங்களிடையே பாவனையில் இருந்ததா என்று அக்காலத்தில் இருந்த யாராவதுதான் தெளிவு படுத்த வேண்டும். அதேநேரம் யுத்த காலக் கொடுமைகளை உக்கிரமாகப் பதிவு செய்யும் இன்னொரு சிறுகதையாக பா. அ. ஜயகரன் எழுதிய அடேலின் கைக்குட்டை என்ற சிறு கதை சிறப்பாகவே அமைந்திருக்கின்றது. யுத்த காலக்கொடுமைகள் பற்றி சொல்லும்போது எந்தவிதமான பிரச்சாரத் தொனியும் விழுந்துவிடாமல் கதைசொல்லி சொல்லிச் செல்ல எல்லா உணர்ச்சிகளும் படிப்பவர் மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் “ஹேமாக்கா”, மற்றும் “அடேலின் கைக்குட்டை” என்ற இரண்டு கதைகளும் அமைந்திருப்பது வெகு சிறப்பு.

எப்போதும் கனவுகள் பற்றியே ரசனையாக பேசும் மெலிஞ்சி முத்தன் இந்த இதழில் எழுதியுள்ள கதைகூட கனவுடன் தான் ஆரம்பிக்கின்றது. தனக்கேயுரிய கவிதைத் தன்மை வாய்ந்த நடையில் அவர் கதையும் அமைந்துள்ளது. பெரியதொரு இலக்கிய முயற்சியில் ஈடுபடிருக்கும் மெலிஞ்சி முத்தன் அதன் பின்னர் மிகப்பரவலான கவனத்தை பெறவேண்டும் என்பது என் விருப்பம். யுத்தகால அவலம் பேசும் இன்னுமொரு கதையாக சிங்களத்தில் தயாசேன குணசிங்ஹ எழுதி தமிழில் மொஹம்மட் ராசூக் மொழி மாற்றம் செய்த பிசாசுகளின் இரவு, 83 கலவரத்தின் இன்னுமொரு கோணமாக அமைகின்றது.

இந்த இதழில் “உறவுகள் ஊமையானால்” என்ற ரஞ்சனி எழுதிய கதையில் பெண்களின் பிரச்சனைகள் பற்றி பேசப்படுகின்றது. பெண்களின் எழுத்துக்களும், பெண்ணியம் சார்ந்த செயல்களும் பெரு வீச்சுடன் வளர்ந்துவரும் இந்நாட்களில் இக்கதை சொல்லும் கருத்துகள் யாவும் மிக ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட பெண்களுக்கான பிரச்சனைகளாகும். அந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை என்ற போதிலும், அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளாக கதை சொல்லி கதையின் கடைசிப் பகுதியை கொண்டு செல்லும் பாங்கு நாடகத் தன்மையானதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல கதையில் அதிகளவு ஆங்கிலச் சொற்கள் Englishலேயே வருகின்றன. அதிலும் நடைமுறை வாழ்வில் கூட நாம் தமிழுடன் கலந்து பேச்சுவாக்கில் அதிகம் பாவிக்காத Perhaps என்ற சொல் கூட கதையின் கடைசிப் பகுதியில் வருகின்றது. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். இந்த முறை இதழை எடுத்தவுடனேயே நான் முதலில் படித்தது பொ. கருணாகரமூர்த்தி எழுதிய “நல்லாய்க் கேட்டுதான் என்ன செய்யப் போகின்றேன்” என்ற சிறுகதையை. அண்மையில் அவரது சில சிறு கதைகளையும், பெர்லின் இரவுகளையும் படித்து அவரது எழுத்தில் ஒரு ஈர்ப்பு உருவாகியிருந்தது. இந்த கதையை பொறுத்தவரை, இதைவிட சிறந்த கதைகளை மிக இலகுவாகவே எழுதும் வல்லமை பொ. கருணாகரமூர்த்திக்கு உள்ளது என்பது எனது கருத்து. இது தவிர திருமாவளாவன், நிவேதா, உமா வரதராஜன், மலரா, விமலா போன்றோர் எழுதிய கவிதைகளும் புத்தக விமர்சனங்களும் வந்திருக்கின்றன. கவிதைகள் ஆழ்ந்த வாசிப்புக்கும், விமர்சனத்துக்கும் உரியவை. இயன்றவரை எல்லாரும் இந்தக் கவிதைகளை வாசிக்கவேண்டும்.

புலம்பெயர்ந்த நாடொன்றில், அதிலும் கனடா போன்ற இலவச பத்திரிகைகளையும், தென்னிந்திய சின்னத்திரை நாடகங்களையுமே பொழுது போக்கு முயற்சிகளாக கொண்ட பெரும்பான்மை தமிழ் சமுக்கத்தின் மத்தியில் இருந்து, வணிக ரீதியில் எழும் கடுமையான சிக்கல்களையும் தாண்டி இதழை வெளியிடும் காலம் செல்வமும் மற்றும் காலம் குழுவினரும் படைப்பாளிகளும் மரியாதைக்குரியவர்கள்

உண்மைக்கு நெருக்கமாக: அ. முத்துலிங்கம்

குழந்தைகளாக பிறக்கின்றபோது நாம் நூறு வயதுடன் பிறக்கின்றோம். அதன் பின்னர் வாழ்க்கை வெள்ளம் இழுத்துச் செல்ல செல்ல அதன் திசையிலும், அதை எதிர்த்தும் பயணித்து ஒதுக்கப்பட்ட ஆண்டுகள் மெல்ல கழிந்து செல்ல ஆயுள் கரைந்து இறந்து போகின்றோம். எல்லா மனிதர்களும் பால்யத்தில் ஒரே சாயலான வாழ்வையே வாழ்கின்றனர். அதனால் தான் அந்த வயதில் பொறாமையுணர்வும், ஏற்றத்தாழ்வுகளும் மனதில் குடியேறுவதில்லை. நாட்கள் போக போக, திறந்து வைத்த கற்பூரம் போல பால்யம் கரைந்து செல்ல பொய்மையும் கசடும் குடியேறி மனிதம் மெல்ல மெல்ல பாழாகின்றது.

பறந்து செல்லும் என் ஞாபக காக்கைகள் எங்கெல்லாமோ பறந்து என் பால்யத்தின் பருக்கைகளைத் தான் மீட்டி வருகின்றன. எந்த பருவத்தில் பார்த்தாலும், எந்த உணர்ச்சியுடன் பார்த்தாலும் பால்யம் சொந்த தலையணையில் வீசும் மணம் போல மனதுக்கு நெருக்கமான உணர்வையே தருகின்றது. பால்யத்தை நினைவுபடுத்தும் பாடல்களும், சம்பவங்களும், வாசனைகளும், நண்பர்களும், திரைப்படங்களும், புத்தகங்களும், கிராமத்து மனிதர்களும், காதலியரும் எப்போதும் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

2

அண்மையில் வாசித்த உண்மை கலந்த நாட்குறிப்புகள் என்ற அ. முத்துலிங்கம் எழுதிய நாவல் அவரது பால்யத்தை விரைவாக கடந்து சென்றாலும், மீண்டும் ஒரு முறை அதன் வாசனையை மீட்டி இருக்கின்றது. கதை சொல்லி தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதிய புத்தகம் இது. இதில் வருகின்ற ஒவ்வொரு கதைகளும் தன்னளவில் பூரணம் பெற்றிருந்தாலும் (சிறுகதை அமைப்புடன்), தொடர்ச்சியான வாசிப்பில் ஒரு நாவலின் தன்மையை கொண்டமைகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த பேட்டி ஒன்றில் இந்த கதை வடிவத்தை குறிப்பிட்ட அ.மு. அது போன்ற ஒரு வடிவில் ஒரு நாவலை எழுதும் எண்ணம் உள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கதை சொல்லி தவிர மிக சில பாத்திரங்களே மீண்டும் மீண்டும் வருகின்றார்கள். அதிலும் சிறு பராயத்தில் நடைபெறும் சம்பவங்களில் குடும்ப உறுப்பினர்களும், பின்வரும் சம்பவங்களில் மனைவி, மகள், பேத்தி தவிர மீண்டு வருகின்ற கதாபாத்திரங்கள் மிக குறைவே. இது போன்ற தன்மை முன்னர் சுஜாதா எழுதிய ஸ்ரீ ரங்கத்து தேவதைகளிலும் இருந்திருக்கின்றது. இரண்டு புத்தகங்களிலும் உள்ள முக்கிய சிறப்பம்சம், கதை சொல்லிகள் உயர் கல்வி கற்று, சிறப்பான பணிகளில் இருந்த போதும் அவர்கள் அவ்வவ் வயதுக்குரிய இயல்பு குன்றாமல் அவ்வவ் வயதுக்குரிய சம்பவங்களை எழுதியிருப்பதாகும். ஆர். கே. நாராயண் எழுதிய Swamy and Friends, மற்றும் Malgudi பற்றிய கதைகளிலும் உணர்வுகளை அனுபவித்துள்ளேன்.

ஆனால், தன் 65 வருட அனுபவங்களை சொல்லும் கட்டாயம் இருப்பதால் வருடம் முழுதும் எதிர்பார்த்து காத்திருந்த ஊர்த் திருவிழாவை ஒரே நாளில் கடந்து செல்வதுபோல பால்யத்தின் நினைவுகளை சட்டென்று கடந்து செல்கின்றார். கதை சொல்லி கொக்குவிலில் இருந்து, பேராதனை, கொழும்பு, சியரா லியோன், நைரோபி, சூடான், பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா என்றெல்லாம் இடம் மாறி செல்லும்போதெல்லாம் அந்தந்த நாட்டு மக்களிடையே இருந்த வழக்கங்களையும், நாகரிகங்களியும் கதை ஊடாக மெல்ல சொல்லி செல்கின்றார். சிறு வயதில் லேனா தமிழ்வாணன் கல்கண்டில் எழுதிய மேலைநாட்டு பயண அனுபவங்கள், கீழைநாட்டு பயண அனுபவங்கள், துபாய் அழைக்கின்றது, கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு போன்றவற்றை எல்லாம் விழுந்து விழுந்து பதுங்கு குழிக்குள் வைத்துக் கூட படித்த எமக்கு சுவையாக கதை சொல்லும் அ.முவின் இயல்பால் இன்னும் சற்று விரிவாக எழுத மாட்டாரா என்ற ஏக்கம் எழுகின்றது. அதிலும் சியாரா லியானில் இறக்கப் போகின்ற தாயை சுமந்து ஓடி வரும் இளைஞனின் கதையை சொன்னபோதும் சரி, குதிரைக்கு உணவு தீத்தினால் கரு உண்டாகும் என்ற அமெரிக்கர்களின் நம்பிக்கையையும், மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மேசன் ரகஸ்ய சங்கம் பற்றியும், பட்டும் படாமலும் ஓரின சேர்க்கை பற்றி எழுதிய பிரேமச்சந்திரன் – தர்மதாச – நடேசன் கதையையும், நாசாவில் பணிசெய்யும் ரொக்கெட் விஞ்ஞானியான ஒலிவியா பற்றிய கதையையும் அந்தந்த சந்தர்ப்பங்களில் தான் அடைந்த அதே அனுபவங்களை சோர்வுறாமல் வாசகர்களுக்கு சொல்லும்போது சுவை பட கதை சொல்லும் ஆற்றல் ஈழத்து எழுத்தாளர்களுக்கு இல்லை என்று சுமத்துப்படும் குற்றச்சாற்று (குற்றச்சாட்டு என்று நாம் குறிப்பிடுவதன் சரியான வடிவம் இது என்று அண்மையில் வாசித்தேன், மேலதிக விபரம் அறிந்தவர்கள் தரவும்) மீண்டும் ஒரு முறை பிழைத்துப்போகின்றது.

அதேநேரம் சக பதிவர் டிசே தமிழன் குறிப்பிட்டிருந்தது போல சாதிய மோதல்களும் அடக்குமுறைகளும் மிக மோசமாக தலைவிரித்து ஆடிய காலப்பகுதிகளை கடந்து வரும்போது கூட ஆசிரியர் அவை பற்றிய எந்த பதிவையும், சம்பவத்தையும் குறிப்பிடாமல் தாவியிருக்கின்றார் என்பதையும் குறிப்பிடவேண்டும். அதிலும் கொக்குவில் பகுதி மக்களிடம் இந்த ஏற்றத்தாழ்வுகளும், அடக்குமுறைகளும் நிறையவே இருந்தது என்பது உறுதியாக தெரிந்ததே. செல்லி என்ற வண்டியோட்டி பற்றி ஆரம்பத்தில் வருகின்றபோது செல்லி மேற்கொண்டு எவ்வாறு நடத்தப்படுகின்றார் என்று பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் செல்லி வித்தை செய்து சிரிப்பூட்டும் வண்டியோட்டி என்ற அளவிலேயே காணாமல் போய் விடுகின்றார். செல்லி என்று அழைக்கப்படும் செல்லத்தம்பி என்று குறிப்பிட்டாலும், செல்லத்தம்பி என்ற பெயருக்கும் செல்லி என்ற பெயருக்கும் அக்காலத்தில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன என்பதும், சாதீய மற்றும் சமூக நிலைகளே இந்தப் பெயர்களை தீர்மானித்தன என்பதும் நிதர்சனம். எதை எதை எழுதவேண்டும் என்ற எழுத்தாளரின் சுதந்திரத்தில் தலையிடமுடியாது என்றாலும், சுய சரிதைதன்மை வாய்ந்த இந்த கதை அம் மனிதனின் கதையாக இருப்பதுடன், கதை நிகழ்ந்த தேசங்களின் கதையாகவும், கதை நிகழ்ந்த காலங்களின் கதையாகவும் இருந்தால் இன்னும் சிறப்பு.

ஈழத்து எழுத்தாளராக இருந்தும் ஈழப்பிரச்சினை பற்றி அ.மு எழுதவில்லை என்ற குற்றச்சாற்றை தகர்க்கின்ற அவர் தரப்பு நியாயம் இந்த கதையூடாக ஓரளவு புரிகின்றது. முன்பொருமுறை சொல்புதிதுக்காக ஜெயமோகனுக்கு வழங்கிய (சொல்புதிது – 11, ஏப்ரல்-ஜூன் 2003) பேட்டியில் சொன்னதுபோல “1972ம் ஆண்டிலேயே என் வெளிநாட்டுப் பயணம் தொடங்கிவிட்டது. அதற்குப் பிறகு நான் இலங்கைக்கு போன சந்தர்ப்பங்கள் வெகு குறைவுதான். மிஞ்சிப் போனால் இந்த முப்பது தடவைகளில் ஒரு ஆறு தடவை போயிருக்கலாம்”; யுத்தம் தன் கோர கரங்களால் மக்களை தழுவ தொடங்கும் முன்னரே அவர் நாட்டை விட்டுப் புறப்பப்பட்டுவிட்டார். அத்துடன் அவர் இருந்த நாடுகளில் கூட, அதாவது 90களின் இறுதிகளில் அவர் கனடாவரும்வரை அவர் இருந்த நாடுகள் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழாத நாடுகள். எனவே அவருக்கு புலம் பெயர் தமிழர்களுடன் நேரடியான தொடர்புகள் இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் மிகக்குறைவு. கதை வழியே ஈழத்தில் பழக்கத்தில் இல்லாத சில சொற்கள் இடம்பெறுவதற்கு கூட இது காரணாமாக இருக்கலாம். கதை சொல்லி குறிப்பிட்ட அந்த இடங்களில் கதாபாத்திரத்தையும் மீறி தான் அறிந்த சொற்களை பேசிவிடுவதன் விளைவே இது என்று நினைக்கிறேன். அதே நேரம் ஈழத்தில் மட்டக்களப்புத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், கொழும்புத் தமிழ், மலையக தமிழ், முஸ்லீம் மக்கள் பேசும் தமிழ் என்று இருந்த பாகுபாடு எல்லாம் புலம்பெயர் தமிழ் என்ற தமிழுடன் கலந்து வருகின்ற நிலையில் புலம்பெயர் எழுத்தாளர் ஒருவர் வட்டார வழக்கில் ஒரு படைப்பை செய்வது சாத்தியம் குறைந்ததாகவே படுகின்றது.

எனது பார்வையில் சின்ன சின்ன குறைகளுடன் தன் வாழ்பனுபவங்களை மிக சுவாரஸ்யமான நடையில் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஈழத்து எழுத்தாளர் என்ற வகையில் ஈழப்பிரச்சனை பற்றி என்ன சொல்கின்றார் என்று பார்க்க விரும்புவோர்க்கு ஏமாற்றம் அளித்தாலும், தனக்கு தெளிவாக தெரியாததை தெரியாது என்றே ஒப்புக்கொண்டு எழுதாமல் விட்டது கூட நல்ல முடிவே. இலங்கை போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சிங்களப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து(???) கண்ணீர் விட்ட கே. பாலசந்தரையும், இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிங்கள பெண் மீது இரக்கம் காட்டிய (உன்னத சங்கீதம்) சாரு நிவேதிதாவையும் விட இது எவ்வளவோ பரவாயில்லை.

**புத்தகத்தை தந்துதவிய நண்பருக்கு நன்றி