அகாலம் கட்டுரை தொடர்பான புஷ்பராணியின் முகநூல் பதிவிற்கான பதில்

புஷ்பராணி அவர்களுக்கு,

அகாலம்அகாலம் குறித்து நான் வாசித்த கட்டுரை தொடர்பான உங்களது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தீர்கள்.  நன்றி.  அவை தொடர்பாக எனது விளக்கங்கள்.

அகாலத்தை ஒரு அனுபவப்பிரதியாக எழுதி இருந்தீர்கள்.  எனவே நீங்கள் எவ்விதம் உணருகின்றீர்களோ அல்லது உங்கள் நிலைப்பாடு எவ்விதம் இருக்கின்றதோ அதுவே உங்கள் பிரதியில் பதிவாகும்.  அதே நேரம் அகாலத்தை மட்டுமல்லாமல் ஈழப்போராட்டம் தொடர்பான அனைத்துப் பிரதிகளையும் ஆர்வமுடம் படிப்பதும், அவை பற்றிய உரையாடல்களில் ஈடுபடுவதும் ஒருவிதத்தில் ஈழப்போராட்டம் தொடர்பான case study ஒன்றுக்கான எனது முயற்சி என்றே கருதுகின்றேன்.  அவ்வகையான வாசிப்பு ஒன்றில் நீங்கள் பார்க்கின்ற பார்வைக்கும் அது தொடர்பாக ஆய்வுநோக்குடன் நான் பார்க்கின்ற பார்வைக்கும் நிச்சயம் மாறுதல் இருக்கும்.  அந்தத் தெளிவுபடுத்தல் உடனே இந்த உரையாடலை மேற்கொள்ள விரும்புகின்றேன். Continue reading “அகாலம் கட்டுரை தொடர்பான புஷ்பராணியின் முகநூல் பதிவிற்கான பதில்”

புஷ்பராணியின் “அகாலம்”

புஷ்பராணிஈழத்தில் மயிலிட்டி என்கிற சிறிய கிராமத்தில் 1950 ல் பிறந்த புஷ்பராணி ஈழவிதலைப் போராட்டம் ஆயுதப்  போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.  தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழீழ விடுதலை இயக்கத்திலும் அதன் ஆரம்ப காலம் தொட்டு பங்கெடுத்தவர்.  ஈழப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியபோது சிறை சென்ற முதல் பெண்போராளியும் ஆவார்.  அந்த வகையில் புஷ்பராணி எழுதிய அகாலம் மிகவும் முக்கியமானது.

குறிப்பாக ஓரு பெண் சைக்கிள் ஓடுவதே அதிசயமாகப் பார்க்கப்பட்ட ஒரு காலத்தில், பெண்கள் வேலைக்குச் செல்வதோ, மேற்படிப்புக்குச் செல்வதோ கூட அரிதாகவே நிகழ்ந்த 70களின் தொடக்கத்தில் அரசியலில் முழுமையாக அர்ப்பணிப்புடன் ஈடுபடுகின்றார் புஷ்பராணி.  அதனை அவர் பதிவுசெய்கின்றபோது அது பல்வேறு விடயங்களுக்கான பதிவாக மாறுகின்றது. Continue reading “புஷ்பராணியின் “அகாலம்””

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : சில குறிப்புகளும் கருத்துக்களும்

ஒரு புத்தகம் அது உள்ளடக்கியிருக்கின்ற விடயங்களில் மாத்திரம் அல்லாமல் அது வெளிவரும், எழுதப்படும், வாசிக்கப்படும் காலங்களாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.  அந்த வகையில் ஈழப்போராட்டம் மிகப்பெரியதோர் இனப்படுகொலையுடன் ராணுவ ரீதியாக முடிவுக்கொண்டுவரப்பட்டிருக்கின்ற காலப்பகுதியில் வந்திருக்கின்ற கணேசன் என்கின்ற, ஈழப்போராட்ட வரலாற்றில் ஐயர் என்று அறியப்பட்டவர் எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்கிற நூலை முக்கியமானதாகவே நான் உணர்கின்றேன்.  மிகப் பெரியதோர் அழிவிற்குப் பின்னரும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தேவைகள் அப்படியே இருக்கையில், இன ரீதியிலான ஒடுக்கல் இன்னமும் அதிகரித்து வருவதாக அவதானிக்கப்படுகின்ற காலப்பகுதியில், தமிழ்த் தேசிய உணர்வு இன்னமும் கூர்மை அடைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்ற இந்நாட்காளில் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தையும் அது முன்னெடுக்கப்பட்ட விதத்தையும் ராணுவ, அரசியல் ரீதியிலான அணுகுமுறைகளை சுய பரிசோதனை செய்வதற்கும், மீள்பரிசீலனை செய்வதற்குமான தேவையும் அதிகரித்தே இருக்கின்றது.  மேற்குறித்த பார்வைகள் மற்றும் கூறுகள் தொடர்பான முழுமையான பிரக்ஞையுடன் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் என்கிற இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது பார்வையை இங்கே பதிவாக்குகின்றேன்.

 

இனியொரு இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளியாகி பின்னர் இனியொருவின் முதலாவது அச்சு வடிவ வெளியாடாகி இருக்கின்ற இந்நூல் தொடர்பான இந்நிகழ்வினை தேடகம் ஒருங்கமைத்திருக்கின்றது.  இனியொருவிற்கும், தேடகத்திற்கும் இந்த முயற்சிக்கு நன்றி சொல்லிக்கொள்ளுகின்ற அதேவேளை அவை இரண்டின் அரசியல் தொடர்பாக இருக்கின்ற விம்பத்தில் இருந்து விடுபட்டு இந்நூலில் சொல்லப்படுகின்ற காலப்பகுதியில் பிறந்தவன் என்கிற முறையில் எனது தலைமுறையின் பார்வையை இயன்றவரை இதில் பதிய முனைகின்றேன்.

 

இந்நூலில் 1972ல் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களைத் தொடங்கிய காலப்பகுதிகளில் இருந்து அதில் ஈடுபட்டு பின்னர் தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலும் ஆரம்பகால மத்திய குழு உறுப்பினர்களுல் ஒருவரான ஐயர் பின்னர் புலிகள் அமைப்பு இரண்டாக உடைந்தமை, பின்னர் புளொட் இயக்கத்தின் தோற்றம் வரையான காலப்பகுதிகளிலான தனது அனுபவங்களை பதிவாக்கியுள்ளார்.  இதில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால் இயன்றவரை தான் சார்ந்திருந்த அமைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற போது, அந்தத் தவறுகளில் இருந்து தன்னை விடுவித்து பிறர் மீது பழி சுமத்துவதைத் தவிர்த்து அந்நாட்களில் மேற்குறித்த முடிவுகள் எடுத்தபோது அதிலிருந்த தன்து வகிபாகத்தையும், தனது நிலைப்பாட்டையும் ஒத்துக்கொண்டே ஐயர் எழுதிச்செல்லுகின்றார்.  அதே நேரம், புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 25 வருடங்களின் பின்னர் அன்றைய புலிகள் இயக்கத்தின் தவறான நடவடிக்கைகளாக எவை அமைந்திருந்தன, அவற்றை எவ்வெவ்வாறு செய்திருக்கலாம் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஐயருக்கின்ற சலுகை புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இருந்தவர்களுக்கு அதன் தலைமை உட்பட இருந்திருக்காது என்றே சொல்ல விரும்புகின்றேன்.  இதனை சிந்தனைக்கும் அதனை நடைமுறையில் பிரயோகிப்பதற்கும் இடையில் இருக்கின்ற நடைமுறைப்பிரச்சனைகள் சார்ந்தே இங்கே குறிப்பிடுகின்றேன்  அதுவும் குறிப்பாக தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்குகின்ற ஒரு குழுவினர் எதிர்கொள்ளக் கூடிய புற அழுத்தங்களின் மத்தியில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களை நாம் கருத்தில்கொள்ளவேண்டும்.

 

குறிப்பாக இந்த நூலிலும், இன்னும் நிறைய இடங்களிலும் பிரபாகரனின் தூய ராணுவ நோக்கு தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டுகின்றது.  அதே நேரத்தில் வரலாற்றில் பிரபாகரனின் பாத்திரத்தை அணுக முற்படும்போது அன்றைய அரசியல் சமூக சூழல், அவர் எதற்காக போராட முன்வருகின்றார், தனது போராட்டத்தை அவர் ஆரம்பிக்கின்ற போது அதற்கான தேவை எப்படி இருந்து, என்ன தேவையாக இருந்தது என்று அவர் கருதினார், அவரைப் பாதித்த தலைமைகள் போன்ற காரணிகளையும் சேர்த்தே ஆராயவேண்டி இருக்கின்றது.  அதன் தேவை கருதி தனது ஆரம்ப கால நேர்காணல்களில் பிரபாகரன்  தெரிவித்த சில கருத்துக்களை அவதானிப்போம்,

1984 ல் சண்டே (இந்தியா) இதழில் வெளியான அனிதா பிரதாப்பிற்கு வெளியான நேர்காணலில்,

இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட  அனுபவங்களைச் சற்றுக் கூறுவீர்களா? கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா?

என்கிற கேள்விக்கு

“நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.  சிங்கள இன வெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட  நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன்.  எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த  ஒரு விதவைத் தாயை நான் ஒரு முறை சந்தித்த போது அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார்.  இனக்கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவில் இருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள்.  அவரது வீட்டிற்குத் தீ வைத்து அவருடைய கணவரையும் கொடூரமாகக் கொண்டார்கள்.  அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரி காயங்களுடன் தப்பினார்கள்.  அவரது உடம்பில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்த போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.  சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன்  வீசிக்கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன்.  அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள் என்று கேட்கும்போதெல்லாம் எம்மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டன.  இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள் இருந்து  எம்மக்களை மீட்கவேண்டும் என்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது.  நிராயுத பாணிகளான  அப்பாவித் தமிழர்களுக்கெதிராக  ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும்  இந்த அமைப்பினை  ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ளமுடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்” (மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – பக்கம் 254-255)

என்று பதிலளிக்கின்றார் பிரபாகரன்.  இதை ஒத்த கருத்துக்களையே இதே கருத்தையே பின்னர் 30/12/1985 ஃப்ரொன்ட்லைன் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும், பின்னர் 23/மார்ச்/1986 ல் வீக் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்மக்கள் மீது இலங்கை அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட ஆயுத மற்றும் அரசியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்வதற்கு தமிழர்களுக்கென ஒரு ராணுவம் தேவை என்பதே பிரபாகரன் உள்ளிட்ட பலரின் கருத்தாக அந்நாட்களில் இருந்தது.  இதனையே ஐயரும் குறிப்பிடுகின்றார்,

“பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே இன அடக்குமுறைக்கு எதிரான எமது கோபத்தை, பெருந்தேசிய வன்முறைக்கு எதிரான எமது  உணர்வுகளை, ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்க, தமிழர் விடுதலைக் கூட்டணி சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது என்பதே எமது நம்பிக்கை” (பக்கம் 62)

என்றும்

“பிரபாகரனது நோக்கமும் அதன் வழி எமது நோக்கமும் ஒரு பலமான இராணுவக் குழு ஒன்றைக் கட்டியமைத்துக் கொள்வதே.  தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலை நாம் போதுமானதாக எண்ணியிருந்தோம்” (பக்கம் 65)

என்றும் குறிப்பிடுகின்றார்.  தவிர இன்னோரிடத்தில்

“நான் இந்தியாவில் இருந்த வேளையில் எமது மத்திய குழுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்திற்கு வந்திருந்தனர்.  தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் அமைப்பு என்றும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பு என்றும் புலிகள் இவற்றிற்கான ராணுவ அமைப்பு என்றும் முடிவிற்கு வருகின்றனர்” (பக்கம் 56).

இந்தச் சம்பவம் கிட்டத்தட்ட 77ல் நடக்கின்றது.  எனவே புலிகள் ஆரம்பகாலத்தில் இருந்தே தம்மை ஒரு ராணுவக் குழுவினராகவே வளர்ந்து வந்தனர்.  ஏற்கனவே இருந்த தமிழர் விடுதலை கூட்டணியை தமக்கான அரசியலை முன்னெடுப்பவர்களாகவே அவர்கள் அன்று நம்பி இருந்தனர்.  அந்த அடிப்படையிலேயே தமிழ்ப் புதிய புலிகளின் முதலாவது அமைப்பு விதிகளும் தூய ராணுவ நோக்கிலேயே அமைந்திருந்தன.  தமிழர்களுக்கென வலிமையான ராணுவம் ஒன்றைக் கட்டியெழுப்புவதே முதன்மையான தேவை என்பதில் உறுதியாக இருந்த பிரபாகரன் அவ்வாறு கட்டியெழுப்பபப்படும் ராணுவம் ராணுவ ஒழுக்கத்துடனும் கட்டுப்பாடுனும் இருக்கவேண்டும் என்று கருதினார்.  1986ல் நியூஸ் வீக் இதழிற்காக தீபக் மஷூம்தாரிற்கு வழங்கிய நேர்கானலிலும் இந்தக் கருத்தையே பிரதிபலித்துள்ளார் பிரபாகரன்.  இந்தப் புத்தகத்தில் புலிகள் இயக்கத்திற்குள் பிரபாகரன் செலுத்திய ராணுவப் போக்குப் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றபோதும், அவற்றை மேற்குறித்த நிபந்தனைகளுடன் சேர்த்து ஆராய்வதே பொருத்தமானதாக இருக்கும்.

அது போல அன்றைய சூழலில் ஐயர் உள்ளிட்ட இளைஞர்கள் தமது அரசியல் பாதையைத் தீர்மாணிப்பதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளையும் பார்ப்போம்.  1970ல் லங்கா சம சமசமாஜக் கட்சியும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறீமாவோ தலைமையிலான சுதந்திரக்கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைந்திருந்த காலப்பகுதியில்  இனவாரியான தரப்படுத்தல், பௌத்த மதச்சார்பான அரச கொள்கை, சிங்களம் அரச கரும மொழி ஆக்கப்படல் போன்றவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.  இக்காலப்பகுதி பற்றி ஐயர் சொல்வதைப் பார்ப்போம்,

“இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம்.  எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துகளுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை காட்டவில்லை.  தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக் கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை” (பக்கம் 8)

 

இங்கே கருணாநிதி, தமிழரசுக்கட்சிகளை ஐயர் சுட்டிக்காட்டியிருப்பது இன்று நகைப்பிற்கு உரிய ஒன்றாகக் கருதப்படலாம் என்றாலும், அவர்களின் அன்றைய காலப்பகுதியிலான பங்களிப்புகளை அவர்களின் பின்னைய அரசியல்களைக் காரணங்காட்டி மறுத்துவிடமுடியாது.  ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலப்பகுதியில் அதன் எல்லாப் பலவீனங்களையும் தாண்டி எவ்வாறு தமிழரசுக்கட்சி போன்றவற்றின் செயற்பாடுகள் மிகுந்த ஆதரவாக இருந்தன என்று அண்மையில் “தமிழர்களின் நாடு கடந்த அரசியல்” என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் செழியனும் குறிப்பிட்டிருந்தார்.

 

தவிர இக்காலப்பகுதி இலங்கையைப் பொறுத்தவரை அரசாங்கம் தமிழர்கள் மீது இன ரீதியிலான ஒடுக்குதல்களை மீகத் தீவிரப்படுத்தியிருந்த, அதே நேரம் இடது சாரிக்கட்சிகள் இனப் பிரச்சனை பற்றிய கரிசனைகளை தமது நிகழ்சி நிரலில் இருந்து அகற்றியிருந்த காலம்.  இந்தச் சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த அன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற அரசியல் ரீதியான தலைமை அமையவில்லை என்றே கருதவேண்டும்.  புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை பிரபாகரன் அதன் ஆளுமை செலுத்தியவராக இருந்த போதும் அதன் தலைவர் என்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகின்ற போது அவர் உமா மகேஸ்வரனையே பிரேரிப்பதையும் இங்கே அவதானிக்கவேண்டும்.  பிரபாகரனைப் போலவே வலிமையான ராணுவம் ஒன்றைக் கட்டமைக்கவேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தபோதும் ஏற்கனவே இளைஞர் பேரவையின் செயலாளர் என்ற வகையில் அறியப்பட்டவராகவும், தம்மை விட அதிகம் தொடர்புகளைக் கொண்டிருந்தவரும் உமா மகேஸ்வரன் என்றும், ஏற்கனவே அரசியல் போராட்டங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார் என்றும் ஐயர் குறிப்பிடுவதையும் இங்கே சுட்டிக்காட்டுவது முக்கியமானதாகவே தோன்றுகின்றது.  ஏனெனில் உமா மகேஸ்வரனுக்குப் புலிகள் இயத்துடன் ஏற்பட்ட பிளவே பிரபாகரனை அதிகம் இறுக்கமானவராக்கியது என்று ஐயரும் (பக்கம் 211) குறிப்பிடுகின்றார்.  அது போல பின்னர் புலிகளில் ஜனநாயகத் தன்மை இல்லை என்பதைக் காரணம் காட்டிப் புலிகளில் இருந்து சுந்தரம் போன்றோர் பிரிந்து செல்கின்ற போது அவ்வாறான குற்றச்சாற்றுகள் இயக்கத்தை இரண்டாக உடைக்கும் நோக்குடையவை என்றே பிரபாகரன் மறுக்கின்றார்.  அதன் பின்னரும் சுந்தரம் தலைமையில் சிலர் பிரிந்துசெல்கின்ற போதும் உடனடியாகவே உமா மகேஸ்வரனும் சுந்தரம் போன்றோருடன் இணைந்து கொள்வதுடன் அந்நிகழ்வு பற்றி ஐயர் தொடர்ந்து,

“ஊர்மிளா தொடர்பான பிரச்சனையில் உமா மகேஸ்வரனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களில் சுந்தரமும் ஒருவர்.  அவ்வேளையில் இருந்தே உமா மகேஸ்வரனுடன் சுந்தரத்துக்குத் தொடர்பிருந்திருக்கலாம் என்று எம்மில் பலருக்கிருந்த சந்தேகம்  இப்போது உறுதியானது போலிருந்தது.

சுந்தரத்தின் அனுசரனையோடு சுழிபுரம் பகுதியிலேயே உமா மகேஸ்வரன் தங்கியிருந்ததாகவும் அவர்கள் (இங்கே அவர்கள் என்று ஐயர் குறிப்பிடுவது கண்ணன் மற்றும் சுந்தரத்தை – அருண்மொழிவர்மன்) எமக்குத் தெரிவிக்கின்றனர்” (பக்கம் 210).

இதைத் தொடர்ந்து நடைபெற்ற PLOTE மத்திய குழு விவாதங்களில் புலிகள் இயக்கத்தில் இருந்தது போலவே ராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்கவேண்டும் என்ற கருத்தை  உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றோர் முன்வைப்பதுடன் உமா மகேஸ்வரன், சுந்தரம் போன்றோரால் பணத் தேவைகளை நிவர்த்தி செய்ய கொள்ளைகளில் ஈடுபடவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.  தவிர PLOTE இயக்கத்திலும் உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றோர் அதிகம் செல்வாக்கு செலுத்தியதாகத் தாம் உணைர்ந்ததாகவும் ஐயர் இங்கே பதிவுசெய்கின்றார்.  அதாவது எந்தக் குற்றச்சாற்றுகளை முன்வைத்து புலிகள் இயக்கத்தை விட்டுப் பிரிந்து புளொட் இயக்கம் உருவாக்கப்படுகின்றதோ அதே செயற்திட்டங்களையும், அரசியலையுமே புளொட் இயக்கத்தினரும் தமது மிகத் தொடக்க கால மத்திய குழு விவாதங்களில் இருந்தே முன்னெடுத்தனர் என்பது தெளிவாகின்றது.  தவிர சுந்தரம் முதலானோர் மீதான் தனது சந்தேகம் சரியானதுதான் என்பதில் பிரபாகரன் உறுதியடைந்திருக்கவும் முடியும்.

இவற்றை நான் இங்கே பதிவுசெய்வது புலிகளை முழுக்க பழி நீக்கம் செய்யவேண்டும் என்கிற முனைப்போடு அல்ல.  புலிகள் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அவர்களுக்காக நியாயங்களைப் பரிசீலனை செய்வதில்லை என்பதே எனது வாதம்.  இந்தப் புத்தகத்தில் புலிகள் மக்கள் அமைப்புகளை உருவாக்கவில்லை என்பதுவும், அரசியல் ரீதியான போராட்டங்களில் ஈடுபடவில்லை என்பதுவும் இந்தப் புத்தகத்தில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கின்றது.  அதே நேரம் 83ல் இருந்த அதே புலிகளை அமைப்பாகவே 2008 வரை இருந்த புலிகள் அமைப்பைப் பார்ப்பது ஏற்புடையதல்ல.  90களிற்குப் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நிறைய அமைப்புகள் புலிகளால் உருவாக்கப்பட்டிருந்தன.  எத்தனையோ நூலகங்கள், படிப்பகங்கள், மாணவர் அறிவியல் கழகம் போன்ற அமைப்புகள், இது தவிர நிறைய வெளியீடுகள் என்று பல்வேறு தளங்களிலும் அதன் பின்னர் புலிகளின் செயற்பாடுகள் இருந்தன.  Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka  என்கிற Kristian Stokke எழுதிய ஆய்வறிக்கையினை இது பற்றிய முக்கியமான பதிவொன்றென்று  குறிப்பிடவிரும்புகின்றேன்.

 

இங்கே எனது கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ அல்லது புலிகளைப் பாவ நீக்கம் செய்வதோ அல்லது பழியை பிறர் மீது சுமத்திச் செல்வதோ அல்ல.  ஈழத்தில் மிக மோசமாக அடக்கப்பட்டிருக்கின்ற தமிழர்களின் தேசிய உரிமைப் பிரச்சனைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க, எமது கடந்த கால போராட்டங்களை சுய விமர்சனம் செய்யவும், மறு பரிசீலனை செய்யவும் வேண்டி இருக்கின்றது.  ஆனால் மறு பரிசீலனை என்பது எல்லாத் தவறுகளையும் ஒரு தரப்பில் சுமத்தி விடுவதல்ல.  இன்று பல்வேறு கட்டுரைகளிலும், விவாதங்களிலும் புலிகளை வெறும் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதையும், அடையாள அரசியல் என்ற பெயரால் நிராகரிப்பதையும், பாசிஸ்டுகள் என்று கடந்து போவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  முதலில் அரச பயங்கரவாதத்தையும் அரசுக்கு எதிராக பயங்கரவாதத்திற்குமான வேறு பாட்டை இவர்கள் உணர்ந்து இது போன்ற வாதங்களை முன்வைக்க வேண்டும்.  பாசிஸ்டுகள் என்று கூறும்போது எதனால் புலிகள் பாசிஸ்டுகள் என்று சொல்கிறோம் என்பதை முன்வைக்க வேண்டும்.  பாசிஸ்டுகள் என்ற வார்த்தையை பொதுவாக தம்மை அடையாளபடுத்துவதை விட தமக்கு எதிரானவர்களை களங்கம் கற்பிக்கவே பிரயோகிக்கின்றனர் என்கிற Samanth Power ன் கூற்றையே இங்கே குறிப்பிடவிரும்புகின்றேன்.  ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பொன்றினை பாசிஸ்டுகள் என்று குறிப்பிடுவதில் இருக்கின்ற அபத்தத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன்.

 

இங்கே என்னுடன் பேச அல்லது கட்டுரை வாசிக்க அழைக்கப்பட்டிருக்கும் மற்றையவர்கள் அனேகம் வெவ்வேறு இயக்கங்களில் பங்கேற்றவர்கள், 90களின் முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு வெளியேறியோர். அவர்களின் பார்வையிலிருந்து, 90 களின் பின்னர் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பின்னர் சில காரணம் ராணுவ ஆக்கிரமிப்பின் கீழும் வாழ்ந்த எனது பார்வை நிச்சயம் வேறுபட்டே இருக்கின்ற அதே வேளை, இந்தக் காலப்பகுதியில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் காவல்துறை, நீதி மன்றம், அரசியல் துறை, வைப்புழி என்று பல்வேறு நிர்வாக அலகுகளுடன் கூடிய நிகர் அரசாங்கமே நிகழ்ந்தது.  புத்தகம் உள்ளடக்கும் காலப்பகுதியைத் தாண்டி இவற்றை நான் சுட்டிக் காட்டக் காரணம், புலிகள் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தவில்லை, அரசியலில் அக்கறை காட்டவில்லை என்று இந்தப் புத்தகத்தில் சுட்டிக் காட்டப்படுகின்ற போதும் அதன் பின்னர் தமது பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புலிகள் செய்த திறமையான நிர்வாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை என்பதே.  அதே நேரத்தில் புலிகளில் அரசியல் பிரிவினரைவிட ராணுவப் பிரிவினரே அதிகம் செல்வாக்குச் செலுத்தியவர்களாக இருந்தார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.  அறிவுஜீவிகளுடன் புலிகள் இணைந்து செயற்பட விரும்பவில்லை, அவர்களின் கருத்துக்களை புலிகள் செவிமடுக்கவில்லை என்பதில் ஓரளவு உண்மை இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறிய அனேக அறிவு சீவிகள் புலிகள் மீதான தமது கசப்புணர்வினை தொடர்ந்து புலிகளை நிராகரிப்பதன் மூலமாகவே வெளிக்காட்டினர்.  மேற்கத்திய சட்டகங்களுக்குள் நின்று புலிகளை மதிப்பிடுவதும், அரச தரப்பு, புலிகள் தரப்பு வன்முறைகள் போன்றவற்றை ஒரே சட்டகத்தில் வைத்து மதிப்பிடுவதுமாகவே அவர்களின் செயற்பாடு அமைந்தது,  அது போலவே புலிகள் தரப்பினை கடுமையாக விமர்சிக்கின்ற இவர்கள் ஒரு போது புலிகள் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன், அரச தரப்பு தவறுகளில் சில சமயங்களில் கள்ள மௌனம் சாதித்ததுடன், பல சமயங்களில் அது எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனவே நாம் அது பற்றிக் கூறவேண்டியதில்லை என்றும் விலகிக் கொண்டனர்.  புலிகள் மீதான காழ்ப்புணர்வினால் ஒட்டு மொத்த போராட்டத்திற்கான நியாயங்களையும் நிராகரிப்பதும் எதிர்ப்பதும் முறையாகாது.

 

நான் அறிந்து இதுவரை ஈழப் போராட்டம் பற்றிய பதிவுகளாக புதியதோர் உலகம், முறிந்த பனை,  அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கை, புஷ்பராஜாவின் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் வானத்தைப் பிளந்த கதை, எல்லாளனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பு, ஐயரின் ஈழப் போராட்டத்தின் எனது பதிவுகள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.  இவற்றிற்கிடையே சில முரண்கள் இருந்தாலும் இவை அனைத்துமே ஈழப்போராட்டத்தில் அக்கறை கொண்டோர் வாசிக்கவேண்டிய புத்தகங்கள் என்றே சொல்வேன்.  இவர்களிலும் இவர்கள் சார்ந்து நின்ற இயக்கங்களிலும் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இவர்கள் எல்லாருமே களமிறங்கிப் போராடியவர்கள்.  எனவே இவர்களின் அனுபவங்களும் இவர்கள் கூறும் வரலாறுகளும் முக்கியமானவை.

 

அதே நேரம், ஐயர் தொடர்ந்து PLOTE மற்றும் NLFT தொடர்பான தனது அனுபவங்களையும் பதிவாக்கவேண்டும் என்பதையும் ஒரு வேண்டுதலாக முன்வைக்கின்றேன்.  இன்றைய சூழலில் ஈழம் மற்றும் தமிழ்த் தேசியம் தொடர்பான வாசிப்புகளிலும் விவாதங்களிலும் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதுகின்றேன்.

 

உதவிய புத்தகங்கள்

  1. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்: கணேசன், இனியொரு வெளியீடு
  2. மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – தோழமை பதிப்பகம்
  3. Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka –

குறிப்பு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் புத்தகத்தில் 1970 தேர்தல் பற்றிக் குறிப்பிடும்போது நவ சமாஜக் கட்சி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.  ஆனால் உண்மையில் அன்று கூட்டணி வைத்திருந்தது லங்கா சமசமாஜக் கட்சி.

 

ரொரன்றோவில் பெப்ரவரி 25, 2012ல் நடைபெற்ற ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள் என்கிற ஐயர் (கணேசன்) எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் வாசித்த கட்டுரை

 

எனது பார்வையில் கொலை நிலம் – புத்தக அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை

உரையாடல் என்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்றாகவே இருந்திருக்கின்றது.  வெவ்வேறு கருத்துகளை, பார்வைகளை, அரசியலைக் கொண்டோர் மேற்கொள்ளும் உரையாடல்களை ஆர்வத்துடன் தேடி வாசித்து வந்திருக்கின்றேன்.  இவ்வாறான உடையாடல்கள் மூலம் தெளிவும், நாம் கட்டமைத்து வைத்திருக்கின்ற கருத்துகளை, அரசியலை மீள்பார்வை, மீள் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றன.  அண்மையில் பிளேட்டோவின் குடியரசை வாசிக்கத் தொடங்கியபோது உரையாடல் என்பது எத்தனை வீச்சான வடிவம் என்பதையும் அறிய முடிந்தது.  வெறும் வாதத்துக்காக என்றில்லாமல் ஆழமாக தத்தம் நிலைகளை முன்வைத்துப் பேசுகின்ற விவாதங்களும் கூட மிக முக்கியமான ஆவணங்களாகவும், பதிவுகளாகவும் மாறி விடுவதுண்டு.  சார்த் – சிமன் த பூவாவிடையான உரையாடலும், ஃபூக்கோ – சோம்ஸ்கி இடையிலான human nature பற்றிய விவாதமும் இரண்டு வடிவங்களுக்குமான உதாரணமாகச் சொல்லமுடியும்..  தமிழில் இவ்வாறான வெவ்வேறு மாறு பட்ட பார்வை கொண்டவர்கள் சந்தித்து ஓரிடத்தில் இருந்து பேசுவது என்பதே அபூர்வமாக நிகழும் ஒன்று.  இந்த அடிப்படையில் வடலி பதிப்பகம் மூலமாக தியாகு – ஷோபா சக்தி இடையிலான உரையாடல் ஒன்று தொகுக்கப்பட்டு புத்தகமாக வருகின்றது என்பது மிக முக்கியமான ஒன்றாகவே எனக்கு இருந்தது.  ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்களின் புத்தகங்களை வடலி தொடர்ந்து பதிப்பிக்க இருக்கின்றது என்பதுவும் முக்கிய விடயமாகவே இருந்தது.  இது பற்றி வடலி பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்ட புதிதிலேயே வடலி பதிப்பகம் ; எழுத்தாளனும் பதிப்பகங்ளும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றேன்.

அதே நேரம் ஒரு பிரதியாக கொலை நிலம் என்பது இன்னும் பன்மடங்கு சிறப்பாக வந்திருக்கவேண்டும் என்பதே என் அவா.  முதலில், பதிப்பகத்தினர் இந்த உரையாடலுக்காக செய்த தேர்வே பொருத்தமானதல்ல என்றே சொல்வேன்.  தியாகு முதன்மையாக ஒரு சமூகப் போராளி, கோட்பாட்டாளர், தமிழ்த் தேசிய ஆதரவாளர்.  பிறப்பால் இந்தியர் அல்லது தமிழகத்தைச் சேர்ந்தவர்.  ஷோபா சக்தி வெற்றிகரமான ஒரு புனைவெழுத்தாளர், பிறப்பால் இலங்கையர்.  தன்னை முன்னை நாள் விடுதலைப் புலி போராளி என்றும், பிறமொழி முக்கியமாக ஆங்கில ஊடகங்களில் தன்னை குழந்தைப் போராளி என்றும் அடையாளப்படுத்திக் கொள்ளுபவர்.  இங்கே குழந்தைப் போராளிகள் என்று வரும்போது விடுதலை இயக்கங்களிற்கும், அரசுகள் ஈடுபடுத்தும் குழந்தைப் போராளிகளிற்கும் அவதானிக்கவேண்டிய வேறுபாடுகளையும், கீழை, ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் குழந்தைப் போராளிகளை மேற்கத்திய கண்ணோட்டங்களில் பார்ப்பதில் இருக்கின்ற அபத்தங்களையும் சுட்டிக் காட்டவிரும்புகிறேன்.  அத்துடன் போரில் கட்டாயமாக மக்கள், அதிலும் முதன்மையாக குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை முழுவதும் எதிர்க்கும் நான், ஷோபா சக்தி அவர்கள் குழந்தைப் போராளியாக புலிகளில் இணைந்து கொண்டபோது அவர் எந்தக் கட்டாயத்தின் கீழும் இயக்கத்தில் சேரவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இங்கே நான் ஷோபா சக்தியின் புலிகள் இயக்க பிண்ணனியைச் சுட்டிக்காட்டக் காரணம் இந்தப் புத்தகத்தில் “புலி அரசியலை முற்றாக ஈழத்திலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடம் அற்றுப் போகவேண்டும்.  அந்த வெற்றிடத்திலிருந்து புதிய அரசியல் வழிமுறைகளை நாம் உருவாக்கவேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றார் ஷோபா.  அவ்வாறு வலியுறுத்தும்போது விடுதலைப் புலிகளை எதிர்க்க அவர் ஒரு முன்னாள் புலி உறூப்பினர் என்ற அடையாளம் வலுச்சேர்க்கின்றது.புத்தகத்திலும் புலிகளின் அரசியல் ஏற்றுக் கொள்ளாத பலர் இயக்கதில் இருந்து ஒதுங்கினர் என்றும் குறிப்பிடுகின்றனர்.  (இந்த இடத்தில் தவிர்க்கவே இயலாமல் சயந்தன் எழுதிய மோட்டார் சைக்கிள் குரூப் என்கிற சிறுகதை நினைவுக்கு வருகின்றது http://goo.gl/hnNd0 ).  அவரது குறிப்பை அவர் தெளிவாக்கி, தான் ஏன் புலிகள் இயக்கத்தை விட்டு விலகினார் என்பதை அவர் நேர்மையாக அறிவிப்பதே சரியானதாக இருக்கும்.  தவிர, ஷோபா விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த காலத்தில் அவரது பணி என்னவாக இருந்தது, விடுதலைப்புலிகள் பற்றி அப்போதே விமர்சனம் இருந்ததா, அன்று நடந்த மாற்று இயக்கப் படுகொலைகளுக்கு ஷோபா எப்படி எதிர்வினை ஆற்றினார் என்பதையும் குறிப்பிடவேண்டும்.  சுய விமர்சனம் என்பது இவ்வாறாகத்தான் அமையவேண்டும்.  இன்று மிகப் பெரிய அழிவுக்குப் பின்னர் எதிர்கால அரசியல், தீர்வு என்று பேசும் எவருமே முதலில் தன்னை சுய விமர்சனம் செய்ய முன்வரவேண்டும்.  துரதிஸ்டவசமாக இன்று மற்றவர்கள் மீதான விமர்சனத்தை விருப்புடன் செய்யும் எவருமே சுயவிமர்சனம் ஒன்றை செய்ய உடன்படுவதேயில்லை.  எதிர்கால தமிழ்த் தேசிய / தமிழ் விடுதலை அரசியல் சந்திக்கக் கூடிய மிகப் பெரிய போதாமை இந்த சுய விமர்சனம் இன்மை என்பேன்.

இந்தப் போதாமை இந்தப் புத்தகத்திலேயே அழகாக வெளிப்படுகின்றது.  தியாகு, ஷோபா சக்தி இருவருமே இந்தப் புத்தகத்தில் இறுதிப் போர் பற்றிப் பேசும்போது அதில் இந்தியா ஆற்றிய பங்கு, விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக செய்த பிழைகள், ஏகாதிபத்திய நாடுகள் போரில் ஆற்றிய பங்கென்று பட்டியல் இடும்போது புத்தகத்தில் எந்த இடத்திலும்  போரில் சீனாவின் வகிபாகத்தைக் குறிப்பிடவேயில்லை,  இது மிக மோசமான சாய்வென்றே சொல்லமுடியும்.  இங்கே இவர்கள் இருவரும் தம்மை இடது சாரிச் சார்பானவர்கள் என்று சொல்லிக்கொள்வதும், சீனா ஒரு இடது சாரி நாடு என்று நம்பப்படுவதுமே இந்த சாய்வுக்கான காரணி என்றே கருத முடிகின்றது.  அண்மையில் இன்னொரு இடது சாரியான சி. சிவசேகரம் எழுதிய இலங்கை ; தேசிய இனப்பிரச்சனையும் தீர்வுக்கான தேடல்களும் என்ற புத்தகத்தை வாசித்த போது அவரும் இந்தப் போரில் சீனாவின் பங்கை குறித்து, சிறீலங்கா அரசு இழந்த விமானப் படை விமானங்களை ஈடு செய்யவே சீனா உதவியது என்று மிக அபத்தமாகக் கூறி இருந்தார்.  நான் இடது சாரிகளுக்கு எதிரானவன் கிடையாது.  ஆனால், தொடர்ச்சியாக இடது சாரிகள் ஈழப் பிரச்சனையில் சீனாவின் பங்கை மறைத்து வருவது அவர்கள் செய்யும் துரோகம் என்றே கூறமுடியும்.

விடுதலைப் புலிகள் வலதுசாரித்தன்மையுடனேயே பிரச்சனைகளை அணுகினர் என்ற குற்றச் சாட்டில் ஓரளவு உண்மை இருந்தாலும் புலிகள் இடது சாரி நாடுகளை அல்லது இடது சாரித்துவத்தை அணுகவில்லை என்பதை முன்வைத்து புலிகளை நிராகரிப்பது பற்றி யோசிக்கவேண்டி இருக்கின்றது.  புலிகள் ஒரு அமைப்பாகப் பலம்பெற்று கட்டமைத்தது 90களில்தான்.  அந்த 90களில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியை தொடர்ந்து உலகெங்கும் இடது சாரித்துவம் பற்றிய நம்பிக்கையீனம், ஏற்பட்டது.  அது மட்டுமல்லாமல் இடதுசாரித்துவத்தைப் பின்பற்றாதது விடுதலைப் புலிகளின் தவறு என்பவர்கள், இன்றுவரை இடது சாரி நாடுகள்  மிக மிகப் பெரும்பான்மையாக இலங்கை அரசையும், அதன் போர்க்குற்றங்களையும் போர் நடந்த காலங்களிலும் அதை தொடர்ந்து ஐ.நா வரையிலும் மறைக்கவும், இலங்கை அரசை காபந்து செய்யவும் செய்யும் வெளிப்படையான எத்தனங்களை விமர்சனம் செய்யவும் வேண்டும்.  ஈழப்பிரச்சனை தொடர்பாகப் பேசுபவர்கள் தொடர்ந்து வலதுசாரி X இடது சாரி, புலிகள் X மாற்று இயக்கத்தினர், புலி ஆதரவாளர்கள் X எதிப்பாளர்கள் என்ற எல்லைகளுக்குள் நின்று கொண்டு கம்பன் கழகப் பட்டி மன்றம் போல உரையாடுவதால் ஏற்படும் விளைவு இது,

இது போன்ற இன்னுமொரு சென்ரிமென்டல் அபத்தம் தியாகு அவர்களிடம் இருந்தும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டிருக்கின்றது.  போரின் இறுதி நாட்களில் புலிகள் மக்களை பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர் என்ற உண்மையை புலி ஆதரவாளர்கள் நேர்மையாக ஒப்புக்கொள்ளவேண்டும்.  அதை விடுத்து தியாகுவிடம் மனிதக் கேடயங்கள் குறித்துக் கேட்கும் போது அவர் கூறுகிறார் “புலிகள் யார் மக்கள் யார்.  புலிகள் எங்கிருந்தோ வந்தது போலவும், அவர்களுக்கும் இந்த மக்களுக்கும் சம்பந்தமே இல்லாததும் போலவும் பேசுவதே அடிப்படையில் முரணானது.  பிடித்து வைத்திருந்தார்கள் என்பது உண்மையாக இருந்தால் மகன் அம்மாவைப் பிடித்து வைத்திருந்தான் என்றோ, அண்ணன் தங்கையைப் பிடித்து வைத்திருந்தான் என்றோதான் அர்த்தம். ” என்று கூறுகிறார்.  இது போன்ற வாதங்கள் உரையாடலை நகர்த்தாமல் வெறும் விரயம் ஆக்கிவிடுபவை.  தொடர்ந்து தியாகு குறிப்பிடுவதைப் போல, இதை இலங்கை ராணுவம் செய்த தாக்குதல்களுடன் சமப்படுத்த முடியாது என்பது உண்மையானாலும், போரின் இறுதிக் காலங்களில் புலிகள் உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்பதை தமிழ்த் தேசியர்கள் மறுத்துவருவது பிழையானதே.

அதே நேரத்தில் புலிகள் மீது இவ்வளவு தவறு இருந்ததென்று சொல்கின்றீர்களே, அப்படியானால் அவர்களுக்கு மாற்றான ஒரு இயக்கம் தோன்றியிருக்கவேண்டுமே என்கிற இயல்பான கேள்வியை தியாகு முன்வைக்கின்றார்.  எல்லா அமைப்புகளையும் தமது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரதேசங்களில் தமது கண்காணிப்பின் கீழ் புலிகள் வைத்திருந்த காலங்களில் அவ்வாறான ஒரு இயக்கம் தோன்றுவதற்கு எந்த வெளியுமே இருக்கவில்லை என்றாலும் ஷோபா சக்தி அதற்கு சொல்கின்ற பதில் மிகுந்த வக்கிரமும், காழ்ப்பும் உடையது.  ஷோபா சொல்கிறார்

“புலிகள் தவறிழைத்தார்கள் எனில் அதற்கு மாற்றான ஒரு இயக்கம் அங்கு தோன்றி இருக்கவேண்டும் என்று சொன்னீர்கள்.  புலிகளுக்கு மாற்றாக புலிகளைப் போலவே அங்கே ஈபீடீபீயும் டீஎம்விபியும் இயங்கிக் கொண்டு தானிருந்தார்கள்.  இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  கிழக்கு மாகாண சபை ரிஎம்விபி வசமும் யாழ் மாநகர சபை ஈபிடிபி வசமும் உள்ளன.  புலிகளுக்கு எதிராக நின்று பிடிக்க இவர்களும் புலிகளைப் போலவே இயங்கினார்கள் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது.  இவர்களும் கொலைக்கு அஞ்சாதவர்கள்.  சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் தங்களது கைகளைக் கோர்த்துக்கொண்டு தமது இருப்பை உறுதி செய்யத் தயங்காதவர்கள்.  கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்லென்று இவர்கள் அரசியல் செய்ததால் இவர்களால் புலிகளை எதிர்த்து நிற்க முடிந்தது.  டக்ளஸ் தேவானந்தா 13 தடவைகள் புலிகளின் கொலைத் தாக்குதல்களிலிருந்து தப்பித்திருக்கிறார்”.

ஈழத்து அரசியலைத் தொடர்ந்து அவதானித்து வரும் எவருக்குமே ஷோபா சொல்வது எத்துணை பிழை என்பதும் புரட்டு என்பதும் தெளிவாகத் தெரிந்திருக்கும்.  புலிகளுக்கு மாற்றாக வந்ததாக ஷோபா சொல்லும் ஈபிடிபி, டிஎம்விபியினர் மக்கள் நலனுக்காகவோ / விடுதலைக்காகவோ போராடுவதை தமது கொள்கைகளாகக் கொண்டா அவ்வவ் இயக்கங்களைத் தொடங்கினார்கள்?  மக்கள் நலனை முன்வைத்து அவர்கள் இதுவரை காலம் செய்த போராட்டங்கள் என்பதை ஷோபாசக்திதான் விளக்கவேண்டும்.  தவிர, ஷோபாசக்தி சுட்டிக்காட்டும் இரண்டு இயக்கங்களும் அவர்களின் ஆரம்பகாலத்தில் இருந்தே அரசின் நிழலில் வளர்ந்தவர்கள் என்பதையும் கவனிக்கவேண்டும்.  விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த புலிகள் சில தவறுகள் செய்தார்கள் என்பது உண்மை.  ஆனால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் விரோத அரசியலையே மேற்கொள்ளும் ஈபிடிபி, டிஎம்விபியினரை புலிகளுக்கான மாற்றாக  உருவானவர்கள் என்று ஷோபா சொல்வதில் இருக்கின்ற வக்கிரம் கவனிக்கப்படவேண்டியது.

இந்தப் புத்தகத்தை முழுமையாக வாசிக்கும் ஒருவர் மிக இலகுவாக ஷோபாவின் வாதங்கள் தொடர்ச்சியாக அவர் கட்டுரைகளிலும், புனைவுகளிலும் எழுதும் தமிழ்க் கட்சிகளில் சாதித் திமிர், புலிகளின் ஜனநாயக மறுப்பு, சோழப் பேரரசு குறித்த கனவு, இடதுசாரிகளின் மீதான் வெறுப்பு, முஸ்லீம் விரோதம்,  கருத்து சுதந்ததிரங்களை தடை செய்தமை என்கிற எல்லைகளுக்குள்ளேயே நின்று உழல்வதை அவதானிக்க முடியும்.  புலிகளின் ஜனநாயக விரோத அரசியல், கருத்து சுதந்திர மறுப்பு, போன்றவையும், தமிழ்க் கட்சிகளிடையே குறிப்பாக கூட்டணியிடையே இன்றும் இருக்கும் சாதி மற்றும் உயர்வுத் திமிர் முக்கியமான குற்றச்சாற்றுகளே.  ஆனால் அவற்றை வைத்து அவர்களின் ஒட்டு மொத்த அரசியலையும் நிராகரிப்பது அபத்தமானதே…….  மிக முக்கியமாக தேச விடுதலை இயக்கம் ஒன்றிடம் சமூக விடுதலை குறித்தான செயற்திட்டங்கள் ஒரே நேரத்தில் எவ்வளவு இருக்க முடியும் என்பதே பேசப்படவேண்டிய ஒரு விடயம்தான்.  நம்மில் நிறையப் பேர் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றோம் என்றே தோன்றுகின்றது.

இந்தப் புத்தகத்தில் ஓரிடத்தில் “சரியான முற்கோள்களில் இருந்து தவறான தவறான முடிவுகளுக்கு” என்ற லெலினின் கூற்றைச் சுட்டிக் காட்டுகிறார் தியாகு.  துரதிஸ்டவசமாக இந்தப் புத்தகமும் அப்படியே அமைந்துவிட்டது.  எனினும் வடலி பதிப்பகத்தின் இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவும்.  இது போன்ற உரையாடல்களை தொடர்ந்து சாத்தியப்படுத்துவது முக்கியம் என்றாலும் உரையாடுபவர்களுக்கிடையே ஒரு பொருத்தம் இருப்பது நல்லது.  உதாரணமாக தியாகுவுடன் உரையாட புலி எதிர்ப்பு நிலையை கொண்டிருக்கக் கூடிய இந்தியாவைச் சேர்ந்த தியாகு போன்ற சமூக செயற்பாட்டாளர் / கோட்பாட்டாளர் ஒருவரோ அல்லது ஷோபா சக்தியுடன் உரையாட விடுதலைப் புலி ஆதரவு நிலையைக் கொண்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிப் போராளியான ( குழந்தைப் போராளியாக தன்னை அடையாளப் படுத்தி இருக்கத் தேவையில்லை) இன்னுமொரு புலம் பெயர் எழுத்தாளரோ தெரிவுசெய்யப்பட்டிருப்பின் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  இன்னும் ஒரு சிறு வேண்டுதலாக இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் /  கனடாவில் இருக்கும் சிலரிடம் புலிகளுக்குப் பின்னைய அரசியல் பற்றிய ஒவ்வொரு கட்டுரைகளைப்  பெற்று ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும் என்பதையும் ஒரு வேண்டுதலாக வைக்கின்றேன்.  எனது பார்வையில் ஈழப்பிரச்சனை பற்றிய இவர்களது பார்வைகளுக்கும், இவர்கள் பின்பற்றும் அரசியல்களுக்கும், இவர்களது பிண்ணனிகளுக்கும் இடையே இருக்கின்ற வேறுபாடுகள் முக்கியமானவை.  எனவே இவர்களது கருத்துக்களைத் தொகுப்பது நல்லதோர் முயற்சியாக அமையும். (பார்க்க பின்குறிப்பு 1)

புலிகளுக்குப் பின்னைய அரசியல் என்பதை  புலிகளின் தோல்விக்குப் பிறகு யார் அல்லது எப்படி என்று பார்ப்பதைவிட post tigers என்கிற அர்த்தத்தில் தமிழர்களின் உரிமைப் போரட்டம், விடுதலை, தேசியம், தமிழீழத் தனியரசுக்கான கோரிக்கைகள், இவற்றைக் கணிசமான காலம் முன்னெடுத்த புலிகளின் அமைப்பின் அரசியல், ராணுவ, சமூக செயற்பாடுகள், வெற்றிகள், தோல்விகள் அவை மீதான விமர்ச்னங்கள் 2009ல் புலிகள் சந்தித்த ராணுவ ரீதியான அழிவு, அதற்கான காரணங்கள் பற்றிய விமர்சனங்கள், மற்றும் நடப்பு அரசியல், உலக ஒழுக்கு, நமது சூழலில் இவை ஏற்படுத்தி இருக்கும் தாக்கங்கள் என்று விரிவாக ஆராயவேண்டியது அவசியம் என கருதுகின்றேன்.

பின் குறிப்புகள்

1 கட்டுரையை விழாவில் வாசித்தபோது மீரா பாரதி, சேரன், ரஃபேல், சுமதி ரூபன், காலம் செல்வம், தேவகாந்தன், இளங்கோ, கீத் குமாரசுவாமி, பிரதீபா, தான்யா, மயூ மனோ, முரளிதரன், ஜெயகரன், தீபன் சிவபாலன், சுல்ஃபிகா, அகிலன், ரவி (வைகறை), சக்கரவர்த்தி, தர்ஷன், ரமேஷ் ஸ்டீபன், பிரஷாந்த், ரகுமான் ஜான், ஈழவேந்தன் போன்றவர்களின் பெயர்களை முன்மொழிந்திருந்தேன்.

2. கூட்டத்தில் கலந்து கொண்ட இரயாகரன் நான் ஒடுக்குறைகளை ஆதரிக்கும் தொனியில் பேசியதாக குறிப்பிட்டார்.  அவரது கவனத்துக்கு மேலே எனது கட்டுரையில் இருந்து

“புலிகளின் ஜனநாயக விரோத அரசியல், கருத்து சுதந்திர மறுப்பு, போன்றவையும், தமிழ்க் கட்சிகளிடையே குறிப்பாக கூட்டணியிடையே இன்றும் இருக்கும் சாதி மற்றும் உயர்வுத் திமிர் முக்கியமான குற்றச்சாற்றுகளே.  ஆனால் அவற்றை வைத்து அவர்களின் ஒட்டு மொத்த அரசியலையும் நிராகரிப்பது அபத்தமானதே…….  மிக முக்கியமாக தேச விடுதலை இயக்கம் ஒன்றிடம் சமூக விடுதலை குறித்தான செயற்திட்டங்கள் ஒரே நேரத்தில் எவ்வளவு இருக்க முடியும் என்பதே பேசப்படவேண்டிய ஒரு விடயம்தான்.  நம்மில் நிறையப் பேர் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றோம் என்றே தோன்றுகின்றது”

The Cage-ஐ முன்வைத்து ஈழப் போர் – எனது வாசிப்புகளூடான ஒரு பார்வை

ஈழத்தில் நடந்தேறிய போரின் இறுதிக் கட்டத்தில் பாரிய அளவில் போர்க் குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் பரவலாக வெளிவந்துகொண்டிருக்கின்ற காலப்பகுதியில் வந்திருக்கின்ற மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று கோடன் வைஸ் (Gordon Weiss) எழுதி வெளிவந்திருக்கின்ற The Cage: The Fight For Srilanka and The Last Days of Tamil Tigers என்கிற நூலாகும். அவுஸ்திரேலியாவில் பிறந்த கோடன் வைஸ் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகச் செயலாற்றுவதுடன், கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றுவதுடன் 2007 முதல் 2009ன் இறுதிவரை ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராக இலங்கையில் பணியாற்றியவர். இறுதிப் போர் கருக்கொண்டு பாரிய அழிவுகளுடன் நடந்தேறிய இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் பணியாற்றியவர்
என்பதுடன், செய்மதிகளின் துணையுடன் பெறப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இதர தரப்புகளில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களைத் திரட்டி மிகப் பெரிய மனிதப் படுகொலைகள் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்தேறின என்பதற்கு வலுச் சேர்த்தவர். சனல் 4 தொலைக்காட்சிக்கு இவர் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றும் முக்கியமானது. அந்த நேர்காணலில் Srilanka war crime is Srebrenica moment என்று குறிப்பிடுகிறார். (இணைப்பிற்கு http://goo.gl/qDBEP)
the_cage_400இவ்வாறான செயற்பாடுகளூடாக இலங்கை அரசாலும், அரசதரப்பு ஆதரவாளர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தவர். இலங்கையில் பணியாற்றிய காலத்தில் தான் தொகுத்த தரவுகளுடன் தனது தொடர்ச்சியான உழைப்பினூடாக இலங்கையில் முரண்பாடுகள் எழுந்த வரலாற்றையும் அதன் ஆரம்ப காலம்தொட்டு தொகுத்து இந்த நூலில் ஆவணப்படுத்தி உள்ளார். தமிழ்த் தேசியத்தை ஓயாது பேசிக் கொண்டிருந்தவர்கள் செய்திருக்கவேண்டிய ஆனால் பலர் செய்யத் தவறிய இந்தக் காரியத்தைச் செய்திருக்கும் கோடன் வைஸின் இந்தப் புத்தகம் நிச்சயமாகப் படிக்கவேண்டிய ஒன்று.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போர்முனையில் சடலமாகக் கைப்பற்றப்பட்டதாக புத்தகத்தின் முதலாம் அத்தியாயம் The Lions Victory ஆரம்பமாகின்றது. (அண்மையில் ரொரன்ரோவில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் ஒன்றில் சேரன் கிடைக்கின்ற தரவுகளின் அடிப்படையில், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னதற்கே அதற்கு என்ன ஆதாரம் என்று அவருடன் வாதிட்டவர்கள் இருக்கின்றார்கள். மிகத் தீவிரமான ஆதரவாளர்களாக இருந்தவர்கள் பலர் இன்னமும் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்பதை நம்பிக்கொண்டே இருக்கின்றனர். அவர்களால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று தொடங்கும் இந்த நூலை ஏற்றுக் கொள்வது கூட சிரமமாக இருக்கலாம். ஆனால் குறைந்த பட்சம் அவர் இன்னமும் இருக்கின்றார் விரைவில் மீண்டும் வருவார் என்றே நம்பிக்கொண்டிருக்கும்போது அப்படி நடவாது போகும் இடத்து விடுதலைப் போராட்டம் மிக முக்கிய காலகட்டம் ஒன்றில் தேக்கமடைந்தே போய்விடும் என்றாவது புரிந்துகொள்ளவேண்டும்.)
“சிறீலங்காவில் தனது சொந்த மொழியைப் பயன்படுத்துவது உட்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழர்கள் புலிகள் கட்டுப்பாட்டின் கீழ் சுதந்திரத்தை மெல்ல நுகர ஆரம்பித்தார்கள். இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழே பத்தாண்டுகளாக இருந்தது. ஒரு நிழல் அரசாங்கத்தையே தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடத்திய புலிகள் இக்காலப்பகுதியில் நீதிமன்றங்கள், ஊராட்சி மன்ற நிர்வாகம், சுங்கம், வரி வசூலிப்பு, காவல்துறை, வங்கிகள், தொலைக்காட்சி, வானொலி போன்ற சேவைகளைக் கொண்டு நடத்தினார்கள். கிழக்கு திமோர், கொசாவா போல தாமும் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படுவோம் என்ற நம்பிக்கை அங்கே மலிந்திருந்தது” என்று கூறும் கோடன் வைஸர் போரின் முடிவு பெரும்பான்மையான இலங்கையருக்கு அமைதியைக் கொண்டுவந்தாலும் அரசால் ஒடுக்குமுறைக்குள்ளாகி, அடையாளம் மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் புலிகளையே தமக்காகப் போராடும் சக்தியாகவே பார்த்தனர் என்று குறிப்பிடுகிறார். இதை வாசித்தபோது “சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்” என்ற புத்தகத்தில் சி.அ. யோதிலிங்கம் குறிப்பிட்டிருந்த கருத்தொன்று ஞாபகம் வந்தது.
“குறிப்பாக யுத்தத்தில் ஈடுபட்ட இரு சமூகங்களையும் பொறுத்தவரை சிங்கள சமூகத்திற்கு யுத்தமில்லா நிலை மட்டும் சமாதானமாக இருந்தது. ஆனால் தமிழ் சமூகத்திற்கோ யுத்தமில்லா நிலை, இயல்புநிலையக் கொண்டுவருதல் நிரந்தரத் தீர்வு என்பவைதான் சமாதானமாக இருந்தது – பக்கம் 18 http://noolaham.net/project/33/3219/3219.pdf
அது போலவே அரசியல் தீர்வுக்கான எந்த சமிக்ஞையும் இன்றுவரைக் காட்டப்படவில்லை. அண்மைக்காலமாக ஈழப்போராட்டம் பற்றிய புத்தகங்களையும், வரலாற்றையும், இலங்கையின் இனமுரண்களின் வரலாறு பற்றியும் விரிவாகவும் முடிந்தவரை ஆழமாகவும் வாசிக்கவேண்டியதன் அவசியம் அதிகரித்திருக்கிறது. ஈழப்போர் பற்றிய இந்தப் புத்தத்தில் கோடன் வைஸும் அதன்படியே இரண்டாவது அத்தியாயத்தில் பிரம்மஞான சபையைச் சேர்ந்த ஹென்றி ஒல்கொட் (Henry Olcott) 1874ல் இலங்கைக்கு வருகை தருவதைத் தொடர்ந்து இலங்கையில் உருவாகும் பௌத்த மறுமலர்ச்சியில் இருந்து இனமுரணுக்கான விதை தூவப்படுவதைக் குறிப்பிடுகின்றார். தனது பதினாறாவது வயதில் ஹென்றி ஒல்கொட்டைச் சந்திக்கும் டொன் டேவிட் ஹெவவிதர்ன என்கிற சிறுவன் பௌத்த மதத்தைத் தழுவி அநகாரிக தர்மபாலா என்று தனது பெயரையும் மாற்றிக் கொள்கிறான்.
இங்கே முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது என்னவென்றால், ஹென்றி ஒல்கொட், ஹெலினா ப்ளாவட்ஸ்கி (Helena Blavatsky), வில்லியம் க்வான் ஜட்ஜ் (William Quan Judge) மூவரும் இணைந்து தாபித்த பிரம்மஞான சபை உலகளாவிய சகோதரத்துவத்தையும், மனிதநேயத்தையும் வளர்ப்பதையும், பல்வேறு மதங்களையும், தத்துவங்களையும் பற்றிய கற்கைகளைச் செய்வதையும் தன் நோக்காக கொண்டிருந்தபோதும், அவற்றால் உள்வாங்கப்பட்டு பௌத்தத்தைத் தழுவிக்கொண்ட அநகாரிக தர்மபாலா பின்னர் உலகளாவிய சகோதரத்துவத்தைப் போதித்த பிரம்மஞான சபைக்கு முரணாக இலங்கையில் வாழ்ந்த இன்னொரு இனத்தரான தமிழர்கள் மீதான வெறுப்பைக் கட்டியெழுப்பினார். சிங்களமும் பௌத்தமும் பிரிக்கமுடியாதவை என்றும் இலங்கை மண் சிங்களவர்களுடன் ரத்தத்தில் ஒன்றாகக் கலந்தது என்றும் தமிழர்கள் சிங்களவர்கள் தமிழர்களின் நிலையான எதிரிகள் என்கிற வாதங்களை அநாகரிக தர்மபால முன்வைத்தார் என்று இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகின்றது.
கிறிஸ்தவர்கள் மீதும் இந்துக்கள் மீதும் கடுமையான வெறுப்பைக் காட்டிய அநாகரிக தர்மபால, அதே நேரம் சிங்களவர்கள் மீது, அவர்கள் மத்தியில் இருந்த பழக்கவழக்கங்களை கடுமையாகச் சாடி அவர்களுக்கான சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளுகிறார். அநகாரிக தர்மபால காலத்தில் விதைக்கப்பட்ட விஷம் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், புத்தர் இறந்தும் விஜயன் இலங்கைக்கு வந்தும் 2500 ஆண்டுகள் நிறைவடைந்த 1956ல் தனிச்சிங்களச் சட்டம் வரை வளர்ச்சியடைந்தது. இந்த முரண்கள் எவ்வாறு உருவாகி எவ்வாறு வளர்ச்சியடைந்தன என்று கூறும் முக்கிய நூல் குமாரி ஜெயவர்த்தனாவின் “இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள்”. (நூலகத்தில் வாசிக்க http://noolaham.net/project/14/1306/1306.pdf)
இன முரண்களில் முக்கியபுள்ளிகளில் ஒன்றாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பண்டாரநாயக்க பிரிந்துசென்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியை 1951ல் அமைப்பது இடம்பெறுகின்றது. இதன் பின்னர் இலங்கையில் முதல் இரண்டு பிரதான கட்சிகளுமே சிங்களக் கட்சிகளாக மாறுகின்றன. இலங்கை சுதந்திரமடைந்த போது ஆசியாவில் பொருளாதார ரீதியிலும், மத்திய வங்கியில் இருந்த நிதிக் கையிருப்பின் அடிப்படையிலும் ஆசியாவிலேயே முக்கிய நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கை 70களில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டது. தவிர, 1948ற்கும் 1970க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் சனத்தொகை ஏறக்குறைய இரட்டிப்பாகி இருந்தது. இதனால் இலங்கை சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் 35 வயதிற்குக் குறைந்தவர்களாக வேறு இருந்தனர். இலங்கையில் வழக்கத்தில் இருந்த இலவசக் கல்வி உட்பட்ட சமூக நலத் திட்டங்கள் காரணமாக இவர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்திருந்தனர். அதே நேரம் சனத்தொகை வளர்ந்த அதே வேகத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் இல்லை. இதனால் படித்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாப் பிரச்சனையும் விரக்தியும் உருவானது. 70களின் மத்தியில் 25% ஆனவர்கள் வேலையின்மையால் வாடினர். அதே நேரத்தில் 1965ல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற புதிய இடதுசாரிகளை உருவாக்கிய ரோஹன விஜேவீராவின் தலைமையில் 1971ல் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியும் நடக்கின்றது. இலங்கை அரசால் கொடூரமான முறையில் அடக்கப்பட்ட இந்தக் கிளர்ச்சி 15,000 இளைஞர்கள் கொல்லப்படுவதுடன் தோல்வியில் முடிகின்றது.
ஒரு மார்க்ஸிய லெனினிய இயக்கம் என்று ஜேவிபி அழைத்துக்கொண்டபோதும் மிகக் குறுகிய காலத்திலேயே அவர்களும் சிங்களப் பேரினவாத இயல்புகளுடனேயே செயற்பட ஆரம்பித்தனர். இந்த நிலையில் இன்று ஜேவிபியையும், ரோஹன விஜேவீராவையும் புரட்சிகர சக்திகளாக சிலர் முன்மொழிவதையும் அவதானிக்கவேண்டும். இவர்கள் புரட்சியாளர் என்று சொல்லும் ரோகண விஜேவீராவும், ஜேவிபியினரும் எவ்வளவு பிற்போக்குத்தனமாக, பிற இனத்தவர்கள் மீது வெறுப்பைத் தூண்டுகின்றது போல நடந்து கொண்டுள்ளனர் என்பதையும் கவனிக்கவேண்டியது அவசியமாகின்றது. இது பற்றி விரிவாக அறிய குமாரி ஜெயவர்த்தன எழுதிய இலங்கையின் இனவர்க்க முரண்கள் என்ற புத்தகத்தில் ஆகக் குறைந்தது 134 – 137 பக்கங்களையோ அல்லது 8வது அத்தியாயத்தையோ (மார்க்ஸிசத்திலிருந்து மேலாதிக்க வெறியை நோக்கி) வாசிக்கவும். http://noolaham.net/project/14/1306/1306.pdf
இதற்குப் பிறகு அதன் கிளர்ச்சியும் தோல்வியடைந்த பின்னர் சுயவிமர்சனம் என்ற பெயரில் ஜேவிபி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இக்கட்டத்தில் தமிழர் ஒரு தேசிய இனம், பெரும்பான்மையினரால் அவர்கள் ஒடுக்குதலுக்குள்ளாக்கப்படுகின்றனர், அவர்கள் பிரிந்துசெல்லும் எல்லை வரையிலான சுய நிர்ணய உரிமை உடையவர்கள் என்று ஜேவிபியினர் ஏற்றுக்கொண்டனர். இக்கட்சி பிரிவினையை ஆதரிக்கவில்லை. இலங்கை என்ற அமைப்புக்குள்ளேயே தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் என்று நம்பியது. இந்த நிலைப்பாட்டில் பல தத்துவார்த்த, நடைமுறைக் குறைபாடுகள் இருந்தன. எனினும் இலங்கைத் தோட்டப்பகுதித் தமிழர் மத்தியில் ஜேவிபியினர் வேலைசெய்ய இது வழிவகுத்தது. இதனால் ஜேவிபியின் தமிழர்களும் இணைந்தனர். மாநகரசபைத் தேர்தல், மாவட்ட சபைத் தேர்தலில் ஜேவிபி சார்பில் தமிழர்களும் போட்டியிட்டனர். (இலங்கையின் இன வர்க்க முரண்கள் – பக். 140)
இதே சமயம் ஜேவிபியினரின் இந்த தமிழர் மீதான ஆதரவு நிலைப்பாட்டுக்கு அதே இயக்கத்தின் பொதுச் செயலாளாரான லயனல் போபகேயின் செல்வாக்கு அதிகம் தாக்கம் செலுத்தி இருக்கின்றது. 2010 மேயில் கோடன் வைஸுசனான சந்திப்பொன்றில் லயனல் போபகே கூறுகின்றார்,
“எனக்குப் பதினான்கு வயதாக இருக்கின்றபோது நடைபெற்ற 1956 கலவரத்தின்போது ஒரு தமிழ்ச்சிறுவன் பாதுகாப்பிற்காக எம்மிடம் ஓடிவந்தான். அந்தச் சிறுவன்தான் எமது கடைக்கு வெற்றிலை விநியோகம் செய்பவன். அவனைக் கொலைவெறியுடன் துரத்தி வந்த கூட்டத்தினரிடம் இருந்து எனது தந்தை காப்பாற்றினார். அதன் பிறகு எனக்கு ராகுல கல்லூரியில் இரசாயன‌வியல் கற்பித்து வந்த தமிழாசிரியர் ஒருவர் 1958 கலவரத்தின்போது காணாமற்போனார். பின்னர் 60களின் தொடக்கத்தில் நான் றிச்மண்ட் கல்லூரியில் கல்வி கற்றபோது எனக்கு இரசாயன‌வியல் கற்பித்த ஆசிரியரும் இவ்வாறே காணாமற்போனார்.
பாடத்திட்டங்களில் எனக்குக் கற்பிக்கப்பட்ட துட்டகைமுனு – எல்லாளன் கதைகள் எல்லாம் இன்றைய சமூகத்தின் தேவை பற்றி சிந்தியாதவையாகவே இருந்தன. இவற்றின் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான ஒவ்வொரு வன்முறையும் சரியாகத் திட்டமிடப்பட்டு, அமைப்புமயமாக்கப்பட்ட தாக்குதல்களே”
ஆனால் 82ன் பின்னர் ஜேவிபியினரின் நிலை மீண்டும் மாறத் தொடங்கியது. இவ்வாண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரோஹண விஹேவீராவுக்கு வெறும் 273,428 ஓட்டுக்களே (4.19%) கிடைக்கின்றன. இந்தத் தோல்விக்குக் காரணம் தான் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரித்ததே என்ற முடிவுக்கு வந்த ரோஹண விஜேவீரா இலங்கை மக்களுக்கு ஒரு செய்தி என்ற பெயரில் அளித்த அறிக்கை ஒன்றில் குறிப்பிடுகிறார்,
“ஜேவிபியும் நானும் நாட்டைப் பிரிப்பதற்கான எந்த ஏகாதிபத்திய முயற்சிகளையும் முழுமையாக எதிர்க்கின்றோம். நான் உயிருடன் இருக்கும் வரை, ஜேவிபி இருக்கும்வரை நாட்டைப் பிரிக்க எந்த ஏகாதிபத்தியச் சக்தியையும் அனுமதியோம்.”( இலங்கையின் இன வர்க்க முரண்கள் – பக். 141)
இதுபோலவே இடதுசாரிகளாலும் இனமுரண்களில் நியாயப்பூர்வமாக நடந்துகொள்ள முடியவில்லை. ஏமாற்றங்களின் உச்சமாக 1972 யாப்பு அலுவல்கள் அமைச்சராக இருந்த லங்கா சம சமாஜக் கட்சித் தலைவர் கொல்வின் ஆர் டி சில்வா எழுதிய யாப்பு அமைந்தது. லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை பங்களித்த சிறீமா அரசால் 1972ன் அரசியல் யாப்பு சிறுபான்மையினரின் உரிமைகளை ஒழித்துக் கட்டியதுடன் அரச கரும மொழியாக சிங்களமே இருக்கும் என்பதுவும் அறுதியிடப்பட்டது. அது மாத்திரமல்லாமல் யாப்பின் 6ம் பிரிவு பௌத்தத்துக்கு இலங்கை முதன்மையான இடம் கொடுக்கவேண்டுமெனவும் ஏனைய மதங்களுக்கு உரிமைகளைத் தரும் அதே சமயம் பௌத்தத்தை போஷிப்பதும் பாதுகாப்பதும் அரசின் கடமை என்றும் கூறுகின்றது. இதற்குப் பிற்பட்ட காலங்களில் இடதுசாரிக் கட்சிகள் தமது நிலைப்பாட்டை மாற்றி இலங்கை மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்று குரல் கொடுத்தாலும், 1972 யாப்பில் பௌத்தமதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவும், அதன்பின்னர் அதுவே 1978 யாப்பிலும் அதுவே தொடரவும் வழி அமைத்தவர் கொல்வின் ஆர் டி சில்வாவே. சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கவேண்டிய இடதுசாரிகள், சிறுபான்மையினருக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளைக் குழி தோண்டிப் புதைக்க துணைபோயினர். இது போன்ற காரணிகளால் தமிழர்களுக்கும், 70களின் பின்னர் சிங்கள இடதுசாரித் தலைவர்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனது.
The Cageல் 19ம் நூற்றாண்டில் இருந்து இலங்கையில் இன முரண்கள் தோன்றி வளர்ந்ததைச் சொல்லத் தொடங்கும் கோடன் வைஸ் நூலின் இரண்டாம், மூன்றாம் அத்தியாயங்களுக்கு Paradise Found, Paradise Lost என்று பொருத்தமாகவே பெயரிடுகின்றார். Paradise Found என்கிற இந்த அத்தியாயத்தில் இனமுரண்களுக்கு தூபமிட்ட 72, 78 யாப்புகள், முதலில் மொழிரீதியாகவும் (1973), பின்னர் மாவட்ட ரீதியாகவும் (1974) கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல்கள் (இவற்றின் விளைவாக 1969ல் பொதுப் போட்டிப் பரீட்சை மூலமாக பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான தமிழ் மாணவர்கள் 27.5% ஆக இருந்து 1974ல் மாவட்டவாரி தரப்படுத்தலின்போது 7% ஆகக் குறைந்தது), 1983ல் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான கலவரம், அதன் பின்னர் தொடரும் இந்தியத் தலையீடுகள், 1987ல் ராஜீவ் – ஜெயவர்த்தன இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டமை, தொடரும் இந்தியத் தலையீடுகளை முன்வைத்து மீண்டும் தீவிரமாகும் ஜேவிபி எழுச்சி என்பன விவ‌ரிக்கப்படுகின்றன.
கோடன் வைஸின் இந்தப் புத்தகத்தில் தொடர்ந்து இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியா தொடர்ச்சியாகச் செய்த குளறுபடிகளையும், துரோகங்களையும் எந்த இடத்திலும் குறிப்பிடாமல் கடந்து செல்வது அவதானிக்கக் கூடிய குறையாகும். இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றிக் குறிப்பிடும்போது எந்த இடத்திலும் அந்த ஒப்பந்தம் எவ்வாறு புலிகள் மீது திணிக்கப்பட்டது என்பது பற்றிய எந்தக் குறிப்பும் இந்தப் புத்தகத்தில் இல்லை. அதே நேரம் வைஸர் குறிப்பிடுவதைப் போலவே பெரும்பான்மைத் தமிழர்கள் இந்தியாவின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டதையும் அதே நேரம் சிங்களவர்கள் மத்தியில் அது வெறுப்பைத் தூண்டியதும் ஒப்புக்கொள்ளவேண்டியதே.
இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து ரோகண விஜேவீரா பிரச்சாரம் செய்கிறார். நாடெங்கும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து ஜேவிபியினர் முன்னெடுத்த கலவரங்களில் நாற்பது பேர் வரை கொல்லப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் பிரதமர் பிரேமதாசவும் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் ஜேவிபியினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து தென் பகுதிகளில் ஜேவிபியின மீதான கடுமையான ஒடுக்குதல் நடைபெறுகின்றது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்தால் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேலானதாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகின்றது. இந்த மனித உரிமைமீறல்கள் பற்றி பெரிதாக பேசப்படவில்லை என்பதே உண்மை. இதே காலப்பகுதியில் சர்வதேச ஊடகங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ரஷ்யா வெளியேற்றம், சோவியத் ரஷ்யா மற்றும் வார்சா ஒப்பந்த நாடுகள் (Eastern Blocs)இடையே ஏற்பட்ட பிரிவுகள், இஸ்ரேலுக்கு எதிரான் பாலஸ்தீனியர்களின் எழுச்சி, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போன்றவற்றில் குவிந்திருக்க இலங்கையில் இந்த அழித்தொழிப்புகள் நடந்தேறின.
ஜேவிபியினருக்கு எதிரான இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி, பலதடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினரின் உடனடி தலையீட்டை வேண்டிக் குரல்கொடுத்தவர்தான் இன்று தமிழர்களுக்கு எதிராக பாரிய அளவில் போர்க்குற்றங்களை நிறைவேற்றியும், நிறைவேற்றத் தூண்டுதலாகவும் இருந்த மகிந்த ராஜபக்சே. அன்று மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மகிந்த ராஜபக்சே, தமிழர்களுக்கெதிரான படுகொலைகளுக்கு கூட்டுச் சேர்ந்தது ஜேவிபிக்கு எதிரான ஒடுக்குதலில் நாட்டின் தென்பகுதியில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட கோதபாய ராஜபக்சேயுடனும், கம்பகாவில் பெருமளவில் ஜேவிபியினர் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்கள் கும்பல் கும்பலாகக் கொல்லப்பட்ட ராணுவ முகாமுக்குப் பொறுப்பாளராகவும் இருந்த சரத் பொன்சேகாவுடனும். இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான முக்கிய சம்பவங்கள் நடந்தேறிய காலப்பகுதி பற்றி விவ‌ரிக்கும் இந்த அத்தியாயம் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு மிகப்பெரும் முட்டுக் கட்டையாக அமைந்த ராஜீவ்காந்தி கொலையுடன் நிறைவுறுகின்றது. இந்தச் சம்பவத்திற்கு கோடன் வைஸர் நேரடியாகப் புலிகளையே குற்றஞ்சுமத்துகின்றார்.
ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கொன்றினை இத்தனை ஒளிவுமறைவுகளுடன் ஏன் இந்தியா நடத்துகின்றது, யார் யாரைக் காப்பாற்றவேண்டும் என்ற செயல்திட்டத்துடன் இதெல்லாம் நடைபெறுகின்றது என்பதையாவது அவர் சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருச்சி வேலுச்சாமி எழுதிய ராஜீவ் காந்தி கொலைவழக்கு வெளிவராத மர்மங்கள் என்ற புத்தகத்தில் மிக மிக எளிய முறையில் ராஜீவ் கொலை பற்றிய நிறைய சந்தேகங்கள், வழக்கு விசாரணையில் இருந்த ஓட்டைகள் என்பன விவ‌ரிக்கப்படுகின்றன. (இங்கே நான் ராஜீவ் கொலை வழக்கிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற கூற முன்வரவில்லை. அதே நேரம், இந்த வழக்கு விசாரணை மிகுந்த ஒற்றைத்தன்மையுடனேயேயும், ஒளிவு மறைவுடனுமே நடத்தப்பட்டது என்பதைக் கவனிக்கவேண்டும் என்று கூறுகின்றேன்) தவிர்த்து எல்லா விடயங்களையும் ஆதி முதல் எழுதும் கோடன் வைஸ் இந்திய அமைதிப்படை இலங்கையில் தங்கியிருந்த காலங்களில் செய்த அத்துமீறல்கள், ஆயிரக்கணக்கான கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் பற்றிப் பேசவேயில்லை என்பதும் கவனிக்கவேண்டியது.
இது போல புத்தகத்தின் இன்னுமொரு அத்தியாயத்தில் இலங்கை அரசு புலிகள் மீதான இறுதிப் போருக்கு இந்தியாவிடம் கேட்ட உதவிகளை, அவ்வாறு செய்வது தமிழ்நாட்டின் ஆதரவை இழக்கவைக்கும் என்று இந்திய அரசு அஞ்சியதால் மறுத்தது என்றும், இதனைப் பயன்படுத்தி சீனா இலங்கை அரசிற்கு மேற்படி உதவிகளை நிறைவேற்றி இலங்கையிலும், இந்து சமுத்திரத்திலும் தன் செல்வாக்கை நிலைநாட்டியது என்ற பொருள்படவும் கூறப்படுகின்றது. உண்மையில், ந‌மக்குக் கிடைத்த தரவுகள், நாம் அறிந்த செய்திகள், தகவல்கள் போன்றவற்றின் அடிப்படையில் இறுதி யுத்தத்தில் இந்தியாவின் பங்கு கணிசமாக இருந்திருக்கின்றது என்பதை இலகுவாக அறியமுடியும். தவிர, போர் முடிந்த பின்னர் கோத்தபாய ராஜபக்சே வழங்கிய நேர்காணல்களிலும் இந்தியத் தேர்தல்களின்போது (2009) கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை தாம் நிறுத்துவதாகக் கூறி இந்திய அரசிற்கு உதவினோம் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற சார்புகள் இந்தப் புத்தகத்தின் முழுமைத்தன்மையை இல்லாமல் செய்கின்றன என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அதே நேரம் இந்திய, அமெரிக்க தொலைதூர ராடர் மற்றும் புலனாய்வுத்துறையினரின் உதவியுடன் இலங்கை ராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் 8 ஆயுதக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதையும் அவற்றில் ஒன்று 1700 கடல்மைல்கள் தூரத்தில் தாக்கப்பட்டதையும் குறிப்பிட்டே இருக்கின்றார். இதே தகவலை DBS ஜெயராஜிற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கேபியும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
The Tiger Rovolt என்கிற நாலாவது அத்தியாயத்தில் போராட்ட இயக்கங்களின் ஆரம்பகால நிலைகள் பற்றிய சிறு குறிப்புகளுடன் புலிகளின் ராணுவ ரீதியான வளர்ச்சிகள், அவர்கள் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள், ஆட்சேர்ப்புகள், அரசியல் படுகொலைகள் போன்றன குறிப்பிடப்படுகின்றன. தீவிரமான விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் எதிர்க்கப்படுவதற்கு இந்தப் புத்தகத்தில் நிறைய இடங்கள் இருக்கின்றன. புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு, சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியது, அவர்கள் செய்த அரசியல் படுகொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள், மக்களைக் கேடயமாகப் பாவித்தமை போன்றவை இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இன்றுவரை தீவிர புலி ஆதவாளர்கள் பலரால் நிராகரிக்கப்பட்டும், எதிர்க்கப்பட்டும் வருகின்ற கருத்துக்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளுக்குப் பின்னைய தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதில் பரவலாக எதிர்கொள்ளப்படும் சிக்கலே இதுவாகத்தான் இருக்கின்றது.
இதற்கு நல்லதோர் உதாரணமாக, போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நவநீதம் பிள்ளை இலங்கை நிலைமைகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையொன்றில் விடுதலைப் புலிகள் மக்களை வெளியேறாமல் தடுத்து வைத்துள்ளனர், ஆட்களை கட்டாயமாக போரில் ஈடுபடுத்துகின்றனர் என்று குறிப்பிட்டபோது இவ்வாறு நவநீதம்பிள்ளை கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாற்று என்று கூறி அந்த அறிக்கையைக் கண்டிக்குமாறு கேட்டு தொடர்ச்சியாக மொய்த்த மின்னஞ்சல்களையும், தற்போது சன‌ல் 4 வெளியிட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஒளித்தொகுப்பில் விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சுமத்திய பகுதிகளை நீக்கிவிட்டே தமிழர்கள் மற்றவர்களுடன் பரிமாறவேண்டும் என்று பரவிய மின்னஞ்சல்களையும் கூறலாம்.
இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கின்றபோது நண்பர் ஒருவரிடம் பேசியபோது அவர் சொன்னதுபோல, “தீவிர ஆதராவாளர்கள் புலிகள் மீதான விமர்சனம் = புலி எதிர்ப்பு = போராட்டத்துக்கான எதிர்ப்பு = துரோகிகள் என்கிற ரீதியில் அணுகுவதும், மாற்றுக்கருத்து = புலி எதிர்ப்பு மட்டும் என்று பார்ப்பதும்” இன்னும் இன்னும் வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும் என்பதையும் பார்க்கவேண்டும். நாம் மிகப் பெரிய வீழ்ச்சி ஒன்றை அடைந்திருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொண்டு, அடுத்து என்ன செய்வது, எதில் இருந்து தொடங்குவது என்று சிந்திக்கவேண்டும். அதற்கு, இதுவரை செய்தவற்றில் எதைத் தொடர்வது, எதைத் தவிர்ப்பது, இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம், இன்றைய‌ உலக ஒழுக்கில் எமக்கு எவை சாதகமாக அல்லது பாதகமாக இருக்கின்றன என்பவற்றை ஆராயவேண்டும். இதற்காகத்தான் சுயவிமர்சனப்பார்வை அவசியம் என்பது உறுதியான நம்பிக்கை.
ஆனால் சுயவிமர்சனம் என்பது ஒரு தரப்பினர் மீது காழ்ப்பை உமிழ்வது அல்ல, இலங்கையில் இத்தனை போர்க்குற்றங்களும், இனப்படுகொலையும் நடைபெற்றிருக்கையில் அது பற்றி எந்த விமர்சனமும் இன்றி மகிந்த ராஜபக்சேவுக்கு நன்றி கூறி விழாக்களை தொடங்குவது, நடத்துவது அல்ல. தாம் சார்ந்திருந்த இயக்கங்கள் / தாம் போராளிகளாக இருந்த காலங்களில் செய்த போர்க்குற்றங்கள், வன்முறைகள் பற்றி எந்த விமர்சனத்தையும் வைக்காமல், எல்லாத் தரப்பும் பிழைவிட்டவைதான் என்று ஒரே தாவலாகத் தாவி அதற்குப் பின்னர் வரிக்கு வரிக்கு பாசிசப் புலிகள், பாசிசப் புலிகள் என்று பல்லவி பாடுவது அல்ல. ‘விடுதலைப் புலிகள் பெண்விடுதலையை முன்வைக்கவில்லை, தலித் விடுதலையை முன்வைக்கவில்லை’ என்று தொடர்ந்து குற்றஞ்சுமத்திவிட்டு யாராவது குறுக்கிட்டு ‘இல்லை புலிகள் இவற்றைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள்’ என்று சுட்டிக்காட்டினால், ‘அவர்கள் அப்படி செய்தபோதும் அவர்களால் சாதீயத்தை அடக்கமுடியவில்லையே, பெண் விடுதலையை நிலைநாட்ட முடியவில்லையே’ என்று விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று புளகாங்கிப்பது இல்லை.
இதே தவறைத்தான் புலி ஆதரவாளர்களும் செய்கின்றனர் என்பதையும் ஒப்புக்கொண்டேதான் ஆகவேண்டி இருக்கின்றது. சுயவிமர்சனம் தேவை என்று சொல்வதையே, இல்லை அது பிளவை அதிகரிக்கும் என்று சொல்வதுதான் புலி ஆதரவாளர்களின் வழமையாக இருக்கின்றது. 
இன்று விடுதலைப் புலிகள் மீது மாற்று இயக்கத்தினர் குழந்தைகளைப் போரில் சேர்த்தல், கட்டாயப்படுத்தி போரில் ஈடுபடுத்தல், அரசியல் படுகொலைகள் போன்ற குற்றச்சாற்றுகளை முன்வைக்கின்றபோது இதே தவறுகளில் இருந்து அவர்கள் தமக்கு வழங்குகின்ற பழி விலக்கங்களையும் கவனிக்கவேண்டும். உதாரணமாக கீழ்வரும் அறிக்கையில் குறிப்பிடுவதைக் கவனிக்கலாம்,
“Several other armed groups have been responsible for the recruitment and use of children in Sri Lanka. There were reports in the past of the Eelam People‟s Revolutionary Liberation Front (EPRLF), the People‟s Liberation Organisation of Tamil Eelam (PLOTE), Tamil Eelam Liberation Organisation (TELO) and the Eelam People‟s Democratic Party (EPDP) recruiting and using children, although not in large numbers. These groups were originally set up in the 1980s in opposition to the government. However, since 1990 they have worked in cooperation with the government against the LTTE.
Current information indicates that EPDP and PLOTE are continuing to recruit and use children for task-specific purposes. For example, in the lead up to the presidential election in January 2010, children were reportedly recruited to assist these groups with tasks including guarding their offices and distributing campaign material.
Questions to the Government of Sri Lanka
What measures have been taken by the Government of Sri Lanka to ensure that EPDP and PLOTE do not recruit and use children and that any children associated with them are released and provided with all necessary support for their rehabilitation and reintegration? – Coalition Report to CRC on OPAC Implementation in Srilanka –April 2010 pg 8.”
இலங்கை அரசு போர்க்காலத்தில் ஊடகத்துறையை எப்படி மிரட்டிக் கட்டுப்படுத்தியது, அதன் மீது எப்படி வன்முறையை ஏவியது என்பதையும் கோடன் வைஸ் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். 2009 ஜூன் 1ம்திகதி ஊடகத்துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பற்றி மகிந்த ராஜபக்சே ஊடகத்துறை பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஜெயந்த பொடல என்கிற ஊடகவியலாளர் கடத்திச் செல்லப்பட்டு பலமாகத் தாக்கப்பட்டார் (பக்கம் 154). ஜயந்த பொடல மாத்திரமன்றி லசந்த விக்ரமசிங்க கொலை, பிரகீத் எக்னலிய கொட, வெற்றிவேல் ஜசிகரன், நாமல் பெரரா போன்றவர்கள் மீது அரசு வன்முறையைப் பாவித்த விதமும் இங்கே பட்டியலியடப்பட்டுள்ளது. (இது பற்றி மேலதிகமாக வாசிக்க http://goo.gl/UEjcT என்ற ஆவணத்தைப் பார்க்கலாம்.)
இலங்கை அரசு தனக்குச் சார்பான பிரசாரங்களை எப்படி முன்னெடுத்தது என்பது கூர்ந்த அவதானத்துடன் குறிப்பிடப்படுகின்றது. போர்க்காலங்களில் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலும், சர்வதேச நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களை நடாத்தியபோது அந்தப் போராட்டங்கள் பற்றி ஊடகங்களில் பின்னூட்டங்களிடும்போது தொடர்ச்சியாக தமிழர் தரப்பு நியாயங்களை நிராகரித்து பல பின்னூட்டங்கள் வந்ததை நாம் கவனித்திருப்போம். அண்மையில் டைம் இதழ் நடத்திய கருத்துக் கணிப்புகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி ராஜபக்சேவின் பெயர் நீக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். அது போல, இலங்கை அரசால் நியமிக்கப்பட்டவர்களே கூட இப்படியான பின்னூட்டங்களை வெளியிட்டிருக்கவும் கூடும். அதே நேரம், புலம் பெயர் நாடுகளில் கிட்டத்தட்ட 10 லட்சம் தமிழர்கள் வசிக்கின்ற போதும் தன்னிச்சையாகவேணும் எமது போராட்டத்தின் நியாயங்களை நாம் பதியத் தவறினோம் என்பதே உண்மை. அதே நேரம் இலங்கை அரசு தனது ஊடகப் பிரசாரத்தை முழுவேகத்தில் செயற்படுத்தியது. இந்த இடத்தில் கோடன் வைஸ் சொல்வதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்,
“Apart from its hold on the national media, the government controlled numerous official and unofficial websites located within Srilanka and in countries such as Sweden, Singapore and Canada. Roving self-styled Srilankan ‘terrorism experts’ eloquently explained the workings of the Tamil Tigers in international TV studios, and backed up Srilanka’s diplomat abroad. Carefully manufactured information converged to support the government’s narrative of events. – Page 176 and 177 ”
இலங்கை அரசு தனது போரினை ராணுவ ரீதியாக மாத்திரமல்லாமல் பல்தரப்புகளிலும் தொடர்ந்து கொண்டுசெல்கின்றது என்பதற்கு நல்லதோர் உதாரணம் இது. இன்று இலங்கை அரசுக்கு தேவைப்படுவதெல்லாம் இலங்கையில் போரினை நிறைவிற்கு கொண்டுவரப்பட்டதுடன் அங்கே அமைதி நிலை நாட்டப்பட்டுவிட்டது என்பதாக உலகிற்குக் காட்டவேண்டும் என்பதே. போர் நிறைவடைந்தவுடனேயே தொடர்ச்சியாக நடைபெற்ற கலை விழாக்கள், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, காலி கலாசார விழா போன்றவை இலங்கை அரசின் மேற்குறித்த நோக்கத்திற்கான நிகழ்ச்சி நிரலின் படி அமைந்ததாகவோ அல்லது சுயேச்சையாக நடத்தப்பட்டபோதும் அரசின் நிகழ்ச்சி நிரலிற்கு வலுச் சேர்ப்பதாகவோதான் இருக்கின்றன. மறுவாழ்வு, புனரமைப்பு என்ற பெயரில் இன்று அரசு விரும்புவதெல்லாம் வரலாற்றைத் தன்னைக் காபந்து பண்ணி மீள எழுதுவதைத்தான். இன்று யாழ் நூலகத்தைப் பற்றி அரச இணையத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகளில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது பற்றிய எந்தக் குறிப்புகளும் இல்லை என்பதையும் (பார்க்க http://www.cimicjaffna.com/HistoricalPlaceBody.php ) அதே நேரம், தலதா மாளிகை மீதான விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதல் மற்றும் சேதமுற்ற தலதா மாளிகையின் படங்கள் தலதா மாளிகையுடன் இருக்கின்ற அருங்காட்சியக சுவர்களில் காட்சிக்காக வைக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
இவ்வாறான மிகத் தெளிவான திட்டமிடலுடன் இயங்குகின்ற இலங்கை அரசின் செயற்பாடுகளுடன் சேர்த்தே போருக்குப் பின்னைய சூழல் பற்றியும் ஆராயவேண்டி இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கை அரசு சீனாவையும், இந்தியாவையும் வைத்து மிகச் சாணக்கியமாக தனது நகர்த்தல்களை செய்து வந்துள்ளது. அது மாத்திரமல்லாமல் லிபியா, வெனிசுலா, ஈரான், கியூபா போன்ற நாடுகள் தொடர்ச்சியாக இலங்கை அரசிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் எடுக்கவிருந்த சில நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தின. இந்த நாடுகளில் பல இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையை முன்வைத்து மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தைச் செலுத்த முற்படுகின்றன என்று குற்றம் சாற்றுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையையும் இதே கண்ணோட்டத்தோடே இலங்கையில் இருக்கின்ற இடதுசாரிக் கட்சிகள் அணுகின என்பதையும் இங்கே சுட்டிக் காட்டவிரும்புகின்றேன். தமிழர்கள் தொடர்ச்சியாக நம்பி வந்த வாசுதேவா நாணயக்கார போன்றவர்கள் கூட இன்று முழுக்க முழுக்க இலங்கை அரசைக் காப்பாற்றும் இயன்றவரை அதை நியாயப்படுத்தும் வேலைகளைத்தான் செய்கின்றார்கள் என்பதை வைத்துப் பார்க்கின்றபோது, இடதுசாரித் தலைவர்களை தமிழர்கள் நம்பவில்லை என்ற குற்றச்சாற்று மிகப் பலகீனமானதாகவே தோன்றுகின்றது.
கோடன் வைஸின் புத்தகம் சில சில குறைகளை அல்லது எனது பார்வையில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றபோதும் அண்மைக்காலங்களில் ஈழத்தில் நடைபெற்ற போர் மற்றும் பேரழிவுகள் தொடர்பாக வெளிவந்த ஆவணங்களில் முக்கியமானதென்றே கூறமுடியும். இயன்றவரை இந்தப் புத்தகத்தை வாசித்தலும், பிறருடன் பகிர்ந்து கொள்வதும் முக்கியமென்றே தோன்றுகின்றது. The Cage தவிர ஈழம், இலங்கையின் இனப் பிரச்சனைகள் பற்றிய முக்கியமான ஆவணங்கள், புத்தகங்கள், கட்டுரைகள், அறிக்கைகள் போன்றவற்றை தொடர்ச்சியாக வாசிப்பதுவும் நிச்சயமாக தெளிவை ஏற்படுத்தும். மகாவம்சம் (http://noolaham.net/project/47/4622/4622.pdf) இலங்கை யாப்பு (http://www.priu.gov.lk/Cons/1978Constitution/CONTENTS.html) போன்றவற்றை வாசிப்பது கூட முக்கியம்.
முறிந்த பனை இன்னுமொரு முக்கிய ஆவணம் (http://noolaham.net/project/11/1001/1001.pdf). தொடர்ச்சியாக முறிந்த பனை புலி எதிர்ப்பு நூல் என்றே பார்க்கப்பட்டிருக்கின்றது. முறிந்த பனையை மீள வாசிக்கின்றபோது அதில் புலிகளின் அரசியல் குறைபாடுகள் பற்றிய கறாரான விமர்சனத்துடன் பிற போராட்ட இயக்கங்கள் மீதான கடுமையான விமர்சனங்களையும் அவதானிக்கமுடியும். இந்தக் கட்டுரையை The Cage பற்றிய முழுமையான விமர்சனமாக நான் எழுதவில்லை. அதே நேரம் இந்தக் கட்டுரை ஊடாக பிறரை என்னால் இயன்றவரை The Cage இனை வாசிக்கவைத்துவிடவேண்டும் என்றே தலைப்பட்டேன். அண்மைக்காலமாக ஈழம் தொடர்பான வாசிப்பே பிரதானமாக இருந்துவருகின்றபோது, என் அண்மைக்கால வாசிப்பு, கடந்த கால அனுபவங்கள், முடிவுகள், The Cage போன்றவை எல்லாம் செய்த ஊடாடட்டத்தின் விளைவே இந்தக் கட்டுரை. இதில் உடன்படவும் முரண்படவும் வேண்டிய புள்ளிகள் எல்லாருக்கும் இருக்கும். அவை பற்றித் தொடர்ந்து பேசவும், எழுதவும் என்றும் விரும்புகிறேன்.
சேரனுக்கு ……
கீற்று இணைய இதழிலும். ஆவணி, புரட்டாசி மாத தாய் வீத இதழிலும் பிரசுரமானது.
* இந்தக் கட்டுரை கீற்றில் வெளிவந்த போது அநாகரிக தர்மபால என்றே குறிப்பிட்டிருந்தேன்.  அவ்வாறே பல இடங்களிலும் பாவிக்கப்பட்டும் வருகின்றது.  இந்தக் கட்டுரையை பிறத்தியாள் தளத்தில் பகிரப்பட்டபோது பானுபாரதி அவர்கள் அவரது பெயர் அநகாரிக தர்மபால, அநாகரிக தர்மபால என்று சுட்டிக்காட்டி இருந்தார்.  அந்தத் தவறு இங்கே திருத்தப்படுகின்றது.