தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் : விமர்சன உரை

parthaneeyamதமிழ்நதியின் பார்த்தீனியம் நூல்பற்றிய விமர்சன உரையை ஆற்றுமாறு நான் இங்கே கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றேன்.  கொடுக்கப்பட்ட கால இடைவெளிக்குள் சொல்லவேண்டிய விடயங்களைச் சொல்லிமுடிப்பது என்பது சவாலானது.  எனக்குத் தரப்பட்டிருக்கின்ற கால இடைவேளைக்குள் இந்நாவல் பற்றி ஆவணப்படுத்தல், வராலாற்றெழுதியல் என்பவற்றில் அக்கறைகொண்டிருப்பவன் என்கிற பின்னணியுடன் கூடிய எனது விமர்சனத்தை இங்கே பகிர இருக்கின்றேன்.  அந்த அளவில் இந்த “விமர்சனமானது” முழுமையான விமர்சனமாக அமையாமல் இருக்கக்கூடும் என்பதை முற்குறிப்பாக கூறிக்கொள்ளுகின்றேன். Continue reading “தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் : விமர்சன உரை”

“ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம்.

கட்டுரையை வாசிக்கும் முன்னரான சிறு குறிப்பு: 
ராஜீவ் காந்தி படுகொலை பற்றி முன்பொருமுறை திருச்சி வேலுசாமியின் புத்தகத்தை வாசித்த கையோடு எழுதியது இக்கட்டுரை.  இவ்வழக்கு விசாரணையில் இருக்கின்ற மிக மிக வெளிப்படையான சில அபத்தங்களைச் சுட்டிக்காட்ட இக்கட்டுரையை இப்போது மீளப் பகிர்கின்றேன்.
இந்தக் கொலையை யார் செய்தார்கள் / செய்யவில்லை என்பதைவிட இவ்வழக்கு விசாரணையின் அபத்தங்களும், வேண்ட்மென்றே சில விடயங்கள் கடந்து செல்லப்பட்டதன் பின்னால் இருக்கக்கூடிய சதிவலையும் கவனிக்கப்படவேண்டும் என்பதும் மரண தண்டனை ஒழிப்பு மீதான அக்கறையுமே இப்போது என்னிடம் மேலோங்கி நிற்கின்றது
என்றென்றும் அன்புடன்
அருண்மொழிவர்மன்
அவிழ்க்கப்படாத மர்மங்களுடன் இருக்கின்ற அரசியற் படுகொலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.  அந்த வகையில் ராஜீவ் காந்தி படுகொலையும் ஒன்று.  அதுவும் ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு இனத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதியதில் பெரும்பங்கு வகித்தது என்பதை நாம் கடந்த காலங்களில் கண்கூடாகவே கண்டிருக்கின்றோம்.
1991ம் ஆண்டு மே 21ம் திகதி இரவு கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் விசாரணைகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதுடன், 5 ஆண்டுகாலம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி மாற்றப்பட்டு புதிதாகப் பொறுப்பேற்ற நீதிபதி சில மாதங்களிலேயே ஐந்தாண்டுகால விசாரணை பற்றிய ஆவணங்களையெல்லாம் படித்தறிந்து 26 பேருக்குத் தூக்குதண்டனையும் வழங்கினார்.  இந்தக் கொலையில் எந்த விதமான சட்ட நுணுக்கங்களும், துப்புத் துலக்கவேண்டிய தேவைகளும் இல்லாமல் இந்த விசாரணை நடத்தபட்ட முறையிலும், அதில் சாட்சியங்களைச் சேர்த்தது, குறிப்பிட்ட சிலரை விசாரணை செய்யாமல் தவிர்த்தது போன்ற மிகச் சாதாரணமாக வெளித்தெரிகின்ற ஓட்டைகளை முன்வைத்து திருச்சி வேலுசாமி ஜெயின் கமிஷன் முனிலையில் தனது மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.  தனது மனுவில் சுப்ரமணிய சாமியையும், சந்திரசுவாமியையும் குற்றம் சாற்றி இருந்த வேலுச்சாமி அதற்கான மிக எளிதான ( கணித பாடத்தில் வெளிப்படை உண்மை என்று படிப்போமே அதை விட வெளிப்படையான உண்மைகள் இவை) காரணங்களையும் பட்டியல் போட்டிருந்தார்,  ஆனால் துரதிஸ்ட வசமாக சுவாமியும் சாமியும் சரியான முறையில் விசாரிக்கப்படாததுடன் வழக்கு தனக்கேயுரிய எல்லாவிதமான ஓட்டைகளுடன் அப்படியே மூடிக்கட்டப்பட்டது.
இது பற்றி குமுதம் இணையத்தில் பேட்டி ஒன்றினைக் கொடுத்திருந்த திருச்சி வேலுச்சாமி, பின்னர் அந்தப் பேட்டியையே “ராஜீவ் காந்தி படுகொலை வெளிவராத மர்மங்கள்” என்ற பெயரில் ஒர் சிறு புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.  நாம் வாழ்ந்த காலத்திலேயே நடந்து, நம் இனத்தின் தலைவிதியையும் பாதித்த இந்தக் கொலைவழக்கு கொண்டு செல்லப்பட்ட விதம் பற்றிய மர்மங்களை நிச்சயம் எல்லாரும் படிப்பதும் தொடர்ந்து கேள்வி எழுப்புவதும் முக்கியமானதாகும்.  இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்று பேசுவதற்கு முன்னர் இந்தக் கொலைக்குப் பின்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சதிவலையையும், சதிவலையில் இன்னும் நிறையப் பேர் பங்குபற்றி உள்ளனர் என்றும் ஆராயவேண்டியது முக்கியமானது என்று நினைக்கின்றேன்.  மாறாக கொலை நடந்து காவல்துறை ஆரம்பகட்ட விசாரணையையே ஆரம்பிக்க முன்னரே எல்லா உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களும் சுப்பிரமணியசுவாமியையே மேற்கோள்காட்டி இந்தக் கொலையை புலிகள் செய்தனர் என்ற செய்தியை வெளியிட்டனர் என்பதில் தொடங்கி ஆரம்பிக்கின்றது இந்த கொலை தொடர்பான மர்மமுடிச்சுகள்.
திருச்சி வேலுச்சாமி எழுப்புகின்ற எளிய கேள்விகள் சில
  1. ராஜீவ்காந்தி படுகொலையை விசாரித்த ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கையில் கடைசியாக “இந்தக் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்த கமிஷன் கருதுகின்றது.  ஆகவே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும்”  என்று சொன்ன ஜெயின் கமிஷன் அதற்கு காரணமாக திருச்சி வேலுச்சாமி கொடுத்த வாக்குமூலத்தையும் குறிப்பிட்டிருந்தது.  அந்த வாக்கு மூலத்தில் திருச்சி வேலுச்சாமி சுப்ரமணிய சுவாமியையும் சந்திரசாமியையுமே குற்றஞ்சாற்றி இருந்தார். (பக்கம் 13)
  2. மே 21ம் திகதி இரவு 10 15 மணிக்கு ராஜீவ் கொலைசெய்யப்பட்டு பின்னர் அது தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மறுநாள் காலை 9 மணிக்குத்தான் ஆரம்பமாகின.  ஆனால் இரவு 11 மணிக்கு முன்னரே சுப்ரமணிய சுவாமி ஊடகங்களுக்கு ராஜீவ் காந்தி படுகொலையை விடுதலைப்புலிகளே நிகழ்த்தியதாக சொல்லி இருக்கின்றார் (பக்கம் 14)
  3. கொலை நடந்த இடத்தில் இருந்த ஜெயந்தி நடராஜனும் மூப்பனாருமே கூட கொலை நடந்து 30 நிமிடங்களின் பின்னரே ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டதை உறுதி செய்திருக்கின்றனர்.  ஆனால் 10;20க்கே அதாவது 5 நிமிட நேரத்தில் வேலுச்சாமி சுப்ரமணியசுவாமியுடன் மறு நாள் நடைபெற உள்ள கூட்டம் பற்றி பேசிய போது ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்று சுப்ரமணிய சுவாமி கூறுகிறார்.  (இது நேர்காணல் ஒளிவடிவத்தில் உள்ளது)
  4. மே 22ம் திகதி சுப்ரமணிய சுவாமி மதுரையில் பேச இருந்த கூட்டம் ராஜீவ் கொலை காரணமாக ரத்துச் செய்யப்படுகின்றது.  ஆனால் ராஜீவ் கொலை ஆகும் முன்னரே அதற்கான விமான டிக்கட்டை சுப்ரமண்ய சுவாமி ஏன் உறுதி செய்யவில்லை / ஏன் ரத்துச் செய்தார்.
  5. ராஜீவ் இறந்த போது அவருக்கு மிக அருகில் இருந்து உயிர் தப்பிய அனுசுயா என்கிற காவல்துறை அதிகாரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் தா. பாண்டியன் போன்றோரிடம் சரியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.  
இது போன்ற மிக எளிய கேள்விகளின் மூலம் ராஜீவ் காந்தி கொலையிலும் வழக்கு விசாரணையிலும் அனேக மர்மங்கள் இருக்கின்றன என்கிற நியாயமான கேள்விகளை முன்வைக்கின்றார் திருச்சி வேலுச்சாமி.  இது தொடர்பான வீடியோ இணைப்புகளையும் கீழே தருகின்றேன்
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
புத்தக வெளியீடு
அன்னைத் தமிழ் படைப்பகம்

தொலைபேசி இலக்கம் 0431-2766939

நாம் தமிழர் கட்சி ஆவணம் தொடர்பாக சில கருத்துக்கள்

 

##நாம் தமிழர் ஆவணத்தை ஒருவாறாக இன்று வாசிக்கக் கிட்டியது.  ஆவணத்தில் திராவிடர்கள் யாரென்பது தொடர்பாகக் கூறப்பட்டிருக்கின்ற கருத்துக்களிலும், தமிழ்நாட்டில் நிலவுகின்ற முகாமையான முரண்பாடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ள 10 முரண்பாடுகளில் முகமதியர்கள், கிறீஸ்தவர்கள் தொடர்பாக எச்சரிக்கையோடும், விழிப்போடும், அன்போடும் கையாளப்படவேண்டிய தரப்பினர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலும் உடன்பாடு இல்லை.  முகமதியர்கள், கிறீஸ்தவர்கள் தொடர்பான இந்தப் பார்வை முழுக்கத் தவறானதும் கூட.  (இந்த முரண்பாட்டுப் பட்டியலில் எனக்கு உடன்பாடில்லாத வேறு முரண்பாடுகளுன் இருந்தாலும், முக்கியத்துவம் கருதி இங்கே இதனைச் சுட்டிக்காட்டுகின்றேன்.)

 

##அது போல சில இடங்களில் திராவிடத் தேசியம் எதிர் தமிழ்த் தேசியம் என்று குறிப்பிடப்படுகின்றது.  திராவிடத்தினை தேசியம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடாத பெரியாரின் தெளிவு இன்னமும் இவர்களுக்கு வரவில்லை என்பது ஏமாற்றமே..

 

##நாம் தமிழர் கட்சியினர் சொல்வதுபோல ஆவணத்தில் எந்த இடத்திலும் நேரடியாக பெரியார் மீதான குற்றச்சாற்றுகளை முன்வைக்கவில்லை என்றபோதும் “திராவிடம் சொன்னது”. ” திராவிடம் சொன்னது” என்று அவர்கள் பட்டியலிடும் குற்றச்சாற்றுகள் பல பெரியாரையே குறிவைக்கின்றன என்பதை இலகுவில் புரிந்துகொள்ளமுடிகின்றது.  ஆனால் ஆவணத்தில் குறிப்புடப்பட்டுள்ளது போன்று சிங்களத்தை திராவிட இனம் என்று எப்போது சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.  எனது நினைவில் அவ்வாறு கூறப்பட்டதாகத் தெரியவில்லை.  இதனைத் தெளிவுபடுத்தவேண்டியது நாம் தமிழர் கட்சியினர் அல்லது ஆதரவாளார்களின் பொறுப்பு.

 

## பக்கம் 42ல் தமிழ்த்தேசிய வழிகாட்டிகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளவர்களின் பெயர்களில் இராச இராச சோழன், இராசேந்திர சோழன், பாரதிதாசன் போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  இராச இராச சோழன், இராசேந்திர சோழன் பற்றி no comments.  அடுத்து ஆவணத்திலும், நாம் தமிழர் கட்சியினர் இணையத்திலும் முன்வைக்கின்ற பாரதிதாசனின் வைத்திருந்த சுய சாதிப்பற்றுப் பற்றி நாம் தமிழர் கட்சியினர் எந்த விமர்சனமும் இல்லாமல் இருக்கின்றனரோ என்றே தோன்றுகின்றது.

 

##அடுத்து திராவிடர் என்கிற பெரியாரின் கருத்துக்களுக்கும், பின்னாட்களில் திராவிடக் கட்சிகள் என்ற பெயரில் தமிழகத்தில் உருவாக அரசியல் கட்சிகளிற்கும் இருக்கின்ற பாரிய வித்தியாசத்தப் புரிந்துகொள்ளவேண்டும்.

 

##அடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது பெயரினை பெரும்பாகரன் என்று தூயதமிழ்ப்படுத்தி இருக்கின்றார்கள்.  இது போன்ற கோமாளித்தனங்களை உடனே நிறுத்தவேண்டும். (இவர்களின் தமிழ்ப்படுத்தலுக்கு இன்னமும் சில உதாரணங்கள் இராச ராசன்  à அரசர்க்கரசன், இராசீவ் காந்தி à அரசீவ் காந்தி

 

 

ஒரு கட்சியின் முதன்மை ஆவணம் இத்தனை தவறுகளுடனும், தவிர்த்திருக்கவேண்டிய கருத்துக்களுடனும் வெளியாகி இருப்பது மிகுந்த ஏமாற்றத்தையளிக்கின்றது என்றே சொல்லவேண்டும்.  இந்த ஆவண ஆக்கக் குழுவில் இருந்தவர்கள் தம்மைநோக்கி முன்வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாற்றுகளைக் கவனித்து, ஆராய்ந்து தேவையான திருத்தங்களை உடனடியாகச் செய்யவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் முன்வரவேண்டும் என்பதே என் அவா.  மேலும், பெரியார் தொடர்பாக தொடர்ச்சியாகக் குற்றச்சாற்றுகளை முன்வைக்கின்றபோது பெரியாரை ஒருமுறை முழுமையாகப் படித்துவிடுவது நலம்.  அண்மையில் கீற்று இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் தொ.பரமசிவன் கூறிய “பெரியாரை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால் பெரியாரின் வெற்றி புலப்படும்” என்ற கருத்து அத்தனை இலகுவாகத் தாண்டிச் செல்லக்கூடியதல்ல.

 

ஆவணத்தை மீள ஒருமுறை வாசித்துவிட்டு விரிவாக எழுதும் எண்ணம் உண்டு

(நாம் தமிழர் கட்சி தொடர்பாக எனக்கு ஆரம்பம் முதலே விமர்சனங்கள் இருக்கின்றபோதும் சில புள்ளிகளில் உடன்பாடும் இருந்தே இருக்கின்றன.  இன்று நாம் தமிழர் ஆவணத்தில் சொல்லப்படுகின்ற கருத்துக்களை வைத்து அவர்களை திமுகக் காரர்களும், மாற்றுக் கருத்தாளர்களும் மிக உற்சாகமாக எதிர்ப்பதைக் காணமுடிகின்றது.  அந்த வகையில் பாராது நாம் தமிழர் மீது அக்கறை கொண்டவனாகவே எனது கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளுகின்றேன்.)

 

தொடர்புள்ள இன்னுமொரு முக்கிய பதிவு

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20024:2012-06-06-12-51-14&catid=1469:2012&Itemid=711

 

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : சில குறிப்புகளும் கருத்துக்களும்

ஒரு புத்தகம் அது உள்ளடக்கியிருக்கின்ற விடயங்களில் மாத்திரம் அல்லாமல் அது வெளிவரும், எழுதப்படும், வாசிக்கப்படும் காலங்களாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.  அந்த வகையில் ஈழப்போராட்டம் மிகப்பெரியதோர் இனப்படுகொலையுடன் ராணுவ ரீதியாக முடிவுக்கொண்டுவரப்பட்டிருக்கின்ற காலப்பகுதியில் வந்திருக்கின்ற கணேசன் என்கின்ற, ஈழப்போராட்ட வரலாற்றில் ஐயர் என்று அறியப்பட்டவர் எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்கிற நூலை முக்கியமானதாகவே நான் உணர்கின்றேன்.  மிகப் பெரியதோர் அழிவிற்குப் பின்னரும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தேவைகள் அப்படியே இருக்கையில், இன ரீதியிலான ஒடுக்கல் இன்னமும் அதிகரித்து வருவதாக அவதானிக்கப்படுகின்ற காலப்பகுதியில், தமிழ்த் தேசிய உணர்வு இன்னமும் கூர்மை அடைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்ற இந்நாட்காளில் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தையும் அது முன்னெடுக்கப்பட்ட விதத்தையும் ராணுவ, அரசியல் ரீதியிலான அணுகுமுறைகளை சுய பரிசோதனை செய்வதற்கும், மீள்பரிசீலனை செய்வதற்குமான தேவையும் அதிகரித்தே இருக்கின்றது.  மேற்குறித்த பார்வைகள் மற்றும் கூறுகள் தொடர்பான முழுமையான பிரக்ஞையுடன் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் என்கிற இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது பார்வையை இங்கே பதிவாக்குகின்றேன்.

 

இனியொரு இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளியாகி பின்னர் இனியொருவின் முதலாவது அச்சு வடிவ வெளியாடாகி இருக்கின்ற இந்நூல் தொடர்பான இந்நிகழ்வினை தேடகம் ஒருங்கமைத்திருக்கின்றது.  இனியொருவிற்கும், தேடகத்திற்கும் இந்த முயற்சிக்கு நன்றி சொல்லிக்கொள்ளுகின்ற அதேவேளை அவை இரண்டின் அரசியல் தொடர்பாக இருக்கின்ற விம்பத்தில் இருந்து விடுபட்டு இந்நூலில் சொல்லப்படுகின்ற காலப்பகுதியில் பிறந்தவன் என்கிற முறையில் எனது தலைமுறையின் பார்வையை இயன்றவரை இதில் பதிய முனைகின்றேன்.

 

இந்நூலில் 1972ல் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களைத் தொடங்கிய காலப்பகுதிகளில் இருந்து அதில் ஈடுபட்டு பின்னர் தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலும் ஆரம்பகால மத்திய குழு உறுப்பினர்களுல் ஒருவரான ஐயர் பின்னர் புலிகள் அமைப்பு இரண்டாக உடைந்தமை, பின்னர் புளொட் இயக்கத்தின் தோற்றம் வரையான காலப்பகுதிகளிலான தனது அனுபவங்களை பதிவாக்கியுள்ளார்.  இதில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால் இயன்றவரை தான் சார்ந்திருந்த அமைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற போது, அந்தத் தவறுகளில் இருந்து தன்னை விடுவித்து பிறர் மீது பழி சுமத்துவதைத் தவிர்த்து அந்நாட்களில் மேற்குறித்த முடிவுகள் எடுத்தபோது அதிலிருந்த தன்து வகிபாகத்தையும், தனது நிலைப்பாட்டையும் ஒத்துக்கொண்டே ஐயர் எழுதிச்செல்லுகின்றார்.  அதே நேரம், புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 25 வருடங்களின் பின்னர் அன்றைய புலிகள் இயக்கத்தின் தவறான நடவடிக்கைகளாக எவை அமைந்திருந்தன, அவற்றை எவ்வெவ்வாறு செய்திருக்கலாம் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஐயருக்கின்ற சலுகை புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இருந்தவர்களுக்கு அதன் தலைமை உட்பட இருந்திருக்காது என்றே சொல்ல விரும்புகின்றேன்.  இதனை சிந்தனைக்கும் அதனை நடைமுறையில் பிரயோகிப்பதற்கும் இடையில் இருக்கின்ற நடைமுறைப்பிரச்சனைகள் சார்ந்தே இங்கே குறிப்பிடுகின்றேன்  அதுவும் குறிப்பாக தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்குகின்ற ஒரு குழுவினர் எதிர்கொள்ளக் கூடிய புற அழுத்தங்களின் மத்தியில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களை நாம் கருத்தில்கொள்ளவேண்டும்.

 

குறிப்பாக இந்த நூலிலும், இன்னும் நிறைய இடங்களிலும் பிரபாகரனின் தூய ராணுவ நோக்கு தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டுகின்றது.  அதே நேரத்தில் வரலாற்றில் பிரபாகரனின் பாத்திரத்தை அணுக முற்படும்போது அன்றைய அரசியல் சமூக சூழல், அவர் எதற்காக போராட முன்வருகின்றார், தனது போராட்டத்தை அவர் ஆரம்பிக்கின்ற போது அதற்கான தேவை எப்படி இருந்து, என்ன தேவையாக இருந்தது என்று அவர் கருதினார், அவரைப் பாதித்த தலைமைகள் போன்ற காரணிகளையும் சேர்த்தே ஆராயவேண்டி இருக்கின்றது.  அதன் தேவை கருதி தனது ஆரம்ப கால நேர்காணல்களில் பிரபாகரன்  தெரிவித்த சில கருத்துக்களை அவதானிப்போம்,

1984 ல் சண்டே (இந்தியா) இதழில் வெளியான அனிதா பிரதாப்பிற்கு வெளியான நேர்காணலில்,

இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட  அனுபவங்களைச் சற்றுக் கூறுவீர்களா? கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா?

என்கிற கேள்விக்கு

“நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.  சிங்கள இன வெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட  நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன்.  எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த  ஒரு விதவைத் தாயை நான் ஒரு முறை சந்தித்த போது அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார்.  இனக்கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவில் இருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள்.  அவரது வீட்டிற்குத் தீ வைத்து அவருடைய கணவரையும் கொடூரமாகக் கொண்டார்கள்.  அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரி காயங்களுடன் தப்பினார்கள்.  அவரது உடம்பில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்த போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.  சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன்  வீசிக்கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன்.  அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள் என்று கேட்கும்போதெல்லாம் எம்மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டன.  இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள் இருந்து  எம்மக்களை மீட்கவேண்டும் என்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது.  நிராயுத பாணிகளான  அப்பாவித் தமிழர்களுக்கெதிராக  ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும்  இந்த அமைப்பினை  ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ளமுடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்” (மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – பக்கம் 254-255)

என்று பதிலளிக்கின்றார் பிரபாகரன்.  இதை ஒத்த கருத்துக்களையே இதே கருத்தையே பின்னர் 30/12/1985 ஃப்ரொன்ட்லைன் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும், பின்னர் 23/மார்ச்/1986 ல் வீக் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்மக்கள் மீது இலங்கை அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட ஆயுத மற்றும் அரசியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்வதற்கு தமிழர்களுக்கென ஒரு ராணுவம் தேவை என்பதே பிரபாகரன் உள்ளிட்ட பலரின் கருத்தாக அந்நாட்களில் இருந்தது.  இதனையே ஐயரும் குறிப்பிடுகின்றார்,

“பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே இன அடக்குமுறைக்கு எதிரான எமது கோபத்தை, பெருந்தேசிய வன்முறைக்கு எதிரான எமது  உணர்வுகளை, ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்க, தமிழர் விடுதலைக் கூட்டணி சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது என்பதே எமது நம்பிக்கை” (பக்கம் 62)

என்றும்

“பிரபாகரனது நோக்கமும் அதன் வழி எமது நோக்கமும் ஒரு பலமான இராணுவக் குழு ஒன்றைக் கட்டியமைத்துக் கொள்வதே.  தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலை நாம் போதுமானதாக எண்ணியிருந்தோம்” (பக்கம் 65)

என்றும் குறிப்பிடுகின்றார்.  தவிர இன்னோரிடத்தில்

“நான் இந்தியாவில் இருந்த வேளையில் எமது மத்திய குழுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்திற்கு வந்திருந்தனர்.  தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் அமைப்பு என்றும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பு என்றும் புலிகள் இவற்றிற்கான ராணுவ அமைப்பு என்றும் முடிவிற்கு வருகின்றனர்” (பக்கம் 56).

இந்தச் சம்பவம் கிட்டத்தட்ட 77ல் நடக்கின்றது.  எனவே புலிகள் ஆரம்பகாலத்தில் இருந்தே தம்மை ஒரு ராணுவக் குழுவினராகவே வளர்ந்து வந்தனர்.  ஏற்கனவே இருந்த தமிழர் விடுதலை கூட்டணியை தமக்கான அரசியலை முன்னெடுப்பவர்களாகவே அவர்கள் அன்று நம்பி இருந்தனர்.  அந்த அடிப்படையிலேயே தமிழ்ப் புதிய புலிகளின் முதலாவது அமைப்பு விதிகளும் தூய ராணுவ நோக்கிலேயே அமைந்திருந்தன.  தமிழர்களுக்கென வலிமையான ராணுவம் ஒன்றைக் கட்டியெழுப்புவதே முதன்மையான தேவை என்பதில் உறுதியாக இருந்த பிரபாகரன் அவ்வாறு கட்டியெழுப்பபப்படும் ராணுவம் ராணுவ ஒழுக்கத்துடனும் கட்டுப்பாடுனும் இருக்கவேண்டும் என்று கருதினார்.  1986ல் நியூஸ் வீக் இதழிற்காக தீபக் மஷூம்தாரிற்கு வழங்கிய நேர்கானலிலும் இந்தக் கருத்தையே பிரதிபலித்துள்ளார் பிரபாகரன்.  இந்தப் புத்தகத்தில் புலிகள் இயக்கத்திற்குள் பிரபாகரன் செலுத்திய ராணுவப் போக்குப் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றபோதும், அவற்றை மேற்குறித்த நிபந்தனைகளுடன் சேர்த்து ஆராய்வதே பொருத்தமானதாக இருக்கும்.

அது போல அன்றைய சூழலில் ஐயர் உள்ளிட்ட இளைஞர்கள் தமது அரசியல் பாதையைத் தீர்மாணிப்பதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளையும் பார்ப்போம்.  1970ல் லங்கா சம சமசமாஜக் கட்சியும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறீமாவோ தலைமையிலான சுதந்திரக்கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைந்திருந்த காலப்பகுதியில்  இனவாரியான தரப்படுத்தல், பௌத்த மதச்சார்பான அரச கொள்கை, சிங்களம் அரச கரும மொழி ஆக்கப்படல் போன்றவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.  இக்காலப்பகுதி பற்றி ஐயர் சொல்வதைப் பார்ப்போம்,

“இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம்.  எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துகளுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை காட்டவில்லை.  தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக் கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை” (பக்கம் 8)

 

இங்கே கருணாநிதி, தமிழரசுக்கட்சிகளை ஐயர் சுட்டிக்காட்டியிருப்பது இன்று நகைப்பிற்கு உரிய ஒன்றாகக் கருதப்படலாம் என்றாலும், அவர்களின் அன்றைய காலப்பகுதியிலான பங்களிப்புகளை அவர்களின் பின்னைய அரசியல்களைக் காரணங்காட்டி மறுத்துவிடமுடியாது.  ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலப்பகுதியில் அதன் எல்லாப் பலவீனங்களையும் தாண்டி எவ்வாறு தமிழரசுக்கட்சி போன்றவற்றின் செயற்பாடுகள் மிகுந்த ஆதரவாக இருந்தன என்று அண்மையில் “தமிழர்களின் நாடு கடந்த அரசியல்” என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் செழியனும் குறிப்பிட்டிருந்தார்.

 

தவிர இக்காலப்பகுதி இலங்கையைப் பொறுத்தவரை அரசாங்கம் தமிழர்கள் மீது இன ரீதியிலான ஒடுக்குதல்களை மீகத் தீவிரப்படுத்தியிருந்த, அதே நேரம் இடது சாரிக்கட்சிகள் இனப் பிரச்சனை பற்றிய கரிசனைகளை தமது நிகழ்சி நிரலில் இருந்து அகற்றியிருந்த காலம்.  இந்தச் சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த அன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற அரசியல் ரீதியான தலைமை அமையவில்லை என்றே கருதவேண்டும்.  புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை பிரபாகரன் அதன் ஆளுமை செலுத்தியவராக இருந்த போதும் அதன் தலைவர் என்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகின்ற போது அவர் உமா மகேஸ்வரனையே பிரேரிப்பதையும் இங்கே அவதானிக்கவேண்டும்.  பிரபாகரனைப் போலவே வலிமையான ராணுவம் ஒன்றைக் கட்டமைக்கவேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தபோதும் ஏற்கனவே இளைஞர் பேரவையின் செயலாளர் என்ற வகையில் அறியப்பட்டவராகவும், தம்மை விட அதிகம் தொடர்புகளைக் கொண்டிருந்தவரும் உமா மகேஸ்வரன் என்றும், ஏற்கனவே அரசியல் போராட்டங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார் என்றும் ஐயர் குறிப்பிடுவதையும் இங்கே சுட்டிக்காட்டுவது முக்கியமானதாகவே தோன்றுகின்றது.  ஏனெனில் உமா மகேஸ்வரனுக்குப் புலிகள் இயத்துடன் ஏற்பட்ட பிளவே பிரபாகரனை அதிகம் இறுக்கமானவராக்கியது என்று ஐயரும் (பக்கம் 211) குறிப்பிடுகின்றார்.  அது போல பின்னர் புலிகளில் ஜனநாயகத் தன்மை இல்லை என்பதைக் காரணம் காட்டிப் புலிகளில் இருந்து சுந்தரம் போன்றோர் பிரிந்து செல்கின்ற போது அவ்வாறான குற்றச்சாற்றுகள் இயக்கத்தை இரண்டாக உடைக்கும் நோக்குடையவை என்றே பிரபாகரன் மறுக்கின்றார்.  அதன் பின்னரும் சுந்தரம் தலைமையில் சிலர் பிரிந்துசெல்கின்ற போதும் உடனடியாகவே உமா மகேஸ்வரனும் சுந்தரம் போன்றோருடன் இணைந்து கொள்வதுடன் அந்நிகழ்வு பற்றி ஐயர் தொடர்ந்து,

“ஊர்மிளா தொடர்பான பிரச்சனையில் உமா மகேஸ்வரனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களில் சுந்தரமும் ஒருவர்.  அவ்வேளையில் இருந்தே உமா மகேஸ்வரனுடன் சுந்தரத்துக்குத் தொடர்பிருந்திருக்கலாம் என்று எம்மில் பலருக்கிருந்த சந்தேகம்  இப்போது உறுதியானது போலிருந்தது.

சுந்தரத்தின் அனுசரனையோடு சுழிபுரம் பகுதியிலேயே உமா மகேஸ்வரன் தங்கியிருந்ததாகவும் அவர்கள் (இங்கே அவர்கள் என்று ஐயர் குறிப்பிடுவது கண்ணன் மற்றும் சுந்தரத்தை – அருண்மொழிவர்மன்) எமக்குத் தெரிவிக்கின்றனர்” (பக்கம் 210).

இதைத் தொடர்ந்து நடைபெற்ற PLOTE மத்திய குழு விவாதங்களில் புலிகள் இயக்கத்தில் இருந்தது போலவே ராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்கவேண்டும் என்ற கருத்தை  உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றோர் முன்வைப்பதுடன் உமா மகேஸ்வரன், சுந்தரம் போன்றோரால் பணத் தேவைகளை நிவர்த்தி செய்ய கொள்ளைகளில் ஈடுபடவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.  தவிர PLOTE இயக்கத்திலும் உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றோர் அதிகம் செல்வாக்கு செலுத்தியதாகத் தாம் உணைர்ந்ததாகவும் ஐயர் இங்கே பதிவுசெய்கின்றார்.  அதாவது எந்தக் குற்றச்சாற்றுகளை முன்வைத்து புலிகள் இயக்கத்தை விட்டுப் பிரிந்து புளொட் இயக்கம் உருவாக்கப்படுகின்றதோ அதே செயற்திட்டங்களையும், அரசியலையுமே புளொட் இயக்கத்தினரும் தமது மிகத் தொடக்க கால மத்திய குழு விவாதங்களில் இருந்தே முன்னெடுத்தனர் என்பது தெளிவாகின்றது.  தவிர சுந்தரம் முதலானோர் மீதான் தனது சந்தேகம் சரியானதுதான் என்பதில் பிரபாகரன் உறுதியடைந்திருக்கவும் முடியும்.

இவற்றை நான் இங்கே பதிவுசெய்வது புலிகளை முழுக்க பழி நீக்கம் செய்யவேண்டும் என்கிற முனைப்போடு அல்ல.  புலிகள் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அவர்களுக்காக நியாயங்களைப் பரிசீலனை செய்வதில்லை என்பதே எனது வாதம்.  இந்தப் புத்தகத்தில் புலிகள் மக்கள் அமைப்புகளை உருவாக்கவில்லை என்பதுவும், அரசியல் ரீதியான போராட்டங்களில் ஈடுபடவில்லை என்பதுவும் இந்தப் புத்தகத்தில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கின்றது.  அதே நேரம் 83ல் இருந்த அதே புலிகளை அமைப்பாகவே 2008 வரை இருந்த புலிகள் அமைப்பைப் பார்ப்பது ஏற்புடையதல்ல.  90களிற்குப் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நிறைய அமைப்புகள் புலிகளால் உருவாக்கப்பட்டிருந்தன.  எத்தனையோ நூலகங்கள், படிப்பகங்கள், மாணவர் அறிவியல் கழகம் போன்ற அமைப்புகள், இது தவிர நிறைய வெளியீடுகள் என்று பல்வேறு தளங்களிலும் அதன் பின்னர் புலிகளின் செயற்பாடுகள் இருந்தன.  Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka  என்கிற Kristian Stokke எழுதிய ஆய்வறிக்கையினை இது பற்றிய முக்கியமான பதிவொன்றென்று  குறிப்பிடவிரும்புகின்றேன்.

 

இங்கே எனது கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ அல்லது புலிகளைப் பாவ நீக்கம் செய்வதோ அல்லது பழியை பிறர் மீது சுமத்திச் செல்வதோ அல்ல.  ஈழத்தில் மிக மோசமாக அடக்கப்பட்டிருக்கின்ற தமிழர்களின் தேசிய உரிமைப் பிரச்சனைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க, எமது கடந்த கால போராட்டங்களை சுய விமர்சனம் செய்யவும், மறு பரிசீலனை செய்யவும் வேண்டி இருக்கின்றது.  ஆனால் மறு பரிசீலனை என்பது எல்லாத் தவறுகளையும் ஒரு தரப்பில் சுமத்தி விடுவதல்ல.  இன்று பல்வேறு கட்டுரைகளிலும், விவாதங்களிலும் புலிகளை வெறும் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதையும், அடையாள அரசியல் என்ற பெயரால் நிராகரிப்பதையும், பாசிஸ்டுகள் என்று கடந்து போவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  முதலில் அரச பயங்கரவாதத்தையும் அரசுக்கு எதிராக பயங்கரவாதத்திற்குமான வேறு பாட்டை இவர்கள் உணர்ந்து இது போன்ற வாதங்களை முன்வைக்க வேண்டும்.  பாசிஸ்டுகள் என்று கூறும்போது எதனால் புலிகள் பாசிஸ்டுகள் என்று சொல்கிறோம் என்பதை முன்வைக்க வேண்டும்.  பாசிஸ்டுகள் என்ற வார்த்தையை பொதுவாக தம்மை அடையாளபடுத்துவதை விட தமக்கு எதிரானவர்களை களங்கம் கற்பிக்கவே பிரயோகிக்கின்றனர் என்கிற Samanth Power ன் கூற்றையே இங்கே குறிப்பிடவிரும்புகின்றேன்.  ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பொன்றினை பாசிஸ்டுகள் என்று குறிப்பிடுவதில் இருக்கின்ற அபத்தத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன்.

 

இங்கே என்னுடன் பேச அல்லது கட்டுரை வாசிக்க அழைக்கப்பட்டிருக்கும் மற்றையவர்கள் அனேகம் வெவ்வேறு இயக்கங்களில் பங்கேற்றவர்கள், 90களின் முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு வெளியேறியோர். அவர்களின் பார்வையிலிருந்து, 90 களின் பின்னர் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பின்னர் சில காரணம் ராணுவ ஆக்கிரமிப்பின் கீழும் வாழ்ந்த எனது பார்வை நிச்சயம் வேறுபட்டே இருக்கின்ற அதே வேளை, இந்தக் காலப்பகுதியில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் காவல்துறை, நீதி மன்றம், அரசியல் துறை, வைப்புழி என்று பல்வேறு நிர்வாக அலகுகளுடன் கூடிய நிகர் அரசாங்கமே நிகழ்ந்தது.  புத்தகம் உள்ளடக்கும் காலப்பகுதியைத் தாண்டி இவற்றை நான் சுட்டிக் காட்டக் காரணம், புலிகள் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தவில்லை, அரசியலில் அக்கறை காட்டவில்லை என்று இந்தப் புத்தகத்தில் சுட்டிக் காட்டப்படுகின்ற போதும் அதன் பின்னர் தமது பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புலிகள் செய்த திறமையான நிர்வாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை என்பதே.  அதே நேரத்தில் புலிகளில் அரசியல் பிரிவினரைவிட ராணுவப் பிரிவினரே அதிகம் செல்வாக்குச் செலுத்தியவர்களாக இருந்தார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.  அறிவுஜீவிகளுடன் புலிகள் இணைந்து செயற்பட விரும்பவில்லை, அவர்களின் கருத்துக்களை புலிகள் செவிமடுக்கவில்லை என்பதில் ஓரளவு உண்மை இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறிய அனேக அறிவு சீவிகள் புலிகள் மீதான தமது கசப்புணர்வினை தொடர்ந்து புலிகளை நிராகரிப்பதன் மூலமாகவே வெளிக்காட்டினர்.  மேற்கத்திய சட்டகங்களுக்குள் நின்று புலிகளை மதிப்பிடுவதும், அரச தரப்பு, புலிகள் தரப்பு வன்முறைகள் போன்றவற்றை ஒரே சட்டகத்தில் வைத்து மதிப்பிடுவதுமாகவே அவர்களின் செயற்பாடு அமைந்தது,  அது போலவே புலிகள் தரப்பினை கடுமையாக விமர்சிக்கின்ற இவர்கள் ஒரு போது புலிகள் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன், அரச தரப்பு தவறுகளில் சில சமயங்களில் கள்ள மௌனம் சாதித்ததுடன், பல சமயங்களில் அது எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனவே நாம் அது பற்றிக் கூறவேண்டியதில்லை என்றும் விலகிக் கொண்டனர்.  புலிகள் மீதான காழ்ப்புணர்வினால் ஒட்டு மொத்த போராட்டத்திற்கான நியாயங்களையும் நிராகரிப்பதும் எதிர்ப்பதும் முறையாகாது.

 

நான் அறிந்து இதுவரை ஈழப் போராட்டம் பற்றிய பதிவுகளாக புதியதோர் உலகம், முறிந்த பனை,  அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கை, புஷ்பராஜாவின் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் வானத்தைப் பிளந்த கதை, எல்லாளனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பு, ஐயரின் ஈழப் போராட்டத்தின் எனது பதிவுகள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.  இவற்றிற்கிடையே சில முரண்கள் இருந்தாலும் இவை அனைத்துமே ஈழப்போராட்டத்தில் அக்கறை கொண்டோர் வாசிக்கவேண்டிய புத்தகங்கள் என்றே சொல்வேன்.  இவர்களிலும் இவர்கள் சார்ந்து நின்ற இயக்கங்களிலும் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இவர்கள் எல்லாருமே களமிறங்கிப் போராடியவர்கள்.  எனவே இவர்களின் அனுபவங்களும் இவர்கள் கூறும் வரலாறுகளும் முக்கியமானவை.

 

அதே நேரம், ஐயர் தொடர்ந்து PLOTE மற்றும் NLFT தொடர்பான தனது அனுபவங்களையும் பதிவாக்கவேண்டும் என்பதையும் ஒரு வேண்டுதலாக முன்வைக்கின்றேன்.  இன்றைய சூழலில் ஈழம் மற்றும் தமிழ்த் தேசியம் தொடர்பான வாசிப்புகளிலும் விவாதங்களிலும் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதுகின்றேன்.

 

உதவிய புத்தகங்கள்

  1. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்: கணேசன், இனியொரு வெளியீடு
  2. மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – தோழமை பதிப்பகம்
  3. Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka –

குறிப்பு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் புத்தகத்தில் 1970 தேர்தல் பற்றிக் குறிப்பிடும்போது நவ சமாஜக் கட்சி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.  ஆனால் உண்மையில் அன்று கூட்டணி வைத்திருந்தது லங்கா சமசமாஜக் கட்சி.

 

ரொரன்றோவில் பெப்ரவரி 25, 2012ல் நடைபெற்ற ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள் என்கிற ஐயர் (கணேசன்) எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் வாசித்த கட்டுரை

 

புத்திசீவிகளின் அறிக்கை தொடர்பாக சில சந்தேகங்கள்………

1.  அடித்தவர் sorry சொன்னால்தான் அடிவாங்கியவரின் வலி குறையும் என்று தமிழர் – முஸ்லீம்கள் பிரச்சனைகளில் சொல்லுபவர்கள்தான் சிங்கள அரசுடன் நல்லிணக்கம் செய்யுமாறு தமிழர்களைக் கூறுகின்றனர், எனது கேள்வி இங்கே அடித்தவர்கள் சிங்களவரா அல்லது தமிழரா………..

2.  இங்கே முஸ்லீம்களின் வெளியேற்றம் பற்றிப் பேசுபவர்கள் அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி ஏன் வாய் திறப்பதேயில்லை.  தமிழர்கள் – முஸ்லீம்களிடையான அடிப்படைப் பிணக்கள் தொடர்பான குறைந்த பட்ச இணக்கப்பாடுகள் அல்லது அதற்கான ஒப்பந்தங்களேனும் இல்லாமல் இந்த ஒப்பந்தம் சாத்தியமாகி இருக்குமா…. (இது போலவே தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் மலையக மக்கள் சார்பிலுமான ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டிருக்கின்றன)

3. போர் முடிந்த பின்னர் இலங்கை சென்ற அறிவுசீவிகள் குழுவினர் தமிழர்கள் இனிமேலேனும் அறிவு பூர்வமாக சிந்திக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.  கனடாவில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் நிர்மலா தொடர்ச்சியாக” மொக்குப் புலிப் பெட்டைகள்” என்ற பிரயோகத்தைப் பாவித்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  அண்மையில் நடைபெற்ற கேள்விநேரத்திலும் “போய் க்ராம்சியை வாசியும் பிறகு theory கொஞ்சம் தெரியும்” என்று நிர்மலா சொல்வதிலும் தெரிவது இந்த அறிவு மேட்டிமை வாதப் போக்கே.  அதாவது தம்மைத் தவிர எல்லாரும் முட்டாள்கள் என்கிற போக்கு, இதே போக்குத்தான் இங்கேயும் வெளிப்பட்டிருக்கின்றது.

4.  இப்படிச் சொல்லுகிற நிர்மலாவின் இன்னும் அரிய சில கருத்துக்களை அவர் பின்வரும் இணைப்பிலும் தெரிவித்திருக்கின்றார்

http://amvarmanshares.wordpress.com/2011/12/06/394/

5. இது தொடர்பான முகநூல்விவாதம் ஒன்றில் @ஆதிஆதித்யன் தெரிவித்திருந்த சில கருத்துக்களில் உடன்பாடில்லாவிட்டாலும் அவர் கேட்கின்ற “அதாவது விடுதலைப்புலிகளால் முஸ்லிம் மக்களின் ஒரு தொகுதியினர் பாதிக்கப்ட்டனர் என்று சொல்லி இது வரையில் தொடர்ந்து தமிழ் மக்கள்தான் குரல் கொடுத்து வருகின்றனர் ஆனால் முஸ்லிம் தீலிரவாத குழுக்களால் கிழக்கு மாகாணத்தில் கண்டம் துண்டமாக வெட்டியும் உயிருடன் கொழுத்தியும் படுகொலை செய்யப்ட்ட தமிழ் மக்களுக்காக எந்த முஸ்லிம் சகோதரர்களும் வலுவாக குரல் கொடுக்கவில்லையே ஏன் ” என்ற கேள்வி முக்கியமானதாகவே படுகின்றது.  தமிழர் தரப்பு விடும் தவறுகளுக்கு “மண்ணாங்கட்டித் தமிழ்த் தேசியம்” தான் காரணம் என்றால் முஸ்லீம்களைத் தடுக்கின்ற காரணிகள் எவை??

6. அடுத்து மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பாக தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும், பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் கைப்பற்றியிருக்கின்ற தமிழ் மக்களின் நிலங்கள் பற்றியும் இந்த அறிக்கையில் ஏன் எதுவும் சொல்லப்படவில்லை என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்கமுடியவில்லை…

மெற்படி அறிக்கை வருமாறு

71 “புத்திசீவிகள்” கையெழுத்திட்ட அறிக்கை:

தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவுற்ற பின்னணியில், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனக் குழுக்களும் தமது கடந்த காலத்தை மீள்பார்வை செய்வதும், மீள்மதிப்பீடு செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விடயங்களாக விளங்குகின்றன. எமது கடந்த கால செயற்பாடுகளின் மீதான ஒரு விமர்சன ரீதியான சுய பார்வையின் மூலமாகவே அரசின் முன்னும் சிவில் சமூகத்தின் முன்னும் இன்று தீர்வை வேண்டி நிற்கும் பிரதானமான விடயங்கள் பற்றி எதிர்காலத்தில் கருத்தாழம் மிக்க வழிமுறைகளில் நாம் சிந்திக்க முடியும்.
யுத்தம் தீர்க்கமாகமுடிவுற்ற போதிலும், இனப்பிரச்சினைக்கான முடிவு இன்னமும் தென்படவில்லை. இனப்பிரச்சினையானது குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வேண்டி நிற்கிறது. பெரும்பான்மைவாத அரசிடமிருந்து ஒரு நீடித்திருக்கக் கூடிய தீர்வைப் பெறுவதற்கான தேடுகையில் தமிழ்ச் சமூகம் இன்று பிரதானமாகக் கரிசனை கொண்டுள்ளது. இராணுவ மயமாக்கத்தினாற் தொடரும் பாதுகாப்பற்ற நிலைமை ஓர் உடனடிக் கவனமாக அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டமும், வன்முறை நிறைந்த அரசியற் கலாசாரமும் சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் சிதைவுக்குட்படுத்தியுள்ளன. மீள்குடியமர்வு, மீள்நிர்மாணம் போன்ற விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. காணிப் பகிர்வு, அரச மற்றும் சமூக வலையமைப்புக்களினைத் தொடர்புகொள்ளுதல், மொழி சமத்துவம், அதிகாரப் பகிர்வு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பால், வர்க்க, மற்றும் சாதி அடிப்படையிலான அடுக்கமைவுகளின் தொடரும் இருப்பு போன்றன இன்றைய அரசியல் நிலவுருவின் பகுதிகளாக விளங்குகின்றன.
இந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பான விடயத்தை நாம் இங்கு எழுப்புகின்றோம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் யுத்த நடவடிக்கைகளும், ஆயுதப் போராட்டமும் வலுப்பெற்று வந்த சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஏறத்தாழ் 80, 000 முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினார்கள். அன்றைய காலத்தில் ஆயுத ரீதியாகப் பலம் மிக்க அமைப்பாக, வட பகுதியின் பெருமளவிலான நிலப்பரப்பை தன்வசம் வைத்திருந்த விடுதலைப் புலிகள் ஒரு சமூகம் முழுவதையுமே இரண்டு தினங்களுக்குள் வட மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்களுக்கு 2 மணி நேர அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டது. இந்த வெளியேற்றத்தின் பின்பு, வெளியேற்றப்பட்ட சமூகங்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீளவும் திரும்பிச் செல்வதற்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புக்களாலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கைக் காலப்பகுதியில், உடனடி மனிதாபிமான மற்றும் மீள்கட்டுமாணத் தேவைகளுக்கான செயலகம், இலங்கை அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக, முஸ்லிம் மக்களின் மீள்திரும்புதலுக்கு வழிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது.
இன்றைய அரசியல் சூழலில், வட புலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், அவர்களின் மீள்திரும்புகையும், மீள்குடியமர்வும் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான தெளிவான ஒரு சவாலாக உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வடக்கில் உள்ள தமது தாயகங்களுக்கு படிப்படியாகத் திரும்பத்தொடங்கியிருந்த போதிலும், அவர்கள் மீளத்திரும்புவதற்கு உகந்த சூழல் அமைந்திருந்திருக்கவில்லை. மீளத்திரும்பியவர்கள் அரசிடமிருந்து குறைந்தபட்ச உதவிகளைக்கூடப் பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் நிருவாக மையங்களின் விரோதப் போக்குகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் பண்பாடு மற்றும் நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமற் போனமை அவர்களின் மீள்வருகையினை வட பகுதியில் உள்ள சமூகங்கள் குறைந்த அளவிலேயே ஏற்றுக்கொள்கின்ற தன்மையினை ஏற்படுத்தியிருப்பதுடன், திரும்பி வரும் மக்களுக்கு இடராகவும் அமைகின்றது.
போரின் போதும், போரின் பின்னரும் தமிழ் சமூகம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதே போன்ற இடர்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட வட பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலையினை நாம் நினைவில் நிறுத்துவது அவசியமானது. தமிழ் சமூகம் அனுபவித்த வேதனைகளையும், இன்னல்களையும் காரணங்காட்டி முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விடயத்தை ஓரங்கட்ட முடியாது. வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்களின் முன் எமது இருப்புக்காக எந்த அளவுக்கு நாம் போராடுகிறோமோ அதே அளவுக்கு நாம் எமது செயல்களின், எமது உறுதிக்கூற்றுக்களின், எமது மௌனங்களின் அரசியலினை மீளாய்வுக்குட்படுத்துவது அவசியமாகும்.
முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை கடந்த முப்பதாண்டு காலத் தமிழ்த்தேசிய அரசியற் பிரசாரத்தின் குறுகிய நோக்குடைய, பிற சமூகங்களினை ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய உந்துகையின் மிகவும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். எங்களுடைய சிவில் மற்றும் அரசியற் தலைமைகள் இதனை விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தவறியமை, கடந்த காலத்தினையும், எம்மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தொடர்பாக எமக்கு உள்ள தார்மீக மற்றும் அரசியற் பொறுப்புக்களையும் நாம் நியாயபூர்வமான முறையில் அணுகுவதிலிருந்து எம்மை தடுத்துவிட்டது. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இடையிலான உறவுகள் துருவப்பட்டுப்போவதற்கு நாம் எவ்வாறு காரணங்களாக இருந்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு சுயவிசாரணை முப்பது ஆண்டு காலப் போரின் முடிவின் பின்னரும் கூடஎம்மத்தியில் உருவாகவில்லை. அரசியல் அதிகாரப் பகிர்வு, சமவுரிமை என்பன அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் உரித்தான விடயங்கள் என்பதனையும், தமிழ் சமூகத்துக்கு மாத்திரமே உரித்தான ஏனையோரைக் கருத்திற் கொள்ளாத ஒரு அரசியற் தீர்வு இல்லை என்பதனையும் நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீடித்திருக்கக்கூடிய ஓர் அரசியற் தீர்வினை அடைவதற்கு இனங்களுக்கு இடையில்– குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே– நல்லிணக்கமும், உரையாடலும் அவசியமான செயற்பாடுகளாகும். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான பிரசைகளின் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மீட்சிக்கான தேடுகை: வடக்கு முஸ்லிம்களின் கதை” என்ற ஆவணம், முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை தொடர்பாக தமிழ் சமூகத்தின் மௌனம் பற்றி கண்டனம் மிக்க வெளிப்படுத்தல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் பற்றிய ஓர் உண்மையான செயற்பாட்டினை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் நாம் இந்த மௌனத்தைக் கலைக்க வேண்டும்.
எங்களது இருப்புக்காக நாம் புதிய செயற்பாட்டியற் பாதைகளை உருவாக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலப்பகுதியில், ஏனைய சமூகங்களுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களிலிருந்து உதயமாகும் பதில்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நாம் நீதியானதும், ஜனநாயக பூர்வமானதுமான ஒரு அரசியற் தீர்வைத் தேடுகையில் இது மிகவும் பிரதானமானது. இதற்கான ஒரு படியாக முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமான எதிர்ப்பு வெளியிடப்படல் வேண்டும். இந்தப் பலவந்தவெளியேற்றம் போன்ற ஒரு வெறுக்கத்தக்க செயல் எம்மத்தியில் இனிவருங் காலங்களில் ஒரு போதும் நிகழமாட்டாது என நாம் முழுமனதுடன் கூறவேண்டும். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நாம் ஒரு போதும் குற்றம் எனக்கருதாது இருக்கமாட்டோம் எனக் கூறவேண்டும். இந்த சம்பவத்தையும், அதன் தொடர்ச்சியையும் மீள்நோக்க வேண்டிய அதேவேளை, உரையாடல்களை ஏற்படுத்தவும், வடக்கில் முஸ்லிம் மக்களின் இலகுவான மீள்திரும்புகைக்கும், மீள்குடியமர்வுக்கும் உதவும் வகையில் பல்லின சமூகங்களை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துதல் அவசியமானது.
ஏனைய சமூகங்களின் இடர்களையும், நலன்களையும் கருத்திற் கொள்ளாது, தமிழ் சமூகம் தன்னிச்சையாகவும், மற்றைய சமூகங்களிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கியும் தொடர்ந்து செயற்பட முடியாது. எந்தவொரு சமூகத்தினையும் பாதிக்கும் அநீதிகள், ஒடுக்குமுறைகள், வேற்றுமைப்படுத்தல்களினை நாம் அக்கறையுடன் அணுக வேண்டும். எல்லா மட்டங்களிலும் சமூகத்தின் பன்முகத்தன்மையினை எம்மத்தியில் ஊக்குவிப்பதற்கும், ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்பவற்றின் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற ஓர் அரசியலினைப் பற்றிக் கொள்ளவும் நாம் எதுவித தயக்கமும் இன்றி உறுதி பூணுவோம்.

Signatories:

1. Mr. P. Ahilan 2. Dr. Darshan Ambalavanar 3. Ms. Jovita Arulanantham 4. Ms. Kundhavi Balachandran 5. Mr. Sivakolunthu Buvanakumar 6. Dr.GodwinConstantine 7. Dr.KumarDavid 8. Mr. R. Devarajan 9. Ms. Cayathri Divakalala 10. Dr. S. Ganesan 11. Mr. Shaseevan Ganeshananthan 12. Mr. P.B. Gowthaman 13. Dr. Rajan Hoole 14. Ms. Sithiravel Ithaiyarani 15. Mr. T. Antony Jeganathan 16. Ms. Vasuki Jayasankar 17. Dr. T. Jayasingam 18. Mr. D.B.S.Jeyaraj 19. Mr. Theliwattai Joseph 20. Mr. Ahilan Kadirgamar 21. Mr. Silan Kadirgamar 22. Ms. Niyanthini Kadirgamar 23. Ms. Sarvam Kailasapathy 24. Ms. Dushiyanthini Kanagasabapathipillai 25. Dr. S.V. Kasynathan 26. Mr. Thirukovil Kaviyuvan 27. Mr. Sathy Kulasingam 28. Mr. Prithiviraj Kulasingham 29. Prof. Vijaya Kumar 30. Ms. Maha Luxmy Kurushanthan 31. Mr. K.C. Logeswaran 32. Mr. S. Manisegaran 33. Mr. Chandrasekaran Manimaran 34. Mr. P. Muthulingam 35. Mr. V. Nandakumar 36. Ms. Malini Paramaguru 37. Ms. Nirmala Rajasingam 38. Ms. Vasuki Rajasingam 39. Mr. Sanjayan Rajasingham 40. Mr. C. Rajeshkumar 41. Ms. A. Renu 42. Ms. Kumudini Samuel 43. Ms. Rani Samuel 44. Dr. Paikiasothy Saravanamuttu 45. Dr. Muthukrishna Sarvananthan 46. Ms. Ambika Satkunanathan 47. Mr. Shyam Selvadurai 48. Rev. Jothini Seenithamby 49. Dr. T. Shanaathanan 50. Ms. M. Mangaleswary Shanker 51. Ms. C. Shanthini 52. Mr. Shobashakthi 53. Mr. P.N. Singham 54. Ms. Vasuki Sivakumar 55. Mr. K.S. Sivakumaran 56. Dr. Sumathy Sivamohan 57. Mr. Subramaniam Sivathasan 58. Mr. Balasingam Skanthakumar 59. Mr. M. Sooriyasekaram 60. Dr. K. Sritharan 61. Rev. M. Jude Sutharshan 62. Mr.H.D. Thampoe 63. Ms. Priya Thangarajah 64. Mr. Kandiah Thanikasalam 65. Mr.R. Thevamaran 66. Prof. S.Thillainathan 67. Dr.Sharika Thiranagama 68. Mr.M.Thiruvarangan 69. Mr.UmaVaratharajan 70. Mr.GodfreyYogarajah 71. Mr.RonnieYogarajah