நற்சான்றுப் பத்திரம்

முற்குறிப்பு:

இந்தப் பதிவிற்கான தொடக்கமாக https://goo.gl/b5Qtoq என்கிற என் முகநூல் பதிவு அமைந்தது.  இந்தப் பதிவில் Kanaga Sivakumar அவர்கள் இட்டிருந்த பின்னூட்டங்களிற்கான பதில் ஒரே பின்னூட்டமாகப் போட முடியாத அளவில் அமைந்தமையால் அதனைத் தனிப்பதிவாகவே இங்கே பதிவுசெய்கின்றேன்.

no_fundamentalismஇங்கே பகிரப்பட்டுள்ள காணொலி மறவன்புலவு சச்சிதானந்தின் பேச்சிற்கான எதிர்வினையாகவும், அவருக்கு சரியான பதிலடி என்பதாகக் குறிப்பிட்டும் பகிரப்பட்டிருந்தது.  அவ்வாறு இந்தக் காணொலியைப் பகிர்வதில் இருக்கக் கூடிய அறப்பிறழ்வையும் அபத்தத்தையும் சுட்டிக்காட்டும் முகமாகவே இந்தப் பதிவினை முகநூலில் எழுதினேன்.  அதனடிப்படையில் இந்தப் பேச்சிலே குறிப்பிடப்படுபவற்றுள் நானும் உடன்படுபவற்றின் சாரத்தினையும் சுட்டிக்காட்டினேன்.  ஆயினும், அப்படிச் சுட்டிக்காட்டியதால் எனது நிலைப்பாடுகள் பற்றிய உங்கள் சந்தேகம் மீண்டும் வந்துவிடுவதால் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.


**இலங்கையில் இன்றைய சூழலில் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இரு தரப்பிலும் வெறுப்புணர்வு இருக்கின்றது என்பதும் முரண்கள் வளர்ந்து செல்கின்றது என்பதும் உண்மையே.  அதுபோல முஸ்லிம் தரப்பினரால் தமிழ் மக்கள் மீது செய்யப்பட்ட வன்முறைகள், மற்றும் அத்துமீறல்கள் குறித்து முஸ்லிம் அறிவுசீவிகள் / கலை இலக்கியச் செயற்பாட்டாளர்கள் பேசுவது மிகக் குறைவானது என்பதை நான் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன்.   தற்போதும் அதனை மீளப் பதிவுசெய்வதிலும் அதுவே இப்போதைக்குமான எனது நிலைப்பாடு என்று உறுதிசெய்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.  இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் புரிந்துணர்வும் வளரவேண்டும் என்றால் சுயவிமர்சனமும் தொலை நோக்குப்பார்வையும் அவசியம்; அது தமிழ்மக்களைப் போலவே முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் பொருந்தும்.

முகநூலில் நான் கருத்துரைப்பதும் பதிவுகள் இடுவதும் மிகக் குறைவாகவே இருக்கின்றது.   அதேநேரம் இங்கே (ரொரன்றோவில்) நடைபெறும் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் நான் மீண்டும் மீண்டும் இதனையே வலியுறுத்தி உரையாடுவது வழக்கம்.  குறிப்பாக நீங்கள் குறிப்பிட்டிருக்கின்ற கிழக்குத் தமிழர் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து நான் தொடர்ச்சியாக உரையாடியே வருகின்றேன் என்பதனையும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.  நான் //பரந்து பழகும் வட்டத்திலிருக்கும் மாற்றுக்கருத்தாளர்களும் முத்திரை குத்தின மார்க்ஸிஸ்ற்றுகளும் ரொட்க்ஸிற்றுகளும் ஸ்டாலின்&மாவோயிற்றுகளும் பீப் தின்னும் இந்துத்துவச்சிகளும் புலம்பெயர்புலிவேட்டைக்காரர்களும் பொதுபலசேன தலித்திஸ்ட்களும் உங்களுக்கும் கரும்புள்ளி, செம்புள்ளி வைத்துக் கோடும் கோலமும் கீறிவிடுவார்கள் என்ற//  பயமேதும் இல்லாமல் தான் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எனது தரப்பைக்கூறி என்னால் உரையாட முடிகின்றது.  ஆனால் நண்பர்களாக இருக்கும் உங்களைப் போன்றவர்கள் தான் இவற்றுக்கு அடுத்தகட்டமாகவும் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்று பயமாகவும் உள்ளது.

**நான் என்னைத் தமிழ்த்தேசியவாதியாகவே அடையாளப்படுத்துகின்றேன்.  நான் தமிழ்த்தேசியவாதம் என்பதை விடுதலைக்கான ஒரு செயற்பாட்டுவடிவம் என்றே கருதுகின்றேன்.  அந்த அடிப்படையில் தமிழ்த் தேசியம் என்ற பெயரிலும் இன உணர்வு என்ற பெயரிலும் வளர்ந்துவரும் அல்லது வளர்க்கப்பட்டுவரும் இனவாதம், பிற இனங்கள் மீதான வெறுப்புணர்வு / நம்பிக்கையீனம், சகிப்புத் தன்மையின்மை போன்ற விடயங்களை மிகவும் ஆபத்தான சமிக்ஞையாகப் பார்க்கின்றேன்.  இப்படியான சூழலில், நாங்கள் முற்போக்குத் தேசியவாதிகள் என்று சொல்லி, நாங்கள் வேறு என்று புனிதப்படுத்தித் தப்பித்துக்கொள்ள நான் விரும்பவில்லை.  நாம் பின்பற்றவிரும்புகின்ற தேசியவாதம் முற்போக்குத் தேசியவாதமாக இருந்தாலும் எனது உரையாடலை நான் தமிழ்த்தேசியவாதிகளுடன், நான் ஆபத்தாக உணர்வதாக முன்னர் குறிப்பிட்ட ”வளர்க்கப்பட்டுவரும் இனவாதம், பிற இனங்கள் மீதான வெறுப்புணர்வு / நம்பிக்கையீனம், சகிப்புத் தன்மையின்மை” போன்றவற்றைக் குறித்த விமர்சனங்களை வைப்பதன் மூலம் நிகழ்த்த விரும்புகின்றேன்.  உங்களுக்கும் எனக்கும் பொது நண்பர்களாக இருக்கக் கூடிய முற்போக்குத் தேசியவாதிகள் என்று சொல்கின்றவர்கள் கூட, பெரும்பான்மையான தேசியவாதிகள் இருக்கின்ற அரங்குகளில், கூட்டங்களில், கலந்துரையாடல்களில் மென்று விழுங்கிக் கடந்துபோகின்ற சூழல்தான் இங்கே நிகழுகின்றது.  இங்கே இருக்கின்ற உங்கள் நண்பர்களிடம் இதுகுறித்து நேர்மையான பகிர்தலினைக் கேட்டுப்பாருங்கள்.  நான் இயங்குகின்ற சூழலில், எந்தக் கருத்துநிலையை நான் முன்வைத்து எவருடன் என்னை அடையாளப்படுத்துகின்றேனோ, அவர்கள் தரும் நெருக்கடி மிக அதிகமாக இருக்கின்றது.  நீங்கள் ஆறுமாத விடுப்பு எல்லாம் எடுக்கத் தேவையில்லை, ஒரு இரண்டு மாதங்கள் பொது நிகழ்வுகளில், கூட்டங்களில், கலந்துரையாடல்களில் கலந்துகொண்டாலே இதையெல்லாம் நீங்களும் புரிந்துகொள்வீர்கள்.

**அடுத்ததாக முஸ்லிம் சமூகத் தலைமைகள், அரசியல்வாதிகள் செய்யும் தவறுகள், முஸ்லிம் மக்களிடமும் தமிழ் மக்கள் மீது வளர்ந்துவரும் வெறுப்புணர்வு போன்றவற்றை அடிப்படையாக வைத்து சிவசேனை, இந்துத்துவத்தின் வளர்ச்சியை நீங்கள் காலத்தின் தேவை என்று மக்கள் உணர்வதாகவோ அல்லது சமூக/அரசியல்/பண்பாட்டுப் பின்னணியின் விளைவு என்றோ பொருட்படுத்திக்கொள்கின்றீர்கள் என்று கருதுகின்றேன்.  சிவசேனை / இந்துத்துவத்தின் வளர்ச்சியை இப்படியாக நீங்கள் தர்க்கிப்பது ஒருவிதத்தில் அதனை நியாயப்படுத்துவதாக அமைகின்றது.  தர்க்கங்களை முன்வைப்பது உங்களது மிகப்பெரும் பலம்.   ஆனால் இதுபோன்ற விடயங்களில் பொறுப்புணர்வு முக்கியம் என்று கருதுகின்றேன்.  இவர்கள் முன்வைக்கின்ற கருத்துகள் மானுடத்துக்கே எதிரானவை என்பதை நீங்கள் புரிந்துகொள்வது கடினமானதல்ல.  மறவன்புலவு சச்சிதானந்தம் போன்றவர்கள் முன்வைக்கின்ற கருத்துக்களில் அல்லது சிவசேனையின் செயற்திட்டத்தில் சமூகவிடுதலைக்கான எந்த வேலைத்திட்டமும் இல்லையென்பதையும் அவை மதரீதியில் நிறுவனமயப்படுத்தி அதிகாரத்தையும் படிநிலைகளையும் பேணுவதற்கான முனைப்புகள் என்றுமே நான் கருதுகின்றேன்.  ஓர் அடிப்படைவாதத்தை எதிர்கொள்ள இன்னோர் அடிப்படைவாதத்தை வளர்ப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணம்.

**இறுதியாக உரையாடல்களில் நம்பிக்கை வைப்பதையும் மாற்றுக்கருத்துகளை எதிர்கொள்வதையும் சுயமரியாதையைப் பேணுவதையும் எல்லாச் செயற்பாடுகளிலும் பேணுவதை ஓர் அடிப்படை நிபந்தனையாக நாம் நம்புகின்றேன்.  கேலியும் கிண்டலும் ஆத்திரமூட்டலும் சீண்டலுமாக உரையாடல் ஒன்றினை முன்னெடுப்பது மிகத் தவறான செயலென்றே கருதுகின்றேன்.  இந்தத் திரியில் நீங்கள் குறிப்பிட்டுள்ள

1 // நீங்கள் பரந்து பழகும் வட்டத்திலிருக்கும் மாற்றுக்கருத்தாளர்களும் முத்திரை குத்தின மார்க்ஸிஸ்ற்றுகளும் ரொட்க்ஸிற்றுகளும் ஸ்டாலின்&மாவோயிற்றுகளும் பீப் தின்னும் இந்துத்துவச்சிகளும் புலம்பெயர்புலிவேட்டைக்காரர்களும் பொதுபலசேன தலித்திஸ்ட்களும் உங்களுக்கும் கரும்புள்ளி, செம்புள்ளி வைத்துக் கோடும் கோலமும் கீறிவிடுவார்கள் என்ற எண்ணமா?//

2//  தொடர்ச்சியாக, உங்களினைப் போன்ற நல்லவர்களிடம் //

3// யாழ்ப்பாணத்திலிருந்து உங்களுக்குத் தகவல் தருகின்றவர்கள் சரியாகத் தருவதில்லையா//

4// உங்களின் அனுசரணையிலே இம்முறை தொடரும் 49.93 ஆம் இலக்கியச்சந்திப்பிலே //

போன்ற விளிப்புகள் உண்மையில் தேவைதானா?  இப்படியான விளித்தல்கள் உண்மையான, நிதானமான உரையாடல்களை உருவாக்க உதவுமா?

 

 

https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FRahu.Kathir%2Fvideos%2F2139722892710122%2F&show_text=1&width=560

முள்ளிவாய்க்கால்: நினைவுகூர்தலில் இருந்து அரசியல் செயற்பாடு நோக்கி…

ninaivuஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பல்வேறு கட்டங்களாக அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உச்சத்தை அடைந்த காலப்பகுதியாக 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போர் காலப்பகுதியை குறிப்பிடமுடியும்.  இந்தப் போர் முடிவடைந்த நாளாகக் கருதப்படுகின்ற மே 18 இனை இனப்படுகொலை நாளாக நினைவுகூரும் பொருட்டு ஈழத்திலும், உலகின் பல்வேறு பாகங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிகழ்வுகளின் உள்ளடக்கம், அவற்றின் பிரதிநிதித்துவம், அவை ஒருங்கிணைக்கப்படும் விதம் என்பன பற்றிய பல்வேறு விதமான உரையாடல்களும் விவாதங்களும் கடந்த 8 ஆண்டுகளாக எதுவிதக் குறையும் இல்லாமல் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.  அத்தகைய உரையாடல்களுக்கான எல்லாத் தேவைகளும் இருக்கும்படியாக ஈழத்தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்துவதாக சொல்கின்ற அனேகக் கட்சிகளும் அமைப்புகளும் ஒற்றைத்தன்மையானவையாகவும் பல்வகைத்தன்மை பற்றி அக்கறைப்படாதவையுமாக இருக்கின்றன.  எனவே,  இந்த நிகழ்வுகள் அமைப்புகளையும் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சுருங்கிவிடாது ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையினை அழுத்தமாகப் பதிவுசெய்வதாகவும், அவர்களின் விடுதலைக்கான தேவையையும் உரிமைகளையும் எடுத்துரைப்பதுடன் அவற்றை வெகுசன மயப்படுத்துவதற்கான முயற்சிகளையும் கொண்டிருப்பதாகவும் அமைவது முக்கியமானது. Continue reading “முள்ளிவாய்க்கால்: நினைவுகூர்தலில் இருந்து அரசியல் செயற்பாடு நோக்கி…”

மனுநீதிச் சோழன் யார்? அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா?

Good Governance: Who Is Responsible? என்கிற Upali Cooray எழுதிய கட்டுரை ஒன்று கொழும்பு ரெலிலிகிராப் இணைய இதழில் மார்ச் 11, 2015 அன்று வெளியாகியிருந்தது.  அதில் கிமு 205 முதல் கிமு 161 வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட எலார (எல்லாளன் என்று தமிழில் நாம் அழைக்கும் மன்னன் மகாவம்சத்தில் எலார என்றே குறிப்பிடப்படுகின்றான்) என்ற சோழ மன்னன் தன் அரண்மனையில் அவனிடம் நீதி வேண்டிவருவோர் ஒலிக்கவிடவேண்டிய மணி ஒன்றினை பேணியதாகவும், மன்னனின் மகன் சென்ற தேரால் ஏற்றப்பட்டு கன்று ஒன்று கொல்லப்பட்டதாயும், நீதிவேண்டி தாய்ப்பசு மணியை ஒலிக்க, நிகழ்ந்ததை அறிந்த மன்னன் தன் மகனையும் அவ்விதமே தேரால் ஏற்றிக் கொல்லுமாறு தீர்ப்பளித்ததாயும் குறிப்பிடப்படுகின்றது.

இக்கதையை நாம் மனுநீதிகண்ட சோழனிற்கு நிகழ்ந்ததாக திருத்தொண்டர் புராணம் / பெரிய புராணதில் படித்திருக்கின்றோம்.  அதில் திருநகரச் சிறப்பு என்கிற பகுதியில் வருகின்ற 103 – 135 வரையான பாடல்களின் இச்சம்பவம் குறிப்பிடப்படுகின்றது.  கொழும்பு ரெலிகிராப் செய்தியை படித்தவுடன் அது மகாவம்சத்தில் இச்சம்பவம் குறிப்பிடப்படுகின்றதா என்கிற சந்தேகம் உருவாகி மகாவம்சத்தைப் புரட்டினேன்.  மகாவம்சத்தில் இருபத்தியோராம் அத்தியாயத்தில் (ஐந்து அரசர்கள்) இச்சம்பவம் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது,

“சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக இங்கு வந்த, உயர் குடியில் பிறந்த, தமிழன் ஏலாரா, அசேலனைத் தோற்கடித்து நாட்டைப் பிடித்து நாற்பத்துநாகு வருடம் ஆண்டான்.

(அவன்) எதிரிகள், நண்பர்கள் என்றா பேதாபேதம் இன்றி, நீதியின்முன் எல்லோரையும் சமமாக நடத்தி வந்தான்,

அவன் சயன அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்௶அ கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது,  அவனிடம் நீதி கோரிவருபவர்கள் அந்த மணியை அடிக்கலாம்.

அரசனுக்கு ஒரு மகனும், இரு மகளும் மட்டுமே இருந்தனர்.  ஒரு சமயம் ராஜகுமாரன் ரதத்தில் தீசவாபிக்குச் சென்று கொண்டிருந்தான்.

அப்போது தாய்ப்பசுவுடன் வீதியில் படுத்திருந்த கன்றின் கழுத்தில் தேர்ச்சக்கரத்தை ஏற்றி அறியாமல் அதனைக் கொன்றுவிட்டான்.

துக்கம் தாளாது பசு அரண்மனைக்கு வந்து மணியை அடித்தது.  தன் மகனுடைய கழுத்தின் மீது தேரை ஓட்டி, அரசன் தலையை துண்டிக்கச்செய்தான். (பிரிவு 13 – 18)”

தொடர்ந்து மேலதிக வாசிப்புக்காகவென்று படித்த அ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாண சரித்திரத்திலும் இச்சம்பவம் எல்லாளனுடன் (அ. முத்துத்தம்பி எல்லாளனை ஏலேலன் என்றே குறிப்பிடுகின்றார்) தொடர்புபடுத்திக் குறிப்புடப்படுகின்றது.  அ. முத்துத்தம்பிப்பிள்ளை இச்சம்பவத்தினை “ஏலேலனைச் சிங்கள சரித்திரக்காரர் நீதியிலே மநுச்சக்கரவர்த்தி எனப் பாராட்டுவர்” என்கிற அறிமுகத்துடன் இச்சம்பவத்தைக் குறிப்பிடுவதால் அவருக்கான மூலமாக மகாவம்சம் அமைந்திருக்கவும் வாய்ப்புண்டு.

பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எழுதப்பட்டது என்பதால் அது எழுதப்பட்ட காலம் அவனது ஆட்சிக்காலமான கிபி 1133 – கிபி 1150 க்கு உட்பட்டதாகவே இருக்கவேண்டும்.  ஆனால் மகாவம்சம் எழுதப்பட்ட காலம் கிபி 6ம் நூற்றாண்டு.  தவிர, மனுநீதிச் சோழன் கதை நடந்ததற்கான வரலாற்று ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.  சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதையில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி வேண்டிப் பாடுகின்ற

“தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்புயர்ப் புகார்என் படியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்ன நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி”

என்ற பாடலில் இச்சம்பவம் குறிப்பிடப்படுகின்றதாயினும், அதில் மனுநீதிச் சோழன் என்கிற பெயரோ அல்லது இச்சம்பவத்தினுடன் தொடர்புடையதான சோழ மன்னனின் பெயரோ இடம்பெறுவதில்லை.  எனவே பக்தி இலக்கிய காலத்தில் எழுதப்பட்ட பெரியபுராணத்தில் பார்ப்பனச் செல்வாக்கின்காரணமாக மனு தர்மத்தை மக்களிடம் பரப்பும் நோக்குடன் இந்த “மனுநீதிச் சோழன் கதை” உருவாக்கப்பட்டிருக்கலாம்.

தவிர பல்லவர் காலத்தில் உருவான அரசனை இறைவனுக்கு இணையானவனாகக் கருதுகின்ற மரபு, சோழர் காலத்திலே இன்னமும் தீவிரமானது.  எனவே அரசன் என்பவன் வழுவிலா ஆட்சி உடையவனாக இருக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக, அவ்விதம் ஒருவன் வாழ்ந்தான் என்று கூறுவதான மனுநீதிச் சோழன் கதை திருத்தொண்டர் புராணத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவும் கூடும்.  தவிர, இக்கதையுடன் தொடர்புள்ளதான திருவாரூர் கோயிலில் உள்ள கல்வெட்டும் விக்கிரமசோழன் காலத்திலேயே அமைக்கப்பட்டது என்பதால் அக்கல்வெட்டும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருக்கவேண்டும்.

ஆயினும் 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் இந்தக் கதை எவ்விதம் இடம்பெற்றது என்பது நிச்சயம் ஆராய்ச்சிக்குரியதே.  மகாவம்சத்தில் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற இடைச்செருகல்கள் பற்றிச் சொல்லப்படுவது உண்டு.  ஆனால் அவ்வாறான இடைச்செருகல்கள் பௌத்தத்தின் செல்வாக்கை உறுதி செய்யும் நோக்குடையனவாகவோ அல்லது சிங்கள மன்னர்களின் செல்வாக்கை உறுதிசெய்யும் விதமானதாகவோ அமைந்திருக்கவே அதிகம் வாய்ப்புண்டு.  அவ்வாறு இல்லாது தமிழ் மன்னன் ஒருவனின் புகழ் பாடுவதான இடைச்செருகலுக்கான சந்தர்ப்பம் தர்க்கரீதியாக வலுவற்றது.  எனவே, தற்போதைய தரவுகளின்படி, பசுவொன்றின் முறைப்பாட்டைக் கேட்டு, அதற்கு நியாயம் வழங்க தன் மகனை தேர்ச்சில்லில் இட்டுக் கொன்ற மன்னன் பற்றிய ஆகப்பழைய பதிவு மகாவம்சத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது.  அந்த மன்னன் எல்லாளன் என்றே குறிப்பிடப்படுகின்றது.  ஆயினும், இச்சம்பவம் பற்றிய வேறு வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.  ஆயினும், மனுநீதிச் சோழன் என்று சொல்லப்படுபவன் எல்லாளன் ஆகக் கூட இருக்கலாமே என்ற எண்ணமும் தோன்றுகின்றது!


குறிப்பு 1:

இக்கட்டுரை மனுநீதிச் சோழன் கதை என்று குறிப்பிடப்படுகின்ற கதை எந்த மன்னனுடன் தொடர்புடையது என்றும், அது பற்றிய ஏனைய தரவுகளை அறியவேண்டும் என்ற ஆவலின் நிமித்தமே எழுதப்பட்டது.  உபயோகமான தரவுகளைப் பகிரவேண்டுகின்றேன்.

குறிப்பு 2:

இக்கட்டுரை ஏப்ரல் மாத தாய்வீடு பத்திரிகையில் வெளியானது.  கட்டுரையைப் படித்த நண்பர் எஸ் கே. விக்னேஸ்வரன் பேசும்போது இதே கதை Flying Fish என்கிற சஞ்சீவ புஷ்பகுமார இயக்கிய திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாயும் குறிப்பிட்டார்.  அத்திரைப்படத்தினைப் பார்த்தேன்.  அதில், பாடசாலை ஒன்றில் பிரசாரம் செய்ய வருகின்ற தமிழ்ப் போராளிகளில் (விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்) ஒருவர், எல்லாளன் எவ்வாறு நீதி வழுவாது ஆட்சி புரிந்தான் என்று கூறுவதுடன் இக்கதையையும் கூறுவதாக அமைகின்றது.  அண்மைக்காலத்தில் நான் பார்த்த நல்ல திரைப்படங்களில் ஒன்றாக இத்திரைப்படத்தினைச் சொல்லமுடியும்.  போர், அது மக்கள் மீது ஏற்படுத்துகின்ற வன்முறை, உறவுச் சிக்கல்கள், அடக்குமுறை என்பவற்றை காட்சிப்படுத்துகின்றது இத்திரைப்படம்.

குறிப்பு 3:

தாய்வீடு பத்திரிகைக்காக எழுதப்பட்ட இக்கட்டுரை சற்று விரிவுபடுத்தப்பட்டு இங்கே பிரசுரமாகின்றது.

குறிப்பு 4:

தரவுகளுக்காக இணையத்தில் தேடியபோது விக்கிபீயாவின் ஆங்கில பக்கத்தில் எல்லாளனின் மறுபெயர்களுல் ஒன்றாக மனுநீதிச் சோழன் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது (https://en.wikipedia.org/wiki/Ellalan_(monarch))


உசாத்துணை

  1. http://www.tamilvu.org/courses/degree/p104/p1041/html/p1041223.htm
  2. Noolaham.net மகாவம்சம்
  3. http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0209.html#dt103
  4. https://www.colombotelegraph.com/index.php/good-governance-who-is-responsible/
  5. யாழ்ப்பாணச் சரித்திரம் – அ. முத்துத்தம்பிப்பிள்ளை

நமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம்!

யாழ்ப்பாணத்து நினைவுகள் என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக நான் எழுதிவந்த சில கட்டுரைகளை, போர் சூழ்ந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் குறிப்பாக 90க்கும் 96க்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்த பதின்மவயதுகளைச் சேர்ந்த ஒருவனின் நினைவுகளின் பதிவுகளாகவே பதிவுசெய்தேன். வெறும் நனவிடைதோய்தலாக மாத்திரமல்லாமல், அன்றைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய வாழ்வியலின் ஒரு பகுதியை இப்பதிவுகள் பதிவுசெய்திருக்கும் என்பது என் நம்பிக்கை. இதேபோல, இன்னும் பலரும் தம் அனுபவங்களை ஆவணப்படுத்தும்போது அவை மிகப்பெரிய வரலாற்று ஆவணமாக மாறும். உதாரணமாக இக்கட்டுரைகளை எழுதியவர் வாழ்ந்த இடம், படித்த பாடசாலை, அவரது பால், சாதிப் பிரிவு, வயது, அவரது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை என்பன அவரது கட்டுரைகளில் நிச்சயம் தாக்கம் செலுத்தியே இருக்கும். எனவே பரவலான அனுபவப் பதிவுகள் எமது சமூகத்தின், அக்குறித்த காலப்பகுதியின் வாழ்வியல் பற்றி முழுமையான வரலாறு நோக்கிய பயணிக்க உதவும். நினைவுப்பதிவுகளாகவும், அனுபவப் பகிர்வுகளாகவும், நனவிடை தோய்தல்களாகவும் எழுதப்படும் எழுத்துக்கள் இலக்கியமாகுமா என்கின்ற விமர்சனங்களும், விவாதங்களும் நடப்பதை பலவிடங்களிலும் அவதானித்திருக்கின்றேன். ஆனால் நினைவுப்பதிவுகள் சமூக வரலாற்று ஆசிரியர்களுக்கான முக்கிய ஆவணங்களாகப் பயன்தரத்தக்கவை என்ற வகையில் மிகவும் முக்கியம் வாய்ந்தன என்றே கருதுகின்றேன்.

இத்தகைய எழுத்துக்களுக்கு நல்லதோர் உதாரணமாக ஈழத்துச் சூழலில் இருந்து வெளிவந்த இரண்டு நூல்களை சுட்டிக்காட்டுவது இன்னும் பொருத்தமாகவிருக்கும் என்று கருதுகின்றேன். எஸ் பொ எழுதிய நனவிடை தோய்தல் என்கிற நூலை அனைவரும் அறிந்திருப்பீர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்னைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறையை மிக மிக அழுத்தமாகவும் உணர்வுபூர்வமாகவும், அதே நேரம் வீண் அலங்காரங்களைத் தவிர்த்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு ஆவணப்பதிவாக இந்தப் புத்தகம் இருக்கின்றது. உதாரணத்துக்கு நண்பர்கள் பலரிடம் தனிப்பட்ட உரையாடல்களில் பகிர்ந்துகொண்ட, இந்நூலில் இருக்கின்ற ஒரு சிறிய பகிர்வை எஸ்பொவின் எழுத்துக்களிலேயே தருகின்றேன்

“பின்னர், ஐந்து சத நோட்டுக்களும் பாவனைக்கு வந்தன. இது புதினமான நோட்டு. ஒரே தாளில் இடப்பக்கம் இரண்டு சத முத்திரை போலவும் வலப்பக்கம் மூன்று சத முத்திரை போலவும் அச்சிடப்பட்டிருந்தன. தேவை கருதி அந்தத் தாளை இரண்டு முத்திரைகளாகக் கிழித்து, இரண்டு சதமாகவும் மூன்று சதமாகவும் பாவித்துக் கொள்ளலாம். மூன்று சய இரண்டு சமன் ஒன்று என்கிற வாய்ப்பாட்டில் ஒரு சதக் கணக்கும் சரி செய்யப்பட்டது ”

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்வரை இப்படியான ஐந்து சத நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன என்பதையே நான் அறிந்திருக்கவில்லை. பலரிடம் இதுபற்றிப் பகிர்ந்திருந்தபோதும் எவருமே இதுபற்றிய விபரங்கள் வேறேதாவது ஆவணங்களில் இருக்கின்றனவா என்று பகிர்ந்துகொள்ளவும் இல்லை. எனவே, வரலாற்று சமூகவியல், பண்பாட்டு வரலாற்றியல் என்பன பற்றிய அக்கறை உள்ளவனுக்கு இந்நூல் ஒரு முக்கிய ஆவணமாகின்றது.

அது போலவே வரதர் எழுதிய “மலரும் நினைவுகள்: 1930-40 களில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல்” என்கிற நூல் பற்றியும் குறிப்பிடவேண்டியிருக்கின்றது. இந்நூல் வரதரின் சிறுவயதில் நடந்த விடயங்களையும், தனது ஊர் பற்றியும், மக்களின் வாழ்வியல் பற்றியும் மல்லிகையில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகளில் பொன்னாலை ஊர் பற்றியும், அவ்வூர் 1930 களில் புன்னாலை என்றே வழங்குப்பட்டுவந்ததாகவும், பொன்னாலை வரதராஜர் கோவிலுக்கு ஏதோவொரு காலத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்களும், ஏழு வீதிகளும் இருந்ததாகவும், ஒல்லாந்தர் காலத்தில் இக்கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அக்கற்கள் சங்கானை வரை மக்களை சங்கிலித் தொடராக நிறுத்திவைத்து காவ வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார். அதுபோலவே,

“எனக்குத் தெரிய தேயிலையும் சீனியும் இலவசமாகக் கொடுத்து ஒரு பொது இடத்தில் தேநீர் தயாரித்து வீட்டுக்கு வீடு இலவசமாகத் தேநீர் கொடுத்துப் பழக்கினார்கள். தேயிலைப் பிரசாரச் சபையின் வேலையாய் இருந்திருக்கும். அதன் பயன் ? இன்றைக்குக் காலையில் எழுந்தவுடன் தேநீர் கொடுக்காவிட்டால் ஏதோ வாழ்க்கையே நாசமாகிவிட்டது போன்ற மனப்பான்மை வந்துவிடுகின்றது.”

வரதரின் மலரும் நினைவுகள் நூலில் இவ்வாறான பதிவுகள் முக்கியமானவையாக அமைந்துவிடுகின்றன.

ப. ஶ்ரீஸ்கந்தன் எழுதி சென்ற ஆண்டு வெளியான “மனசுலாவிய வானம்” என்கிற நூலும், “அரியாலை ஊர் நாடகக் கலைஞர்கள்” என்று நூலும் இவ்விதமான பதிவுகளுக்கு நல்ல உதாரணங்களாகும். குறிப்பாக அரியாலை ஊர் நாடகக் கலைஞர்கள் நூலில் அரியாலை ஊரைச் சேர்ந்த நாடகக் கலைஞர்கள் பற்றியும், நாடகங்கள் பற்றியும் ஆவணப்படுத்தியிருப்பதுடன், நாடகங்களில் மேடைக்குப் பின்னாலான பங்களிப்பைச் செய்தவர்கள் பற்றியும் ஆவணப்படுத்தியிருப்பார் ஶ்ரீஸ்கந்தன்.

பதிவுசெய்தல், ஆவணப்படுத்தல், பகிர்தல் என்கிற பிரக்ஞையோடு 70கள் முதல் இன்றுவரை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இன்னொருவர் மதிப்புக்குரிய அ. யேசுராசா. அவர் எழுதிய பதிவுகள், தூவனம், குறிப்பேட்டிலிருந்து போன்ற நூல்களைப் படிக்கும் ஒருவர் இலகுவாக 70 கள் முதல் இலங்கையில், குறிப்பாக யாழ் மாவட்டத்தில் கலை, இலக்கியத்துறைகளில் இடம்பெற்ற பண்பாட்டு அசைவியக்கங்களை அறிந்துகொள்ளமுடியும். 70கள் முதலாக அச்சு ஊடகங்களூடாக இந்தப் பதிவுகளைச் செய்துவந்த அதே யேசுராசாதான் இன்றும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளை பகிர்ந்துவருகின்றார் என்பது அவர் மீதான வியப்பை இன்னும் அதிகரிக்கின்றது.

எனது அவதானிப்பில் 90 – 95ல் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு உள்ளிட்ட விடயங்களில் இவ்வாறு பதியப்படாத எத்தனையோ விடயங்கள் எஞ்சி இருக்கின்றன. தெருவோரமெல்லாம் பதுங்குகுழி வெட்டப்பட்டிருந்த யாழ்ப்பாணத்து வீதிகள் இப்போதும் என் நினைவில் இருக்கவேசெய்கின்றன. பாடசாலைகளில் விழுந்த குண்டுகளும், அகதி முகாம்களில் விழுந்த குண்டுகளும், மருத்துவமனைகளில் விழுந்த குண்டுகளும் கூட காட்சிகளாகவும், செய்திகளாகவும் இப்போதும் நினைவில் இருக்கின்றன. நவாலி தேவாலயம் மீது குண்டுவீசப்படுதுவதற்கு சில மணித்தியாலங்களின் முன்னர் நான் அதே நவாலி தேவாலயத்தில் தான் இருந்தேன். எனது நினைவு தெரிந்து என் எட்டாவது வயதில் சுதுமலையில் நடந்த குண்டு வீச்சொன்றில் பாலமுருகன் என்ற என் வகுப்பு மாணவன் ஒருவன் கொல்லப்பட்டான். அதன் பின் எத்தனையோ மரணங்கள். போர் செய்த கொலைகள்! இவை எல்லாமும் கூட பதிவுசெய்யவேண்டியவைதான்.

கூப்பன் கடை என்றும் சங்கக் கடைகள் என்றும் சொல்லப்படுகின்ற பல நோக்குக் கூட்டுறவு சங்கங்களில் பொருளாதார தடைகளின்போதும், உணவுத் தட்டுப்பாட்டின்போதும் விடிய முதல் போய் வரிசையில் பொருட்கள் வாங்கியதை மறக்கமுடியாது. குறிப்பாக அவ்வாறு வாங்கப்பட்ட “அம்மா பச்சை” என்கிற வகை அரிசியை. அப்போதெல்லாம் மண்ணெய்க்குத் தட்டுப்பாடு. இந்தத் தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ளவே குப்பி விளக்கு என்கிற விளக்குவகைகள் செய்யப்பட்டன. சில கடைகளில் இவை விற்பனைக்கும் இருந்தன. அதுபோல பெற்றோல் இல்லாத காலங்களில் மண்ணெய் மூலம் ஓடக்கூடியவாறு வாகனங்களின் இயந்திரங்களில் சிறுமாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி சில துளிகள் பெற்றோல்களால் “என்ஜின்” உயிர்ப்பிக்கப்பட்டு அதன்பின்னர் வாகனம் தொடர்ந்து மண்ணெய்யில் இயங்கும். அப்போது நாச்சிமார் கோயிலடியில் இருந்த “கார்பரேற்றர் ஆனந்தன்” என்பவர் இந்த வித்தையில் அப்போது புகழ்ப்பெற்றவராக இருந்தார். இந்த தொழினுட்பம் பற்றி யாராவது விளக்கமான ஒரு கட்டுரையை எழுதவேண்டும் என்பது என் அவா.

1994ம் ஆண்டில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆயினும், பரவலாக “கள்ளமாக” திரைப்படங்களைப் பார்ப்பது வழமையாகவிருந்தது. மின்சாரம் இல்லாது போல 90கள் முதலே திரைப்படம் பார்ப்பதென்றால் அது முழுநாள் நிகழ்வு. காலை 5 திரைப்படங்கள் வரை தொடர்ச்சியாக திரையிட்டுப் பார்ப்பார்கள். இடையில் தென்னிந்தியத் திரைப்படங்கள் தணிக்கை வேறு செய்யப்பட்டன. இந்து, ஐ லவ் இந்தியா போன்ற திரைப்படங்கள் தணிக்கையில் கிட்டத்தட்ட அரைவாசியாகக் குறைந்திருந்தன. பாட்ஷா திரைப்படம் தென்னிந்தியத் திரைப்படங்கள் தடைசெய்யப்பட்ட பின்னரே “கள்ளத்தனமான” யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தது. இவ்வாறு வந்த பிரதியில் ஏதோ குளறுபடி நிகழ்ந்த பட ரீல்கள் வேறு ஒழுங்கில் பதிவுசெய்யப்பட்டிருந்தன. படத்தைப் பார்த்த எமக்கு தலையும் விளங்கேல்ல, காலும் விளங்கேல்ல. இது ஏதோ பூர்வ ஜென்மக் கதைபோல என்று நினைத்திருந்தோம். இவை எல்லாம் பதிவுசெய்யப்படவேண்டி நினைவுகள். எமது நினைவுகளில் தேங்கியிருக்கும் இதுபோன்ற நினைவுகளை நாம் பதிவாக்கும்போது அது நமக்கான ஒரு வரலாற்று ஆவணமாகும். நமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம்.


குறிப்பு

இக்கட்டுரை யாழ் உதயனின் ஞாயிற்றுக்கிழமை சிறப்பிதழான சூரியகாந்தியில் டிசம்பர் 14, 2014, அன்று இடம்பெற்றது. இக்கட்டுரைத்தொடரின் நிறைவுக் கட்டுரையாகவும் இதுவே அமைந்தது.

இக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97வரை, தன் பதின்மங்களிலும், பதின்மங்களை ஒட்டிய காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுதத் திட்டமிட்டுள்ளேன். இதேமுயற்சியில் தொடர்ச்சியாக எழுதப்படும் தனியன்களின் பதிவுகள் தொகுக்கப்படும்போது ஒரு சமூகத்தின் வரலாற்று ஆவணமாக அமையும். அவ்விதம் அமையவேண்டும் என்பதே என் அவா.

நமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம் என்பது முன்னர் நான் நவாலி தேவாலயப் படுகொலைகள் பற்றி எழுதிய ஒரு பதிவிற்கு (https://arunmozhivarman.com/2011/11/19/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/)
நண்பன் தீபன் சிவபாலன் இட்ட ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்ட தகவலின் தாக்கத்தால் வந்த தலையங்கமாக உணர்கின்றேன். நன்றி தீபனுக்கு.

தீபன் பகிர்ந்த பின்னூட்டமாவது, //நமக்கான கதையை நாமே எழுதுவோம்……!நவாலிப் படுகொலைகளின் முதலாண்டு “எத்தனை எத்தனை வித்துகள் விழுந்தன” என்ற தலைப்பில் நினைவு கூரப்பட்டபோது எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் குறிப்பிட்டதை நீங்கள் பதிவு செய்திருப்பதாகவே படுகிறது.//

இத்தொடரை எழுத ஊக்கமளித்ததுடன் நான் கடைசி நேரங்களில் அனுப்பும் ஆக்கங்களை பொறுமையுடன் பிரசுரித்த நண்பன் ஜெரா தம்பிக்கும், பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கும்போதே தொடர்ச்சியாக ஆலோசனைகளையும், தகவல்களையும் தந்துதவிய நண்பன் விசாகனுக்கும் நன்றி.

-அருண்மொழிவர்மன்