உண்மைக்கு நெருக்கமாக: அ. முத்துலிங்கம்

குழந்தைகளாக பிறக்கின்றபோது நாம் நூறு வயதுடன் பிறக்கின்றோம். அதன் பின்னர் வாழ்க்கை வெள்ளம் இழுத்துச் செல்ல செல்ல அதன் திசையிலும், அதை எதிர்த்தும் பயணித்து ஒதுக்கப்பட்ட ஆண்டுகள் மெல்ல கழிந்து செல்ல ஆயுள் கரைந்து இறந்து போகின்றோம். எல்லா மனிதர்களும் பால்யத்தில் ஒரே சாயலான வாழ்வையே வாழ்கின்றனர். அதனால் தான் அந்த வயதில் பொறாமையுணர்வும், ஏற்றத்தாழ்வுகளும் மனதில் குடியேறுவதில்லை. நாட்கள் போக போக, திறந்து வைத்த கற்பூரம் போல பால்யம் கரைந்து செல்ல பொய்மையும் கசடும் குடியேறி மனிதம் மெல்ல மெல்ல பாழாகின்றது.

பறந்து செல்லும் என் ஞாபக காக்கைகள் எங்கெல்லாமோ பறந்து என் பால்யத்தின் பருக்கைகளைத் தான் மீட்டி வருகின்றன. எந்த பருவத்தில் பார்த்தாலும், எந்த உணர்ச்சியுடன் பார்த்தாலும் பால்யம் சொந்த தலையணையில் வீசும் மணம் போல மனதுக்கு நெருக்கமான உணர்வையே தருகின்றது. பால்யத்தை நினைவுபடுத்தும் பாடல்களும், சம்பவங்களும், வாசனைகளும், நண்பர்களும், திரைப்படங்களும், புத்தகங்களும், கிராமத்து மனிதர்களும், காதலியரும் எப்போதும் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

2

அண்மையில் வாசித்த உண்மை கலந்த நாட்குறிப்புகள் என்ற அ. முத்துலிங்கம் எழுதிய நாவல் அவரது பால்யத்தை விரைவாக கடந்து சென்றாலும், மீண்டும் ஒரு முறை அதன் வாசனையை மீட்டி இருக்கின்றது. கதை சொல்லி தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதிய புத்தகம் இது. இதில் வருகின்ற ஒவ்வொரு கதைகளும் தன்னளவில் பூரணம் பெற்றிருந்தாலும் (சிறுகதை அமைப்புடன்), தொடர்ச்சியான வாசிப்பில் ஒரு நாவலின் தன்மையை கொண்டமைகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த பேட்டி ஒன்றில் இந்த கதை வடிவத்தை குறிப்பிட்ட அ.மு. அது போன்ற ஒரு வடிவில் ஒரு நாவலை எழுதும் எண்ணம் உள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கதை சொல்லி தவிர மிக சில பாத்திரங்களே மீண்டும் மீண்டும் வருகின்றார்கள். அதிலும் சிறு பராயத்தில் நடைபெறும் சம்பவங்களில் குடும்ப உறுப்பினர்களும், பின்வரும் சம்பவங்களில் மனைவி, மகள், பேத்தி தவிர மீண்டு வருகின்ற கதாபாத்திரங்கள் மிக குறைவே. இது போன்ற தன்மை முன்னர் சுஜாதா எழுதிய ஸ்ரீ ரங்கத்து தேவதைகளிலும் இருந்திருக்கின்றது. இரண்டு புத்தகங்களிலும் உள்ள முக்கிய சிறப்பம்சம், கதை சொல்லிகள் உயர் கல்வி கற்று, சிறப்பான பணிகளில் இருந்த போதும் அவர்கள் அவ்வவ் வயதுக்குரிய இயல்பு குன்றாமல் அவ்வவ் வயதுக்குரிய சம்பவங்களை எழுதியிருப்பதாகும். ஆர். கே. நாராயண் எழுதிய Swamy and Friends, மற்றும் Malgudi பற்றிய கதைகளிலும் உணர்வுகளை அனுபவித்துள்ளேன்.

ஆனால், தன் 65 வருட அனுபவங்களை சொல்லும் கட்டாயம் இருப்பதால் வருடம் முழுதும் எதிர்பார்த்து காத்திருந்த ஊர்த் திருவிழாவை ஒரே நாளில் கடந்து செல்வதுபோல பால்யத்தின் நினைவுகளை சட்டென்று கடந்து செல்கின்றார். கதை சொல்லி கொக்குவிலில் இருந்து, பேராதனை, கொழும்பு, சியரா லியோன், நைரோபி, சூடான், பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா என்றெல்லாம் இடம் மாறி செல்லும்போதெல்லாம் அந்தந்த நாட்டு மக்களிடையே இருந்த வழக்கங்களையும், நாகரிகங்களியும் கதை ஊடாக மெல்ல சொல்லி செல்கின்றார். சிறு வயதில் லேனா தமிழ்வாணன் கல்கண்டில் எழுதிய மேலைநாட்டு பயண அனுபவங்கள், கீழைநாட்டு பயண அனுபவங்கள், துபாய் அழைக்கின்றது, கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு போன்றவற்றை எல்லாம் விழுந்து விழுந்து பதுங்கு குழிக்குள் வைத்துக் கூட படித்த எமக்கு சுவையாக கதை சொல்லும் அ.முவின் இயல்பால் இன்னும் சற்று விரிவாக எழுத மாட்டாரா என்ற ஏக்கம் எழுகின்றது. அதிலும் சியாரா லியானில் இறக்கப் போகின்ற தாயை சுமந்து ஓடி வரும் இளைஞனின் கதையை சொன்னபோதும் சரி, குதிரைக்கு உணவு தீத்தினால் கரு உண்டாகும் என்ற அமெரிக்கர்களின் நம்பிக்கையையும், மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மேசன் ரகஸ்ய சங்கம் பற்றியும், பட்டும் படாமலும் ஓரின சேர்க்கை பற்றி எழுதிய பிரேமச்சந்திரன் – தர்மதாச – நடேசன் கதையையும், நாசாவில் பணிசெய்யும் ரொக்கெட் விஞ்ஞானியான ஒலிவியா பற்றிய கதையையும் அந்தந்த சந்தர்ப்பங்களில் தான் அடைந்த அதே அனுபவங்களை சோர்வுறாமல் வாசகர்களுக்கு சொல்லும்போது சுவை பட கதை சொல்லும் ஆற்றல் ஈழத்து எழுத்தாளர்களுக்கு இல்லை என்று சுமத்துப்படும் குற்றச்சாற்று (குற்றச்சாட்டு என்று நாம் குறிப்பிடுவதன் சரியான வடிவம் இது என்று அண்மையில் வாசித்தேன், மேலதிக விபரம் அறிந்தவர்கள் தரவும்) மீண்டும் ஒரு முறை பிழைத்துப்போகின்றது.

அதேநேரம் சக பதிவர் டிசே தமிழன் குறிப்பிட்டிருந்தது போல சாதிய மோதல்களும் அடக்குமுறைகளும் மிக மோசமாக தலைவிரித்து ஆடிய காலப்பகுதிகளை கடந்து வரும்போது கூட ஆசிரியர் அவை பற்றிய எந்த பதிவையும், சம்பவத்தையும் குறிப்பிடாமல் தாவியிருக்கின்றார் என்பதையும் குறிப்பிடவேண்டும். அதிலும் கொக்குவில் பகுதி மக்களிடம் இந்த ஏற்றத்தாழ்வுகளும், அடக்குமுறைகளும் நிறையவே இருந்தது என்பது உறுதியாக தெரிந்ததே. செல்லி என்ற வண்டியோட்டி பற்றி ஆரம்பத்தில் வருகின்றபோது செல்லி மேற்கொண்டு எவ்வாறு நடத்தப்படுகின்றார் என்று பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் செல்லி வித்தை செய்து சிரிப்பூட்டும் வண்டியோட்டி என்ற அளவிலேயே காணாமல் போய் விடுகின்றார். செல்லி என்று அழைக்கப்படும் செல்லத்தம்பி என்று குறிப்பிட்டாலும், செல்லத்தம்பி என்ற பெயருக்கும் செல்லி என்ற பெயருக்கும் அக்காலத்தில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன என்பதும், சாதீய மற்றும் சமூக நிலைகளே இந்தப் பெயர்களை தீர்மானித்தன என்பதும் நிதர்சனம். எதை எதை எழுதவேண்டும் என்ற எழுத்தாளரின் சுதந்திரத்தில் தலையிடமுடியாது என்றாலும், சுய சரிதைதன்மை வாய்ந்த இந்த கதை அம் மனிதனின் கதையாக இருப்பதுடன், கதை நிகழ்ந்த தேசங்களின் கதையாகவும், கதை நிகழ்ந்த காலங்களின் கதையாகவும் இருந்தால் இன்னும் சிறப்பு.

ஈழத்து எழுத்தாளராக இருந்தும் ஈழப்பிரச்சினை பற்றி அ.மு எழுதவில்லை என்ற குற்றச்சாற்றை தகர்க்கின்ற அவர் தரப்பு நியாயம் இந்த கதையூடாக ஓரளவு புரிகின்றது. முன்பொருமுறை சொல்புதிதுக்காக ஜெயமோகனுக்கு வழங்கிய (சொல்புதிது – 11, ஏப்ரல்-ஜூன் 2003) பேட்டியில் சொன்னதுபோல “1972ம் ஆண்டிலேயே என் வெளிநாட்டுப் பயணம் தொடங்கிவிட்டது. அதற்குப் பிறகு நான் இலங்கைக்கு போன சந்தர்ப்பங்கள் வெகு குறைவுதான். மிஞ்சிப் போனால் இந்த முப்பது தடவைகளில் ஒரு ஆறு தடவை போயிருக்கலாம்”; யுத்தம் தன் கோர கரங்களால் மக்களை தழுவ தொடங்கும் முன்னரே அவர் நாட்டை விட்டுப் புறப்பப்பட்டுவிட்டார். அத்துடன் அவர் இருந்த நாடுகளில் கூட, அதாவது 90களின் இறுதிகளில் அவர் கனடாவரும்வரை அவர் இருந்த நாடுகள் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழாத நாடுகள். எனவே அவருக்கு புலம் பெயர் தமிழர்களுடன் நேரடியான தொடர்புகள் இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் மிகக்குறைவு. கதை வழியே ஈழத்தில் பழக்கத்தில் இல்லாத சில சொற்கள் இடம்பெறுவதற்கு கூட இது காரணாமாக இருக்கலாம். கதை சொல்லி குறிப்பிட்ட அந்த இடங்களில் கதாபாத்திரத்தையும் மீறி தான் அறிந்த சொற்களை பேசிவிடுவதன் விளைவே இது என்று நினைக்கிறேன். அதே நேரம் ஈழத்தில் மட்டக்களப்புத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், கொழும்புத் தமிழ், மலையக தமிழ், முஸ்லீம் மக்கள் பேசும் தமிழ் என்று இருந்த பாகுபாடு எல்லாம் புலம்பெயர் தமிழ் என்ற தமிழுடன் கலந்து வருகின்ற நிலையில் புலம்பெயர் எழுத்தாளர் ஒருவர் வட்டார வழக்கில் ஒரு படைப்பை செய்வது சாத்தியம் குறைந்ததாகவே படுகின்றது.

எனது பார்வையில் சின்ன சின்ன குறைகளுடன் தன் வாழ்பனுபவங்களை மிக சுவாரஸ்யமான நடையில் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஈழத்து எழுத்தாளர் என்ற வகையில் ஈழப்பிரச்சனை பற்றி என்ன சொல்கின்றார் என்று பார்க்க விரும்புவோர்க்கு ஏமாற்றம் அளித்தாலும், தனக்கு தெளிவாக தெரியாததை தெரியாது என்றே ஒப்புக்கொண்டு எழுதாமல் விட்டது கூட நல்ல முடிவே. இலங்கை போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சிங்களப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து(???) கண்ணீர் விட்ட கே. பாலசந்தரையும், இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிங்கள பெண் மீது இரக்கம் காட்டிய (உன்னத சங்கீதம்) சாரு நிவேதிதாவையும் விட இது எவ்வளவோ பரவாயில்லை.

**புத்தகத்தை தந்துதவிய நண்பருக்கு நன்றி